Sonntag, August 26, 2012

சுயாதீனத்தேசத்துள் மக்களது சுயாதீனவாண்மை.

சுயாதீனத்தேசத்துள் மக்களது சுயாதீனவாண்மை.

லங்கைத் தேச மக்கள் அனைவருமேயின்று மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிகளுக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,தமிழ்பேசும் மக்களது அரசியற் கோரிக்கைகுள் மீளத் தம்மைப் புதிய வடிவினுள்த் தகவமைத்திருக்கின்றனர்.இலங்கையின் சுயாதிபத்யமென்பது இன்றைய ஆசிய மூலதன நகர்வுடன் பிணைந்து விட்டது.நடக்கப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் புதியவொரு திசையறி அரசியல் முனையை நமக்குக் காட்டுமென்றே நான் பெரிதும் காத்திருக்கின்றேன்.

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.


இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது.


இலங்கைக்கானவொரு மேட்டிமை அரசானது காலத்துக்கு முந்தியதானதாகவே இருக்கிறது. இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ்நிலைக்குள்ளிருக்கும்போதே அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே காலத்துக்கு முந்திய அதிகாரப்போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.


இங்கே,நடைபெறப்போகும் மாகாண சபைகளுக்கானவொரு தேர்தல் நிலவரமானது ஆயுதக் கலாச்சாரத்துக்குள் கண்டுண்டுபோன தமிழ்த் தேசியவாத-குழுவாத அராஜக் கட்சி-குழுக்களுக்கானவொரு நலனுக்கான தெரிவாக மக்களது வாழ்வாதார முன்னெடுப்புகளைப்பயன்படுத்துவது இதுவரை அரசியல் நகர்வாகவே இருக்கின்றது.இந்த அரசியல் நகர்வானது எப்பவும்போலவே மக்களது பிரச்சனைகளைப் பேசியபடி தமது குழு-கட்சி நலன்களை அந்நிய நலன்களது வாய்ப்புக்கான அரசியற்றெரிவிலிருந்தே காத்துக்கொள்ள முனைகின்றன. இஃது, ஒரு கட்டத்தில் இலங்கையின் முழுமொத்த மக்களது சுயாதிபத்தியத்தை மறுத்தொதுக்கும் அரசியலைத் தெரிவாக்கிக்கொண்டு மக்களை மீளப் பலாத்தகாரமான முறைமைகளில் பணிய வைக்க முயற்சிக்கின்றன.இதன் போக்குக்கமைய இலங்கையின் அரசானது தன்னையும் இதன் முதன்மையான சக்தியாகவே இருத்த முனைவதால் இலங்கையில் வெள்ளைவான் கடத்தலிலிருந்து இராணுவவாதப் போக்குகள் தெரிவாகி இலங்கையின் அண்ணளவான ஜனநாயக விழுமியங்களையும் காலிற்போட்டு மிதிப்பதில் முடிகிறது.

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலஙகையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது, சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு "சட்டம்-ஒழுங்கு" ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.


இன்றையவுலகப் பொருளாதாரவூக்கங்கள் பிளவுபடப் பிளவுபட இந்த நெருக்குதலும் தொடர்ந்து தேசத்தினது சுயாதீனத்தை உடைத்துக்கொண்டேயிருக்கிறது.இத்தகைய தருணத்திலொரு அரசு தேசத்துள் வாழும் அனைவரையும் ஒரு தேச மக்களாக உருவாகுங்களென்பது மிக இயல்பானது.இலங்கைத் தேசத்துக்கானவொரு தேசிய இனவுருவாக்கமென்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களது குரல்வளையை நெரித்துக்கொண்டுருவாவது எப்பவும் எமக்கிசைவானதில்லை.ஆனால்,இதைத் தவிர்துக்கொண்டு இலங்கைக்கானவொரு முழுமொத்த தேசியவினவுருவாக்கமென்பது இலங்கையைச் சுரண்டாதா பொருளாதாரப் போக்குகளோடண்மிக்க வேண்டிய காலம் கடந்துபோய்க்கொண்டிருக்கும்போது அதை அண்மித்தவொரு பொருளாதாரப் பொறிமுறையை இந்தப் பல் தேசியக் கம்பனிகளைத் தாண்டிச் செயற்படுத்தும் திறன்சார் அரசு இலங்கைக்கு அவசியமானது.மகிந்தா முன்னெடுக்கும் அரசியல் நகர்வானது இதற்கெதிராகவே இருப்பதென்பது கடந்தகால ஆயுதக் காலாச்சாரத்தின் பாதகமான விளைவென்பதும் மறுக்க முடியாது.

இலங்கையின் ஆளும் கட்சிகளில் அண்ணளவாக இலங்கைச் சுயாதீனத்துக்கிசைவான அரசைக்கொண்டு நகர்த்தும் கட்சிகள் இலங்கைத் தேசப் பொருளாதாரப் புண்புக்கமைய எதுவுமே இல்லாது போய்விட்டது.இலங்கை மக்கள் அனைவருமே இந்தப் பரிதாபத்துக்குரிய கட்சி அரசியலைப் புரிந்து செயற்படவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.08.2012