Posts mit dem Label வாழ்வு werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label வாழ்வு werden angezeigt. Alle Posts anzeigen

Sonntag, Oktober 11, 2015

டேவிட் ஐயாவின் முன்னுரையோடு,அவருக்கு முடிவுரை...

...இன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினத்துக்கு வரக் கூடிய அழிவை ஆராய்கிறேன்.
இப்பகிரங்க வெளியீடுகளால் இவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க நான் முன்வரவில்லை.இவர்கள்ளெமது அரசியற் பிரமுகர்களென்றடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் பலன் கருதி இந்த விமர்சனத்தை வெளியிடுகிறேன்.

இப் புனிதப் பணியில் எனக்கு நேரிடக் கூடிய விபரீத விளைவுகளை நன்கு உணர்வேன்.விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக்கட்டை என்றதும் ; சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (TELO) தமது "எழுச்சி"ஏட்டில் என்னைப் "பிற்போக்குச் சக்தி காக்கை வன்னியன்" என வர்ணித்ததையும் அறிவேன்.

இக்கட்டுரையை வரையும்பொழுது பெயரும் -ஊரும் கொடுக்கத் திரணியற்றவொரு "விடுதலை வீரன் " ஓர் பயமுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்."அட பொறுக்கி... முகந்தனிடம் பணம் வேண்டி சிறையுடைப்புப் புத்தகம் வெளியிட்டாய் ;இனியெழுதினாற் வெட்டிக் கொல்வோம் !" என்கிறார் அவர்.

இவ் வெருட்டல்கள் மூலம் தமிழீழ விடுதலை எங்கே போகின்றதென்பதை  வாசகர்கள் ஊகித்து அறியலாம்.

ஆனால், ஈழவிடுதலைப் பாதையில் எண்ணற்ற துன்பம் நேரிடினும் அஞ்சாது -அயாராது உழைப்பேன்.என் அருமைச் சக ஊழியன் டாக்டர் சோ.இராசசுந்தரம் தம் உயிரையே தியாகம் செய்து விட்டார்.பல ஈழத் தமிழ் இளைஞர்கள் இரத்தத்தால்  ஈழவிடுதலையை உறுதிப்படுத்திவிட்டனர்.இப் பாதையில் குறுக்கே நிற்கும்  தீய சக்திகள் அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.
ச.ஆ.டேவிட்
1985




======================

 மேற் காணும் அவரது முன்னுரையில்  ஈழ விடுதலை மீதான அவரது பெருவிருப்பை நாம் அறிய வாய்ப்புண்டு.அவரது அரசியல் முன்னெடுப்புகளில் நானும் மயங்கியிருந்த காலத்தில் அவரைச் சந்தித்துச் சில துரும்புகளை நானும் எடுத்துப் போட்டவன். இன்று  " எங்கள் "டேவிட் ஐயா பந்தியுற்றுள்ளார். 

விடுதலை வேட்கையுடைய  மாபெரும் மனிதருக்கு நமது "விடுதலை இயக்கங்கள்" வரலாற்றில் எந்த  இடத்தை அவருக்கு வழங்கினர் என்பதை அவரது முன்னுரையே நம் முன் எடுதியம்பி வரலாற்று ஆவணமாகவுள்ளது!.

எனவே,அவரது இழப்புக் குறித்துப் பேசும் அருகதை அராயக இயக்கவாதப்  பண்புடைய  எவருக்கும் கிடையாது.இந்த மாமனிதரை இறுதிவரை கண்டுகொள்ளாத இயக்வாதம் ,தற் குறித்தனமாகத் “தமிழ்த் தேசிய விடுதலையை அழித்து தாமும் அழிந்து போனதை”  இந்தப் பெரு மனிதர் கண்டுதாம்  தற்போது ஈழத்திடமிருந்து விடைபெற்றுள்ளார்.

அவரது பெருவிருப்பை(விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகளை இறுதிவரை அம்பலப்படுத்தி நேரிய பாதை காண்பது) நாம் தொடர்ந்து  ஆற்றுபவர்கள்.எனவே, நமது முன்னோடியான டேவிட்  ஐயாவுக்கு மிகுந்த மரியாதையோடு தலை தாழ்த்தி அவர் வழி தொடர்வோம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
11.10.15

Sonntag, August 30, 2015

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

என்னை அசைத்துக் கொண்டிருக்கும் கேள்வி : இந்த் தமிழ்ச் சிறுவனால் "இது" எப்படிச் சாத்தியமாச்சு?
இந்தக் கேள்வி தொடர்ந்து என்னைக் குடைந்துகொண்டேயிருக்கிறது!;இந்தச் சிறுவனைப் பல தடவைகள் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.அவன் இத்தகைய சாதனையைச் செய்தானென அவனைக் குறித்து எவரும் பேசவில்லை!அவனோடு நீண்ட உரையாடலைச் செய்திருக்க வேண்டிய எனது இப்போது தொடரும் ஆவலை அன்று நான் கொண்டிருந்தால் அவனோடு நிறைய உரையாடியிருக்கலாம்.



13 வயதில் >> Flug - 747: Eine atemberaubende Entführungsgeschichte [ விமனம் -747 ,அதிர்ச்சி தரும் ஒரு கடத்தற் கதை ]<< எனும் புனைவை எழுதியிருப்பதாகவும் ,தற்போது அவனது 16வது வயதில் >> Ein Sprung durch Raum und Zeit[ காலம்;வெளி ஊடாகவொரு பாச்சல் ]
என்ற வானவியற் பௌதிக நூலையும் வெளியிட்டிருப்பதாகவும் அறிந்தேன்.அவனது இரு நூற்களையும் இன்று Amazon வழி  வேண்டினேன்.



எனது நண்பரான சுரேந்திரா, யேர்மனிய நகரமான நூரன்பேர்க்கில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்பவர்.அவர்தம் புதல்வனே இந்தச் சாகித்யன் சுரேந்திரா[ http://www.amazon.de/Sagithjan-Surendra/e/B00LYAWE7C/ref=dp_byline_cont_book_1 ] என்ற சிறுவன் இந் நூற்களின் ஆசிரியன் என்று அறிந்தபோது பிரமிப்பு எனக்குள்  பரவிக்கொண்டேயிருக்கிறது.

இளம் விஞ்ஞானியை நமது உறவுகள் வட்டம் எப்படி இனங்காட்டுகிறது-அணுகுகிறதென்ற கேள்வியை ஒருபக்கம் வைத்துவிட்டு,அவனது இவ்வுலகம் குறித்த அநுபவம் ; அறிதற்புலம் குறித்தே எனக்குள் கேள்விகள் வட்டமிடுகின்றன.Einstein குறித்துரைத்து உலகமே மண்டையைப் போட்டு உடைத்துவரும் Relativitätstheorie யைப் புரிந்துகொள்வது  பௌதிகத்தைப் புரிவதன் அடிப்படையென இவன் தனது முகவுரையில் குறித்துரைக்கும்போது ஆச்சரியம் பல மடங்காகிறது.கூடவே Werner Karl Heisenberg க்கையும் அவன் குறிப்புணர்த்தி Quantenmechanik வரை விபரிக்கும்போது [ இணையப் பரிச்சார்த்த வாசிப்பு ]இதுவொரு சிறுவனது மனதுக்கு அப்பாலானது என்று தோன்றுகிறது.இவனது ஆழுமை எங்ஙனம் இருக்கின்றது?இவனால் சாத்தியமாக்கப்பட்ட " காலம் -வெளி "வழியான பாச்சல் எத்தகையது? அமசோனில் [ Amazon ]வேண்டிய அவனது நூற்கள் எனது கைக்கு வந்து,நான் அதை முழுமையாக வாசிக்கும் வரை எனது கேள்விக்கு விடையில்லை.

நான் தற்போது Quantenmechanik கை விரித்துரைத்த Schrödinger வழி நிறைந்த முரண்பாட்டோடு அவரது பூனையாக [ Bei Schrödingers Katze handelt es sich um ein Gedankenexperiment  ] எனது அறைக்குள் மூழ்கிக் கிடக்கிறேன். என்றபோதும் , மிகவும் பெருமையோடு சாகித்யன் சுரேந்திராவின் சாதனையை உள்வாங்கக் காத்திருக்கிறேன்.

ப.வி.ஶ்ரீரங்கன்
வூப்பெற்றால்
29.08.2015

பிற்குறிப்பு : அவனது நூற்களை Amazon வழியாகப் பெற:

http://www.amazon.de/Ein-Sprung-durch-Raum-Zeit/dp/1502912031/ref=la_B00LYAWE7C_1_1?s=books&ie=UTF8&qid=1440882557&sr=1-1

http://www.amazon.de/Flug-747-Eine-atemberaubende-Entf%C3%BChrungsgeschichte/dp/1500453811/ref=pd_sim_14_1?ie=UTF8&refRID=0JZ5GY5562A5PSPAYG1F




Freitag, Juli 11, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்

தேசம் தொலைத்தோம்...


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.

என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!


நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.

கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crédit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.

"நகரம் பிதுக்கித் தள்ளுகிறது
தனக்கான அவதிகளினு}டு
என்னையும்

ஒரு செர்ரிப் பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள்..."

மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிதர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.

நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?

இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.

"நகரம் ஏற்றுக் கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்..."


எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.


நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.


ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.

"நீயொரு
மரம் நட முயல்கின்றாய்
எனக்குள்..."


இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?


இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?

"தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது."


நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.

தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!

இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.

"குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள்."

வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.

"87களில்
கொடுமிருளாய்த் துரத்திய
சம்பங்களில்
எனது பிராத்தனை
என்றுமே வளர்ந்துவிடக் கூடாது
என்பதாய் இருந்தது

இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம் பெய்தபடி
இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ...?"


மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?

மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.


(தொடரும்.)

ப.வி.ஸ்ரீரங்கன்
11.07.2008