Mittwoch, Oktober 24, 2007

ஆருக்காய் அழிந்தீர்?

ஆருக்காய் அழிந்தீர்?


தேகம் நோகிறது
திரண்டவென்னுறுதி குலைகிறது
உயிரே,உறவே,என் தெவிட்டாத தமிழே!
இந்தத் தேகம் ஆடுதே,அதிருதே
ஆருக்காய் அழிந்தீர்?

போருடல் யார்த்த புது மொழியே
துன்பப் பெருவெளியில் தோற்காத உயிரே
தோள் முறியா என் தேசமே,
தூணே,துயரறியாத் துணிவே!

நான் தோற்கிறேன்
தொலைவில் சென்றவரே
தோன்றீரோ மீள
என் தேசக் கருப்பையில்?

என்னிருப்பே,
ஏழ்மைதாங்கிய திடமே
தீனுக்காய் உயிர்த்திருக்கும் எனக்குள்
தீயாய் சுடும் தீபங்களே!

விழுப் புண்காவிச் சோர்ந்த உடலுரியச்
சொரியும் பூவில் உடல் மறைத்துங்களை
தோள் கூடிக் காவத் தெருவில் நிற்க
புதைத்தனரோ புத்தர்கள் புதை சேற்றில்?

பொல்லாத பேயரசு
பெயருக்கும் மனிதமற்ற
மடை நிலமாய் மாறிய இலங்கை
கடை நிலையாய்க் கண்ணீரற்ற மண்

புலம்பெயர்ந்த மனங்களின் மகிழ்ச்சி
விலையுயர்ந்த விமானத்தின் அழிவுக்கா?
என் விலை மதிப்பற்ற வீரத் தேச பக்தர்களே
உங்கள் மரிப்பில் மகிழ்வு தொலைய
மார்பெல்லாம் வலியதிகம்
விழிகொட்டும்,வாய் புசத்தும்

என் மகனே,மகளே!
எதற்காக இந்த வேள்வி?
மனம் முடங்கிய எமக்காக
மெல்ல நாமிட்ட பிச்சைக்காய்?

வேண்டாம்!
இத்தகைய வேதனையில்
வெற்றியொன்று வேண்டாம்!!
வீரர்களே விலங்ககற்ற
வேளையொன்று கூடும்
வேல்காவித் தோள் சேர
நூல் காவும் உங்களுறவும்!

தேசம் தொலைத்து
நேசம் அழித்து
தொலை தூரம் சென்று
சருகாய்ச் சாகும் என் உயிருள்
அதிர்வாய்,அக்கினியாய்
உதிர்ந்த உங்களுடலம்!

மெய்யே,மேன்மையே
மிகப் பெரும் வலுவே-என்
விருட்சமே,விழுதே-வீரமே!
துயரத்துள் என் மனம் பாரீர்!

கார்த்திகைக் கரும்பே
கண்ணீரின் பெருமிதமே
காலத்தால் அழியாக் காவியங்களே
காதலித்த மண்ணுக்காய்
வீழ்ந்தீரோ வீர முத்தத்துடன்!

தீராத சோகத்தில்
திக்கற்ற இந்த இழி மனிதன்
தானாடாதபோதும்
தன் தசையாடக் கவி பாடித் தமிழ் நோக
உணர்விட்ட பாதையொன்றில் தனி மரமாய் வான் நோக்கி

வாறீரோ என் வசைகளுக்குள்
ஒரு வாழ்த்துக் கேட்க?
வதங்குகிறேன்,
வாயெடுத்து ஓவென்ற ஓலத்தோடு
சளி சிந்தும் நாசித் துடைப்பிலும்
இந்தக் கிழட்டு விரல்கள்
தமிழழுத்தத் தரணம்வைத்த என் வாரீசுகளே
வாருங்கள் தேசத்து விடியலுக்குள்!

வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்
தேசியத்தைச் சொல்லியும்
என்னைத் தாழ்த்தாதீர்!
இதுவென் சுயமாக்கப்பட்ட வலி.
சொன்னாலும் புரியாத தொப்புளுறவு.

தேசத்துக் குழந்தைகளின் உதிர்வோடு
அரசியற் சடுகுடுவா,
சாணாக்கியமா?-வேண்டாம்!

விடியலுக்கான வீரப்போரொன்றைப்
பொழுதோடு போற்றிக்
களமாடும் நிலையொன்றில்
புரட்சிக் கீதமொன்று ஓலத்தை மறைக்க
சீலத்தில் தேசமகள் திளைக்கத் தோன்றுக மீள!

உங்கள் புதுவரவுக்காய்
உழைப்பவர் மகிழ்வார்
உயிரினுள் வைத்துத் துதிப்பார்
தோன்றுக எம்தோள் சேர்ந்து
தேசத்தைக் காக்க

அதுவரையும்
சென்றுவாருங்கள் என் செல்வங்களே!
சோகச் சுமையாய்
துயிலுரிந்த உங்கள் உருவங்கள்
நெஞ்சில் கீறிய வலி ஆறுவதற்குள்
வாருங்கள் புரட்சிக் கீதம் இசைத்து!


ஜனநாயகம்
24.10.2007
இரவு மணி:22.16