Sonntag, Oktober 25, 2015

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...
 
வரலாற்றுக் குறுக்கலது வக்காலத்து...

|| 2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.|| -நிலாந்தன் [புலி இயக்கப் பரப்புரையாளர்)

மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று நம் சமுதாயத்துள் கோலாச்சுகிறது.
 
ஈழவிடுதலைப் போராட்டமென்று நடாத்தப்பட்ட அடியாட் சேட்டையானது அன்றும் ,இன்றும் யார்மீதும் சவாரிசெய்த-செய்யும் !.;இஃது , அன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொன்று குவித்தது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் மூன்று இலட்சம் மக்களது உயிர் பலாத்தகாரமாகப் பறிக்கப்பட்டது.இதை இன்றுவரை மறுத்தொதுக்கும் புலித்திமிர் படுகுழியிற் தள்ளப்பட்ட தமிழினத்தைப் பார்த்து நன்றி இல்லாத சமுதாயமென்கிறது.எதற்கூக அவர்கள் நன்றி காட்டவேண்டும்?
30 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட "தமிழீழ விடுதலைப் போரில் "இதுவரை படுகொலை செய்யப்பட்ட /பலியெடுக்கப்பட்ட மற்றும் துரோகி சொல்லிக் வேட்டையாடப்பட்ட இலட்சக்கான தமது உறுவுகளை இழந்ததற்காக?;
வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்பட்டு,தமிழ்ச் சுமுதாயத்தின் வாழ்சூழலைத் தகர்துச் சுடுகாடாக்கி அகதிகளாக்கியதற்காகவா?;

தம் இனத்தை ஒட்ட மொட்டையடித்து அங்கவீனர்களாக்கி,விதவைகளாக்கிச் சிங்கள ஆதிக்கத்திடம் கையளித்த புலிப் போராட்த் திறனுக்காகவா தமிழ்ச் சமுதாயம் நன்றி மறவாதிருக்கவேண்டும்?

அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோடு யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள். ஏன் தமிழ்பேசும் மக்கள் , இயக்கவாத மாபியாக்களின் பாசிசவாதக் குணாம்சத்தையும் அதன் போராட்டத்தையும் நன்றிகொண்டு போற்ற வேண்டும்?

தமது சமுதாய அமைப்பே சிதறடிக்கப்பட்டு ,மூன்று இலட்சம் தமது உறுவுகளைப் பலியெடுத்துச் சிங்கள -இந்திய ஆளும் வர்க்கத்திடமும் மற்றும் மேற்குலக ஆதிக்கத் தேசங்களிடம் தம்மை அடிமையாக்கிச் சென்ற இந்தப் புலிவழிப் போராட்டத்தையம் அதன் போராளிகளையும் குறித்துச் தமிழ்ச் சமுதாயம் நன்றியோடு இருக்க வேண்டுமெனும் உரையாடல் புலிப்பாசித்தை வரலாற்றில் நீற்றுப் போக வைக்கும் வியூகத்தின் மொழியாகும்.இது தகவமைக்கும் எதிர்காலக் கருத்தியல் மனதானது தமிழ் தேசிய விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதாகும்.ஒரு இனம் சொந்த இழிநிலைக்குள் இருத்தி வைக்கப்பட்டு கையாலாகாத குற்றுவுணர்வுமிக்க இனமான மாற்றுவது எதிர்காலத்தில் அவ்வினத்தைத் தொடர்ந்து பலவீனமானவொரு இனமாக்குவதே!புலிகளது போராட்டச் செல்நெறியின் விளைபலன்களை மறைத்து, அதன்மீது இரக்கத்தைப் பொழிய வைப்பதற்கேற்பச் சிங்கள அரசால் கொல்லப்பட்ட பல்லாயிரம் போராளிகள் போக சில காரணங்களுக்காக விடப்பட்ட எஞ்சிய மேல்நிலைப் புலிகளை வைத்து புலிகளது தவறான அரசியல் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களது குற்றமாக வரையப்படுகிறது.

இத்தகைய மனித்துவமற்ற மக்கள் விரோதக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய ஆபத்தான புலி அரசியல்!இந்த அரசியலானது தன்னால் பலியெடுக்கப்பட்டவொரு சமுதாயத்தின் முன் திமிராக "நன்றி" குறித்துக் கப்பங் கேட்கிறது.

இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, இலட்சக்கணக்காகப் பலியெடுத்து அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி விட்டது.இதுதாம் முள்ளிவாய்க்கால்வரையிலான "ஈழவிடுதலை" ப் போராட்ட வரலாறு.

இங்கே ,மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்பட்டது..எந்தப் பக்கம் பார்த்தாலும் "போராடு,போராடு" என்பதாகவும், தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்பட்டது.

இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைத்து,அந்நியர்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியது. "தேசிய விடுதலை"என்ற கருத்தாக்கத்தையும் அதன் இயக்க வினையையும் துஷ்பிரயோகஞ் செய்தது.அதைக் கேலிக்குரியதாக்கியது!

இத்தகைய கொடுமையான மனிதவிரோத அழிப்பு அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை" சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் வரலாற்றில் பதியவேண்டும்.
 
 
ப.வி.ஶ்ரீரங்கன்
25.10.2015Sonntag, Oktober 11, 2015

டேவிட் ஐயாவின் முன்னுரையோடு,அவருக்கு முடிவுரை...

...இன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினத்துக்கு வரக் கூடிய அழிவை ஆராய்கிறேன்.
இப்பகிரங்க வெளியீடுகளால் இவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க நான் முன்வரவில்லை.இவர்கள்ளெமது அரசியற் பிரமுகர்களென்றடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் பலன் கருதி இந்த விமர்சனத்தை வெளியிடுகிறேன்.

இப் புனிதப் பணியில் எனக்கு நேரிடக் கூடிய விபரீத விளைவுகளை நன்கு உணர்வேன்.விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக்கட்டை என்றதும் ; சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (TELO) தமது "எழுச்சி"ஏட்டில் என்னைப் "பிற்போக்குச் சக்தி காக்கை வன்னியன்" என வர்ணித்ததையும் அறிவேன்.

இக்கட்டுரையை வரையும்பொழுது பெயரும் -ஊரும் கொடுக்கத் திரணியற்றவொரு "விடுதலை வீரன் " ஓர் பயமுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்."அட பொறுக்கி... முகந்தனிடம் பணம் வேண்டி சிறையுடைப்புப் புத்தகம் வெளியிட்டாய் ;இனியெழுதினாற் வெட்டிக் கொல்வோம் !" என்கிறார் அவர்.

இவ் வெருட்டல்கள் மூலம் தமிழீழ விடுதலை எங்கே போகின்றதென்பதை  வாசகர்கள் ஊகித்து அறியலாம்.

ஆனால், ஈழவிடுதலைப் பாதையில் எண்ணற்ற துன்பம் நேரிடினும் அஞ்சாது -அயாராது உழைப்பேன்.என் அருமைச் சக ஊழியன் டாக்டர் சோ.இராசசுந்தரம் தம் உயிரையே தியாகம் செய்து விட்டார்.பல ஈழத் தமிழ் இளைஞர்கள் இரத்தத்தால்  ஈழவிடுதலையை உறுதிப்படுத்திவிட்டனர்.இப் பாதையில் குறுக்கே நிற்கும்  தீய சக்திகள் அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.
ச.ஆ.டேவிட்
1985
======================

 மேற் காணும் அவரது முன்னுரையில்  ஈழ விடுதலை மீதான அவரது பெருவிருப்பை நாம் அறிய வாய்ப்புண்டு.அவரது அரசியல் முன்னெடுப்புகளில் நானும் மயங்கியிருந்த காலத்தில் அவரைச் சந்தித்துச் சில துரும்புகளை நானும் எடுத்துப் போட்டவன். இன்று  " எங்கள் "டேவிட் ஐயா பந்தியுற்றுள்ளார். 

விடுதலை வேட்கையுடைய  மாபெரும் மனிதருக்கு நமது "விடுதலை இயக்கங்கள்" வரலாற்றில் எந்த  இடத்தை அவருக்கு வழங்கினர் என்பதை அவரது முன்னுரையே நம் முன் எடுதியம்பி வரலாற்று ஆவணமாகவுள்ளது!.

எனவே,அவரது இழப்புக் குறித்துப் பேசும் அருகதை அராயக இயக்கவாதப்  பண்புடைய  எவருக்கும் கிடையாது.இந்த மாமனிதரை இறுதிவரை கண்டுகொள்ளாத இயக்வாதம் ,தற் குறித்தனமாகத் “தமிழ்த் தேசிய விடுதலையை அழித்து தாமும் அழிந்து போனதை”  இந்தப் பெரு மனிதர் கண்டுதாம்  தற்போது ஈழத்திடமிருந்து விடைபெற்றுள்ளார்.

அவரது பெருவிருப்பை(விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகளை இறுதிவரை அம்பலப்படுத்தி நேரிய பாதை காண்பது) நாம் தொடர்ந்து  ஆற்றுபவர்கள்.எனவே, நமது முன்னோடியான டேவிட்  ஐயாவுக்கு மிகுந்த மரியாதையோடு தலை தாழ்த்தி அவர் வழி தொடர்வோம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
11.10.15

Samstag, Oktober 10, 2015

பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை...

இஃது  "கொசிப்பு" அல்ல...


நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் - இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு "தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் "என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.
இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் "என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.
உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த "அகதி"ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : "நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்" (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! - EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?
பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு "கொபற்ற  கொல்லையிற் குப்பை"  கொட்டுவதில் "டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்" எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
10.10.2015