Freitag, Mai 29, 2009

மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்...

வன்னியில் பசியால் வாடும் மக்களைக் காப்பதற்கு இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.



க்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர்.இவர்கள்,இப்போது புலிகளது "பூண்டோடான அழிப்புக்கு" ஆசிய மூலதனத்தோடு ஒத்திசைவாகிப் புலித் தலைமையை நயவஞ்சகத்தின் மூலஞ் சாகடித்த வெளியுலகப் புலிப் பெரும் பணக்காரர்களைக் காத்தபடி, தமது தவறுகளைப் "பெருந்தலைவரின் வீர மரணத்தில்"மறைத்துக்கொள்ள முனையும்போது,எல்லாமே முடிந்தபின் தமது தவறுகள் குறித்து ஒப்புதால் வாக்கு மூலம் தருகிறார்கள்.இவர்கள் இன்று கூறித் தவிக்கும் "தப்புகள்"குறித்து நாம் ஏலவே பலவருடங்களாகச் சொல்லி முடித்தாச்சு.இந்த நிலையில்,நாம் இவர்களிடமிருந்து இத்தகையதை எதிர்பார்த்துக் கிடக்கவில்லை!



மாறாகப் புலிகளது தோல்விகுறித்து மிகக் கராராகவும்,அறிவியல் ரீதியாகவும் ஆய்வுகளையே கோரிக்கொண்டோம்.புலிகளது இராணுவத் தலைமையை வழிநடாத்திய புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கமானது பிரபாகரனையே கொன்று, குவிக்கும் ஓரவஞ்சனையினூடாகத் தமது நலனை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் வெறுமனவே கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.இது, பெரும்பாலும் சமூக விரோதிகளுக்குடந்தையானவொரு சூழலை மீளவும் வற்புறுத்தி, புலம்பெயர் மக்களை மேலும் மொட்டையடிக்கும் இன்னொரு தொடர்ச்சிக்குக் காரணமாக முடியப்போகிறது.



"புலிகளுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கம்-ஆளும் வர்க்கம்"
என்று நாம் கூறியபோது,அது என்னவென்று கேலி பேசிய "புலிப்பொடியள்"இப்போது தலைவரது
படுகொலையை செய்வித்து,அதை மறைப்பவர்களது வீடுகளுக்குள் இதை இனங்காணலாம்.
இதைவிட்டு நாம் பேசவேண்டிய விடையத்துக்கு நேரடியாகச் செல்லுவோம்.


பிரபாகரனைப் படுகொலை செய்வித்த, புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கம்,இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, தமிழ்ச்சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.



இங்கேதாம் நமது மரபு ரீதியான புலி இயகக் அரசியல் புரிவானதின்
இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு
விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட
"எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக புலிகளது அழிவு அரசியல் பண்பாட்டுத்
தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு காரணத்தைக்
கற்பிக்கும்படியும்,மீளவும் "ஈழக் கனவு" காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது
நோக்கத்தையே திசை திருப்புகிறது.

கடந்தகாலத்தில் புலிகளது இராணுவத் தலைமைக்கான மையக்கனவுகள் இன்று தகர்ந்து நொருங்கியபின்,புலம்பெயர் தமிழ்மக்களது குருதியில் திரட்டப்பட்ட பெரும் மூலதனம் புலிகளது பினாமிகளிடம்,இலங்கைக்கு வெளியே உலாவரும் புலிப்பிரமுகர்களிடமும் முடங்கிப் போகிறது.

"தமிழருக்கு ஈழமே தாயகம்,போராட்டம் தொடரும்,தலைவர் வருவார்,நாங்கள் இன்னும் வீச்சாகப் புலிகளது கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"என்ற-இத்தகைய மனவிருப்புக்களால் புலிப் பிரமுகர்கள் தப்பித்து மக்களது செல்வத்தோடு கோடிஸ்வரர்களாகக் கும்மாளம் அடிக்கிறார்கள்.இவர்களே,பிரபாகரனைக் கொன்று குவிக்க இலங்கைக்கு-உலகத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்!

இதை எத்தனை பேர்கள் புரிந்துள்ளோம்?அல்லது, இன்றைய இளைய தலைமுறை இதைப் புரிந்துள்ளதா?







வன்னியில் அவதியுறும் மக்களுக்குக் காசு சேர்க்க முனையும் மனது புலிப்பினாமிகளிடம் குவிந்துள்ள செல்வத்தைக் குறித்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது?


இப்போது,இந்தத்தருணத்திலும் வன்னியில் இராணுவத் தடுப்பு முகாங்களுக்குள்
முடக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவதற்காக "புலியல்லாத மாற்றுக்
கருத்தாளர்கள்,புரட்சி பேசுபவர்களைக் காசு சேர்த்து வன்னியில்கொண்டுபோய்
கொடுக்கும்படி"கூச்சலிடும் புலிப்பொடிப்பசல்கள்-புலி அனுதாபிகள் இணையங்களில் ஒரு
வலம் வருகிறார்கள்.எங்கேயும் வன்னி மக்களுக்கு ஒரு நேரவுணக்கான கதையும்,அந்த
மக்களுக்கான இரங்கலுமாக இருக்கிறது.
தலைவர் உயிரோடு மக்களுக்குள் மறைந்திருந்தபோது அது(புலிகளால் செய்யப்பட்ட தடுப்பு யுத்தம்) மக்களது விடுதலைக்கான போராகவே இவர்களால் உரைக்கப்பட்ட நிலையில், தலைவரது படுகொலைக்குப் பின்னான காலத்தில் மக்களது ஒருநேரக்கஞ்சிக்கு வழிதேடுகின்றார்கள்,புலி அனுதாபிகள்.


இஃது நல்லதே.இது குறித்து எந்த விமர்சனமும் எமக்கு அவசியமில்லை!


ஆனால்,"காசு சேர்த்து-உணவுசேர்த்து" வன்னிக்குக் கப்பல்
அனுப்புவது,கொண்டுபோய்க் கொடுப்பதென்பதைக் குறித்துப் பேசுபவர்களால் இன்னொரு
முயற்சியும் நடந்தாகவேண்டும்.இது குறித்து இவர்களது புத்திக்கு இன்னும் உறைக்காத
விஷயம் ஒன்றுண்டு.அது குறித்து நாம் மிகவும் கவனமாகவே இருக்கின்றோம்."தமிழீழ
விடுதலை"ப் போர் செய்து, பல பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது
பெற்றோர்களையும்,முழுமொத்தத் தமிழர்களையும் நாசமாக்கியவர்களின் பின்னே, இன்னுமொரு
துரோகம் நிறைந்திருக்கிறது.உயிர்களைக் குடித்த "ஈழக் கனவு"தமிழ்பேசும் மக்களது
குருதியினால் குவிந்த செல்வங்களையும் குவித்துக் கொண்டுள்ளது.இதைத் தமதாக்கும்
முயற்சியில் தலைவரையே சாகடித்துவிட்டு மறைப்புக் கட்டுவதுதாம் இன்றைய கடைந்தெடுத்த
துரோகம்.

இத் துரோகத்தை மறைக்க"மார்க்சியம்,மார்புக் கச்சை,புரட்சி"எல்லாம் பொய்.வன்னி மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள்,இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுதாம் முக்கியம்"என்பதும் காணக்கூடிய எதிர்வாதந்தாம்.

முப்பது வருடமாகப் புலிகளது அம்பலப்படுத்தல்கள்போய், இப்போது தனி நபர்களது அம்பலப்படுத்தலால் இலங்கையில் தன்னைத் தகவமைக்கும் ஆசிய மூலதனம் மிரண்டுவிடப் போகிறது.பாருங்கள் இதுதாம் இன்றைய புலிகளது புதிய வார்ப்பு!


ஈராக்கில் நடந்த சதாம் அழிப்பில்,
மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் தனது மூலதனத்தை,நலத்தைப் பறிகொடுத்த
சீனா-இருஷ்சியா போன்ற நாடுகள், இலங்கையில் மேற்குலகத்துக்கு வால்பிடித்த புலிகளது
கதையை முடித்து மேற்குலகத்தைப் பழிவாங்கும் ஆசிய மூலதனமாக இலங்கையில் தகவமைக்கும்
அரசியலானது, பற்பல தொடர் நடவடிக்கைகளை முடுக்கிவிடப்போகிறது.இதன் தெரிவில் புலிகளை
முடித்துப் புதிய கதை வரைவுக்கு இன்னொரு முன்னோட்டம் மகிந்தா குடும்பமாகும்.

இது, இப்போது இப்படியிருக்க-நாம் மக்களைக் காக்கும் நிதி பற்றிச் சிந்திப்போம்!


இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து குடியேறிய மக்களை அச்சமூட்டிப் பெறப்பட்ட கப்பம்-நிதி என்ற போர்வையில் புலிப் பிரமுகர்களாகத் தம்மை உருவாக்கிய கயமைமிகு தமிழர்களிடம் குவிந்திருக்கிறது.இவர்கள் மக்களிடம் பெறப்பட்ட நிதிகளை அசையும்-அசையாச் சொத்துக்களாக மாற்றித் தமது உடமையாகக் குவித்துள்ளார்கள்.மக்கள் வன்னியில் ஒரு நேரவுணவுக்கு இரங்கும்போது,இவர்கள் தமது சொகுசான வாழ்வுக்காகப் புலம்பெயர்ந்த மக்களிடம் திரட்டிய நிதியோடு ஒடித்தப்பிவிடுவது நியாயமாகுமா?




இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...) டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!!

இப்பெரும் தொகையான செல்வம் இலங்கையிலுள்ள-வன்னியில் வதைபடும் மக்களுக்கு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவேண்டும்-அவர்களது பசிக்கு இவை உணவாக வேண்டும்.இதைத் தட்டிக்கேட்பதற்காகவும்,அச் செல்வங்களை மக்களுக்காகப் பயன்படுத்தும்படியும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொரு புலிப்பிரமுகர்களது வீட்டு வாசலையும் முற்றுகைப் போராட்டத்தின்மூலம் திறந்தாகவேண்டும்.


செய்வது யார்?


இன்றைக்குப் புலம்பெயர் தமிழ்மக்களது குழந்தைகள் வீதிக்கு வந்து போராட முனைகிறார்கள்.எமது மக்களுக்காக இலங்கை அரசபயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துப் புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளையே தட்டிக் கேட்டார்கள்.இது, வீரம் மிக்க செயல்.இத்தகைய இன்னொரு வீரம் மிக்க போராட்டமாகப் புலிகளது வெளியுலகப் பிரமுகர்களை முற்றுகையிடும் போராட்டம் வெடித்தாகவேண்டும்.


எமது இளையோர்களேதாம் இதையும் இப்போது நடாத்தியாகவேண்டும்.


தாமதமாகும் ஒவ்வொரு கணமும், மக்களிடமிருந்து திரட்டப்பட்ட
நிதிகளோடு கம்பி நீட்டிவிடும் கயவர்களாகப் புலிப் பிரமுகர்கள் மாறி
விடுவார்கள்.வன்னியில் வாழ்வாதார-அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் மக்களது
நல்வாழ்வுக்காகப் புலிகளிடம் திரண்டுபோய்க் கிடக்கும் அனைத்துச் செல்வங்களும்
மக்களுக்காகப் பயன்பட்டாகவேண்டும்.இது மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் யோசிக்கும்
விடையம்.


ஜெயலலிதாவின் தேர்தல் செலுவுக்காக கோபாலசாமி ஊடாக 500 கோடி நிதியளித்த புலிப் பினாமிகள், எமது மக்களது வயிற்றுப் பசிக்காகத் தம்மால் பயமுறுத்தித் திரட்டப்பட்ட மக்கள் பணத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்காகப் பயன்படுத்த நேர்மையோடு முன்வரவேண்டும்.ஆனால்,இந்த நேர்மையைப் புலிப்பினாமிகளிடமோ அல்லது புலிப் பிரமுகர்களிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது.இவர்கள் தமது சதியால் கொல்லப்பட்ட தமது தலைவருக்கே தண்ணிகாட்டியவர்கள்.இப்போது, வன்னியில் வதைபடும் மக்களுக்காக இரங்குவார்கள்?


ஆகவே,இளையோரே இலங்கைக்கு வெளியே புலிப்பிரமுகர்களாக வாழும் புலிகளைது இல்லங்களை முற்றுகையிடுங்கள்-முடிந்தால் அவர்களிடம் அனைத்துக் கணக்கு விபரங்களையும் பெறுங்கள்.இதை நீங்கள் வாழும் தேசங்களது சட்ட எல்லைக்குள் மிக இலகுவாக நீங்கள் செய்துவிட முடியும்.இத் தேசங்களது காவற்றுறையூடாக-இறைவரித் திணைக்கழகங்கட்கூடாகவும் இவற்றைச் செய்து முடிக்க முடியும்.மக்களது நல்வாழ்வுக்காகவே புலிகளிடம் முடங்கியுள்ள மக்களது நிதிகள் பயன்பட்டாகவேண்டும்.


இதைவிட்டுத் தனிநபர்கள் இவ்வளவு பெருந்தொகை பணத்தையும் கையாடித் தமது
குழந்தைகளுக்காகப் பயன்படுத்த முனைவது சமூகக் குற்றமாகும்.


வன்னி மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் பிச்சை எடுப்பது இப்போது இருக்கட்டும்!


புலிகளது வீடுகளை முற்றுகையிடுங்கள்.


திரட்டப்பட்ட நிதி,எங்கே,எவ்வகையில் மூலதனமாக மாற்றப்பட்டு இயங்குவதென்று துருவித் தேடுங்கள்.



அத்தகைய நிதியைக்கொண்டு நமது மக்களை வாழவைக்க முனையுங்கள்.


வீதிக்கிறங்கிப் போரிடும் இளையோரே!, இதுவும் உங்கள் கடமையே.


புலம் பெயர் தேசங்களில் ஒருவர் வேலை செய்து சம்பாதித்துச் செல்வத்தைத் திரட்டுவதென்பது குதிரைக்கொம்பாகும்.


தனக்குச் சொந்தமில்லாத, மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்,கார்களும் வைத்திருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்!


அவர்களிடம் உள்ள செல்வம் உங்களது பெற்றோர்கள் குருதி சிந்தி உழைத்த செல்வம்.விட்டுவிடாதீர்கள்.


அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும்.


மக்களது செல்வத்தையும் அது சூறையாட அனுமதிக்காதீர்கள்.


இவர்களிடமுள்ள அனைத்துச் செல்வமும் புலிகளது பெயரால் மக்களிடம் தட்டிப் பறித்தெடுக்கப்பட்டதென்பதை மறக்காதீர்கள்.இனி என்ன தயக்கம்?


போராட்டத்துக்கு துணையில்லையா?


அதை உங்களது பெற்றோர்களைக்கொண்டே நிறைவு செய்யுங்கள்.
ஊரார் பணத்தில் புலிகளது பினாமிகளும்,பிரமுகர்களும் இனியும் தின்று கொழுப்பதை அனுமதிக்காதீர்கள்!!!


அங்கே-வன்னியில் பசியால் வாடும் மக்களைக் காப்பதற்கு, இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.இதுவே இன்றைக்கு உங்கள் முன்னுள்ள அவசியமான பணி!-மறுக்காதீர்கள்-மறந்திடாது போராடப் புறப்பிடுங்கள்-புயலாக,உங்களைத் தடுக்க எவராலும் முடியாது.ஏனெனில், உங்களிடம் நியாயமும்,உண்மையும் இருக்கிறது.


வாய்மையை வெல்லும்!வழிதொடருங்கள்-வீதிகளில் தோழமையும் பெறுவீர்கள் இளையோரே!


ப.வி.ஸ்ரீரங்கன்
29.05.2009

Sonntag, Mai 03, 2009

உண்மைகளைக் கண்டடைவது குறித்து...

நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாகணும்.


நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால்,இது,எதன்பொருட்டுக் கையிலெடுப்பதென்பதை-சமுதாயத்தில் நிலவும் அமைப்புக்கு எதிரானதென்ற அர்த்தத்தில்-அது பயங்கரவாதமெனப் பூர்ச்சுவாச் சமுதாயத்தில் கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகிறது.நிலவும் ஒடுக்குமுறை அமைப்பை மாற்றும் சமுக முரண்பாடுகளின்வழி மேலெழும் அரசியல் அமுக்கமும் இத்தகைய நடாத்தையில் பயங்கரவாதமெனும்போது,பூர்ச்சுவா வர்க்கத்தின் பேரளவிலான ஜனநாயகத் தன்மையே வரையறுக்கப்பட்டு,மட்டுப்படுத்தப்படும் இன்றைய சூழலில், தமிழீழக் கோசங் குறித்து நீண்ட கேள்விகள் எழுகின்றன.இதன் வாயிலாக நாம் பெற்ற அரசியல் நிலை பற்றிப் பற்பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ள வரலாறு, பரிசீலனைக்கு உட்பட்டாகவேண்டும்.கோகர்ணன் இது குறித்துச் சிந்திக்கிறார்.நாம் மேலும் அதைத்தாண்டிச் செல்லவேண்டும்.


"தலைவர் வல்லவர்.

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்.

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்.

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்."

தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் "துரோகத்தின்"பெயரில் நடாத்தி முடித்தது.இத்தகையவொரு இனத்தின் சிந்தனையாளர்களில் ஒருவர் உண்மைகளைக் கண்டடைவது குறித்துத் தினக் குரலில் மறுபக்கம் வடிக்கிறார்.இதைக்கொண்டு மேலுஞ் சிலவற்றை நாம் பார்த்தாகவேண்டும்.


நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது.அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை"எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்"எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.


இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்"தமிழீழக் கோசம்"எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?


இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?


தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?



சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய "தமிழீழ"க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?


இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய "மாவீரர்கள்"பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?


இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?


இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.


மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் "தமிழீழத் தாயகம்" எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

இது குறித்து,தினக்குரலில் இன்று ஞாயிற்றுக் கிழமைக்கான மறுபக்கக் கட்டுரையைக் கோகர்ணன் எழுதுகிறார்.நாம் ஏமாற்றப்பட்ட போலிக் கோசங் குறித்து மிக விரிவாகச் சிந்திக்க வேண்டிய சூழலின் ஒரு பக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.


புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் புரட்சியாளர்கள் அன்றும்,இன்றும் கூறியுள்ளனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.


நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.இதற்குக் கோகர்ணன் சில தரவுகளைத் தருகிறார்.அதன் அடிப்படையிலாவது நாம் நம்மைக் கண்டடையவேண்டும்.இதுவே, அடுத்தகட்டத்துக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் அரசியல் விவேகத்துக்கான முதற்படி.இதை மறுத்தொதுக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம்,நமக்கே குழி வெட்டுகிறோம்!


அந்தவகையில் கோகர்ணனின் கட்டுரையை முழுமையாக உள்வாங்கி, நமது பொய் முகங்களைத் தொலைத்து உண்மைகளைக் கண்டடையவேண்டும்.


இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இது குறித்த ஆய்வுகள் அவசியம்.


இதன் வழி நாம் சிந்திப்போமா?

உண்மைகளைக் கண்டடைவோமா-போலித் "தமிழீழக் கோசத்தை"இலட்சம் மக்களைது சாவின்வழி புரிந்து கொள்ள நமது அகக் கதவைத் திறந்துகொள்வோமா?


கேள்விகள்.


இவையே எமக்கு அவசியமானது இப்போது.


உண்மைகளைக் கண்டடையக் கேள்விகளே அவசியம்.இதைக் கோகர்ணன் மிகவும் குறிப்புணர்த்துகிறார்.இப்படத்தைக் கிளிக் செய்து வாசித்துத்தாம் பாருங்களேன்.





ப.வி.ஸ்ரீரங்கன்.
03.05.09

மே தினவூர்வலத்தில்...

"ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
அப்போது,
என் தடத்தில் இன்னொரு உலகம் இருப்பதையும் நீ அறிவாய்,
இழந்ததை நீ மீட்க
உனக்கென்றொரு உறவும் இருக்கக் காண்பாய்.
அது,உலகெல்லாம் விரிந்து மேவுவதையும் நீ உணர்வாய்!"



இலங்கைப் பாசிச அரசினது தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்திய ஒரு ஊர்வலமாகவே இவ்வருடத்துக்கான ஊர்வலம் மையங்கொண்டது.சிங்கள இனவாத அரசை அம்பலப்படுத்துவதோடு, பல்வேறு முற்போக்கு அமைப்புகளோடு விவாதமும்,விளக்கம் எம்மால் அளிக்கப்பட்டது.

இலங்கையில் சமாதானமாக வாழ்வதற்கும்,தமது வாழ்வை அடிமைத் தளையறுத்த அரசியலுடாகத் துய்ப்பதற்குமான அனைத்து உரிமையும் உடையவர் நாம் என முழங்குவதிலும் நாம் வெற்றியடைந்துள்ளோம்.சில அமைப்புகளோடு தொடர்பாடல் இருக்கின்றதெனினும்,இன்றையவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகளோடு,மக்கள் சமுதாயங்களோடு எமது அவல நிலை குறித்து உரையாடத்தக்கதாகவே நாம் கவனத்தைக்கொண்டோம்.


விவாதத்தில் பரவலாகப் புலிகளது பிற்போக்குத்தனமான நடாத்தைகளை அவர்கள் எம்மைவிட நன்றாகவே அறிந்திருப்பது அறியத்தக்கதாகவே இருக்கிறது.குறிப்பாக குர்த்தீஸ் மக்களிலிருந்து,இத்தாலிய மற்றும் கிரோக்க மக்களும் மிக நேர்த்தியாகப் புலிகளது அரசியல் பாத்திரத்தை விளக்கினார்கள்.ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சியான எம்.எல்.பீ.டி. புலிகளது பாத்திரத்தை விவாதித்துக்கொண்டு,இன்றைய எமது நிலைக்காகத் தமது கோசங்களோடு நமது மக்களுக்குச் சார்பான-யுத்தத்துக்கு எதிரான கோசங்களையும் இணைத்தார்கள்,எமது குரலூடாகவும் யுத்தத்துக்கு எதிரான குரல் வெகுஜன மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தமிழ்பேசும் மக்களது இதுநாள் வரையான அழிப்பு யுத்தத்துக்கெதிரான ஆர்ப்பாட்டவூர்வலங்கள் ஜேர்மனிய ஊடகளால்மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கவனிப்புக்குள்ளாகிறது.


இதன் முழு உழைப்பும் இன்றைய இளைய தலைமுறைக்கே போய்ச் சேர்ந்தாகவேண்டும்.


மிகவும் அளப்பெரிய உறுதியோடு அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.ஆனால்,இவர்களது குரல் முற்போக்கு அமைப்புகளிடம் இன்று எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாகவேதாம் தொழிற்சங்கத் தலைவர்கள் முதல் அமைப்புகள்வரை எமக்காவும் தமது உரையில் குறிப்புணர்த்திச் செல்லுந் தருணம் உருவாகிறது.


எத்தனை ஊர்வலங்களையும் நடாத்திமுடிக்கலாம்.


எனினும்,அவை சரியான தெரிவோடு முற்போக்கான அமைப்புகளின் துணையோடு முன்னெடுக்கப்படும் பட்சத்தில்,அதன் தாக்கம் பரவலாகிறது.ஜேர்மனிய நகரமான டுசுல்டோர்ப்பில்(Düsseldorf)மே,1. நடைபெற்ற மேதினவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகள்,தொழிற்சங்கங்கள்-கட்சிகளெனக்கூடிய ஊர்வலச் சூழலில் தமிழ்பேசும் மக்களும் புலிகளது பதாதைகளின்பின்னே அணி திரண்டனர்.


புலிக்கொடியும்,தேசியத்தலைவர் பிரபாகரனென எழுதப்பட்ட அவரது நிழற்படங்களும் கைகளில் ஏந்திக்கொண்ட நமது மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தது முற்போக்கு அமைப்புகளுடன் விவாதங்கள் செய்து,நம் மக்கள்மீதான இனவழிப்புக்கெதிரான குரல்களை முற்போக்கு அமைப்புகளோடு இணைப்பதற்கு.பெரியவர்கள் எல்லோருமே தமக்குள் முடங்கிக்கிடந்தபடி,குழந்கைள் மூலமாக நோட்டீசுகளை அவர்களிடம் வழங்கியதைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.நாம்,எம்மால் முடிந்தவரை அமைப்புகளோடு விவாதித்து,அவர்களது ஒலிபெருக்கியில்(Verschiedene Beiträge gingen über das offene Mikro der MLPD bei der Demo: die Mobilisierung zur Demonstration am 16.5. nach Berlin; die Schaffung einer internationalen Arbeitereinheit bis hin zu Protesten gegen den Völkermord in Sri Lanka an den Tamilen. )எமது குரலையும் இணைப்பதற்கு வழிகள் செய்தோம்-விவாதித்தோம்,ஒலிபரப்புஞ் செய்தோம்.இளையோர் அமைப்புகள் பெயரில் புலிகள் போட்ட துண்டுப் பிரசுரங்களையும் இளைஞர்களிடமிருந்துவேண்டி, முற்போக்கு அமைப்புகளிடம் கொடுத்து எமது அவலத்தைப் பகிர்ந்து விவாதத்தை ஆரம்பித்தோம்.


மேதினத்துக்கான இந்த நிகழ்வகளின் பின்னே பாரிய மக்கட்டொகைக்குள் எமது மக்களின் அவலம் குறித்து,டி.ஜீ.பி.(D.G.B)தொழிற்சங்கத்தினது மாநில தொழிற்சங்கத் தலைவர் கிளவுஸ் றொய்ரர்(Klaus Reuter) எமது மக்களது அவல நிலையும்,அதற்காக ஜேர்மனியில் வாழும் தமிழ்பேசும் மக்களது இடைவிடாத ஆர்பாட்வூர்வலம்-உண்ணாவிரதம்,மாநில சட்டமன்றங்களுக்கு முன்னால் இரவுபகல்பார்க்காத அவர்களது ஆர்பாட்டங்கள் குறித்து நீண்டவொரு கவனத்தைக் குவித்த கருத்துக்களைச் சொன்னார்.ஜேர்மனிய அரசு ஐரோப்பியக் கூட்டமைப்போடு ஆலோசித்து இப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து-யுத்த நிறுத்தங்குறித்து அழுத்தங்கொடுக்கத் தாம் உதுவுவதாகவுஞ் சொன்னார்.அவர் செய்கிறாரோ இல்லையோ ஆனால்,அவரது குரலின் மூலம் நமது மக்கள்மீதான இலங்கை அரசினது இனவழிப்பு அரசியல் பலமாக அம்பலப்பட்டு அங்கிருந்த பற்பல அமைப்புகளும் தமது ஆதரவைத் தமிழ்பேசும் மக்களுக்காகத் தெரிவித்தனர் என்பது பாரிய வெற்றி.




எம் குழந்தைகளது மிகத் துணிந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே-முன்னே புலிகள் இருப்பினும் இளைஞர்களது மிகவும் போற்றப்படவேண்டிய மனவலிமையே இதன் சாதகமான வெகுனத் தன்மைக்குக் காரணமாகும்.அவர்கள் சரியான வழிகாட்டலின்றிப் புலிகளால் நடாத்தப்படுகிறார்கள்.அவர்களுக்கு முற்போக்கு அமைப்புகள் குறித்த சரியான தெரிவில்லை.போராட்டத்தின் வெற்றிகள் சரியான பாதைகளின்வழி வெற்றியை அடைகின்றன.இதைப் புரிவதற்கு நம்மை முன்நகர்த்திப் பின்னால் இருப்பவர்களைச் சரியாக விளங்கிக்கொண்டாக வேண்டும்.அவர்கள் தமது பழையபாணி அரசியல் நடாத்தைகளையே மீளவும் கடைப்பிடிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.இதிலிருந்து அவர்கள் மீளவும் முடியாது.இந்த அரசியல் நடாத்தைகளைத் தீர்மானிக்கும் வர்க்க நலன் தமிழ் மேட்டுக்குடிகளின்-அவர்களது மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதைக்கடந்தவொரு ஆர்ப்பாட்டவூர்வலங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை என்பதற்கு,அவர்கள் முற்போக்குச் சக்திகளை நெருங்க மறுத்துக்கிடந்தபோது நாம் மிகத் தெளிவாகவே இதை உணர்கிறோம்.எமது பகிரங்கமான குரலை முற்போக்குச் சக்திகளிடமிருந்து கேட்டதன் பின்னே இளைஞர்கள் மூலம் துண்டுப் பிரசுரங்களை மட்டும் முற்போக்குச் சக்திகளின் கைகளில் திணித்தார்கள் இளைஞர்கள்.


நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!


இன்றைய நிலையில்,
வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில்
வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது!


தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்த புலிகள்வழித் "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்தவெழிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.

இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற புலம்பெயர் இளைஞர் சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.


இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, முற்போக்குச் சக்திகள் நித்திரை செய்வதாகப் புலுடாவிடும் ஒரு கூட்டத்துக்கு எத்தனை முற்போக்குப் போராளிகளை,ஸ்தாபன ஆற்றலுடைய அறிவாளிகளைப்-போராளிகளை அவர்களது அமைப்புகளைப் புலிகளும் இந்திய ரோவுஞ் சேர்ந்து வேட்டையாடினார்கள் என்பது கணக்கிற்குவராத கள்ளப் பணமாகவே மறைக்கப்படுகிறது என்பது பற்றி அக்கறையில்லை!இலங்கையில் சிங்கள அரசானது தனது வர்க்க நலனுக்கிசைவாக எத்தனை ஆயிரம் சிங்கள முற்போக்குச் சிந்தனையாளர்களை கொன்று களனியாற்றில் போட்டதென்பதும் வரலாற்றில் மறைக்கப்படுகிறது.

இதையெல்லாம் மறைத்தபடி "செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது நித்திரை கொண்டதனாற்றாம்"புலிகள் போராட்டத்தைக் கையகப்படுத்தியாதாகக் கள்ளர்கள் கதைவிடுவது யாரைக் காப்பதற்கு?இதையெல்லாம் புலம் பெயர் இளைஞர்கள் புரிந்துகொள்ளும்போது நிச்சியம் அதிகாரவர்க்கத்தின் ஆணவம் சிதையும்.இதை நாம் வரலாற்றுக்குமுன் எழுதி வைப்போம்.


இப்போது,இலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதென்பது உண்மை.என்றபோதும்,அதன் இன்றைய கொடூரமான இராணுவவாத அரச தன்மையை இதுவரை எவரும் கேள்விக்குட்படுத்தவில்லை.இலங்கை அரசிடம் மன்றாடுவது என்றவரையே மேற்குலகங்களின் அரசியல் போக்கு நிலவுவதென்பது அவர்களது பொருளாதார வியூகங்களது போக்கிலிருந்தே உருவாகிறது.இதுதாம் வர்க்க நலன்.இதைமீறி அவர்களாற் செயற்பட முடியாது.எனவே,இதைத்தவிர்த்து நாம் முற்போக்குச் சக்திகளை நாடி அரசியல் உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.இந்த "முற்போக்குச் சக்திகள் யாரூ"என்றுகூட இந்தப் புலுடாக் கோஷ்டி கேட்டாலும் கேட்கும்.ஏனெனில்,இவர்களே எமது மக்களைக் கொல்லும் அரசியலுக்கு வலுச் சேர்த்தவர்கள்.இதன் அழிவு அரசியலை வெறும் வார்த்தைகளால் தட்டிக்கழித்துவிட்டு மீளவும்"தமீழீழஞ்"சொல்லித் திரிகிறார்களே,இவர்களை இனிமேலும் நம்பினால் அவர்களில் சிலர் பெருமூலதனவாதிகளாக மாறமுடியுமேயொழிய மக்கள் விடுதலையடைய முடியாது.இதைப் பரிவதற்கு நமக்குத் தமிழீழக் கனவு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?அப்படியானால் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள், கடந்த கால் நூற்றாண்டுப் புலிகளது போராட்டத்தில் "நாம் பெற்றுது என்ன-இழந்தது என்ன?"என்பது குறித்து.


இத்தோடு இதையும் பாருங்கள்,மேற்குலக அரசுகளைக் கடந்து,முற்போக்கு அமைப்புகளிடமும்,அவர்களின் ஊடகங்களிலும் பரவலாக எமது பிரச்சனை-அவலம் மற்றும் இலங்கையினது இனவழிப்பு அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் பதியப்படுகிறது.வாரத்தில் நான்கு கட்டரைகளையாவது ஜேர்மனிய இடதுசாரிய இதழான யுங்கவேர்ல்ட் எழுதுகிறது.அது,எழுதுவதோடு நிறுத்தாமல் அரசியல் மட்டத்தில்,பல்கலைக்கழகமட்டத்திலும் எமது பிரச்சனைகளைக் கவனப்படுத்துகிறது.இது,முற்போக்குச் சக்திகளது பணியிலிருந்தே தொடர்கிறது.இளைஞவர்கள் ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.அதாவது, உலகு தழுவிய சமாதானத்துக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவுசார் மட்டங்கள்-பல்கலைக்கழகங்கள்கூட முற்போக்குச் சிந்தனைவழி சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரைகளையேதாம் தமது ஆய்வுக்குப் பெரும்பாலும் பயன் படுத்துகின்றன.இதை இங்கே சென்று பாருங்கள்.இத்தகைய தருணத்தில்தாம் வர்க்க அரசியலைக் கேள்விக்குட்படுத்திப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தையும் அதன் வர்க்கத் தளத்தையும் புரிந்தாகவேண்டும்.


வரலாற்றில் வெற்றியடைந்த புரட்சிகள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்கள்தாம்.ஒடுக்கும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கமான உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையில் நடாத்தப்படும் யுத்தம்தாம் இவைகள்!


ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களைவிட(இங்கே,இவற்றை இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகளது ஊடகத்தலைவர் தயா மாஸ்டர் வாயிலாக அறியமுடியும்.அவர் கூறுவதற்கு முன்பே தமிழ்பேசும் மக்கள் அறிவார்கள்.எனினும்,தமக்கு ஆபத்து வரும்போது ஒடுக்குமுறையாளர்களும் சில வேளை உண்மைகளைச் சொல்லித் தமது தவறுகளை இன்னொருவனிடம் சுமையாக்குவது வழமை.தயாவும் அதையே செய்கிறார்).


உழைப்பவர்களே!,
இனம்,மொழி,மதங்கடந்து ஒன்றுபடுவதில்
நீங்கள் இழப்பது என்ன?இவைகளைக் கட்டிப்பிடித்துக்
கிடக்கும்போது பெற்றவைகள் என்ன?


சிந்திக்க வேண்டும்!


இந்தியத் தேசியம் பேசும் மேட்டுக்குடிகளுக்கு
தேசத்தின் வீதியோரத்தில் பழையபேப்பர் பொறுக்கி
வயிறு வளர்ப்பவர் பற்றி அக்கறையில்லை,
நடுவீதியில் அநாதையாக வான்பார்த்துறுங்கும் மாடுகளுக்கும்
இந்த மனிதர்க்கும் வித்தியாசம் அவர்களிடம் இல்லை.
எனினும்,
நாம் இந்தியர்கள் என்பதனூடாக
இவர்களை மலம் அள்ளுவதற்காகவது பயன்படுத்த முடியுமாவென
அவர்கள் தமது கழிவுகளை உழைப்பவர்கள்மீது கொட்டுகிறார்கள்!


ஆம்,
நாம் கடக்கவேண்டிய தூரம் மிக நீண்டது.



ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2009

Freitag, Mai 01, 2009

தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது ...

>>>சிறிரங்கன்!புலிகளை விட்டுவிடுங்கள். இலங்கையில் 1948 முதல் 2008 வரையில் தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது என்ன? புலிகள் சரிவரப் பலம் கொண்டது 1985க்குப்பின்னரே. அதற்கு முன்னர் இலங்கை மக்களிடம் இந்த தெளிவினைப் புரிய வைக்காதது யார் தவறு? ஏன் புரிய வைக்க முடியவில்லை?<<<

- மலைநாடான்



பெரும்பாலும் ஈழத்தமிழ் மக்கள்தம் சமூக அறிவு மிக மட்டரமாக இருப்பதற்கான திசை வழியில் சென்ற புலிகளது போராட்டச் செல்நெறி,இன்று எமது எமக்களது தலையில் மீளவும் மிளகாய் அரைப்பதான கேள்வியோடு திரு.மலைநாடன் மேலே "புலிகளை விட்டுவிடுங்கள்" என்று முற்போக்குச் சக்திகளது சாதனைகளைக் கேட்கிறார்.

நல்லது மலைநாடான்.

கேள்விகள் அவசியமானது.

அறிவினது முதற்கட்டம்-ஆரம்பமே அதன் சாத்தியத்தால் எழுந்தது-இல்லையா?

ஆக-நாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்!

அச்சமில்லை-நிச்சியம் வெல்வோம்!!

இனிமுதற்கொண்டு, இக் கேள்விகளைப் புலிகள்மீதும் கேட்டாக வேண்டும்.ஆனால்,மிக வசதியாகப் "புலிகளை விட்டுவிடுவோம்"எனும் சந்தர்ப்பவாதமே மீளவும் நம்மை நடாற்றிலிருந்து காப்பதற்கான வழிகளை அடைக்கிறது.இதுதாம் ஆபத்தின் அறி குறி.

மலைநாடன்,கொஞ்சம் கவனமாகச் சிலவற்றைக் கேட்போமா?

மனித சமுதயத்தில் ஒரு நடாத்தை எங்ஙனம்"சரி-பிழை"எனக் கணிக்கப்படுகிறது?

அக்கணிப்பினது தர்க்கம் அநுபவவழியினது தேர்விலேதாம் கருக்கொள்கிறதா?
"தேன் இனிப்பா?-அப்போது இனிப்பெல்லாம் தேனாக இருக்கணுமே?-அங்ஙனம் ஏன் ஆவதில்லை?"

இதை- புலிகள் விடுதலைப் படையென்றால்-விடுதலைப்படைகள் எல்லாம் புலியாகுமா?-இல்லை அல்லவா?ஆனால்,புலிகளுக்கு விடுதலைப்படைகளெல்லாம் புலிகளாகத்தாம் இருக்க வேண்டுமாம்.எனவே,தம்மை அல்லாத அனைத்தும் துரோகம் என்று துப்பாக்கி மொழியில் நமது மக்களுக்குப் பாடஞ் சொன்னார்கள்.அந்த வழியில் நீங்களும் செல்லாது இப்போது முற்போக்குச் சக்திகள் என்று ஒன்றிருப்பதாகவும்,அதன் சாதனைகளை அறிவதில் ஆவலாக இருப்பதும் உங்களது கேள்வியினதுவழி அறியத்தக்கதில் மகிழ்ச்சியே!

இப்போது,புலிகளை எங்ஙனம் விட்டுவிடவேண்டும்?அவர்கள் தொகையாகச் சேர்த்த நிதிகளோடு பெரும் கோடிஸ்வரர்களாக மேற்குலத்தில் வியாபாரந் தொடங்கித் தமிழீழம் மேலுஞ் சொல்லவா?


தமிழீழப் போராட்டத்தில் இலட்சம் மக்களை அழித்தவொரு திசைவழியை கேள்விக்குட்படுத்தாது விட்டுவிட்டு,முற்போக்குச் சக்திகளது சாதனையை அறிவதில் அவசரப்படுவதன் புள்ளி என்னைத்தைச் சொல்ல முனைகிறதென்பதைத் தீர்மானகரமான முற்போக்குச் சக்திகள் குறித்த பார்வையினூடாக மலைநாடன் வழியாக நம்மை எதிர்கொள்ளும் பொதுப் புத்தியைப் புரட்டிப்போடுவது அவசியம்தாம்.தொடர்வோம்.


முதலில் முற்போக்குச் சக்திகள் தமிழீழம் கேட்க வில்லை.

ஏன்?

அது அதிகார வர்க்கங்களது அபிலாசை.

அதிகாரப் பங்கீட்டுக்கான அழிவு அரசியலென்பதை வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலை அடிப்படையாகக்கொண்ட சிந்தனையின்-சித்தாந்தத்தின் வழி, இக் கோரிக்கை(தமிழீழம்)பரந்தபட்ட தமிழ் மக்களுக்கானது அல்ல என்பதும்,அது அவர்களை ஒடுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மாறாகத் தமிழ் பேசுகிற இன்னொரு ஒடுக்குமுறை வர்க்கத்தினது கோரிக்கையானதென்பதும்,இதனூடாகத் தமிழ்ச் சமுதாயம் இன்று வந்தடையும் நிலையை ஏலவே கணித்ததன்வழி புலிப்பாணி தமிழீழப் போராட்டஞ் செய்யவில்லை!-இது சாதனையே!

இதுவொரு மகத்தான சாதானை!
ஏனெனில்-
1):முற்போக்குச் சக்திகள் என்ற முற்போக்குச் சிந்தனை இலட்சம் மக்களைக் கொல்லவில்லை.

2):தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலப்பரப்புகளிலிருந்து அனைத்தையும் இழந்து(...)அகதிகளாக்கப்படவில்லை.

இது,ஒரு வரலாற்றுச் சாதனை.

ஆனால்,இந்த முற்போக்குச் சக்திகளை தமிழீழம் கேட்ட தமிழ் ஆளும் வர்க்கம் தமது எஜமானர்களோடிணைந்து புலிகளெனும் ஒரு அடியாட்படையைக் கட்டி,அதன் துணையோடு தேடித் தேடி அழிக்கின்றார்கள்.வரலாற்றுக் கணிப்பின்படி 1985 ஐக் கடந்து 1948 என்று மலைநாடன் சுட்டியதை அண்மித்தால் இலங்கையினது வர்க்கச் சமுதாயத்தில் மிக முற்போக்கான பணிகளை என்.சண்முகதாசன் என்ற சண் தலைமையில் தாழ்தப்பட்ட தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகிறது.

இலங்கையின் ஆளும் வர்க்கம்,தனது வர்க்க நலனின் அடிப்படையில் முற்போக்குச் சக்திகளை பல பத்தாயிரக்கணக்காக இருதடைவைகள் இராணுவ முன்னெடுப்புகளின்வழி அழிக்கிறது.இலங்கை ஆளும் வர்க்கத்தின் தேர்வுக்கு இந்திய ஆளும் வர்க்கமும் துணையாகியதும் வரலாறு.

இதை விளக்குவது அவசியமில்லை.

முதலாளிய வர்க்கத்திடம் வந்து சேர்ந்து உற்பத்திச் சக்திகளை அது மிக நேர்த்தியாகக் காப்பதற்கும் அதனூடான அனைத்து உறவுகளையும் அது தனது கண்காணிப்பின் கீழ் கொணர்கிறது.முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்பது இன்றைய பொருளாதார அடிப்படையாக இருப்பதால் அதைக் காப்பதற்காக,மேல்மட்டப் பாதுகாப்புக் கவசம் தேவையாகிறது.

அந்த அத்திவாரத்தின்மீது கட்டப்பட்ட சுவருகள்,கூரை என்பவையாகப் பாதுகாக்க வருகிறது கருத்தியல் கட்டுமானங்கள்.

இதுள், வன்முறை சார்ந்து நீதிமன்றத்தின் தலைமையில் இராணுவ-பொலிஸ் ஜந்திரங்கள் நிறுவப்பட்டுச் சிறைச்சாலைகள் உருவாகிறது.

வன்முறையற்ற கருத்தியலது பாத்திரத்தில் நாம் கற்கக் கல்வியும் முதலாளியத்தின் மேன்மை சொல்ல, மெல்லப்"பலனை எதிர்பார்க்காது கடமையைச் செய்"என மதங்களும் வந்துவிடுகிறது.

அது, "முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பு அவஸ்த்தையென" முதலாளிகளால் ஓடுக்குமுறைக்குள்ளாகும் மக்களைப்பார்த்துச் சொல்லியபடி, முதலாளிகள் நலமாக வாழ்வதை-அவர்கள் "முற்பிறப்பில் செய்த நன்மை" எனவும் கூற வன்முறையில்லாமலும் நமது மூளையை முதலாளிகளுக்குத் தார வார்த்த இந்த வர்க்கச் சமுதாயத்தில், பற்பல முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய பணி முற்போக்குச் சக்திகளுக்கு இருக்க,அவர்களும் அதைச் செய்துவரும்போது இடையினில் வருகிறது இன்னொரு பூதம் புலிவடிவில்-இலங்கை மக்கள் மத்தியில்-அதாவது உழைப்பவர் மத்தியில் என்று கொள்வதில் சிரமம் இல்லைத்தானே?

இந்தப் பூதம்...

மலைநாடன் இதைத் தொடர்கட்டுரையாக எழுதிக்கொள்வோம்,இப்போது நித்திரைக்குப் போவோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2009

Mittwoch, April 29, 2009

ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!

இனிமேற்றாம் நாம் மேற்குலகத்துக்காக ஆங்கிலத்தில்...


சொந்த மக்களது ஜனநாயக உரிமையை மறுத்த அராஜகவாதப் புலிகள் தமது அழிவோடு மக்கள் விடுதலைப் போராட்டத்தையே தவறாகப் புரிவதற்கான முறைமைகளையுஞ் செய்தபடியே மரித்துப் போகிறார்கள்.அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்கிய தமிழ் ஆளும் வர்க்கம், தமிழ்பேசும் மொத்த மக்களையும் புலிகளைவைத்து மொட்டையடித்த ஈழத்து அரசியல் வரலாற்றில் இனியும் அதே தோரணத்தில் இன்னொரு துடைப்பம்...


ஈழத்தமிழர்களுக்காக-அவர்களது இன்றைய இழி நிலைக்காக இனிமேற்றாம் ஆங்கிலத்தில் எழுதி,மேற்குலகத்தை-அந்தத் தேசத்து மக்களை அணுகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.மிகப் பெரும் பாசிசப் புலி இயக்கம்-பெரும் வலைப் பின்னலுடன்கூடிய சர்வ வல்லமையுடைய புலி இயக்கம் தன்னால் சரிவரச் செய்யமுடியாத அரசியலைச் சில தனிநபர்களால் ஈடேற்றிவிட முடியுமெனும் தனிநபர் முனைப்புகள், உலக ஏகாதிபத்தியங்களிடம் எமது பிரச்சனை குறித்துக் குறிப்புணர்த்த முனைகிறார்களாம்.ஏனெனில், இந்த மேற்குலகத்தினது -நமது அவலம் தெரியாத-அவர்களது இருண்ட நிலைக்கு இவர்கள் இயம்புவது ஒளிக்கற்றைகளாம்!

"மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்-தேசியத் தலைவர்",பன்னாடைகளெல்லம் பண்ணிய போராட்டத்தின் இன்றைய நிலைக்கு, இனித்தாம் சரியான செல் நெறி வழங்கப் போகிறார்களாம். உலக அரசியல் அரங்கில் முற்போக்குச் சக்திகளைக் கேவலமாகக் கருதிய புலிப் பாசிஸ்டுக்கள் இன்று, புதிய கதையோடு தமது தப்பை மற்றவர்களைத் துரோகியாக்கி அவர்களது தலையில் கொட்டித் தப்பிக்கின்றனர்.இந்த இலட்சணத்தில் இனிமேலும் மேற்குலக எஜமான்கள் மூலமாகத் தமிழருக்குத் தீர்வு தேடும் மகாப் பெரிய மூளைகள், "தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகனின் வழி காட்டலில் கூஜாத் தூக்கியே தீரவேண்டுமாம்.இதை ஆங்கிலத்தில்,பிரஞ்சில்,டொச்சில்,இன்னுமேன் ஸ்பானிஸ் வரை மொழிமாற்றிச் சொல்லணுமாம்.


அதாவது:"எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன்,எங்கள் தாகம் தமிழீழம்" என்றாம்!


கேவலம்!


இன்றைய உலகத்தில் தேசியவிடுதலைப் போராட்டங்கள் குறித்துச் சரியான பார்வையற்ற"படிப்பாளிகள்" மேற்குலக ஏகாதிபத்தியங்கள் முதல் ஜெயலலிதாவரை எமது பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி ,விண்ணப்பிக்கின்றார்கள்.இவர்கள்,கடந்த கால் நூற்றாண்டாக நாம் செய்த போராட்டத்தில் புலிகளது கொடியதும்,ஈனத்தனமுமான அரசியலை வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது,இன்றைய அழிவு அரசியலுக்காக மேற்குலகத்திடம் ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!







முதலில், இலங்கையினது பிரச்சனையை அந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க முனையுங்கள்!


"உங்கள் பிரச்சனை" பாராளுமன்றத்துக்குள் இல்லை-அது,வெளியிலேதாம் இருக்கிறதென்பதைச் சொல்லிக் கொடுங்கள்.அதன்பிறகு அவ் மக்களை நம்பி, அவர்களையே போராட அணித்திரட்டிக் கொள்ளும்போது அங்கே, நாம் எவரைச் சார்ந்தியங்கவேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பர்.


எமது மக்களுக்கு அந்நிய உலகத் தூதர்களுடாகப் புனைந்த "தமிழீழம்", இனி அவசியமல்லை!


அவர்களுக்குத் தெரியும் தமது விலங்கை ஒடிப்பதற்கான தெரிவைச் செய்ய.புலிகள் அதை மிக இலகுவாகச் சொல்லியபடியேதாம் மரணித்துப் போகிறார்கள்-சரணடைகிறார்கள்-சங்கதிகளைச் சிங்கள முகாமிலிருந்து இப்போது சொல்லவும் முனைகிறார்கள்.


ஈழத்தவன் ஏதோ உரிச்ச வெங்காயமென்று எண்ணியபடி ஜெயலலிதா முதல் இணைய அநுதாபிகள்வரை எமது மக்களது பிரச்சனைக்காக ஈழம்-மேற்குலகமெனக் கருத்தாடுகிறார்கள்.இதையேதாம், பாசிசப் புலிகளும் அன்றுமுதல் சொல்லி, இன்று அழிந்து சுடுகாட்டில் ஈழத்தைக் கொண்டுபோய்விட்டுள்ளார்கள்.இதை மீளவும் அதே கதையோடு தொடங்குவதற்கு நீங்கள் எல்லோரும் எதற்கு?



மக்களது பிரச்சனையின் மூல காரணி என்ன?



அதன் வேர் எங்கு வரையும் ஓடுகிறது?



இன்றைய-அன்றைய மேற்குலகமும், தேசிய விடுதலைப் போராட்டங்களை இங்ஙனமே தத்தமது நலனுக்காகக் கையாளுவதில் உலகத்தில் பற்பல இனக் குழுக்களை வேட்டையாடித் தமது வருவாய்கேற்ற உலகைத் தயார்ப்படுத்துகின்றன!இதன் பாத்திரத்தில் இலங்கை அரசால் அழிவுறும் ஈழத் தமிழருக்காக மேற்குலகம் எந்த மயிரையும் புடுங்காது!


இத்தகைய புடுங்கலை அவர்களால் செய்யமுடியாதென்பதுற்கு குர்தீஸ் இன மக்களது விடுதலைப் போராட்டத்தைக் குறித்த பார்வைகள் தெளிவுப்படுத்தும்.இதே மேற்குலகப் பொருளாதார நலன்களுக்காகக் குர்தீஸ் மக்கள், அவர்களது காற்பந்தாகக் கிடந்து உதை வேண்டுவதை எந்த அளவு கோலுக்குள் திணிக்க முடியும்?


அயர்லாந்துப் பிரச்சனையில் இலண்டனது நிலைப்பாடென்ன?இதற்குள் ஒளிந்திருக்கும் நலன்கள் என்ன?



பாஸ்கன் குடியரசுப் போராட்டத்தில் ஸ்பெயினின் நிலை என்ன?



பெல்ஜியத்தின் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாடு எங்ஙனம் ஐரோப்பிய யூனியனுக்குள் அணுகப்படுகிறது?



இந்தியாவின் காஸ்மீரி மக்களது போராட்டத்தையும்,நாகலாந்து மக்களது போராட்டத்தையும் இந்தியாவும் ,உலக நாடுகளும் எவ் வகைக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன?


திபேத்தை எந்தத் தளத்தில் சீனாவின் முன் நிறுத்துகின்றன?திபேத்துக்காகச் சொல்லமலே ஊதிப்பெருக்கிப் புனைந்த மேற்குலக அரசுகள் ஆயிரக்கணக்காக அழியும் தமிழனைக் கண்டும் காணாதிருப்பதற்கு அவர்களுக்கு இலங்கை அரசினது அடக்குமுறைபற்றி போதிய அறிவு இல்லாத காரணமா இன்றைய எமது நிலைக்குக் காரணம்?



ஒன்றுபட்ட கனடாவுக்குள் மொன்றியால் மாநிலத்தின் கோரிக்கைகளை முன் தள்ளும் வர்க்கத்தின் நோக்கம் என்ன?



சுவிஸ்சர்லாந்துக்குள் கன்டோன் முறை ஆட்சியமைக்குள் கிட்டி விளையாடும் பல்லின மக்களது பொருளாதாரக் கண்ணோட்டம் எத்தகையது?அவர்களது பிரத்தியேகமான அரசியல் கோரிக்கை என்ன?


இவை எல்லாவற்றையும்விட ஈழத்துப் பிரச்சனைக்கு, இத்தகைய தேசங்கள்(மேற்குலக) எந்த நிலையில் இலங்கையை அணுகுகிறார்கள் என்றாவது
கேள்விகளைத் தொடுத்தோமா?




அங்ஙனம் இன்றி,மேற்குலகத்தவர்களால் நாம் அரவணைக்கப்பட்டு,மிக நேர்த்தியாக நடாத்தப்படுவோம் என்ற பாணியில் எழுதுவது அப்பாவி மக்களை ஏமாற்றுவதாகும்.


ஜோர்ச்சியாவுக்குள் 50 பேர்கள் செத்தால் வீதிவீதியாகக் கத்தும் மேற்குலகம் ருவாண்டாவில் மில்லியன் மக்கள் செத்தபோது என்ன செய்தது?சமீபத்தில்"நாசகார"ஆயுதம் வைத்திருந்த சதாமின் ஆட்சிக்கு அடுப்பூதிய ஈராக்கியர்களில் எத்தனைபேரைக் கொன்று குவித்தது?

அவ்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் எல்லை கடந்த குண்டுகளைத் தூவும் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் எந்த அதிகாரம் மக்களைக் கொன்றுகுவிக்க "ஆடர்"கொடுத்தது?



புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.


அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.

ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!

நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்.


எங்களது மக்களது இன்றைய அவலத்துக்கான அரசியல் பின்புலம் என்ன?


இந்த அரசியலால் ஈழத்தமிழ் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டத்தன் இறுதி முடிவு புலிகளால் படம்போட்டுச் சொல்லப்படகிறது.வரலாற்றில் புலிகளெனும் எதிர்புரட்சிகர இயக்கம் தனது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்கiளேயே அநாதைகளாக்கிச் சிங்கள அரசிடம் அடிமையாக்கிச் செல்கிறது!அதையும் புலிகளே இலங்கை அரசிடம் சரணடைந்து ஒப்புதல் அளிக்கின்றார்கள்.


தமிழ்பேசும் மக்களினத்தின் விடுதலை-சுயநிர்ணயத்துக்காக,அதி மோசமான அரசியல் வரலாற்றைச் செய்தவர்கள் புலிகள்.


இவ்வியத்தின் தலைமையை ஒரு வடிகட்டிய அடிமுட்டாளிடம் கையளித்த புலிகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள தமிழ் ஆளும் வர்க்கம்,இப்போது அதே முட்டாளைக் காக்கப் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது.


அது தன் தவறுகளைத் "தயா மாஸ்டர்-ஜோர்ச் மாஸ்டர்" என்ற கேவலமான ஜீவன்களுக்கூடாகச் சொல்லுகிற இன்றைய நிலையில்,மீளவும் மேற்குலகத்துக்கு அவர்களது மொழிகளில் ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல வேண்டுமென்பதன் அரசியல் தொடர்ச்சி என்ன?


இதன் வர்க்கத் தளம் எது?


யாரது நலன்சார்ந்து இந்த வாதம் "மனிதாபிமான"வேடம் பூண்டு கருத்துக்களை முன் தள்ளுகிறது?


ஆனாவுக்கு அர்த்தந் தெரியாத அடி முட்டாளைத் தலைவரென்று சொல்லிக் கொடுத்தவர்கள் அழித்த மக்களது தொகை இலட்சம் தாண்டுகிறது!


இதன் தொடர்ச்சியில் இனியொரு துடைப்பம் தலைவரென மேற்குலகத்தால் வழிமொழிய நாம் என்ன மந்தைக்கூட்டமா அல்லது மலினப்பட்ட தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமா?அன்றி அக்கூட்டத்தைத் தலைரெனச் சொல்லி அட்டைக் கத்தியேந்திப் புரட்சி பேசும் கனவுலகக் கஸ்மாலமா?


இவர்கள்தாம் மேற்குலகத்தின் தயவில் எமக்கு விடிவு வருமெனக் கனவு காண முடியும்.


நாம் சொல்கிறோம்: நமது மக்களது விடுதலைக்கு அவர்கள்தாம் உழைக்க வேண்டும்.அதற்குப் புலிகளது அரசியல் செத்துப் புரட்சிகரமான சிந்தனை உதித்தாகவேண்டும்.இச் சிந்தனையூடாக நாம் இலங்கைக்குள் மற்றைய இனங்களோடு கை கோர்த்தாகவேண்டும்.அங்கே,இவர்கள் சொல்லும் மேற்குலகத்தை ஒட்ட வேரறுப்பதற்கு முனையும் புரட்சி,மேற்குலகத்தால் அடிமைப்பட்ட அவர்களது மக்களோடு கைகோர்க்கும்.இதன்வழி தனது பொது எதிரியை மனித சமுதாயம்-உழைப்பவர் கண்டடைவர்!



இதுதாம் இன்றைய அவலத்தைத் தீர்க்கும் சரியான திசைவழி.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.09

Sonntag, April 19, 2009

அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:3 -(இப்போதைக்கு இறுதிப் பகுதி இஃது.)



"அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது".



"புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை
இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப்
புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும்,
மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில்
உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது
புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச்
சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது
பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள்
முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின்
சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு."




ப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.புலிகள் போராடி மடிவது தியாகம் என்றும் அழிவு யுத்தத்துக்கு வரைவிலக்கணங் கற்பிக்கப்படுகிறது!வன்னி மக்களது அழிவுக்குப் புலிகளும் சிங்கள அரசும் காரணமானாலும் புலிகளது போராட்டத்துக்குத் தியாகங்கற்பிக்கும் அரசியலே மிகக் கடைந்தெடுத்தப் புலி அரசியலின் நீட்சியாக மக்களைக் கருவறுக்கிறது.இது,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழர்முதல் புரட்சிபேசும் புலிப்பினாமிகள்முதல் "ஒரு தமிழன் இருக்குவரை போராடி மடி"எனும் பாசிச மொழிக்கொப்ப ஆளும்வர்க்கக்களின் அடவாடித்தனமான யுத்தம் மக்களுக்கான விடுதலைக்கான புறவயச் சூழலை ஏற்படுத்தும் காரணத்துக்காகத் தலைவணங்கி வரவேற்கப்படுகிறது.


நாம் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.புலிகளது தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம் இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.இன்று,வன்னிக்குள் தினமும் செத்து மடிபவர்களுக்கு புலிகள் சரணடைவது துரோகம் என்று கூறும் புலிகளாலும், இறுதிவரை போராடி மரிப்பது என்ற அதன் அழிவு அரசியலாலும் ஆபத்தான சூழலையே மேலும் அழைத்துவருகிறது.




மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுதித் தயாராக்கும் புலி-இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் கொத்துக்கொத்தாகச் செத்து வருகிறார்கள்.இந்த இரண்டு பயங்கரவாதத்துக்கும் பெயர்"தேசிய விடுதை-ஜனநாகம்-பயங்கரவாதத்துக் எதிரானபோர்"இன்று.



சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக வன்னிமக்களைத் தம்மோடு அழைத்துச் சென்ற புலிகள் தற்போது அதே மக்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள்.இதனால் தமது தலைமையைக் காப்பதற்கான கேடயமாக மக்கள் பயன்படுத்தப்படும்போது இவர்களது "இறுதிவரையான போராட்டத்தை-போராடி மரி"ப்பதை ஊக்குவிக்கும் புலிச் சிந்தாந்த வல்லுனர்கள் புலிகளிடம் "மக்களை விடுவிக்கும்படியும்,போராட விருப்பமற்றவர்களை விட்டுவிட்டுப் போராட்டத்தோடு இணைந்து போராடுபவர்களோடு இணைந்து, இறுதிவரை சரணடையாது போராடி மரிக்கத் தயாருகும்படி" கோருகிறார்கள்.இது, அன்று தொட்டுக் கட்டாயப் போராளிகளாக்கிய ஒரு இயக்கத்துக்குச் சிறார்களை அவர்களது பெற்றோரின் அனுமதியின்றி இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றவொரு இயக்கத்துக்கு விடுவிக்கும் கோரிக்கையென்பதை நாம் முதலில் புரிவோமானால் இந்தப் புலிப்பினாமிகளது சித்தாந்தத்துக்குள் புலிகளது அழிவு அரசியலே புரட்சிகரமானதாகவும்,தேசிய விடுதலைக்கானதாகவும் கட்டியமைக்கப்படுவதை மிக இலகுவாக நாம் அறிய முடியும்.



மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைப்பதைச் "சரணடையாது போராடி மடிதல்" என்றுரைக்கப் புலிகளது சித்தாந்தம் இப்போது புரட்சிகர வேடங்கலைத்துத் "தியாகம்-துரோகம்" என்கிறது.



பாசிசம் என்பது ஒரு கொடிய நோய்.அது,மனிதப்பரப்பில் எத்தனையோ உயிர்களைத் தேசத்தின் பெயராலூம்,இனத்தின் பெயராலும் அழித்து மனித வரலாற்றையே கொலைகளது வழி கற்பிக்கிறது.நாம்,கிட்லரையோ அல்லது முசேலினியோ அல்லது ஸ்டாலினையோ பாசிசத்துக்கான புரிதலுக்குள் உள்வாங்குவதைவிட இவர்களையும் கடந்து இன்றைக்குச் சிந்திக்க வரலாற்றில் பல நிகழ்கின்றன-நிகழ்ந்தன.



இதுள்,புலிகளது இயக்கவாதம்-போராட்டச் செல்நெறி,அவர்களது இயக்க நலன் மற்றும் தலைமையின் நலனுக்கானதும்,அந்நியச் சேவைக்குமான இந்த "தமிழீழப் போராட்டம்"மிகவும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கான பாசிசக் குழப்பத்தால் "தியாகம்-துரோகம்"எனும் பாரிய உளவியல் நெருக்கடியை நமக்குள் உருவாக்குகிறது.மக்களது அறிவைக் காயடிப்பதற்குப் புரட்சிகர வேடமிட்டவொரு புலிக் கும்பல் எப்போதுமே தயாராகக் கணினிமுன் கிடந்து தமது தொழிலைச் சுத்தமாக முன்னெடுக்கிறது.இங்கே, மக்களது அழிவைத் தமக்கு முடிந்தவரை எதிர்ப்பதாகக்காட்டி அவர்கள் செத்து மடிவதைத் தியாகமெனவும் புலிகளுக்கூடாகக் கருத்தை வடிவமைக்கிறது.இந்தச் சமூகவிரோத அரசியல் நடாத்தையைக் கேள்வி கேட்பவர்களைச் சிங்கள அரசினது கைக்கூலிகளாகவும் இந்தக் கும்பல் வசைபாடுகிறது!


நாம்,எங்கே போகிறோம்?


நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?


புரட்சிகரமான அரசியல் வேலைத் திட்டமென்பதற்கான கருத்துப் பகிர்வில் புரட்சிகரப் புறவயச் சூழலையே காயடித்து அழிவு யுத்தத்தைத் தியாகமானதாகவும்-இலட்சியமுடையதாகவும் கருத்துக்கட்டி யாரது-எந்த வர்க்கத்து நலனைக் காக்க முனைகிறோம்?



இது மிக அவசியமாகப் புரியவேண்டிய தருணம்!



எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும் போராடிச் செத்துப் போவதற்குப் போராளிகளையும் மக்களையும் ஊக்கப்படுத்துகிறது.இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் புரட்சிக்கான புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின்வழி அழிப்பதாகப் பாசிச உரையாடலைப் புரட்சிகரமாக்குகிறது.



இது,ஆபத்தானது!



இவர்களை எங்ஙனமும் வெற்றிகொளவது அவசியம்.



போலித்தனமாகப் புரட்சி பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் நமது மக்களது அழிவை-போராளிகளின் சாவை புரட்சியின்பால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.இங்கே,மனிதாபிமானம் என்பது கிடையவே கிடையதென்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இதன் உள் அர்த்தம் இதுவரை புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செய்வதாகச் சொல்லும் பாசிச யுத்தத்தை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.



தமது நடாத்தையைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.



இதற்காகத் தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளைச் சரணடையச் சொல்பவர்களை,அரசினது கைக்கூலி"என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.




அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.அவர்களது வாழும் விருப்பத்தை அழித்துத் தத்தமது எஜமான விசுவாசத்துக்காகக் கூஜா தூக்கும் ஒருகூட்டம் நாளாந்தம் தத்துவ விளக்கக்கட்டுரை போடுகிறது.இதையும் மக்களுக்குச் சார்பான மொழிகளுடாகப் புனைகிறது.இத்தகைய கொடியவொரு சூழலில் மக்களைப் பலியாக்கும் புலிகளதும், இலங்கை அரசினதும் பரப்புரைப் பீரங்கிகள் மக்களது நலனையே திரித்துத் தமது தரப்பை நியாயப்படுத்துகிறார்கள்.இவர்களது நோக்கம் எப்படியும் நிறைவேறுவதற்குச் சாதாரண மனிதர்களது யுத்த எதிர்ப்பு உணர்வை ஏதோவொரு பக்கத்துக்குச் சார்பாக்கி இக் கொடியவர்கள் அரசியல் செய்கிறார்கள்.



அன்பு வாசகர்களே,பரந்துபட்ட புரட்சியின் சமூக அடிப்படைகள் எதுவுமற்ற இன்றைய சூழலில்,ஒப்பீட்டளவில் சமாதானத்துக்கான(சரணடைவு அல்லது இருதரப்பும் யுத்த நிறுத்தஞ் செய்வது) முன்னெடுப்பே இலங்கையில் பாட்டாளிய வர்க்கத்துக்கும், அதன் முன்னணிப்பாத்திரத்துக்கும்,மக்கள் ஜனநாயக(புதிய ஜனநாயக)வடிவத்தினது பொது அம்சத்தை நிர்ணயிக்கிறது.இந்த உண்மையைத் திரிக்கும் ஓடுகாலிகள் இறுதிவரைப் போராடி மடி என்பது புலிகளது தலைமையைக் காப்பதற்கானதாக மாறுகிறது.மக்களதும்,போராளிகளதும் தியாக உணர்வைக் கொச்சைப்படுத்தி மனித இருத்தலையே கீழாக மதிக்கும் உளப்பாங்கைப் புரட்சியின் பெயரால்-பாட்டாளிகளின் பெயரால் சரியானதென வாதிட்டுப் புலிகளைத் தியாகிகளாக்கி, முழு மக்களையும் வேட்டையாட முனைகிறார்கள்.



இதைக் குறித்து நிறைய விவாதித்தாகவேண்டும்.



தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டப் பாத்திரத்தில் புலிகளது போராட்டச் செல்நெறி தவறானதென்பதும்,அது அந்நியச் சக்திகளால் வழிநடாத்தப்பட்டவொரு எதிர்புரட்சிகர அணியென்பதும் மறைக்கப்பட்டு, மக்களுக்காகப் போராடி மறையும் ஒரு இலட்சிய அமைப்பாக வரலாற்றில் பதியமிடப் புலிப்பினாமிகள் தமது வலுவுள்ளவரை சித்தாந்தைத் திரிக்கிறார்கள்.



இன்றைய சூழலில் யுத்தமற்ற இலங்கையும் அதன் பாராளுமன்ற போலி ஜனநாயச் சூழலும் அவசியமானதாகவே இருக்கிறது.இந்தப் பூர்ச்சுவா ஜனநாயகத்தின்மீதுதாம் நாம் அடுத்த கட்டத்தை நாடும் புதியஜனநாயகப் புரட்சிக்கான மக்கள் முன்னணி எனும் ஸ்தாபனம் கட்டியமைக்க முடியும்.இது,இலங்கைத் தொழிலாளிவர்கத்தையும்(அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகியுள்ள பாட்டாளிகள்),விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தாலும் தரகு முதலாளிகளாலும் பழிவாங்கப்பட்ட நகரக் குட்டிமுதலாளிய வர்க்கம்,இதுசார்ந்து சிந்திக்கும் அறிவுத்துறையினரின் கூட்டோடே சாத்தியமாவதாகும்.இந்த மக்கள் முன்னணியின்றி இலங்கையில் ஒரு துரும்பைக்கூடப் புரட்சியின் பெயரால் ஆற்றமுடியாது.இங்கே, இலங்கைவாழ் அனைத்து இனங்களும் பரஸ்பரம் இன ஐக்கியத்தைக் கடைப்பிடிக்குமொரு குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் அவசியமாகிறது.இது,இலங்கையில் இராணுவ முனைப்புடைய அரசுகளாலும்,இயக்ககங்களாலும் அழிக்கப்பட்டு, இலங்கை அரை இராணுவ ஆட்சியாக மாற்றப்பட்டபின் புரட்சிகர முயற்சிக்குப் பாதகமான சூழலே இப்போது நிலவுகிறது.



புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப் புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும் மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச் சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள் முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின் சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு.குறிப்பாக அமெரிக்கா.







தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பகுதியைப் பிளந்த அமெரிக்க நலன் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஒருபோதும் தீர்க்க முனையாது.எனவே,யுத்தம் நிறுத்தப்பட்டு அல்லது புலிகள் சரணடைந்து இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமைக்கான சூழல் உருவாக்கப்பட்டாக வேண்டும்.இதற்காக இன்றைய புலிகளது அழிவுப் போராட்ட ஜந்திரம் தோற்கடிக்கப்பட்டு (இங்கே,கவனியுங்கள்:நான் சொல்வது புலிகளது யுத்த ஜந்திரமாகும்,அவர்களைப் பூண்டோடு கொல்வதல்ல.இது அவர்கள் மீளவும் இலங்கை அரசியலில் தமது தரப்பு அரசியலை ஜனநாயவழிக்குள் முன்னெடுத்து இயங்க அனுமதிப்பதுதாம்.பூர்ச்சுவா ஜனநாயகத்தில் தமது ஆயுதங்களை இழக்கும் புலி, மக்களிடம் அம்பலமாக இதுவே சரியானதொருவழி,அவ்வியக்கம் தவறானவழியில் தமிழீழப் போலிக்கோசத்தால் இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமானது.இவ்வியக்கம் அதற்குப் பொறுப்பேற்று வரலாற்றில் தண்டிக்கப்பட மக்களது வலுவுக்குள் வாழ்ந்தாக வேண்டும்,அரசிலை முன்னெடுத்தாகவேண்டும்.இங்கே,இன்னுமொரு புலிகளது அரசியல் நடாத்தையையும் கவனியுங்கள்.அதாவது,புலியைப் பிளந்து கருணா "ஜனநாயக"ச் சூழலுக்குள் இழுத்துவரப்பட்டு இலங்கைச் சட்டவாக்கத்துள் அரசியல் செய்யும்போது,கருணா தனது கடந்தகால அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாவினது தலையில் சுமத்துவதும்,அதைக் கண்ட புலிப்பினாமிகள் பிரபாகரனை ஒரு அப்பாவியாகக் கட்டுரை புனைந்ததையும்.இங்கே தத்தமது கொலை அழிவு யுத்தத்தைப் பொறுப்பெடுக்காததும்,தண்டைனுக்குள்ளிருந்து தப்பிக்கொள்ளவும் இவர்கள் மிக அவதானமாக இருக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டம் புலியினது அழிவுக்குத் தியாகங் கற்பிக்கிறது.தூ...என்னவொரு பிழைப்பு.இதைவிடப் பிச்சையெடுத்து வாழுங்கோடா!), அந்நியச் சக்திகளது நலன்கள் இலங்கையில் வீரியமற்றதாக்கப்படவேண்டும்.அங்ஙனம் உருவாகும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்குப் பிரதான எதிரியாக இலங்கை அரசே முன் நிற்கிறது.இது,புலிகளையும்,இலங்கை அரசையும் எதிர்கொண்ட சூழல் இல்லாதாக்கப்பட்டு,இலங்கை அரசையும்- ஏகாதிபத்தியங்களை வலுக்குன்றிய குழுக்களுக்குள் மற்றும் கட்சிகளுக்கூடாக எதிர்கொள்வதாகவே இருக்கும்.இப்போது இலங்கை வாழ் தொழிலாள வர்க்கம் மிகப் பெரும் இரு எதிரிகளைப் பிரதானமாக எதிர்கொள்கிறார்கள்.இவை இரண்டுமே போட்டி போட்டு அந்நிய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும்போது இலங்கையில் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டு முற்போக்குதளம் நிர்மூலமாக்கப்படுகிறது.



இந்த உண்மை புரட்சியினது புறவயச் சூழலைச் சரியாக மதிப்பிடும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலிருந்து உருவாகிறது.குறுந்தேசிய வாதப் பரப்புரை செய்யும் புலிப் பினாமிகள் புரட்சியைக்காட்டிக் கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வேண்டுவது, அவர்களது தொழிலாகப் புலிகளால் நிறுவப்பட்டது.இது,கக்கும் புரட்சிகரத் தத்துவமென்பது திரிவுவாதமாகும்.இதைத்தாண்டி நாம் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகச் சூழலின் அவசியத்துக்காகவும்,மேற்சொன்னபடி அரசியலை முன்னெடுக்கவும் புலிகள் தமது அந்நியச் சேவைப் பாத்திரத்தைவிட்டு ஒதுங்குவதற்குச் சரணடைவதால் மக்களைக் காப்பதும்,போராளிகளைக்காப்பதும் கூடவே இலங்கைப் பாட்டாளியவர்க்கத்தின் எதிரியைத் தகுந்த முறையில் எதிர்கொள்வதற்குமான புரட்சியின் புறவயச் சூழலை முன் தள்ளவே இதை ஒரு அரசியலாக முன்வைக்கிறோம்.எனவே,புலிகள் தமது பாசிசக் கட்டமைபைக் குலைத்துச் சரணடைவதும்; அந்நியச் சேவைக்காகக் காரயமாற்றும் அவர்களது வெளியுலகப் பிரமுகர்கள் மேலும் தமது குருதிக்கறைபடிந்த கரத்தைத் தமிழ்பேசும் மக்கள்மீது திணிப்பதைத் தவிர்ப்பதும் அவசியமானவொரு பணியாகிறது.



யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களும் மற்றைய இனங்களும் தமது ஐக்கியத்னூடாகப் பொது எதிரியானதும் அந்நியச் சக்திகளுக்கு உடந்தையானதுமான இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள, இலங்கையின் அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து போராடும் சூழலின்றி இலங்கையில் புரட்சிகரப் போராட்டமும் இலங்களுக்கிடையிலான சுயநிர்ணய உரிமையும் நிலைக்கமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.04.09

Samstag, April 18, 2009

புலிகள் மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?

புலிகள்
மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?


கிடையாது!

ஏனெனில்,
துரோகஞ் செய்யாது
புலிகள் போராடி மடிந்தால்
மீளவும் புலிகள் புத்துயிர் பெறமுடியாது...


எங்கே?


வன்னிக்குள்ளதான்!


அப்ப கிழக்கில கருணா?...


சீச்சீ,
அது,புலியல்ல
தேசியப் பூர்ச்சுவாதம்
எதிர்ப் புரட்சிக்காரன்.


ஈழத்தை
விட்டு எத்தியோப்பியாவில்தான்
கிழக்கு மாகாணமே இருக்கா?


ஓம்!


புலிகளென்றால் பிரபா
வன்னியைச் சுற்றித்தாம்
துரோகக் குழு இனி உருவாகவேண்டும்
அங்ஙனம் வந்தால் நீடிப்பார்கள்
கூலிக் குழுவாக...


இப்போது
தேசியவிடுதலை இராணுவம்
தேசியச் சக்தி
அந்நியச் சேவை அறியாத
ஏகாதிபத்திய எதிர்ப்புப் படை
அதுதான்
தேசியச் சக்தி
வலதுசாரத்தில்...







தமிழர் பூமியை
பிரதேசமாகப் பிளந்தவர்கள்
கிழக்கைப் பிளந்தபோது
புலியையும் பிளந்தனரா?


கருணா துரோகியாக நீடிப்பது புலி அல்ல
யாழ்ப்பாணம் பறிபோய்
அதற்கும் டக்ளஸ் தலைமைகொண்டாலென்ன?
அவரும் ஒட்டுக் குழு


தலைவரென்பது பிரபா
புலிகள் என்பது பிரபா
பிரபா என்பதும் புலிகள் என்பதுமே
வன்னிகொள் தமிழர்-அதுவே தமிழ்ச் சமுதாயம்!

அங்கே,
புலிகள் பலியானால்
இலட்சியங்கொள் தியாகம்
அறிக,
புலிகள் அழிந்திடுவர்
இஃது துரோகமிழைக்காத இலட்சியம்!


ஏலவே
புலிகள் கற்பித்த"கருணாத் துரோகம்"
துரோகமெனச் சொல்லுதலும்
துரத்தி அழிக்கப்படும் தலைவருக்குப்
பட்டுடுத்தப் போதுமானதுதாம்


தலைவரை அழிப்பது
நிச்சியமெனும்போது
தியாகத்தைச் சொல்பவர்கள்
வன்னிக்குள் மட்டுமே புலிகளைக்காண
கிழக்கிலும் முன்னம் இருந்தனர்
கருணாவழி நீடிக்கவில்லை-கொல்லப்பட்டனர்?


எனினும்,
எஞ்சியவர்கள் ஓட்டுக் குழுக்கள்
வன்னிக்குள் ஒரு கருணா முளைத்தால்
புலிகள் இனிமேல்தாம் துரோகியாவார்கள்


ஏனெனில்,
தலைவரே இலட்சியப் புருஷர்!
இதுவரை புலிகளாகப் போரிடுபவர்
தமிழ்த் தேசம் வன்னிக்குள்ளதான்
வர்க்கச் சமுதாயமும் அதற்குள்ளதாம்
தத்துவஞ் சொல்லுகிறோம் தத்துவம்...


ஆதலால்,
வன்னிக்குள்ளிருந்து
வருபவர் மட்டுந்தாம் துரோகமிழைப்பார் எதிரியுடன்கூடி
கருணா-பிள்ளையானா?
ஓ,அவர்கள் மட்டக்களப்பார் ஒட்டுக் குழுவல்லோ அது!
கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்களா?


அங்கே,
அரசியல் வெளிகள் இருப்பதில்லை
அதனால் புலிகள்
நீடிப்பதென்பது தத்துவத்துக்குப் பொருந்தாது


புரட்சியின் அடிப்படை விதிகொண்ட
இலட்சியப் புருஷர் வன்னிக்குள்
அதை மறுத்த கிழக்குப் புலிகள் ஒட்டுக் குழுக்கள்
புரட்சி நிலவரம்
வன்னிக்குள் தியாகங்கள் தோன்ற உருவாகிறது
புரட்சியின் புறவய நியதி இஃது!


வன்னிக்குள்
புலிபோராடிச் சாவதால்
வடக்குத் தமிழரை எதிரி வென்றிட முடியுமா?
இல்லையில்லை!
வடக்குப் புலி அரசிடம் சேர்ந்து
துரோகம் இழைக்காததால்
அது தன் வர்க்கத்துக் இன்னும் துரோகஞ் செய்யவில்லை
அதனது வர்க்கம் வன்னிக்குள் மட்டுந்தான்...


தன் வர்க்க சாரத்தில்
குட்டிப் பூர்ச்சுவா வர்க்கத்தின்
எதிர்ப்புரட்சிக்காரன் கருணா ஆதலால்
ஒட்டுக்கு குழு-அது புலியல்ல எலி.


எனவே,
புலிகள்தம் பாசிச வழிகளில்
நின்று
வன்னிக்குள் இருக்கும் வலது சாரிய நிலைக்குத்
துரோகமிழைக்காது போராடி மரணிக்குங்கால்
தமிழர்தம்(வன்னித்தமிழர்)பிரதான எதிரியான அரசு
தமிழ் மக்களிடம் தோற்றுவிடும்!

அப்பாடா,
அருமை.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.04.09

Montag, April 06, 2009

இதையும் மறந்திடாதே!

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட


இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?


நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!


என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!



நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!


மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?


பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது



மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!


சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!


சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...


தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!
இதையும் மறந்திடாதே!


ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09

யுத்தம்

"உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"
என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று
அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின்
அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சிங்களப்
பெருந்தேசிய வாதத்துக்குள் திணித்து இன-அடையாள அழிப்பில் முடிவடைவதில்
முடியும்."



லங்கை அரசு சொல்லும் யுத்தம்சார் சித்தாந்தம்-அரசியல்,"அமைதிக்கானது,சமாதானத்துக்கானது,ஜனநாயகத்துக்கானது"என்பது உண்மையானதாக இருக்க முடியுமா?


இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை!


புலிகளது தவறான போராட்டத்தின் முடிவில் தத்தளிக்கும் தமிழ்பேசும் மக்களை அடியோடு மொட்டையடிக்கும் அரசியலைப் பலர் முன்னெடுக்கும்போது-அந்தப் பலருள்,இந்தியாவும் ஏகாதிபத்திய உலகமும் மட்டுமல்ல அவைகளைத் தாங்கிப்பிடிக்கும் நாமுமே காரணமாக இருக்கின்றோம்.அந்நியர்களுக்கு அடியாட்படையாக மாறிய புலிகள், எங்ஙனம் தமிழ்பேசும் மக்களை அழிவு யுத்தத்துக்குள் திணித்தாகளோ-அதையே நியாயமாக்க முனையும் இன்றைய அரசியல்,சித்தாந்தங்களை வெற்றிகொள்வதும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு முன்நிபந்தனையான அவசியமே.இந்நோக்கில் சிங்கள அரசினது இன்றைய கோசத்தினூடாக(பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மற்றும்,"நாம் இலங்கையர்" என்ற தேசிய இனத்தைக் கடந்து வேறொரு தேசிய இனம் "இலங்கையில்" இல்லையெனும் மறைமுகச் சிந்தாந்தம்) சிலவற்றைப் பார்ப்போம்.



சமீபத்தில் இலங்கையானது மேற்குலகத்தினவர்கள்தம் நலனுக்கான மூலவளக்கொள்ளை யுத்தத்துக்கான முகமூடி அரசியற் கருவூகங்களான "அமைதி,சமாதானம், ஜனநாயகம்" எனும் உளவியல் கருத்தாக்கங்களது புனைவுகளோடு தமிழர்கள்மீது யுத்தஞ் செய்வதைப் புலிகள்மீதான யுத்தமாகக் காட்டி,அதை பயங்கரவாதத்துக்கு எதிரானதாகச் சொல்கிறது.இலங்கை அதிபர் மகிந்தாவினது உரைகளில் இத்தகைய கருத்துக்கள் மேலும் போரைத் திறம்பட முன்னெடுப்பதற்காக எப்போதும் காணக்கூடியதாக இருக்கிறது.



இலங்கையில் பொதுவாகவே ஜனநாயகத்துக்கான அரசில் சூழலோ அன்றி அத்தகைய அரசியலை முன் தள்ளும் பொருளாதார உற்பத்திச் சூழலோ இல்லை.எனினும்,இந்தக் குறைவிருத்திச் சமுதாயமான இலங்கைச் சமுதாயத்தில்,நிலவுகின்ற இராணுவ மையவாத அரசியல் போக்குகள் மற்றும், நிலவும் புத்தமதவாதத் தத்துவப் பேரவா,சிங்களப் பொற்காலத்தை மீளக்கட்டுவதில் இனவழிப்பை பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் காட்டப்படுகிறது.உலகத்தினது அதே பாணியிலான கயமைப் போரை, இலங்கையும் முன்னெடுப்பதற்கு மிக அவசியமான உலகச் சூழல் என்றுமே நிலவிவருகிறது.இத்தகைய சூழலை பெரும்பாலும் உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொதுமைப்படுத்தும் மேற்குலகமும் அமெரிக்காவும், நேட்டோ எனும் ஏகாதிபத்திய இராணுவவாதக்கூட்டுத்தலைமையோடு அகிலமெங்கும் மறைமுகமான உலகயுத்தத்தை நடாத்திவருகிறது.அமெரிக்காவின் புதிய அதிபரும் மேற்குலக நாடுகளது தலைவர்களும் அவ்கானிஸ்த்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது குறித்து உடன்படுகிறபோது அங்கே, வலிந்துருவாக்கப்படும் யுத்தச் சூழல் மேலும் உலகத்தின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தமது காலடியில் போட்டு நசுக்குவதற்கானவொரு அரசியல் ஆதிக்கத்தை அவர்களுக்கு வழங்குகிறது(இந்த உலகத்திடம்தாம் தமிழர்கள் கையேந்திப் பிச்சை எடுக்கப் புலிகளது போராட்டம் வழிவகுத்துள்ளது இன்று).



இதே பாணியிலான சிங்கள அரசியல்-இராணுவ வியூகத்துக்கு இலங்கையில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பு ஒரு அவ்கானிஸ்த்தானாகவோ அன்றி ஈராக்காகவோ இருக்கிறது.இலங்கை அரசுக்கு தார்மீகரீதியாக எவருமே எதிர்ப்புக்கூற முடியாதளவுக்கு இந்த யுத்த பூமி-அதாவது,அவ்கானிஸ்த்தான் அதனது உள் நாட்டுக்குள்ளேயும்,அதன் அரச ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதால் இலங்கையது எந்த வகை இராணுவ அழிப்பு யுத்தத்தையும் உலகம் கைகட்டியே பார்க்க முடியும்.இது,இலங்கையின் மிக யதார்த்தமானவொரு அரசியல் வெற்றியை இலங்கைக்கு வழங்கிய சந்தர்ப்பம் 11-செம்டம்பருக்குரிய அரசியல் தெரிவோடு உருவாகிறது.இங்கே,இலங்கை தன்னை இனவாத அரசு என்ற தளத்திலிருந்து விடுவித்தபடி,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தைத் திசைவழியாகத் தெரிவதற்கும் இந்த உலகங்களது பொருளாதார நோகத்தின் யுத்த வியூகமே அச்சொட்டான உதாரணமாக இருக்கிறது.சிறுபான்மை இனங்களது தார்மீக உரிமைகளுக்கான எந்தவகை அரசியல் முன்னெடுப்பையும் ஆளும் சிங்களப் பெருந்தேசியவாத அரசு மிகச் சுலபமாகப் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முடிகிறது.இது,வருங்காலத்தில் இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுறுவுகளைப் குழிதோண்டிப் புதைத்துவிட்டு,பெரும்பான்மைச் சிங்களவினத்தோடு கலந்து வாழும் இலங்கைத் தேசியத்தைப் பேசமுனையும்.இது,மேற்குலங்கங்களில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த-இன்றும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நேர்ந்த அதே அரசியல் பலவீனத்தை-தற்கொலையை இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு மேலும் அழைத்துவரும்.



இன்று,மேற்கு நாடுகளின் பொருளாதார இலக்குக்கும்,நீண்டகால அரசியல் ஸ்த்திரத்துக்கும் இத்தகைய தேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த பல் தேசிய இன-மத மக்களுக்கும் ஒரே தெரிவான கலத்தல்-கலந்து வாழுதல் எனும் இந்த வாதம் அவர்களது எதிர்கால இருப்பை அழிப்பதற்கும் பாரம்பரிய பண்பாட்டு வேர்களை நசுக்குவதற்காகவுமான அரசியல் கோரிக்கையே(இதை, ஜேர்மனிக்கு வந்த துருக்கிய இனம் சரியான தெரிவோடு உடைப்பதில் இலக்காக இருக்கிறது இங்கு).இதை,இலங்கை அரசு இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கமைய புதிய உத்வேகத்தோடு"நாம் இலங்கையர்"எனும் கோசத்தின் வாயிலாக "கலந்து வாழுதல்" எனும் கருத்தாக்கம் சிங்களப் பொற்காலத்தின் மறுவார்ப்பாக மேலெழவுள்ளது.இலங்கையின் இன்றைய அரசியல் கோசத்தை மிகக் கவனமாக விளங்க முற்படாத சிறுபான்மை இனங்களது அரசியலானது மேலும் இராணுவவாதக் கண்ணோட்டத்தோடு நகர்வதில் எந்த நியாயவாதமும் இல்லை.இலங்கையினது புரட்சியை வற்புறுத்தி சிறுபான்மையினங்களின் சுயநிர்ணயவுரிமைகளை அங்கீகரிக்காத போக்குகள் அல்லது அடக்கிவாசித்தல் சாரம்சத்தில் இலங்கையினது இன்றைய வியூகத்துக்கு பலமானதாகவே இருக்கும்.இன்று,இலங்கையில் அமைதி,சமாதானம்,ஜனநாயகம் அவசியமெனினும் இவைகளை முகமூடியாக்கித் தமது அரசியல் பிழைப்புக்காக கோசமிடும் தமிழ் அரசியல் வாதிகள்-குறிப்பாக,டக்ளஸ்,புலித்தளபதி கருணா,பிள்ளையான்,மற்றும் ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோத அரசியலாளர்கள் இலங்கை அரசினது அடுத்த கட்ட-மேற்கூறப்பட்ட-நகர்வுக்கு அண்மையாகவே இருக்கின்றார்கள்.


இலங்கையில் ஜனநாயகம்,அமைதி,சமாதானம் அவசியம்.ஆனால்,இனங்களுக்கிடையிலான அவர்களது சுய கௌரவத்துக்கான உரிமைகளை இவற்றுக்காக கழுவேற்றி எவரும்அமைதி,சமாதானம்,ஜனநாயகம் மீள் உருவாக்கஞ் செய்துவிட முடியாது.போலித்தனமான அரசியல் கோசங்கள் இலங்கையில் இனங்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைத்துப் பிழைப்புவாத அரசியலாக மாறுவது அந்தந்தவினங்களது இருப்பையே அழிப்பதில் முடியும்.இதை வெல்வதற்காகவேனும் தமிழ்பேசும் மக்களது உண்மையான அரசியல் தெரிவு தமது சுயநிர்ணயத்துக்கான அரசியலைவிடாப்பிடியாக நடாத்துவதே சரியானது.இதுவே,இலங்கையில் மற்றைய இனங்களது சுயநிர்ணயவுரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கானவொரு முன் நிபந்தனையாக இருக்கிறது.இதைப் புலிகளதுவழி போராட்டத்தால் பறிகொடுத்த நிலையில் மீளவும், இந்தச் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை,அரசியல் போராட்டமாக விரிவுறவேண்டியுள்ளது.இதை, மறுத்தொதுக்கும் தமிழ் அரசியல்-ஜனநாயகக் குழுக்கள் மெல்ல இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுரிமைகளை மறுத்து, "வல்லவன் வைத்ததே சட்டமெனும்" போக்கில் இலங்கையில் சிங்களக் குடிகளே பூர்வீகக் குடிகளெனும் மகாவம்சத்துக்கு ஒத்திசைவான அரசியலை முன்னெடுப்பதாக அமையும்(இக் கருத்தைப் புலிவழிப் புரியவேண்டாம்.புலிகள் பேசுவது,செய்வது அனைத்தும் வியாபாரத்தனமானது-அது,டீலில் தமது வர்க்க நலனுக்கிசைவாகத் குறுந்தேசியவாதத்தை முன்னெடுத்து வருவது).




அகில உலகத்துக்கான சோசலிசமோ அல்லது ஓரு குறிப்பிட்ட நில எல்லைக்குட்பட்ட சோசலிசப் போராட்டமோ இனங்களது உரிமைகளை இல்லாதாக்கும் பெருந்தேசிய வாதத்தைத் தெரிவுகளாக்க முடியாது.இலங்கையர் எனும் கோசம் எப்போது இலங்கையில் வாழும் இனங்களது சுயநிர்ணயத்தின் இருப்போடு மட்டுமே சாத்தியமாகும்.இதுவன்றி பேசப்படும் இலங்கையர்கள் எனும் அரசியல் கோசம் சாரம்சத்தில் பெருந்தேசியவாதச் சிங்கள மேலாதிக்கத்தின் மறைக்கப்பட்ட வடிவமே.


11 செம்படம்பருக்குப் பின்பான காலம் அமெரிக்க-ஐரோப்பிய நவலிபரல்களுக்கானவொரு காலமாகும்.அவர்களது பொருளாதார முன்னெடுப்புகளுக்கு இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அவசியமான பற்பல சாதகங்களைத் தகவமைத்துக்கொடுக்கிறது.இதன் காரணமாக அவ்கானிஸ்தானையோ அன்றி ஈராக்கையோ அல்லது எல்லை கடந்து பாகிஸ்தானின் இறைமையையோ அவர்களால் மீறமுடிகிறது.இதற்கான அரசியல் மற்றும் இராணுவ உரிமைகளை இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான எனும் மாய அரசியல் ஏற்படுத்திக்கொடுக்கிறது.இதனால் தங்குதடையின்றி மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கும்,பங்கு போடுவதற்கும் அவசியமானவொரு கூட்டணி தவிர்க்கமுடியாது ஏற்படகிறது.இந்தக் கூட்டணி இப்போது ஜீ-20 எனும் அமைப்பு வடிவத்தை முன்னெடுக்கும்போது இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசம் இலங்கையில் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதற்கும்,அவர்களை மேலும் அரசியல் அநாதைகளாக்கித் தம்மோடு கலப்படையவைக்கும் "நாம் அனைவரும் இலங்கையர்"எனும் சிங்கள அபிலாசையாக விரியும்.



இலங்கையின் அரசியல் தெரிவுகளுக்கு, மிக யதார்த்தமான உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கமாக அண்மித்து வருகிறது.இதைப் பெரும்பாலும் மிகச் சரியாகக் கையாளும் இலங்கை அரசு,சிங்களப் பௌத்தமதப் பொற்காலத்தை மீட்டெடுப்பதில் பெரும் அவாக்கொண்டுள்ளது.இஃது, மிகச் சாதாரணமான அரசியல் சொல்லாடல்களின்வழி-அதாவது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்,இலங்கையர்,மற்றும் கலப்புறதல் அல்லது ஒன்றித்தல் எனும் கோசங்களின் வழி அடையப்படக்கூடியதே.கடந்தகால மேற்குலக யுத்தங்களின்வழி இத்தகைய ஒற்றையினவுருவாக்கம் வலுவாக வெற்றியளித்தது.இது,பல் தேசியவினங்களை முற்றாக அழித்து, ஒரு தேசத்தினது ஆளும் வர்க்கத்தினது மொழியைப் பண்பாட்டை அனைத்து மக்களுக்குமான பண்பாடாகவும்,மொழியாகவும் ஆக்கிக் கொண்டது.இலங்கை போன்றவொரு சிறிய தேசத்தில் இது மிக இலகுவாகச் செய்து முடிக்கப்படக்கூடியது.புலிகளது அப்பட்டமான விதேசியப் போராட்டத்தால் இன்று இந்த ஆபத்து நம்மை நெருங்கி வருகிறது.இதைப் பூண்டோடு அறுப்பதற்கு தடைகள் என்ன என்பது அவசியமான கேள்வியாக மேலெழ வேண்டும்.


இத்தடைகள் பற்பல வடிவத்திலுள்ளன:



1: புலிகளது விதேசியவாதம்,


2:புலிகள் கற்பித்த துரோக அரசியல்,


3:புலிகளைச் சுற்றிய இயக்கவாத அரசியல் மாயை,


4:புலி எதிர்ப்பு ஜனநாயக அரசியல்(உதாரணம்:டக்ளஸ்,புலித்தளபதி கருணா-பிள்ளையான் வகை அரசியல் தெரிவு)


5:புரட்சிகர முற்போக்குச் சக்திகள் எனும் வடிவிலள்ள புலிப் பினாமிகள்(உதாரணம்:சேரன் அவரது மைத்துனன் விக்கி,சிவகுமார், பாலகுமார்,மு.திருநாவுக்கரசு,சிவத்தம்பி மற்றும் புலம் பெயர் சூழலில் மாற்றுக் குழுக்களாகக் கருத்தாடும் ரீ.பீ.சீ.வானொலி,இன்னும்பல முற்போக்கு முகமூடிகள்.)



6: அடையாளத்தை மறுத்து,பின்-முன் நவீனம் பேசும் முகமூடிகளாக இருந்து இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயக் கோரிக்கைகளை வெறும் செல்லாக் காசாகக் கருத்துக்கட்டும் எதிர்ப்புரட்கரச் சக்திகள்.




இத்தகைய தடைகளை எங்ஙனம் வெற்றிகொண்டு,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர நட்புறவோடுகூடிய உரிமைகளுக்கான போரை முன்னெடுப்பது?




சுயநிர்ணயத்தை வலியுறுத்தி, அதை முன் நிபந்தனையாக வைத்துப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத் திட்டம் அவசியமாகிறது.இங்கே,இலங்கை அரசுதாம் முதலாவதும்,பிரதான எதிரியென்பதும்,அதன் இன்றைய அரசியல் சித்தாந்தத்துக்கு உலகு தழுவிய பலமும் ஒத்துழைப்பும் உண்டென்பதும் அவசியமாகப் புரியப்படவேண்டும்.புலிகளது தவறான வழிகாட்ல்களால் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோல்வியில் முடிவடைகிறது.இது,இன்னொரு வடிவத்தில் மேலெழுவது அவசியம்.அதைச் சாதிப்பதற்கான போராட்டத்திசையமைவுக்குச் சுத்த இராணுவவாதமோ அன்றிப் பழையபாணி இயக்கவாத அறிவோ எப்போதும் உடன்பாடானது அல்ல.



நாம் பற்பல உலகத்துக்குள் வாழ்கிறோம்.எனினும்,உலகம் இப்போது ஒரே திசைவழியில் தன்னை அடையாளம் காட்டுகிறது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும்போது அதை இலங்கையிலிருந்துமட்டுமல்ல மேற்குலக நாடுகளிலிருந்தும் அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.இங்ஙனம் போராட முடியாது அரசுசாரா அமைப்புகளுக்குக் காவடி தூக்கி இலங்கையில் ஜனநாயகத்தை அமைதியை,சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது, சாரம்சத்தில் ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பில் உலகத்தை வேட்டையாடும் ஏகாதிபத்தியத்தின் அரச ஆதிக்கமுடைய அடியாட்கள் தாம்சார்ந்த இனத்துக்குள் மற்றைய இனங்களை முடக்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதே.அதை மிக நேர்த்தியாகப் புலிகளின் தளபதி கருணா-பிள்ளையான்,டக்ளஸ் போன்றோர் செய்து முடிக்கின்றார்கள்.




இன்று,இந்த ஜீ-20 கூட்டினது பொருளாதார இலக்குகள் யாவும் உலகத்தில் மேல்நிலை வகிக்கும் அரசுகளது சொந்த முரண்பாடுகளுக்கு ஒரு வடிகாலான அரசியலை முன்னிறுத்தும்.இது,தேசங்களில் வாழும் அரசியல் உரிமைகளற்ற இனங்களை அரச ஆதிக்கச் சமுதாயங்களோடு கலப்படைய வைப்பதில் முனைப்படையும்.அதன் அவசியமான நோக்குப் பொருளாதாரச் சந்தைக்கு ஒரு மொழி,ஒரே மதம்,ஒரே இனம் எனும் ஒன்றைத் துருவ குவிப்புறுதியூக்கத்துக்கிசைவான உலகத்தைவேண்டிய அரசியல்-இராணுவ நகர்வாகவே அமைகிறது.இது,இன்றுள்ள தேசங்களுக்குள் பல்வகைக் பண்பாட்டு விழுமியங்களை அந்தந்தத் தேசப் பண்பாட்டு மேலாத்திக்கத்துக்கு முதலில் பலியாக்கும்.




நவலிபரல்களது அரசியலுக்கு இவை அவசியமானது.அவர்களால் முன்தள்ளப்பட்ட பொருளாதாரத்தின் அரிச்சுவடிக்கு கெய்னிஸ் சித்தாந்தக் குருவாக இருந்து இவற்றைய வற்புறுத்தும்போது, நாம் மார்க்சைச் சொல்லி மேலும் சுயநிர்ணயத்தை-தேசியத்தை மறுப்பதாக அமையும்போது,அங்கே,சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டம் புலிகள்போன்ற பாசிச வாதிகளிடம் தஞ்சமடைகிறது.அவர்கள் அதைத் தமது வர்க்க நலனுக்கான முறையில் முன்னெடுக்கும்போது அதுவே ஒரு கட்டத்தில் தோல்வியாகி இலட்சம் மக்களை அழித்துவிடுகிறது.இங்கே,இந்த வரலாறு நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது.



நாம் முதலில் அணித்திரட்சிக்கேற்ற முறையில் தடைகளை அகற்றிக்கொண்டு ஐக்கியப்படவேண்டும்.



இந்த ஐக்கியம் புரட்சிகரக்கட்சிக்கான கருவூலத்தோடு உண்மையாக மக்களைச் சார்ந்து அரசியல் செய்ய நிபந்தனையாக வர்க்க உணர்வுள்ள தோழர்களுக்குள் கேட்கப்படுகிறது.புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் சதிகாரர்கள் பழைய இயக்கவாத அரசியல் தெரிவிலிருந்து நமக்குள் விதைக்கும் அரசியலை அம்பலமாக்குவது அவசியம்.இவைகளின்றிச் சிங்கள அரசுக்குத் தோதான இந்த உலக அரசியல் வியூகத்தைத் தோற்கடித்துச் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பது கல்லில் நார் உரிபதாகவே முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்

Freitag, Januar 09, 2009

இது முன்னரங்கக் காவல் அரண்

"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.

னது தூக்கம் எவ்வளவு கருமையானது
கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்
பாரத்தைப் போலவே,
நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்
என் குரலை நீ கேட்கமாட்டாய்?

புள்ளியான வெளிச்சத்தின் கீழே
நீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய்,
உனது சொண்டுகள் விகராமாக
நித்தியத்தின் நெடுந்தொலைவை முத்தமிட...

நாளை என்பது இங்கே மௌனமாகலாம்
கூடவே காற்றுந்தாம்,
எனினும்
மனித நாற்றமும்
இயற்கையின் கோரமும்
அடங்கப் போவதில்லை.

இரவென்பது வெறுமையாகிறது
விடியலைத் தொலைத்து,
வருசா வருசம்!

இது முன்னரங்கக் காவல் அரண்,
நீ முழுமையாகக் கனவுகாணத் தவறிய பொழுதொன்றில்
உனது மூச்சு மிக அமைதியாக
மெலிய சத்தமாய் அமிழ்ந்து போகும்.

தெருவோரத்துக் குடிசைகளின்
மெல்லிய சல சலப்பில்
உனது பெயரும் அறுந்துதிரும்
நீ அவர்களுக்கு நெருக்கமானவ(ள்)ன்.


காலத்தைக் கொடிய ஜந்திரமொன்று
துண்டு துண்டாய்க் கத்தரித்தது,
நெடுக்கும் குறுக்குமான அளவுகள்
சொல்லி வைத்தபடி
90,
180,
360 பாகைகளில்,
அது எப்போதாவது தேசங்களாக இருக்கும்போது.


இந்த நோக்கத்துள்
தூக்கம் தொலைத்த
உனது முகமும்
அழகிய சிறு விழிகளும் ஜொலிக்கின்றன!


இப்போது உனது தோலின் குளிர்ச்சியுள்
பெருமித எச்சமொன்று
அம்மாவாய்
முலையுதிர்த்த வெண்மைக் குருதியாய்
உறைந்து போகும்.


நாங்கள் உன் வேதனையை இரட்டிப்பாக்கி
உன்னால் உணரப்பட்ட
அனைத்து நித்தியங்களையும் திருடிக் கொண்டோம்,
சுவரில் தொங்கும் சிலந்தி வலையாக
உன்னில் படர்ந்த எமது கனவுகள்
உன்
இதயத்தை இரையாக்கியது.

எமது பயம்
உன்னைத்; துப்பாக்கியோடு கட்டிப் போட்டது,
உனக்கு நீ மிகத் தூரமான பொழுதொன்றில்
என் குரல் கேட்பதற்காய்
நான் குரைக்கும் பாழ் காலம்
கட்டுக்கடங்காத
கட்டாக்காலி எருமையாக
உனது உடலில் இடறிப் புரண்டது.
நீ,
எனது கபாலத்துள் இறுதிக் காவலர்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Donnerstag, Dezember 25, 2008

Sri Lanka(Abu Grab )videos

An Appeal
to
The United Nations
Commisson on Human Rights


Honoured Sirs/Mesdames,



We would like to submit our appeal to you,with deep sorrow which comes from the bottom of our hearts.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008




//இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.

இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. இராணுவத்துக்கு ஆட்களை திரட்டக் கூட இது போன்ற ஆணாதிக்க வக்கிரங்கள் உதவுகின்றது.

சமாதானம், விடுதலை என்பது, மக்கள்விரோத யுத்தத்தின் மூலம் இப்படித்தான் நிர்வாணமாகின்றது. //-Tamilcircle

Donnerstag, November 13, 2008

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும்

-சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.




மிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் தமிழக மக்களை எங்ஙனம் பிரித்தாளுகின்றன என்று.மிகவும் வருந்தத்தக்க இந்தச் சாதியக் கலவரத்துக்குப் பின்னே நடந்தேறும் அரசியல் சதியானது முழுமொத்தத் தமிழக மக்களுக்குமே எதிரானது.சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்தேறியதான சாதியக்கலவரம் வெறும் சாதிய முரண்பாட்டின் "உணர்ச்சிவசமான"தாக்குதலைக் கொண்டியங்கவில்லை.அது,தமிழ்ச் சமூகத்தின் முழுமொத்த அணித்திரட்சியையும் ஆணிவேறு அக்குவேறாக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட உந்தித்தள்ளப்பட்ட தூண்டுதல்களால் அப்பாவித் தலித்து இளைஞர்கள்-மாணவர்கள் மீண்டும் குருதி சிந்த வழிகோலியுள்ளது தமிழ ஆளும் வர்க்கம்.


இந்தப் பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான பார்ப்பனியப் பண்பாடு நாள்தோறும் தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் ஆத்மீக(மதம்) ஊடக மற்றும் கேளிக்கை(சினிமா-சின்னத்திரை) நிகழ்வினூடாகச் செய்துவரும் மானுட அவமானமானது மிகவும் தந்திரமாக உழைப்பவர்களை வேட்டையாடி ஒடுக்கி வருவதில் மிகச் சாதுரியமாகத் தமிழ் தேசியவுணர்வைச் சிதைத்து வருகிறது.இது,ஒவ்வொரு அரசியற் சூழலிலும் ஏதோவொரு வடிவத்தினூடாகச் சாதியக் கலவரமாக மேலே உந்தித் தள்ளப்படுகிறது.இந்தச் சதி சாதியக் கலவரத்துக்கு இந்திய மத்திய அரசியல் கட்சிகள்வரை லிங்குகள் இருக்கின்றன.இது குறித்துக் கிஞ்சித்தும் கவலையின்றிச்"சாதியக் கலவரம்"எனும் போர்வையில் கருத்தாட முடியாது.இது சாரம்சத்தில் தவறானது.


சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது தந்திரம் மிக்கது, இனிவரும் நாட்களில் தமிழக மக்களின் இயல்பான அரசியல் வாழ்வில் வேறொரு பிரக்ஜையைக் கிளறி விடுவதற்கானவொரு சூழலை மிகவும் தந்திரத்தோடு தடுக்கும் நரித்தனமான அரசியலோடு இஃது சம்பந்தமுடையது.


அடுத்துவரும் தேர்தல், அதன் வழியாகத் தமிழகத்தில் மேலெழும் தமிழ்மொழிசார்ந்த பிரக்ஜையை, அன்றாடம் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படும் ஈழத்து மக்களின்மீதான இலங்கைச் சிங்கள அரசுக்கெதிரான தமிழகத்து மக்களின் உணர்வுரீதியான அனைத்து எழிச்சிகளும், தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கி வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்துக்குச் சகிக்க முடியாத அச்சத்தையிட்டு வந்தது.இந்த அச்சத்தை ஜெயலலிதாவின் ஈழ மக்களுக்கான ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் அரசியல் சூதாட்டத்தில் மிக இலகுவாக இனங்காண முடியும்.கூடவே,தமிழுணர்வுமிக்க கலைஞர்கள் சீமான் மற்றும் அமிர் கைதுகளின் பின்னே தன்னைப் பார்ப்பனியத்துக்கு ஒப்புக்கொடுத்த தி.முக. ஆட்சியையும் கவனிக்க.


தமிழகம்(தமிழ் மக்கள்) ஒரு குடையில் திரண்டு நின்று ஈழ மக்களின் துயருக்கான தார்மீக எழிச்சியுறும்போது அதுவே தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினது இருப்புக்கு எதிராக மாறும் என்பது மிக இலகுவாகப் புரியத்தக்க அரசியல்தாம்.இதைக் குறித்தான அரசியல் சூழ்ச்சிகளை மிக இலகுவாகச் செய்து வந்தது பார்ப்பனியத் தந்திரமானது, தமிழகத்தின் தமிழணுர்வுக் கட்சிகளினது ஈழத்துக்கான போராட்டங்களால் தமிழ்த் தேசியவுணர்வு மேலும் விரிந்த தளத்துக்கு வளர்ந்து செல்லுமென்பதைக் குறித்து மிகவேகமாக எடைபோட்ட பார்ப்பனிய ஆளும் வர்க்கமானது, ஓட்டுக்கட்சிரக அரசியலிலிருந்து விலத்திய ஆதிக்கப் பிற சாதிகள்சார்ந்த ஆளும் வர்க்கத்தோடான அரசியல் வியூகத்தோடு, தனக்கான இருப்பைக் குறித்து மிகக் கவலையோடு காத்திருந்து இந்தச் சதிச் சாதியக் கலவரத்துக்குக் காரணிகளை உருவாக்கியுள்ளது.


மக்களின் எதிரிகள் எப்பவும் பற்பல இரூபங்களில் இருந்து கொள்வார்கள்.தமிழக மக்களின் தார்மீக ஆதரவுப் பெருந் தீயில் தன்னையும் பிணைத்தக்கொண்ட பார்பனியக் கட்சிகள்,குழுக்கள்,மடாலயங்கள்,கலைத்துறைப் பிரமுகர்கள்,சினிமாத் தயாரிப்புப் பெருச்சாளி நிறுவனங்கள் யாவும் தமிழக மக்களின் எந்த அணிதிரட்சியையும் சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.எனவே,உள் நுழைந்து கருவறுத்தல் அவர்களுக்குக் கைவந்த கலை.இப்போது அதைக் கட்டவிழ்த்துக் காட்டியுள்ளார்கள்!இத்தகைய ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளை அரசியல்ரீதியாக முறியடிக்க முடியாதளவுக்குத் தமிழகத்தை ஆளும் கட்சி பாப்பனியத்தோடு கைகோர்த்துக் கட்சியாதிக்கத்தையும் மூலதனத்தையையும் காக்க வேண்டிய நிலையில், கருணாநிதியின் குடும்ப அரசியல் பெரும் மூலதனத்தோடு சீரழிந்து ஒடுக்குமுறை வர்க்கமாகத் தமிழகத்தில் நிலவுகிறது.இதையே தமது மூலதனமாகக் கருதும் தமிழகத்துக்கு எதிரான பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கங்கள் முழுமொத்தத் தமிழக மக்களையும் எந்த அரசியல் பிரக்ஜையுமற்ற வெறும் மந்தைகளாக்கும் சினிமாவைக் கருத்தியல் யுத்தமாகவும் பயன்படுத்தியபடி, மறுபுறத்தில் பார்ப்பனிய வர்ண அதர்மத்துக்குச் சார்பான சாதிய வேறுபாட்டைத் தூண்டிச் சாதியக் கலவரத்தூடாக வன்முறைவடிவிலும் தமிழக மக்களை ஒடுக்கி, அவர்களின் குருதியை உறுஞ்சிக் குடிக்கின்றன.

இன்றைய தமிழகமானது வெறுமனவே ஓட்டுக் கட்சிகளின் வாய்ச் சவடால்களின்வழி புரியத் தக்க அரசியல் சமூக வாழ்வைக் கொண்டிருக்கவில்லை.அது மிகவும் கொடிய பார்ப்பனியச் சூழ்ச்சியின் அதர்மத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறை ஜந்திரத்தால் தகவமைக்கப்பட்ட சூழ்ச்சிமிகு வாழ்நிலைகளைக் கொண்டியங்குகிறது.இங்கே,தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்குவதை மிகத் துல்லியமாகக் கவனப்படுத்தி அதற்கெதிரான பார்ப்பனியச் சதி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.அதன் முக்கியகூறாக இருக்கும் இந்தச் சாதியக் கலவரங்கங்கள் யாவும் ஆட்சியதிகாரத்தையும்,பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைப்படுத்த முனையும் பார்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் சம்பந்தப்பட்டது.எனவே,சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியுள் நடந்தேறிய சாதிக்கலவரம் என்பது மிகவும் சதி நிரம்பிய அரசியலோடு சம்பந்தப்பட்டது.


தமிழகத்தைத் தொடர்ந்து சாதிய வேறுபாட்டால் பிரித்துத் தமிழர்களை ஒடுக்கி, அவர்களின் தேசத்தைத் தொடர்ந்து திருடும் பார்ப்பனியச் சதியின் இன்றைய தொடர் நிகழ்வுகள் யாவும் தமிழகத்து மக்களுக்குள் அரசியல் செய்ய முனையும் தமிழ்த் தேசியவுணர்வுடைய கட்சிகளால் மிகவும் கவனமாக ஆராயப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டி, இந்தக் கேடான சதிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.இதைக் கடந்தவொரு எந்தத் தேர்வும் தமிழ்மக்கள் மத்தியில் இருப்பதற்கான சாத்தியக்கூறை இந்தப் பார்ப்பனியச் சதிவிட்டுவைக்கவில்லை.

சமீபகாலமாக நடந்தேறும் தமிழகத்தின் சாதியக் கலவரங்களுக்கு எங்ஙனம் அரசியல் கட்சியாதிக்கத்தின் தொடர்புகள்-சூழ்ச்சிகள் இருக்கின்றதோ அதைவிட இந்தக் கலவரத்துக்கு(அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக்கலவரம்) இந்திய மத்திய அரசியல் கட்சிகளின்வரையான சதி அரசியல் சூழ்ச்சிகள் பிற்காரணமாக-உந்துதலாக இருக்கிறது.இது,தமிழக மக்களின் சகோதரங்கள் ஈழத்தில் பலியெடுக்கப்படும் இந்திய மத்திய அரசின் சூழ்சிக்கு மிக அண்மையாக இருக்கிறது.இதைக் கவனப்படுத்துவதுதாம் இக் கட்டுரையின் மிக முக்கியமானசாரம்.

நாம்,ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிறவேற்றுமை மற்றும் அந்நிய எதிர்ப்பையிட்டு மிகவும் வேதனையோடு இந்த மக்கள் சமுதாயத்தைக் குறித்துக் காறி உமிழ்கிறோம்.அன்றாடம் இந்தக் கேடுகெட்ட இனவாத அரசியலை எதிர்த்துக் கருத்தாடுகிறோம்.ஆனால்,நமது தேசத்தில் ஒரே மொழியைப்பேசுபவர்கள் பார்ப்பனியச் சாதிய அதர்மத்துக்குப் பலியாவதையும்,தமது தேசத்தைத் தமது குருதியால் சிவக்க வைப்பதையும் தடுத்து நிறுத்தும் அரசியலை முன்வைக்க முடியாது திண்டாடுகிறோம்.

எம்மை வேட்டையாடும் இந்தப் பாசிசப் பார்ப்பனியத்தை எங்ஙனம் வீழ்த்துவதென்ற வியூகம் குறித்த அரசியலைப் புரட்சிகரச் சக்திகள்மட்டுமே தீர்மானிக்க முடியும்.இதைக் கருணாநிதி தலைமையிலான-பாணியிலான எந்த ஓட்டுக்கட்சியும் செய்துமுடிக்கும் தகமையற்றுக் கிடக்கின்றன.இத்தகையவொரு சூழலை விரும்பும் பார்பனியச் சதி அரசியல், புரட்சிகரச் சக்திகளைக் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளெனும் போர்வையில் பொலிஸ் நாய்கள் மூலம் என்கவுன்டர் செய்து கொன்றழித்ததையும் தமிழக மக்களும்,புரட்சிகரச் சக்திகளும் மறக்க முடியாது.இதன் தொடர்ச்சியாக இன்று களமிறங்கியுள்ள பார்ப்பனிய அரசியல் தனது வர்க்க-சாதிய நலனுக்காகத் தமிழகத்தை மீளவும் சாதியக் குழறுபடிகளுக்குள் தள்ளி, அந்த மக்களின் தேசிய-மற்றும் தமிழ்த் தன்னடையாளங்களுக்கெதிரானவொரு பாதையில் அவர்களை வீழ்த்தித் தமிழ் தேசியவுணர்வுக்கெதிரான ஆட்சியை மெல்லத் தகவமைக்கும் தந்திரத்தோடு அடுத்த நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தயாராகிறது.இதற்குத் தக்க பதிலடியைப் புரட்சிகர அமைப்புகள் செய்தாகவேண்டும்.

சாதிய வெறிக்குள் தலையைப் புகுத்தித் தனது சொந்தச் சகோதரர்களைப் பலியெடுப்பதைத் தமிழ்பேசும் எவரும் அனுமதிக்க முடியாது!இது,முழுமொத்த மனிகுலத்துக்கே எதிரானது.இதைச் சாத்திர சம்பிரதாயத்தோடு கண்ணியமான கலவரமாகக் கோவில்களில்,சமூகமட்டத்தில் சாதியத்தைக் கௌரவமாகப் பார்ப்பனர்கள் செய்வதும்,அதையே கலவரமாக்கித் தமிழர்களை அழிப்பதும் இனியும் பொறுக்கத் தக்க செயலல்ல.இத்தகைய கலவரத்துக்குப் பின்னே மொத்த இந்தியப் பாப்பன-பனியா ஆளும் வர்க்கமுமே உடந்தையாக இருக்கிறது.இவர்கள்,தமிழக மக்களின் இன்றைய தமிழுணுர்வு எழிச்சிகளை விரும்பவில்லை.அதன் பயனாக இன்னுஞ் செய்யப்போவது பல.இதன் வெள்ளோட்டமே சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2008.
வூப்பெற்றால்
ஜேர்மனி.

Donnerstag, Oktober 16, 2008

இதயத்தின் தரிசனம் இது!

டானியலின் உலகம்:அது இதயத்தின் மொழியாக...





"பூமி அதிர்ந்தது
இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது
இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து
எங்கள் கரைகள் அமிழ்ந்து போயிற்று
எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின".-டானியல்(ஆனந்தப்பா)


ஈர விழியோடு எம்மையெல்லாம் கூவி அழைத்து,சுனாமியின் வலியைத் தன் உணர்வோடும்-வலியோடும் சொன்ன டானியல்-எமது மண்ணின் துயருக்காக எந்தப் பொழுதிலும் சிலுவை சுமப்பதில் தன்னைப் பிணைத்துக்கொண்டவன்-போராளிக் கவிஞன்-கலைஞயன்!.மனிதத் துடிப்புடைய சிந்தனைமிகு இசைஞன்.இலக்கியச் சந்திப்பினது அரங்குகளில் மக்களின் வலிகளைப் பாட்டாகப் படித்துக் காட்டியவன்,தனக்குள் கவிந்திருக்கும் இசைக்கோலங்களை எமது மண்ணின் வலியோடு குழைத்துத் தந்து, எமது விழிகளை அன்றே ஈரவிழிகளாக்கியவன்.சுனாமி அனர்த்தம் கண்டு, உலகின் எந்தக் கவிஞனக்கும் அநுபவமாகாத மொழியைச் சாகா வலியின்மீது கட்டி ஈரவிழிகளாக எமது விழிகளை என்றும் வைத்திருப்பவன்.இன்றோ,அவன் மேலே சொன்னமாதிரி,எம்மிடம் எஞ்சியதெல்லாவற்றையும் நாம் மயானம் ஆக்கிவரும் இன்றைய சூழலில்,ஆனந்தப்பாவின் சிந்தனையின் இசைக்கோலஞ் சொல்லும் இந்தப் புதிய இசைக்கோர்வை பன்னிரெண்டு பாடல்களோடு இணையத்தில் நமக்காகக் காத்திருக்கிறது.



இந்தப் பாடல்களை நாம் எல்லோருமே மிகவும் உள்வாங்கி,அதற்குள் நமது மனக் கோலத்தைத் தரிசிக்க முடியும்!இது புதுமையல்ல.தமிழ்ச் சினிமாவின் பாடல்களைத் தாண்டி நாம் எமது இரசனையை வரிவுப்படத்த அந்தச் சினிமாவிட்டுவைக்கவில்லை.இன்று, இந்தப் பாணியைத் தாண்டித் தரும் எந்தத் தமிழ் இசைக்கோலமும் நம்மிடம் எடுபடுவதில்லை.இதை மிக நேர்த்தியாக உணர்ந்த டானியல் தனது புதிய பாடற்றொகுப்புக்குள் இதைத் தாண்டிக் கடக்கவிரும்பவில்லை!



ஆனந்தப்பா தனது கவியாற்றலை மிகத் துள்ளல் இசையோடிணைத்து உருவாக்கிய பன்னிரு பாடல்களும் நம்மோடு,நமது காதல் மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது.



இப்போதெனக்கு 46 வயது கடந்துவருகிறது.எனினும்,எனது காமத்தினது காதல் விருப்புக்குக் கன்னிக்கோலம் 16 உம்,17உம் படுத்தும்பாடு பெரும்பாடு.இறக்கைகட்டிப் பறக்கும் எனது ஆசைக்கு என்றும் பதினாறு. இந்தவொரு விஷயத்தில் எல்லையென்பதை என்னால் இட்டுக்கொள்ள முடியாதுள்ளது.நான் பார்க்காத உலகத்திலெல்லாம் என் மனம் பாய்ந்து,என்னை அந்தப் பதினாறு வயதுப் பருவத்துப் பொலிவுகளுக்குள் மீளவும்,மீளவும் தள்ளும் இந்த உலகம் மிகவும் உண்மையானது.இதுதாம் உயிரின் இருத்தல்.நித்தியத்தோடு பிணைவதில் எனது உள்ளொளி உருவங்கொள்கிறது!




இன்றையப் பௌதிகப் புரிதலில், ஜேர்மனிய இளம் பௌதிக விஞ்ஞானி மார்க்கோவ் நீம்;(Physiker und Bestsellerautor Prof. Dr. Markolf NIEMZ)கைடில்பேர்க் யூனிவெர்சிட்டியில் பௌதிகம் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பேராசிரியராக இருக்கிறார்.ஒரு பௌதிகவாதி அனைத்தையுமே தரவுகளோடு எடுத்து வைக்கும்போது,இந்த இளம் பேராசிரியர் ஜேர்மனியப் பௌதிக ஆய்வுவட்டத்துக்குள் தனது ஆய்வுகளால் ஒரு பெரும் தாக்கஞ் செய்பவர்.இவர் சொல்கிறார்"ஆன்மாவானது மரணத்தின்பின் ஒளியின் வேகத்தை எடுத்து நித்தியத்தோடு கலந்து விடுகிறது"(Lucy mit c-Mit Lichtgeschwindigkeit ins Jenseits.ISBN 978-3-8334-3739-7).



"ஆன்மா-மரணம்..."



மரணம் குறித்து ஆய்வுகளைச் செய்பவர் மார்க்கோவ் நீம்.ஆன்மா என்பது உயிர்தாங்கிய உடலினது கருப்புப் பெட்டி-Black Box என்கிறார்.அதாவது, விமானத்திலுள்ள பிளக் பொக்ஸ்!



இது குறித்து நான்:


"................."




மரணம்.


இதற்கும் ஆனந்தப்பா பட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் உண்டு!



"ஏய் ஏய் பெண்மணி, வாழ்வு ரொம்பப் பொய்யடி"பாடலில் இந்தக் கோலத்தை நாம் மிக உயர்ந்த கவிதை நயத்தோடு தரிசிக்கலாம்.இங்கே உயிர்வாழ்வின் அற்ப ஆயுளை நாம் அழகுற்ற "அவளிடம்"எடுத்துச் சொல்லி அவளை ஏமாற்றி அநுபவித்தலின் உண்மையில் உலகத்தின் தொடர் படைப்பு நிகழ்ந்து இந்தவுலகத்தை இயக்குவதில் நமது அர்த்தங்கள் மேலும் அழகுடையதாகிறது-ஆன்மா கொலுவுறுகிறது.பொழிவுகள் இங்கே புதுமையுறும் உயிரின் நீட்சியே தவிரக் குறைபடலல்ல-ஊனமும் அல்ல.





மார்கோ நீம் சொல்வதுபோல்"ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அது எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைதொடுகிறது.இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.அது என்னையும் மற்றைய மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைக்கிறது.இது எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில் புதியதைத் தோற்றுவிக்கிறது.இது எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு.




இந்த ஆனந்தப்பாவோ உண்மையின் தளத்தில் நின்று, மரணம் என்பது நிச்சியமானது,இத்தகைய குறுகிய காலத்துள் காழ்ப்புணர்வினது இருண்ட பக்கங்களுக்குள் மனித ஆசைகளைத் தொலைத்து, உயிரின் பெருவிருப்புக்கு எல்லையிடுவதைத் தனது பாடலில் சொல்லாமல் விடவில்லை.மிக இனிமையாகவும்,அழகாவும் பாடல்களைக் கட்டிவைத்து எனது மனதின் இரகசியங்களைச் சுகத்தோடு பாடுகிறார்.இசையின் மிக இயல்பான ஏற்ற இறக்க நிலைகள் மனிதவுணர்வின் மூலைமுடுக்கெல்லாம் இதயத்தின் அழகைப்பாடவைக்கிறது."மனமதானோ மாயவனோ மாலைத் தேச மன்மதனோ"பாடல் வரிகள் இந்த அர்த்தத்தில் பாடப்படுகிறது.



"மெரினா பீச்சிலே குயிலாப் போகுது,மைனா யாரது,லைலா பெயரெது?"எனும் பாடலின் சுகம் தாலாட்டும் எனது விருப்பை-எனக்குள் இழையோடும் பெரு விருப்பை.சின்ன இடை சொல்லும் அர்த்தம் கோடி.சுகத்தின் அழகு அங்கே அடுக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை உதிர்க்கும்போது இதயத்தின் உன்னதமான இருப்பு மேலெழும் இரத்த ஓட்டத்தின் கட்டுக்கடங்காத பாய்தலில் புரிந்துபோகிறதா? அதுதாம் உண்மை நெஞ்சே!


இதுவொரு தியான நிலை.


என்னையும் எனதும் இருப்பையும் சதா உணர்த்துவது எனது எதிர்பால்வினையே!இதைக்கடந்தவொரு பெரும் அழகு உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன்!இதை மறுத்துவிட்டு பிரமத்தோடு கதைவிடுவதில் பெரும் தவத்தடிகள் நம்மை முடக்கியுள்ளார்கள்.இங்கே, ஊசியில் நூலாய் என்னைக் கோர்த்துவிடும் டானியலின் இந்தப்பாடல்கள் எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இளநங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.


"ஊர்வசியின் பெண்ணா,மேனகியின் கண்ணா,பூர்வீகம் என்ன?" டானியல் இப்படிக் கேட்டுவைக்கிறான்!



கவிஞர்கள் பெண்களை ஊர்வசிக்கு மேனகைக்கு ஒப்பிட்ட தலைமுறைபோய்,இப்போது இந்தக் கவிஞனோ தலைமுறை இடைவெளியைத் தனக்குள் உணர்ந்து ஊர்வசியின் பெண்ணா என்று அடுத்தகட்டத்துக்கே போய்விட்டான்!என்னவொரு கற்பனை?இவன் காலத்தில் வாழும் கவிஞனல்லோ!இது புகழ்தல் அல்ல-வியப்பு.எனக்குள் வசமாகும் அவன் மொழியினது அனுபவப் பிரதி, என்னில் உலகத்தின் பொதுத் தன்மையைக் காணத் தவறவில்லை.




"சோனா,சோனா சொல்லாமற் போனா"எனும் பாடலில் பிரிவின் துயரைப் "புதுப்பொலிவோடு"சிதறடித்து, வலியைக்கூட வாழ்வின் அடுத்த தரிசனமென அறிந்து அந்த வாழ்வின் அழகோடு இனம் காண்கிறது கற்பனையாற்றல்.பின்பு,வாழ்வின் குறை ஆயுளோடு தனது வலியைச் சரிவு நிலைக்கிட்டுச் செல்வதில் மனித இருப்பை மேலும் உறுதிப்படுத்த அடுத்த கட்டத்தைச் தரிசிக்கச் செய்வதில் ஆனந்தப்பாவின் பாடல் வெற்றிகொள்கிறது.இந்தத் தெரிவு மனிதத் தொடுநிலையை உண்மையாக உருவமாக்கிவிடுகிறது!




இஃது, அர்தங்கள் சொல்லிப் புரிவதில்லை.ஒரு அனுபவமாக நமக்குள் விரியும் இசைத் தொகுப்பு.



என்றும் வலிகளைச் சொல்லி மனித விருத்தியைத் துண்டித்துப் படைப்பாற்றலைச் சிதைக்கும் குறைகளோடு வலம்வராது,தான் காணும் குறைப்பாடுடைய உலக நிதர்சனத்தில் "அழகு அவலட்சணம்" எனும் எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துப்போடும் நிலைதாண்டிப் பாடல்களைக் கட்டுகிறார்.நெஞ்சின் வலிகளை நிசவுலகத்தில் வைத்து உடைத்துப்பாக்கிற டானியல் "விருத்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.


தமிழ்க் கதையுலகத்தின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனது எந்தக் கதைகளை எடுத்தாலும் அது மனித அழகைச் சொல்வது.அங்கே,எதிர்மறையான பல தன்னிலைகளின் வாழ்வும்,இருத்தலும் அங்கீகரிக்கப்பட்டு அங்கேயும் ஒரு உன்னத மனம் இருப்பதைப் புரிய வைப்பது.


இத்தகையவொரு நிலையை ஆனந்தப்பாவின் ஒரு பாடலில் இனம் காணமுடியம்.அந்தப் பாடல்தாம்"ஐ ஆம் இந்தியன்,ஐ லவ் இந்தியா"எனும் பாடல்.


இங்கே,இந்தியாவின் இன்றைய கோலத்தை நாம் தரிசித்து வருபவர்கள்.அந்த இந்தியா கொடுமைமிகு இந்தியா.சாதி சொல்லி மனிதரை அடக்கும்,உழைப்பவர்களை நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும்.உரிமை கேட்டுப் போரிடுபவரை குண்டாந்தடிப் பொலிசைக்கொண்டு மண்டையைப் பிளக்கும்.மிகக் கொடுமையான இந்த இந்தியாவை அவன் தனது விருப்பத்தின்படி அழகாக்க விரும்புகிறான்.தான் காணும் இந்தியா இப்படி வருவதில் அவன் ஆசைப்படுகிறான்.இந்த அவனது பெருவிருப்பு இந்தியாவின் அழகாக,உச்சமாக விரிகிறது.


இத்தகைய விருப்பு எமது மனத்தின் தவிப்புதம்தாம்.

இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டானவொரு உலகாகத் திகழ்வது எமது விருப்பு.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு மாறானது.எனினும்,இந்தியா ஒரு நாள் இதை உடைத்து முன்னேறும்.அந்தளவுக்கு அதன் உழைக்கும் மக்கள் அழகுடையவர்கள்.அந்த மனித அழகு நிச்சியம் இந்தியாவை விடுவிக்கும்.இதை ஆனந்தப்பா மிக நேரத்துக்கே இனம் காண்கிறார்.போற்றிப் பாடுகிறார் தான் காணும் தரிசனத்தோடு.இவனல்லோ உன்னதமான கவிஞன்!


இதயத்தின் தரிசனம் இது!


கேட்கத்தக்க இசையோடு பிணைக்கப்பட்ட ஆனந்தப்பாவின் கவிதைகள் மிகச் சாதாரணமான மனிதத் தொடு கணங்கள் என ஒதுக்கப்பட முடியாதவை.அவை,மனித உந்து சக்தி.இத்தகைய தரிசனங்களேதாம் இதுவரை இந்த உலகத்தை மாற்றித் தகவமைக்கிறது.அது அடக்கு முறைகளை உடைக்கக் களத்திலும் நிற்கும் அதுபோல காதலிலும் நிற்கும்.இந்த இரு நிலைகளும் அந்தப் பெரும் ஊற்றான எதிர்ப்பால் வினையின் இரண்டு பக்கமே.வாழ்க, சிக்மன் பொரைட்!


இப்போது,பாடல்களை அமைதியாக இங்கே சென்று கேளுங்கள்.


http://www.a4anandappa.com/


கேட்கும்போதே காலத்துக்கேற்ற இதயத்தின் மொழியை உணர்வீர்கள்!


அந்த மொழி நம் எல்லோரதும் மொழியே!.அதைப் பாடலாக்கிய என் அருமை டானியலை-கவிஞனை-அழகுடைய அந்த இசை மனதை நான் மதிக்கிறேன்.வியந்து பெருமிதம் கொள்வதில் என் இதயத்தோடு நெருங்குகிறேன்.


(பிற்குறிப்பு: இப்பாடல்களை நிச்சியம் டி.ஜே.தமிழன் கேட்டுக் குறிப்பு எழுதணும்.இது எனது பெரும் அவா!)


நட்போடு,


ப.வி.ஸ்ரீரங்கன்.12.10.2008