Sonntag, März 30, 2008

நமது மக்கள்...

சிங்களச் சினிமா முன் வைக்கும்"பிரபாகரன்" விமர்சகர் இரதன் வழிக் கருத்துச் சுதந்திரமாகிறது!

//புலம் பெயர் தமிழ் வாழ் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் மீது, எழுப்பப்பட்ட
அராஜகம் புதியதல்ல. சபாலிங்கம் படுகொலை, தேடக நூல் நிலைய எரிப்பு, உயிர்நிழல்
லக்சுமி வீட்டில் இலக்கிய சந்திப்பு ஆவணங்கள் சூறையாடல், தாயகம் ஆசிரியர் மீதான
தொடர்ச்சியான மிரட்டல்கள் போன்ற பல சம்பவங்களை குறிப்பிடலாம். இன்றும் இவை வேறு
வேறு வடிவங்களில் தொடர்கின்றன. துசார பீரிசுக்கு தனது கருத்தை தமிழ் மக்கள் மீது
வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு. இது பற்றிய விமர்சனங்களுக்கும் முழுமையான
சுதந்திரம் உண்டு. ஆனால் படத்தை வெளியிடவிடாமல் தடுப்பது கருத்துச்
சுதந்திரத்துக்கு எதிரான விடயம்
.//-துசார
பீரிஸ் மீதான தாக்குதல் - கருத்துச் சுதந்திரத்தை மீறும் போலி உணர்வுகள் : ரதன்
(கனடா)

தேசம் நெற்றில் கருத்தாடும் ரதன் "பிரபாகரன்" படத்துக்கு-கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்துவிடலாம்.உலக அரசுகளும்,இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவச் சர்வதிகார அரசும் தமிழ் பேசும் மக்களின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாக விரிந்துகிடக்கும் போராட்டத்தைப் புலிகளே தொடர்ந்து நகர்த்தும் அரசியலில்"பிரபாகரன்"என்ற தனிநபர்சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கியும்விடலாம்.கரும் புலிகள்-குண்டு கட்டி மூளைச் சலவை செய்து வெடித்துத் தொலையவும் விடலாம்.ஆனால்,இன்றைய இலங்கையின் அரசியல் நிகழ்வுகளுக்கு-இனவாத அழிப்பு யுத்தத்துக்குத் தமிழ் மக்களின் தவறான போர் உத்தியா காரணம்?அல்லது,பிரபாகரன் எனும் மனிதர்தம் சர்வதிகாரத்தனமான ஒடுக்குமுறை அராஜக அரசியலா காரணமாக இருக்கிறது?தமிழ் பேசும் மக்களின் பிணங்கள்மீது ஏறி நின்று அரசியல் செய்யும் பல்வேறுவகைகப் பண்புகளைக்கொண்ட தமிழ்க் குறுங்குழு அரசியல் முன் வைத்திருக்கும் "மக்கள் நலன்" போன்றுதான் இதுவுமொரு(பிரபாகரன் சிங்களச் சினிமா) "கருத்துச் சுதந்தரம்"-ஜனநாயகப் பண்பு?

தமிழ் இளைஞர்கள் கரும் புலியாவதற்கும்,பாலஸ்தீனத்தில் தற்கொலைக் குண்டுதாரியாகும் ஆறுவயதுப் பாலகனுக்கும் இடையில் உறவுறும் அரசியல் போக்கு-அதன் தன்மை மற்றும் இருப்பு எதன் பொருட்ட நிகழ்கிறது?இத்தகைய அரசியலின் தொடர்ச்சி இன்றைய ஈராக்கிய அவலத்துக்கும் அதன் அழிவுக்கும் காரணமாகும் உலகத்தில் நாம் வாழ்ந்தபடி,தற்கொலைத் தாக்குதல் மற்றும் கரும் புலிகள் குறித்த "பிரபாகரன்"படம்-கருத்துச் சுதந்திரம் என்ற கோதாவில் தமிழ் மக்களின்மீது சிங்கள மற்றும் உலகப் பாசிச அரசியல் கட்டவிழ்க்கும் அராஜக அரசியலை மறுக்கும் அல்லது குறுக்கும் போக்கிலிருந்து இத்தகைய அழிவுகளைத் தொலைத்த கருத்துச் சுதந்திர வாதமாக இருக்க முடியாது.சிங்கள-உலக அரசியல் நகர்வு தமிழ்பேசும் மக்களின் உயிர்களோடு விளையாடும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பாலஸ்தீனத்துப் போராளியை நாம் ஈழத்திலும் காணத்தக்கதாகவே இருக்கும்.தன் முன்னால் சிதைக்கப்பட்டத் தனது குடும்பத்தைச் சுவராக நினைத்திருந்த பிஞ்சு உயிர்க்கொடிக்கு என்ன ஆதாரம் தொடர்ந்து இருக்கிறது, அது உலகத்தில் தொடர்ந்து தனது உயிரைப் படர்ந்துகொள்வதற்கு?பாரி மன்னன் அங்கே,பிரபாகரன் உருவத்தில் வருவதாக அது கனாக்காண வைக்கப்படுவதற்கு எந்த அரசியல் காரணமாக இருக்கிறது?மேலும்,மேலும் தொடர் தாக்குதல்களாலும் உயிர்க் கொலைகளாலும் அடக்கப்படும் அரசியலை-போரை இலங்கை அரசின் பின் நின்று இந்தியா தொடரும்போது அதன் தொடர் இயக்கத்தால் புலிகள் என்பவர்கள் போராளிகளைத் தமது அரசியல் சார்ந்து தொடர்ந்து தகவமைக்க முடியும்.இங்கே, புலிகள் என்பது இன்னொரு புதிய ஆளும் வர்க்கத்தின் வரவைச் சொல்வதற்கான குறியீடாகவே நாம் முன் வைக்கிறோம்.அங்கே பிரபாகரன் என்பவரைத் தொடர் குறியீடாக்கும் அரசியல் மக்களைத் தமது பக்கம் வைத்திருக்கும் ஒரு வியூகத்தின் இன்னொரு பகுதிதான்.இதைவிட்ட மற்றைய பகுதியான சிங்கள ஒடுக்கு முறையின் தொடர் மனித மறுப்பே தற்கொலைப் போராளிகளின் மனதிடத்தை நிலைப்படுத்துவதாகும்.


என்றபோதும்,அரச வன்கொடுமை இராணுவத்துக்கு எதிராக மக்கள் உயிர்வாழ்வுக்காகக் குரல் கொடுக்குக் கூடிய சூழலை-அவர்களின் ஜனநாயகத் தேவைகளை நிவர்த்தி செய்தபடி,தமிழ் மக்களின் சுய கெளரவத்துக்கான அரசியலை அனுமதித்தபடி இலங்கை அரசு இத்தகைய படங்களை எடுக்கலாம்.அன்றி இத்தகைய நிலைமைகளை உருவாக்குவதற்கான முன் நிபந்தனைகளைக் கொண்டியங்குவதற்கானவொரு கலகக் கருத்தியலை இலங்கைச் சிங்களக் கலைஞர்கள் முன்வைக்கலாம்.இவையெதையும் நோக்காகக்கொண்டியங்க மறுக்கும் கலை வடிவங்களின் பின்னே இயங்கும் அரசியல் மகிந்தாவினதும் அவரது குடும்பத்தினதும் பொல்லாத அரசியலுக்கு முண்டு கொடுப்பதோடு நின்றுவிடுபவையல்ல.மாறாக,இவை கொண்டியங்கும் தளம் உலகப் பொருளாதார ஆர்வத்தோடு நமது போராட்டத்தருணங்களை இணைத்து, நம்மை மேலும் அடிமையாக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் முகமூடி "மனிதாபிமானம்"எனும் கபட அரசிலை நமக்குள் விதைப்பதுதான்.இன்றோ,இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு தமிழ் இனத்தைப் பூண்டோடு நசுக்கி-ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தையே பாழ்படுத்திய ஒரு அரசு,இப்போது அதன் கருத்தியல்தனமான போராட்ட முனைப்பில்-தந்திரத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை அணுகுகிறது.ஏதோ பிரச்சனையே பிரபாகரன் எனும் தனிநபரால் ஏற்பட்டது-நடைபெறுகிறதென்ற "பேமானி"கருத்தியலை இங்கு எவரும் முன்வைக்கத் தேவையில்லை.இலங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சி மிகப் பெரும் முரண்பாடுகளாக விரிகின்றன.இது, இனத்துவ அரசியலால் இன்னொரு இனத்தின் பொருளாதார ஆர்வங்களைக் கிள்ளியெறிய முனைந்தபோது தவிர்க்க முடியாது முழுமொத்த இனங்களையுமே பாதிக்கும் அரசியல் அராஜகமாக மாறி,இன்று மிகப்பெரும் இனவழிப்பாகத் தொடர்கிறது.இங்கே,பிரபாகரனோ அல்லது மகிந்தவோ போனாலும்-மரணித்தாலும் பிரச்சனை இருந்துகொண்டேயிருக்கும்.

நடைமுறைசார்ந்து, மக்களின் பிரச்சனைகளை ஜனநாயகப் பண்புகொண்ட இனவாதமுகமற்ற பொருளாதார வியூகங்களால் தீர்க்க முனையாத பாசிசச் சிங்கள அரசானது இன்று தமிழ் மக்களின் உரிமைகளை-வாழ்வியல் மதிப்பீடுகளை மட்டும் தகர்க்கவில்லை.மாறாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையுஞ் சிதைத்து,அவர்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களை வேட்டையாடி வருகிறது!இத்தகைய அராஜகத்தனமான அரசியலை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களையே வேட்டையாடும் சிங்கள அரசியல் முன்னெடுப்பிலிருந்தபடி தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகப் பார்க்க முனையும் மிகக் குறுகிய பார்வைகளைச் சிங்களப் புத்திஜீவிகளே சிங்கள அரசசார்பாக முன்வைக்கும்போது, இங்கே நாம் மிகவும் குறுகிய மனதோடு அனைத்தையும் புலிப்"பாசிசம்"சார்ந்து அணுகுகிறோம்.

இது மிக அவலமானது.

இன்றைய உலக அரசியல் நகர்வில் என்றுமில்லாதவாறு இலங்கை கவனம் பெறுகிறபோது அங்கே இலங்கையர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக அன்னிய அரசுகள் முன்வந்துவிடுகின்றன.இந்திய அரசியலுக்கோ அன்றி அமெரிக்க அரசியலுக்கோ நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியுமென்றால் இத்தகைய பிரபாகரன் படமும் அவசியமற்றது.இது குறித்துக் கருத்துச் சுதந்திரமென ஓலமிடுபவர்கள் இலங்கையில் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கைதுபண்ணியபோது-அடைத்துச் சித்திரவதை செய்தபோது அதற்கான குரலைப் பலமாகப்பதியவில்லை!

இன்றும், சிறையில் வாடும் ஜசிகரன் மற்றும் வளர்மதியென்ற அவர்தம் துணைவியார் குறித்து என்ன நிலைப்பாட்டை இந்தக் கருத்துச் சுதந்திரம் கொண்டிருக்க முடியும்?அல்லது பூசாவிலும் மற்றும் இலங்கையின் கொடூரச் சிறைச்சாலைகளிலும் பல பத்தாண்டுகளாக வாடும் தமிழ் இளைஞர்கள் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியும்?

இது குறித்தான மதிப்பீடுகளை எவர் முன்வைக்கும்போது அதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிரானதென அப்பப்ப வேட்டையாடப்படும் ஊடகவியலாளரின் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் இலங்கைப் பாசிச அரசின் அட்டூழிய அரச நகர்வை நிறுத்தி, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை-சுயநிர்ணயவுரிமையை அங்கீகரித்து இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசு தீர்வு முன்வைத்து ஆத்மார்த்தமாக நகர்வைச் செய்யும்போது பிரபாகரன் என்ற தனிநபரின் சேடம் இழக்க ஆரம்பிக்கும்.ஆனால்,அதை மறுத்துப் பிரபாகரனின் இருப்புக்குத் தீனிபோட்டு இலங்கையில் புரட்சிகரமான நகர்வுகளைப் பூண்டோடு நசுக்கும் தந்திரத்தை உலகமும்,இலங்கை அரசும் செய்துவரும்போது"இந்தப் பிரபாகரன்"படத்தின் வருகைக்குள் நிலவும் அரசியல் சாணாக்கியம் என்ன?


நமது மக்கள் கரும்புலியாவதும்,குண்டுகளைப் பொருத்தி வெடித்துச் சாவதும் யாரினால் ஏற்பட்டது?

இத்தகைய நடவடிக்கைகளின் பின்னே உந்தித் தள்ளப்படும் ஒடுக்குமுறைச் சிங்களப் பாசிச அரசியல் தானும்-உலகமும்சேர்ந்து தீர்மானிக்கும் பொருளாதார நகர்வுகளாக முன் தள்ளும் குறுகிய இனவாத அரசியலின் உற்பத்தியே இத்தகைய "கரும் புலி மற்றும் குண்டுதாங்கும் போராளிகள்"வருகைக்கான அரசியல்.இத்தகைய அரசியலை மேன் மேலும் இருப்புக்கிட்டு,தமிழ்பேசும் மக்களை மிகக் கவனமான ஓரங்கட்டுவதும் அவர்களை இலங்கைக் குடியரசிலிருந்து மெல்ல வெளியேற்றுவதும் இலங்கை அரசியல் வரலாற்றின் தொடர்கதைதான். கூடவே, வந்தேறு குடிகளாக்குவதும் சிங்கள அரசியலின் மிகத் தெளிவான நோக்கு.இத்தகைய அரசியல் வியூகத்தை மிக இலகுவாக அங்கீகரித்த உலக-இந்தியப் பொருளாதார ஆர்வங்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை இலங்கைக்குள் நிறுவ முனையுந்தருணத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களின் வருகையும் இருப்பும் நிகழ்கிறது.இந்த அவலமிக்க-சூழ்ச்சிமிக்க அரசியல்-பொருளாதார நலன்களின் பின்னே இலங்கையின் புரட்சிகரமான வரலாற்றைத் தொட்ட வியூமானது எப்பவும் இலங்கையை மிகவும் பிரச்சனைக்குரிய தேசமாகவே தென்கிழக்காசியாவில் பார்க்கப்பட்டு வருகிறது.

புலிகளின் அரசியல் என்பதும்,அவர்கள் சார்ந்தியங்கம் சமுதாயத்தின் அரசியல் என்பதும் பெரும்பாலும் வெவ்வேறானதெனினும் அத்தகைய அரசியல் விருத்தியானது முழுக்கமுழுக்கத் திட்டமிட்ட சிங்கள இனவாதத்தினதும் அதன் ஆளும் வர்க்கத்தினதும் திசைவழியிலானவொரு அரசியலைப் பிரதானமாகக்கொண்டே வெளித் தள்ளப்பட்டது.இலங்கையின் அரசியல்-பொருளாதார ஆர்வங்களை வெறுமனவே இலங்கை ஆளும் வர்க்கத்தோடு பொருத்திவிட்டுப் பார்க்க முடியாது.இலங்கைத் தரகு முதலாளித்துமானது எப்போதும் இந்தியத் தரகு முதலாளிகளோடு இணைந்த பொருளாதார முன் நிபந்தனைக்களைக்கொண்டியங்குவதற்கான காரணமானது வெறும் மூலவளங்களோடு சம்பத்தப்பட்டதல்ல.மாறாக, வளர்ந்துவரும் இந்திய நுட்பவியல்சார்ந்த ஆற்றல் மற்றும் நிதியீடு சம்பந்தமான ஆளுமை மேலும் புவிசார் அரசியலோடு இவை இணைந்தே எமக்குள் பிரதிபலிக்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தோடு மிகவும் நெருங்கிய உறவைக்கொண்டியங்குகிறது.இதை மிகத் தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழ் நாட்டுப் பெரு முதலாளிகளும் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆட்சியை அலங்கரிப்பவர்களுமே!இங்கே,நிலவும் முரண்பாடுகள் அல்லது தமிழ்சார்ந்த கோசங்கள் யாவும் ஒரு கட்டத்துக்குமேல் நகராது-நசுக்கப்படும்.இதை மிக உணர்ந்தவர்கள் ஜே.வி.பி. என்ற கட்சியே.இவர்கள்தான் அப்பப்ப இந்தியப் பொருட்களை நிராகரிப்போமென அறைகூவலிடுகிறார்கள்.இது ஒருவகையில் தமிழ்நாட்டு முதலாளிகளின் அரசியலைச்(தமிழ்நாட்டரசியல்) சம நிலைப்படுத்தும் தந்திரமாகும்.சிங்களத் தேசம் இந்தியப் பொருள்களை நிராகரிக்கும் பட்சத்தில் பாதிகப்படும் பெருவணிக மாநிலம் நிச்சியம் தமிழ்நாடாகத்தான் இருக்கும்.

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வியூகங்கள் பெரும் பகுதி இந்தியத் தொழிலாளர்களின் கடினமான எதிர் நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்தே தீர்மானமாகிறது.இந்தியத் தருகு முதலாளியத்துக்கு அச்சமூட்டும் பெரும் திரளான உழைக்கும் வர்க்கத்தின் வர்க்கவுணர்வுமிக்க திரட்சியின் புரட்சிகரமான பாத்திரத்தை விளங்கிக்கொண்ட இந்தியப் "பார்ப்பனிய"ஒடுக்குமுறை ஜந்திரம் இன்றைய உலகப் பல்தேசியக் கம்பனிகளின் பொருளாதாரக் கூட்டு உற்பத்தி-இலாபவேட்கை-மூலதன மற்றும் குறை ஊதியம் சார்ந்த அரசியலுக்கு இடைஞ்சலாகவே இலங்கையின் ஈழத்துக்கான போராட்டத்தை இனங்காண்கிறது.இங்கே,பிரபாகரன் என்பவர் இத்தகைய அச்சத்தை இல்லாதாக்கும் அரசியலுக்கு அவசியமாகவிருந்த அன்றைய காலங்கள் இன்றையப் புறநிலை மாற்றங்களோடு இல்லாமற் போகிறது.எனவே,பிரபாகரன்சார்ந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளை-அவர்களது உயிர்வாழ்வுப் போராட்டத்தைக் குறுக்க முனையும் கருத்தியல்சார் நடவடிக்கைகளில் இன்றைக்கு அன்னியவுலகம் மிக முனைப்பாக இருக்கிறது.இத்தகைய அரசியலினது வெளிப்பாடே சிறார்களைப் போராளியாக்கும் முறைமைகளுக்கு எதிரானதொரு அரசியலாகவும் இத்தகைய ஏகாதிபத்தியங்களால் முன்னெடுக்கப்படுகிறது.தத்தமது அரசியல் மற்றும் இராணுவ-மூலவளத் தேவைகளுக்கேற்றவாறு நமது அரசியல் வாழ்வைத் தீர்மானிக்க முனையும் இன்றைய உலகப் போக்குகளுக்கெதிராக நாம் கருத்திடுவதற்குப் பதிலாகப்"பிரபாகரன்"படத்துக்கான கருத்துச் சுதந்திரம் என்றபடி நகர்வதுகூட ஒரு வகையில் நமது பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகக் குறுக்க முனையும் திட்டமிட்ட புரிதல்தான்.

இது குறித்து ரதன் மிகவும் பொறுப்புணர்வோடு பதில் தந்தே தீரணும்.அது சாத்தியமற்றதென்றால் இவ் விமர்சனம்-கருத்துச் சுதந்திரக் கூவல்கள் எல்லாம் இலங்கைப் பாசிச அரசுக்குச் சார்பானதாக்கும் முயற்சியின் தொடர்ச்சியே என்பது எம் வாதம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.03.2008

Sonntag, März 23, 2008

ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?


இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் கூட்டும் என்று இன்னொரு புதிய அத்தியாயத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா திறந்து வைக்கிறது.

20.03.2003 ஆம் ஆண்டு ஈராக்கை இராணுவரீதியாகத் தாக்கி அழித்த அமெரிக்கக் கொடும் யுத்தத்தை புஷ் கோமாளி சரியானதென்பது அவரது புத்திஜீவித்துவப் பிரச்சனையல்ல.மாறாக,அதுதாம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு."இதுவொரு யுத்தம், அமெரிக்கா அதை வெல்வதற்கும்,அவசியத்துக்குமானதாகும்,துருப்புகளை மீளப்பெறுவதற்கென்ற கேள்விக்கே இடமில்லை"என்று பெண்டகேனில் வாந்தியெடுக்கும் புஷ்சின் பிரச்சனை அமெரிக்க வங்குகுரோத்துக் கம்பனிகளின் பிரச்சனையாக இன்னொரு அத்துமீறிய எண்ணைவள நாட்டைக் கைப்பற்றும் அரசியலோடு சம்பந்தப்படுகிறது.இது உலகத்தின் அனைத்து மக்களினங்களின் ஜீவாதார உரிமைகளுடனும் மிகப்பெரும் இராணுவக் குறுக்கீட்டை செய்யும்-நியாயப்படுத்தும் அரசியலாக விரிகிறது.


ஈராக் குறித்த ஆய்வை ஜேர்மன் ஊடக முகாமையாளர் டாக்டர் யுர்கன் ரோடன்கோவ்பெர் என்ற பத்திரையாளர்"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?"என்ற தனது ஆய்வு நூலில் தான் நேரடியாகப் பார்த்தை-அநுபவித்தைப் பதிவு செய்திருக்கிறார்.ஈராக்கில் அமெரிக்கத் துரப்புகளின் அட்டூழியத்தை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் ஈராக்குக்குள் நுழையவிடும் பத்திரிகையாளர்களை தமது கட்டுப்பாட்டின்கீழ்த்தாம் இடங்களைக் காண்பிப்பதும்,எந்தெந்த இடங்களைப் பார்வையிடலாமென்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே தீர்மானித்துத் தமது கண்காணிப்பின் கீழ்தான் அனைத்தையும் அநுமதிப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.இது அமெரிக்க அரசியல்.இந்தியாவையோ அல்லது இலங்கையில் தமிழர்கள் பலியெடுக்கப்படுவதையோ மனிதவுரிமை மீறலாக அது பார்க்காது.அல்லது, இத்தகைய நாடுகளுக்கோ அது ஒருபோதும் குற்றப் பத்திரிகை தயாரிக்காது.இதையும் நாம் புரிவதில் சஞ்சலம் இருக்குமாயின் தொடர்ந்து மேலே செல்க!

ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.11 இலட்சம் மக்கள் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.பாக்தாத்தில் ஒவ்வொரு இரண்டவது வீடும் ஏதோவொரு வகையில் குறைந்தது ஒருவரையாவது பலிகொடுத்திருக்கிறது.ஈராக்கின் முழுமையான குடியிருப்புகளில் 40 வீதமான குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மேற்காணும் தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனமான ஓ.ஆர்பி. மிகக்கடினமான ஆய்வுகளுக்குப் பின்பு கடந்த 2007 இலையுதிர்காலத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேற்குலகத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஆய்வை-நூலைத் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் எழுதியிருக்கிறார்."மேற்குலகத்தவர்கள் மிகவும் கொடுமையானர்கள் இஸ்லாமிய உலகத்தவரைக்காட்டிலும்"என்று தடாலடியாகவே குறிப்பிட்டுத் தனது ஆய்வை ஈராக்குக்குச் சென்று-அநுபவித்து எழுதியுள்ளார்.

காலனித்துவத்திலிருந்து இன்றுவரையும் பல கோடி இஸ்லாமியர்கள் பலிகொள்ளப்பட்ட வரலாற்றைச் செய்தவர்கள் "பழைய ஐரோப்பாவின்"குடிகளே!இன்றைய அமெரிக்கா அதன் அடியொற்றி அழிப்பு அரசியலை மேற்கொள்ளும்போது இந்தப் பழைய ஐரோப்பாவின் நவ லிபரால்கள் ஆங்காங்கே அமெரிக்காவுக்குப் பின்னால் பதுங்கியபடி ஐனநாயகம் பேசுகிறார்கள்.இவர்களின் மனோத்திடமானது ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியை அமெரிக்க அத்துமீறிய ஆக்கிரமிப்பால் முன்னெடுக்கமுடியுமென்பதுமட்டுமல்ல அதன் வாயிலாக வந்தடையும் மூலவளத்தை கணிசமானளவு ஐரோப்பியச் செல்வமாக்குவதில் அமெரிக்காவுக்கான தார்மீக இராணுவ-அரசியல் ஒத்துழைப்பாக இருக்கிறது.ஈராக் யுத்தத்துக்காக ஜேர்மனிய அமெரிக்காவுக்குக் கொடுத்த நிதி 4.000 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது ஒரு மெய்யான மதிப்பீடு.இன்றைய புஷ்சின் பின்னே மறையமுனையும் ஐரோப்பியக்கூட்டுக்குள் நிலவும் முரண்பாடுகள் அமெரிக்க மூலதனத்தோடு மல்லுக்கட்டும் போக்கை மிகுதியாக மறைத்தபடி அமெரிக்காவின் முதுகில் குத்த முனையும் அரசியலை ஜேர்மனியும்,பிரான்ஸ்சும் முன்னெடுக்கும்போது போலந்து அமெரிக்காவுக்கு மிக விசுவாசமான நாடாக இருக்க முனைகிறது.அங்கே,அமெரிக்காவுக்கான நம்பகமான இராணுவத் தளம் நிலைபெற்று ஏவுகணைத் திட்டம் நிறைவேறி வருகிறது.இது இருஷ்சியாவின் வயிற்றெரிச்சலாக விரிந்து கொசோவோ எதிர்ப்பாக மாறுகிறது!

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர்Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும,; இன்றைய புஷ்சினது நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.அன்றோ காலனித்துவக் கொடூர நெடுமுடிகள் ஆட்சியல் அமர்ந்தபடி உலகை வேட்டையாடியதற்கும் இன்றைய நவீன"ஜனநாயக"க் காவலர்கள் ஆட்சியில் அமர்ந்தபடி"சகோதரத்துவம்,ஜனநாயகம்,அமைதி,சமாதானம்"சொல்லி உலகை வேட்டையாடுவதற்கும் அடிப்படையில் ஒற்றுமை தமக்குச் சொந்தமில்லாத சொத்தை தமதாக்கும் செயற்பாடாக இருக்கின்றதெனினும் உலகைத் தொலைத்துக்கட்டும் பொருளாதார முனைப்பின் அதி நவீன அணுவாயுத இராணுவக் குறுக்கீடானது இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பே மிக மோசமான வன்முறையாக உலகைத் தொலைக்க முனைகிறது!இன்றைய அமெரிக்காவின் இராணுவ விய+கமானது"Ground-Based Midcourse Defense System" (GMD) திட்டமாகவும் உலகைச் சுற்றிப் பொறிவைக்க முடியுமென்பதற்கு அமெரிக்க-இருஷ்சியப் பேச்சுவார்த்தைகளில் தென்படுகின்றன.இத்தகைவொரு சூழலில்தாம் நாம் அமெரிக்க வல்லாதிகத்தின் போர் வெறியானது வெறுமனவே மூலவளத் திருட்டுக்கானதுமட்டுமல்ல அது இனவாத அரசியலின் இன்னொரு தொடர்ச்சியை வற்புறுத்துவதாகத் தொடர்ந்து கூறிவருகிறோம்.அமெரிக்காவின் இத்தகைய அரசியல் உள்ளீடுகளை மறைப்பதற்கானவொரு தயாரிப்பில் நாளை திருவாளர் ஒபாமா அமெரிக்க அதிபாராகவும் வாய்புண்டு.ஏனெனில், முகமிழக்கும் அமெரிக்க ஜனநாயகத்தை நிறப்பாகுபாடற்ற அமெரிக்க நவீன அரசியல் தடுத்து நிறுத்துவத்தின் இராஜ தந்திரத்தில் இனவாதக் கழிசடை அழிப்பு யுத்தத்தின் வீரியத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளில் ஓபாமாவும் ஒரு கருவியாக இருப்பதைத் தவிர வேறென்ன அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு அவசியம்?

இங்குதாம் ஜேர்மனிய ஊடகவியலாளர் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் தனது ஆய்வுகளை ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களது எழுத்தின் எல்லை மேற்குலகச் செழுமைமிகு மூலதனவொழுங்குக்கானதாகவே இருக்கிறது.இது உலகு தழுவிய அத்துமீறிய அமெரிக்க-ஐரோப்பிய இராணுவக் குறுக்கீட்டுக்குத் தடையாக முன்வைக்கப்பட்டாதாக இருப்பினும்,உலக மூலவளங்களைப் பெறுவதற்கான இன்னொரு வகையான முதலாளிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறது.அது சாரம்சத்தில் இராணுவவாதத்தை மறுப்பதற்குப் பதில் அதையும் செழுமையாக்க முனைகிறது.இத்தகைய இருவகைப்பட்ட முகத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய அமெரிக்காவின் அதீத கொடுமைகளைச் சொல்லும் ஆதாரப+ர்வமான உண்மைகளை அது உலகுக்குத் தருகிறது.நாம் அவரோடு கூட நின்று"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?" என்று கேட்காது நீங்கள்,எதற்காக உழைப்பவர்களைக் கொல்கிறீர்கள் என்று கேட்டுவிடலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.03.2008

Samstag, März 15, 2008

இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?

மலையகப் பரிசுக் கதைகள்.


//இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்.//
"மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு
தேடல்"



மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து-


"மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்".

முதலில் "விரக்தி" சிறுகதையை என் வசமாக்கிறேன்...சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன்.

ஒரு தடவை...

இரு தடவைகள்...

மூன்று...நான்கு...

தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது!

முயன்று,முயன்று தோற்றேன்!

விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"


தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!


இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!


வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!


"மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தது.தான் சமைத்தவற்றை மூத்த மகனும்,பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளு குளுத்தது.இரு (இ)லயத்தார்களும் வந்து முறைவைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது.நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது."


அம்மா:பெற்றவள்.


மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!


அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.


என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அசூமத்தின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!


அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்:தேசத்தின் சந்தோசம்!அசூமத்துக்கு ஒன்பதாண்டுகளுக்குப்பின்"அம்மா"வைப் பார்க்க முடிந்தது.இன்றெமக்குப் பல பத்தாண்டுகள் சென்றாலும் அம்மாவைப் பார்க்க முடியுமா?-அந்தப் பாக்கியம் கிடைக்குமா?-எல்லாம் "அவன்" செயல்!,இன்ஷா அல்லா!!


இக் கேள்விகளும்,என் தாயாரின் நிழலுருவமும் சதா என் விழிகள்முன்...


தொடர்ந்து தொடர்ந்து முயன்றேன்,அடுத்த சிறுகதைகளை வாசித்து விடுவோமென,எட்டித்தாவ முயன்றால் அசூமத்தும்,அவரது மோட்டார் சயிக்கிளும்,மகனும் கண்ணெதிரே வருகிறார்கள்.


உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.


பனங்கூடல்.


கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...


தென்னை வளவு.


பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...


இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,அசூமத்தின் அம்மா.அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்.அம்மா:தாய்-தேசம்?


ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நான்-நாம் தேசம் தொலைத்தவர்களாகிறோம்.


ஆம்!


அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!


இப்போது அசூமத்தின் வலி,எங்கள் வலியாகிறது.


"தினசரி என் சேப்புகளை(சேட்டுப் பை)மேய்தே மாமிக்கென்று சில புடவை அநாமதேயங்களை வாங்கி வைத்துக்கொண்டு,"போய்யிட்டு வாங்களேனப்பா"என்று புடுங்கி எடுத்தாள்."


அதிகமான பெண்கள்,குடும்பப் பெண்கள் இன்றும் சுய பொருளாதாரத்தில் சார்ந்து வாழவில்லை.அவர்கள் தகப்பனினதோ,புருஷனினதோ,சகோதரனினதோ வருமானத்தில் தங்கியுள்ளனர்.இலங்கைபோன்ற நாடுகளின் சமூக வாழ்வின் உண்மை உருவத்தை நன்றாகவே அசூமத் கேலி செய்கின்றார்.எனினும்,மாமிமார்களைக் கடித்துத் தொலையும் மருமகள் பிள்ளைகள் மத்தியில் மனைவியை அன்பின் குறியீடாக்கி,திட்டுவதும் துன்புறுத்துவதும் இருதரப்புக்குமுரிய செயலாய் இருப்பதையுணர்ந்து,அவற்றைப் போக்கவும் முனைகிறார்.இங்கே அன்பைத் தவிர எந்த விண்ணாணங்களும் இருப்பதில்லை.



உழைத்துண்ணும் மனிதர்கள் கட்டுப்பட்டித்தனமான நடுத்தர வர்கக்கத்தின் தன் முனைப்புச் சார்ந்த அதீத தனி நபர் வாத மனிதர்களாக இருப்பதில்லை.அவர்களின் அன்பும்,அறிவும் "தன்னையும் தான் வாழும் சுற்றத்தையும்" பிணைத்தபடியேதாம் உலகை எதிர்கொள்ள வைக்கிறது.இதுதாம் வாழ்வு.இதன் நிசம் போலியான அசத்தல்களுக்கும் அன்பளிப்புகளுக்கும் அப்பால் "எள்ளாய் இருப்பினும் ஏழாய்ப் பிரித்துண்ணும்" உண்மை மானுடப் பண்பாய் விரியும்.அசூமத்தின் மாந்தர்கள் அன்பையே பொழியும் உண்மை மானுடர்கள்.இவர்கள் கூடியுழைத்துண்ணும் பொதுப் பண்போடு வளர்ந்தவர்கள்.பொன்னான மனிதர்களாக நம்மை நெருங்குகிறார்கள்.நாவலாசிரியர் ஜெயகாந்தன்,இயக்குனர் மகேந்திரன் போன்றோரின் கதை மாந்தர்களிடமிருக்கும் "மானுட அழகு" இந்த அசூமத்தின் மாந்தர்களிடம் மிளிர்வதைக் காணும்போது, மகத்துவம் என்பதெல்லாம் மனித வாழ்வின் அனுபவத்துக்கு அப்பால் இல்லையென்பதை உணர்வதும் அந்த அநுபவத்தை அர்ப்பணிப்போடு பெறுவதே வாழ்வின் சுகானுபவம் என்பதை இத்தகைய கதை மாந்தர்கள் மூலமாகச் சொல்லும் அசூமத் கதை சொல்லிகளுள் மிகச் சிறப்பாகத் தோற்றம் பெற்றுவிட்ட நல்ல கதாசிரியர் என்பதை விரக்தி சிறுகதையூடாக நிரூபிக்கிறார்.


இங்கு அசூமத்தின் தாயாரின் மருமகள் மாமிக்காக அன்பையும்,ஆதரவையும் பிடவை மூட்டையாய் கட்டிப் புருஷன் பிள்ளையோடு அனுப்புகிறாள்.இவள் தாய்.தாய்குத் தாய்மை பொழியும் தாலாட்டு இப்படித்தாம் இருக்கிறது நிசத்தில்.


அன்பு.


இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது தன்னையும் தன் சுகத்தையும் மறுத்து தன் விழிகளுக்குமுன் தன்னொத்த மானுடர் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இது நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும்,அது தாயே ஆனாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்.இதுதாம் ஒரு மார்க்சையும்,லெனினையும்,செகோராவையும் மனிதர்களுக்காகச் சாகத் தூண்டியது.இதுதாம் இறுதிவரையும் ஏங்கல்சுக்கும் மார்க்சுக்கும் இடையிலான அற்புத நட்பாக இருந்தது.


தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள் அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெருதாகும்?இல்லை,இல்லவே இல்லை!நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு எனக்காக அன்னை தந்தது.


இது உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!ஈழத்தவர்களான எமக்கிது தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.



கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள் மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு படைப்பிலக்கியமுமொரு ஆயுதமே.எனவேதாம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிறோம்.இன்றைய உலகில் மனிதர்கள் மிதமான தனிநபர் வெறிக்குள் கட்டுண்டு கிடப்பதற்கும் இதுவே(இன்றைய சமூக நிலைமை) காரணமாகிறது. தன்னையே குறியீடாக்கி உலகத்தைத் தரிசிப்பதற்குமான தன்முனைப்பு எந்தவொரு படைப்பாற்றலையும் மனிதரிடம் பொதுமையாக வளர்க்கவில்லை.அது(படைப்பாற்றல்) சோதனைக்கூடத்து முதிசமாகக் கிடப்பதற்கும் அதுள் ஓரிரு மனிதர்களே தம்மை முன்னிறுத்துவதற்கும் இந்த அமைப்பே உறுதுணையாகிறது.உலகத்தின் அனைத்து நிகழ்வுக்கும் பண்டுதொட்டுப் பெறப்பட்ட நம் முன்னோரது உழைப்போடு கூடி வரும் மனித உறவின் மகத்தான அழகுதாம் காரணமே தவிர, தனிநபர் செயற்பாடோ அல்லது சுப்பர் மூளையோ காரணமில்லை!இதுதாம் அசூமத்தின் கதைகளுடே நாம் காண முனையும் அன்பாய் கதையெங்கணும் விரிந்து கிடக்கிறது.



மனிதவுறவுகள் குலைந்து சிதறும் இன்றைய சமூகத் தளத்தில்,ஒரு அரும்பாய் அன்பைத் தக்க வைக்கிறாள் இந்த மருமகள்.


இது தேவை.


இதன் அரும்பு அகல வேர்களைப் பரப்பி விருட்சமாகணும்.


"மகனும்,பேரனும் கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த மோட்டாரும் தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா?"


அசூமத்துக்கு இந்தக் கவலை வேண்டாம்.


அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.


இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?


சாதரணச் சயிக்கிள் வண்டியைக் கண்டே மகிழ்வுறும் தொழிலாளத் தாயானவள் மோட்டார் வண்டியைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்ல அதைச் சாக்கினாலோ பாயினாலோ மூடிப் பாதுகாத்து,இது பிள்ளையின் வண்டியென ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில் துன்பத்தில் துவளும்; தொழிலாளித்தாய் தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதா;மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய் பெருகுபவள்.இப்போது இவள் தாய்:தேசம்!


எண்பதுகளுக்குமுன் இச்சிறுகதைத் தொகுப்பை வாசிக்க நேர்திருந்தால் நிச்சியம் இந்த் யாழ்ப்பாணத்துத் தமிழனால் இத் தொகுப்புக்குள் தன் வாழ்வைக் கண்டிருக்க முடியாது.தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாததுபோல் தூரத்தில் நின்று-வாசித்திருப்பான்.


இப்போது வாழ்வும்-சாவும் சுமப்பவனாய்,உலகெங்கணும் தெருவோரச் சருகாய் அலையும் இவனால்-இவளால் இக் கதைகளைத் தன்னுள்ளே நிகழும் வாழ்வாய்க் காணமுடியும்.அதற்கெதிராய்ப் போராடத் தெரியும்.உயிரைப் பணயம் வைக்கத் தெரியும்.


இதுவொரு ஆச்சரியப்படத் தக்க விந்தையே!யாழ்ப்பாண மண்ணின்(சமூகத்தின்)கட்டுக்கோப்பில் இப்படி உருப்பெறுவது ஒரு மகத்தான மாற்றமே.


நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உழைத்து,உருக்குலைந்த மலையக மக்களின் சோகச் சுவட்டை-இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது!இது நமது வாழ்வென்று ஓங்கிக் குரலெடுத்து அழுகிறோம்.தாயைத் தொலைத்த வாழ்வு-தேசத்தை இழந்து தூர நின்றுறவுகளோடு தோள் சேரத் துடிக்கும் இந்த வாழ்வில்- நம்மை ஜந்திரம் தின்று துப்பும் இன்னொரு பொழுதில்- அனைத்தையும் தொலைத்து அழியும் நமது வாழ்வே மலைய மக்களின் வாழ்வாயும் விரிகிறது.இங்கே பொருள் வயப்பட்ட சம நிலைதாண்டிச் சோகம் தரும் வலி,உறவுகளைத் தொலைத்துச் சுற்றத்தையிழந்து தவிக்கும் வலியையே நாம் குறிப்பிடுகிறோம்.


துடிக்கின்றோம்.தொண்டைக்குள்ளிருந்து ஏதோவொரு பொருள் கேருகிறது,விழிகள் அப்பப்ப பனித்துக் கொள்கிறது-அல் அசூமத்தின் விரக்த்திக்குள் வாழும்போது.


"சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்துகொள்வது புத்தியில்லை.அவர்களுடைய வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம்."


மனித வாழ்வின் சோகச் சுவட்டை இத்தனை நாளும் இலக்கியங்கள் தூரத்தில் நின்று துரத்திப்பிடிக்க முனையும் படைப்புகளை நாம் இதுவரை அநுபவித்திருக்கிறோம்.இதிகாசம்,புராணம் இத்தகைய இடர்களை நமக்குத் தந்தவை.ஆனால,; இன்றைய இத்தகைய சிற்றிலக்கியங்கள் நமது வாழ்வின் வலி சொல்லி,நமது வாழ்வை அதன் குருதியோடும் சதையோடும் சொல்லும் பண்பைக் கொண்டிருக்கிறது.துன்பத்தை அனுபவித்து அதைச் சொல்வது அனைத்தையும்விட மேலானது.இன்றைய படைப்பாளிகளை இத்தகைய வாழ்வின் நெருக்கடியேதாம் உற்பத்தியாக்கி நமக்கு தருகிறது.இந்தப் படைப்பாளிகளின் உற்பத்தியானது சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கெதிரான நியாயத்தின் ஜனனமாகவும்,நியாயத்தை நிறுவுவதற்கான போர்க் குரலாகவும் எடுக்கப்பட வேண்டும்.பெயருக்கு இலக்கியம் படைக்கும் சூழல் போய்,வாழ்வின் அனைத்து அடக்கு முறைகளையும் மீறும் எதிர்ப்புக் குரல்களே இவை.இவைகளுக்கு எந்த இடமோ,எந்த மொழியோ கிடையாது.இவை எங்கெங்கு அநீதியுண்டோ அங்கே பிறப்பெடுக்கின்றன.எங்கே மனிதத் துயர் நிலவுகிறதோ அங்கே இவை எதிர்ப்புக் குரலாக நமது வாழ்வோடு இரத்தமும் சதையுமாக ஒட்டி வருகின்றன.


இங்கே அல் அசூமத்தோ விரக்தி சிறுகதையூடாக மலையக மக்களின் அவதியுறும் வாழ்வு நெருக்கடிக்குள் தன்னை முழுமையாகப் புதைத்து,அந்தத் துயரை அநுபவித்து-அதன் தாக்கத்தால் அமிழ்ந்துபோனபோது,குரல்வளைவரையும் நெருக்கடிகளின் வீரியம் வலுக்கரத்தைக் கொணர்ந்தவேளை, அதை எதிர்ப்பதற்காகவும், தன்னை-தான் சார்ந்த மனிதரை-உழைப்பாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான ஒரு சிறு பொறியாய் மேலெழுப்புகிறார்.அப்பொறியை ஊதிப் பெருக்கி பெரும்ஜுவாலையாக்கிவிட்டு அதற்குள் தன்னைமட்டுமல்ல எல்லோரையும்-சமுதாயத்தில் மனித விரோதிகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தூண்டும் அனைத்து ஆதிக்கவாதிகளையும் சேர்த்துக் கட்டியிழுத்துவந்து திணித்துப் பொசுக்கிறார்.இது ஒருவகையில் சமுதாய ஆவேசமாக எழுந்து மனித விடுதலைக்கானவொரு பக்குவப் பண்பைப் பெறும் முன் முயற்சியாக மனம் கொள்ளத் தக்கது.


ஒருவகையில் இதுவொரு வேள்வி!இவ்வேள்வியில் எரிந்து,கருகிச் சாம்பலாகி இறுதியில் எஞ்சும் கரித்துண்டமாய் உணர்வு கேலி செய்கிறது.


"ஆக,யாதும் ஊரே யாவரும் கேளிர்...இடுகாடு சொல்கிறது,புல் முளைக்கும் வரை ஆறடிதாம் என்று.ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது,ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை-போடா!,என்று."


அல் அசூமத்தின் இந்தக் கேலியானது மிக நியாயமானது.இன்றைய நமது வாழ்வின் நிலையில் இத்தகைய கேலிகளை சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளை இனம் காட்டத்தக்கவொரு எளிய வடிவமாக நாம் காணலாம்.இத்தகைய எளிமையான நையாண்டிகளால் மனித துயரத்தின் தொடக்கப் புள்ளி எங்கே வேரிடுகிறது,அது எங்ஙனம் கிளை பரப்புகிறதென்பதையும் நாம் சொல்வதற்கான ஒரு முறமையாக இவற்றைப் படைப்புகளுக்குள் சொல்வது எந்த வகையிலும் மனித வாழ்வின் நேர்த்தியை நோக்கியே.இதைக் கையாளுவதில் அசூமத் சிறந்திருக்கிறார்.


சொந்தமாய் உறவுறும் மண்ணை எவரும்,எவருக்காவும்-எந்த ஆதிகச் சக்திக்காவும்,அதன் வலுவான அடக்குமுறை வன்கொடும் ஜந்திரத்தின் யுத்தத்துக்காவும் விட்டுவிட முடியாது.தான் பிறந்து வளர்ந்த மண்ணை தாய்க்கு நிகரா மதிப்பதும்,உறவு கொள்வதும் மனித வாசிகளின் நியாயமான ஜீவாதாரவுரிமையே!பிறந்த முற்றத்தை எவரும் விட்டுக் கொடுக்க முடியாது,சட்டங்கள்போட்டுப் பறிக்கலாம்,திட்டங்கள் போட்டுத் துரத்தலாம்.ஆனால் உளப்பூர்வமான உரிமையை- அந்தவுரிமையால் எழும் பிணைப்பைப் பாசத்தை யாராலும் பறிக்கவோ -அழிக்கவோ முடியாது!


"கடுங்கந்தை!எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி...!உள்ளே ஓர் ஓலை தோன்றி மறைந்தது."


அல் அசூமத்தின் இந்த வார்த்தையும்,உணர்வும் "என்னை"உறுதி செய்கிறது.யாழ்ப்பாணம்... எனது பிறந்த மண்.இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது.எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காது மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லி ஜந்துக்கள் சுதந்திரமாக ஊருகிறது.தடி கொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எனது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!


நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.


இந்தச் சூழலில்தாம் விரக்தி மிகச் சாதரணமாக நம்முள் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அந்தத் தாக்கம் தரும் அதிர்வு மிகச் சாதரணமன்று.அந்த அதிர்வின் அதியுச்சமான விசை ஒரு சுனாமியாக மனத்தில் அலைகளை எழுப்பினாலும்,இன்றைய நமது போராட்டச் சூழல் நமக்கேன் வம்பை என்று குடும்பத்துக்குள் முடக்கி விடுகிறது.ஆத்திரமுடைய அவசரக்காரருக்கு ஆத்தைகூடத் துரோகியாகிப்போன சூழலில் எல்லாம் நடக்கும்.


விரக்தி சிறுகதையல்ல.அது நமது வாழ்வு.அதை வாசிக்க,வாசிக்க ஒரு பெரும் பொறி நெஞ்சில் மோதிக் கிளம்புகிறது.நான் கேட்க விரும்பாத வார்த்தை நாடற்றவர்கள் என்பதே!


"நாடற்றவர்கள்?"



இவ் வார்த்தை எல்லாத் தார்மீகக் கோட்பாடுகளையும்(முதலாளிகளின்)கேள்விக்குள்ளாக்கி"குருட்டார்த்தம்"பேசும் அரச சட்டங்கள்,தேசம்-தேசிய இனம்-மனிதர்களுக்கெல்லாம் சாட்டைகொண்டு முதுகினில் சொடுக்கிறது.இதுதாம் அசூமத்தின் கடைசி ஆயுதமாக இருக்கிறது.


இங்கே அல் அசூமத் உயர்ந்து நிற்கிறார்.


வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிகளை தத்துவமாய்ச் சொருகி வைத்து-விரக்தியை-வாழ்வாக்கி நமது விழிகள் முன்"நீ வாழும் வாழ்வு இதுதாம்"எனப் பறையடிச்சுச் சொல்கிறார்.இதுதாம் அவரது படைப்பின் மிகப் பெரும் அழகியல் வலு.


விரக்தியின் கரு ஒரு சிறு பயணக் குறிப்பே,அதை எவ்வளவு சிறப்பாக-வாழ்வாய் மலர்விக்கிறார்!இது உண்மை வாழ்வு.இதன் இயல்பான சோக வடுவாய்-வரலாறாய் விரியும் இலங்கை அரசின் கொடூரம்-உழைப்பவரையொடுக்கும் வக்கிரம் மலையகத் தமிழரின் வாழும் உரிமையை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதை சிறு பொறியாய்ச் சொல்லி பெரும் தீயாய் நமது உணர்வைத் தனது படைப்பால் வளர்த்துச் செல்கிறார்,அல் அசூமத்.




"இங்கேதாம் உதைக்கிறது.பழைய மாணவர்களாகப் பெருமைப்பட்ட எங்களுக்கு விதியில்லை.காலாகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும்,எங்களின் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்."-விரக்தி.


ஆம்!


அல் அசூமத் வரலாற்றை நன்றாகவே புரிந்துள்ளார்.



"...மண்ணாசைக்காரர்கள்."


ரொம்பவும் நிதானமானதொரு வார்த்தைக்கூடாக ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்பேசும் மக்களின் வோட்டுரிமைக்கு வேட்டுவைத்து "கப்பலில்" ஏற்றியவர்களும்-ஏற்றுபவர்களும் இந்த மண்ணாசைக்காரர்கள்தாம்.


இவ்வகை மண்ணாசைக்காரர்கள் பல தளங்களில் அகலத் தங்கள் வேர்களைப் பரப்பியுள்ளார்கள்.பலர் சூட்சுமமாக நமக்குள்ளேயும்,வெளியேயும் இருக்கிறார்கள்.
இவர்கள் என்றுமே நமக்கு ஆபத்தானர்வர்கள்.மனிதவுரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரக்கூட்டம்.


இப்போது கோவிந்தராஜனிடம் போகிறேன்.


"கப்பல் எப்பங்க...?"


நன்றாகவே கேட்கிறார்?


வீரையாவை மலையக விடுதலையின் விதையாய் மண்ணாசைக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தங்கள் சொந்த மண்ணில் ஊன்றுகிறர்ர்.


அது முளைவிடுகிறது.


மண்ணாசைக்காரர்கள் சுடு நீரை அதன்மேல் வாரிக் கொட்டுகிறார்கள்.


முளை வாடுகிறது!


பட்டுப்போகவில்லை.மீண்டும் துளிர்க்கிறது.மண்ணாசைக்காரர்கள் முன் தன் கிளைகளைப் பரப்புகிறது.


"எதுக்குக் கத்தியைத் தீட்டினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.இனி எதற்காகத் தீட்டுவோம் என்பதும் உங்கள்போன்ற தலைவர்மாருக்குத் தெரிந்தால் சரி."


காலவோட்டத்தில் இவ் "விதை"துளிர்த்துக் கிளைபரப்பி, மரமாய் விழுதெறிதலை மண்ணாசைக்காரர்களால் சகிக்கமுடியவில்லை.


சதி செய்கிறர்ர்கள்.


தங்கள்"பலங்கொண்ட"மூளைகளைக் கசக்கித் துளிர்த்துக் கிளைபரப்பிய மரத்தைச் சாய்க்க வழி வகுக்கிறர்ர்கள்-வழிகண்டாச்சு!


இனியென்ன?


கோடாரியுடன் வருகிறார்கள்.


கே.கோவிந்தராஜிடம் இப்போது வாழ்வின் மெய்ப்பாடு உண்மைகளை ஊடறுத்துச் சொல்கிறது.


சிதறிப்போயுள்ளோம்.சின்னாபின்னப்பட்டுத் தனிமைப்பட்டுள்ளோம்.


பி.வடிவேல் சொல்வதுபோல."தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகப் பரந்து கிடக்கும் தோட்டங்கள்,தொடர்பில்லாது அறுபட்டுக்கிடக்கும் உறவுகள்.தீர்வேயின்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சனைகள்,ஓயாத உழைப்பு,இவற்றின் கூட்டுக் கலப்புத்தாம் நாங்கள்."(ஈழப் போரின் பலம் உடைபடுவது இங்ஙனம்தாம்.வடக்கை,கிழக்கைப் பிரித்து,மக்களை அகதியாக்கி,வெளி நாடுகளுக்கு இடம் பெயர வைத்து,மாவட்டங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு,பொருளாதாரத் தடையால் மக்கள் உணர்வுகளைச் சிதறடித்து...யுத்தத்தால் கொன்று குவித்து-வான்வழித் தாக்குதல்களால் தமிழரை அச்சப்படுத்தி,போராட்டத்தையும்,சுய நிர்ணயவுரிமையையும் நீர்த்துப் போக வைத்து...)



கோவிந்தராஜனும் நிசவுலகுக்கு வருகிறார்.


முடிவு?


"கப்பல் எப்பங்க...?(இதைத்தாம் நமது விடுதலைப் போராட்டத்திலும் போராட்டச் சக்திகள்-அரசுகள் செய்து-"சமஷ்டி எப்ப கிடைக்கும்...?")


அப்பவும் எங்களுக்கொரு நப்பாசை.


"சாடின் அடைப்பின் நெரிசலில் விழி பிதுங்கி நின்றாலும்,மிதிபலகையில் கால் வைத்தவரை இறங்கித் திரும்பிப்போ என்று, மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி,ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு,நம்மனைவருக்கும் இருந்துவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடுமே!"


இதை யாரு சொல்கிறார்கள்?


நம்மைப்போல் போரின் கொடுமையால் அகதியாகி ஒண்ட வந்து,வேண்டா விருந்தாளியாக மேற்குலகில் வதைபடுவதற்காக, இடம் பெயர்ந்த மக்களில்லை!கடந்த நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இலங்கை வந்து,அந்தத் தேசத்தின் முதுகெலம்பான தேயிலை வருமானத்துக்குத் தமது குருதியை கொட்டிப் பசளையிட்ட மனிதர்கள் சொல்கிறார்கள்.காலாகாலமாகத் தமது உழைப்பால் இலங்கைச் செழிப்பாக்கும் மலையகத்தின் மைந்தர்கள் சொல்கிறார்கள்.பாழாய்ப்போன சிங்கள தேசம் எவரைத்தாம் வாழவிட்டது?தன் இனத்தையே கருவறுக்கும் சிங்கள-அந்நிய ஆளும் வர்க்கமா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும்?இத்தகைய உழைத்து ஓடாய்ப்போன மக்களுக்கே தண்ணிகாட்டும் சிங்களச் சியோனிஸ்டுக்களா இலங்கையின் உழைப்பாள வர்க்கத்துக்குக் கருணைகாட்டும்?


அது காட்டவே காட்டாது.


மண்ணாசைக்காரர்கள் விடுவதாகவில்லை.



சட்டம் ஒழுங்கு,கோடு கச்சேரி என்று பயங்காட்டுகிறார்கள்.வடிவேலு நியாயம் கேட்கிறார்.


"தலைக்கொரு கூரை முக்கியமுங்க!"


அதெல்லாம் உங்களுக்கில்லை.சட்டம்,ஒழுங்கின் பதில் இப்படி...


மலையகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னப்பட்டுள்ள இச் சிற்றுலக்கியத் தொகுப்பு இங்கேதாம் சிறந்தும் இருக்கு.இயல்பாய் வாழ்வைக் கண்முன் கொணர்ந்து,தான் வாழும் வாழ்வையும் அதன் அடித்தளத்திலிருக்கும் வேதனைகளையும் இத் தொகுப்புச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.இதில் அல் அசூமத்துகஇகுப் பிறகுதான் மற்றைய படைப்பாளில் சிறந்திருக்கிறார்களென்றில்லை!


ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமையுடன் இக்கதைகளுக்குள் தம் வாழ்வைத் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்,வாழ்கிறார்கள்.


"இனி எங்கே...?"


சிவலிங்கம் தேடியலைகிறார்.


"எந்தப் பண்ணையர்களுக்கும்,ஜெமிந்தார்களுக்கும் கூலி விவசாயிகளாக பண்ணையடிமைகளாக உழியம் செய்ய முடியாமல் பயந்து ஓடீவந்தார்களோ...அதே பண்ணையடிமைகளாக மீண்டும் தள்ளப்பட்டுவிட்டார்கள்."




ஆண்டாண்டு உழைத்து வளமாக்கிய மண்ணைவிட்டுத் துரத்தியடிக்கும்"மண்ணாசைகாரர்கள்"தம் கொடூரத்தைச் சிறப்பாகச் சொல்லும் சிவலிங்கம்,பென்சர் கிழவர் பெருமாள் ஊடாக, மண்ணின் மைந்தர்களின் உரிமைத் தாகத்தை நாம் அனுபவிக்க வைக்கிறார்.



"காணி நிலம்,வீடு என்று சொந்தமே இல்லாமல் தோட்டமெனும் அறைக்குள்ளே வியாபாரஸ்தானங்களுக்கும்,நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலிகளாகவே வாழ்வதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுபெறும் காலத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்."(இனி எங்கே...?-சிவலிங்கம்)



ஆம்! இன்று உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும்-அவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கும் பட்சத்தில்-இவர்களின் நிலை இ·தே!மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையும்,மலையக மக்களின் வாழ்வு நிலையும் அடிப்படைப் பிரச்சனையில் சம அளவு ஒன்றுபட்டாலும்,மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் புலம் பெயர் தமிழரின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் பின்தங்கியது என்பதை நாம் உணர்கிறோம்.


உலகத்தில் எங்குமில்லாத கொடுமை மலையகத்தில் தலைவிரித்தாட,இந்த மண்ணாசைக்காரர்கள் காரணமாக இருக்கிறார்கள்.


"உழைப்பவனுக்கே இந்தவுலகம் சொந்தமெனும்போது,உழைத்துண்ணும் இந்த மக்களின் உண்மை வரலாறு இலங்கையில் பொய்ப்பித்துப் போகுமா?"என்று சிவலிங்கம் கேட்பதன் நியாயம் புரிகிறது!


ஜானகியைத் தேடும் மல்லிகை சி.குமாரை நெருங்குகிறேன்.


மரபுகளுக்கும்,சம்பிரதாயங்களுக்கும் இரையாகிப் போகும் பெண்களின் சுவட்டில் ஜானகியை உருட்டிப் புரட்டாமல்,"தாத்தா நான் கணவனையிழந்ததால வெதவக் கோலத்தில நிக்கேல்ல,நேசித்தவனை அடைய முடியாமப் போயிரிச்சேன்னுதான் நெனைச்சி வெதவையா நிக்கிறேன்..."


ஜானகியை உணர முடிகிறது!


எனினும்,இந்த மரபுகளுக்குள்ளும்,இந்து மதக் கருத்தியல்களுக்குள்ளும் கட்டுண்டு வாழ்ந்தனுபவப்பட்ட என் மிச்சசொச்ச கற்பிதங்களுக்குச் சற்றுக் கூச்சம் ஏற்படுகிறது.



தாலி கட்டியவனைவிடவா? என்று என்"வளர்ப்பு"ச் சமூக ஒழுங்கு கேள்வி கேட்டாலும்-தனிநபர் உரிமை,சுதந்திரம் என்ற மகத்தான மனிதநேயச் சிந்தனை என் சுயத்தை வெருட்டி,கற்பிதக் கருத்தின் உணர்வு நிலையின் உச்சியில் ஓங்கி உதைக்க,ஜானகியை-அவள் உணர்வுகளை என் சுயத்தைக் கடந்து, அவள் நிலைக்குள் என்னை அழைத்துச் செல்கிறது.அவளைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.அவளாக மாறுவதற்கு முனையும் ஒவ்வொரு தடவையும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.நானே ஜானகியாகத் தொலைத்த காதலுக்காகக் கண்ணீர் மல்கிக் காலத்தைக் கடைந்தேற்றுவதும் ஒரு கடுமையான தியானம்தாம்!
இந்தக் கண்ணீருக்குள் குவிந்திருக்கும் எதிர்ப்புக் குரல் கலகத்தின் உச்சிக்குச் செல்கிறது.நமது மரபுகளுக்காகவும்,சமூக ஒழுங்குகளுக்காகவும் மனிதவுணர்வுகளைப் பலியிட முடியுமா?



இல்லை!


இன்றைய சின்னதிரை நாடகங்கள் கற்பிதப்படுத்தும் பெண்மைக்கு அப்பால் உலகம் விரிகிறது.ஆனால், சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கான பெண்மையைப்படைக்க முனையும் இன்றைய சூழலில், இந்த ஜானாகி பாரதிகண்ட புதுமைப் பெண்ணைவிட நம் தேசத்து நங்கைகளின் அக்கினிக் கரங்களோடு உறவாடத்தக்க பண்புகளோடு நம்மோடு உறவாடுகிறாள்.இவள்தாம் இந்த நூற்றாண்டின் பெண் மொழியாக நிமிர்ந்து, எம் ஈனத்தனத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகையோடு நம்மை எதிர் கொள்கிறாள்.இதுவே சமூக மாற்றத்தின் அவசியத்துக்கான எதிர்வைக் கூறுகிறது.



வார்த்தைகளுக்கு-சடங்குகளுக்குச் சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியமானது ஒவ்வொரு பொழுதும் மானுட வளர்ச்சிக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதுதாம்.இங்கே மகத்தான மாற்றங்களைக் கோரி நிற்கும் இந்தப் புரட்சிகரமான மனிதவுணர்வு எந்தப் பொழுதிலும் அடக்கியொடுக்கப்பட்டே வருகிறது.அது பெண்களைப் பூசையறைச் சாமியாக்கி ஆண் மனத் தேவைகளைப் பூர்த்திப்படுத்தும் வெகுளித்தனமான ஆணியச் சமுதாயத்தின் அரிப்புக்கு உடந்தையாகவே பண்டு தொட்டுத் தொடர்கிறது.இதை நாம் பெண்களின் மீது சுமத்தப்பட்ட"அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு"என்று ரீல்விட்டுக் காரியவாதிகளாகப் பெண்மையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்.



இதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தமாதிரி மல்லிகை சி.குமார் அழகான காதல் ஓவியத்தை நம் முன் வரைந்து காட்டுகிறர்ர்.



இங்கே சக்திவேல் நம்முன் மிக உயர்ந்து நிற்கிறார்!தான் நேசித்தவளுக்கே-அவள் விதவையாக இருந்தும்-தாலிக்கொடி,பொட்டிடும் அவர்,சிறப்பாய் உருப்பெறும் சமூகமாற்றத்திற்கான வெகுஜனக் கருத்தியல்-பண்பாட்டு முகிழ்ப்பின் அரும்பில் ஒருவர்."தாலியும்,பொட்டும்" விதவைக்குக் கிடையாதென்றுரைக்கும் இந்த ஆணாதிகச் சமூக அமைப்பில் இவை பெண்ணையொடுக்கும் வடிவங்களாகவே இருக்கிறது.மனதைச் சித்திரைவதை செய்யும் பண்பாட்டு ஒடுக்குமுறையானது பாரிய உளவியல் யுத்தமாகத் தொடர்கிறது.எனினும், இத்தகைய ஒடுக்குமுறை ஆயுதத்தையே கையில் எடுத்து, விதவைக் கோலத்துக்கு விடைகொடுப்பதற்காக அதையே ஒரு குறியீடாக்கி அதை அணிவிக்கிறார்.எனினும் பழையபடி அந்த ஆயுதம் அவளைக் கட்டிப்போடும் கண்ணியாக மாறும் அபாயத்தையும் மல்லிகை சி.குமார் புரிந்திருப்பாரென்றே நம்புவோம்.


சந்தனம் கண்களைக் குளமாக்கி விடுகிறாள்.-அவள் சாகமாட்டாள்!


உழைப்பால் உயர்வுறாத அவள்,இறுதிவரையும் சுகமாய்,நிம்மதியாய்த் தூங்க முடியவில்லை.அவள் நோய்,இந்தச் சமூகத்தின் நோய்!


மனிதவுரிமைகள் எதுவுமேயில்லாது உழைப்பவர்களைக் கிள்ளுக்கீரையாய் வைத்திருக்கும் இலங்கை அரசின் நோய்-அதிகார வர்க்கத்தின் உள நோய் இது.


இது இலகுவில் தீராத நோய்!


இந்த நோய் சந்தனத்தை மட்டுமல்ல இச் சமூகத்தையே பிடித்தாட்டுகிறது.


இங்கு சதாசிவம் சந்தனத்தை மனசாட்சியுடையோரின் முன் நிறுத்தியுள்ளார்.


இங்கேதாம் அசூமத்தின் அம்மா,என் அம்மா,உங்கள் அம்மாக்கள் எல்லோரும் மரணப்படுக்கையில்...


"பொறுத்தது போதும்...!"


இனியுமா? முடியாது!


அம்மாவாய்,நோயாளியாய்,வேலைக்காரியாய்,விதவையாய்,காமுகர்களால் குதறப்படும் பதுமையாய் எங்கள் அம்மாக்கள்...


இனியும் பொறுக்க முடியாது!


இராஜதுரை கோபக்கத்தியுடன் புறப்படுகிறார்.அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.


"இது வெறும் முணுமுணுப்பா?இல்லவேயில்லை!ஒரு சமூகம் முழுவதும் தனக்குள் எரிமலைபோல் அடக்கி வைத்துள்ள அவல வாழ்வின் ஒரு சிறு துளியே!இது பீறிட்டு வெளிக் கிளம்பாதவரை பாதுகாப்புத்தாம்!"(பொறுத்து போதும்...!-பெ.இராஜதுரை)


எச்சரிக்கை!


இது எல்லோரதும் எச்சரிக்கை.


இனியும் ஒரு சமூகம் தன் அறியாமைக்கும்-அடங்கிப் போகும் மனோபாவத்திற்கும் பலியாகுமென்று காரியமாற்றுபவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்.நிதானியுங்கள்!!-ஒரு ஈழமல்ல,மலையகமும் அதன் தொடர்ச்சியேதாம்.தமிழ் பேசுவோர் இனியும் பொறுக்கத் தயாரில்லை.குட்டக்குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது.இது இன்னொரு தொடக்கத்தின் முன்னுரை.



மூட நம்பிக்கைக்கும், அறியாமை இருளுக்கும் ஒரு இராமாயி இல்லை,பல இராமாயிக்கள் பலியாகிவிட்டார்கள்தாம்.



இனியும் அது நடக்கப்படாது.



"விடியல் எப்போது?"



ஈழம் பதில் கூறுவதுபோல் மலையகமும் கூறியே தீரும்!அப்போது கேள்விகள் நீறாய் நீர்த்துப்போகும்.



அதுவரையும்,சமூகத்தின் மொத்த இருள்சூழ்ந்த நிலைமைகளுக்காக சுகந்தி,பரமேஸ்வரன்,மெய்யன் நடராஜன்,பாலச்சந்திரன்,நளாயினி சுப்பையா,பா.ரஞ்சினி,த.மயில் வாகனம்,செல்வி.இ.இம்மானுவேல் போன்ற சகல எழுத்தாளர்களும் சிலுவை சுமக்கட்டும்.சுமக்கிறார்கள்.இவர்களில் நளாயினி சுப்பையா,செல்வி.இ.இம்மானுவேல்,த.மயில்வாகனம்,மெய்யன் நடராஜன் போன்றோர்கள் ரொம்ப நிதானமாகவே சிலுவை சுமக்கிறார்கள்!



இவர்களின் நிதானம் போன்றே மற்றவர்களும் தம்மைத் தோற்றுவிக்க வேண்டும்.-இது காலப்போக்கில் நிகழவே செய்யும்!



ஏனெனில், இவர்கள் கதைகளுள் ஜீவனாய் வாழ்கிறார்கள்.தங்கள் வாழ்வை அதற்குள் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்.இப்படித் தம் வாழ்வை கதைகளுக்குள் காணும் இவர்கள்,மிக நிதானமாகத் தோற்றம் பெறுவார்கள்.



இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?


ஈழத்திற்காக,
மலையகத்திற்காக!


புலம் பெயர் வாழ்வும் இதையே எமக்கு உணர்த்தியுள்ளது.



"மலையகப் பரிசுக் கதைகள்"தொகுப்பு இறுதியாகச் சிலவற்றைச் சொல்ல வைக்கிறது:



"இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்".



இந்த என் நம்பிக்கை வீண்போகாது.


ப.வி.ஸ்ரீரங்கன்.

Freitag, März 14, 2008

கருணையுள்ளோரே கேட்டீரா?...

அஸ்வகோஸ்:'மகனும் ,ஈ கலைத்தலும்'

>>>அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?
'
<<<
(சிறு குறிப்பு)


'...என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப் படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்...'

ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்,
நான் துயருற வேண்டி.

சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்!
படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி.

'இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது
இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை'

சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள்.

என்னயிது?
சவப்பெட்டி நட்டநடுவே.
ஒன்றல்ல, பல.
ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி.
என் கைகள் நாலாபக்கமும் வீசியடித்தபடி,வேகமாயின.

முடியவில்லை.

அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன்.
யாருமேயில்லை!
எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள்?
இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு.
சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈக்களின் மொய்ப்பில் அவை ஊளையிடுகின்றன.

நான் தனியாகவேயுள்ளேன்.

கனவுதாம்.

ஒரு கவிதைத் தொகுப்புக்கூடாகக் கனவுதாம்.

நிஜம் கனவாகிறதா?
ஏன்?
நான் வெகு தூரத்தில்.
மிகப்பெரிய இடைவெளி உறவுகளுக்கும்,இன்றைய என் வாழ்வுக்கும்.

'வதை தாங்காது அழுது சென்றவர்களும்
வார்த்தையின்றி மௌனித்தவர்களும்
நடந்த தெரு,முற்றமிது
வெறிச்சோடித் துயருடன்

எத்தனையோ இரவுகளில்
புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள்
சாய்ந்து போன உடல்களாய்
சவப் பெட்டிகளுள் ஈயுடன் போராடி...' வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை.

தெருவோரச் சொறிநாய் மாதிரி ஊளையிட்டுக்கொள்ளும் இலக்கியச் சூழலில் இப்படிச் சிலர்,அஸ்வகோஸ் போல்...
இரத்தமும் சதையுமான வாழ்வோடு வருவதுதாம் கவிதைகள்.ஒரு பாரதிபோல,சு.வில்வரெத்தினம் போல.

'இத்தனை காலமும்
ஏங்கித் தவித்ததின் அர்த்தமென்ன?
நீங்கள் கூறுங்கள்
தாய்மையின் கதறல்
கேலிக்குரியதா?'

இல்லை!

உனக்கும் தெரியும்,எனக்கும் தெரியும் இரஞ்சகுமாரின் சீலனுக்கும்,குலத்துக்கும் என்ன நடந்ததென்று.கோசலையின் நிலை,ரொம்ப ரொம்ப எங்கள் அம்மாக்கள் அநுபவப்பட்டதுதாமே?

எங்கள் உடன் பிறப்புகள் சீலனுக்கும்,குலத்துக்கும் நடந்ததையிட்டு கோசலைகளாக மாறிய அம்மாக்களின் கதறல்கள் கேலிக்குரியதாக மாறிவிட்டால்:

'பாழாய்ப்போன தேசமே நீ மீண்டும் பாழ்!
மனித வதை,மனித வதை,
இலங்கையில் மட்டுமல்ல
இந்தப் பூமிப்பந்தில் எங்கும்!' ஒவ்வொரு வகையில் தொடர்கிறது.எல்லாம் 'ஒவ்வொரு'நலத்திற்காக.யார்,யாரோ சாகிறார்கள்,யார் யாரோ அரியாசனம் அமர்கிறார்கள்!

எங்கள் நிலை?

'விலங்குகளுக்கெல்லாம் விலங்குகள் செய்த விடுதலை' குறித்துப் பேசியவர்கள்கூட தம்மைத் தாமே அழிக்கமுனைந்த இருள் சூழ்ந்த இழி நிலை,இன்றைய நம் நாட்டில்.இது குறித்து:

'எம் சோகம் சிறையிருந்த
காலம் போதும்
செவிடராய் மௌனித்துப் போன
மக்களின் செவிகளில்
அலைகளை மீட்ட வா!' என்று,அஸ்வகோஸ் அழைப்பு விடுப்பது மிகவும் சரியானதுதாம்.இல்லை?

'நிறையவே சிந்திக்க வேண்டும்!'

மனிதவிடுதலை குறித்து,தேசவிடுதலை குறித்து,தோழமை குறித்து...
உண்மைதாம்!
கடந்தகால அல்லோலகல்லோலப்பட்ட இயக்கவாத மாயையில் நாம் ரொம்பத்தாம் முடமாகிப் போய்விட்டோம்.

அஸ்வகோஸ் புது இரத்தம் பாய்ச்சுகிறார்.
கவிதை ஒருவாழ்வு.
'வாழ்வு கவிதையாக வேண்டும்.கவிதை வாழ்வாக வேண்டும்'என்று சேரன் அடிகடி கூறிக் கொள்வார்.

இங்கு அஸ்வகோஸ் கவிதையில் வாழ்ந்து பார்க்கிறார்.

சமூகசிவியம் சீர்குலைந்து,சின்னாபின்னமாகி மனித இருத்தலே கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் குரலாய் ஒலிக்கும்'வனத்தின் அழைப்பு' ஒரு காலக்கட்டத்தின்(சமகால) தேச தரிசனத்தைத் தரவில்லை?

தருகிறது!,புயலாக.

'போரின் கனத்த குரல்
இப்போது கேட்கவில்லை
அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்
எங்கு என்ற கேள்வி வேண்டாம்
போரின் கனத்த குரல்
ஒலிக்கும்போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்'

தன் சிரசை உயர்த்தி அறுதியிட்டுக் கூறி முடிக்கும் வரிகளால்,தான் மண்ணைளைந்து விளையாடிய மண்ணின் வாழ்நிலை குறித்து ஓங்கியோங்கி ஒலிக்கிறான்,இங்கு இந்தக் கவிஞன்.

எதற்கெடுத்தாலும் கொலை.'டுமீல்',டுமீல்!குருதி வெள்ளத்தில் மானுடம் புதைந்தபடி!!,இது கால் நூற்றாண்டாய் இலங்கையின் அன்றாட நிகழ்வாச்சு.
மனிதர்களின் எந்த விருப்புகளுக்கும் மதிப்பில்லை.மனிதர்களின் விருப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்த விருப்பு, உயிர்வாழும் 'விருப்பு' ஆகும்.இன்று, இலங்கையில் உயிர்வாழ்தலுக்குரிய மதிப்புபெறுமானம் சொறிநாயின்-விசர்நாயின் இருத்தலைப் போலுள்ளது.

'கருணையுள்ளோரே கேட்டீரா
காகங்கள் கரைகின்றன
சேவல்கள் கூவுகின்றன
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன'

இந்தக் கவிதை வரிகளை எதுக்குள் அடக்கமுடியும்?
மரபுக்குள்ளா,நவீனத்துக்குள்ளா?இதுவா இப்போதுள்ள பிரச்சனை?இல்லை!

இஃது ஒரு'காலத்தின்'பதிவு.இலங்கை அரசியலில் நிகழ்ந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுப்போக்கு.இதைக் கவிஞன் பதிவு செய்வது மட்டுமல்ல,கலகக்காரனாகவும் அவன் தன் இறக்கைகளை விரிக்கிறான்.பேனா முனையின் கூரை இன்னுமின்னும் கூராக்கிக் கொள்கிறான்.
அஸ்வகோஸ்க்கும் அவர் படைப்புகளுக்கும் மரபு ரீதியான எந்தப் புரிதலும் சரிவராது. அவர் கவிதைகள் இலக்கணத் தளைகளை மீறி வாழ்வாய் மலரும் அதேவேளை,தம்மளவில் கவிதைக்கான இயல்பைக் கொண்டேயிருக்கின்றன-இயங்குகின்றன.

ஈழத்தின் கவிஞர்களில் பலர் 'வெறும்'கவிஞர்கள் இல்லை.அதாவது பண்டைய மன்னன் புகழ் பரப்பும்,இன்றைய சினிமாவுக்கு கூலிக்குழைக்கும் 'கூழை'க் கவிஞர்கள் போலில்லை.மாறாக இவர்கள் சமுதாயத்துள் ஐக்கியமாகி,அதனுடன் கரைந்தவர்கள்.இவர்களே போராளிகளாக தோளில் சுடுகலங்களுடன் காடும்,மேடும் அலைந்து மக்களுக்காக தம் ஆயுளைச் செலுத்தியவர்கள்.முற்றுகைக்குள்ளான தேசத்தின் இதயத்திலிருந்து பீறிட்டெழும் விடுதலைத் தீயிலிருந்து சுடரெழுப்பும் இக் கவிஞர்கள்,தீக் குஞ்சுகள்!,அக்கினிக் குழந்தைகள்.

இந்தக் கவிஞர்களின் கவிதைகளில் காணும் அநுபவங்கள் இவர்களின் அசல் நாணயமான அநுபவம்.இவர்களின் வேர்கள் சமூகத்தின் அதியுண்மையான சமூக முரண்களிலிருந்து பத்திப் படர்கிறது.இங்கு ஒரு அஸ்வகோஸ் தோன்றவில்லை.பலருள்ளார்கள்,அவர்களுள் அஸ்வகோஸ் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி வருகிறார்.இவரின் ஒப்புமைகள்,புதிய குறியீடுகளை உருவாக்கிவிடுகிறது.புராண,இதிகாச அநுபவம் அவரது நீண்ட கவிதைகளில் மிகவும் உன்னதமான வடிவில் புதிய குறியீடுகளாக உயிர்க்கின்றன!இவரது மொழியாற்றல் மிக அபாரம்.தமிழைப் புதுப்பொலிவோடு கையாளுகிறார்.

போராட்டம் இவரைத் தத்துவத்தில்,வரலாற்றில்,சமுதாய அநுபவத்தில் பட்டறவுள்ளவராக்கி விட்டுள்ளது.இவரின் சிந்தனை இவருள் முகிழ்த்த அதியுன்னதச் சிந்தனை.இஃது பிறரிடமிருந்து பெற்றதல்ல.இதனால் இவர் உயிர்த்து நிற்கிறார்.எந்தவித இலக்கணக் கட்டுக்களையும் காவாது பேச்சோசையோடு அநுபவத்தைப் பகிர்வதும்,வாழ்வை அதன் இயல்போடு சித்தரிப்பதும்,வரலாற்றைப் பதிவு செய்வதும்தாம் இம்மாதிரியான கவிதைகளுக்கு இலக்கணம்.

அஸ்வகோஸின் கவிதைகளுக்கும்,ஏன் ஈழத்தின் கவிதைகளுக்கு இதற்கு மீறிய எந்தத் தளைகளையும் நாம் ஏற்றிச் சுமைகாவிக் கொள்ள அனுமதிக்க முடியாது.ஏனெனில் இவை நம் உண்மையான-அசலான வாழ்வு.

குரூரமான நமது மெய்வாழ்வுக்கு எந்தவிதப் பூச்சும் வேண்டியதில்லை.நம் வாழ்வும்,கலையும் நமக்குள் முரண்படவில்லை.அது இரண்டும் ஒன்றாய்ப்போய் நமக்குள் சுடர்விடும் உயிராய் மாறுவதில் வெற்றி பெற்றுவிடுகிறது.'வனத்தின் அழைப்பு' அதற்குச் சிறு உதாரணம்.

இக் கவிதைகள் தம்மளவில் தமக்கானவொரு 'அழகியல் தொடர்ச்சியை'உள்வாங்கியே வெளிப்படுகிறது.இஃது பாரதியிலிருந்து தொடர்கிறது.மனித விடுதலையும்,தேசவிடுதலையும் இந்த அழகியலை இயக்குகின்றன.இக்கவிதைகளின் 'அகவடிவம்'சிறப்புப் பெற்று உள்ளடக்கத்தையும்,உருவகத்தையும் பிரிக்கமுடியாது-இரண்டும் பிணைந்து நிற்கும் ஒரு புதுவகை அழகியலைத் ஈழத்துக் கவிதைகளுக்கு இயல்பாக வற்புறுத்தி வெற்றி கொண்டுவிட்டது.அஸ்வகோஸின் பல கவிதைகளுள் இந்தப் பண்பைக் காணலாம்,உணரலாம்.

இஃதுதாம் இவரது சிறப்பு.இந்தச் சிறப்பு ஆளுமையான படைப்பாளிகளால்தாம் பேணப்படுகிறது,உருவாக்கம் கொள்கிறது.அஸ்வகோஸ் இதற்கு நல்ல உதாரணமாகிறார்.

குதறப்படும் மனித இருப்பின் மெய்யான சூழ்நிலையை ,அதன் உண்மைத் தனத்துடன் படைக்கப்படும்போது அவை சிலவேளைகளில் சகல கவிதை மரபுகளையும் மீறிவிடும்.இத்தகைய மீறலின்றி கவிதை பாரிய எதிர்வினையை வாசககர்களிடம் உண்டுபண்ணமுடியாது.கம்பன் அல்லது வள்ளுவன் பாணியில் இன்றைய நம் அவலத்தைப் பாடினால்-எழுதினால் இஃது மிக மிக அற்ப எதிர்வினையையும் செய்யாத அபாயம் உண்டு.
இத் தேவையால்தாம் மீறல்கள் இயல்பாகிறது.அத்தோடு இந்த மீறல்களால்தாம் கவிதைக்குரிய புதிய வடிவம் தோன்றிக் கொண்டேயிருக்கு.

நவீனக் கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாகிப் போன இன்றைய புலம்பெயர்வுச் சூழலில,; இத்தகைய'உயர் திறன் கவிதைகள்'கவிதை ஜீவனைக் காவிக் கொண்டே சமூக விமர்சனம் செய்வதால,; இஃது உயரிய இலக்கியமாகவும் விரிகிறது.

அஸ்வகோஸின் மொழியைப் புரிந்து கொள்ளும்போது இவ்வுண்மைகள் புரிந்துவிடும்.

ஒருசில கவிதைகள்(செவல்,நீ போனாய்,ஏவாள்,என் வசந்தம் வராமலே போய்விட்டது) அகம் சார்ந்து வெறும் விபரிப்பு என்ற பச்சோதாபச் சுற்றுக்குள் முடங்கிவிடினும், அஸ்வகோஸ் ரொம்பவும் நிதானமாகவேயுள்ளார், புறநிலை சார்ந்த கவனிப்புகளில்! அவர் வெறும் ஒப்புமைக்குள்ளோ ஓசை நயங்களுக்குள்ளோ மயங்கவில்லை.'மெய்வாழ்வு' இதற்காகவே எழுத்தை நடைபயில விடுகிறார்.இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வெறும் வார்த்தைக் கட்டுக்குள் முடக்கி விளக்கிட வேண்டிய தேவைகள் இல்லை.கவிதைகள் நாம் அன்றாடம் அநுபவிக்கும் வாழ்சூழலை நம் விழிகள்முன் விரித்தக்காட்டி விடுகின்றென.

இவைகளின் எதிர்வினை நம் எல்லோருக்கும் பொதுவான அநுபவமாகிறது.அதாவது சமுதாய அநுபவம்,ஆவேசம்!

ஏன்?

நாம்'மனிதமறுப்புச் செய்யும் நாட்டின்'குடிகள்.போராட்டமே வாழ்வாய்ப்போன தேசத்தின் குரல்கள் எம் அகத்துள் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கு,போருழைச்சல் நம் அகத்தை வாட்டி அழுகுரலாக ஒலிக்கிறது.

'மனித அவலங்கள் நினைவில் எழ
மடுமாத கோயிலில்
ஒதுங்கிய மனிதர்களின்
ஜீவத் துடிப்பாய் எழுந்த
கீதங்களில் எனையிழந்தேன்...'

இக்குரல்கள்தாம் எமக்குள் இக்கவிதைகளை வாழ்வாய்,அநுபவமாய் உணரவைக்கிறது.யாவருக்கும் பொதுவான வன்மத்தை தீயாய்-ஜுவாலையாய் ஆத்மாவுக்குள் நிறைத்து வைக்கிறது.

உலகத்தில் சில கவிதைகளுக்கு ரொம்ப ரொம்ப உயர் ஸ்த்தானமுண்டு.பாலஸ்த்தீனக் கவிதைகள்,இலத்தீன் அமெரிக்க-ஆபிரிக்கக் கவிதைகளுக்கு,இரஷ்சிய-மாவோ சேதுங் கவிதைகளுக்கு இந்த ஸ்த்தானம் என்றுமுண்டு.இன்றோ 'ஈழத்துக் கவிதைகள்' என்றிந்த'உயர் திறன்'மிக்க கவிதைகள் அந்த ஸ்த்தானத்தை நொருக்கிவிடும்.

ஈழத்தின் நவீனக் கவிஞர்களான மகாகவி,நீலாவாணன்,நுஃமான்,சிவசேகரம்,மு.பொ.,சு.வில்வரெட்னம் நீட்சியாக ஜெயபாலன்,சேரன்,செல்வி,சிவரமணி தாண்டி அஸ்வகோஸ் உயர்கிறார்.இவரது நீண்ட கவிதைகள் இதை நிச்சியம் ஊர்ஜிதப்படுத்தும்.

மில்டனின் 'இழந்த சொர்க்கத்தின்'மகுடத்தை வனத்தின் அழைப்புத் தொகுப்பிலுள்ள 'இருள்'கவிதை உடைத்து நொருக்கி விடுகிறது.இத்தகைய தகர்வை நாளைய வரலாறு சொல்லும்.நம் சிறுசுகள் அதைச் செய்து காட்டுவார்கள் சர்வகலாசாலைக்குள்ளிருந்து?...

சு.வில்வரெத்தினம்,சோலைக்கிளி போன்றோருக்கு மிக மிக நேர்த்தியாக அநுபவமாகிய 'கவிதைஜீவன்' இந்தக் அஸ்வகோசுக்கு ஒரு சில கவிதைகளுள் எப்படி முகிழ்க்கிறது?

பிடுங்கியெறியப்பட்ட தேசத்தின் புதல்வனின் கவிப்பாங்கு அபாரம்தாம்.மரபுக்குள் மடிந்துபோன 'மக்களின் ஆன்வுணர்வு'இவ்வகைக் கவிஞர்களால் உன்னதமான வகையில் சமுதாய ஆவேசமாக வெளிவருகிறது.உருதுக் கவிஞன் இக்பால் போலவே இங்கும் கவிஞர்கள் பீறிட்டெழுகிறார்கள்.

அஸ்கோஸின் கவிதைகளை வாசிக்கும்போது,கவிதைகளுக்குள் நீரோட்டமாக சதா ஊறிக்கொண்டிருக்கும் சமகால வாழ்வியல் இயக்கப்பாடு நம்மையொரு இக்கட்டான சூழலுக்குள் நகர்த்திச் செல்கிறது.

இது ஒரு அவஸ்த்தை!

கவிதையூடே அநுபவமாகும் வாழ்வு,நம்முடைய மெய்யான வாழ்வு-குருதி சொட்டும் போராட்ட வாழ் சூழலிது.இந்தச் சூழலுக்குள் நகரும் ஈழத்து வாசகர்களுக்கு கவிதையின் பாரம்பரியப் படிமம்,குறியீடு,உத்தி,உள்ளடக்கம்,இறைச்சி இவைகள் பற்றிப் பேசமுடியாது போகிறது.

இஃதொரு நெருக்கடி.

இந்தக் கவிதைப் போக்கைச் சமுதாயச் சூழலே தீர்மானிக்கின்ற யதார்த்தப் போக்கால் இக் கவிதைகளுக்கு எந்தப் பூட்டுக்களையும் போடமுடியாது போகிறது.இந்திய சுதந்திரத்தைப் பாடிய பாரதியின் விடுதலைக் கவிதைகளுக்குக்கூட நாம் விமர்சன ரீதியாக சில இலக்கண மீறல்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.ஆனால் இன்றைய ஈழத்தின் கவிதைகளுக்கு இதைச் செய்யக்கூடிய சூழ்நிலைகளை இக் கவிதைகள் விட்டுவைப்பதில்லை.

'என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமைகளைச் சொல்வேன்
சிதழுறும் காயங்கள் பேசும்
மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்.'

கவிஞரே 'காலச் சூழலைப் பிரதிபலிக்கின்ற மெய்மையை'தன் படைப்பூடே சொல்லி விடுகிறார்.
உண்மைதாம்! மண்ணின் குறிப்பை-மானுடவாழ்வை,தரிசனத்தை,வரலாற்று ஊற்றைத் தன்னகத்தே புதைத்துக் கவிதை வாழ்வாகிவிடுகிறது.

'போரதிர்வுகளில் உயிரிழந்து
சிதைவுகளை நெஞ்சில் சுமந்து
வலிகளைத் தாங்க ஏலாது
முறிந்த வாழ்வுடன்
இடம் பெயர்ந்துழலும் அவலம்...'

இது ஒரு சத்தியப் பதிவு.

வாழ்வின்மீது கவிந்த கயமைப் போக்கால் முறிந்து விடுகிறது வாழ்வு.இனி ஒவ்வொரு திக்குத்திக்காய் வாழ்வின் பாதுகாப்புக்காக-உயிர் வாழ்தலை அச்சமின்றிப் போக்க இடம்பெயர்ந்துழலும் அவலமாக வாழ்வு விரிகிறது.வாழ்வை அவலம் காவுகொள்கிறது.

கவிஞன் ஆவேசமடைகிறான்,கோபக் கனலோடு உரக்கக் குரலெடுத்து, அவலத்தைச் செய்யும் அரசியல் போக்கை-அதை நகர்த்திச் செல்லும் வர்க்க மனிதர்களின் முகத்தில் தன் வார்த்தைகளால் ஓங்கியடிக்கிறான் இந்த அஸ்வகோஸ்.

'வாவிகளில் பிணமாய்க் கரைந்து
போகையில்
திறந்த வெளியரங்குகளில்
மலரேந்தித் துதித்தவர்
புதை குழிகளில் ஓய்ந்திருந்ததை
துயில் எழுப்பி
ஊர்த்திகளில்
வேட்டைக்கு அனுப்பியவர்
நீவீர்...'

மனித வரலாறு பூராகவும் கவிஞர்களில் பலர் சமுதாய நீதிமான்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் சமூகச் சீரழிவுகளைச் செய்யும் நிறுவனங்களை நியாயக் கூண்டில் ஏற்றி,தங்கள் சத்திய வாக்கால் சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.
சிலம்பு சொல்லும் கதை தெரியும் தானே?
மதுரையையே எரித்தான் இளங்கோ முனிவன்.

இங்கே,அஸ்வகோஸ் தன் கைகளை நீட்டி கயவர்களைச் சுட்டி, மக்கள் முன் இழுத்து வருகிறான் தண்டனைக்காக.ஏனெனில், மக்கள்தாம் வரலாற்றைப் படைப்பவர்கள்.சமூக விரோதிகளை மக்கள் முன் நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

'குரூரத்தை மறக்க இயலவில்லை
போய்ப் பார்
போர் இளமையை
உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது.'

மானுட விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கத் தக்கக்கூடிய நிலைகளாக மாறும்போது, சமூக அக்கறை என்பது ஒவ்வொரு 'உணர்வுள்ள' மானுட ஜீவனுக்குள்ளும் பிரதிபலிக்கும்.ஆனால் விடுதலைவேண்டி அதற்காகப் பாடுபட்ட சமூகத்திலுள்ள ஒவ்வொரு விடுதலைப்பங்காளருக்கும் நேரடியாக அநுபவமாவது எவ்வளவோ! அவை ஒரு வரலாற்றின் பதிவுகளாக மாறுவதற்கு முன், மானுட ஆத்மாவுக்குள் கேள்வியாக விரிந்து,தன்னையே கேள்விக்குட்படுத்தி'சுயவிமர்சனம்' செய்வது இயல்பாகி விடும்.

'எதுவரை உண்மையினை அவர்கள்
கொண்டு சென்றார்கள்
அதுவரை நான் வந்தேன்
எங்கு வைத்துக் கொலை செய்தார்கள்
நான் அங்கிருந்தேன்
என்னால் முடியாத பேரழிவினை
ஊழியில் இயற்ற
என்னையங்கு தயார்ப்படுத்தினார்கள்'

இங்கு மனித இருத்தல் மீளவும் மறு ஆய்வுக்குள்ளாகும்.அஃது புதிய வீச்சோடு மெருகேற்றப்பட்டு,நியாயமான உரிமையாக கிளைபரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும்.

'கணக்குகள்
மீளவும் தீர்க்கப்படுகையில்
நான் அஞ்சுகிறேன்...!!'

என்று ஒவ்வொருவரையும் நோக வைக்கும்.

'பொது மானுட விழுமிய நோக்கை'அஃது இயல்பாக ஏற்படுத்தி விடும்.அப்போது தன்னினம்,தன் மொழி,தன் சுயம்மென்பது சுருங்குp சர்வதேசிகளாக மனிதப் பொதுமைக்காக:

'நியாயம் கூற இயலாக் கண்ணீருடன்
விரட்டப்பட்ட மக்களிடையே
விடுபட்டு உதிரிகளாய்
ஒன்றிப் போன ரசூலின் கதை...' சொல்ல எத்தனிப்புகள் தோன்றும்!,தோன்றிவிடுகிறது. இதுதாம் நாம் யாழிலிருந்து விரட்டிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு ஆற்றும்,ஒத்தும் ஒளடதம்!

இஃதுதாம் மனிதப் பண்பு.அஸ்வகோஸிடம் இந்தப் பண்பு மிகுதியாகப் படர்வதை அவர் படைப்புகளில் நாம் அறியலாம்,உணரலாம்.

'முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனுக்குத் திருப்தியில்லை
அழுவானென்றும் நம்பமுடியவில்லை...' என்றும்,

'அவன் அறிவான்
கண்முன் நடந்ததைவிட
காணாமற்போனது
எதை விட்டுச் செல்லுமென்பதை...'

இந்த வரிகளோடு மிகப் பெரிய வெற்றிடமாக ஈழமண் மாறிவிடுகிறது,நம் கண் முன்!யாருமே இருப்பதாக உணர்வு ஏற்குதில்லை.எல்லோருமே அழிந்துபோய் வெறும் சுடுகாடாய் கண்முன் 'தமிழீழம்' விரியும்போது கவிஞன் ஆவேசம்கொண்டு:

'மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத் தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் வலியை
இனியும் தீர்மானிக்க வேண்டாம்...' என்று ஓங்கி உரைக்கிறான்.

இப்போது இன்னுமதிகமாக சுதந்திர தாகமும்,மானுட விழுமியமும் வேர் பரப்பி விழுதெறிகிறது.

இங்கே அஸ்வகோஸ் எனும் மகாப் பெரிய மானுட நேயன் உண்மையான வாழ்வின் அர்த்தத்தை இலக்காகக் கொண்டு,நம் முன் உயர்ந்து நிற்கிறான்!

இவன்தாம் ஒரு கட்டத்தில் தன் மைந்தனையே விடுதலைக்காக பலியாகக் கொடுத்துவிட்டு,மகனின் உயிரற்ற உடலுக்குப் பாதுகாப்பு அளிப்பான்,ஈக்கள் மொய்க்காது-காகம்,கழுகுகள் கொத்தாதிருக்கும்படி கவனிப்பான்!

அப்போது அவன் உள்ளத்தில் கேள்விகள் முளைவிட்டு வேர்பரப்பும்:

'அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?'

இஃதுதாம், இன்றுவரை நம் எல்லோர் முன்னும் உள்ள கேள்வியும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால் ஜேர்மனி.

Mittwoch, März 12, 2008

பனிப்போர்:National Missile Defense வடிவத்தோடு

அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 .

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன்.

முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது.

இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்"மகாத்துமா"என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது.

இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இன்றைக்கு இலங்கை அரசியலில் நடந்தேறும் அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளை பயனாக மேன் மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் புரட்சியில் புடம்போட்டு ஈழத்தைக் கனவு காண வைத்தபடி.இறுதியான ஈழயுத்தம் இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக் கொள்ளும் குழந்தைகளுக்குள் புதிய பனிப் போர் குறித்தொரு பதிவும் அவசியமானதுதாம்.

"உண்மையான அமெரிக்கன் எப்படி இருப்பானென்றால்,அவன் ஜனாதிபதி வில்சனைப் போல் இருப்பான்".என்று சாதாரண அமெரிக்கச் சிப்பாய் சொல்லுமொரு காலம் அமெரிக்காவில் தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.கரிபியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் வலயத்திலும் தனது ஆதிகத்தை நிறுவிய அமெரிக்கா முதலாம் உலக யுத்தத்தில் மூழ்கிய-மூட்டிய ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பமானது அமெரிக்காவை வலுவான தேசமாக உருவாக்கிய நூற்றாண்டின் திறவுகோலாகும்.

இன்றிருக்கும் அமெரிக்காவானது இன்றைய அதன் ஜனாதிபதியால் இத்தகைய நிலையை அடைந்துவிட்டதாக யாராவது கணித்தால்-கருதினால் அது மிகப் பெரும் கொடுமை!அமெரிக்காவினது தொழிற்றுறையைக் கட்டுப்படுத்தித் தமது குடும்பச் சொத்தாக மாற்றிய அமெரிக்க வெள்ளையினக் குடும்பங்கள் சில அந்தத் தேசத்தை மனித விரோதிகளின் கூடாரமாக்கிய பின் தேசங்கடந்த வழிப்பறிப் பயங்கரவாதிகளாகத் தமது மக்களை உருவாக்கி விட்டுள்ளுது.இந்த அமெரிக்காவுக்கென்றவொரு "நீதி-நியாயம்",அடி-கொள்ளையிடு என்றபடியே அர்த்தமாகிறது.

1990 செப்டெம்பர் 11 இல் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய சீனியர் புஷ்:"...ஒரு புதிய யுகம்,பயங்கரவாதத்தைச் சுதந்திரமாக எதிர்துத் தாக்கத்தக்க மற்றும் சமத்துவத்தைப் பலமாக நிலை நாட்டத்தக்க, நிச்சியமான சமாதானத்தை உறுதிப்படுத்தத் தக்க புதிய யுகம்.ஒரு புதிய யுகம்,கிழகத்தைய மற்றும் மேற்கத்தைய கூடவே வடக்கத்தைய மற்றும் தென்னக இனங்கங்கள் எல்லோரும் மகிழ்ச்சிகரமாகவும் இசைந்தும்(...)வாழத் தக்கதான புதிய யுகம்.இன்றைக்கு அதற்காக உழைக்கின்றோம்.அது உதயமாவதற்காகப் போராடுகிறோம்.ஒரு புதிய யுகம்,அது அனைத்து வித்தியாசங்களுடனும்,ஒவ்வொருவருடையதுமான வித்தியாசங்களுடன் இருப்பதை நாங்கள் அறிவதற்கும்.சட்டத்தின் ஆளுமையை பலத்தோடு நிறுவுதற்கும்(...) ஒரு புதிய யுகம்,பலவீனர்களினது பலமான சட்டங்களைப் பலமானவர்கள் மதிக்கத் தக்க புதிய யுகம் உருவாக்க வேண்டும்."(Joshua Frank : 'Left Out! How Liberals Helped Reelect George W. Bush', ) 11 செப்ரெம்பர் 2001 உலக வர்த்தக மையத்தின் தாக்குதலுக்கு முன்பான அமெரிக்காவின் புதிய உலகுக்குக்கான அடித்தளம் இது.இந்த அரசியல் அபிலாசை உலகத்தின் வளங்கங்களைக் கட்டுப்படுத்தி விடுவதோடு இருக்க வில்லை.மாறாக அமெரிக்காவின் அனைத்து நலன்களையும் முதன்மைப் படுத்திய உலக மக்களை உருவாக்குவதில் அதன் போராட்டம் மேலும் சீனியர் புஷ்சின் உரையோடு அண்மித்திருந்தது.

ஏலவே இரண்டவது யுத்தத்தின் பின்பான அதனது அணுவாயுதத் திமிரானது உலகத்தைக் கம்யூனிசச் சக்திகளின் கைகளில் தவறியும் சேர்த்துவிடாதிருக்கப் பெரும் இராணுவத் திமிராக வெளிப்பட்டது.இதன் தொடர்ச்சியாக உலகு தழுவி 400 இராணுவப் பாதுகாப்பு முகாங்கள் நிறுவப்பட்டன.பல இலட்சம்(கிட்டத்தட்ட200.000.படைகள்)இராணவத்தினர் இதற்காக வெளி நாடுகளில் அமெரிக்க அரசியலை முன்னெடுத்தனர்.

இந்தத் தரணத்தில் உலகை ஏப்பமிட முனைந்த ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்திய இரஷ்சியாவுக்கும் மூண்ட பனிப்போர் குருஷ்சேவைப் படாதபாடு படுத்தியது.வலிந்துருவாக்கிய அமெரிக்காவின் இராணுவப் பொறிக்குள் வீழ்ந்த இரஷ்யா அனைத்தையும் இழந்து,தனது பொருளாதாரக் கட்டுமானத்தையே சிதறடிக்கும் அளவுக்கு இது வலியதாக இருந்து.

இந்தவொரு நிலை மீளவும் உருவாகிறது.

இது ஏன்?

இப்போது கம்யூனிச இரஷ்சியா இல்லை!

அமெரிக்காவுக்கு எதிரான-பலமானவொரு வல்லரசு உலகில் எதுவுமில்லை.

என்றபோதும் அமெரிக்கா போலந்தில் பத்து ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளையும் மற்றும் செக்காயில் ரேடர் கருவிகளையும் அடுத்த ஐந்தாண்டுகளில் நிறுவிக் கொள்ளும் முனைப்பில் இறங்கிப் பாரிய பனிப் போரைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பல எதிர்க்க, அவர்களின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் போராடப் போவதாக மிரட்ட-நேட்டோவின் தலைமையை இழக்காதிருக்க முனையும் ஐரோப்பிய ஒன்றியம் தடுமாற, இந்தப் பனிப் போர் வழி செய்கிறது.

இரஷ்ய அதிபர் பூட்டின் சொல்கிறார்: அமெரிக்கா அரசியல் எல்லையை மீறுகிறது!(Putin: "USA haben politische Grenzen überschritten" -Russlands Präsident Putin kam bei der Münchener Sicherheitskonferenz sofort zur Sache. Er warnte massiv vor einer amerikanischen Weltherrschaft und drohte: Russland verfüge über Waffen, gegen die die geplante US-Raketenabwehr für Osteuropa wirkungslos wäre.)


இது-இந்த முரண்பாடு ஏன்?

அமெரிக்கா சொல்கிறது:"ஈரானின் நெடுந்தூர ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைக் காப்பதற்கு இது(National Missile Defense)அவசியம்."

உண்மை வேறு வடிவமானது.

இருஷ்சியாவுக்கும் ஈரானுக்கும் மற்றும் ஜேர்மனிக்கும் ஈரானுக்குமான வர்த்தக மற்றும் தொழில் நுட்பக் காரணங்கள்,யுரோவுக்கு மாற முனையும் ஒபேக்கின்;(OPEC)மன விருப்பு-வற்புறுத்தல் போன்ற பல் வகைக் காரணிகள் இந்த விசயத்துள் அமெரிக்காவுக்கு ஏவுகணைத் திட்டமாக விரிகிறது.



ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் பின்னைய காலங்களில்(1997-2001)அமெரிக்காவின் வெளித்துறை மந்திரியுமான மெடாலின் அல்பிறைட்;(Madeleine Albright)அம்மையாரை பலர் அறிந்திருப்பார்கள்.அமெரிக்கா என்பது முதலாளித்துவத்தின் மிகக் கொடு முடியென்பதும்,அதன் ஒவ்வொரு அசைவும் நிதி மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கும்,உலகை அடியோடு சுரண்டுவதற்கும் என்பது பொதுவான கருத்து.ஆனால் அமெரிக்காவானது உலகை மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர முனையும் அபாயகரமான விஞ்ஞானப் பலம் கொண்ட நாடு.இந்த அமெரிக்காவை நிலை நிறுத்தியது அவர்களின் கொடூரமான இராணுவமோ அல்லது அந்த நாட்டின் நிதி மூலதனமோ அல்ல.அந்த நாடு தன்னை மேல் நிலைப்படுத்தத் தொடங்கிய தாக்குதலை விஞ்ஞானப் பலத்தோடு கட்டியமைத்த ஆண்டு 6.ஓகஷ்ட்டு 1945 ஆகும்.அன்றுதாம் இவ்வுலகைக் கரியாக்கும் அணுக் குண்டை அமெரிக்கா மனிதப் பெரும் பரம்பலுக்குள் வெடிக்க வைத்துப் பரிசீலித்த அதி துயரமான நாளை உலகுக்கு அமெரிக்க முதலாளிகள் அறிமுகப்படுத்திய நாள்!கீரோசீமா(Hiroshima)குலைந்து எரி பிண்டங்களாகச் சிதறிக்கிடந்த இந்த நாளை நிஜப்படுத்திய கொடியவன் ஓப்பன் கைமர் என்பது என் கருத்து.

உலகின் இன்றைய நிலைக்கு இந்த விஞ்ஞான அறிவே முழு முதற்காரணமாகும்.முதலாளியமென்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சியோடுதாம் இது நாள் வரைத் தன்னை நிலைப்படுத்த முடிந்திருக்கிறது.இந்த விஞ்ஞானத்தின் அதீதக் கைவைப்பு அணவாயுதத்தை மனிதப் பரம்பலுக்குள் வெடிக்க வைப்பது மட்டுமில்லை.இன்றைய நிலையில் மரபணு மாற்றங்களால் இயற்கையே மாற்றியமைக்க முனையும் இந்த மரபணு அறிவே உலகின் மிகப் பெரும் அழிவாக நாளை வருவது உண்மையாகப் போகிறது.இதை மிக வலுவாகச் சொல்வேன்.இன்றைய உலக நிலவரத்தின்படி உலகில் என்றுமில்லாதவாறு ஆயுதப் போட்டி ஒருபுறம் மறுபுறம் மரபணு மாற்றம் மூலம் இந்தவுலகத்தின் பூர்வீக இனங்களை அழித்து இயற்கையையே மாற்றி வரும் மிகப் பெரும் அழிவுக்காலத்தை அமெரிக்க ஆதிக்க வெள்ளையின வெறி விஞ்ஞானமாக விரிகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் நாம் அமெரிக்காவினதும் மேற்குலக முதலாளிகளினதும் போட்டிச் சந்தை மற்றும் மூல வளங்களுக்கான முரண்பாடுகளைப் பார்க்கப் போகிறோம்.முன்னாள் வெளித்துறை மந்திரி அல் பிறைட் அம்மணியிடம் 12 மே 1996(12. Mai 1996)அன்று தொலைக்காட்சி நிகழ்வுக்காகன சந்திப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லெஸ்லி ஸ்ரால்(Moderator Lesley Stahl)கேட்கிறார்:"ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடையினால் ஐந்து இலட்சம் குழந்தைகள் மரித்ததாகக் கேள்விப் படுகிறோம்,இத் தொகையானது கீரோசீமாவில் உயிரிழந்த குழந்தைகளைவிடப் பலமடங்கு அதிகமானதென்றே நான் கருதுகிறேன்.நீங்கள் இது குறித்து நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்,இது விலை மதிக்கத்தக்கதா?(Wir haben gehört, dass eine halbe Million Kinder wegen der Sanktionen gegen den Irak gestorben sind. Ich meine, das sind mehr Kinder, als in Hiroshima umkamen. Und - sagen Sie ; ist es den Preis wert ?) அல்பிறைட் அம்மயார்(Madeleine Albright )சொல்கிறார்:"நான் நினைக்கிறேன் இது மிகக் கடினமான முடிவு என்றே, எனினும் இந்த விலை,நாங்கள் கருதுவதின்படி மிகவும் விலை மதிகத் தக்க விலையே."(Ich glaube, das ist eine sehr schwierige Entscheidung, aber der Preis - wir glauben, es ist den Preis wert.)


ஆக அமெரிக்காவின் நியாயத்தின் படி ஈராக்க இந்த விலையைக் கொடுக்கத்தான் வேண்டும்.இது அமெரிக்காவுக்கு விலை மதிக்கத்தக்க அரசியல் ஆதாயம்.இதை இன்னொரு வடிவில் பாருங்கள் ஆர்த்தூர் ஒப்பன்கைமரின் அணுக்குண்டைக் காவிச் சென்று கீரோசீமாவில் வெடிக்க வைத்த மனித பயங்கரவாதி அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை விமானி பவுள் ரிபெட்ற்(Paul w.Tibbets)ஜேர்மனியத் தொழிற் சங்கம் மெற்றாலுக்கு(Metall) அளித்த பேட்டியொன்றில் என்ன சொல்கிறான் என்று பார்ப்போமா?


தொழிற் சங்கம் மெற்றால்(Metall):"இன்று கீரோசீமா குறித்தும் அணுக் குண்டு வெடிப்புப் பற்றியும் என்ன எண்ணுகிறீர்கள்?,உங்களது அன்றைய பாத்திரம் குறித்து மனவருத்தம் அடைகிறீர்களா?"(?"(Metall:Wie denken Sie heute ueber die Bombardierung von Hiroshima und ueber Ihren Auftrag-bedauern Sie es?).Paul W.Tibbets:"நான் பூரணமாக இது குறித்து வருத்தப்படவே இல்லை.அந்தக் காலத்தில் போடப்பட்ட அணுக்குண்டும் அதன் அவசியத்தையும் நம்பிக்கையின்படியேதான் நான் செயற்படுத்தினேன்.அது குறித்து இன்றுவரை எந்த மாற்றமுமில்லை(Ich bedauere absolut nicht.Zum Zeitpunkt des Bombenabwurfs war ich von seiner Notwendigkeit ueberzeugt,und daran hat sich bis heute nicht geaendert.)- Krieg und Friden von Willi Dickhut.Seite:35.

மேலே பதில் கூறியவர்களில் ஒருவர் அரசியல்வாதி.மற்றவர் அமெரிக்காவின் விமானப்படை விமானி.இருவரின் கருத்துகளுக்கும் இடையில் ஏதாவது அடிப்படை வித்தியாசம் உண்டா?அதாவது மனிதர்களை அமெரிக்க அரசியல் கொல்வது பற்றி-தனக்குச் சம்பந்தமே இல்லாத நாடுகளைத் தாக்கி அந்தந்த நாடுகளின் குடிகளைப் பூண்டோடு அழிக்கும் அமெரிக்கப் பயங்கர வாதத்தைப் பற்றி இவர்களின் அரசியலில் அந்த(அமெரிக்காவினது) நாட்டின் குடிகளிடமுள்ள அகமன விருப்பு எப்படியுள்ளது? இது முன்னாள் ஜனாதிபதி வில்சனின் மன விருப்பை பிரதியெடுத்த ஆதிக்கத் திமிராக வெளிப்படவில்லையா?.வில்சனின் "அமெரிக்காவே முதன்மையானதென்பதன்" நீட்சியாகத் தெரியவில்லையா? இங்கேதாம் வருகிறது அமெரிக்காவின் ஜனநாயகம் என்னும் முக மூடி.இதை அளவு கோலாக வைத்துக் கொண்டு மேலே போவோம்.

அன்று ஈரக்கின்மீது தாள்கதிரியக்க்க அணுக் குண்டுகளை "Typ CBU-89 of Typ Gator,Splitterboms""மற்றும் யு 838 இரகத் தாள் அணுவினைக் குண்டுகளைக் கொண்டிக் கொண்டிருந்த அமெரிக்காவைக் கடிந்து கொண்டவுலகம்- இந்தக் காலத்தில் பல விவாதங்களைத் தொலைக்காட்சியில் நடாத்தியது.இப்படியொரு தொலைக்காட்சி நிகழ்வொன்றில்(ஏ.ஆர்.டி. ஜேர்மன் தொலைக்காட்சியென்றே நினைக்கிறேன்.கருத்துக்கள் ஞாபகம் இருக்கிறது.அதில் பங்குபற்றிய அமெரிக்கப் பத்திரிகையாளிரின் கருத்துக்கள் ஞாபகத்தில் இருக்கிறது.அவரது பெயர் மறந்தாச்சு.)அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் கேட்கப்பட்ட கேள்வி"கீரோசீமாவில் அணுக்குண்டைப் போட்டு மனிதரைக் கொன்றீர்கள்,இப்போது ஈராக்கில் இவையெல்லாம் பயங்கரவாதமில்லையா?"பத்திரிகையாளரின் பதில்:"இவையனைத்தும் பயங்கரவாதமல்ல!இவைகள் யுத்த அளவு கோலாகும்".

எப்படியுள்ளது நிலைமை?

ஈரக் குழந்தைகளின் சாவு ஈராக் கொடுக்க வேண்டிய அமெரிக்காவுக்கான பெறுமதிமிக்க விலை.

கீரோசீமாவின் இழப்பு அவசியமானது அமெரிக்கச் சிப்பாய்க்கு.

இத்தகைய மனிதக் கொலைகள்-அணுக் குண்டு வீச்சுக்கள் எல்லாம் அமெரிக்காவின் யுத்த அளவு கோல்கள் அமெரிக்க அறிவாளிகளுக்கு.

ஆக நான் வைப்பதே நியாயம்.நீ பயங்கர வாதியென நான் சொன்னால் அதை இல்லையென்று சொல்லும் உரிமை உனக்கில்லை.-இதுதாம் அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் இன்றைய பனிப்போர் உலகைக் கவ்வும் மிகப் பெரும் யுத்த அபாயம் மட்டுமல்ல.அது உலக நாடுகளின் இறைமைகளோடும்,அந்த மக்களின் உரிமைகளோடும் அமெரிக்கா தொடுக்கும் இராணுவ மற்றும் பொருளாதாரப் போராகும்.இந்தப் பனிப் போரினால் அமெரிக்கா அடைய விரும்பும் நிலையென்ன?

மீளவும் பனிப்போர்:National Missile Defense வடிவத்தோடு:

அமெரிக்காவினது இன்றைய வெளித்துறை மந்திரி கொண்டி றைஸ்US-Außenministerin Condi Rice(பெயரில்கூட ஒரு கவர்ச்சி இருக்குது,மனதில் ஒரு எதிர்ப்பால் ஊக்கம் வேறு வந்து போகுது)தீடீர் திடீரென அண்மைக் கிழக்கு நாடுகளுக்குப் பிரயாணிக்கிறார்.தனது நீண்ட நெடுங் கால்களைப் பின்னிப் பின்னி நடை காட்டுகிறார்!எகிப்துக்குப் போகிறா அப்படியே சவுதிக்குப் பிறகு இஸ்ரேலுக்கு சிரியாவுக்கு டுபாய்க்கு இன்னும் எங்கெங்கோ போகின்றார்.இரண்டு மாதங்களுக்குள் இரு தடவைகள் நடையாய்ப் பவனி வருகிறார்.என்ன பிரச்சனை?

ஆகா! ஒபெக்(OPEC-Länder;) என்ற எண்ணை வள நாடுகளின் கூட்டு அமெரிக்க டொலர்களுக்கு மாற்றைக் கோருகின்றன.ஈரானின் நீண்ட நாள் கனவான எண்ணைப் பங்குச் சந்தை மார்ச்சு 2006 இருந்து இயங்கத் தொடங்கியாச்சு(Oil Exchange Program).அமெரிக்காவுக்கு மீளவும் ஒரு தலையிடி, இப்படி உருவாகுமென்றே ஏலவே தெரிந்தபோது அது காய்களை அரசியலூடாக மட்டுமல்ல இராணுவ வியூகத்தோடுமே நகர்த்தத் தொடங்கியது.அமெரிக்க இராஜ தந்திரத்தை இராணுவ வியூகதைத் தவிர்த்துப் பார்ப்பது கடினம்.இதுதாம் "துப்பாக்கிக் குழலிலிருந்து அரசியல் பிறப்பதாக"அன்றைய சீனத்தின் சிற்பி சொன்னதாக ஞாபகம்.என்னவோ இன்றைய இந்தப் பனிப் போரை எவருமே முடிவுக்குள் கொண்டுவர முடியாதபடி இருஷ்யாவின் இராணுவ நகர்வுகளும்,ஜேர்மனியின் விஞ்ஞானப் பரிமாற்றங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.

போலந்தில் நிறுத்தி வைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்புப் கணைகள்(என்.எம்.டி.)மற்றும் செக்காயில் நிலைப்படுத்தப்படும் ரேடர்கள் மூலமாக அமெரிக்கா அச்சுறுத்தும் அரசியல் இன்னொரு இரணுவத் தன்மையிலான ஐரோப்பாவையும் இவர்களுக்கு இரையாகும் தொழிலாள வர்க்கத்தையும் உருவாக்கி விடுவதும் இதன் வாயிலாக சுய வளர்ச்சிகள் சிதறடிக்கப்பட்டு மக்களின் அனைத்து ஜனநாயக வாழ்வு மதிப்பீடுகளையும் இராணுவ மயமாக்க முனையும் அமெரிக்கா தன்னை எப்போதும் அண்மைக் கிழக்கு நாடுகளின் தலைவனாகவும் அந்த நாடுகளின் எண்ணை வயல்களைத் தனது மேற்பார்வையோடுதாம் கொள்ளையிட்டுத் தான் போடும் பிச்சையை மற்றவர்கள் பெறும்படிதாம் கோரிக் கொள்கிறது.இதை மீறிய எல்லா வகை அரசியல் நகர்வையும் தான் எந்தக் கோலத்திலும் அழித்துவிடும் திறன்மிக்க நாடு என்பதை அமெரிக்கா மேற்குலகத்துக்குச் சொல்வதே இந்த National Missile Defense ஊடாகவேதாம் சாத்தியமாகிறது.

இன்றிருக்கும் உலக வர்த்தகப் பொறி முறையில் "மசகு எண்ணையின்றி ஒரு மசிரும் அசையாதென்பதே" உண்மையாகும்இந்த உண்மையானது எப்பவும் எண்ணைக்காக எதையும் இழகத் தயாராகும் அமெரிக்க-ஐரோப்பிய அரசியலில் இவர்கள் நடாத்தும் இராணுவச் சகசம் அப்பாவி மக்களையும் அவர்களது பண்பாட்டையும் சாம்பலாக்கும் அளவுக்கு யுத்தம் அவசியமாக முனைப்புறுகிறது.இது விரும்பத் தக்க விளைவில்லையெனினும் இதைவிட வேறு வழி இந்த நாடுகளுக்குத் தெரியவில்லை.இந்தத் தெரியவிலை;லைக்குப் பின்னால் மேற்குலக வெள்ளைத் திமிர் மறைந்திருக்கிறது.தாம் எவரும் குடியில்லையென்பதும்,தாமே மற்றவர்களுக்கு எஜமானர்களென்பதும் இந்தத் திமிருக்குள் இழையோடுகிறது.

ஈரானின் அணு ஆயுத முயற்சி,நெடுந்தூர ஏவுகணைகள் என்ற பூச் சுற்றலுக்குப் பின்னால் ஈரானின் உலர்ந்த எண்ணை வயல்களே அமெரிக்காவினதும் மற்றும் மேற்குல நாடுகளினதும் சீனாவினதும் அரசியல்-இராணுவ வாதத்துக்குக் காணமாகின்றென.

2005 ஆம் ஆண்டு Oil and Gas Journal' ன் கணிப்பின்படி ஈரானில் உள்ள எண்ணை இருப்பானது 125.8 பில்லியன்கள் பெறல்களாகும்.இது அமெரிக்காவின் எண்ணை வளத்தைவிட ஐந்து மடங்கு அதிகமானது உலகத்தில் இரண்டாவது பெரிய எண்ணை வளமுமாகும்.இன்றைய நிலையில் இருப்பிலுள்ள இந்த எண்ணையை உறிஞ்சிக் கொள்வது அவசியம்.இல்லையேல் ஈரானின் பாத்திரம் எண்ணைவள நாடுகளின் கூட்டில்;(OPEC -Organisation der erdölexportierenden Länder)இரண்டாவதாகவே தொடர்ந்திருக்கும்.இது அமெரிக்காவுக்கு என்றும் பாதகமானது.சோவியத்துக்குச் சாதகமானதாகவும் சீனவுக்கு நேசமாகவும் இருக்கும்.எனவே எக் காரணங்கொண்டும் ஈரானை யுத்தத்தால் வென்று அதன் முழு எண்ணை வயல்களையும் அமெரிக்கா கட்டுப் படுத்தியாகவே வேண்டும்.இதுதாம் இன்றைய அமெரிக்க எண்ணை முதலாளிகளின் கனவு.இது பலிக்குமா என்பதை பின்பு பார்ப்போம்.இதற்கு முன் வேறு சில வற்றையும் பார்ப்போம்.

சீனா-இருஷ்யா-ஈரான்:

ஈரானின் அநேகமான எண்ணை இருப்பு நிலப்பரப்புக்குள் கீழேயேதாம் இருக்கிறது.இந்த நிலப்பரப்பில் முக்கியமானது Khuzestan பகுதியாகும்.இது ஈராக்கின் எல்லைக்குப் பக்கத்தில் அமைந்திருப்பதாலும் இங்கே ஈரானின் மிகப் பெரும் எண்ணை ஊற்றுக்களான இரண்டு வயல்கள் இருக்கிறது.ஒன்று:Yadavaran¦ மற்றது:¦Azadegan இப்போது சிந்திப்பவர்களுக்கு அமெரிக்க எண்ணைக் குஞ்சுகளின் இதயத்தின் "படீர் படீர்-யுத்தம்,யுத்தம்-அணுக்குண்டு,அணுக் குண்டு-ஆபத்து ஜனநாயகத்துக்கு" என்ற அடிப்புக்கு-அரிப்புக்கு என்ன காரணமெனப் புரிவது கடினமில்லை!

இப்போது ஐ.நா.வின் பாதுகாப்பு மாநாட்டின் தொடர் இருக்கைக்கு ஈரானிய ஜனதிபதிக்கு மிகவும் சுணக்கியடித்து விசா வழங்கிய அமெரிக்காவின் நரித் தனமானது வீட்டோ உரித்துடைய இருஷ்சிய மற்றும் சீனாவின் ஒத்திசைவான வீட்டோ பயன் படுத்தலைக் கண்டு தடுமாறியதன் விளைவாகவும் மேலும் குழப்பத்தோடு அம்பலத்துகு வந்துள்ளது.என்றபோதும் ஐ.நா.உறுப்பினர்கள் ஈரானுக்கான பொருளாதாரத்தடையைக் கோரிக் கொண்டிருப்பினும் இது ஈரானை மெல்லப் பாதிப்புக் குள்ளாக்கினும் அமெரிக்காவின் திட்டமானது ஈராக்கின் எல்லையிலுள்ள ஈரானின் எண்ணையைக் கையகப் படுத்தும் ஒரு அத்துமீறிய யுத்தமே.

இன்றைய ஈரானிய எண்ணை வயல்களில் முக்கியமானYadavaran எண்ணை வயலில் 50 வீதமான பங்கை சீனா கட்டுப்படுத்துகிறது.சீன அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சீனப் பெற்றோலியம அன்ட் கெமிக்கல் கோப்பிரேஷனிடம்;;.(Das staatliche chinesische Erdölunternehmen China Petroleum & Chemical Corporation hält 50% der Aktien des großen Yadavaran-Ölfelds)இந்த ஐம்பது வீதப் பங்கு இருக்கிறது.இது இந்த எண்ணை வயல்மீதான சீனாவின் கழுகுக் கண்ணுக்கு நல்ல உதாரணமாகும்.

இருஷ்சியாவோ 2003 ஆம் ஆண்டளவில் தான் போட்டுக்கொண்ட திட்டத்தின்படி ஈரானின் எண்ணை வளமிக்க தொழிற்சாலைகளுள் மிகப் பெரும் நிதியிட்டுள்ளது.கூடவே தனது சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ஈரானின் மொத்த தேவைக்காக அனுப்பி வைக்கின்றபோது அதேயளவு மசகு எண்ணையை ஈரானிடமிருந்து மீளப் பெறுகிறது.இந்தக் கூட்டு முயற்சியானது வருங்காலத்தில் ஈரானின் மொத்த எண்ணையிருப்பையும் கணிசமானளவு சீனாவும் இருஷ்சியாவும் பங்கிட்டுக் கொள்ளும் திட்டத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் ஈரான் இதை முழுவிருப்போடு செயற்படுத்த விரும்புகிறது.அமெரிக்காவுக்கு மாற்றாக இந்த முயற்சியைத் தொடர விரும்பும் ஈரானுக்கு இந்த இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியமாக இருப்பதில் வியப்பில்லை.

ஈரானின் எண்ணை டொலர்கள்:

ஈரான் இதுவரை மிகப் புத்திசாலித்தனமாக அமெரிக்க ஆசாமிகளை கலங்க வைத்தே வருகிறது.அது செய்த இரண்டு காரியம், ஒன்று:தனது பெருந்தொகையான அன்னியச் செலவாணியை குவித்து வைத்திருக்கும் மேற்குலக வங்கிகளிலிருந்து பெரும் பகுதியை மீளத் தனது நாட்டுக்குள் இழுத்துவிட்டது.இது அமெரிக்கப் பங்குச் சந்தைச் சூதாட்டத்தையே பாதிக்குமளவுக்குச் சென்றிருக்கிறது.மற்றது ஈரானின் நீண்ட நாட் கனவான எண்ணைப் பங்குச் சந்தையை ஐரோப்பிய எண்ணை நிறுவனங்களின் பங்குச் சந்தையோடு இணைத்து இயங்க வைப்பது.இந்தச் செய்கையால் இதுவரை எண்ணை டொலர்களாக இருந்த பணமாற்று இனிவருங்காலத்தில் ஐரோப்பிய யுரோவுக்கு மாற்றவேண்டிய நிலையை ஓபெக் நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது.இது அமெரிக்காவுக்கு மிகவும் கேடான செய்தி.எனினும் இத்தகைய நடவடிக்கைகளை முதன்மைப் படுத்துவதால் அமெரிக்காவை வீழ்த்தமுடியாது.இதை அமெரிக்கப் பேய்களால் மிக இலகுவாகப் புரிந்துகொள்ளத் தக்க மொழிகளில் ஈரானுக்கும் அதன் வர்த்தகத் தொடர்பு நாடுகளுக்குஞ் சொல்வதில் இந்த என்.எம்.டி.ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டம் அதற்குக் கை கொடுக்கிறது.

ஈரானின் இத்திட்டம் வெற்றி பெறுந் தறுவாயில் டொலர் மூலமாகப் பரிமாறப்பட்ட எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு முழுதாக மாறுந் தறுவாயில் அமெரிக்காவில் எண்ணைவிலையும் டொலரின் சரிவும் நிகழ்ந்துவிடும்.இத்தகைய நிகழ்வின் பின் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரிய அதிர்வுகள் ஏற்படும்.இதை முறியடிப்பதில் அமெரிக்காவுக்கு ஒரு யுத்தம் ஈரான்மீது தொடுத்தாக வேண்டும்.இதுதாம் அமெரிக்காவின் இது நாள் வரையான யுத்த அளவுகோல்.இதுவன்றி அமெரிக்க மூலதனம் பெருக முடியாது.அதன் முரண்பாடுகளை அது யுத்தத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.எனவே அமெரிக்க மூலதனத்தின் இருப்பு அமெரிக்காவின் அத்து மீறிய யுத்தங்களால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது!

எண்ணை வர்த்தகம் யுரோவுக்கு மாறுந் தறுவாயில் பயன் பெறும் முதலாளிகள் நிச்சியம் ஐரோப்பிய முதலாளிகளே!சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமே இது பாரிய பின்னடைவை வழங்கும் .இதுவரை டொலரில் பரிமாற்று நிகந்த வரை தமது மூலதனத்தின் மூலம் உபரிகளை தேடிக் கொண்ட இவர்கள் இனிமேல் யுரோவுக்கும் டொலருக்குமான சம நிலையற்ற போக்கால் பாரிய துண்டு விழும் நிலைக்குள் தமது மூலதனத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் சீனா மதில் மேல் பூனையாக இருந்து கொள்ள முனையும்போது ஜப்பான் அமெரிக்காவுக்கு வக்காலத்து வேண்டும்.அது அமெரிக்காவோடிணைந்து ஈரான்மீது தாக்குதல் தொடுக்கும்.இங்கே ஐரோப்பிய நாடுகளின் தலைமை நாடான ஜேர்மனி அமெரிக்கப் படுகொலை யுத்தத்தை எப்படியும் ஒரங்கட்டும் அரசியலை நகர்த்த முனையும்போது அதை உடைப்பதற்காகவே போலந்தோடு ஏவுகணைக் கூட்டை அமெரிக்கா செய்கிறது.

உலகில் பேற்றியர் லோஞ்சர் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.இது அமெரிக்காவின் அற்புதமான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம்.அமெரிக்கா தன் நேச நாடுகள் இரண்டிற்கு மட்டுமே அந்த ஆயுதத்தை வழங்கியது.அந்த நேச நாடுகள் இஸ்ரேலும் ஜேர்மனியுமாகும்.இப்போது ஜேர்மனிக்கு எச்சரிக்கும்படி போலந்தை வளைத்துப் பிடிக்கும் அரசியலை அமெரிக்கா முன்னெடுப்பதால் ஜேர்மனி கையைப் பிசைந்தபடி "நேட்டோ,நேட்டோ"என்று அலம்புகிறது.இங்கே வெடித்திருக்கும் இந்தப் பனிப்போரானது எண்ணையை முதன்மைப் படுத்திய அதுவும் ஈரானிய எண்ணையிருப்பைக் கொள்ளையிடுவதோடு சம்பந்தப்பட்ட மாதிரித் தெரிந்தாலும் அதற்கு இன்னுமொரு முகம் இருக்கிறது.

இதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.தொடரும்.

இதுவரை பயன்படுத்திய பத்திரிகைகள்,நூல்கள்:

http://priceofoil.org/thepriceofoil/war-terror
http://harpers.org/sb-democrats-oil-1174575083.html
Attac-Mailingliste
http://www.saar-echo.de/de/prt.php?a=30566
die tageszeitung 19.03.2007
Konkret 2.2007
Krieg und Frieden von Willi Dickhut.


ப.வி.ஸ்ரீரங்கன்

Mittwoch, März 05, 2008

சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும்,
கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும்.


(கொரில்லா: நாவல்-எழுதியவர்: ஷோபா சக்தி)


'தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள் கொடுக்கப் போனதாக
சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு
மயங்கிவிடும் தாய் மனது
மடி கடித்த நினைவுகளும்
மங்கலாக வந்து போகும்
வார்த்தையின்றிச் சோர்ந்து விடும்
வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்று வரை?'



இன்று வரை கேட்கப்படும் கேள்வியிது.


ராயிரம் ஆண்டுகளாய் தாழ்தப்பட்டு 'தாழ்ந்தவர்கள்'என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வுமீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை-சேறடிப்புகளை,கள்ளப்பட்டங்களை-தீண்டாமையை சுமத்திய 'மேல் சாதிய சைவ வேளாள அரசியலை' இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞானபூர்வமாகக் கைகூடிவரவில்லை.அத்தகையவொரு நிலமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும்,அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதையெமக்குத் திட்டமிட்டே சுமத்தியது!


இந்த நிலமைக்குக் காவோலை கட்டிக் கொளுத்தப் புறப்பட்ட இயக்கமே தலித்திலக்கியம்!!(இந்தியாவில் தலித்துவச் செயற்பாட்டாளர்கள் உலக ஆதிக்கச் சக்திகளின் பினாமி அமைப்புகளுடன்(வேர்ல்ட் விசன்,இன்னபிற...)சேர்ந்தியங்குவது பற்றி எம்மிடம் பாரிய விமர்சனமுண்டு).


கொரில்லா'வின் மொழியூடான சித்தரிப்பும்,அதன் பகுப்பாய்வு மீதான நாளாந்த சமூக சீவியம் -இதன் நம்பகத்தன்மை யாவும் அதன் அநுபவ வழிபட்ட வாழ்வை வாழ்ந்து,சுமந்தவர்களாலேயே புரியக்கூடிய நிர்ப்பந்தம் இயல்பானதே. இந்த நிர்ப்பந்தத்துக்குள் நிலவுகின்ற நமது வாழ்வும்-சாவும் எங்கோவொரு மூலையில் நிகழ்ந்து,ஆரவாரமற்ற மனிதர்களால் உணரப்படாமலேயே அமிழ்ந்துவிடும் நிலையைத் தடுத்து-இதுதாம் எமது வாழ்வினது சமூக இருப்பு,இதுவே எமது கால அரசியல் சமூக-பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள்,கண்ணிகள் என்பதைப் பறையடித்துச் சொல்லும் ஒரு ஊடகமாக- இயக்கமாக சோபா சக்தி என்ற எழுத்தியக்கம் கொரில்லாவை முன் வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வே,தேவையே!


இந்த 'வாழ்வு விவரணம்'தொழில்படும் தளம் இலங்கையின் தீவுப்பகுதியிலுள்ள குஞ்சன் வயலெனினும்,இஃது முழுமொத்தப் பூமிப்பந்தில் வாழ்வு மறுக்கப்பட்டு-உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களனைவருக்கும் பொருந்தும்.நாம் வாழும் வாழ்வானது 'ஏதோ எமது 'அறிவற்ற வாழ்வோட்டத்தால் நிகழுமொரு போக்காகக் காட்ட முனையும் கபட ஆதிக்க சாதியவூடகங்களால் இத்தகைய எழுத்துக்கள் எப்பவும் கண்டு கொள்ளப்படா(கொரில்லா பற்றிய இத்தகைய விமர்சனங்களுட்பட).என்றபோதும் வரலாற்று இயங்கியலைப் புரிந்தவர்களுக்கு இஃதொரு தடையாகா!



மானுடநேயம், மகத்துவம்,ஜனநாயம் என்பதெல்லாம் சாதிய இந்துக்களுக்கான சமூக விழுமியமாகப் புரிந்து வைத்திருக்கும் புலம் பெயர் 'வானொலி-ஒளி,பத்திரிகைகள் இந்த எழுத்துப் படையலை தெருவோர வேப்பமரத்து முனியப்பருக்கோ அன்றி அந்தோனியாருக்கோ வைத்ததாகப் பொருட் படுத்துகிறது!!!


எமக்குள் முகிழ்த்திருக்கும் சமூகக்கோபம் இன்று நேற்றைய கதையல்ல,பல்நூறு வருடங்களாக நமது மூதாதையர்கள் கொண்டிருந்த -அநுபவித்த பகை முரணே இப்போது சமுதாய ஆவேசமாக-விஞ்ஞானத்தன்மை பெற்று யுத்த தந்திரோபாயத்திற்காக கிரமமாக வாசிப்புக்குள்ளாகிறது.நாம் நுகர்ந்த-நுகரும் ,நமது முன்னோர்கள் புழுவிலும் கேவலமாக வாழ்ந்த -சமூக வாழ்வை இப்போது நாம் கட்டுடைத்துப் பார்க்கிறோம்! அதுவே தலித்திலக்கிய முயற்சிகள் கோரியும் நிற்கின்றன,இதுவே கொரில்லாவினது இலக்கிய கோட்பாட்டு வடிவமும்.வருவது எதுவானாலும் நாம் நமது கடந்தகால வாழ்வுமீதான தார்மீகக் கோபம் குறித்து மிகக்கவனமாக இருக்கவேண்டும்!எக்காரணங்கொண்டும் இதன் வீச்சுக் குன்றக்கூடாது-தணியக்கூடாது.இதுவே நம்மை வழிநடாத்திச் செல்லும் ஊட்டச்சத்து,நமது வாழ்வை நாயிலும் கேவலமாக்கி,இழி நிலைக்கிட்ட வர்க்க-சாதிய நலன்களை,கண்ணிகளைத் தனியே மார்க்சிய வர்க்கக்கோட்பாட்டுப் புரிதலுக்குள் அடக்கிப்பார்க்க முடியாது.இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் பல் வகை சாதிகளாகப் பிளவுபட்டு மிகக் கீழான நிலைமைகளுக்குள் வாழ்வு நகர்கிறது.இப்பிளவு மென்மேலும் மேற்சாதிய ஒடுக்குமுறைக்கு ஒத்திசைவாகிவிடும் நிலைவேறு.


மனிதர்களை மனிதர்கள் ஒடுக்குதல் என்பது இந்த நூற்றாண்டோடு ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும்,இதற்கொரு முற்று வைப்பதற்கான முன்னெடுப்பாக நாம் தலித்திய கருத்தமைவுகளை நோக்கியாக வேண்டும். கூடவே தலித்தியத்தை நாம் எவ்வாறு புரிகின்றோம்? ஒருசில மேட்டுக்குடி 'படிப்பாளிகள்'-மார்க்சியர்கள் அஃது பூதம்,மார்க்சியத்திற்கு விரோதமான பிற்போக்கு பிளவு வாத-முதலாளிய நலனுடன் பின்னப்பட்ட சந்தர்ப்பவாதமாகக் கருதவது தத்துவார்த்த அநுபவின்மையின் போக்கு மட்டுமல்ல கூடவே மேல் சாதிய'மேல் குல' கருதுகோளுமேயிதை இயக்கி வருகிறது.


தலித்துவ அடையாளமென்பது 'பாட்டாளி வர்க்க முன்னணிப் படை,பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம்'என்பவற்றின் பிரதியீடாகவும்,இந்திய-இலங்கை போன்ற சாதிய ஒடுக்குமுறை நிகழும் நாடுகளுக்கு உழைக்கும் மக்களை இனம் காணும் பொதுமைப் பண்புடைய சுட்டலாகவுமிருக்கும்.உழைக்கும் மக்கள் பல் வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு'தலித்திய வர்க்கம்,தலித்திய மொத்த அதிகாரம்,தலித்திய முன்னணிப் படை'என்பதே சாலப் பொருந்தும்! இவற்றின் புரிதலோடுதாம் நாம் சமூகமாற்றை நோக்கிப் பயணிக்கமுடியும்.தலித்துவ பண்பாடுதாம் சாதியவேர்களை அறுக்க முடியும், இஃது நடைமுறையிலுள்ள எல்லா விண்ணாணங்களையும் கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிவதில் நோக்கமாகவிருக்கும்.


இந்த வகைப் புரிதலோடு கொரில்லாவை முன் நிறுத்தி தலித்துவ இலக்கியக் கோட்பாடு நோக்கிய சிறு பயணம்:


இன்றைய உழைக்கும் விளிம்பு மனிதர்கள்(புலம் பெயர்ந்து மேற்குலகில் உடலுழைப்பை நல்கும் தமிழர்கள் தம்மைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இந்த விளிம்பு மனிதர்கள் யாரெனப் புரிந்து விடும்)தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான எந்த வடிவமுமில்லை.உலகியல் வாழ்வு இதுவரையிலிருந்த நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப புதியமொந்தையில் தந்தபடி.இவைகளால் சரிந்துவிடுகின்ற பொருளியல் வாழ்வைச் செப்பனிட்டு தனது முரண்நிலைகளில் மழுப்பல்களைக் காட்ட முனைகிறது.என்றபோதும் 'உழைக்கும் வலு'வளைந்து கொடுக்கும் அடிமைப்படுத்தலுக்குள் திணிக்கப் பட்டபடி,இந்தச் சமூக சீவியம் எந்தவொரு உழைக்கம் பிரிவையும் சுதந்திரமான தனித்தன்மையுடைய உற்பத்தியுறுவுகளாகப் பார்க்க விடுவதில்லை. இந்த பொது இறுக்கமே இப்போது பல மட்டங்களிலும் (மூளை உழைப்பாளிகளிடமும்,நிர்வாகயந்திரத்திடமும்) 'முட்டாள்த் தனத்தின்வியூகம்' Strategien der dumkeit என்று விவாதிக்கப் படுகிறது, இவ்வுளவியல் ஒடுக்குமுறையென்பது ஒரு காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்திப் படுத்தும் மூலதனத்தின் திட்டமிட்ட வியூகமே.இதையே முன் வைத்து புத்திஜீவ மட்டம் கருப்பொருளாக விரிந்துரைக்கிறது.


செப்டம்பர் 11'க்கு பின்பு வியூகங்கள் பல வடிவங்களில் உலா வருகிறது.இவை கணக்கிலெடுக்கப்பட்ட எல்லா அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலைமையில் நம் அக நிலை, படைப்பாற்றல் இழந்துவிட்ட நிலையில் தோல்விப் பயத்துடன் புற நிலையை அணுகிறது.தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு எந்தச் செயல் வடிவமும் அதனிடமில்லை,இஃதுதாம் இன்றைக்கு நம்மில் பலரிடம் மலிந்து காணக்கிடக்கிறது. வர்க்க உணர்வென்பது வெறும் பொருள் சார்ந்த விசயமாக சமூக உளவியல் நிறுவப்பட்டுள்ளது,இதன் உச்சபட்ச பிரச்சாரவூடகங்களாக தொலைக்காட்சியும்,கொலிவூட் சினிமாவும்,கல்வியமைப்பும் செயற்பட சமூக நிலை சற்று சரிப்பட்டுவிட பலர் தாங்கள் இதுவரை உணர்ந்து வந்த வர்க்கவுணர்வை சமரச நிலைக்குள் அம்போவாக்கியபடி,இது குறித்து ஜேர்மனிய-அவிஸ்த்திரியன் பேராசியர் பீட்டர் வி.சிமா தனது பிரபல்யமிக்க கட்டுரையான'பின் நவீனத்துள் மானிடர்களினது பயிற்றுவிப்பு'என்ற கட்டுரையில் இப்படியெழுதுகிறார்:'பல்வகைப்பட்ட கருத்து நிலைகளை,பிரச்சனைகளை அன்றி சாதாரண தவறான புரிதல்களை விவாதிப்பதற்கு யாரால் முடியவில்லையோ அதுவே சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடு'.".Peter V.zima: wer meinungsverschiedenheiten,Konflikte,oder einfache mißverstaendnisse nicht ausdiskutieren kann,der schlaegt zu wie ein unmuendiges Kind.-strategien der dumheit,seite:25.இஃதுதாம் நாம் செய்து வரும் இன்றைய செயல். இதை உடைத்தெறிவதில்தாம் தலித்தியமும்,அதன் உணர்வுத்தளமும் வெற்றிகொள்கிறது.மனிதனை மனிதன் ஒடுக்குதல் பொருளாதார ரீதியாக மட்டும் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் இந்த 'வர்க்க இழப்பு' நிகழ்ந்துவிட்டது.ஆனால் இந்தியாஇலங்கை மாதிரியான சாதிய-சமூகவொடுக்குமுறை நிகழும் நாடுகளில் இந்த வர்க்கவுணர்வென்பது தலித்தியமாக-தலித்தாக முன்னிறுத்திப் போராடுவதில் வெற்றிகொண்டது வரலாற்று விந்தையல்ல.


எனவே தாம் ஒரு சோபா சக்தி விஷ்வரூபமாக தன் உயிரை நிழலாகக் கொடுத்து ஈழப்போராட்ட வரலாற்றை மக்கள் சார்ந்து வெளிப்படுத்தியது!


தலித்துவ இலக்கியத்தின் கோட்பாடு என்பதுதாம் என்ன?


படைப்பிலக்கியத்தின் ஊடாக வரலாற்றுநிகழ்வைகொடுமையை வெளிப்படுத்துவதும் அதனூடாகக் கற்றுக் கொள்வதும்,கற்பித்தலுமே.
இந் நோக்குத்தாம் படைப்பிலக்கியத்தின் கோட்பாட்டு அழகியற் கட்டுமானத்தை நிர்மாணிக்கும்.இதுதாம் நாம் எழுதுவதை கேள்விக்குட்படுத்தும்.நாம் எழுதுவது முதல்தர இலக்கியமா?,நாம் உண்மையிலேயே இலக்கிய சிருஷ்டிகளா? என்றெம்மைக் கேட்க வைக்கும்.இவ் வகைப் புரிதலற்றவர் -தான் படைப்தெல்லாம் வானத்தின் உச்சியிலுள்ளதென்றறெண்ணி விமர்சனங்களை வெறுக்க முனைவார்!தலித்துவ எழுத்துக்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும் ஆற்றலோடு அமைகிறது.


இதற்கு கொரில்லா'வே சாட்சி! சோபா சக்திக்குள் நிகழ்ந்தது என்ன? இலக்கியத்திற்காகத் தன்னை வழங்கியதா? தனது ஆன்மாவை,உயிர்ப்பை வழங்கி வரலாற்றைப் படைப்பாக்கி முன் வைத்துள்ளார்.சிந்தனையில்,படைப்பாற்றலில்,வேதனையில்,அநுபவங்களில் தன்னைத் தொலைத்து தேடுகிறார்.இந்தத் தேடுதலே தன்னைத் தான் இனங்காண வைத்ததும்,புரிதுணர்வை வளர்த்ததும்,சமுதாயத்துள் தாழ்தி வைத்திருக்கும் மானுடர்களினது -மனித விடுதலைக்காக வாழ்வைத் தேடுகிறார்,படைக்கிறார்,தலித்தவத்திற்காக-தலித்துவ விடுதலைக்காக தலித்தைத் தேடுகிறார்.தன்னைத் தானே திட்டுகிறார்,கேலி செய்கிறார், தன்னைத் தானே சாகடிக்கிறார். தனக்குத்தானே புத்துயிர் கொடுத்து தலித்துவ விடுதலையை கொண்டுவர முனைகிறார், உலகத்தோடு தோள் சேர்கிறார்!


இந்த உலகத்தோடு எப்படித் தோள் சேர்கிறார்? இவ்வுலகை நாம் எப்படி நெருங்குகிறோமோ அப்படித்தாம்.
துன்பத்தின்மூலம்,நெருக்கடிகளின் மூலம்,சாதிய-இந்துவத்தின் மூலம்,ஆதிகத்தின் மூலம்,மனிதர்களை மனிதர்கள் கொல்லும் அச்சத்தின் மூலம்,எமது அறிவின் மூலம்,உழைப்பின் மூலம்,யுத்தத்தின்மூலம், படைப்பின் மூலம் இந்த உலகு எமக்கே சொந்தம்.நமக்குத்தெரிந்த இவ்வுலகை நமக்குள் கொண்டுவர இதுவரை நமக்குள் அறிவாற்றல் கைகூடிவரவில்லை,தலித்துவ மக்ளாகிய எமக்கு ,எம் வாழ்வை -அற்பணிப்பை கண் முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தும் படைப்பு நிலை இப்போது எம்மிடமுள்ளது.நாம் நம்மைத் தெரிவு செய்கிறோம்,தெரிவு செய்வதினூடே நமது இருப்பு,நமது விடுதலையோடு சம்பந்தப்படுவதை உணர்கிறோம்.நமக்கான உலகை நாம் சிருஷ்டித்து அதனோடு கலத்தல் நிகழ்ந்து விடுகிறது! இதைக் 'கொரில்லா' மிகவும் துல்லியமாகச் செய்து விடுகிறது.


இவ் வகைக் கலத்தலின் மூலம் கொரில்லா நம்மோடு உண்மை பேசுகிறது,பேருண்மையைக் இக் கலத்தலின்மூலம் அது தந்து விடுகிறது.கொரில்லா நம்மைப் பற்றிய குறைகளைத் தயவு-தாட்சன்யமின்றி நமக்குப் பகிரங்கப் படுத்துகிறது,இதில் நமக்கு வெட்கமேதுமில்லை.இதற்காக நாம் தீக்குளிக்க வேண்டியதில்லை.நமது குறை இன்னொருவரின் குறையின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாவோ தொடர்கிறது,இவ் வண்ணமே மூதாதையர்களின் தொடர்ச்சி நமது தொடராகவும் இணைகிறது.எம் குறைகளைப் பிரகடனப் படுத்துவதன் மூலம் நாம் எத்தனையோ நபர்களைப் பிரகடனப்படுத்துகிறோம்,எம்மை நாமே திருத்த சிலுவை சுமக்கிறார் இந்த சோபா சக்தி!எமது விடுதலையை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் செத்தாக வேண்டும்.சாதியின் பெயரால்,இயகத்தின் பெயரால்,கள்வனெனும் பெயரால்,துரோகியின் பெயரால் இந்தச் சாவு நம்மை நெருங்கிய படியே!! இந்தச் 'சாவு'தாம் கொரில்லாவைப் படைப்பிலக்கிய நிலைக்குள் உயர்த்தி,உந்தித் தள்ளுகிறது.


எமது வாழ்வை விபரிக்க 'நாம் எப்படியெல்லாம் செத்தோம்,நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு-அவமானப்படுத்தப்பட்டார்கள்,எங்கள் வாழ்வை எப்படியெல்லாம் இழந்தோம்'விளக்க-பொருள்தேட கொரில்லா முனைகிறது.இதுவேதாம் இன்றைய தலித்துவக்கோட்பாடு-தலித்திலக்கியக்கோட்பாடு-இதுவே படைப்பிலக்கிய அழகியலும் கூட! இலங்கையின் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களில் கணிசமான பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தான் சிலுவை சுமந்து,செத்து-உயிர்த்து,மீளவும் தன் உயிரையே நிழலாக விரித்து,ஈழத்து ச் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் முகத்தில் காறீ உமிழ்கிறார்,உதைக்கிறார்.இதுவே மனித நேயமும்கூட.


கொரில்லா மகத்தான நாவலாகவிருப்பதற்கான காரணம் :அஃது வரலாற்றின் ஒருபகுதி,ஈழப்போரின் வரலாறை அது தனக்குள் பகுதியாகவும்-முழுமையாகவும் பிரதிபலிக்கிறது.மனிதர்களாகிய நாம் வரலாற்றின் ஓட்டத்தில் மிதக்கின்றோம்,வரலாற்றோட்டத்தை இயக்கிய படி.எமது செயல்களை,சிந்தனைகள் வரலாற்றோடு பிணைத்துப் பார்ப்பது சாத்தியமே!இதைச் செய் நேர்த்தியோடு கொரில்லா செய்து முடிக்கிறது.


கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்ந்தும்-தொடராமலும் ,பின்னிப்பிணைந்தும்,ஆழ்ந்தும் -ஒடுங்கியும் வரலாற்றில் முன்னும் பின்னும் செயற்படுகிறது.இங்கு சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்.அதாவது பாத்திரங்களை கால இடச்சூழலில் வைத்துப்பார்ப்பதும்,நிகழ்வை விபரிப்பதுமே அஃது! காலங்கடந்த (காலத்தை விட்டு-வெளியில்,காலத்துக்குள் நிலவாத) கருத்துரீதியான மனிதர்களைக் காட்டும் கபட இலக்கியச்சூழலுக்குள் கடப்பாரை கொண்டு வரலாற்றுச்சூழலுக்கேற்ற மனிதர்களை அவர்தம் நிஜ முகங்களோடு படைக்கின்ற இலக்கிய நாணயம் இந்தச் சோபா சக்தியிடமே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.மனிதர்களை-அவர்தம் வாழ்வை விரிந்த பின்னணியில் வைத்துப்பார்ப்பதும்,பொதுவயப் படுத்துவதும்,பின்பு அதையே பிரித்துப்பார்த்து சாதிய ஒடுக்குமுறைக்குள் நிலவும் சங்கதிகளை விபரிப்பதும்தாம் தலித்தவ இலக்கியக் கொள்கைஅழகியற் கோட்பாடாகும்,இதைச் சேபா சக்தி கைநேர்த்தியுடன் கச்சிதமாக் கையாளுகிறார்.


தற்காலத்துக்குள் வாழும் நாம், வரலாற்றின் இறந்த காலத்தை தற்காலத்திற்கூடாகப் பிரதிபலிக்கும் ஆபத்தையறிவோம்.இந்த ஆபத்தை எப்படியிந்தக் கொரில்லா நாவல் வென்றது? இஃது ஆச்சரியமானது! ஆனால் படைப்பாளியின் பின்னணி கடந்த காலத்தை தானே அநுபவப்பட்டு-தானே பிரதிமை செய்ததால் இஃது வெற்றியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.எனவேதாம் கொரில்லாவின் எந்தப்பாத்திரமானாலும் வரலாற்றில் விரிகிறார்கள்,சம்பவங்கள்-பிரச்சனைகள் யாவுமே அந்தந்த வரலாற்றுச் சு10ழலை நமக்கு விபரிக்கிறது.எந்தப் பகுதியை வாசித்தாலும் அஃது வரலாற்றில் ஒரு பகுதியாக-துண்டம்மாக ,பிரதியாகப் பிரதிபலிக்கிறது.


பாத்திர வளர்ச்சியென்பது மிகவும் அசாதாரண விஷயமாகவுள்ள தமிழ் இலக்கியச் சூழலில், கொரில்லா மிகவும் சாதாரணமாகவே அவ் வளர்ச்சியை எட்டிவிடுகிறது.


கீர்கேகோர்ட் Kirrkegaard கூறுகிறார்:'Man muss die irdische Hoffnung abtoeten,dann erst rettet man sich in die wahre Hoffnung"-Die Reinheit des Herzens.தமிழில்: மனிதர்கள் உலகத்தின் மீதான நம்பிக்கைகளை கட்டாயம் கொன்று விட வேண்டும்.பின்பு உண்மையான நம்பிக்கைகளை காப்பாற்றி விட முடியும்.


சோபா சக்தி கற்பனையான நம்பிக்கைகளைக் கொன்று விட்டார்.மணலில் கயிறு திரித்து வானத்தில் ஊஞ்சல் கட்டும் நோக்கம் அவருக்கில்லை.எனவே கொரில்லா வரலாற்று விவரண நாவலாகவும்,படைப்பிலக்கியத்துள் தலித்துவ அழகியலாகவும்-கோட்பாடாகவும் முகிழ்க்;கிறது!
ஈழ மக்களின் வாழ்வும் சாவும் போலிப் பிரச்சார ஊடகங்களால் உருமாற்றப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரில்லாவின் பாத்திரங்கள் நம்மோடு அந்த உண்மைகளைப் பேசுகின்றன.


வில்லியம் சேக்ஸ்பியரின் William Shakespeare கோம்லேட் நாடகத்தில்:'.Gott hat euch ein Gesicht gegeben, und ihr macht euch ein andres."-Romeo und Julia;Othelo;Hamlet seite:244.'இறைவன் உங்களுக்கு ஒரு முகத்தை வழங்கினார்,நீங்களோ உங்களுக்கு வேறொன்றைச் செய்தீர்கள்'.என்று கோம் லேட் பாத்திரம் வழியாக சேக்ஸ்பியர் கூறுகிறார்.


நமக்கு நாம் எத்தனை முகங்களைப் படைத்துள்ளோம்? இந்த முகங்களை சோபா சக்தி கொரில்லாவினூடே நமக்கு விபரிக்கிறார்.இறுதியாகக் கொரில்லா பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் 'முழுமையானது என்பது பொய்யானது.'


ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்,
ஜேர்மனி.