Donnerstag, Mai 30, 2013

சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்

பொதுபல சேனவின் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலம்:

-சில குறிப்புகள்.

" ன்றைய இந் நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்" திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக் கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!"

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைச் செல்வ-மற்றும் இயற்கை-மனித வளச் சுரண்டலிலிருந்து தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் சாதிய அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.



குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன்மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.

இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதே எமது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி எம்மை இது, அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில் மேலும், இராணுவவாதம் மற்றும் கட்சி-இயக்க ஆதிக்கமானது பாசிசப் போக்கில் , வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.பொதுபல சேனவின் உருவாக்கமும்,அரசியலுரையாடலும் அவர்களது அமுக்க அரசியற் செயற்பாடும் மிருகவதைக்காகவுயிர்விடுவதென்ற எல்லைவரையொரு அடையாள எதிர்ப்பு மற்றும், இனவுறுதிப்படுத்தலுக்கானவூக்கத்தின் மூலம் தேசத்தின் உரித்துக் குறிப்பிட்டவொரு இனத்துக்கும், மதத்துக்குமானதென்ற அடையாளப் பலப்படுத்தல் அரசியலாகவுச்சம் பெறுகிறதென்பதை நாம் அவதானித்தாகவேண்டும்.பொதுபல சேனவை வெறும் இனவாத அரசியல் மகுடித்தனமெனவும் அஃது, இராஜபட்ஷவின் தூண்டுதலின் வினையெனவும் குறுக்குவதுகூட ஆபாத்தானது.






இதைச் சற்று விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், புலத்துத் தமிழர்களும்,பெரும் பான்மைப் புலிப் பினாமிகளும் மேற்குலக லொபிகளாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலுப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்கு நிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்"தமீழம்"சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: பொதுபல சேனவின் உருவாக்கமும்  பேரினவாதத்துக்கிசைவான அரசியல்-அடையாள எதிர்ப்புப் போராட்டங்களும் இலங்கைச் சிறுபான்மை இனங்களைச் சீண்டி அவர்களது எதிர்ப்பரசியலைக் குறுந்தேசிய வாதமாகச் சிதைத்து, அவர்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை சிங்கள ஆளும் வர்க்கத்துக்குப்  "புதிய உத்வேகமாக" வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் "புலியழிப்பு"யுத்தத்தைப் போற்றும்-சிறப்புச் செய்யும் வெற்றிவாகைக் கொண்டா ட்டத்தின் வழியிலான பெரும்பான்மை இனத்தின் அகவிருப்பும்(வரலாற்றில் துட்டக் கைமுனுவின் இடம்) அதுசார்ந்த பெருமகிழ்வுங்கூடச்  சிறுபான்மை இனங்களது எதிர்பரசியலது மேற்குலகச் சாயல்- தெரிவுகொண்டு,இலங்கையினது "ஒரே" தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூக வாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மனங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,இராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்று மண்ணில் மக்கள் மன்றம் மன்றும் சமூக நிறுவனங்கள் மீளவும், தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.பொதுபல சேன இதை நோக்கியே அரசியலைச் செய்வதென்பதில் எமக்கெந்தச் சந்தேகமுமில்லை!

இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய சிங்கள அரசு இலங்கைச் சிறுபான்மை இனங்களைக் கட்டயாக "இணக்க அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன்னுள்ள எந்தத் தெரிவும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறுவடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!




தமிழ் நிலத்தின் இன்றைய சிங்கள அரச ஆதிக்கமானது கடந்த மூன்று தசாப்த காலமாவிழந்த தனது "அரச ஆதிக்கத்தை"த் தொடர்ந்து தமிழ் மண்ணிற்றகவமைத்து நிலைப்படுத்துவதற்காகவே வியூகத்து,அதற்கமையவே வன்முறைசார் கருத்தியற் கட்டுமானங்களைத் தொடர்ந்து மேல் மட்டமாக வுயர்த்துகிறது. சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிக் கட்டுமானமானது சுயாட்சையாகவேனும் ஒரு தேசியத் தெரிவையெடுக்க முடியாதிருக்கும்இலங்கை தழுவியப் பல் தேசியப் பொருளாதாரப் பாச்சலில் குறுக்குவெட்டாய் மேலெழுந்த ஆசிய மூல தனத்தின் இசைவான நட்பார்ந்த கூட்டொத்துழைப்பில் கீழ்காணும் ஆதிக்கத் தகவமைபை அது தொடர்ந்து நிலப்படுத்தவும் முடிகிறது.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசர காலச் சட்டம் தொடரும் போக்கில் அரச ஆதிக்கமான அரச ஜந்திரத்தின் வழியிலும், பொருண்மிய வழியிலும்மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தால் மட்டுமல்லத் தமிழ்க் குட்டி முதலாளிகளாலுங் கூடத் தமது உரிமைகளை இழந்து அழியவே செய்கின்றனர்.

இத்தகைய அரசியல் நகர்வின் விளைவாய்ச் சிறுபான்மை இனங்களது எதிர்காலமானது இருள்மயமானது.குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களது தலைவிதியே கேள்விக் குறியாகும் என்பதை இங்ஙனம் விளங்கியாகவேண்டும்:


=> தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

=>  சிவில் சமூக மன்றங்களது உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

=> தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.இராணுவத்தின் ஒட்டுக் குழுக்களாகவொரு புதிய தமிழ் மாபியப் பொருளாதாரம் உருவாக்கித் தமிழ்பேசும் மக்களை அனைத்து வழிகளிலும் ஆயுத ரீதியாகச் சுரண்டுவார்கள்.

=> பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

=>  பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.

=> இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு,; தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.

=> மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பயன்படுத்துவதும்,தமக்கான நலனை இலங்கையில் உறுத்திப்படுத்தவும் புலத்துத் தமிழர்களைப் பயன்படுத்தும்.


இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,"தமிழ் தேசியம்"உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.05.2013


P/S: 
 படங்கள் சோனகர்.கொம்,மற்றும் இனியொருவிலிருந்து எடுக்கப்பட்டது.அவர்களுக்கு நன்றி.

Sonntag, Mai 19, 2013

இந்தத் தமிழினம் வாழுமா?

"ஈழத் தமிழனுக்கு" விடுதலை ஒரு கேடா?-தூ!


மிழர்கள் படு மோசமானவர்கள்.உலகத்துள் எப்போதும் ,தமது பிழைப்புக்காக மற்றவர்களது கண்ணீரையும்,தேசவழிப்பையும் நியாயப்படுத்தித் தமது எசமானர்களிடம் தமக்குப் பங்கு கேட்பவர்கள்.

ஈராக்கில் ,இலிபியாவில் ,யுக்கோஸ்லோவியாவில் எத்தனை இலட்சம் மக்களை அமெரிக்க -மேற்குலக ஏகாதிபத்தியங்கள் கொன்றன?

அந்த மக்களது இன்றைய அவலத்தை ,நியாயப்படுத்தும் இந்தத் தமிழர்கள் தமக்கு நியாயம் வேண்டுமெனப் பாசிச ஏகாதிபத்தியவாதிகள் செய்த கொலைகளை நியாயமென அட்டை தூக்கி வீதிக்கு வருவது வேடிக்கையானது.





உலகத்துள்  அமெரிக்க -மேற்குலகப் பாசிச வாதிகளால் அடிமைப்படுத்தப்படும் ஈராக்க, இலிபிய, யுக்கோஸ்லோவிய மக்களையெல்லாம் இந்த ஏகாதிபத்தியத்துக் காட்டிக்கொடுக்கும் தமிழர்கள் ,விடுதலை பெறுவதென்பது பாவமான செயல்!

இவர்கள் ,இந்தப் புவிப்பரப்பில் வாழ்வதே கொடுமையானதென இந்த அட்டைகள் பேசுகின்றன!

இதனாற்றான் இத்தகைய மோசாமான ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தமிழர்களது அரசியலுக்கும்-போராட்டத்துக்கும் எந்த முற்போக்குத் தேசமும் தலை சாய்ப்பதே இல்லை!

குறிப்பாகக் கியூபா மற்றும் வெனிசூலா , தேசங்கள் கூடத் தமிழர்களது பிழைப்பு வாதத்துக்கெதிராகவே நமது மக்களது அழிப்பைக் கண்டுகொள்ளவில்லை!

பல இலட்சக் கணக்கான மக்களை அரபுத்தேசத்தில் அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் ,பொய்யைச் சொல்லி அவர்களது தலைவர்களைக் [Saddam Hussein,Muammar Muhammad Abdassalam Abu Minyar al-Gaddafi,Slobodan Milošević ]கொன்றுபோட்டத்தை நீதியென்று உதாரணப்படுத்தும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளையும் ,அவர்களது பின்னே தலையசைக்கும் புலம்பெயர் இளைய மந்தைக் கூட்டத்தையும்  எந்த அறமும் மன்னிக்கவே மாட்டாது.

இந்தவினம்  ஏகாதிபத்தியங்களது தயவில் பிழைப்புக்காகக் கொலை செய்யவும் ,மற்றைய இனங்களது அழிவைப் பார்த்து மகிழவுமே பழக்கப்பட்டது.

ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய ஏகாதிபத்தியங்களுக்குக் கூஜாத் தூக்கும் கயமைத்தனமான அரசியில் ஏற்படுத்தி விடுகிறது.

இதற்கு, எந்த ஆன்மீக - அரசியல் அறமும் ஒரு பொருட்டே இல்லை.

"யாரு செத்தாலும் பறுவாயில்லை அள்ளுவதற்குச் சில்லறைகள் இருந்தால் போதும்"என்று, ஏகாதிபத்தியங்களை அண்டி உலகத்தை வேட்டையாட முனையும் அந்த அழிவுவாதிகளை நியாப்படுத்திப் பிற தேசங்களது இறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்தத் தமிழினம் வாழுமா?






அழிவார்-அறுப்பார்"தமிழீழ விடுதலை" சொல்லிப் பிழைப்பு வாதிகளாகவும் ,அந்நிய அடியாட்படையாகவும் இருந்தபடி சொந்த மக்களை இலட்சக்கணக்காய் அழித்ததும் இந்தக் கண்ணோட்டத்தாற்றாம்.

தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?

பிறதேசங்களது அழிவை நியாப்படுத்தும் நீங்கள் ,அழிவதை மற்றவர்களும் நியாப்படுத்தும் தருணங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள்-நாசமாய்ப்போவார்!

ப.வி.ஶ்ரீரங்கன்
19.05.2013

Sonntag, Mai 12, 2013

ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்

ஜேர்மனியப் பாசிசத்திடமிருந்து பல மில்லியன் மக்களை விடுவித்ததும்,பாசிசத்தை ஒட்ட வேரறுத்ததும் சோவியத்தின் செம்படைகளே!அந்த நாள் மே 8 -9.05.1945.

ஜேர்மனியப் பாசிச ஆளும் வர்க்கத்தின் அடியாள் கிட்லரது நாசியப் படைகளது சரணடைவும்-சாவும் பல மில்லியன் மக்களது உயிர் காப்போடு முடித்து வைத்தவர் தோழர் ஸ்டாலின்.

அன்று,தோல்வி கண்ட சில பாசிஸ்ட்டுக்களைக் காத்து, தன்னோடு அழைத்துச் சென்ற அமெரிக்கா இன்று, மிகப் பெரும் பாசிச அரசாக நிலைபெற்று உலகை வேரறுக்கும்போது நம்மிடம் ஒரு சோவியத்து அரசும்-செம்படையும் இல்லை!






இதுவே,உலகத்து மக்களது மீள் தோல்வியாக இருக்கிறது.

எனினும்,மக்கள் மீளச் செம்படைகளாக மேலெழுவர்.

பாசிசத்துக்கெதிரான புரட்சிகர நடவடிக்கைக்கு ஆதாரவாக எழுதப்பட்ட இக் கவிதையைத் தமிழ்ப்படுத்துவதும் ,பாசிசத்தை வீழ்த்தும் அவசியத்துள் பல மில்லியன்கள் மக்கள் கட்டுண்டு போன அன்றைய சூழலைப்போலவே இன்று ,உலகம் ழுமுதும் கிடப்பதைப் புரிவதும் ,புரட்சியின் அவசியம் முன்னெப்போதையும் விடத் தற்போதே அவசியமானதென்றுணருவதும் எனக்குச் சாத்தியமாச்சு.

-ப.வி.ஶ்ரீரங்கன்
09.05.2013


அன்று,செம்படைக்கு நன்றி தெரிவித்து, அவர்களால் காக்கப்பட்டவொரு பாட்டாளியக் கவிஞன் இப்படிக் கவிதை வடித்தான்:


இதயமொப்பிய நன்றி,
சோவியற் செம்படைகளுக்கு...

கிட்லரது பாசிசத்தின் முன்
அடிமையாய்-கட்டாயத்துக்குள்
நிர்பந்திக்கப்பட்டு "வேலை செய்யும்வரை"
உயிர் வாழலாமெனக் கிடந்த நம்மை
அனைத்துக் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்து
விடுவித்தவர்கள் எவர்கள்?
அவர்களேதாம் சோவியத்தின் செம்படை வீரர்கள்,
சோவியத்தின் மாவீரர்கள்.
சோவியற் செம்படைகளே,உங்களுக்கு நன்றி,
நீங்களே,சோவியத்தின் மகாப்பெரும்தியாகிகள்!





அனைத்திலும் சிறப்புடையதும்
அழகானதுமான ஜேர்மனியப் பாட்டாளிய வர்க்கத்தின் புதல்வன்
நன்றியென்ற ஒன்றைச் சொல்வதாகவிருந்தால்
யாருக்குச் சொல்ல முனைவான்?
அவன் நன்றியுரைப்பான்
சிந்தப்பட்ட குருதிக்குச் சொந்தமான புதல்வனுக்கே,
அவனே புரட்சியின் புதல்வன்!
செம் புதல்வர்களது குருதியை மறந்திடாதே,
அவர்கள் புரட்சியின் புதல்வர்கள்!



புரட்சி ஒளி வெள்ளத்தால்
உலகம் சூழ்ந்து கிடந்திருக்க-
நாம் அஃதை, ஏலவே உணர்ந்திருந்தோம்:
அனைத்து மகிழ்வுக்காவும் குருதி சிந்தப்பட்டது
இதுவே சோவியத்தின் இதயம்.
சோவியத்து வீரப் புதல்வன் உனக்காகவும்
தன் குருதியைச் சிந்தினான்,
இஃதுதாம் சோவியத்தின் புரட்சி இதயம்!

இதைக் கண்ட நட்ஷத்திரங்கள்
முடிவின்றிப் பிரகாசித்தபடி கீதமிசைகின்றன:
சோவியத் புதல்வன் தன் குருதியால்
உலகைத் தழைக்கை வைத்தான்,
அந்த வீரக் குருதியானது  சோவியத்துக்கே உரியது.
அவன் உலகைச் சமாதானத்துக்கும்,
அமைதிக்கும் உள்ளாக்கினான்
அந்தப் பலத்தை அவனுக்கு அருளியது
சோவியத்தின் பலமான மக்கள் அரசே!


-ஜொஹானெஸ் ஆர்.பெக்கர்

( இவர், ஜேர்மனியில் ஒரு அழுத்தமான குறியீட்டுக் கவிஞரும்,கிழக்கு ஜேர்மனிய முன்னாள் கலை-பண்பாட்டுத்துறை மந்திரியுமாவர்.கூடவே,கிழக்கு ஜேர்மனியின் தேசிய கீதத்தையும் இவரே எழுதினார்.)



    8. Mai - Tag der Befreiung vom Nazi-Faschismus


Dank Euch, Ihr Sowjetsoldaten

Wer hat vollbracht all die Taten
Die uns befreit von der Fron?
Es waren die Sowjetsoldaten,
Die Helden der Sowjetunion.
Dank Euch, Ihr Sowjetsoldaten,
Euch Helden der Sowjetunion!

Wem dankt all das Gute und Schöne
Der deutsche Arbeitersohn?
Er dankt es dem Blut der Söhne,
Der Söhne der Revolution!
Vergeßt nicht das Blut der Söhne,
Der Söhne der Revolution!






Die Welt vom Licht überflutet -
Wir wußten es immer schon:
Für aller Glück hat geblutet
Das Herz der Sowjetunion.
Es hat auch für dich geblutet,
Das Herz der Sowjetunion!

Sterne unendliches Glühen
Lieder singen davon:
Es brachte die Welt zum Blühen
Das Blut der Sowjetunion.
Es brachte der Welt den Frieden
Die Macht der Sowjetunion

Von Johannes R. Becher  [ Johannes Robert Becher (* 22. Mai 1891 in München; † 11. Oktober 1958 in Ost-Berlin) war ein deutscher expressionistischer Dichter und Politiker, Minister für Kultur sowie erster Präsident des Kulturbundes der DDR. Bekannt ist er auch als Verfasser des Textes der Nationalhymne der DDR. http://www.dhm.de/lemo/html/biografien/BecherJohannes/    ]

Samstag, Mai 04, 2013

இலங்கை அரசு, இனவாத அரசென்பது பொய்யானது.

அசோக்கின் கட்டுரையை முன்வைத்து இலங்கை அரசினது புலத்து லொபிகளைப் புரிந்து கொள்ளல் என்பது...

சோக்கினது கட்டுரையில் பேசப்படும் விடையங்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்படவேண்டும்.இன்றைய பிளவுவாத அரசியலை வகுத்தியங்கும் சிங்கள அரசு மற்றும் இந்தியப் பிராந்திய நலனும் பரவலாகத் "தலித்துவ" அமைப்புகளையும் , பிரதேசவாதப் பிளவு வாதத்தையும் கூர்மைப்படுத்தும் கருத்தியலைப் பிழைப்புவாதிகளது நலனோடிணைத்துக் கருத்துப் பரப்புரை செய்கிறது.

இதன் வழித் தமிழ்பேசும் மக்களைப் பிளப்பதற்காகவே கருணா-பிள்ளையான் குழுவைக் கட்டிக் கிழக்குப் பிரதேச வாதத்தைத் திறம்படச் செய்தன ,இத்தகைய நலன்கள் -அரசுகள்.

இதன் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்ட  பிரான்சுத் தலித்துவது முன்னணியும் அதன்  உறுப்பினர்களும் மற்றும் கிழக்கைப் பிளப்பதில் தனக்கான ஆதாயத்தைக் கண்டடைந்த பிழைப்புவாதியும் ,ஆட்காட்டியுமான ஞானமும் இதன் உச்சக்கட்டமான இயங்கு தளத்தை நமக்குள் நிகழ்த்திக்காட்டினர்.

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை வியூகம்:

கிழக்கைப் பிளந்த இந்திய-இலங்கை ஆளும் வர்க்கங்கள் ,தமிழ்ப் பிரதேசமெங்கும் ஒட்டுக் குழுக்களை வைத்து மக்களை ஆயுதத்தால் அச்சமூட்டியும், அடிமைப்படுத்தியும் வந்தன.புலிகளது அதே பாணியில் ,இத்தகைய குழுக்கள் மக்களை அச்சமூட்டி அடிமைப்படுத்தியதுமல்லாது சாதிரீதியாகவும்-பிரதேச ரீதியாகவும் பிளந்தனர்.இதன் தொடரில் அராசகம் புரிந்த பிள்ளையானோடு இன்றுவரை கைக் கோற்கும் ஞானம் , பிள்ளையானின் அரசியல் ஆலோசகர் என்பதும் ,அந்த அரசியலுக்குக் கருத்தியல் வலுக்கொடுப்பதென்பதும்,  இலங்கை அரசினது தமிழர்கள்மீதான ஒடுக்குமுறைக்கு ஒத்தோடுவதென்பதும் ,அதன்வழியான அரசியலானது முற்று முழுதாக இந்திய நலனுக்குட்பட்டதென்பதும் நாம் அறிந்ததே.

பிள்ளையானது கட்சியின் உறுப்பினனான ஞானம் தேர்தல் பரப்புரை செய்து, அடவாடித்தனமாக மக்களை வெருட்டிய பிள்ளையானுக்குத் தோழமையானவரென்பதும் ,சட்டபூர்வ ஆலோசகரென்பதும் உரறிந்ததே.

இலங்கை அரசுக்கும் அதன்  இராணுவ ஆதிக்கத்துக்கும் ,தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கும் உடந்தையாகவே அரசியலை முன்னெடுக்கும் பிள்ளையான்-கருணா மற்றும் கே.பி. ,டக்ளசு போறோரெல்லாம் இலங்கை அரசினது  அரசியல் செல்வாக்குக்குட்பட்டவர்களானாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசினது செல்வாக்குக்குட்பட்ட லொபிக் குறுப்புகளே. இங்கே, இவர்களை மெல்ல இயக்கும் வரதராசப் பெருமாளையும் இனங்காட்ட வேண்டும்அசோக் இந்தத் தளத்திலும் இயங்கும் அரசியலைக் குறித்துப் பேச வேண்டும்.இவர்களனைவருமே ஆபத்தானவர்கள்.

சோபாசக்தி போன்றோரை இந்தப்புள்ளியில் புரியவேண்டுமானால் "வரதாசாப் பெருமாளுக்கு ஈழப்போராட்டத்துள் ஆக்க பூர்வமான வரலாறொன்று இருக்கிறது" என்ற சோபாசக்தியின் கருத்திலிருந்து புரியும் அரசியலானது இந்தத்  தளத்தை மேலும் புரிய வைக்கும்.

அன்று ,இந்திய ஆமிகளோடு கப்பலேறிய அரசியலானது தமிழ்பேசும் மக்களது நலனுக்கான தெரிவில்லை!அது,முற்று முழுதாக இந்திய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும் ஒரு நிகழ்சியாகும்.

இப்போது,அசோக்கைப் புரியும்போது மிகச் சரியாகவே இத்தகைய பிளவு வாதிகளையும் இந்திய  இலங்கைக் கைக்கூலிகளையும்  கணித்துச் சொல்கிறார்.

இந்தச் சதியாளர்கள்தாம் இலங்கைக்கும்-புலத்துக்குமாகப் பறந்து, பறந்து  அரசியல் செய்வதிலிருந்து இலங்கைக்குப் புலத்து மக்களைக் காட்டிக் கொடுப்பதுவரை இவர்களது தெரிவாக இருக்கிறது.இத்தகைய இலங்கை -இந்தியக் கூலிகளைச் சாதரண நபர்களாக்கும் முயற்சியின் தெரிவாகவே இவர்கள் ,இலக்கியம்-சந்திப்புகள் ,கலந்துரையாடலெனச் செய்து மாற்றுக் கருத்துடையவர்களைத் தமக்குள் கிரகிக்கும் போது இது,சதியை மேலும் அரசியற்றளத்தில் வலுவாக்கிறது.இவர்களோடு வாசுதேவன் போன்றவர்கள்கூட  அரசியல்-கலந்துரையாடல் செய்யும்போது எனக்கு வாசுதேவன் பேசும் தேசியம்-புலிவழியான போராட்டம் புரியும் தளமானது பிழைப்புவாதம் மட்டுமல்ல.இதுவும் ,ஒருவகை இந்திய லொபி அரசியலே!

ஒருவகை  லொபி:





இங்கேயிதை மேலும் விரித்துச் சொல்வதானால் முள்ளி வாய்க்காலுக்குப் பின் யாழ்ப்பாணஞ் சென்ற தேவதாசன்-இராகவன்(முன்னாள் புலிகளது இயக்க-மத்திய குழுவின் முன்னணித் தலைவர்)மற்றும், சுகன் போன்றவர்கள் யாழ்பாணத்திலியங்கும் இந்திய-இலங்கை அரசுகள்சார்  குகதாசனின்   தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தோன்றித் தமது பேட்டிகளை வாரி வழங்கினர்.அப்போது, யாழ்ப்பாணத்தில் கந்தோரோடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று ஆவணமான புத்தர் சிலைகள் குறித்துக் கருத்துச் சொன்ன வரலாற்று மேதை இராகவன்: "இவைகளெல்லாம் உறுதிப்படுத்தும் உண்மைகள், சிங்கள மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னமே இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான ஆதாரம்" என்றார்.

இதையும் மீறித் தேவதாசனும்,இராகவனும் அழுத்தமாகச் சொன்ன இன்னொரு கருத்தானது"தமிழ்பேசும் மக்கள்,தமிழர்கள்என்ற அடையாளத்தோடு செயற்படாது நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்-நாட்டை வளர்க்கவேண்டும்-காக்கவேண்டும்" என்றார்கள்.

இஃது, 2010-11 க்குள் நிகழ்ந்த இலங்கை அரசு-இந்திய வியூகத்தினது தயாரிப்பாகவே அன்று நான் பிரித்துடைத்துச் சொன்ன பதில்.இது குறித்துத் தூண்டிலிலும்,ஜனநாயகத்திலும் நான் பதிவுகளைப் பதிந்தே வைத்திருக்கிறேன்.

இந்தப் பல்வேறுபட்ட இலங்கை இந்திய நலன்களுக்குடந்தையான இத்தகைய பிழைப்புவாதிகளைக் குறித்து அசோக் நேர்மையாகப் பேசுகிறார்.மக்கள் நலன்சார்ந்து தோழர் அசோக் பேசுவது மிகவும் வரலாற்றுத் தேவையானது.
ஏனென்றால் நிர்மலா குழுவின் முக்கிய புள்ளி இராகவன் பேசுவதை மேலும் பாருங்கள் .இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும்  மேலும் வடமாகாணம் தனியே தமிழருக்குரியதல்ல அங்கே சிங்களவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்வதாகவும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன்  சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாதத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது இவர்களுக்கு.இந்தச் சந்தர்ப்பவாதமானது காலவோட்டத்தில் தமிழ் மக்களை அரசியலுரிமையற்ற மந்தைக் கூட்டமாக்கும் நரித்தனமான சிங்கள ஆளும் வர்க்கதஇதுக்குத் துணைபோவதே!இது வரலாற்றை மட்டுமா புரட்டும்?-முடிந்தால் சிங்கள இராணுவத்தின் ஒடுக்குமுறைகளைக்கூட  இத்தகைய குழுக்கள் நியாயப்படுத்துவதும் அதன் தளத்தில் இது வேளாளரின் பொய்யென்றும் சிங்கள இனவாத அரசுக்குத் துணைபோவதிலிருந்து தமது இருப்பை உறுதிப்படுத்தும்.

பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம் :

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே..ஆனால் இராகவன்-நிர்மலா போன்றவர்களும் இவர்களைப்போலவே பிளவுவாத அரசில் செய்யும் ஊக்கங்கொண்ட மேற் சொன்னவர்கனளும் சந்திக்கும் புள்ளி இலங்கை -இந்திய மற்றும் அந்நிய ஆர்வங்களுக்காகத் தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்தலோடு இலங்கையின் புரட்சியைக் காயடித்தலென்பதே இதன் அர்த்தம்!

இத்தோடு புலத்துத் தலித்துவக் குழுக்களது போலித்தனமான கோசத்தை நாம் மேலும் பார்ப்போம்.இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின் கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தள்ளப்பட்ட புலத்துத் தலித்துவக் குழுக்கள் தமது எசமானர்களது நலத்தின் பொருட்டு ,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும் கூடவே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகின்றனர்.இது திட்டமிட்ட சதி!

சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது:





கடந்த 600 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.ஆனாலும், இவர்கள் அதைத் தெரிந்தே செய்கின்றனர்.இதுதாம் இவர்களுக்கான நிகழ்சி நிரல்.இதை வகைப்படுத்தி இயக்கும் ஒடுக்குமுறையாளர்கள் ,தமது இலக்குத் தமிழ் மக்களைப் பிளப்பதென்பதால் இத்தகைய பிளவை அரசியல் ரீதியாக இயக்கவும் ,அதைச் சட்ட ரீதியாக்கவும் முயலும் கருத்துக்களைக் கட்டுகின்றனர்.அதுவே, ஒருகட்டத்துள் சாதியச் சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அது, "சுதேசி அடையாளமாக" க் கருத்தியற்றளத்தில் ஏற்கப்பட்டுச் சலுகைகளை வழங்குவதிலிருந்து அதை நிலைப்படுத்தவும் ,அதன்வழியில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரள்வதைத் தடுப்பதிலும் கவனமாக இருக்கின்றனர்.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்”தமிழீழப் போராட்டம்”குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.இதிற்றாம் ஞானத்தின்-தேவதாசனின் இராகவனின் ,நிர்மலாவின் பாத்திரங்களைப் புலத்தில் உருவாக்குகிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவேண்டும்.இலங்கை அரசானது இந்தியாவின் வியூகத்துக்கமைய தனக்காவும் ஒரு லொபிக் குழுவை உருவாக்கிக்கொண்டாலும், அத்தகைய குழுவானது இந்திய ரோவுக்கும் கூசாத் தூக்கும்  சந்தர்ப்பமானது இயக்கங்களது நலனுக்குட்பட்ட அரசியலோடு பொருந்துவது. இதுவே "வேளாளன்-வேளாளன் ,யாழ் மேலாதிக்கம்"எனத் தொண்டை கிழியக் கத்திக்கொள்கிறது.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்:

ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதற்குத் தோதாகவே தலித்துவக் குழுக்களைச் சாதியம் பேச வைத்தும் ,வேளாளரின் ஆதிக்கம் என்றெல்லாம்  வகுப்பெடுத்துத் தமிழ்பேசும் மக்களுக்குள் உட்  பூசல்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறது  இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கம்.





இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதற்குத் தோதான அரசியலைக் கிழக்கில் பிள்ளையான்-கருணா குழு முன்னெடுக்கும்போது வடக்கில் டக்ளசு சார்ந்து சாதியவாதப் பிளவுகளை நிலைப்படுத்தத் தலித்துவக் குழுக்களைத் தீனிபோட்டு வளர்க்கும் அரசியலானது வடமாகாணத்துள் மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்திக் காலப் போக்கில் பெரும் கலவரங்களைச் சந்திக்க வைக்க முனைகிறது.இது, சிங்கள இனக் கலவரத்துக்கொப்பவும் அல்லது மேலும் பெரிதாகவும் வளர்க்கப்பட்டுச் சிங்கள இனவாதமெல்லாம் வேளாளரின் சாதியவொடுக்குமுறைக்கு நிகரானதல்ல என்றும் , வரலாறுரைக்கப்படலாம். இங்கு, பிரதான முரண்பாடு வேளாளச் சாதிய ஆதிக்கமேவெனும் அரசியல் கருத்தாக்கவும் ,இதுசார்ந்து மெல்ல எழுப்பப்படலாம்.இன்றைய தலித்துவ மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதமெல்லாம் இதை நோக்கிய நகர்த்தப்படுகிறது.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.





இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.

இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.இங்கே, தலித்துக் குழுக்களோ அல்லது கிழக்குப் பிள்ளையான்-ஞானம் மாபியாக்களோ அன்றி இலக்கியச் செம்மல் சோபாசக்தியின் விசமக் கருத்தாடலோ விலக்கல்ல.இது, குறித்து அசோக் பேசுவது ரொம்பச் சுணக்கமென்றாலும் பேசினரென்பது மக்கள் நலன்சார் அரசியலுக்கும் ,அதுசார்ந்து மக்களது உரிமைகளைத்  தூக்கிப்பிடித்து, இலங்கையில் உரிமைகளைப் பல்வேறு தேசியவினங்கள்-சிறுபான்மைச் சமுதாயங்காளக இருந்தபடி வென்றெடுப்பதற்காகவேனும் நாம் மேற்காணும் இலங்கை -இந்திய லொபிகளது பிளவுவாத - மக்கள்விரோத முகங்களைக் குறித்துக் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.இதைவிட வேறொரு தெரிவு முள்ளி வாய்க்காலுக்குப்பின் ஒடுக்குமுறையாளர்கள் விட்டு வைக்கவில்லையென்பதும் நாம் தரிசிக்க வேண்டிய யதார்த்தமாகும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.05.2013

Mittwoch, Mai 01, 2013

மேதின ஊர்வலத்துள் நமது தேசிய...

வழமையான கோரிக்கையோடு வழமையாக வந்து, போகும் மே தினம்!


லங்கை-இந்திய அரசுகளோடிணைந்து பிழைப்புவாத அரசியல் செய்யும் எம்.ஆர்.ஸ்டாலின் (ஞானம்),கடந்த 1994 ஆம் ஆண்டு இதே தினத்துள்(01.05.1994) திரு.சபாலிங்கம் அவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் குறித்து, "19 ஆம் ஆண்டு நினைவு" கூரலெனவொரு குறிப்பை எழுதுகிறார்.

அவமானகரமான அரசியலைப் பிளவு வாத வியூகத்துக்கமையப் பிரதேசஞ் சார்ந்து நகர்த்தும் ஞானம் - விஜி தம்பதியினர் ஒடுக்குமுறையாளர்களது இன்னொரு கூட்டின் அநுதாபிகளாகவும்-அடியாட்களாகவுமிருந்தபடி அன்று, ஒடுக்குமுறையாளர்களால் கொல்லப்பட்ட நண்பர் சபாலிங்கத்துக்கு "இன்று நினைவு கூர்" குறிப்பெழுதுவதுகூட இன்னொரு சதி அரசியலாகவே இருக்கும்.

1994 ஆம் ஆண்டு, அவரது படுகொலைச் சாவு குறித்து நாம் வீடுவீடாகப் போட்ட பிரசுரத்தை எவருமே முன்வந்தெழுதாத- முடியாத சூழலில்,




 இந்தத் துண்டுப்பிரசுரத்தைப் பிரான்சிலிருந்து எழுதியவர் எவரென்று நமக்குத் தெரியுதோ இல்லையோ அதுவும் "நண்பர்கள்" என்ற பொது அவியலில் இன்று, ஞானம் போன்றவர்கள் மேதினத்தின் பெயரால் சபாலிங்கத்துக்கு நினைவு கூரவில்லை.

அதிலிருந்து, இன்னொரு அடையாள வருகையோடு தனது எஜமானர்களுக்கானவொரு அரசியலை மீளக் கைகாட்டும் சூழ்ச்சிக்குள் ஞானம் துணிந்து நகர்த்துவது நாம் காணவேண்டிய புள்ளிதாம்.

இதைத்தாண்டி ,நாம் இன்றைய மேதின ஊர்வலத்துள் நமது தேசிய வாதிகளது கோலத்தைக் கீழே பார்ப்போம்.

இன்றைய தினமும் வழமையானவொரு தொழிலாளர் தினமாகவே சென்றது.வைத்திருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் அச்சொட்டாகவே நிகழ்கின்றது.வெஸ்ற்பாலின் மாநிலத்தின் தலைநகர் டுசில்டோர்ப்பில் [ Düsseldorf ]திரண்ட தொழிற்சங்கங்கள்,கட்சிகள் வழமைபோலவே தொண்டை கிழியக் கதறிவிட்டோயும்போது,தொழிங்சங்கங்கள் தொடர்ந்து, பொருளாதார வாதத்தினூடாக இந்த அமைப்பைக் காப்பதில்"வேலைக்கேற்ற ஊதியம்-அடைப்படை ஊதிய நிர்ணயம்,தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழங்கும் நிறுவனங்களை அகற்றுதல்"என்று வழமையாக...

நானும்,இந்தக் கேலிக்குரியதாகப் போன மேதின ஊர்வலத்துள் மார்க்சிய லெனியக் கட்சியூடாக [MLPD]ஏகாதிபத்தியத்தின் யுத்தம்,அவ்கானிஸ்த்தான்-பாகிஸ்தான் குழந்தைகளைக் கொல்லும் வானேவித் தாக்குதலையெல்லாம் அம்பலப்படுத்தியம்,விவாதித்தும் வீடுமீண்டேன்.






சென்றாண்டைப் போலவே இவ்வாண்டும் "தி லிங்க"[Die Linke] கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,உப தலைவியுமான சாரா வாகன்கினேக்ற் [ Dr.Sahra Wagenknecht] வருகை தந்திருந்தார்.அவரோடு உரையாடியபோது ஜேர்மனிய அரசின் நேட்டோ யுத்த முன்னெடுப்பின் இரட்டை முகத்தைக் குறித்தும் விவாதித்தேன்.கூடவே,நிறையவே விவாதித்தேன்.அரேபியவுலகப் போராட்டங்கள்,பாகிஸ்தானில்-அவ்கானில் வானேவிக்குச் [Drone attacks   ]சாகும் குழந்தைகள் குறித்தும், ஜேர்மனி அவ்கானில் குடிசார் அபிவிருத்தியை முன்னெடுப்பதாகச் சொல்லியபடி தற்போது கொள்முதல் செய்யும் வானேவிக்குக் காரணங் கூறும்போது,"அவ்கானில் வாடகைக்கு அமர்த்திய வானேவிக்கு வருடமொன்றுக்கு 30 மில்லியன்கள் யூரோவை வாடகையாகச் செலுத்துவதால் சொந்தமாக வானேவி வேண்டுவதென்பது" ,முன்பு வானேவியை உபயோகித்ததென்பதுதாம்என்றும், "ஜேர்மன் அவ்கானில் அபிவிருத்திக்கு உதவுவதென்பது "யுத்தமே என்பதைக்குறித்துச் சாராவோடு விவாதித்து அவரிடம் "ஓட்டோக்கிராம் ஒன்றை"[  Autogramm ] எனது  புத்தகத்துள் பொறிக்கச் சொல்லிய நான், எனது தேசத்துப் பிரச்சனை குறித்து எதுவுமே பேசவில்லை.

அது ஏன்?

கீழ்வரும் எனது அநுபவம் மீளவும், இந்தப் பிழைப்புவாதிகளது வியாபாரப் புத்தியால் தமிழ்மக்களது உண்மையான விடிவையே  மறுக்கும் நிலையாச்சே!. இது, வேதனையானது!

இவ்வாண்டிலும் தமிழ்பேசம் மக்களது தேசிய விடுதலைக் குத்தகைக்காரர்களோடு மீளவும், முரண்பட்டேன்.

தற்போது, யாரெவரெனத் தெரியாதிருக்கும் ஒரு புரியாணிக்கடையைத்தாம் தமிழ்பேசும் மக்களது பிரச்சனையை வெகுஜன அரங்கில்பிரச்சாரப்படுத்தும்-தெளிவுப்படுத்தும் அரங்காகக் கட்டிவைத்திருந்தார்கள்,புலிவேடம் கழற்றியப் பணப் புலிகள்.

மேதின ஊர்வலம் இறுதியாக அடையும் தளத்தில் பல்வேறு கழகங்கள்-கட்சிகள்,அமைபுகளென ஒவ்வொரு தேசிய இனங்களும்,தத்தமது விடுதலைக்காக இந்தப் பிரச்சார அரங்கைத் தகவமைத்துத் தம் [ Infostände  ]அடையாளத்தைக் கொட்டையெழுத்தில் எழுதியும்,குறியீடுகளைப் பொருத்தியும்-கட்டியும் அரங்குகளை அமைத்திருந்தார்கள்.அத்தோடங்கு பிரசுரங்களைக் குவித்து வைத்துத் தமது பிரச்சனைகளை அங்கு திரண்ட பல்லாயிரம் மக்களுக்கு விளக்கியும்-தோழமை கோரியும் அரசியலை முன்னெடுக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில பத்துத் தமிழர்களைக் கூடியவரை சின்னஞ்சிறுசுகளை வைத்து மேதின ஊர்வலத்துக்குப்பின் நகரவிட்டுவிட்டுத் தாம் புரியாணிக்கடை போட்டு கொளுத்த வியாரஞ் செய்தனர். இதுதாம் புலிகளது இன்றைய அரசியற் பாதை!





அங்கு , நம் பிரச்சனை சொல்லும் ஒரு துண்டுப்பிரசுரமோ இருக்கவில்லை.அந்தப் புரியாணிக் கடையை எந்த மக்கள்சார்பாய், எவர் பெயராலென்றும் குறிப்பிடாது முண்டமானவொரு பெட்டிக்கடைபோலவே அஃதிருக்க, நான் மிகவும் வேதனையடைந்தேன்!

இந்தப் பிழைப்புவாதத்தை நமது சனத்துக்குள்அம்பலப்படுத்தி ,அவர்களோடு விவாதித்தேன்.

அங்கு மும்மரமாகச் சாப்பாடுகளை விற்றவர்கள் ஒருவரைக்காட்டி"இவர்தாம் புலிகளது பொறுப்பாளர்,இவரிடம் கேள்விகளை-கருத்துக்களைச் சொல்லுங்கள்"என்றார்கள்.

நானும், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் இதைக் குறித்துக் கேட்டபோது அவரோ "எனக்கு இது குறித்து விவாதிக்க நேரமில்லை.சாப்பாட்டுப் பெட்டிகளை இறக்கவேண்டும்.வானில் இருக்கும் பொதிகளை இறக்க வேண்டும்"என்று நகர்ந்தார்.

என்ன இது?

தமிழ்த் தேசியம் பேசி,மூன்று இலட்சம் மக்களைக் கொன்றவன்கள்,இப்படிப் பிழைப்புவாதிகளை உருவாக்கிவிட்டு,ஒடுக்குமுறையாளரோடு தம்மை ஐக்கியப்படுத்தியபோது இந்த வியாரிகள் நமது பிரச்சனைகளைச் சொல்லும் முகமாக வழங்கப்படும் இந்தத் தினத்தில் கட்டப்படும் பிரசார அரங்கைப் புரியாணிக் கடையாக்கி விட்டார்களே!இது நியாயமா?

இந்த அவமானகரமான நிகழ்விலிருந்து ஒன்றைச் சொல்வேன்:

புலத்துத் தமிழ்பேசும் மக்கள் கட்டாயம் விதேசியப் புலிகளையும்-வியாரப் புலிகளையும் நமது பிரச்சனையிலிருந்து அப்புறப்படுத்தியாகவேண்டும்.

இப்படிப் புரியாணிக்கடைபோடும் வியாபரப் பிழைப்புவாதிகளை அடுத்த நிகழ்வில் எம் மக்களது பெயரால் பிரச்சாரத் தட்டியமைக்க-அரங்கு அமைக்கவென்று  எடுக்கப்படும் இடத்தைப் புராணியாணிக் கடையாக மாற்றும்வியாபாரத் தந்திரத்தை இல்லாதாக்கவேண்டும்.

அத்தகைய நிகழ்வுக்கு, உண்மையாக மக்களுக்காக இயங்கும் பொது மக்களே ஒன்றிணைந்து இத்தகைய ஊர்வலம்-பிரச்சார அரங்கமைத்து[Infostände ] எமது பிரச்சனைகளையும்-எம்மை, ஏமாற்றிய உலக-உள்நாட்டு அரசியலையும்,இலங்கை-இந்தியப் பாசிச அரசுகளையும்,வியாபாரப் புலிகளையும் பிரசுரங்கள்-நேரடி விவாதம்-கருத்துப் பகிர்வின் மூலம்அம்பலப்படுத்தி மக்களது விடுதலைக்கு வழி செய்யவேண்டும்.

புரியாணிக்கடைக்கு சாப்பாடு வாங்க வந்த பிற நாட்டினர்-ஜேர்மனியர்கள் இது எந்த நாட்டு மக்களது அரங்கு-உங்களுக்குப் பிரச்சனை என்னவெனக் கேட்டதைக் குறித்து எதுவுமே பேசாது "ஸ்ரீலங்கா-ஸ்ரீலங்கா" வென்றுவிட்டுப் புரியாணி விக்கும் புலிக்குக் காசில் குறியா அல்லது மக்கள் விடுதலையில் குறியா?

இணையத்தில்,"காணீ பறி போகிறது-ஆமி மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்,போராளிகள் சாகக் கிடக்கிறார்கள்,அங்கவீனர்களாய்-அடிமையாய் மக்களெனச் சொல்லும்" இந்தப் புலிகள்,பல் தேசிய இன மக்களும்-கட்சிகளும் கூடும் வெகுஜனத் தளத்தில் மொட்டையாய்ப் புராயாணிக் கடைவைத்துக் காசு சேர்க்கும் கபோதிகளாகவே வாழ்கின்றனர்.

இந்த அராஜகக் கள்வர்கள்,தமிழ்பேசும் மக்களை இலட்சக் கணக்காய்க் கொன்று காசு குவித்தபோது அதற்கொரு தலைவன் மற்றும் கொடி வைத்துக்கொண்டும், மக்களது சாவை வைத்தும் அரசியல் வியாபாரஞ் செய்தனர்.இப்போது, அப்பட்டமாய் வியாபாரிகளாக மாறியவர்கள் தமிழ் மக்களது பிரச்சனையில் இனியும் தலை புகுத்தாமல் மெல்ல நகரவேண்டும்.

இல்லையேல், அவர்களை அப்புறப்படுத்தி நேர்மையாக நமது மக்களது பிரச்சனைக்கான அரசியலை நாம் பொறுப்பேர்க்க வேண்டும்.இந்தத் தளத்தில் புலத்த மக்களை வைத்தே இத்தகைய பிழைப்புவாதப் புலிகளை அப்புறப்படுத்தியாகவேண்டும்.இதுதாம் இன்றைய மேதினஞ் சொல்லும் நமக்கான அநுபவம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2013

Donnerstag, April 18, 2013

41 வது ,இலக்கியச் சந்திப்பு...

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே!

[சுசீந்திரன்-சிவலிங்கம் போன்றோரது கருத்துக்கள்மீதான மாற்றுக் கருத்தாடல்].

லன்டனில் நடந்தேறிய 40 வது இலக்கியச் சந்திப்புக்குப் பின் 41 வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவேண்டுமெனத் தொடர்ந்த கதையாடல்கள் இப்போது சந்திக்கு வருகின்றன.இங்கே, குழுவாதம் மேலும் நெருக்கடிக்குள் நகர்த்தும் தமிழ்த் தேசியவினத்தின் ஓரளவான சனநாயகப்பண்புக்குடந்தையான இச்சந்திப்பைத் தொடர்ந்து, சிதைத்துவரும் இந்தக் குழுவாதமானது இன்றுச்சத்தில் வளர்ந்து கிளைபரப்புகிறது?.

திரு.சிவலிங்கம் மற்றும் ,நண்பர் திரு.சுசீந்திரன் போன்றோர் தமது கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.இருவருமே குழுவாதத்தின் சதித்தனமான அணிச் சேர்க்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்-வரவேற்கப்பட வேண்டியது.

இத்தகைய குழுவாதமானது கடந்த நான்கு-ஐந்து சந்திப்புக்குள் வலுவாகவும்-வேகமாகவும் வளர்வதற்கான தோற்றுவாய்கள் மெல்லத் தலித்துவ,சாதிய-பெண்ணிய அடையாளங்கட்குட்பட்ட  நலன்களது தெரிவில் -இலங்கை ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை - இந்திய நலன் மற்றும் லொபிக் குழுக்களால் மிக நேர்த்தியாக நமக்குள் திணிக்கப்பட்டதைக் கடந்த  2005 ஆம் ஆண்டுகளிலிருந்து "நாம் நேர்மையான முறையில் அரசியலைக்கொண்டிருந்தால் " கண்டடைந்திருப்போம்.

இது, காலங் கடந்த ஞானமாகவே திரு.சுசீந்திரனது கருத்துக்களிலிருந்து  தொகுக்கமுடியும்.இதுவரை இத்தகைய குழுவாதத்துள் இலக்கியச் சந்திப்புச் சிதைவதைக் கவனத்துள் எடுக்காது அத்தகைய ஓட்டத்தோடு ஒத்தோடிய நண்பர் சுசீந்திரன் இப்போது, இது குறித்துக் கருத்துச் சொல்வது இந்த நெருக்கடியின்  வன்மத்தை உண்மையாவுணரவைக்கிறது.என்றபோதும் , இதன் அரசியல் என்ன?-தெரிவுகள் என்வென்பதைக் குறித்து நாம் பார்த்தாகவேண்டும்.

இன்றைய  கட்டத்துள் புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள், இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்ப் போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்ச பச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு, வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இது ,40 வது இலக்கியச் சந்திப்புள் வலு உச்சத்திலிருப்பதைக் காணக் கூடியதாகவே இருக்கின்றது.தம்மைத் தாமே தலைமைத்துவ வடிவமாகவுணரும் அதிகாரத்தை இவர்கள் கைக் கொண்ட தருணமானது ஒருவித அரசியற்றொடர்ச்சியை இலங்கைக்குள் வலிந்து காணுமிடத்துள் இவர்களது தெரிவு, இலங்கைக்குச் சந்திப்பை நகர்த்துவதில் குறியான எதிர்ப்பார்ப்பானது அதற்கான தெரிவுகளில் அணிகளைக் கட்டியமைத்தது.அதுள், "தலித்தியம்-சாதிய மார்க்சியம் " எனப் பல மானுடவிரோதக் கருத்தாடல்களை இதன் எதிர்ப் பாளர்களுக்கு அது வலிந்து போர்த்தியபோது இன்றைய இலங்கையின் பிளவுவாத அரசியலது உச்சம் புலம்பெயர் மக்களுக்குள் இடறிக்கொண்டதை நாம் உணர்கிறோம்.




இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும் "-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர். இத்தகைய நோக்குக்கு இலங்கையில் தொடரும் இலக்கியச் சந்திப்பானது புத்திமட்டத்தில் வலுவான கருத்தியலை ஊன்றமுடியும்.தமிழ்த் தேசியவினத்தின் இதயத்தைக் குதறும் அரசியலைத் தொடரும் இன்றைய தமிழ் அரசியல் நடாத்தையுள் இது, மற்றொரு தெரிவு.இதற்குள் சிக்குப்பட்ட பிழைப்புவாதத் தலித்துவ-குழுவாத,இயக்கவாத மாயைக்குட்பட்ட  நபர்கள்-குழுக்கள் ,தமது அராசக அரசியலைத் தொடர்ந்து, உதயன் பத்திரிகையை நெருப்பூட்டியெரிப்பதிலிருந்து மீளவுருவாக்கும்  வன்மைத் தனமான அரசியலுள் இலக்கியச் சந்திப்பும் சிக்குண்டே போனது.

இலண்டன் 40வது இலக்கியச் சந்திப்பின் தற்காலிகத் தலமையானது இலங்கையின் அரசியல் சூழ்ச்சியோடு ஒன்றித்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுள் ,இராகவன் என்ற தனி நபருக்குப் பின் பலர் தம்மை இனங்காட்ட மறுக்கின்றனர்?.

இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழி நிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.

பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும்  கடந்தகாலத்துள் இருந்தார்கள்.அவர்களுள் நண்பர் சுசீந்திரனும் ஒருவராகவே இருந்தாரென்று குற்றஞ் சுமத்தாதுபோயினும் எனது உணர்வுக்கு அப்படியேதாம் படுகிறது!இந்த இழி நிலைக்கு மாற்றான தெரிவுகளை இனங்காணவேண்டிய சந்தர்ப்பத்தை இத்தகைய பண்பே இல்லாதாக்கியது!

இன்று, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு, இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.,சாதிய வாதம்-தலித்துவம் மற்றும் பிரதேசவாதம் உச்சத்துள் வைத்துக் கருத்தியற்றளம் உருவாக்கப்படுகிறது.இதுவே, சாதிய அடையாளத்தைத் சுதேசி அடையாளமாக ஏற்கவேண்டுமென ஆய்வும் செய்து ,இந்தியாவில் இருப்புற்ற  நிறவனப்பட்ட வடிவமாகச்  சாதிய அடையாளத்தைக் கோருகிறது.இதற்குத் தோதாகவேதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களது தெரிவில் ,வகுக்கப்படும் இந்தச் சதித்தனமான அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிராகவே தொடர்கிறது.
 
எனவே தொடர்ந்து ஊன்றப்படும் மேற்சொன்ன அரசியலது தெரிவாகவே நமக்குள் கடந்த காலத்துள் இலக்கியச் சந்திப்போடு "சமாதானப் பட்டறை, அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல் " என்றும், இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைந்தோம்!

இதன் தொடரக இன்று ,எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இலங்கைக்கு நகர்த்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்காக க் கைக்கொள்ளப்பட்ட அரசியல் மிக மோசமான தெரிவு.இது,  பற்பல சந்தேகங்களுக்குட்பட்டுச் சிந்திக்கவேண்டிய அணிதிரட்சியாகும்.தனிநபர்கள் அணியுறும் தருணமானது எப்பவும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இருப்பதில்லை!அது, ஒடுக்கு முறையாளரது அரசியலது தெரிவாகவும் மாறியதும்-இயங்கியதும் நமக்கு ஏலவே பாடமாச்சு.
இந்த அரசியல்-சதிகளைப் புரிய நாம் வள்ளவரிடம் போவோம்.அதன் அநுபவத்தோடு இலங்கைக்குள் நகர்த்தப்படும் சாணாக்கியம் பிழைப்புவாதத் தமிழர்களை எப்படியெல்லாம் பிழைக்கத் தூண்டுகிறதெனப் பார்க்கலாம்.

"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் ,தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்,"சிந்தனையாளர்களின்" அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களே 40 வது இலக்கியச் சந்திப்பில் இலன்டனில் மிக நேர்த்தியாகக் கூடினார்கள் . கூடவே ,பலருக்குத் தலைவெட்டி ஒரு வினோதமான அரசியல் நடாத்தையைச் செய்தனர்.இதற்காகவே, பயிற்றுவிக்கப்பட்ட தலித்துவக் குழுக்களது தயவில் மேலும், விருத்தியான இந்த அரசக அரசியல் மெல்லத் தளத்தை மாற்றி இலக்கியச் சந்திப்பைக் கையகப்படுத்தியது.இதற்கு உடந்தையான இலங்கை -இந்திய உளவுக் கூலிகள் தொடர்ந்து பிளவுவாத அரசியலைகத் தமது  எதிர்ப்பாளருக்கு முன் நிறுத்திச்  சாதிய வாதத்தை ஆயுதமாக்கினர்.இது குறித்துத்தாம் சுசீந்திரன் தனது கட்டுரையில் கறாராகப் பேசியுள்ளார்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும்,கடந்த முள்ளி வாய்க்கால் யுத்தமானது  இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலையாக மாறியது!இதுவே ஒரு கட்டத்தில் தமிழினப் படுகொலை நெட்டூரமாக எழுந்தது.இதை எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.
 
ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.ஆனால் ,இராகவன் குழு மற்றும் ,தலித்துவக் குழுக்கள் இராசபக்சே பின்னால் சனநாயகந் தேடியதும்-திரண்டதும் நாம் ஏலவே, பார்த்த கதைதாம்.இவர்களது அரசியல் இன்று ,மாற்றுக் கருத்துத் தளமான இலக்கியச் சந்திப்பை மெல்ல விழுங்கி ஏப்பமிட்டிருப்பினும் அதன் அரசியலைச் சரியாக மதிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை,இலங்கை இனப் பிரச்சனையுள் நடைபெறும் அரச தந்திரங்கள்-இராணுவ வியூகங்கள் ,நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியா-அந்நிய அரசியலே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.

இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.
 
காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது. இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து"இலங்கையர்கள்"எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்"இலங்கையர்கள்"எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.இங்குதாம் தலித்துவக் குழுக்களது அரசியல் சதியும்-பிழைப்புவாதமும் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.இது, ஒரு கட்டத்துள் நிலத்துள் நிலவும் "டக்ளசு "  வகைப்பட்ட புதிய குட்டி முதலாளிகளோடொரு சமரச அரசியல் சதிக்குட்பட்டு நிகழ்ச்சி நிரலை வகுத்துள்ளது.இதன் தொடர்  அகிம்சை, காந்தியமெனப் பின்னப்பட்டுச் சர்வோதயம்வரை மீளவொரு லொபித்தனமான அரசியலுக்கு நம்மைக் காட்டிப் போடுகிறது.இதன் மறுபக்கம் அராசகமே!


நான்,தலித்துவத் தேவதாசன் ,இராகவன் ,கீரன் போன்றவர்கள் முன் வைக்கும் "நாம் இலங்கையர்கள்"என்ற வாதத்தை மீளப் பேச முனைகிறேன்: இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது "இலங்கையர்கள்"எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்"தலித்துவ அடையாளம்",பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?

கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக"இலங்கையர்கள்" எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?

தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?

ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.இதுவே, தலித்துவக் குழுக்களது தலைவிதி!

"ஈழப்போருக்கு"பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,"நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.

உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா"அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.

இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இங்குதாம் 41வது இலக்கியச் சந்திப்பின் கதி ஒரு தெரிவுக்கான அரசியலை மையப்படுத்திச் செல்கிறது!

இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது கிழக்குக்குப் பிரதேச  மாநில உரிமை -முதலமைச்சர் அரசியலானாலுஞ்சரி -இல்லை -இதையுற்தாண்டி வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.இதன் புள்ளியிற்றாம் இலக்கியச் சந்திப்பு ,41வது சந்திப்பை இலங்கையில் நடாத்திவிடுவதற்கானவொரு  "தார்மீக" நியாயத்தைத் தலித்துவ அரசியலைக்கொண்டு நிமிர்த்த முடியுமென இராகவன் குழுவும் நிரூபித்திருக்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
யேர்மனி
17.04.2013

Sonntag, März 17, 2013

தமிழக மாணவர்களே,வீட்டுக்குப் போங்கள்!

மிழக மாணவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர்!நம்மில் பலர் பூரித்துப் போய் வீர முழக்கமிடாத குறையாய் விதந்துரைத்து மகிழ்ந்து போகின்றோம்.அப்பாவித்தனமாக மாணவர்களைப் பலியாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் சிக்குண்ட கட்சி அரசியல் செய்யும் கிறுக்குத் தனமானது, இந்த மாணவர்களது எதிர்காலத்தைப் பாழாக்குவதென்பது இந்திய-ஆசிய மக்களது படைப்புத் திறனை அழித்து, மேற்குலகத்தில் தங்க வைக்கும் ஏற்பாடாகும்.

உற்பத்தித் திறன்,ஊக்கம்,புதுமைப்படுத்தல் யாவும் மாதாந்தம் மாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுச் சந்தை,உற்பத்தித் தளத்தையெல்லாம் தக்க வைக்கப் படாத பாடுபடும் மேற்குலகம் மாதக் கணக்கில் மாணவரைத் திசை திருப்பி ,ஆசியாவுக்கான சாவு மணி அடிக்கிறது.




இதற்காக நமக்குள் நிலவும் பல முரண்பாடுகளை நமக்கான பெயரில் அவர்களே தமக்கான ஆயுதமாக எடுக்கின்றனர்.தரித்திர தேசங்களது தறுதலை மாணவர்களே-புரியுங்கோ!!

உங்களது போராட்டத்தை-ஆற்றலை வீணே "விழலுக்கிறைத்து" வறுமையையும்,பட்டுணியையும் உங்கள் பெற்றோருக்கு வழங்காதீர்கள்!இதன்வழி நமது தலைவிதியையும் நம்மைச் சாராது அந்நியருக்குக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

ஒடுக்கப்படும் தமது சகோதர இனத்துக்காகத் தோழமை கொள்வதென்பதை வரவேற்கவேண்டும்தாம்.ஆனால்,உங்களில் ஒரு பகுதி "உலக ஒடுக்குமுறையாளன் அமெரிக்காவென்ற ஏகாதிபத்தியம்" கொண்டுவரும்இலங்கைக்கு எதிரான  தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்கிறது இந்தியாவை. இன்னொரு பகுதி எதிர் என்கிறது!இந்த அரசியலானது சதிகுட்பட்ட கட்சிசார் நலன்களது தெரிவாகிறது.இதை உந்தித் தள்ளும் லொபிகளை இனங்காணாது கோரிக்கைகளின் பின் கண்களைக் கட்டவைத்து உங்களைச் சுடுகாட்டுக்கு வழிகாட்டும் வேடதாரிகளை நம்புவது இன்னொரு "ஈழத்தை"தமிழ்நாட்டில் உருவாக்குவதென்பதே உண்மையாகிறது.




அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கப்படவேண்டும் என்று கொலைக்கார இந்திய அரசிடம்போய் மண்டியிடும் இந்த மாணவர்கள் யாரைக் காக்கின்றனர்?

என்ன சொல்ல வருகின்றனர்?

இந்திய அரசு, ஒடுக்கப்படும் தேசியவினங்களது கோரிக்கைக்குப் போராட்டதுக்குத் துணை நிற்கும் நண்பன் என்கின்றனரா?தங்கள் தேசத்துக்குள்ளே நலிபடும் தேசிய இனங்களைக் குறித்து என்ன பார்வையைக்கொண்டிருக்கின்றார்கள் இவ் மாணவர்கள்?

நாகலாந்து ,காஷ்மீரி,மக்களையும்,பழங்குடிகளையும் கொன்று குவிக்கும் இந்திய அரசுதாம்,இலங்கையில் கூட்டாகத் தமிழ்பேசும் மக்களையும் கொன்றுபோட்டது.இந்திய அமைதிப்படைக் காலத்திலோ இந்திய இராணுவஞ் செய்த மனித மீறல்கள் பல்லாயிரம் குற்றங்களாக இன்னும் இருக்கிறது.இந்திய இராணுவங் கொண்ட வன்புணர்பு - செய்த பாலியல் வதைகள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு "தமிழச்சிகள்" முகத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கின்ற காலத்தைக் குறித்து, இந்த மாணவர்கள் அறியாதவர்களா?,போராட்டப் புறப்பட்ட இயக்கங்கள் செய்த கொலைகள்,பாலியல் வதைகள்,மனித வதைகளை நீங்கள் அறியாதவர்களா?,அல்லது அதன்வழி இன்று, வியாபாரிகளாக மாறிய அதே இயகத் தலைமைகளை இன்னுமா நம்புகிறீர்கள்?




தமிழுக்காப் போராடியதென்றும்,மொழிக்காக மறியலில் வாழ்ந்தேன் என்றும் கதைவிடும் திராவிடக் கட்சிகள்,தலைமைகள் இன்று, ஆசியாவின் முன்னணிச் செல்வந்தர்களாக மாறிய கதைகள் உங்கள் விழி முன்னே இருக்கும்போது இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

"ஈழத் தமழர்களது" மீதமுள்ள வாழ்வும் அந்நியருக்காக விற்கப்பட வேண்டுமா?

சொல்லுங்கள் மாணவர்களே-சொல்லுங்கள்!!

பதிலும் வேண்டாம் ஒரு கத்தரிக்காயும் வேண்டாம்,வீட்டுக்குப் போங்கோ-வீதிக்கு இறங்குந் தருணம் இதுவல்ல!



தமிழகத்தின்விலங்கு இந்தியத் தேசியமாக இருப்பதை உடைக்கும் தருணம் இதுவல்ல!

தமிழக அரசு "ஈழத்த தமிழ்"அகதிகளை அகதி முகாங்களில் கைதியாக அடைத்துக் கண்காணித்துக்"கொன்சன்ரேசன் லாகர்களாக-Nazi concentration camps"அவற்றை வைத்தபடி, "இலங்கைக்குப் பொருளாதாரத் தடைவிதி" என்பது என்ன சீலம்பாய் அறம்?

ஆக,ஆளும் வர்க்கங்கள் தமக்குள் பங்குச் சண்டை நடாத்துகின்றன.அதை,ஒழுங்கு முறையாகத் தீர்க்கும்போது நம்மை நடாற்றில் தள்ளிவிட இந்த மாணவர்களும் பலியாகின்றனர்.

"அடேய்,போங்கடா-போங்கடி",போய் ஒழுங்காகப் படித்து வீட்டுக்கு உதவுங்கோ!

வேடிக்கை அரசியல் செய்து இன்னும் நம்மை முட்டாளாக்காது,கொலைக்கார இந்திய அரசைக் காத்து நமது மக்களையும்,இந்தியத் துணைக்கண்டத்துள் இந்தியப் பாசிச இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களது குரல் வளையை அறுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு"நல்ல பிள்ளை" சான்றிதழ் வழங்காமலும், வீட்டுக்குப் போய் படிக்கும் அலுவல்களைப் பாருங்கள் மாணவர்களே!இத்தகை உங்கள் போராட்டம் உங்கள் மண்ணில் இராணுவ வாதத்தைக் கொணர்ந்து நாளை தமிழகத்து விடுதலைக்கு ஆப்பு வைக்கும்.




போங்கோ,போய் வகுப்புகளில் உட்கார்ந்து படியுங்கோ,உலகம் தமது உற்பத்தித் தளத்தைக் காக்க விரும்புகிறது.சீனாவிடம் பறிகொடுத்த மாதிரி இந்தியாவிடமும் பறிகொடுத்துவிடாது தடுக்க மாணவர்களைத் திசை திருப்பிப் படிப்பிலிருந்து விரட்டியடிக்கும் தந்திரமெல்லாம்[ http://www.sozialebewegungen.org/   ] உண்டு.
இதைத்தாம் கெரால்ட்  கற்ஸ்மாயர் -Prof.Dr.Harald Katzmair [  http://www.workinprocess.at/pages/MitarbeiterInnen/Katzmair.htm ]தினமும் வகுப்பெடுக்கின்றார்.உலகத்தைப் புரியவேண்டுமா?இந்த நபரையும்  கற்றுத் தேறுங்கோ!

இதைப் பல்வகைப் பொருளியல் நலன்சார் உறவுகளோடு பொருத்திப் பார்க்கவும்.படைப்பு-புதுமையை புகுத்தும் கல்வியெல்லாம் [http://blog.gpa-djp.at/socialmedia/kategorie/veranstaltung/  ]ஆசியாவை நோக்கி நகர்ந்ததை மீளக் கையப்படுத்த ஆசிய மாணவரது கல்விக்குப் பல வழிகளில் ஆப்பு வைக்கும் மேற்குலகத்தின் இன்னொரு வடிவம்தாம் உங்கள் இந்தக் கலகமுமாக இருக்க முடியும்.

புரியுங்கோ!

புரிந்து, வீட்டுக்குப் போங்கோ,மீளக் கைகளில் புத்தகங்களைத் தூக்குங்கோ-இதுவேதாம் நீங்கள்"ஈழத் தமிழர்களுக்கு" ச் செய்யும் நல்ல காரியம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.03.2013

Samstag, März 16, 2013

தமிழகத்து மாணவர்கள் போராடுகிறார்கள்!

மெரிக்கா  இலங்கையில் ஏற்பட்ட "மனிதவுரிமை மீறல் -யுத்தக் குற்றம்" போன்றவைக்கு எதிராக மனிதாபிமானஞ் சார்ந்து  யெனிவாவில்[United Nations Commission on Human Rights (CHR) ] இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தைத் தமிழர்களில் பலர் ஆதரிக்கிறார்களென்பதற்காக நாமும் ஆதரிக்கமுனைவது அமெரிக்கா உலகும் பூராகவுஞ் செய்யும் கொலைகளை நியாயப்படுத்திவிடுதென்பது போலவேதாம்  நமது மக்களது பெயரால் அமெரிக்க அரசியல் ஊக்கத்தை நாம் திறம்பட நடாத்தி முடிப்பதன் ஒரு சூழலை நமக்குள் மெல்ல உருவாக்குகிறோம்.இதை ,அமெரிக்க லொபி என்று சொன்னால் தப்பு என்றாகும்.ஆனால் ,உண்மை அதுதாம்.இதுதாம் புதிய வகையிலான அரசியல்!

கொலைகாரனே இன்னொரு கொலைகாரனைக் கையை நீட்டி நீ , கொலையாளியெனச் சொல்லித் தனது கொலையை நீதியாக்கி மறைப்பது.இதைத்தாம் நாம் அமெரிக்காவுக்காகச் செய்து முடிக்கின்றோமென்பது எவர் சொல்லி ,என்ன ஆவது?




சாதாரணமாகத் தமிழ்நாட்டில் அதிகமான இளைஞர்கள் மிகவிரைவாகவே கட்சிசார் அரசியலுக்குப் பலியாவதுண்டு.ஈழத்தில் இயக்கவாத மாயைக்குப் பலியாவது போன்று. இன்று, நடைபெறும் மாணவர் கலகமெல்லாம் இலங்கையிலுஞ்சரி இல்லைத் தமிழ் நாட்டிலுஞ்சரி ஏதோவொரு ஒத்திகைக்குப்பின்னெழுவதற்கானவொரு தயாரிப்பாகவே இனம் காணப்படவேண்டும்.இது ,தயாரிக்கப்பட்ட ஊக்கத்தின் கூறுகளாகவே அமுக்கங்கொள்கிறது.இதன் சூத்தரிதாரிகள் பல இரூபத்துள் எங்கும் நீக்கமற இருக்கின்றனர்.

இவர்களாற் தயாரிக்கப்படும் அரசியலானதை எவரும் இலகுவில் புரியமுடியாதளவுக்கு மிக நேர்த்தியாக மக்களது பிரச்சனைகளுடன் பிணைந்து அந்நியவூக்கங்கள் நமது அரசியலோடெழுகிறது.அரேபியாவின் அரசியல் முரண்பாடானது எப்பவும்போலவே பரந்தபட்ட மக்களுக்கான சனநாயகத்தோடு சம்பந்தப்பட்டது.அதன் சாயலிலெழுந்த சேர்யா பொப்போவிச்சின்[Srđja Popović_Otpor!    ] முகாமைத்துவப் புரட்சியானதற்கு அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகம் கொட்டும் தொகையானது வருடமொன்றுக்கு 700 பில்லியன் டொலர்களென்பது எவரும் அறியாத சூத்திரம் அல்ல!





பொறுத்திருங்கள்!

ஒவ்வொன்றாக முடிச்சுகள் தென் கிழக்காசியாவில் அவிழ்படப்போகிறது.

இது, மகிந்தாவுக்கான எதிரான அரசியல்-கலகமல்ல!மாறாக,பிளவுப்பட்ட புவிகோள அரசியல்சார் பொருளாதார ஆதிக்கத்துக்கான இறுதிப்போர்.

இதன் வடிவம் பல மாதிரிகளில் மையங்கொள்வதைப் புரிய மறுப்பது ஆபத்தானது.

நமக்குள் அரசியல்-பொருளாதார மற்றும் இனஞ்சார் முரண்பாடுகள் பலாத்தகாரமாக ஊதிப்போய் இருக்கிறது.பிளவுப்பட்ட  தலைமைகளது அராயகம், அரசில் ஆதிக்கமானது அதிகமான சந்தர்ப்பத்தில் மேற்குலக அரசியல் நலன்களுக்குத் தோதான  நிலவரத்தது சூழலை இத்தகைய வலயங்களில் ஏற்படுத்துகிறது.

தமக்குள் நிலவும் முரண்பாடுகளை முன்வைத்துப் பரந்துபட்ட மக்களது தலைமையில் எழும் போராட்டமெல்லாம் ஏதோவொரு வடிவில் அந்நியச்சக்திகளால் கையகப்படுத்தப்பட்டு இறுதியில் ,அவர்களது இலக்கை வென்றெடுக்கும் போராட்டங்களாக மக்களது தியாகமெல்லாம் மேற்குலகத் தேசங்களது நலனுக்காகவே மாற்றப்படுகிறது.

கடந்த, கிழக்கைரோப்பியக் கலகம் மற்றும் சமீபத்து அரபேிய வசந்தமெல்லாம் இப்படியே போயின.

இதன் ,இன்னொரு முகாம் தென்கிழக்காசியாவில் உச்சம் பெறுவதற்காகத் தென்னாசியப் பிராந்தியத்துள்  பல வடிவத்துள் பரீட்சிக்கப்படுவதற்குத் தமிழ்பேசும் மக்களது " இலங்கைக்குள் நிலவும் முரண்பாடுகள்-அவர்களது உரிமைசார்ந்த போராட்டமெல்லாம் "அவர்களது ,நலனுக்காகவெனப் பேசப்பட்டு யாருக்காகவோ அறுவடையாகும் தொடுப்பு அரசியலொன்று மிக நேர்த்தியவுருவாகிறது.

இது, பெரும் மயக்கமானகாலம்.




அவசரப்படும் ஒவ்வொரு தருணமும் நாம் அப்பாவிகளைச் சாக வைக்கும் அரசியலோடு நெருங்குகிறோம்.இதைத்தாம் இப்போதைக்கு மாணவர் கலகத்தின்மீதான பார்வையாகவும் வைக்கப்பட முடியும்.அமெரிக்கத் தீர்மானமெல்லாம் நமக்கான விடிவில்லை!

ஈராக்கிலும் .அவ்கானித்தானிலும். சிரியாவிலும் இன்னும் உலகமெல்லாம் அமெரிக்கா கொன்றுபோடும் மக்கள்மீது காட்டாத கருணையை, நமக்குக் காட்டுவதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்தியாவோ நம்மைக் கொன்று போட்டிருக்கும்போது அத்தேசத்தைப் போய் ஐ.நா.வில் ஈழத்துக்கான ஆதரவுக் கோரிக்கையை வைக்க வேண்டுமென்பது இந்தியாவின் ஆளும் வர்கத்தைப்பற்றியே அறியாத அரசியல் வேடிக்கையல்ல.அதுதாம் நுட்பமான சாணாக்கியம்.

அதன் உள்ளீடு வடிவத்தின் வழியாகப் பொசிவது, இந்திய ஆளும்வர்க்க நலனுக்கே!புரிந்துகொள்வது அவரவர் அநுபவத்துக்கான தெரிவைப் பொறுத்தது.ஆனால் ,அப்பாவிகளை அண்மித்துப் போராடுங்கோ-இரத்தம் சிந்துங்கோ என்று தூண்டுவதற்கு எவருக்குத்தாம் உரிமை உண்டு?அது மெரிக்காவாக இருக்கட்டும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
15.03.2013