Samstag, Juni 28, 2008

ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

எழுக
என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்

எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்


எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?

Freitag, Juni 13, 2008

இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம்

சமூக மனிதர்கள்!


"நேர்மையாய் வாழவேண்டுமாயின்
வதைபடுதலும்,
குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும்
எந்நேரமும்
போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும்
இன்றியமையாதவை..."-டோல்ஸ்டோய்.


நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி...
என்னதாம் நமது பிரச்சினை?

எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா?
எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது?

மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் சேர்ந்த செல்வமானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்குமுன் சேர்ந்த செல்வத்தைவிட, 23 பங்கு அதிகமாகச் செல்வம் சேர்ந்துள்ளது இன்று.எனினும் அன்று கட்டிய கட்டங்களை,சமூகச் சொத்துக்களை மறுசீரமைக்கக்கூட இன்றைய அரசுகளால் முடிவதில்லை.அப்போ சேர்ந்த செல்வமெல்லாம் எங்கே?

தமிழ் மக்களுக்கு எதற்காக யுத்தம் அவசியமாகிறது?

போரின்மூலம் நமக்கு எது வந்து சேருவதாகச் சொல்கிறார்கள்?

தமிழீழம் என்ற தனியரசானது தமிழ்பேசும் மக்களின் உழைப்பை நியாயமாகப்; பங்கிட்டும்,அவர்களது வாழ்வை எந்த வகையிலும் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் நிச்சியம் உண்டா?இதைவிட இத்தகைய அரசு சாத்தியமானதா? நாம் எந்தத் தளத்திலிருந்து கருத்தாடுகிறோமென்பதை எல்லோரும் அறிந்தோமா?

தனி நபர்களை வழிபடுவதும்-தூற்றுவதம் அற்புதமான மனித- தேசப்பண்பல்ல.எனவே மீளவும் கேட்போம்:
எதற்காக யுத்தம்?

எதற்காப் பேச்சுவார்தை?

எதன்பொருட்டுச் சமாதானம்?

உழைத்தோய்ந்து வீடுமீளும் நம் கனவுகளுக்கெட்டாதபடி உலகத்தில் நிகழ்வுகள் நடந்து முடிகின்றன!நாம் காணும் உலகானது நமது கற்பனைகளுக்கெட்டமுடியாதவொரு திசையில் நகர்ந்தபடி.எத்தனையோ சிக்கல் நிறைந்த புனைவுகளால் இந்த உலகத்தை நாம் எதிர்கொள்வதாக இருக்கிறது.அந்தச் சிக்லை "உற்பத்தி,உபரி"-உழைப்பு,உழைப்புச் சக்திகள்"எனும் பொறிமுறைகளே உருவாக்கின்றன.மனித உழைப்பின் திறனே உபரியாகி அந்த உழைப்பை நாறிடிக்கின்ற சிக்கலில் நாமெல்லோரும் நலிந்து போகின்றோம்.இந்த நலிவானது உபரியின் திரட்சியில் பலரைப் பட்டுணிச் சாவுக்குள் தள்ளிச் சிலரைப் பிரபுக்களாக்கின்றபோது அங்கோ அந்தப் பிரபுக்களே நமது வாழ்வைத்தீர்மானிக்கின்றார்கள்.

இவர்களின் இருப்பில் நமக்கென்றொரு நிறுவனப்பட்ட சமூக இயக்கம் சாத்தியமாகிறது.அது கிரமமாக நமது உழைப்பைத்திருட வெளிக்கிடுகின்றபோது அங்கே பல கூறுகளாகச் சமுதாயக்கட்டுமானங்கள் எழுகின்றன:


இந்த நிலையில் ஒரு மனிதர் தாம் கொண்டுணரும் அறிவானது திட்டமிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிவென்பதை முதலில் உணர்தல் அவசியமாகிறது.அங்ஙனம் உணர்ராதவரை தான் சார்ந்துகொள்வதும் அதனு}டாகத் தனது நகர்வை அத்தகைய சார்பு நிலைக்குள் அடைவு வைத்தலும் நிகழ்கிறது.இங்கேதாம் நமது உருவாக்கம் அவசியமாகிறது!

நாம் யார்?

நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்துப் இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால் நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை ஒரு பொருளியல் மாணவர் வெகு இலகுவாகக் கண்டடைவார்.

இந்தவகைப்பட்ட இனக் குழுவிடம் உயரிய மனிதவுருவாக்கம் நிகழ்வது கிடையாது.அதன் கொள்ளளவு மிகக் குறுகியது.வரைபடத்தில் குறிப்பிட்டபடி பொருளாதார,நுட்ப,சமூக கலாச்சாரக் கட்டுமானமானம் தீர்மானிக்கின்ற சமூக இயக்கமானது அதன் முகிழ்ப்பு நிலையிலிருந்து விடுபடப்போகும் படிமுறை வளர்ச்சியை வெறும் "விசும்பு"நிலைக்குள்ளேயே மட்டுப்படுத்துகிறது.இதன் தாக்கமானது நமது சமுதாயத்தின் மனிதவுருவாக்கத்தில் பாரிய தாக்கம் செய்கிறது.இந்தவொரு இக்கட்டான மந்தப்போக்கானது ஈழத்து அரசியல் முன்னெடுப்பில் அறிவுபூர்வமான விரிந்த சமூகப் பார்வையை கோரமுடியாது சிறுமைப்பட்டுக் கிடப்பதனால் பல வகைப்பட்ட அராஜக இயக்க சாகசங்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது.இந்தவொரு நிகழ்வூக்கமானது நமது அன்றாட சமூக வாழ்வை மிக நெருக்கடிக்குள் தள்ளி சுமூகமானவொரு ஜனநாயகச்சூழலைச் சுவாசிக்காதவொரு இனமாக நம்மை புறத்தியாருக்குக் காட்டிக் கொள்கிறது.இந்தவொரு சமூக யதார்த்தமானது நமது பண்பாட்டுத் தளத்தில்,கல்வியில் பாரிய தாக்கஞ் செய்வதைத்தாம் நாம் வரை படுத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.

இது தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!

பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.

நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.

புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிஅரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, Mai 18, 2008

இலங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும்...

பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க.




"கிழக்கு மண் முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கியதோ
அல்ல மகிந்தாவின் பேரில் இந்திய நலன்கள் ஆக்கியதோ என்ற பட்டிமன்றத்தை"க் கடந்து...




லங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும் அதை அண்டிய மகிந்தாவின் கட்சியாதிக்கப் பிடிவலுக்கின்ற தமிழ் மக்கள் சமுதாயத்தில் புலிகளுக்கு நிகரான பாசிச அடக்குமுறை ஜனநாயமெனுங் கருத்தாளுமையோடு கட்டியமைக்கப்பட்டு வருகிறது.யாழ்மாவட்டத்தில் புலிகளை அடித்து வெருட்டிய இலங்கை அரச ஆதிக்கமானது மிக நிதானமாகவே இந்தியத் திருவிளையாடலுடன் சிங்கள ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னெடுக்கிறது.அங்கோ,எந்த"சபையையும்" உருவாக்காது கிழக்கில் மட்டும் திடீர் தேர்தல்-திடீர் முதலமைச்சர்-திடீர் மாகாணசபை,அமைச்சர்களென ஒரே அசுர வேகத்"தீர்வு"அம் மாகாண மக்களுக்கு ஒப்புவிக்கப் படுகிறது.அங்கே, சகோதரத்துவமும்,மனித கெளரவமும் செழித்தோங்கி வளரும் சூழலைப் பிள்ளையான்-ஞானம் கைக்கூலிகள் கொணருந் தருணத்தில், கிழக்கு மாகாணம் வடக்குக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.இத்தகைய சந்தர்ப்பம் மெல்லத் தோன்றும்போது திரு.டக்ளஸ் அவர்களும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, இலங்கையில் வாழும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் சமாதான வாழ்வை வழங்கும் பொற்காலமொன்று புலம்(ன்)பெயர்ந்த அரசியல் நோக்கர்களிடம் முன்தோன்றி, முயற்சியில் இறங்க வைக்கின்றது!-வாழ்க இ-இ அரசியல் தெரிவுகள்-தீர்வுகள்,தாங்கும் தகுதி தமிழருக்கானது.விதையும்,விதைப்பும் எம் மண்ணிலாக இருக்கும்.



எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இதற்கு நல்ல எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டுத் தனியான அரச ஆதிக்க அலகு ஏற்படுத்தப்படுவது.இது எல்லாக் காலத்துக்குமானவொரு அரசியல் வியூகமாக இருக்காது.குறிப்பிட்டவொரு புறநிலையை(வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் முரண்பாடு-பிரதேச வாதம்) உருவாக்கியபின் அது முழுமொத்த இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆளுமைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இப்போதைக்குப் பிள்ளையான் அன்ட் ஞானம் முகவர்கள்.



அந்நியச் சக்திகளுள் பற்பல நலனகளைப் பேணும் தேசங்கள் தத்தமது முகவர்களுக்கூடாக இலங்கையில் எடுத்திருக்கும் யுத்தம் குறிப்பிட்ட தெரிவுகளில் யுத்தமாகவும்-தீர்வாகவும் மக்களரங்குக்கு வருகிறது.அதிலொன்று கிழக்கை நெருங்குகிறது.மற்றது, யுத்தமாகப் புலிகளால் நடாத்தப்படுகிறது.ஒன்றின்னொன்றை வேட்டையாட வைப்பதே அந்நியச் சதிகளின் தெரிவாக இருக்கிறது.இதற்குக் கிழக்குக்கு "ஜனநாயகம்" எனுங் காரணத்தைக் கூறுவதும் அத்தகைய அரசியலின் தெரிவே.புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை பூண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் வியூகமானது "கிழக்குக்குத் தனி நிர்வாக அலகு-ஜனநாயம்"வடிவில் நம்மிடம் வருகிறது.



கடந்த காலத்தில் ஆயுதக் குழுக்களிட்ட-குறிப்பாகப் புலிகள் உறுமிய "மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டும்" என்ற கோசங்களும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது! அது,முற்றுமுழுதுமாகவின்று சீரழிந்து ஆயுதக் குழுக்களின் பாசிசமாக வளர்ந்து தம்மையழிப்பதன் தெரிவில் மக்களைப் பலியெடுத்து வருகிறது.இதை, இன்னும் ஊக்கப்படுத்தும் உந்துதலைச் செய்வதற்கான அரசியல் காய் நகர்த்தலை இந்தியா மிக நேர்த்தியாகச் செய்து வருகிறது.இதற்கு மகிந்தா தலைமை தாங்குகிறார்.




இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் இலங்கைக்குச் சொந்தமானதல்ல.அது, முற்றுமுழுதும் இந்தியாவின்-அமெரிக்காவின் சதியோடு சம்பந்தப்பட்டது-இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நிய உறவோடு மிகவும் பிணைந்தது.



இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.குறுகிய "தீர்வுகள்"(கிழக்குக்கு மாகாணசபை,தனி மாகாணம்...)எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும்.இதைத்தாம் இன்றுவரையான எமது போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது.இதற்கு ஜனநாயகச் சாயம் பூசப் பாரீசிலிருந்து ஞானமும் இன்னும் எத்தனையோ கொடூமுடிகளும் முனையலாம்.ஆனால்,மக்கள் வெறும் மண்ணாங்கட்டிகள் இல்லையென்பதைக் காலம் உணர்த்தம்.



"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.இதற்காகக் கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டு அங்கே செயற்கையான முரண்பாடுகளை உருவாக்கித் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதையே கேலிக்குரிய கோசமாக உணர வைக்கப்படுகிறது.இத்தகைய உணர்வு,கிழக்கைத் தனித்த மக்கட்டொகுதியுடைய மாகாணமாக்கிக் கிழக்குக்கான தனி இன அடையாளத்தைப் போர்த்துகிறது.இதைப் பிள்ளையானு}டாகச் செய்து முடிக்கும் தகுதியிலேயேதாம் பிள்ளையானின் அரசியல் வரலாறிருக்கிறது.அவரை நீடூழி வாழப் புலிகள் பிராத்தனை செய்யலாம்.அங்ஙனம் பிள்ளையான் இருக்கும்போது புலிகளின் "தேசிய விடுதலை"க் கோசம் தமிழ் மக்களிடம் மறுவுருவாகஞ் செய்தக்கதே.



தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் "ஜனநாயகம்" பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம், இன்றுவரை மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடும் இந்தப் போர்களுக்கு எப்போதும் தோதானவொரு அரசியலையே முன்னெடுக்கிறது.இத்தகைய "தீர்வுகள்"இலங்கையின் இன முரண்பாட்டை ஒருபோதும் முடிவுக்குக் கொணர முடியாது.ஏனெனில், யுத்தமில்லையெனில் இலங்கை அரசும், புலிகளின் இருப்பும் ஆட்டங்காணும்.அங்கே,உலகப் பொருளாதார ஆர்வங்களின் முரண்பாடுகள் மேலெழ நாட்டின் வறுமை மக்களை"அரிசி"யுத்தஞ் செய்த் தூண்டும்.இது, தவிர்க்க முடியாது தமிழ்-சிங்கள மக்களை ஒன்று படுத்தும் அபாயத்தை இந்தியா நன்றாகவே உணர்கிறது.அவ்வண்ணமே இலங்கை ஆளும் வர்க்கங்கள்.எனவே,பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க மற்றும் அவர்களின் அடிவருடும் "ஜனநாயக-தேசியவிடுதலை" ஆலோசகர்கள் வாழ்க!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.2008

Montag, Mai 05, 2008

இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.

யுத்தத்தை நிறுத்து,
அப்பாவி மக்களை வாழவிடு!


அன்பு வாசகர்களே,வணக்கம்.தமிழ்மணமும் இப்படிக் காலைவாரிவிட்டது!வாசகர்கள்தம்மைத் தமிழ்மணம் தனது முகப்பின் விசாலாத்தாலேயேதாம் கவர்ந்திழுத்தது.கடந்தகாலத்தில் தமிழ் வெளித் திரட்டியைவிடத் தமிழ் மணத்தையேதாம் நாம் அதிகமாக மேய்ந்துள்ளோம்.இப்போது தமிழ்வெளியின் முகப்பையொத்த தமிழ்மணத்தின் முகப்பு மனதைக் கவர்வதில்லை.அது மிக அமைதியாக-உள்ளிழுக்கப்பட்டவொரு தளமாகவே காட்சிப்படுகிறது.இது நாளாவட்டத்தில் தமிழ்மணத்தைவிட்டோடி வேறுதிரட்டியை வாசிக்க வைக்கும்.முகப்பின் விசாலமும்,அது தரும் பல் முனைப் பரிணாமமுமே அதன் வெற்றியின் இரகசியமாக இருந்தது.இப்போது, தமிழ் மணத்துக்கு மங்கு சனி.இது, நிற்கட்டும்.


வாசகர்களே,மீளவும் ஒரு அரசியல் கட்டுரைக்குள் உங்களை அழைக்கிறேன்!


எமது வாழ்வும் சாவும் யுத்தத்தின் உந்துதலால் தீர்மானிக்கப்பட்டு நாம் நாடோடிகளானோம்!நம்மில் பலர் ஈழத்தேசத்தின் போரோடு ஏதோவொரு முறையில் சம்பந்தப்பட்டேயுள்ளோம்.இலங்கையைவிட்டு நாடுதாண்டி அஞ்ஞானவாசம் புரியும் நம்மில்பலருக்கு ஈழப்போராட்டத்தின் இருண்ட பக்கங்கள்மீதான பாரிய அழுத்தமும்,அருவருப்பும் உண்டு.நம்மைப் பலியெடுத்த அதன் பக்கங்கள் சொல்லிமாளா.ஈழப்போராட்டமென்று ஆரம்பமான காலத்திலிருந்து நமக்குள் மிக நேர்த்தியாக அந்நியச் செல்வாக்குத் தனது ஆதிகத்தைச் செலுத்தத் தொடங்கியது.இதில் முதன்மையான தேசம் நமது மூதாதையரின் தாயகமான இந்தியாவென்பது நமக்குக் கசப்பான உண்மையாகவுள்ளது.நாம் அகதியாகவும்,நமது உறவுகள் உயிரை உடமையை இழக்கவும் மூலகாரணமான தேசம் இந்தியாவென்பது கசப்பான உண்மையாகும்.இந்தியவில்லாமல் இலங்கையில் ஆயுதக்குழுக்கள் தோன்றி அராஜகமான ஆயுதக் குழுக்களாக உருவாகி இருக்கமுடியாது.படிப்படியாக மக்கள் மத்தியில் வேலை செய்து பரிணாம வளர்ச்சியுற்று ஆயுதப்போராட்டமாக வளர்ந்து புரட்சிகரமான இலங்கையை முன்நிபந்தனையாக ஏற்றுப் போராடவேண்டிய இயக்கங்களைத் திடீரென ஊதிப்பெருக்கவைத்தது இந்தியா.தேவையற்ற சூழலில் தேவைக்கதிகமான ஆயுதங்களை வழங்கி இயக்கங்களின் செயற்பாட்டை மிக விரிவாகச் செயற்பட வைத்துக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியைத் தடுத்துத் தமது ஆதரவில் தங்க வைத்துக் கலகம் நடாத்திப் படுகொலைகளையும், பம்மாத்து அரசியலையும் ஈழப்போராட்ட அமைப்புகுள் நிலவும்படி செய்த இந்திய வல்லாதிக்கம் இன்றைய அவல நிலைகளை செய்த முதற்தரமான குற்வாளித்தேசமாக நம்முன் நிற்கிறது.இந்தியாவெனும் தேசத்தின் உந்துதல் இல்லாமல் இதுவரையான இலங்கைப் போர் நிலவமுடியாது.




இலங்கையின் இனமுரண்பாடென்பது மிகமிகத் தந்திரமாக-நுணுக்கமாக மேல் நிலைக்கு உந்தப்பட்டு இலங்கைச் சமூகப் பொருளாதார வளர்ச்சிமுதல் அந்தத் தேசத்தினது இறைமையையும், குடிகளில் உயிர்வாழ்வையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய உலக நலன்கள் இன்றும் மிகப்பெரும் எடுப்பிலான ஆயுதச் சாகசப்போரைத் திட்டமிட்டு நகர்த்திச் செல்கிறது.இதைத் தமிழ் மக்கள் தரப்பில் தமிழ்பேசும் மக்களுக்கு தேசத்தை உருவாக்கும் போராகவும், சிங்களத்தரப்பில் தேசத்தை-தேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவுமான போராக இலங்கை-ஈழ ஆளும்வர்க்கங்கள் திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரஞ்செய்து, அப்பாவி ஏழை மக்களின் குழந்தைகளைப் யுத்தத்தில் பலிகொடுக்கிறது.இந்தப் பலியாட்டத்தில் பங்குபற்றி அரசியல்-பொருளாதார நலன்களை அடைய முனையும் அன்னியதேசங்கள் நமது மக்களைக் கொன்றழிப்பதை இனியும் பொருட்படுத்தாது,யுத்தமென்பது அழிந்த தேசத்தை நிர்மாணிப்பதற்கானதென எவரும் கருதிக்கொள்வதற்கானவொரு மன நிலையைத் திட்டமிட்டுப் பிரச்சார ஊடகங்கள் செய்து வருகின்றன.இவை தத்தம் சார்பு நிலைக்கொப்ப யுத்தத்தைக் கொள்முதல்செய்து அவற்றை மக்கள் மத்தியில் "தேசத்தை"நிர்மாணிப்பதற்கானதென வர்ணக்கனவை ஏற்படுத்தி அம்மக்களின் உயிரைத் தினமும் பறிக்கிறது.தமிழ் குறுந்தேசிய வாதக் கற்பனாவாதக் கதையாடல்கள் மக்களை இதுவரையில்லாதளவுக்கு வருத்திக் கொன்றுவருகிறது.இக்கொலை குண்டுகளாலும்,பசியாலும்,பட்டுணியாலும் நிகழ்கிறது!இத்தகைய நிகழ்வினு}டாகத் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கித் தத்தமது இருப்பை நிலைப்படுத்தும் இயக்கக் கட்சி வாதங்கள் இன்னும் காட்டமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இலங்கை மக்களைக் கொல்லும்"தேசவிடுதலை",ஜனநாயகத்துக்கானபோர்,என்று இருதரப்பாலும் யுத்தம் நடாத்தப்படுகிறது.



இந்த பாழாய்ப்போன யுத்தத்தால் ஈழம் என்பது உருவாகாதென்பதும் அது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்க்கும் வடிவமுமில்லையென்று கால்நூற்றாண்டாகப் புரட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.தேசியவாதக் கோரிக்கைகளின் பின்னே பதுங்கியிருந்து தமது நலன்களைத் தக்க வைக்கும் ஆளும் வர்க்கமானது இன்றுவரை இலட்சம் மக்களை இலங்கையில் கொன்றுகுவித்துள்ளது.இது தமிழ் சிங்கள-இஸ்லாமியச் சமுதாயங்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்தபடி அவ்வின மக்கள் அனைவரையும் ஏதோவொருவடிவில் கொன்றுகுவித்து வருகிறது.இத்தகைய யுத்தின் இருப்பில் இயக்கங்களின் தலைமைகளும் இராணுவத்தின் அதியுயர் தளபதிகளும் நிறையவே சம்பாதிக்கிறர்¡கள்.அவர்கள் தமது வருமானத்தின் மிகையான திரட்சியில் இலங்கையின் இளைய தலைமுறையை அழித்துவிட முனையும் யுத்தத்தைச் செய்கிறார்கள்.இவ் யுத்தமானது மிகக் கொடூரமானது.அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்களோ அல்லது இலங்கையின் மற்றைய இன மக்களோ ஒருபோதும் சுபீட்சமானவொரு வாழ்வைப் பெற முடியாது.இது சாரம்சத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ள ஒரு எளிய உண்மையாகும்.



யுத்தம் தடுத்து நிறுத்தப்படுவதற்கானவொரு ஜனநாயகச் சூழலைத் திட்டமிட்டு மறுத்தொதுக்கிய அன்னியத் தேசங்கள் நேரடியாகவே இலங்கையின் அரசியல் நகர்வில் மூக்கை நுழைக்குமொரு சூழல் மீளவும் திரும்புகிறது.அது மேன்மேலும் யுத்தத்தைத் தூண்டித் தமது வரும்படியைத் தக்கவைப்பதுமல்லாது இலங்கையின் சுயாதிபத்தியத்தைத் திட்டமட்டுச் சிதைத்து இந்திய-மேற்குலக-ஐரோப்பியத் தேசங்களின் உற்பத்தியில் தங்கியிருக்கும் தேசமாக உருவாக்குவதில் கவனமாக இருக்கிறது.இதன் தொடர்ச்சியில் இந்தியாவே மீளவும் பல்லாயிரம் கோடியை இலங்கை யுத்தத்தில் நிதிமூலதனமாக இட்டு வியாபாரஞ் செய்கிறது.பிணங்களின்மீது ஏறிநின்று உபரித் தொகைகளை எண்ணுவதான வியாபாரமில்லை இது.மாறாக,உயிர்களின் வீழ்ச்சியில் இலங்கைத் தேசத்தின் அனைத்துச் சுபீட்சமும் வீழ்ந்து அன்னியத் தயவின்றி இலங்கை உயிர்த்திருக்க முடியாதளவு நிலைமையை முன்னெடுத்து, அன்னிய முகவர்களால் நிர்வாகிக்கப்படும் தேசமாக உருவாக்குவதற்கே இத்தகைய யுத்தம் அவசியமாகிறது.அப்படியுருவாகும் தேசத்தில் அடிமைகளைக்கொண்டு சரிந்து விழும் தமது மூலதனத்தை மேலும் உறுதிப்படுத்தி ஸ்த்திரப்படுத்தும் பொறிமுறைகளுக்கு இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.



இந்நிலையின் தொடர்ச்சியான அழுத்துங்கள் இலங்கையில் மேலும் தொடரும் யுத்தமாக உருமாற்றப்பட்டு இராணுவச் சமநிலைகள் தற்காலிகமாகவும், சமநிலையின்மை நிரந்தரமாகவும் பேணப்பட்டு இலங்கையின் இனப்போராட்டத்துள் பல் வகையான சிறியரக ஆயுதங்கள் உள்வாங்கப் படுகின்றன.இவை ஒருபோதுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட தீர்வுகள் அல்ல.இத்தகைய யுத்தின் விளைபயனானது பல்லாயிரம் மக்களையும், பல்லாயிரும்கோடி பொருள் அழிவையும் உள்வாங்கி இன்றும் பொய்யான ஒளிவட்டங்களுடே தேசத்தின் விடிவுக்கானதெனப் பரப்புரை செய்யப்பட்டு இளைஞர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வரப்படுகிறது.இத்தகையவொரு சூழலில்தாம் பேராசியர் கோ.கர்ணனின் இந்தக் கட்டுரை 04.05.2008 ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரையூடாகப் பேராசிரியர் மிக யதார்த்தமான பல கருத்துக்களை,வாதங்களை முன் வைக்கிறார். கோகர்ணனின் வாதமானது தமிழ் பேசும் மக்களினது மட்டுமல்ல முழு இலங்கைத் தேசத்தினதும் மக்கள்தம் இன்றைய எண்ணவோட்டமாகவே இருக்கிறது.அதாவது யுத்தத்தை நிறுத்தி மக்களின் நலன்களை முன்னெடுக்கும் அரசியல் தீர்வை முன்வைக்கும் ஜனநாயகத்துக்கான அறைகூவல்கள் போரின் கொடூரத்தைச் சொல்வதிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது!


இன்றைய சூழலானது இளைய தலைமுறைக்கேற்ற சூழலில்லை!இலங்கையில் விலைமதிக்கமுடியாத இளைய தலைமுறை இக் கொடும் அநாவசியமான யுத்தத்தால் பட்டுணிச் சாவை எதிர்கொள்ளும் அவல நிலையிலும் போர் பெரும் ஆர்வத்தோடு இரு தரப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது.இலங்கையில் கொத்துக்கொத்தாக மக்கள்செத்த சுனாமியழிவைக்கண்டே அச்சமற்றுப் பெரும் போர் முனைப்போடு செயலூக்கமாகப் முன்னிறுத்தப்படுவதாக இருக்கும்போது, இலங்கையின் ஆட்சியாளர்கள்,ஈழத்தின் விடுதலையெனும் புலிகளின் அறைகூவல்கள் யாவும் மக்களை வருத்தும் கபடத்தனமான அரசியல் சூதாட்டத்தோடு சம்பந்தமுடையது.இத்தகையவொரு அவலத்தை இனியும் அனுமதிக்க முடியாதவொரு மனத்தின் பொது எண்ணவோட்டமாகப் பேராசியர் கோகர்ணின் இக்கட்டுரை அமைகிறது.மிக அவசியமான உண்மைகளைப் பேசும் இக்கட்டுரை இலங்கை மக்களின் முழுமொத்த எண்ணவோட்டத்தையும் பிரதிபலிக்கிறதென்பது மிகவும் உண்மையானதாகும்.


வாசகர்களே இக்கட்டுரையை வாசித்து,அதன் உள்ளார்ந்த அதிமானுடத்தன்மையை உணர்ந்து யுத்துத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலங்கையில் அன்னியத் தயவோடு நடந்தேறும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தும் பாரிய மனித ஒற்றுமையை ஏற்படுத்தி, யுத்தத்துக்குச் சாவுமணியடிப்போம்.இலங்கையில் சபீட்சமானவொரு வாழ்வை இலங்கையின் பல்லின மக்களுக்கும் பொதுவானதாக்கும் புரட்சியை முன் நிபந்தனையாக்கி மக்களை விடுவிப்போம்.


நன்றி.

அன்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.


05.05.2008




மறுபக்கம்:


எமக்கு வேண்டாதவர்கட்கு ஏதேன் கெடுதல் நடந்தால் நம்மிற் சிலருக்கேனும் அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. "தனக்கு மூக்கறுத்தாலும் எதிரிக்குச் சகுணப் பிழை" என்கிற மனநிலை இது. எதிரியே ஆனாலும் எதிரிக்கு ஏற்படுகிற எல்லாக் கெடுதலும் எங்களுக்கு நன்மையாகி விடாது.
எதிரிக்கு ஏற்படுகின்ற கெடுதல் யாரால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பன பற்றி நாம் யோசிக்க வேண்டும். எதிரிக்கு எதிரி எப்போதும் நண்பனல்ல. ஏனென்றால் மனித உறவுகளும், சமூக உறவுகளும் ஒரே நேர்கோட்டில் வைக்க கூடியவையும் அல்ல. நட்பும் பகையும் என்று வெட்டொன்று துண்டிரண்டாக வகுக்கக் கூடியவையும் அல்ல. எதிரிக்கு எதிரி எங்களுக்கு எல்லாரிலும் பெரிய எதிரியாகவும் இருக்க இயலும்.



இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போரால் தீர்க்க இயலாததது
என்பது இப்போதைக்கேனும் எல்லாருக்கும் விளங்க வேண்டும். ஆனாலும் போர் தொடருகிறது.
போரை யாரும் வெல்ல இயலாது என்றும் பல முறை சொல்லப்பட்டுப் பெரும்பாலானோரால்
எப்போதாவது ஏற்கப்பட்டுள்ளது. போரில் தமது தரப்பு இழப்புக்களைச் சந்திக்கிற போது
இந்த விதமான ஞானம் வருகிற சிலருக்கு நிலைமைகள் தமக்குச் சாதகமாக மாறுகிற போது போரை
வெல்லலாம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
"போரில் யாரும் வெல்ல முடியாது" என்று சொல்லப்படுகிற போது பலர் எதிரியால் வெல்ல முடியாது என்ற கருத்திலேயே அதை விளங்கிக் கொள்கிறார்கள்.


கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தின் பாடங்களை எமது தலைமைகளும், ஊடகங்களும் பெருமளவு மறந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது. அது மட்டுமன்றித் தங்களைப் போரியல் நிபுணர்களாகவும் அரசியல் ஆய்வு நிபுணர்களாகவும் காட்டிக் கொள்ளுகிறவர்கள் தங்களது கட்டுரைகளிற் தமது முற்சாய்வுகட்கு வசதியான விதமாகவே தகவல்களைத் தெரிவு செய்கின்றனர். சிலர் தகவல்கள் என்ற பேரில் ஊகங்களையே முன் வைக்கின்றனர். இவ்வாறான திரிப்புக்கள் எந்த மக்களின் நலன் கருதிக் கட்டுரைகள் எழுதப்படுவதாகப் பாவனை செய்யப்படுகிறதோ அதே மக்களை ஏய்த்து முடிவில் அவர்களை விரக்திக்குள் தள்ளிவிடுகின்றன.


இது அரசாங்கத்தரப்பிலும் நடக்கிறது. விடுதலைப் போரட்டத்தின்
சார்பாகவும் நடக்கிறது
இருதரப்பிலும் மக்கள் அறிய வேண்டிய பல உண்மைகளில் ஒரு
சிறு பகுதியேனும் மக்களுக்கு சொல்லப்பட்டிருந்தால் இன்று மக்கள் மத்தியிலிருந்து
இன, மொழி, மத வேறுபாடு கடந்த அமைதிக்கான ஒரு வெகுசன இயக்கம் வலுவுடன் இயங்கிக்
கொண்டிருக்கும். அல்லது இன்று அத்தகைய ஒரு இயக்கத்திற்கு தேவையில்லாமலே
போயிருக்கலாம்.


எனினும் நமது செய்திகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? பழிக்குப் பழி, உயிருக்கு உயிர் என்கிற விதமாகவே போர்ச் செய்திகள் வழங்கப்படுகின்றன. லட்சக் கணக்கானோரை பட்டினிக்குட்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைத்துக் கொண்டிருக்கிற போரை எவ்வாறு தமது ஊடகங்கள் சித்திரிக்கின்றன? போரால் முழு நாடுஞ் சிதைவதுபற்றிய கவலையை விட எதிரிகளில் நாலு பேர் மோதலிற் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிற மகிழ்ச்சி பெரிது. நாட்டையும் போரையும் இப்படிப் பார்க்கிற விதமாக மக்களைப் இனவாத வெறுப்பில் அடிப்படையிலேயே பழக்கப்படுத்திய பிறகு அதற்கேற்ற விதமாக எழுதுவதும் பேசுவதும் காட்டுவதும் வணிக நோக்கில் நியாயப்படுத்தப்படுகின்றன.


தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, நிலையான அமைதி என்பன பற்றி முன்னுக்குப் பின் முரணான சிந்தனைகளே முன்வைக்கப்படுகின்றன. வரலாறு பற்றியோ சமகால உலக நிகழ்வுகள் பற்றியோ சரிசரியான புரிதல் கூட இல்லாமாலேயே எல்லாத் தரப்பிலும் ஆய்வுகள் பல நடக்கின்றன.
பலஸ்தீனம், இஸ்ரேல், கொ சோவோ, பங்களாதேஷ்,திபெத், தாய்வான், காஷ்மீர், நேபாளம், தென்னாபிரிக்கா என்று பல விடயங்களில் "ஞானி நிலவைச் சுட்டிக்காட்டினால் மூடன் சுட்டுவிரலைப்" பார்பான் என்கிற விதமாக அடிப்படை உண்மையைத் தவிர்த்து மேலோட்டமாகத் தெரிகிறவற்றை வைத்து குழப்பமான முடிவுகட்கு வருகிறது அறியாமையால் மட்டும் அல்ல. தற்செயலான ஞாபக மறதியால் முக்கியமான உண்மைகள் மறக்கபடுவதில்லை. தமது வசதி கருதியே அவற்றை அவர்கள் புறக்கணிக்கின்றனர். அது நித்திரை அல்ல, பாசாங்கு.


சோவியத் ஒன்றியத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாகப் பிரிந்து
போதும் உரிமையுடன் கூடிய குடி அரசுகள் இணைந்து இருந்தன. ரஷ்யச் பேரரசின் கீழ்க்
கடுமையாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அவ்வாறான குடி அரசுகளையோ சுயாட்சிகளையோ
கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் சோஷலிஸம் விழுத்தப்பட்டதில் சோஷலிஸத்
கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகட்குப் பெரும் பங்குண்டு. அதே வேளை, அமெரிக்கா,
ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கூட்டணியின் குழிபறிப்பு வேலைகளும் முக்கியமான பங்காற்றின.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வேண்டியது சோவியத் ஒன்றியத்தில் சோஷலிஸத்தின் முடிவு
மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம் என்கிற வலுவான ஒரு அமைப்பை இல்லாதொழிப்பதும் அதன்
தேவையாக இருந்தது.
கொர்பச்சொவைவிட யெல்ற்ஸின் தலைமை அதற்கு வசதியாக இருந்தது. யெல்ற்ஸினுக்கு பின்பு ரஷ்யா மீளவும் எழுச்சிபெற்று வருகிறது. பொருளாதாரத்துறையில் முக்கியமான சில பகுதிளில் அரச கட்டுப்பாட்டை மறுபடி இறுக்கமாக்கி கொண்டதாலேயே ரஷ்யாவின் அரசு வலிமையுடன் அந்நிய ஊடுருவலை எதிர்த்துநிற்க முடிகிறது. சீனாவில் சோஷலிஸத்தால் உயிர் பெற்ற ஒரு உற்பத்தித்தளத்தின் மீது முதலாளித்துவம் கட்டியெழுப்பப்பட்டுவருகிறது. சீனாவில் அமெரிக்க அக்கறை ஜனநாயகமின்மையோ மனித உரிமை மீறல்களோ பற்றியதல்ல. சீனா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு, ஆசியாவில் மட்டுமின்றி, மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலும் சவாலாக உள்ளது.


அதனாலேயே தாய்வானை நிரந்தரமாகவே பிரிக்கவும், திபெத்தில் பிரிவினையை ஊக்குவிக்கவும், வங்கூர் இனத்தவர் உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே கிளர்ச்சிகளை மூட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பிரித்தானிய ஆட்சியால் சீனாவில் தனது இறுதித் தளமான ஹொங்கொங்கை இழந்ததை இன்னமும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறான விடயங்களைப் புறக்கணித்து, இவற்றைவிட முக்கியமாக ஏற்கனவே பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சோவியத் அரசுகளைப் பிரிந்து போகத்தூண்டியது போல பூரண சுயாட்சிகளையும், சுயாட்சிப் பிரதேசங்களையும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஏன் உடைத்தெடுத்தது என்று யோசியாமல், கொசோவோவை முன்னுதாரணமாக்கச் சிலர் முற்படுவது ஏன்? திபெத்தில் தலாய்லாமா மூலம் அமெரிக்கா செய்யவேண்டுவது என்ன என்று ஆராயாமல், திபெத் கலவரங்களைத் தூண்டிவிட்டோர் யார் என்று ஆராயாமல், தலாய்லாமாவை ஒரு மனிதாபிமான சமூக விடுதலைப்போராளியாகச் சிலர் சித்திரிப்பது ஏன்?


பலஸ்தீனம் பற்றி தலாய்லாமாவின் நிலைப்பாடென்ன? காஷ்மிர் பற்றிய அவரது நிலைப்பாடென்ன? அவையெல்லாம் போக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அவரது நிலைப்பாடென்ன? மூர்க்கத்தனமான இடதுசாரி எதிர்ப்பும் அதன் தொடர்ச்சியாகச் சீன எதிர்ப்பும் தமிழ்த் தேசியவாதத்தை இன்னமும் பீடித்துள்ளன. குறுட்டுத்தனமான சிந்திய விசுவாசம், நன்கு பட்டுத் தெளிந்தும் பார்த்துத் தெரிய வேண்டியும், கண்முன் உள்ள உண்மைகளை மறைக்கிறது. அமெரிக்கா மீதும் ஐரோப்பிய நாடுகள் மீதும் நம்பிக்கைக்கான ஒவ்வொரு நியாயமும் காற்றோடு போன பின்பும் சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தண்டிக்கும் என்ற ஆசையில் தமிழ் தேசியவாதிகள் பலரும் உள்ளனர்.
சோனியா காந்தியை இன்னொரு "மஹாத்மா காந்தி" என்று சொல்லக்கூடிய
அளவுக்குச் சிலரது எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துள்ளன. அவரது மகள் பிரியங்கா ராஜிவ்
காந்தி கொலை தொடர்பாகச் சிறையிலுள்ள நளினியைச் சந்தித்ததற்கு மனிதாபிமான
விளக்கங்களை ஒருசாரார் அள்ளி வழங்குகையில், இன்னொரு சாரார் அதில் ஈழத் தமிழருக்கும்
(இயலுமென்றால்) விடுதலைப் புலிகட்கும் சாதகமான காய் நகர்த்தல்களை துருவித்துருவி
தேடுகிறார்கள். பிரியங்கா - நளினி சந்திப்புக்கு தமிழ்த் திரையுலகக் கோமாளிகள்
சிலர் உட்பட யார்யாரோ எல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள்.


மேற்படி சந்திப்புக்கு மனிதாபிமானம் காரணமென்றால் அது பத்து ஆண்டுகள் முன்பே கூட நடந்திருக்கலாம். அது ஒரு சின்ன அரசியற் காய் நகர்த்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் வரவுள்ள மாநிலசபைத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதனுடன் தொடர்பு உண்டு. தமிழக காங்கிரஸ் தனது தீவிர விடுதலைப்புலி எதிர்ப்புக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் உள்ள அக்கறையீனத்துக்குமிடையே உள்ள உறவைக் கையாள முடியாமல் திணறுகிற சூழ்நிலையில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில சங்கடங்களைத் தீர்க்கவும் இச் சந்திப்பு உதவும்.


இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச காய் நகர்த்தல்களின் காரணங்களை அறியாமற் சில கனவுகள் வளர்க்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து மூட நம்பிக்கைகளைப் போல, கொசோவோ போல சில நிகழ்வுகள் நல்ல சகுனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை அரசிற்கு எதிரான இன்றைய நகர்வு எதுவும் இன்றைய ஆட்சிக்கு எதிரானதாய் இருக்குமே ஒழிய இன்னொரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிரானதாய் இராது. அது இனஒடுக்கலுக்கு முடிவுகட்டக்கூடியது என்றால், பலஸ்தீன மக்கள் எப்போதோ தமது விடுதலையை வென்றிருப்பர். ஏகாதிபத்திய நோக்கங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் மூட நம்பிக்கைகள் வழிநடத்த இயலாது.


இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப்பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்குமுறைக்கே இட்டுச்செல்லும்.


http://www.thinakkural.com/news/2008/5/4/sunday/marupakkam.htm

Sonntag, März 30, 2008

நமது மக்கள்...

சிங்களச் சினிமா முன் வைக்கும்"பிரபாகரன்" விமர்சகர் இரதன் வழிக் கருத்துச் சுதந்திரமாகிறது!

//புலம் பெயர் தமிழ் வாழ் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் மீது, எழுப்பப்பட்ட
அராஜகம் புதியதல்ல. சபாலிங்கம் படுகொலை, தேடக நூல் நிலைய எரிப்பு, உயிர்நிழல்
லக்சுமி வீட்டில் இலக்கிய சந்திப்பு ஆவணங்கள் சூறையாடல், தாயகம் ஆசிரியர் மீதான
தொடர்ச்சியான மிரட்டல்கள் போன்ற பல சம்பவங்களை குறிப்பிடலாம். இன்றும் இவை வேறு
வேறு வடிவங்களில் தொடர்கின்றன. துசார பீரிசுக்கு தனது கருத்தை தமிழ் மக்கள் மீது
வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு. இது பற்றிய விமர்சனங்களுக்கும் முழுமையான
சுதந்திரம் உண்டு. ஆனால் படத்தை வெளியிடவிடாமல் தடுப்பது கருத்துச்
சுதந்திரத்துக்கு எதிரான விடயம்
.//-துசார
பீரிஸ் மீதான தாக்குதல் - கருத்துச் சுதந்திரத்தை மீறும் போலி உணர்வுகள் : ரதன்
(கனடா)

தேசம் நெற்றில் கருத்தாடும் ரதன் "பிரபாகரன்" படத்துக்கு-கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்துவிடலாம்.உலக அரசுகளும்,இலங்கைச் சிங்களப் பாசிச இராணுவச் சர்வதிகார அரசும் தமிழ் பேசும் மக்களின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாக விரிந்துகிடக்கும் போராட்டத்தைப் புலிகளே தொடர்ந்து நகர்த்தும் அரசியலில்"பிரபாகரன்"என்ற தனிநபர்சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கியும்விடலாம்.கரும் புலிகள்-குண்டு கட்டி மூளைச் சலவை செய்து வெடித்துத் தொலையவும் விடலாம்.ஆனால்,இன்றைய இலங்கையின் அரசியல் நிகழ்வுகளுக்கு-இனவாத அழிப்பு யுத்தத்துக்குத் தமிழ் மக்களின் தவறான போர் உத்தியா காரணம்?அல்லது,பிரபாகரன் எனும் மனிதர்தம் சர்வதிகாரத்தனமான ஒடுக்குமுறை அராஜக அரசியலா காரணமாக இருக்கிறது?தமிழ் பேசும் மக்களின் பிணங்கள்மீது ஏறி நின்று அரசியல் செய்யும் பல்வேறுவகைகப் பண்புகளைக்கொண்ட தமிழ்க் குறுங்குழு அரசியல் முன் வைத்திருக்கும் "மக்கள் நலன்" போன்றுதான் இதுவுமொரு(பிரபாகரன் சிங்களச் சினிமா) "கருத்துச் சுதந்தரம்"-ஜனநாயகப் பண்பு?

தமிழ் இளைஞர்கள் கரும் புலியாவதற்கும்,பாலஸ்தீனத்தில் தற்கொலைக் குண்டுதாரியாகும் ஆறுவயதுப் பாலகனுக்கும் இடையில் உறவுறும் அரசியல் போக்கு-அதன் தன்மை மற்றும் இருப்பு எதன் பொருட்ட நிகழ்கிறது?இத்தகைய அரசியலின் தொடர்ச்சி இன்றைய ஈராக்கிய அவலத்துக்கும் அதன் அழிவுக்கும் காரணமாகும் உலகத்தில் நாம் வாழ்ந்தபடி,தற்கொலைத் தாக்குதல் மற்றும் கரும் புலிகள் குறித்த "பிரபாகரன்"படம்-கருத்துச் சுதந்திரம் என்ற கோதாவில் தமிழ் மக்களின்மீது சிங்கள மற்றும் உலகப் பாசிச அரசியல் கட்டவிழ்க்கும் அராஜக அரசியலை மறுக்கும் அல்லது குறுக்கும் போக்கிலிருந்து இத்தகைய அழிவுகளைத் தொலைத்த கருத்துச் சுதந்திர வாதமாக இருக்க முடியாது.சிங்கள-உலக அரசியல் நகர்வு தமிழ்பேசும் மக்களின் உயிர்களோடு விளையாடும் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு பாலஸ்தீனத்துப் போராளியை நாம் ஈழத்திலும் காணத்தக்கதாகவே இருக்கும்.தன் முன்னால் சிதைக்கப்பட்டத் தனது குடும்பத்தைச் சுவராக நினைத்திருந்த பிஞ்சு உயிர்க்கொடிக்கு என்ன ஆதாரம் தொடர்ந்து இருக்கிறது, அது உலகத்தில் தொடர்ந்து தனது உயிரைப் படர்ந்துகொள்வதற்கு?பாரி மன்னன் அங்கே,பிரபாகரன் உருவத்தில் வருவதாக அது கனாக்காண வைக்கப்படுவதற்கு எந்த அரசியல் காரணமாக இருக்கிறது?மேலும்,மேலும் தொடர் தாக்குதல்களாலும் உயிர்க் கொலைகளாலும் அடக்கப்படும் அரசியலை-போரை இலங்கை அரசின் பின் நின்று இந்தியா தொடரும்போது அதன் தொடர் இயக்கத்தால் புலிகள் என்பவர்கள் போராளிகளைத் தமது அரசியல் சார்ந்து தொடர்ந்து தகவமைக்க முடியும்.இங்கே, புலிகள் என்பது இன்னொரு புதிய ஆளும் வர்க்கத்தின் வரவைச் சொல்வதற்கான குறியீடாகவே நாம் முன் வைக்கிறோம்.அங்கே பிரபாகரன் என்பவரைத் தொடர் குறியீடாக்கும் அரசியல் மக்களைத் தமது பக்கம் வைத்திருக்கும் ஒரு வியூகத்தின் இன்னொரு பகுதிதான்.இதைவிட்ட மற்றைய பகுதியான சிங்கள ஒடுக்கு முறையின் தொடர் மனித மறுப்பே தற்கொலைப் போராளிகளின் மனதிடத்தை நிலைப்படுத்துவதாகும்.


என்றபோதும்,அரச வன்கொடுமை இராணுவத்துக்கு எதிராக மக்கள் உயிர்வாழ்வுக்காகக் குரல் கொடுக்குக் கூடிய சூழலை-அவர்களின் ஜனநாயகத் தேவைகளை நிவர்த்தி செய்தபடி,தமிழ் மக்களின் சுய கெளரவத்துக்கான அரசியலை அனுமதித்தபடி இலங்கை அரசு இத்தகைய படங்களை எடுக்கலாம்.அன்றி இத்தகைய நிலைமைகளை உருவாக்குவதற்கான முன் நிபந்தனைகளைக் கொண்டியங்குவதற்கானவொரு கலகக் கருத்தியலை இலங்கைச் சிங்களக் கலைஞர்கள் முன்வைக்கலாம்.இவையெதையும் நோக்காகக்கொண்டியங்க மறுக்கும் கலை வடிவங்களின் பின்னே இயங்கும் அரசியல் மகிந்தாவினதும் அவரது குடும்பத்தினதும் பொல்லாத அரசியலுக்கு முண்டு கொடுப்பதோடு நின்றுவிடுபவையல்ல.மாறாக,இவை கொண்டியங்கும் தளம் உலகப் பொருளாதார ஆர்வத்தோடு நமது போராட்டத்தருணங்களை இணைத்து, நம்மை மேலும் அடிமையாக்க முனையும் ஏகாதிபத்தியங்களின் முகமூடி "மனிதாபிமானம்"எனும் கபட அரசிலை நமக்குள் விதைப்பதுதான்.இன்றோ,இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு தமிழ் இனத்தைப் பூண்டோடு நசுக்கி-ஒடுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தையே பாழ்படுத்திய ஒரு அரசு,இப்போது அதன் கருத்தியல்தனமான போராட்ட முனைப்பில்-தந்திரத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை அணுகுகிறது.ஏதோ பிரச்சனையே பிரபாகரன் எனும் தனிநபரால் ஏற்பட்டது-நடைபெறுகிறதென்ற "பேமானி"கருத்தியலை இங்கு எவரும் முன்வைக்கத் தேவையில்லை.இலங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சி மிகப் பெரும் முரண்பாடுகளாக விரிகின்றன.இது, இனத்துவ அரசியலால் இன்னொரு இனத்தின் பொருளாதார ஆர்வங்களைக் கிள்ளியெறிய முனைந்தபோது தவிர்க்க முடியாது முழுமொத்த இனங்களையுமே பாதிக்கும் அரசியல் அராஜகமாக மாறி,இன்று மிகப்பெரும் இனவழிப்பாகத் தொடர்கிறது.இங்கே,பிரபாகரனோ அல்லது மகிந்தவோ போனாலும்-மரணித்தாலும் பிரச்சனை இருந்துகொண்டேயிருக்கும்.

நடைமுறைசார்ந்து, மக்களின் பிரச்சனைகளை ஜனநாயகப் பண்புகொண்ட இனவாதமுகமற்ற பொருளாதார வியூகங்களால் தீர்க்க முனையாத பாசிசச் சிங்கள அரசானது இன்று தமிழ் மக்களின் உரிமைகளை-வாழ்வியல் மதிப்பீடுகளை மட்டும் தகர்க்கவில்லை.மாறாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையுஞ் சிதைத்து,அவர்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களை வேட்டையாடி வருகிறது!இத்தகைய அராஜகத்தனமான அரசியலை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களையே வேட்டையாடும் சிங்கள அரசியல் முன்னெடுப்பிலிருந்தபடி தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகப் பார்க்க முனையும் மிகக் குறுகிய பார்வைகளைச் சிங்களப் புத்திஜீவிகளே சிங்கள அரசசார்பாக முன்வைக்கும்போது, இங்கே நாம் மிகவும் குறுகிய மனதோடு அனைத்தையும் புலிப்"பாசிசம்"சார்ந்து அணுகுகிறோம்.

இது மிக அவலமானது.

இன்றைய உலக அரசியல் நகர்வில் என்றுமில்லாதவாறு இலங்கை கவனம் பெறுகிறபோது அங்கே இலங்கையர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக அன்னிய அரசுகள் முன்வந்துவிடுகின்றன.இந்திய அரசியலுக்கோ அன்றி அமெரிக்க அரசியலுக்கோ நமது மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியுமென்றால் இத்தகைய பிரபாகரன் படமும் அவசியமற்றது.இது குறித்துக் கருத்துச் சுதந்திரமென ஓலமிடுபவர்கள் இலங்கையில் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கைதுபண்ணியபோது-அடைத்துச் சித்திரவதை செய்தபோது அதற்கான குரலைப் பலமாகப்பதியவில்லை!

இன்றும், சிறையில் வாடும் ஜசிகரன் மற்றும் வளர்மதியென்ற அவர்தம் துணைவியார் குறித்து என்ன நிலைப்பாட்டை இந்தக் கருத்துச் சுதந்திரம் கொண்டிருக்க முடியும்?அல்லது பூசாவிலும் மற்றும் இலங்கையின் கொடூரச் சிறைச்சாலைகளிலும் பல பத்தாண்டுகளாக வாடும் தமிழ் இளைஞர்கள் குறித்து எத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியும்?

இது குறித்தான மதிப்பீடுகளை எவர் முன்வைக்கும்போது அதையே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு எதிரானதென அப்பப்ப வேட்டையாடப்படும் ஊடகவியலாளரின் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் இலங்கைப் பாசிச அரசின் அட்டூழிய அரச நகர்வை நிறுத்தி, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை-சுயநிர்ணயவுரிமையை அங்கீகரித்து இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசு தீர்வு முன்வைத்து ஆத்மார்த்தமாக நகர்வைச் செய்யும்போது பிரபாகரன் என்ற தனிநபரின் சேடம் இழக்க ஆரம்பிக்கும்.ஆனால்,அதை மறுத்துப் பிரபாகரனின் இருப்புக்குத் தீனிபோட்டு இலங்கையில் புரட்சிகரமான நகர்வுகளைப் பூண்டோடு நசுக்கும் தந்திரத்தை உலகமும்,இலங்கை அரசும் செய்துவரும்போது"இந்தப் பிரபாகரன்"படத்தின் வருகைக்குள் நிலவும் அரசியல் சாணாக்கியம் என்ன?


நமது மக்கள் கரும்புலியாவதும்,குண்டுகளைப் பொருத்தி வெடித்துச் சாவதும் யாரினால் ஏற்பட்டது?

இத்தகைய நடவடிக்கைகளின் பின்னே உந்தித் தள்ளப்படும் ஒடுக்குமுறைச் சிங்களப் பாசிச அரசியல் தானும்-உலகமும்சேர்ந்து தீர்மானிக்கும் பொருளாதார நகர்வுகளாக முன் தள்ளும் குறுகிய இனவாத அரசியலின் உற்பத்தியே இத்தகைய "கரும் புலி மற்றும் குண்டுதாங்கும் போராளிகள்"வருகைக்கான அரசியல்.இத்தகைய அரசியலை மேன் மேலும் இருப்புக்கிட்டு,தமிழ்பேசும் மக்களை மிகக் கவனமான ஓரங்கட்டுவதும் அவர்களை இலங்கைக் குடியரசிலிருந்து மெல்ல வெளியேற்றுவதும் இலங்கை அரசியல் வரலாற்றின் தொடர்கதைதான். கூடவே, வந்தேறு குடிகளாக்குவதும் சிங்கள அரசியலின் மிகத் தெளிவான நோக்கு.இத்தகைய அரசியல் வியூகத்தை மிக இலகுவாக அங்கீகரித்த உலக-இந்தியப் பொருளாதார ஆர்வங்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை இலங்கைக்குள் நிறுவ முனையுந்தருணத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களின் வருகையும் இருப்பும் நிகழ்கிறது.இந்த அவலமிக்க-சூழ்ச்சிமிக்க அரசியல்-பொருளாதார நலன்களின் பின்னே இலங்கையின் புரட்சிகரமான வரலாற்றைத் தொட்ட வியூமானது எப்பவும் இலங்கையை மிகவும் பிரச்சனைக்குரிய தேசமாகவே தென்கிழக்காசியாவில் பார்க்கப்பட்டு வருகிறது.

புலிகளின் அரசியல் என்பதும்,அவர்கள் சார்ந்தியங்கம் சமுதாயத்தின் அரசியல் என்பதும் பெரும்பாலும் வெவ்வேறானதெனினும் அத்தகைய அரசியல் விருத்தியானது முழுக்கமுழுக்கத் திட்டமிட்ட சிங்கள இனவாதத்தினதும் அதன் ஆளும் வர்க்கத்தினதும் திசைவழியிலானவொரு அரசியலைப் பிரதானமாகக்கொண்டே வெளித் தள்ளப்பட்டது.இலங்கையின் அரசியல்-பொருளாதார ஆர்வங்களை வெறுமனவே இலங்கை ஆளும் வர்க்கத்தோடு பொருத்திவிட்டுப் பார்க்க முடியாது.இலங்கைத் தரகு முதலாளித்துமானது எப்போதும் இந்தியத் தரகு முதலாளிகளோடு இணைந்த பொருளாதார முன் நிபந்தனைக்களைக்கொண்டியங்குவதற்கான காரணமானது வெறும் மூலவளங்களோடு சம்பத்தப்பட்டதல்ல.மாறாக, வளர்ந்துவரும் இந்திய நுட்பவியல்சார்ந்த ஆற்றல் மற்றும் நிதியீடு சம்பந்தமான ஆளுமை மேலும் புவிசார் அரசியலோடு இவை இணைந்தே எமக்குள் பிரதிபலிக்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தோடு மிகவும் நெருங்கிய உறவைக்கொண்டியங்குகிறது.இதை மிகத் தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழ் நாட்டுப் பெரு முதலாளிகளும் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆட்சியை அலங்கரிப்பவர்களுமே!இங்கே,நிலவும் முரண்பாடுகள் அல்லது தமிழ்சார்ந்த கோசங்கள் யாவும் ஒரு கட்டத்துக்குமேல் நகராது-நசுக்கப்படும்.இதை மிக உணர்ந்தவர்கள் ஜே.வி.பி. என்ற கட்சியே.இவர்கள்தான் அப்பப்ப இந்தியப் பொருட்களை நிராகரிப்போமென அறைகூவலிடுகிறார்கள்.இது ஒருவகையில் தமிழ்நாட்டு முதலாளிகளின் அரசியலைச்(தமிழ்நாட்டரசியல்) சம நிலைப்படுத்தும் தந்திரமாகும்.சிங்களத் தேசம் இந்தியப் பொருள்களை நிராகரிக்கும் பட்சத்தில் பாதிகப்படும் பெருவணிக மாநிலம் நிச்சியம் தமிழ்நாடாகத்தான் இருக்கும்.

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வியூகங்கள் பெரும் பகுதி இந்தியத் தொழிலாளர்களின் கடினமான எதிர் நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்தே தீர்மானமாகிறது.இந்தியத் தருகு முதலாளியத்துக்கு அச்சமூட்டும் பெரும் திரளான உழைக்கும் வர்க்கத்தின் வர்க்கவுணர்வுமிக்க திரட்சியின் புரட்சிகரமான பாத்திரத்தை விளங்கிக்கொண்ட இந்தியப் "பார்ப்பனிய"ஒடுக்குமுறை ஜந்திரம் இன்றைய உலகப் பல்தேசியக் கம்பனிகளின் பொருளாதாரக் கூட்டு உற்பத்தி-இலாபவேட்கை-மூலதன மற்றும் குறை ஊதியம் சார்ந்த அரசியலுக்கு இடைஞ்சலாகவே இலங்கையின் ஈழத்துக்கான போராட்டத்தை இனங்காண்கிறது.இங்கே,பிரபாகரன் என்பவர் இத்தகைய அச்சத்தை இல்லாதாக்கும் அரசியலுக்கு அவசியமாகவிருந்த அன்றைய காலங்கள் இன்றையப் புறநிலை மாற்றங்களோடு இல்லாமற் போகிறது.எனவே,பிரபாகரன்சார்ந்து தமிழ்மக்களின் பிரச்சனைகளை-அவர்களது உயிர்வாழ்வுப் போராட்டத்தைக் குறுக்க முனையும் கருத்தியல்சார் நடவடிக்கைகளில் இன்றைக்கு அன்னியவுலகம் மிக முனைப்பாக இருக்கிறது.இத்தகைய அரசியலினது வெளிப்பாடே சிறார்களைப் போராளியாக்கும் முறைமைகளுக்கு எதிரானதொரு அரசியலாகவும் இத்தகைய ஏகாதிபத்தியங்களால் முன்னெடுக்கப்படுகிறது.தத்தமது அரசியல் மற்றும் இராணுவ-மூலவளத் தேவைகளுக்கேற்றவாறு நமது அரசியல் வாழ்வைத் தீர்மானிக்க முனையும் இன்றைய உலகப் போக்குகளுக்கெதிராக நாம் கருத்திடுவதற்குப் பதிலாகப்"பிரபாகரன்"படத்துக்கான கருத்துச் சுதந்திரம் என்றபடி நகர்வதுகூட ஒரு வகையில் நமது பிரச்சனைகளைப் பிரபாகரனுக்கூடாகக் குறுக்க முனையும் திட்டமிட்ட புரிதல்தான்.

இது குறித்து ரதன் மிகவும் பொறுப்புணர்வோடு பதில் தந்தே தீரணும்.அது சாத்தியமற்றதென்றால் இவ் விமர்சனம்-கருத்துச் சுதந்திரக் கூவல்கள் எல்லாம் இலங்கைப் பாசிச அரசுக்குச் சார்பானதாக்கும் முயற்சியின் தொடர்ச்சியே என்பது எம் வாதம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.03.2008

Sonntag, März 23, 2008

ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு...

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?


இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கே"ஜனநாயகம்-அமைதி-சமாதானம்"என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு அதன் ஐந்தாண்டுகால யுத்த ஐந்தொகையை வெளியிடும் சந்தர்ப்பம் நெருங்கிவந்தபோது அது ஆளும் புஷ்சின் மொழிவுகளாக வந்தாலும் அங்கே அமெரிக்காவின் பகாசூரக் கொம்பனிகளின்-குடும்பங்களின் திமிர்த்தனமான மனமே முன்னிற்கிறது."ஈராக் யுத்தம் அவசியமானதும்,சரியானதும் என்பதோடு மட்டுமல்ல அங்கே நிலை கொண்டிருக்கும் 158.000.அமெரிக்கத் துருப்புகளை மிக விரைவாக மீளப் பெறுவதும் சாத்தியமில்லை"என்று வெள்ளை மாளிகை பட்டியலிடுகிறது.அமெரிக்கத் துருப்புகளின் ஈராக்கைவிட்டான அகல்வு-வெளியேற்றம் ஈரானைப் பலப்படுத்தும் அதேவேளை அது இஸ்ரேவேலுக்குப் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் கூட்டும் என்று இன்னொரு புதிய அத்தியாயத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா திறந்து வைக்கிறது.

20.03.2003 ஆம் ஆண்டு ஈராக்கை இராணுவரீதியாகத் தாக்கி அழித்த அமெரிக்கக் கொடும் யுத்தத்தை புஷ் கோமாளி சரியானதென்பது அவரது புத்திஜீவித்துவப் பிரச்சனையல்ல.மாறாக,அதுதாம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கனவு."இதுவொரு யுத்தம், அமெரிக்கா அதை வெல்வதற்கும்,அவசியத்துக்குமானதாகும்,துருப்புகளை மீளப்பெறுவதற்கென்ற கேள்விக்கே இடமில்லை"என்று பெண்டகேனில் வாந்தியெடுக்கும் புஷ்சின் பிரச்சனை அமெரிக்க வங்குகுரோத்துக் கம்பனிகளின் பிரச்சனையாக இன்னொரு அத்துமீறிய எண்ணைவள நாட்டைக் கைப்பற்றும் அரசியலோடு சம்பந்தப்படுகிறது.இது உலகத்தின் அனைத்து மக்களினங்களின் ஜீவாதார உரிமைகளுடனும் மிகப்பெரும் இராணுவக் குறுக்கீட்டை செய்யும்-நியாயப்படுத்தும் அரசியலாக விரிகிறது.


ஈராக் குறித்த ஆய்வை ஜேர்மன் ஊடக முகாமையாளர் டாக்டர் யுர்கன் ரோடன்கோவ்பெர் என்ற பத்திரையாளர்"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?"என்ற தனது ஆய்வு நூலில் தான் நேரடியாகப் பார்த்தை-அநுபவித்தைப் பதிவு செய்திருக்கிறார்.ஈராக்கில் அமெரிக்கத் துரப்புகளின் அட்டூழியத்தை மட்டுமல்ல அமெரிக்க அரசியல் ஈராக்குக்குள் நுழையவிடும் பத்திரிகையாளர்களை தமது கட்டுப்பாட்டின்கீழ்த்தாம் இடங்களைக் காண்பிப்பதும்,எந்தெந்த இடங்களைப் பார்வையிடலாமென்பதை அமெரிக்க இராணுவ அதிகாரிகளே தீர்மானித்துத் தமது கண்காணிப்பின் கீழ்தான் அனைத்தையும் அநுமதிப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.இது அமெரிக்க அரசியல்.இந்தியாவையோ அல்லது இலங்கையில் தமிழர்கள் பலியெடுக்கப்படுவதையோ மனிதவுரிமை மீறலாக அது பார்க்காது.அல்லது, இத்தகைய நாடுகளுக்கோ அது ஒருபோதும் குற்றப் பத்திரிகை தயாரிக்காது.இதையும் நாம் புரிவதில் சஞ்சலம் இருக்குமாயின் தொடர்ந்து மேலே செல்க!

ஈராக்கில் இதுவரை 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.11 இலட்சம் மக்கள் ஊனமுற்றுக் கிடக்கிறார்கள்.பாக்தாத்தில் ஒவ்வொரு இரண்டவது வீடும் ஏதோவொரு வகையில் குறைந்தது ஒருவரையாவது பலிகொடுத்திருக்கிறது.ஈராக்கின் முழுமையான குடியிருப்புகளில் 40 வீதமான குடியிருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.மேற்காணும் தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு நிறுவனமான ஓ.ஆர்பி. மிகக்கடினமான ஆய்வுகளுக்குப் பின்பு கடந்த 2007 இலையுதிர்காலத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேற்குலகத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஆய்வை-நூலைத் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் எழுதியிருக்கிறார்."மேற்குலகத்தவர்கள் மிகவும் கொடுமையானர்கள் இஸ்லாமிய உலகத்தவரைக்காட்டிலும்"என்று தடாலடியாகவே குறிப்பிட்டுத் தனது ஆய்வை ஈராக்குக்குச் சென்று-அநுபவித்து எழுதியுள்ளார்.

காலனித்துவத்திலிருந்து இன்றுவரையும் பல கோடி இஸ்லாமியர்கள் பலிகொள்ளப்பட்ட வரலாற்றைச் செய்தவர்கள் "பழைய ஐரோப்பாவின்"குடிகளே!இன்றைய அமெரிக்கா அதன் அடியொற்றி அழிப்பு அரசியலை மேற்கொள்ளும்போது இந்தப் பழைய ஐரோப்பாவின் நவ லிபரால்கள் ஆங்காங்கே அமெரிக்காவுக்குப் பின்னால் பதுங்கியபடி ஐனநாயகம் பேசுகிறார்கள்.இவர்களின் மனோத்திடமானது ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியை அமெரிக்க அத்துமீறிய ஆக்கிரமிப்பால் முன்னெடுக்கமுடியுமென்பதுமட்டுமல்ல அதன் வாயிலாக வந்தடையும் மூலவளத்தை கணிசமானளவு ஐரோப்பியச் செல்வமாக்குவதில் அமெரிக்காவுக்கான தார்மீக இராணுவ-அரசியல் ஒத்துழைப்பாக இருக்கிறது.ஈராக் யுத்தத்துக்காக ஜேர்மனிய அமெரிக்காவுக்குக் கொடுத்த நிதி 4.000 கோடி அமெரிக்க டொலர்கள் என்பது ஒரு மெய்யான மதிப்பீடு.இன்றைய புஷ்சின் பின்னே மறையமுனையும் ஐரோப்பியக்கூட்டுக்குள் நிலவும் முரண்பாடுகள் அமெரிக்க மூலதனத்தோடு மல்லுக்கட்டும் போக்கை மிகுதியாக மறைத்தபடி அமெரிக்காவின் முதுகில் குத்த முனையும் அரசியலை ஜேர்மனியும்,பிரான்ஸ்சும் முன்னெடுக்கும்போது போலந்து அமெரிக்காவுக்கு மிக விசுவாசமான நாடாக இருக்க முனைகிறது.அங்கே,அமெரிக்காவுக்கான நம்பகமான இராணுவத் தளம் நிலைபெற்று ஏவுகணைத் திட்டம் நிறைவேறி வருகிறது.இது இருஷ்சியாவின் வயிற்றெரிச்சலாக விரிந்து கொசோவோ எதிர்ப்பாக மாறுகிறது!

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர்Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும,; இன்றைய புஷ்சினது நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.அன்றோ காலனித்துவக் கொடூர நெடுமுடிகள் ஆட்சியல் அமர்ந்தபடி உலகை வேட்டையாடியதற்கும் இன்றைய நவீன"ஜனநாயக"க் காவலர்கள் ஆட்சியில் அமர்ந்தபடி"சகோதரத்துவம்,ஜனநாயகம்,அமைதி,சமாதானம்"சொல்லி உலகை வேட்டையாடுவதற்கும் அடிப்படையில் ஒற்றுமை தமக்குச் சொந்தமில்லாத சொத்தை தமதாக்கும் செயற்பாடாக இருக்கின்றதெனினும் உலகைத் தொலைத்துக்கட்டும் பொருளாதார முனைப்பின் அதி நவீன அணுவாயுத இராணுவக் குறுக்கீடானது இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்பே மிக மோசமான வன்முறையாக உலகைத் தொலைக்க முனைகிறது!இன்றைய அமெரிக்காவின் இராணுவ விய+கமானது"Ground-Based Midcourse Defense System" (GMD) திட்டமாகவும் உலகைச் சுற்றிப் பொறிவைக்க முடியுமென்பதற்கு அமெரிக்க-இருஷ்சியப் பேச்சுவார்த்தைகளில் தென்படுகின்றன.இத்தகைவொரு சூழலில்தாம் நாம் அமெரிக்க வல்லாதிகத்தின் போர் வெறியானது வெறுமனவே மூலவளத் திருட்டுக்கானதுமட்டுமல்ல அது இனவாத அரசியலின் இன்னொரு தொடர்ச்சியை வற்புறுத்துவதாகத் தொடர்ந்து கூறிவருகிறோம்.அமெரிக்காவின் இத்தகைய அரசியல் உள்ளீடுகளை மறைப்பதற்கானவொரு தயாரிப்பில் நாளை திருவாளர் ஒபாமா அமெரிக்க அதிபாராகவும் வாய்புண்டு.ஏனெனில், முகமிழக்கும் அமெரிக்க ஜனநாயகத்தை நிறப்பாகுபாடற்ற அமெரிக்க நவீன அரசியல் தடுத்து நிறுத்துவத்தின் இராஜ தந்திரத்தில் இனவாதக் கழிசடை அழிப்பு யுத்தத்தின் வீரியத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளில் ஓபாமாவும் ஒரு கருவியாக இருப்பதைத் தவிர வேறென்ன அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு அவசியம்?

இங்குதாம் ஜேர்மனிய ஊடகவியலாளர் திருவாளர் யுர்கன் ரோடன்கோவ்பெர் தனது ஆய்வுகளை ஒடுக்கப்படும் மக்கள்சார்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இவர்களது எழுத்தின் எல்லை மேற்குலகச் செழுமைமிகு மூலதனவொழுங்குக்கானதாகவே இருக்கிறது.இது உலகு தழுவிய அத்துமீறிய அமெரிக்க-ஐரோப்பிய இராணுவக் குறுக்கீட்டுக்குத் தடையாக முன்வைக்கப்பட்டாதாக இருப்பினும்,உலக மூலவளங்களைப் பெறுவதற்கான இன்னொரு வகையான முதலாளிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறது.அது சாரம்சத்தில் இராணுவவாதத்தை மறுப்பதற்குப் பதில் அதையும் செழுமையாக்க முனைகிறது.இத்தகைய இருவகைப்பட்ட முகத்தைக் கொண்டிருப்பினும் இன்றைய அமெரிக்காவின் அதீத கொடுமைகளைச் சொல்லும் ஆதாரப+ர்வமான உண்மைகளை அது உலகுக்குத் தருகிறது.நாம் அவரோடு கூட நின்று"நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்?" என்று கேட்காது நீங்கள்,எதற்காக உழைப்பவர்களைக் கொல்கிறீர்கள் என்று கேட்டுவிடலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
22.03.2008

Samstag, März 15, 2008

இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?

மலையகப் பரிசுக் கதைகள்.


//இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்.//
"மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு
தேடல்"



மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து-


"மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்".

முதலில் "விரக்தி" சிறுகதையை என் வசமாக்கிறேன்...சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன்.

ஒரு தடவை...

இரு தடவைகள்...

மூன்று...நான்கு...

தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது!

முயன்று,முயன்று தோற்றேன்!

விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"


தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!


இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!


வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!


"மருமகளின் அன்பளிப்புகளால் உடல் பூரித்தது.தான் சமைத்தவற்றை மூத்த மகனும்,பேரனும் உண்டதால் பெற்ற வயிறு குளு குளுத்தது.இரு (இ)லயத்தார்களும் வந்து முறைவைத்துக் கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது.நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது."


அம்மா:பெற்றவள்.


மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!


அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.


என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அசூமத்தின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!


அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்:தேசத்தின் சந்தோசம்!அசூமத்துக்கு ஒன்பதாண்டுகளுக்குப்பின்"அம்மா"வைப் பார்க்க முடிந்தது.இன்றெமக்குப் பல பத்தாண்டுகள் சென்றாலும் அம்மாவைப் பார்க்க முடியுமா?-அந்தப் பாக்கியம் கிடைக்குமா?-எல்லாம் "அவன்" செயல்!,இன்ஷா அல்லா!!


இக் கேள்விகளும்,என் தாயாரின் நிழலுருவமும் சதா என் விழிகள்முன்...


தொடர்ந்து தொடர்ந்து முயன்றேன்,அடுத்த சிறுகதைகளை வாசித்து விடுவோமென,எட்டித்தாவ முயன்றால் அசூமத்தும்,அவரது மோட்டார் சயிக்கிளும்,மகனும் கண்ணெதிரே வருகிறார்கள்.


உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.


பனங்கூடல்.


கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...


தென்னை வளவு.


பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...


இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,அசூமத்தின் அம்மா.அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்.அம்மா:தாய்-தேசம்?


ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த நான்-நாம் தேசம் தொலைத்தவர்களாகிறோம்.


ஆம்!


அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!


இப்போது அசூமத்தின் வலி,எங்கள் வலியாகிறது.


"தினசரி என் சேப்புகளை(சேட்டுப் பை)மேய்தே மாமிக்கென்று சில புடவை அநாமதேயங்களை வாங்கி வைத்துக்கொண்டு,"போய்யிட்டு வாங்களேனப்பா"என்று புடுங்கி எடுத்தாள்."


அதிகமான பெண்கள்,குடும்பப் பெண்கள் இன்றும் சுய பொருளாதாரத்தில் சார்ந்து வாழவில்லை.அவர்கள் தகப்பனினதோ,புருஷனினதோ,சகோதரனினதோ வருமானத்தில் தங்கியுள்ளனர்.இலங்கைபோன்ற நாடுகளின் சமூக வாழ்வின் உண்மை உருவத்தை நன்றாகவே அசூமத் கேலி செய்கின்றார்.எனினும்,மாமிமார்களைக் கடித்துத் தொலையும் மருமகள் பிள்ளைகள் மத்தியில் மனைவியை அன்பின் குறியீடாக்கி,திட்டுவதும் துன்புறுத்துவதும் இருதரப்புக்குமுரிய செயலாய் இருப்பதையுணர்ந்து,அவற்றைப் போக்கவும் முனைகிறார்.இங்கே அன்பைத் தவிர எந்த விண்ணாணங்களும் இருப்பதில்லை.



உழைத்துண்ணும் மனிதர்கள் கட்டுப்பட்டித்தனமான நடுத்தர வர்கக்கத்தின் தன் முனைப்புச் சார்ந்த அதீத தனி நபர் வாத மனிதர்களாக இருப்பதில்லை.அவர்களின் அன்பும்,அறிவும் "தன்னையும் தான் வாழும் சுற்றத்தையும்" பிணைத்தபடியேதாம் உலகை எதிர்கொள்ள வைக்கிறது.இதுதாம் வாழ்வு.இதன் நிசம் போலியான அசத்தல்களுக்கும் அன்பளிப்புகளுக்கும் அப்பால் "எள்ளாய் இருப்பினும் ஏழாய்ப் பிரித்துண்ணும்" உண்மை மானுடப் பண்பாய் விரியும்.அசூமத்தின் மாந்தர்கள் அன்பையே பொழியும் உண்மை மானுடர்கள்.இவர்கள் கூடியுழைத்துண்ணும் பொதுப் பண்போடு வளர்ந்தவர்கள்.பொன்னான மனிதர்களாக நம்மை நெருங்குகிறார்கள்.நாவலாசிரியர் ஜெயகாந்தன்,இயக்குனர் மகேந்திரன் போன்றோரின் கதை மாந்தர்களிடமிருக்கும் "மானுட அழகு" இந்த அசூமத்தின் மாந்தர்களிடம் மிளிர்வதைக் காணும்போது, மகத்துவம் என்பதெல்லாம் மனித வாழ்வின் அனுபவத்துக்கு அப்பால் இல்லையென்பதை உணர்வதும் அந்த அநுபவத்தை அர்ப்பணிப்போடு பெறுவதே வாழ்வின் சுகானுபவம் என்பதை இத்தகைய கதை மாந்தர்கள் மூலமாகச் சொல்லும் அசூமத் கதை சொல்லிகளுள் மிகச் சிறப்பாகத் தோற்றம் பெற்றுவிட்ட நல்ல கதாசிரியர் என்பதை விரக்தி சிறுகதையூடாக நிரூபிக்கிறார்.


இங்கு அசூமத்தின் தாயாரின் மருமகள் மாமிக்காக அன்பையும்,ஆதரவையும் பிடவை மூட்டையாய் கட்டிப் புருஷன் பிள்ளையோடு அனுப்புகிறாள்.இவள் தாய்.தாய்குத் தாய்மை பொழியும் தாலாட்டு இப்படித்தாம் இருக்கிறது நிசத்தில்.


அன்பு.


இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது தன்னையும் தன் சுகத்தையும் மறுத்து தன் விழிகளுக்குமுன் தன்னொத்த மானுடர் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இது நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும்,அது தாயே ஆனாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்.இதுதாம் ஒரு மார்க்சையும்,லெனினையும்,செகோராவையும் மனிதர்களுக்காகச் சாகத் தூண்டியது.இதுதாம் இறுதிவரையும் ஏங்கல்சுக்கும் மார்க்சுக்கும் இடையிலான அற்புத நட்பாக இருந்தது.


தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள் அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெருதாகும்?இல்லை,இல்லவே இல்லை!நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு எனக்காக அன்னை தந்தது.


இது உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!ஈழத்தவர்களான எமக்கிது தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.



கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள் மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு படைப்பிலக்கியமுமொரு ஆயுதமே.எனவேதாம் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிறோம்.இன்றைய உலகில் மனிதர்கள் மிதமான தனிநபர் வெறிக்குள் கட்டுண்டு கிடப்பதற்கும் இதுவே(இன்றைய சமூக நிலைமை) காரணமாகிறது. தன்னையே குறியீடாக்கி உலகத்தைத் தரிசிப்பதற்குமான தன்முனைப்பு எந்தவொரு படைப்பாற்றலையும் மனிதரிடம் பொதுமையாக வளர்க்கவில்லை.அது(படைப்பாற்றல்) சோதனைக்கூடத்து முதிசமாகக் கிடப்பதற்கும் அதுள் ஓரிரு மனிதர்களே தம்மை முன்னிறுத்துவதற்கும் இந்த அமைப்பே உறுதுணையாகிறது.உலகத்தின் அனைத்து நிகழ்வுக்கும் பண்டுதொட்டுப் பெறப்பட்ட நம் முன்னோரது உழைப்போடு கூடி வரும் மனித உறவின் மகத்தான அழகுதாம் காரணமே தவிர, தனிநபர் செயற்பாடோ அல்லது சுப்பர் மூளையோ காரணமில்லை!இதுதாம் அசூமத்தின் கதைகளுடே நாம் காண முனையும் அன்பாய் கதையெங்கணும் விரிந்து கிடக்கிறது.



மனிதவுறவுகள் குலைந்து சிதறும் இன்றைய சமூகத் தளத்தில்,ஒரு அரும்பாய் அன்பைத் தக்க வைக்கிறாள் இந்த மருமகள்.


இது தேவை.


இதன் அரும்பு அகல வேர்களைப் பரப்பி விருட்சமாகணும்.


"மகனும்,பேரனும் கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த மோட்டாரும் தன் காம்பறா வாசலில் நிற்பதையிட்டு மகிழாத தொழிலாளத் தாய் யாராவதுண்டா?"


அசூமத்துக்கு இந்தக் கவலை வேண்டாம்.


அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.


இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?


சாதரணச் சயிக்கிள் வண்டியைக் கண்டே மகிழ்வுறும் தொழிலாளத் தாயானவள் மோட்டார் வண்டியைக் கண்டு மகிழ்வதுமட்டுமல்ல அதைச் சாக்கினாலோ பாயினாலோ மூடிப் பாதுகாத்து,இது பிள்ளையின் வண்டியென ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில் துன்பத்தில் துவளும்; தொழிலாளித்தாய் தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதா;மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய் பெருகுபவள்.இப்போது இவள் தாய்:தேசம்!


எண்பதுகளுக்குமுன் இச்சிறுகதைத் தொகுப்பை வாசிக்க நேர்திருந்தால் நிச்சியம் இந்த் யாழ்ப்பாணத்துத் தமிழனால் இத் தொகுப்புக்குள் தன் வாழ்வைக் கண்டிருக்க முடியாது.தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லாததுபோல் தூரத்தில் நின்று-வாசித்திருப்பான்.


இப்போது வாழ்வும்-சாவும் சுமப்பவனாய்,உலகெங்கணும் தெருவோரச் சருகாய் அலையும் இவனால்-இவளால் இக் கதைகளைத் தன்னுள்ளே நிகழும் வாழ்வாய்க் காணமுடியும்.அதற்கெதிராய்ப் போராடத் தெரியும்.உயிரைப் பணயம் வைக்கத் தெரியும்.


இதுவொரு ஆச்சரியப்படத் தக்க விந்தையே!யாழ்ப்பாண மண்ணின்(சமூகத்தின்)கட்டுக்கோப்பில் இப்படி உருப்பெறுவது ஒரு மகத்தான மாற்றமே.


நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உழைத்து,உருக்குலைந்த மலையக மக்களின் சோகச் சுவட்டை-இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது!இது நமது வாழ்வென்று ஓங்கிக் குரலெடுத்து அழுகிறோம்.தாயைத் தொலைத்த வாழ்வு-தேசத்தை இழந்து தூர நின்றுறவுகளோடு தோள் சேரத் துடிக்கும் இந்த வாழ்வில்- நம்மை ஜந்திரம் தின்று துப்பும் இன்னொரு பொழுதில்- அனைத்தையும் தொலைத்து அழியும் நமது வாழ்வே மலைய மக்களின் வாழ்வாயும் விரிகிறது.இங்கே பொருள் வயப்பட்ட சம நிலைதாண்டிச் சோகம் தரும் வலி,உறவுகளைத் தொலைத்துச் சுற்றத்தையிழந்து தவிக்கும் வலியையே நாம் குறிப்பிடுகிறோம்.


துடிக்கின்றோம்.தொண்டைக்குள்ளிருந்து ஏதோவொரு பொருள் கேருகிறது,விழிகள் அப்பப்ப பனித்துக் கொள்கிறது-அல் அசூமத்தின் விரக்த்திக்குள் வாழும்போது.


"சத்தியக் கடதாசிக்காரர்களை நொந்துகொள்வது புத்தியில்லை.அவர்களுடைய வாழ்க்கைப் பாதையைவிட இந்த மண் பாதை அவர்களுக்கு மேலானதாக இருக்கலாம்."


மனித வாழ்வின் சோகச் சுவட்டை இத்தனை நாளும் இலக்கியங்கள் தூரத்தில் நின்று துரத்திப்பிடிக்க முனையும் படைப்புகளை நாம் இதுவரை அநுபவித்திருக்கிறோம்.இதிகாசம்,புராணம் இத்தகைய இடர்களை நமக்குத் தந்தவை.ஆனால,; இன்றைய இத்தகைய சிற்றிலக்கியங்கள் நமது வாழ்வின் வலி சொல்லி,நமது வாழ்வை அதன் குருதியோடும் சதையோடும் சொல்லும் பண்பைக் கொண்டிருக்கிறது.துன்பத்தை அனுபவித்து அதைச் சொல்வது அனைத்தையும்விட மேலானது.இன்றைய படைப்பாளிகளை இத்தகைய வாழ்வின் நெருக்கடியேதாம் உற்பத்தியாக்கி நமக்கு தருகிறது.இந்தப் படைப்பாளிகளின் உற்பத்தியானது சமூகத்தில் நிலவும் கொடுமைகளுக்கெதிரான நியாயத்தின் ஜனனமாகவும்,நியாயத்தை நிறுவுவதற்கான போர்க் குரலாகவும் எடுக்கப்பட வேண்டும்.பெயருக்கு இலக்கியம் படைக்கும் சூழல் போய்,வாழ்வின் அனைத்து அடக்கு முறைகளையும் மீறும் எதிர்ப்புக் குரல்களே இவை.இவைகளுக்கு எந்த இடமோ,எந்த மொழியோ கிடையாது.இவை எங்கெங்கு அநீதியுண்டோ அங்கே பிறப்பெடுக்கின்றன.எங்கே மனிதத் துயர் நிலவுகிறதோ அங்கே இவை எதிர்ப்புக் குரலாக நமது வாழ்வோடு இரத்தமும் சதையுமாக ஒட்டி வருகின்றன.


இங்கே அல் அசூமத்தோ விரக்தி சிறுகதையூடாக மலையக மக்களின் அவதியுறும் வாழ்வு நெருக்கடிக்குள் தன்னை முழுமையாகப் புதைத்து,அந்தத் துயரை அநுபவித்து-அதன் தாக்கத்தால் அமிழ்ந்துபோனபோது,குரல்வளைவரையும் நெருக்கடிகளின் வீரியம் வலுக்கரத்தைக் கொணர்ந்தவேளை, அதை எதிர்ப்பதற்காகவும், தன்னை-தான் சார்ந்த மனிதரை-உழைப்பாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான ஒரு சிறு பொறியாய் மேலெழுப்புகிறார்.அப்பொறியை ஊதிப் பெருக்கி பெரும்ஜுவாலையாக்கிவிட்டு அதற்குள் தன்னைமட்டுமல்ல எல்லோரையும்-சமுதாயத்தில் மனித விரோதிகளாக வாழும் சந்தர்ப்பத்தைத் தூண்டும் அனைத்து ஆதிக்கவாதிகளையும் சேர்த்துக் கட்டியிழுத்துவந்து திணித்துப் பொசுக்கிறார்.இது ஒருவகையில் சமுதாய ஆவேசமாக எழுந்து மனித விடுதலைக்கானவொரு பக்குவப் பண்பைப் பெறும் முன் முயற்சியாக மனம் கொள்ளத் தக்கது.


ஒருவகையில் இதுவொரு வேள்வி!இவ்வேள்வியில் எரிந்து,கருகிச் சாம்பலாகி இறுதியில் எஞ்சும் கரித்துண்டமாய் உணர்வு கேலி செய்கிறது.


"ஆக,யாதும் ஊரே யாவரும் கேளிர்...இடுகாடு சொல்கிறது,புல் முளைக்கும் வரை ஆறடிதாம் என்று.ஆனால் தோட்டக்காட்டுச் செக்றோல் சொல்கிறது,ஒரு மில்லி மீட்டர்கூட இல்லை-போடா!,என்று."


அல் அசூமத்தின் இந்தக் கேலியானது மிக நியாயமானது.இன்றைய நமது வாழ்வின் நிலையில் இத்தகைய கேலிகளை சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளை இனம் காட்டத்தக்கவொரு எளிய வடிவமாக நாம் காணலாம்.இத்தகைய எளிமையான நையாண்டிகளால் மனித துயரத்தின் தொடக்கப் புள்ளி எங்கே வேரிடுகிறது,அது எங்ஙனம் கிளை பரப்புகிறதென்பதையும் நாம் சொல்வதற்கான ஒரு முறமையாக இவற்றைப் படைப்புகளுக்குள் சொல்வது எந்த வகையிலும் மனித வாழ்வின் நேர்த்தியை நோக்கியே.இதைக் கையாளுவதில் அசூமத் சிறந்திருக்கிறார்.


சொந்தமாய் உறவுறும் மண்ணை எவரும்,எவருக்காவும்-எந்த ஆதிகச் சக்திக்காவும்,அதன் வலுவான அடக்குமுறை வன்கொடும் ஜந்திரத்தின் யுத்தத்துக்காவும் விட்டுவிட முடியாது.தான் பிறந்து வளர்ந்த மண்ணை தாய்க்கு நிகரா மதிப்பதும்,உறவு கொள்வதும் மனித வாசிகளின் நியாயமான ஜீவாதாரவுரிமையே!பிறந்த முற்றத்தை எவரும் விட்டுக் கொடுக்க முடியாது,சட்டங்கள்போட்டுப் பறிக்கலாம்,திட்டங்கள் போட்டுத் துரத்தலாம்.ஆனால் உளப்பூர்வமான உரிமையை- அந்தவுரிமையால் எழும் பிணைப்பைப் பாசத்தை யாராலும் பறிக்கவோ -அழிக்கவோ முடியாது!


"கடுங்கந்தை!எட்டு வருஷங்களாக என்னை வளர்த்த பூமி...!உள்ளே ஓர் ஓலை தோன்றி மறைந்தது."


அல் அசூமத்தின் இந்த வார்த்தையும்,உணர்வும் "என்னை"உறுதி செய்கிறது.யாழ்ப்பாணம்... எனது பிறந்த மண்.இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது.எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காது மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லி ஜந்துக்கள் சுதந்திரமாக ஊருகிறது.தடி கொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எனது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!


நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.


இந்தச் சூழலில்தாம் விரக்தி மிகச் சாதரணமாக நம்முள் ஒரு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அந்தத் தாக்கம் தரும் அதிர்வு மிகச் சாதரணமன்று.அந்த அதிர்வின் அதியுச்சமான விசை ஒரு சுனாமியாக மனத்தில் அலைகளை எழுப்பினாலும்,இன்றைய நமது போராட்டச் சூழல் நமக்கேன் வம்பை என்று குடும்பத்துக்குள் முடக்கி விடுகிறது.ஆத்திரமுடைய அவசரக்காரருக்கு ஆத்தைகூடத் துரோகியாகிப்போன சூழலில் எல்லாம் நடக்கும்.


விரக்தி சிறுகதையல்ல.அது நமது வாழ்வு.அதை வாசிக்க,வாசிக்க ஒரு பெரும் பொறி நெஞ்சில் மோதிக் கிளம்புகிறது.நான் கேட்க விரும்பாத வார்த்தை நாடற்றவர்கள் என்பதே!


"நாடற்றவர்கள்?"



இவ் வார்த்தை எல்லாத் தார்மீகக் கோட்பாடுகளையும்(முதலாளிகளின்)கேள்விக்குள்ளாக்கி"குருட்டார்த்தம்"பேசும் அரச சட்டங்கள்,தேசம்-தேசிய இனம்-மனிதர்களுக்கெல்லாம் சாட்டைகொண்டு முதுகினில் சொடுக்கிறது.இதுதாம் அசூமத்தின் கடைசி ஆயுதமாக இருக்கிறது.


இங்கே அல் அசூமத் உயர்ந்து நிற்கிறார்.


வார்த்தைக்கு வார்த்தை உணர்ச்சிகளை தத்துவமாய்ச் சொருகி வைத்து-விரக்தியை-வாழ்வாக்கி நமது விழிகள் முன்"நீ வாழும் வாழ்வு இதுதாம்"எனப் பறையடிச்சுச் சொல்கிறார்.இதுதாம் அவரது படைப்பின் மிகப் பெரும் அழகியல் வலு.


விரக்தியின் கரு ஒரு சிறு பயணக் குறிப்பே,அதை எவ்வளவு சிறப்பாக-வாழ்வாய் மலர்விக்கிறார்!இது உண்மை வாழ்வு.இதன் இயல்பான சோக வடுவாய்-வரலாறாய் விரியும் இலங்கை அரசின் கொடூரம்-உழைப்பவரையொடுக்கும் வக்கிரம் மலையகத் தமிழரின் வாழும் உரிமையை எங்ஙனம் பாதிக்கின்றதென்பதை சிறு பொறியாய்ச் சொல்லி பெரும் தீயாய் நமது உணர்வைத் தனது படைப்பால் வளர்த்துச் செல்கிறார்,அல் அசூமத்.




"இங்கேதாம் உதைக்கிறது.பழைய மாணவர்களாகப் பெருமைப்பட்ட எங்களுக்கு விதியில்லை.காலாகாலத்தில் போய்ச் சேர்ந்துவிட்ட கந்தசாமியாரின் இலட்சியத்தையும்,எங்களின் உரிமையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் மண்ணாசைக்காரர்கள்."-விரக்தி.


ஆம்!


அல் அசூமத் வரலாற்றை நன்றாகவே புரிந்துள்ளார்.



"...மண்ணாசைக்காரர்கள்."


ரொம்பவும் நிதானமானதொரு வார்த்தைக்கூடாக ஒரு பெரும் வரலாற்றுத் துரோகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்பேசும் மக்களின் வோட்டுரிமைக்கு வேட்டுவைத்து "கப்பலில்" ஏற்றியவர்களும்-ஏற்றுபவர்களும் இந்த மண்ணாசைக்காரர்கள்தாம்.


இவ்வகை மண்ணாசைக்காரர்கள் பல தளங்களில் அகலத் தங்கள் வேர்களைப் பரப்பியுள்ளார்கள்.பலர் சூட்சுமமாக நமக்குள்ளேயும்,வெளியேயும் இருக்கிறார்கள்.
இவர்கள் என்றுமே நமக்கு ஆபத்தானர்வர்கள்.மனிதவுரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் சதிகாரக்கூட்டம்.


இப்போது கோவிந்தராஜனிடம் போகிறேன்.


"கப்பல் எப்பங்க...?"


நன்றாகவே கேட்கிறார்?


வீரையாவை மலையக விடுதலையின் விதையாய் மண்ணாசைக்காரர்களால் அபகரிக்கப்பட்ட தங்கள் சொந்த மண்ணில் ஊன்றுகிறர்ர்.


அது முளைவிடுகிறது.


மண்ணாசைக்காரர்கள் சுடு நீரை அதன்மேல் வாரிக் கொட்டுகிறார்கள்.


முளை வாடுகிறது!


பட்டுப்போகவில்லை.மீண்டும் துளிர்க்கிறது.மண்ணாசைக்காரர்கள் முன் தன் கிளைகளைப் பரப்புகிறது.


"எதுக்குக் கத்தியைத் தீட்டினோம் என்பது உங்களுக்குத் தெரியும்.இனி எதற்காகத் தீட்டுவோம் என்பதும் உங்கள்போன்ற தலைவர்மாருக்குத் தெரிந்தால் சரி."


காலவோட்டத்தில் இவ் "விதை"துளிர்த்துக் கிளைபரப்பி, மரமாய் விழுதெறிதலை மண்ணாசைக்காரர்களால் சகிக்கமுடியவில்லை.


சதி செய்கிறர்ர்கள்.


தங்கள்"பலங்கொண்ட"மூளைகளைக் கசக்கித் துளிர்த்துக் கிளைபரப்பிய மரத்தைச் சாய்க்க வழி வகுக்கிறர்ர்கள்-வழிகண்டாச்சு!


இனியென்ன?


கோடாரியுடன் வருகிறார்கள்.


கே.கோவிந்தராஜிடம் இப்போது வாழ்வின் மெய்ப்பாடு உண்மைகளை ஊடறுத்துச் சொல்கிறது.


சிதறிப்போயுள்ளோம்.சின்னாபின்னப்பட்டுத் தனிமைப்பட்டுள்ளோம்.


பி.வடிவேல் சொல்வதுபோல."தொடர்ச்சியில்லாது ஆங்காங்கே தொட்டம் தொட்டமாகப் பரந்து கிடக்கும் தோட்டங்கள்,தொடர்பில்லாது அறுபட்டுக்கிடக்கும் உறவுகள்.தீர்வேயின்றி நீக்கமற நிறைந்து கிடக்கும் பிரச்சனைகள்,ஓயாத உழைப்பு,இவற்றின் கூட்டுக் கலப்புத்தாம் நாங்கள்."(ஈழப் போரின் பலம் உடைபடுவது இங்ஙனம்தாம்.வடக்கை,கிழக்கைப் பிரித்து,மக்களை அகதியாக்கி,வெளி நாடுகளுக்கு இடம் பெயர வைத்து,மாவட்டங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு,பொருளாதாரத் தடையால் மக்கள் உணர்வுகளைச் சிதறடித்து...யுத்தத்தால் கொன்று குவித்து-வான்வழித் தாக்குதல்களால் தமிழரை அச்சப்படுத்தி,போராட்டத்தையும்,சுய நிர்ணயவுரிமையையும் நீர்த்துப் போக வைத்து...)



கோவிந்தராஜனும் நிசவுலகுக்கு வருகிறார்.


முடிவு?


"கப்பல் எப்பங்க...?(இதைத்தாம் நமது விடுதலைப் போராட்டத்திலும் போராட்டச் சக்திகள்-அரசுகள் செய்து-"சமஷ்டி எப்ப கிடைக்கும்...?")


அப்பவும் எங்களுக்கொரு நப்பாசை.


"சாடின் அடைப்பின் நெரிசலில் விழி பிதுங்கி நின்றாலும்,மிதிபலகையில் கால் வைத்தவரை இறங்கித் திரும்பிப்போ என்று, மறுக்காமல் உள்ளே அடைபட்டிருப்போரை திட்டி,ஏசி இடம் எடுத்து வந்தவரையும் உள்வாங்கி அணைத்துக் கொள்ளும் மினி பஸ்சின் தாராள மனசு,நம்மனைவருக்கும் இருந்துவிட்டால் உலகில் எத்தனையோ பிரச்சனைகளுக்கே இடம் இல்லாமல் போய்விடுமே!"


இதை யாரு சொல்கிறார்கள்?


நம்மைப்போல் போரின் கொடுமையால் அகதியாகி ஒண்ட வந்து,வேண்டா விருந்தாளியாக மேற்குலகில் வதைபடுவதற்காக, இடம் பெயர்ந்த மக்களில்லை!கடந்த நூற்றி ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இலங்கை வந்து,அந்தத் தேசத்தின் முதுகெலம்பான தேயிலை வருமானத்துக்குத் தமது குருதியை கொட்டிப் பசளையிட்ட மனிதர்கள் சொல்கிறார்கள்.காலாகாலமாகத் தமது உழைப்பால் இலங்கைச் செழிப்பாக்கும் மலையகத்தின் மைந்தர்கள் சொல்கிறார்கள்.பாழாய்ப்போன சிங்கள தேசம் எவரைத்தாம் வாழவிட்டது?தன் இனத்தையே கருவறுக்கும் சிங்கள-அந்நிய ஆளும் வர்க்கமா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும்?இத்தகைய உழைத்து ஓடாய்ப்போன மக்களுக்கே தண்ணிகாட்டும் சிங்களச் சியோனிஸ்டுக்களா இலங்கையின் உழைப்பாள வர்க்கத்துக்குக் கருணைகாட்டும்?


அது காட்டவே காட்டாது.


மண்ணாசைக்காரர்கள் விடுவதாகவில்லை.



சட்டம் ஒழுங்கு,கோடு கச்சேரி என்று பயங்காட்டுகிறார்கள்.வடிவேலு நியாயம் கேட்கிறார்.


"தலைக்கொரு கூரை முக்கியமுங்க!"


அதெல்லாம் உங்களுக்கில்லை.சட்டம்,ஒழுங்கின் பதில் இப்படி...


மலையகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னப்பட்டுள்ள இச் சிற்றுலக்கியத் தொகுப்பு இங்கேதாம் சிறந்தும் இருக்கு.இயல்பாய் வாழ்வைக் கண்முன் கொணர்ந்து,தான் வாழும் வாழ்வையும் அதன் அடித்தளத்திலிருக்கும் வேதனைகளையும் இத் தொகுப்புச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.இதில் அல் அசூமத்துகஇகுப் பிறகுதான் மற்றைய படைப்பாளில் சிறந்திருக்கிறார்களென்றில்லை!


ஒவ்வொருவரும் தத்தம் ஆளுமையுடன் இக்கதைகளுக்குள் தம் வாழ்வைத் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்,வாழ்கிறார்கள்.


"இனி எங்கே...?"


சிவலிங்கம் தேடியலைகிறார்.


"எந்தப் பண்ணையர்களுக்கும்,ஜெமிந்தார்களுக்கும் கூலி விவசாயிகளாக பண்ணையடிமைகளாக உழியம் செய்ய முடியாமல் பயந்து ஓடீவந்தார்களோ...அதே பண்ணையடிமைகளாக மீண்டும் தள்ளப்பட்டுவிட்டார்கள்."




ஆண்டாண்டு உழைத்து வளமாக்கிய மண்ணைவிட்டுத் துரத்தியடிக்கும்"மண்ணாசைகாரர்கள்"தம் கொடூரத்தைச் சிறப்பாகச் சொல்லும் சிவலிங்கம்,பென்சர் கிழவர் பெருமாள் ஊடாக, மண்ணின் மைந்தர்களின் உரிமைத் தாகத்தை நாம் அனுபவிக்க வைக்கிறார்.



"காணி நிலம்,வீடு என்று சொந்தமே இல்லாமல் தோட்டமெனும் அறைக்குள்ளே வியாபாரஸ்தானங்களுக்கும்,நிலச் சொந்தக்காரர்களுக்கும் கூலிகளாகவே வாழ்வதற்கு நிற்பந்திக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுபெறும் காலத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்."(இனி எங்கே...?-சிவலிங்கம்)



ஆம்! இன்று உலகத்தின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும்-அவர்கள் உழைக்கும் மக்களாக இருக்கும் பட்சத்தில்-இவர்களின் நிலை இ·தே!மேற்குலகுக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நிலையும்,மலையக மக்களின் வாழ்வு நிலையும் அடிப்படைப் பிரச்சனையில் சம அளவு ஒன்றுபட்டாலும்,மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் புலம் பெயர் தமிழரின் வாழ்கைத் தரத்தோடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் பின்தங்கியது என்பதை நாம் உணர்கிறோம்.


உலகத்தில் எங்குமில்லாத கொடுமை மலையகத்தில் தலைவிரித்தாட,இந்த மண்ணாசைக்காரர்கள் காரணமாக இருக்கிறார்கள்.


"உழைப்பவனுக்கே இந்தவுலகம் சொந்தமெனும்போது,உழைத்துண்ணும் இந்த மக்களின் உண்மை வரலாறு இலங்கையில் பொய்ப்பித்துப் போகுமா?"என்று சிவலிங்கம் கேட்பதன் நியாயம் புரிகிறது!


ஜானகியைத் தேடும் மல்லிகை சி.குமாரை நெருங்குகிறேன்.


மரபுகளுக்கும்,சம்பிரதாயங்களுக்கும் இரையாகிப் போகும் பெண்களின் சுவட்டில் ஜானகியை உருட்டிப் புரட்டாமல்,"தாத்தா நான் கணவனையிழந்ததால வெதவக் கோலத்தில நிக்கேல்ல,நேசித்தவனை அடைய முடியாமப் போயிரிச்சேன்னுதான் நெனைச்சி வெதவையா நிக்கிறேன்..."


ஜானகியை உணர முடிகிறது!


எனினும்,இந்த மரபுகளுக்குள்ளும்,இந்து மதக் கருத்தியல்களுக்குள்ளும் கட்டுண்டு வாழ்ந்தனுபவப்பட்ட என் மிச்சசொச்ச கற்பிதங்களுக்குச் சற்றுக் கூச்சம் ஏற்படுகிறது.



தாலி கட்டியவனைவிடவா? என்று என்"வளர்ப்பு"ச் சமூக ஒழுங்கு கேள்வி கேட்டாலும்-தனிநபர் உரிமை,சுதந்திரம் என்ற மகத்தான மனிதநேயச் சிந்தனை என் சுயத்தை வெருட்டி,கற்பிதக் கருத்தின் உணர்வு நிலையின் உச்சியில் ஓங்கி உதைக்க,ஜானகியை-அவள் உணர்வுகளை என் சுயத்தைக் கடந்து, அவள் நிலைக்குள் என்னை அழைத்துச் செல்கிறது.அவளைப் புரிந்து கொள்ள முனைகிறேன்.அவளாக மாறுவதற்கு முனையும் ஒவ்வொரு தடவையும் துக்கம் தொண்டையை அடைக்கிறது.நானே ஜானகியாகத் தொலைத்த காதலுக்காகக் கண்ணீர் மல்கிக் காலத்தைக் கடைந்தேற்றுவதும் ஒரு கடுமையான தியானம்தாம்!
இந்தக் கண்ணீருக்குள் குவிந்திருக்கும் எதிர்ப்புக் குரல் கலகத்தின் உச்சிக்குச் செல்கிறது.நமது மரபுகளுக்காகவும்,சமூக ஒழுங்குகளுக்காகவும் மனிதவுணர்வுகளைப் பலியிட முடியுமா?



இல்லை!


இன்றைய சின்னதிரை நாடகங்கள் கற்பிதப்படுத்தும் பெண்மைக்கு அப்பால் உலகம் விரிகிறது.ஆனால், சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கான பெண்மையைப்படைக்க முனையும் இன்றைய சூழலில், இந்த ஜானாகி பாரதிகண்ட புதுமைப் பெண்ணைவிட நம் தேசத்து நங்கைகளின் அக்கினிக் கரங்களோடு உறவாடத்தக்க பண்புகளோடு நம்மோடு உறவாடுகிறாள்.இவள்தாம் இந்த நூற்றாண்டின் பெண் மொழியாக நிமிர்ந்து, எம் ஈனத்தனத்துக்கு எதிரான குற்றப்பத்திரிகையோடு நம்மை எதிர் கொள்கிறாள்.இதுவே சமூக மாற்றத்தின் அவசியத்துக்கான எதிர்வைக் கூறுகிறது.



வார்த்தைகளுக்கு-சடங்குகளுக்குச் சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியமானது ஒவ்வொரு பொழுதும் மானுட வளர்ச்சிக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதுதாம்.இங்கே மகத்தான மாற்றங்களைக் கோரி நிற்கும் இந்தப் புரட்சிகரமான மனிதவுணர்வு எந்தப் பொழுதிலும் அடக்கியொடுக்கப்பட்டே வருகிறது.அது பெண்களைப் பூசையறைச் சாமியாக்கி ஆண் மனத் தேவைகளைப் பூர்த்திப்படுத்தும் வெகுளித்தனமான ஆணியச் சமுதாயத்தின் அரிப்புக்கு உடந்தையாகவே பண்டு தொட்டுத் தொடர்கிறது.இதை நாம் பெண்களின் மீது சுமத்தப்பட்ட"அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு"என்று ரீல்விட்டுக் காரியவாதிகளாகப் பெண்மையைச் சுரண்டிக்கொண்டிருக்கிறோம்.



இதை மிக நேர்த்தியாகப் படம் பிடித்தமாதிரி மல்லிகை சி.குமார் அழகான காதல் ஓவியத்தை நம் முன் வரைந்து காட்டுகிறர்ர்.



இங்கே சக்திவேல் நம்முன் மிக உயர்ந்து நிற்கிறார்!தான் நேசித்தவளுக்கே-அவள் விதவையாக இருந்தும்-தாலிக்கொடி,பொட்டிடும் அவர்,சிறப்பாய் உருப்பெறும் சமூகமாற்றத்திற்கான வெகுஜனக் கருத்தியல்-பண்பாட்டு முகிழ்ப்பின் அரும்பில் ஒருவர்."தாலியும்,பொட்டும்" விதவைக்குக் கிடையாதென்றுரைக்கும் இந்த ஆணாதிகச் சமூக அமைப்பில் இவை பெண்ணையொடுக்கும் வடிவங்களாகவே இருக்கிறது.மனதைச் சித்திரைவதை செய்யும் பண்பாட்டு ஒடுக்குமுறையானது பாரிய உளவியல் யுத்தமாகத் தொடர்கிறது.எனினும், இத்தகைய ஒடுக்குமுறை ஆயுதத்தையே கையில் எடுத்து, விதவைக் கோலத்துக்கு விடைகொடுப்பதற்காக அதையே ஒரு குறியீடாக்கி அதை அணிவிக்கிறார்.எனினும் பழையபடி அந்த ஆயுதம் அவளைக் கட்டிப்போடும் கண்ணியாக மாறும் அபாயத்தையும் மல்லிகை சி.குமார் புரிந்திருப்பாரென்றே நம்புவோம்.


சந்தனம் கண்களைக் குளமாக்கி விடுகிறாள்.-அவள் சாகமாட்டாள்!


உழைப்பால் உயர்வுறாத அவள்,இறுதிவரையும் சுகமாய்,நிம்மதியாய்த் தூங்க முடியவில்லை.அவள் நோய்,இந்தச் சமூகத்தின் நோய்!


மனிதவுரிமைகள் எதுவுமேயில்லாது உழைப்பவர்களைக் கிள்ளுக்கீரையாய் வைத்திருக்கும் இலங்கை அரசின் நோய்-அதிகார வர்க்கத்தின் உள நோய் இது.


இது இலகுவில் தீராத நோய்!


இந்த நோய் சந்தனத்தை மட்டுமல்ல இச் சமூகத்தையே பிடித்தாட்டுகிறது.


இங்கு சதாசிவம் சந்தனத்தை மனசாட்சியுடையோரின் முன் நிறுத்தியுள்ளார்.


இங்கேதாம் அசூமத்தின் அம்மா,என் அம்மா,உங்கள் அம்மாக்கள் எல்லோரும் மரணப்படுக்கையில்...


"பொறுத்தது போதும்...!"


இனியுமா? முடியாது!


அம்மாவாய்,நோயாளியாய்,வேலைக்காரியாய்,விதவையாய்,காமுகர்களால் குதறப்படும் பதுமையாய் எங்கள் அம்மாக்கள்...


இனியும் பொறுக்க முடியாது!


இராஜதுரை கோபக்கத்தியுடன் புறப்படுகிறார்.அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.


"இது வெறும் முணுமுணுப்பா?இல்லவேயில்லை!ஒரு சமூகம் முழுவதும் தனக்குள் எரிமலைபோல் அடக்கி வைத்துள்ள அவல வாழ்வின் ஒரு சிறு துளியே!இது பீறிட்டு வெளிக் கிளம்பாதவரை பாதுகாப்புத்தாம்!"(பொறுத்து போதும்...!-பெ.இராஜதுரை)


எச்சரிக்கை!


இது எல்லோரதும் எச்சரிக்கை.


இனியும் ஒரு சமூகம் தன் அறியாமைக்கும்-அடங்கிப் போகும் மனோபாவத்திற்கும் பலியாகுமென்று காரியமாற்றுபவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்.நிதானியுங்கள்!!-ஒரு ஈழமல்ல,மலையகமும் அதன் தொடர்ச்சியேதாம்.தமிழ் பேசுவோர் இனியும் பொறுக்கத் தயாரில்லை.குட்டக்குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது.இது இன்னொரு தொடக்கத்தின் முன்னுரை.



மூட நம்பிக்கைக்கும், அறியாமை இருளுக்கும் ஒரு இராமாயி இல்லை,பல இராமாயிக்கள் பலியாகிவிட்டார்கள்தாம்.



இனியும் அது நடக்கப்படாது.



"விடியல் எப்போது?"



ஈழம் பதில் கூறுவதுபோல் மலையகமும் கூறியே தீரும்!அப்போது கேள்விகள் நீறாய் நீர்த்துப்போகும்.



அதுவரையும்,சமூகத்தின் மொத்த இருள்சூழ்ந்த நிலைமைகளுக்காக சுகந்தி,பரமேஸ்வரன்,மெய்யன் நடராஜன்,பாலச்சந்திரன்,நளாயினி சுப்பையா,பா.ரஞ்சினி,த.மயில் வாகனம்,செல்வி.இ.இம்மானுவேல் போன்ற சகல எழுத்தாளர்களும் சிலுவை சுமக்கட்டும்.சுமக்கிறார்கள்.இவர்களில் நளாயினி சுப்பையா,செல்வி.இ.இம்மானுவேல்,த.மயில்வாகனம்,மெய்யன் நடராஜன் போன்றோர்கள் ரொம்ப நிதானமாகவே சிலுவை சுமக்கிறார்கள்!



இவர்களின் நிதானம் போன்றே மற்றவர்களும் தம்மைத் தோற்றுவிக்க வேண்டும்.-இது காலப்போக்கில் நிகழவே செய்யும்!



ஏனெனில், இவர்கள் கதைகளுள் ஜீவனாய் வாழ்கிறார்கள்.தங்கள் வாழ்வை அதற்குள் தொலைக்கிறார்கள்,தேடுகிறார்கள்.இப்படித் தம் வாழ்வை கதைகளுக்குள் காணும் இவர்கள்,மிக நிதானமாகத் தோற்றம் பெறுவார்கள்.



இவர்களோடு நாமும் சிலுவை சுமக்க முனைகிறோம்?


ஈழத்திற்காக,
மலையகத்திற்காக!


புலம் பெயர் வாழ்வும் இதையே எமக்கு உணர்த்தியுள்ளது.



"மலையகப் பரிசுக் கதைகள்"தொகுப்பு இறுதியாகச் சிலவற்றைச் சொல்ல வைக்கிறது:



"இது-இருள் சூழ்ந்த மலையக மக்களின் வாழ்வின் அவலங்களை ஆயிரம் வோல்டேஜ் மின்னொளியில் வெளிச்சமிட்டுக் காட்டாது போனாலும்,ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னையுருக்கி வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டேயிருக்கும்".



இந்த என் நம்பிக்கை வீண்போகாது.


ப.வி.ஸ்ரீரங்கன்.

Freitag, März 14, 2008

கருணையுள்ளோரே கேட்டீரா?...

அஸ்வகோஸ்:'மகனும் ,ஈ கலைத்தலும்'

>>>அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?
'
<<<
(சிறு குறிப்பு)


'...என்னை ஒறுத்து ஒறுத்து
அழித்துக் கொள்கையில்
என் மகன் போயிருந்தான்
தன்னை அர்த்தப் படுத்தவென்று

என் கனவுகள் வீழவும்
மண்ணின் குரலிற்கு
செவியீந்து போயிருந்தான்...'

ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன்,
நான் துயருற வேண்டி.

சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்!
படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி.

'இறுதியாக
என்னிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது
இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை
ஈக்களை அண்ட
நான் விடவில்லை'

சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள்.

என்னயிது?
சவப்பெட்டி நட்டநடுவே.
ஒன்றல்ல, பல.
ஆங்காங்கு ஈக்கள் பறந்து,மொய்த்தபடி.
என் கைகள் நாலாபக்கமும் வீசியடித்தபடி,வேகமாயின.

முடியவில்லை.

அவைகளின் வேகத்தில் நான் சோம்பலுற்றேன்.
யாருமேயில்லை!
எங்கு போய்விட்டார்கள் இந்த ஊர்ச் சனங்கள்?
இது வீதியாகவும் இருக்கு,வீட்டு முற்றமாகவும் இருக்கு.
சவப் பெட்டிகள் எங்கும் பரவிக்கிடக்கிறது.சில அழுகுரல்கள் எழுப்புகின்றன!,ஈக்களின் மொய்ப்பில் அவை ஊளையிடுகின்றன.

நான் தனியாகவேயுள்ளேன்.

கனவுதாம்.

ஒரு கவிதைத் தொகுப்புக்கூடாகக் கனவுதாம்.

நிஜம் கனவாகிறதா?
ஏன்?
நான் வெகு தூரத்தில்.
மிகப்பெரிய இடைவெளி உறவுகளுக்கும்,இன்றைய என் வாழ்வுக்கும்.

'வதை தாங்காது அழுது சென்றவர்களும்
வார்த்தையின்றி மௌனித்தவர்களும்
நடந்த தெரு,முற்றமிது
வெறிச்சோடித் துயருடன்

எத்தனையோ இரவுகளில்
புலர்ந்து கிடந்த மண்ணினது மைந்தர்கள்
சாய்ந்து போன உடல்களாய்
சவப் பெட்டிகளுள் ஈயுடன் போராடி...' வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை.

தெருவோரச் சொறிநாய் மாதிரி ஊளையிட்டுக்கொள்ளும் இலக்கியச் சூழலில் இப்படிச் சிலர்,அஸ்வகோஸ் போல்...
இரத்தமும் சதையுமான வாழ்வோடு வருவதுதாம் கவிதைகள்.ஒரு பாரதிபோல,சு.வில்வரெத்தினம் போல.

'இத்தனை காலமும்
ஏங்கித் தவித்ததின் அர்த்தமென்ன?
நீங்கள் கூறுங்கள்
தாய்மையின் கதறல்
கேலிக்குரியதா?'

இல்லை!

உனக்கும் தெரியும்,எனக்கும் தெரியும் இரஞ்சகுமாரின் சீலனுக்கும்,குலத்துக்கும் என்ன நடந்ததென்று.கோசலையின் நிலை,ரொம்ப ரொம்ப எங்கள் அம்மாக்கள் அநுபவப்பட்டதுதாமே?

எங்கள் உடன் பிறப்புகள் சீலனுக்கும்,குலத்துக்கும் நடந்ததையிட்டு கோசலைகளாக மாறிய அம்மாக்களின் கதறல்கள் கேலிக்குரியதாக மாறிவிட்டால்:

'பாழாய்ப்போன தேசமே நீ மீண்டும் பாழ்!
மனித வதை,மனித வதை,
இலங்கையில் மட்டுமல்ல
இந்தப் பூமிப்பந்தில் எங்கும்!' ஒவ்வொரு வகையில் தொடர்கிறது.எல்லாம் 'ஒவ்வொரு'நலத்திற்காக.யார்,யாரோ சாகிறார்கள்,யார் யாரோ அரியாசனம் அமர்கிறார்கள்!

எங்கள் நிலை?

'விலங்குகளுக்கெல்லாம் விலங்குகள் செய்த விடுதலை' குறித்துப் பேசியவர்கள்கூட தம்மைத் தாமே அழிக்கமுனைந்த இருள் சூழ்ந்த இழி நிலை,இன்றைய நம் நாட்டில்.இது குறித்து:

'எம் சோகம் சிறையிருந்த
காலம் போதும்
செவிடராய் மௌனித்துப் போன
மக்களின் செவிகளில்
அலைகளை மீட்ட வா!' என்று,அஸ்வகோஸ் அழைப்பு விடுப்பது மிகவும் சரியானதுதாம்.இல்லை?

'நிறையவே சிந்திக்க வேண்டும்!'

மனிதவிடுதலை குறித்து,தேசவிடுதலை குறித்து,தோழமை குறித்து...
உண்மைதாம்!
கடந்தகால அல்லோலகல்லோலப்பட்ட இயக்கவாத மாயையில் நாம் ரொம்பத்தாம் முடமாகிப் போய்விட்டோம்.

அஸ்வகோஸ் புது இரத்தம் பாய்ச்சுகிறார்.
கவிதை ஒருவாழ்வு.
'வாழ்வு கவிதையாக வேண்டும்.கவிதை வாழ்வாக வேண்டும்'என்று சேரன் அடிகடி கூறிக் கொள்வார்.

இங்கு அஸ்வகோஸ் கவிதையில் வாழ்ந்து பார்க்கிறார்.

சமூகசிவியம் சீர்குலைந்து,சின்னாபின்னமாகி மனித இருத்தலே கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் குரலாய் ஒலிக்கும்'வனத்தின் அழைப்பு' ஒரு காலக்கட்டத்தின்(சமகால) தேச தரிசனத்தைத் தரவில்லை?

தருகிறது!,புயலாக.

'போரின் கனத்த குரல்
இப்போது கேட்கவில்லை
அனேகமாக எல்லோரும் போய்விட்டார்கள்
எங்கு என்ற கேள்வி வேண்டாம்
போரின் கனத்த குரல்
ஒலிக்கும்போது
கேள்விகளைக் குறைத்துக் கொள்வோம்'

தன் சிரசை உயர்த்தி அறுதியிட்டுக் கூறி முடிக்கும் வரிகளால்,தான் மண்ணைளைந்து விளையாடிய மண்ணின் வாழ்நிலை குறித்து ஓங்கியோங்கி ஒலிக்கிறான்,இங்கு இந்தக் கவிஞன்.

எதற்கெடுத்தாலும் கொலை.'டுமீல்',டுமீல்!குருதி வெள்ளத்தில் மானுடம் புதைந்தபடி!!,இது கால் நூற்றாண்டாய் இலங்கையின் அன்றாட நிகழ்வாச்சு.
மனிதர்களின் எந்த விருப்புகளுக்கும் மதிப்பில்லை.மனிதர்களின் விருப்புகளுக்கெல்லாம் சிகரம் வைத்த விருப்பு, உயிர்வாழும் 'விருப்பு' ஆகும்.இன்று, இலங்கையில் உயிர்வாழ்தலுக்குரிய மதிப்புபெறுமானம் சொறிநாயின்-விசர்நாயின் இருத்தலைப் போலுள்ளது.

'கருணையுள்ளோரே கேட்டீரா
காகங்கள் கரைகின்றன
சேவல்கள் கூவுகின்றன
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன'

இந்தக் கவிதை வரிகளை எதுக்குள் அடக்கமுடியும்?
மரபுக்குள்ளா,நவீனத்துக்குள்ளா?இதுவா இப்போதுள்ள பிரச்சனை?இல்லை!

இஃது ஒரு'காலத்தின்'பதிவு.இலங்கை அரசியலில் நிகழ்ந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுப்போக்கு.இதைக் கவிஞன் பதிவு செய்வது மட்டுமல்ல,கலகக்காரனாகவும் அவன் தன் இறக்கைகளை விரிக்கிறான்.பேனா முனையின் கூரை இன்னுமின்னும் கூராக்கிக் கொள்கிறான்.
அஸ்வகோஸ்க்கும் அவர் படைப்புகளுக்கும் மரபு ரீதியான எந்தப் புரிதலும் சரிவராது. அவர் கவிதைகள் இலக்கணத் தளைகளை மீறி வாழ்வாய் மலரும் அதேவேளை,தம்மளவில் கவிதைக்கான இயல்பைக் கொண்டேயிருக்கின்றன-இயங்குகின்றன.

ஈழத்தின் கவிஞர்களில் பலர் 'வெறும்'கவிஞர்கள் இல்லை.அதாவது பண்டைய மன்னன் புகழ் பரப்பும்,இன்றைய சினிமாவுக்கு கூலிக்குழைக்கும் 'கூழை'க் கவிஞர்கள் போலில்லை.மாறாக இவர்கள் சமுதாயத்துள் ஐக்கியமாகி,அதனுடன் கரைந்தவர்கள்.இவர்களே போராளிகளாக தோளில் சுடுகலங்களுடன் காடும்,மேடும் அலைந்து மக்களுக்காக தம் ஆயுளைச் செலுத்தியவர்கள்.முற்றுகைக்குள்ளான தேசத்தின் இதயத்திலிருந்து பீறிட்டெழும் விடுதலைத் தீயிலிருந்து சுடரெழுப்பும் இக் கவிஞர்கள்,தீக் குஞ்சுகள்!,அக்கினிக் குழந்தைகள்.

இந்தக் கவிஞர்களின் கவிதைகளில் காணும் அநுபவங்கள் இவர்களின் அசல் நாணயமான அநுபவம்.இவர்களின் வேர்கள் சமூகத்தின் அதியுண்மையான சமூக முரண்களிலிருந்து பத்திப் படர்கிறது.இங்கு ஒரு அஸ்வகோஸ் தோன்றவில்லை.பலருள்ளார்கள்,அவர்களுள் அஸ்வகோஸ் மிகவும் சிறப்பான முறையில் உருவாகி வருகிறார்.இவரின் ஒப்புமைகள்,புதிய குறியீடுகளை உருவாக்கிவிடுகிறது.புராண,இதிகாச அநுபவம் அவரது நீண்ட கவிதைகளில் மிகவும் உன்னதமான வடிவில் புதிய குறியீடுகளாக உயிர்க்கின்றன!இவரது மொழியாற்றல் மிக அபாரம்.தமிழைப் புதுப்பொலிவோடு கையாளுகிறார்.

போராட்டம் இவரைத் தத்துவத்தில்,வரலாற்றில்,சமுதாய அநுபவத்தில் பட்டறவுள்ளவராக்கி விட்டுள்ளது.இவரின் சிந்தனை இவருள் முகிழ்த்த அதியுன்னதச் சிந்தனை.இஃது பிறரிடமிருந்து பெற்றதல்ல.இதனால் இவர் உயிர்த்து நிற்கிறார்.எந்தவித இலக்கணக் கட்டுக்களையும் காவாது பேச்சோசையோடு அநுபவத்தைப் பகிர்வதும்,வாழ்வை அதன் இயல்போடு சித்தரிப்பதும்,வரலாற்றைப் பதிவு செய்வதும்தாம் இம்மாதிரியான கவிதைகளுக்கு இலக்கணம்.

அஸ்வகோஸின் கவிதைகளுக்கும்,ஏன் ஈழத்தின் கவிதைகளுக்கு இதற்கு மீறிய எந்தத் தளைகளையும் நாம் ஏற்றிச் சுமைகாவிக் கொள்ள அனுமதிக்க முடியாது.ஏனெனில் இவை நம் உண்மையான-அசலான வாழ்வு.

குரூரமான நமது மெய்வாழ்வுக்கு எந்தவிதப் பூச்சும் வேண்டியதில்லை.நம் வாழ்வும்,கலையும் நமக்குள் முரண்படவில்லை.அது இரண்டும் ஒன்றாய்ப்போய் நமக்குள் சுடர்விடும் உயிராய் மாறுவதில் வெற்றி பெற்றுவிடுகிறது.'வனத்தின் அழைப்பு' அதற்குச் சிறு உதாரணம்.

இக் கவிதைகள் தம்மளவில் தமக்கானவொரு 'அழகியல் தொடர்ச்சியை'உள்வாங்கியே வெளிப்படுகிறது.இஃது பாரதியிலிருந்து தொடர்கிறது.மனித விடுதலையும்,தேசவிடுதலையும் இந்த அழகியலை இயக்குகின்றன.இக்கவிதைகளின் 'அகவடிவம்'சிறப்புப் பெற்று உள்ளடக்கத்தையும்,உருவகத்தையும் பிரிக்கமுடியாது-இரண்டும் பிணைந்து நிற்கும் ஒரு புதுவகை அழகியலைத் ஈழத்துக் கவிதைகளுக்கு இயல்பாக வற்புறுத்தி வெற்றி கொண்டுவிட்டது.அஸ்வகோஸின் பல கவிதைகளுள் இந்தப் பண்பைக் காணலாம்,உணரலாம்.

இஃதுதாம் இவரது சிறப்பு.இந்தச் சிறப்பு ஆளுமையான படைப்பாளிகளால்தாம் பேணப்படுகிறது,உருவாக்கம் கொள்கிறது.அஸ்வகோஸ் இதற்கு நல்ல உதாரணமாகிறார்.

குதறப்படும் மனித இருப்பின் மெய்யான சூழ்நிலையை ,அதன் உண்மைத் தனத்துடன் படைக்கப்படும்போது அவை சிலவேளைகளில் சகல கவிதை மரபுகளையும் மீறிவிடும்.இத்தகைய மீறலின்றி கவிதை பாரிய எதிர்வினையை வாசககர்களிடம் உண்டுபண்ணமுடியாது.கம்பன் அல்லது வள்ளுவன் பாணியில் இன்றைய நம் அவலத்தைப் பாடினால்-எழுதினால் இஃது மிக மிக அற்ப எதிர்வினையையும் செய்யாத அபாயம் உண்டு.
இத் தேவையால்தாம் மீறல்கள் இயல்பாகிறது.அத்தோடு இந்த மீறல்களால்தாம் கவிதைக்குரிய புதிய வடிவம் தோன்றிக் கொண்டேயிருக்கு.

நவீனக் கவிதைகள் வெறும் வார்த்தை விளையாட்டாகிப் போன இன்றைய புலம்பெயர்வுச் சூழலில,; இத்தகைய'உயர் திறன் கவிதைகள்'கவிதை ஜீவனைக் காவிக் கொண்டே சமூக விமர்சனம் செய்வதால,; இஃது உயரிய இலக்கியமாகவும் விரிகிறது.

அஸ்வகோஸின் மொழியைப் புரிந்து கொள்ளும்போது இவ்வுண்மைகள் புரிந்துவிடும்.

ஒருசில கவிதைகள்(செவல்,நீ போனாய்,ஏவாள்,என் வசந்தம் வராமலே போய்விட்டது) அகம் சார்ந்து வெறும் விபரிப்பு என்ற பச்சோதாபச் சுற்றுக்குள் முடங்கிவிடினும், அஸ்வகோஸ் ரொம்பவும் நிதானமாகவேயுள்ளார், புறநிலை சார்ந்த கவனிப்புகளில்! அவர் வெறும் ஒப்புமைக்குள்ளோ ஓசை நயங்களுக்குள்ளோ மயங்கவில்லை.'மெய்வாழ்வு' இதற்காகவே எழுத்தை நடைபயில விடுகிறார்.இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வெறும் வார்த்தைக் கட்டுக்குள் முடக்கி விளக்கிட வேண்டிய தேவைகள் இல்லை.கவிதைகள் நாம் அன்றாடம் அநுபவிக்கும் வாழ்சூழலை நம் விழிகள்முன் விரித்தக்காட்டி விடுகின்றென.

இவைகளின் எதிர்வினை நம் எல்லோருக்கும் பொதுவான அநுபவமாகிறது.அதாவது சமுதாய அநுபவம்,ஆவேசம்!

ஏன்?

நாம்'மனிதமறுப்புச் செய்யும் நாட்டின்'குடிகள்.போராட்டமே வாழ்வாய்ப்போன தேசத்தின் குரல்கள் எம் அகத்துள் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கு,போருழைச்சல் நம் அகத்தை வாட்டி அழுகுரலாக ஒலிக்கிறது.

'மனித அவலங்கள் நினைவில் எழ
மடுமாத கோயிலில்
ஒதுங்கிய மனிதர்களின்
ஜீவத் துடிப்பாய் எழுந்த
கீதங்களில் எனையிழந்தேன்...'

இக்குரல்கள்தாம் எமக்குள் இக்கவிதைகளை வாழ்வாய்,அநுபவமாய் உணரவைக்கிறது.யாவருக்கும் பொதுவான வன்மத்தை தீயாய்-ஜுவாலையாய் ஆத்மாவுக்குள் நிறைத்து வைக்கிறது.

உலகத்தில் சில கவிதைகளுக்கு ரொம்ப ரொம்ப உயர் ஸ்த்தானமுண்டு.பாலஸ்த்தீனக் கவிதைகள்,இலத்தீன் அமெரிக்க-ஆபிரிக்கக் கவிதைகளுக்கு,இரஷ்சிய-மாவோ சேதுங் கவிதைகளுக்கு இந்த ஸ்த்தானம் என்றுமுண்டு.இன்றோ 'ஈழத்துக் கவிதைகள்' என்றிந்த'உயர் திறன்'மிக்க கவிதைகள் அந்த ஸ்த்தானத்தை நொருக்கிவிடும்.

ஈழத்தின் நவீனக் கவிஞர்களான மகாகவி,நீலாவாணன்,நுஃமான்,சிவசேகரம்,மு.பொ.,சு.வில்வரெட்னம் நீட்சியாக ஜெயபாலன்,சேரன்,செல்வி,சிவரமணி தாண்டி அஸ்வகோஸ் உயர்கிறார்.இவரது நீண்ட கவிதைகள் இதை நிச்சியம் ஊர்ஜிதப்படுத்தும்.

மில்டனின் 'இழந்த சொர்க்கத்தின்'மகுடத்தை வனத்தின் அழைப்புத் தொகுப்பிலுள்ள 'இருள்'கவிதை உடைத்து நொருக்கி விடுகிறது.இத்தகைய தகர்வை நாளைய வரலாறு சொல்லும்.நம் சிறுசுகள் அதைச் செய்து காட்டுவார்கள் சர்வகலாசாலைக்குள்ளிருந்து?...

சு.வில்வரெத்தினம்,சோலைக்கிளி போன்றோருக்கு மிக மிக நேர்த்தியாக அநுபவமாகிய 'கவிதைஜீவன்' இந்தக் அஸ்வகோசுக்கு ஒரு சில கவிதைகளுள் எப்படி முகிழ்க்கிறது?

பிடுங்கியெறியப்பட்ட தேசத்தின் புதல்வனின் கவிப்பாங்கு அபாரம்தாம்.மரபுக்குள் மடிந்துபோன 'மக்களின் ஆன்வுணர்வு'இவ்வகைக் கவிஞர்களால் உன்னதமான வகையில் சமுதாய ஆவேசமாக வெளிவருகிறது.உருதுக் கவிஞன் இக்பால் போலவே இங்கும் கவிஞர்கள் பீறிட்டெழுகிறார்கள்.

அஸ்கோஸின் கவிதைகளை வாசிக்கும்போது,கவிதைகளுக்குள் நீரோட்டமாக சதா ஊறிக்கொண்டிருக்கும் சமகால வாழ்வியல் இயக்கப்பாடு நம்மையொரு இக்கட்டான சூழலுக்குள் நகர்த்திச் செல்கிறது.

இது ஒரு அவஸ்த்தை!

கவிதையூடே அநுபவமாகும் வாழ்வு,நம்முடைய மெய்யான வாழ்வு-குருதி சொட்டும் போராட்ட வாழ் சூழலிது.இந்தச் சூழலுக்குள் நகரும் ஈழத்து வாசகர்களுக்கு கவிதையின் பாரம்பரியப் படிமம்,குறியீடு,உத்தி,உள்ளடக்கம்,இறைச்சி இவைகள் பற்றிப் பேசமுடியாது போகிறது.

இஃதொரு நெருக்கடி.

இந்தக் கவிதைப் போக்கைச் சமுதாயச் சூழலே தீர்மானிக்கின்ற யதார்த்தப் போக்கால் இக் கவிதைகளுக்கு எந்தப் பூட்டுக்களையும் போடமுடியாது போகிறது.இந்திய சுதந்திரத்தைப் பாடிய பாரதியின் விடுதலைக் கவிதைகளுக்குக்கூட நாம் விமர்சன ரீதியாக சில இலக்கண மீறல்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.ஆனால் இன்றைய ஈழத்தின் கவிதைகளுக்கு இதைச் செய்யக்கூடிய சூழ்நிலைகளை இக் கவிதைகள் விட்டுவைப்பதில்லை.

'என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமைகளைச் சொல்வேன்
சிதழுறும் காயங்கள் பேசும்
மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்.'

கவிஞரே 'காலச் சூழலைப் பிரதிபலிக்கின்ற மெய்மையை'தன் படைப்பூடே சொல்லி விடுகிறார்.
உண்மைதாம்! மண்ணின் குறிப்பை-மானுடவாழ்வை,தரிசனத்தை,வரலாற்று ஊற்றைத் தன்னகத்தே புதைத்துக் கவிதை வாழ்வாகிவிடுகிறது.

'போரதிர்வுகளில் உயிரிழந்து
சிதைவுகளை நெஞ்சில் சுமந்து
வலிகளைத் தாங்க ஏலாது
முறிந்த வாழ்வுடன்
இடம் பெயர்ந்துழலும் அவலம்...'

இது ஒரு சத்தியப் பதிவு.

வாழ்வின்மீது கவிந்த கயமைப் போக்கால் முறிந்து விடுகிறது வாழ்வு.இனி ஒவ்வொரு திக்குத்திக்காய் வாழ்வின் பாதுகாப்புக்காக-உயிர் வாழ்தலை அச்சமின்றிப் போக்க இடம்பெயர்ந்துழலும் அவலமாக வாழ்வு விரிகிறது.வாழ்வை அவலம் காவுகொள்கிறது.

கவிஞன் ஆவேசமடைகிறான்,கோபக் கனலோடு உரக்கக் குரலெடுத்து, அவலத்தைச் செய்யும் அரசியல் போக்கை-அதை நகர்த்திச் செல்லும் வர்க்க மனிதர்களின் முகத்தில் தன் வார்த்தைகளால் ஓங்கியடிக்கிறான் இந்த அஸ்வகோஸ்.

'வாவிகளில் பிணமாய்க் கரைந்து
போகையில்
திறந்த வெளியரங்குகளில்
மலரேந்தித் துதித்தவர்
புதை குழிகளில் ஓய்ந்திருந்ததை
துயில் எழுப்பி
ஊர்த்திகளில்
வேட்டைக்கு அனுப்பியவர்
நீவீர்...'

மனித வரலாறு பூராகவும் கவிஞர்களில் பலர் சமுதாய நீதிமான்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் சமூகச் சீரழிவுகளைச் செய்யும் நிறுவனங்களை நியாயக் கூண்டில் ஏற்றி,தங்கள் சத்திய வாக்கால் சவுக்கடி கொடுத்துள்ளார்கள்.
சிலம்பு சொல்லும் கதை தெரியும் தானே?
மதுரையையே எரித்தான் இளங்கோ முனிவன்.

இங்கே,அஸ்வகோஸ் தன் கைகளை நீட்டி கயவர்களைச் சுட்டி, மக்கள் முன் இழுத்து வருகிறான் தண்டனைக்காக.ஏனெனில், மக்கள்தாம் வரலாற்றைப் படைப்பவர்கள்.சமூக விரோதிகளை மக்கள் முன் நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

'குரூரத்தை மறக்க இயலவில்லை
போய்ப் பார்
போர் இளமையை
உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது.'

மானுட விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கத் தக்கக்கூடிய நிலைகளாக மாறும்போது, சமூக அக்கறை என்பது ஒவ்வொரு 'உணர்வுள்ள' மானுட ஜீவனுக்குள்ளும் பிரதிபலிக்கும்.ஆனால் விடுதலைவேண்டி அதற்காகப் பாடுபட்ட சமூகத்திலுள்ள ஒவ்வொரு விடுதலைப்பங்காளருக்கும் நேரடியாக அநுபவமாவது எவ்வளவோ! அவை ஒரு வரலாற்றின் பதிவுகளாக மாறுவதற்கு முன், மானுட ஆத்மாவுக்குள் கேள்வியாக விரிந்து,தன்னையே கேள்விக்குட்படுத்தி'சுயவிமர்சனம்' செய்வது இயல்பாகி விடும்.

'எதுவரை உண்மையினை அவர்கள்
கொண்டு சென்றார்கள்
அதுவரை நான் வந்தேன்
எங்கு வைத்துக் கொலை செய்தார்கள்
நான் அங்கிருந்தேன்
என்னால் முடியாத பேரழிவினை
ஊழியில் இயற்ற
என்னையங்கு தயார்ப்படுத்தினார்கள்'

இங்கு மனித இருத்தல் மீளவும் மறு ஆய்வுக்குள்ளாகும்.அஃது புதிய வீச்சோடு மெருகேற்றப்பட்டு,நியாயமான உரிமையாக கிளைபரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு தனி நபர்களுக்குள்ளும்.

'கணக்குகள்
மீளவும் தீர்க்கப்படுகையில்
நான் அஞ்சுகிறேன்...!!'

என்று ஒவ்வொருவரையும் நோக வைக்கும்.

'பொது மானுட விழுமிய நோக்கை'அஃது இயல்பாக ஏற்படுத்தி விடும்.அப்போது தன்னினம்,தன் மொழி,தன் சுயம்மென்பது சுருங்குp சர்வதேசிகளாக மனிதப் பொதுமைக்காக:

'நியாயம் கூற இயலாக் கண்ணீருடன்
விரட்டப்பட்ட மக்களிடையே
விடுபட்டு உதிரிகளாய்
ஒன்றிப் போன ரசூலின் கதை...' சொல்ல எத்தனிப்புகள் தோன்றும்!,தோன்றிவிடுகிறது. இதுதாம் நாம் யாழிலிருந்து விரட்டிய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு ஆற்றும்,ஒத்தும் ஒளடதம்!

இஃதுதாம் மனிதப் பண்பு.அஸ்வகோஸிடம் இந்தப் பண்பு மிகுதியாகப் படர்வதை அவர் படைப்புகளில் நாம் அறியலாம்,உணரலாம்.

'முடிவற்ற மரணம் அவனை உறைக்கவில்லை
அதிலவனுக்குத் திருப்தியில்லை
அழுவானென்றும் நம்பமுடியவில்லை...' என்றும்,

'அவன் அறிவான்
கண்முன் நடந்ததைவிட
காணாமற்போனது
எதை விட்டுச் செல்லுமென்பதை...'

இந்த வரிகளோடு மிகப் பெரிய வெற்றிடமாக ஈழமண் மாறிவிடுகிறது,நம் கண் முன்!யாருமே இருப்பதாக உணர்வு ஏற்குதில்லை.எல்லோருமே அழிந்துபோய் வெறும் சுடுகாடாய் கண்முன் 'தமிழீழம்' விரியும்போது கவிஞன் ஆவேசம்கொண்டு:

'மரணத்திற்குக் காத்திருக்கும்
எந்தன் சொற்கள் உண்மையே
வனத்தின் அழைப்பைத் தாண்டி
எந்தன் மரணம் எட்டுமா
கொலைச் சூத்திரங்களை மட்டும்
உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல்
விண்டுரைக்க முடியா
மரணத்தின் வலியை
இனியும் தீர்மானிக்க வேண்டாம்...' என்று ஓங்கி உரைக்கிறான்.

இப்போது இன்னுமதிகமாக சுதந்திர தாகமும்,மானுட விழுமியமும் வேர் பரப்பி விழுதெறிகிறது.

இங்கே அஸ்வகோஸ் எனும் மகாப் பெரிய மானுட நேயன் உண்மையான வாழ்வின் அர்த்தத்தை இலக்காகக் கொண்டு,நம் முன் உயர்ந்து நிற்கிறான்!

இவன்தாம் ஒரு கட்டத்தில் தன் மைந்தனையே விடுதலைக்காக பலியாகக் கொடுத்துவிட்டு,மகனின் உயிரற்ற உடலுக்குப் பாதுகாப்பு அளிப்பான்,ஈக்கள் மொய்க்காது-காகம்,கழுகுகள் கொத்தாதிருக்கும்படி கவனிப்பான்!

அப்போது அவன் உள்ளத்தில் கேள்விகள் முளைவிட்டு வேர்பரப்பும்:

'அள்ளப்படுவதற்கு முன்
எளிமையான ஒரு பாதை
பிரியமான வழித் துணை
முடியுமா
எங்கிருந்து தொடங்குவது நண்ப?'

இஃதுதாம், இன்றுவரை நம் எல்லோர் முன்னும் உள்ள கேள்வியும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால் ஜேர்மனி.