உனக்கு நில்லாது!
இன்னும் என்ன?
திரும்பத் திரும்ப
பழைய இடத்திலிருந்தே
பகிடிக்குச் சமாதானம் பேசுகிறோம்
பக்கங்கள் நிறையப் பற்றுவாடா
சொல்வதற்கென்று சில பேராசிரியர்கள்
பார்வைக் கோளாறு
ஆயுதங்களைக் கடவுளாக்கும்.
என்னமாதிரிக் கதைத்தாலும்
நாங்கள் நம்புவது இந்தியாவைத்தானென்று
இதயம் பீறிக் காட்டும்
இன்னுஞ் சில செஞ்சோற்றுக் கடன்கள்!
எதிலுமே உப்பில்லையென்றபடி
பாணுக்கும், சீனிக்கும் மக்கள்
முண்டியடித்துக் "கியுவரிசைக் கட்டி"
எழுபதுகளை நினைத்தபடி...
நாளுக்கு ஆறு வானொலியும்
அதைச் சுமக்கும் அரசும்,
அளந்துவிடும் மகிந்தாவின் மகத்துவங்களை
அதையும் எதிர்த்துக்கொண்டு
தலைவர் பாட்டோடு
இன்னும் வரும் சில வானொலியும், தொலைக்காட்சியும்!
எங்களுக்கென்னவோ உணவுக்கு
உப்பில்லாததுபோலவே
ஈழப்போரும் சப்படிக்கிறது!!!
இறப்பவர்கள் பேராசிரியர்களில்லை
தானைத் தலைவர்களுமில்லை
அல்லது ஜனநாயகக் கொழுந்துகளுமில்லை
ஒருகோடி பரிசுகொடுத்த கோடாரிக் காம்புமில்லை
ஒரு குவளை சோற்றுக்கு நாவாடும் கூட்டத்தின்
குழந்தைகள்தான்...
கொட்டிலிட்டுக் குழந்தை பிறக்கவுமில்லை,
உடம்பு மறைக்க உடு துணியுமில்லை
உடல் நனைக்க உப்பு நீரும் கைக்கெட்டாக் கனியாகி
அந்நியன் கப்பல் வலையை விரிக்கும்.
காணாமற் போவார்,
துரோகிகள் பட்டியல் இன்னும் நீண்டபடி
ஈழம் மலருமென்று இன்னுஞ் சில கரகரத்த கதைகள்.
இதற்குள் நகரும்
இடர்மிகு தொடராய்
சுடர்மிகு கனவு
சின்ன விரலில் மெல்ல...

என்றபோதும் பிச்சைப் பாத்திரம்
கையில் வைத்தபடி
தண்டிய பணத்தில் தமிழர் தலைகளின்மீது
குண்டுகளாகக் கொட்டும் சிங்களக் கனவு,
புத்தரின் போதி மரத்தில்
பொழுதெல்லாம் புரண்டெழும்
மொட்டைச் சிங்களமும்
போதிக்கும் அகிம்சை
"தமிழருக்கென்று தனிநாடு இல்லை"
தண்டைச் சோற்றுக்குத் தாமிர பரணியும்
தபோபனமும்
சிங்களத் தேசமாம்!!!
தம்மைத்தாமே தடியடி நடாத்தி
தும்பிக்கையை இழந்த தமிழர்
துரும்பைப் பிடித்து வீசுவதாலே
எருமைப் பலத்தை ஒருமைப்படுத்திய
சிங்களச் சதியை உடைத்திட முடியா
உள்ளதையும் உதிர்த்தபடி...
கள்ளத்தனமாய் காய்களை நகர்த்தும்
இன்னொரு தேசம் இடியாய் முழங்கி,
எம்மவர் தலையை எம்மவராலே கொய்வதில் வென்று...
இத்தனைக்கும் மத்தியில்
இந்தத் தேசத்தை நட்பாய் நடத்தும்
எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய
என்ர தேசம் கட்டாக்காலி எருமைகள் கால்களில்
இடர்பட்டுக் கிடக்கும்.
இரப்பவர் வரிசையில்
ஒன்றாய்ப் பத்தாய்
ஒவ்வொரு நாளும் ஓடெடுத்து
ஒதுங்கும் கூட்டமாய்...
உலகத்தின் "அகதி"நாமம்
எனக்கும்
என் ஓராயிரம் தலைமுறைகளுக்கும்
இது தொடர் கதையாக...
சம்மா சும்மா
தாகம் சொல்வதால்
துணைக்கு வந்தவர்கள்
துரத்தியடிப்பதாய் மாற
தூங்கிய முகத்துடன் துரத்திப் பின்தொடர்வது
எதுக்காக?
துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க
அந்தோ பாரூ
ஒரு கூட்டம் கொட்டும் முரசு ஒலிக்கிறதே!
இமயத்தின் உச்சியில்
விடிவெள்ளி ஒளிர்ந்து விரிகிறது!!
உனக்கா முடியாது?
கோர்க்கின்ற கைகள் கொடும்பாவிகளோடென்றால்
"கொப்பராண ஈழமென்பது கானல் நீர்தான்"
கடுகளவு நிலமும் உனக்கு நில்லாது நாளடைவில்.
ஜனநாயகம்
01.10.06