Freitag, Januar 09, 2009

இது முன்னரங்கக் காவல் அரண்

"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.

னது தூக்கம் எவ்வளவு கருமையானது
கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்
பாரத்தைப் போலவே,
நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்
என் குரலை நீ கேட்கமாட்டாய்?

புள்ளியான வெளிச்சத்தின் கீழே
நீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய்,
உனது சொண்டுகள் விகராமாக
நித்தியத்தின் நெடுந்தொலைவை முத்தமிட...

நாளை என்பது இங்கே மௌனமாகலாம்
கூடவே காற்றுந்தாம்,
எனினும்
மனித நாற்றமும்
இயற்கையின் கோரமும்
அடங்கப் போவதில்லை.

இரவென்பது வெறுமையாகிறது
விடியலைத் தொலைத்து,
வருசா வருசம்!

இது முன்னரங்கக் காவல் அரண்,
நீ முழுமையாகக் கனவுகாணத் தவறிய பொழுதொன்றில்
உனது மூச்சு மிக அமைதியாக
மெலிய சத்தமாய் அமிழ்ந்து போகும்.

தெருவோரத்துக் குடிசைகளின்
மெல்லிய சல சலப்பில்
உனது பெயரும் அறுந்துதிரும்
நீ அவர்களுக்கு நெருக்கமானவ(ள்)ன்.


காலத்தைக் கொடிய ஜந்திரமொன்று
துண்டு துண்டாய்க் கத்தரித்தது,
நெடுக்கும் குறுக்குமான அளவுகள்
சொல்லி வைத்தபடி
90,
180,
360 பாகைகளில்,
அது எப்போதாவது தேசங்களாக இருக்கும்போது.


இந்த நோக்கத்துள்
தூக்கம் தொலைத்த
உனது முகமும்
அழகிய சிறு விழிகளும் ஜொலிக்கின்றன!


இப்போது உனது தோலின் குளிர்ச்சியுள்
பெருமித எச்சமொன்று
அம்மாவாய்
முலையுதிர்த்த வெண்மைக் குருதியாய்
உறைந்து போகும்.


நாங்கள் உன் வேதனையை இரட்டிப்பாக்கி
உன்னால் உணரப்பட்ட
அனைத்து நித்தியங்களையும் திருடிக் கொண்டோம்,
சுவரில் தொங்கும் சிலந்தி வலையாக
உன்னில் படர்ந்த எமது கனவுகள்
உன்
இதயத்தை இரையாக்கியது.

எமது பயம்
உன்னைத்; துப்பாக்கியோடு கட்டிப் போட்டது,
உனக்கு நீ மிகத் தூரமான பொழுதொன்றில்
என் குரல் கேட்பதற்காய்
நான் குரைக்கும் பாழ் காலம்
கட்டுக்கடங்காத
கட்டாக்காலி எருமையாக
உனது உடலில் இடறிப் புரண்டது.
நீ,
எனது கபாலத்துள் இறுதிக் காவலர்.


ப.வி.ஸ்ரீரங்கன்