Freitag, Dezember 22, 2006

எரி பிண்டம்.

எரி பிண்டம்.

தெருக்கோலம் நீக்கி
வீட்டின் முற்றலில் குருதியுறைந்த பிண்டம்
நாயின் எச்சில்பட்ட கறியாக
அடுப்பின் எரிதணலில் மெல்ல வெந்து
மூக்கின் துவாரத்தில் துளையிட்ட
எரி நாற்றம் மெல்ல அடங்கினும்
மோவாய் நக்கிய பெருவெளியில்
துருவத்துக் குளிர்ச்சி

திசையிழந்த பெருவெளியில்
தவமிருந்த பருந்துக்கு
பசியடக்கச் சிரமறுத்த கொக்குகளும்
ஒரு தவப்பயனாய்க் கூடிய கரி நாளொன்றில்
மலம் கழிக்கவுண்ட நிணமும் உருக
கடவாய் பிளக்கப் புழுக்கள் நெளிய
பற்களின் கோரத் தாண்டவம் தொடர் கதையாக...

மலை முடுக்கில் திரண்ட நீர்கூத்து
ஏழு தலைகளையும் தாண்டிப் பற்றைத் துவாரத்தால்
பாக்கியம் செய்தது
பெருங்களிக் கூத்தொன்றில்
கழைக்கூத்தாடி புணர்ந்தொதுக்கிய சிறு குழியும்
பெருக்கெடுக்க மறுத்து முனைவீங்க
முக்காலத்துக்குமான எண்ணிக்கைகள் உயர்ந்தன மெல்ல

ஒவ்வொரு தானங்களும்
சுமை காவும்
சிறுகாட்டில் பெரு நரிக்கு ஒப்பாரி
ஊருக்குள் ஊளைச் சத்தம்
உறக்கம் கலைத்த கணமொன்றில்
நரகத்தின் குரல்வளை நீண்டன நெடில்வீசி
ஊர் மேயும் தெரு நாய்கள் புடை சூழ

எட்டிப் பிடித்துவிடாலாமென்ற
வானத்தின் பொய் முகட்டில்
நெய் வடியுமென்று நெடுநாட் தவமிருப்பும்
சொல்லித் தெரியாமலே உணர்வுத் தெறிப்பில்...
பல்லாக்குத் தூக்கிகளின் எச்சில் நாவும்
எரி நாற்றம் தாங்காச் சோர்ந்தொதுங்க
ஒரு குவளை நிறைந்த இச்சைப் பேய்கள்
வெற்றொலியுள்; அர்ச்சனை பண்ண
புழுக்கள் நெம்பிச் சாக்கடை கண்டன

தெருக்கோலம் கீறிக் கிடப்புக்குப் போட்ட
உலக்கையின் அடிவயிறு உப்பிக் கொண்டேயிருக்கு
மற்றைய பொழுதொன்றில்
எரி பிண்டம் மலர் வதைக்கவும்
மடைதிறந்துருகும் மக்கர்களின் மனங்களில்
தீராத பிணி முற்றவும்
திசையிழந்த ஓலத்தையும்
தெருக்களில் நின்று மலம் கழிக்க!

ஜனநாயகம்
22.12.06

Dienstag, November 21, 2006

பேரப்பூச்சி.

பேரப்பூச்சி.


ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி


அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை


கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்


மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!


பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது

அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!


என்ன நம் இழுதை!


ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.

ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!


இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.


ஜனநாயகம்
21.11.2006

Sonntag, November 12, 2006

நாட் குறித்தல் நமனைக் கேட்டு!

நாட் குறித்தல்
நமனைக் கேட்டு!


என்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவீழத்தார்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!


கடுமழையில் கிளையுடையும் வேம்புபோல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்த அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண்

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்குகொலிக்கும்

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஈழத்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!


உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் ஈழத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய!


ஜனநாயகம்

12.11.2006

Samstag, November 11, 2006

மழலைகளைக் கொல்லும்...

மழலைகளைக் கொல்லும்
மந்தைத் தேசம்!


மந்தைகளின் விந்தை மிகு தேசம்
உயிர்த்திருப்பவரை தறித்தெறியும் எந்தப் பொழுதிலும்
இருப்பவரென்றும் இழப்பவராய்
இதயம் தொலைக்கும் இலங்கை மகாவம்சம்


இதற்கும் மக்களாண்மை
மனிதாபிமானம் ஜனநாயகம்
அதன் முதுகில் சோஷலிசக் குடியரசு வேறு
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம்போன்று...


நாற்று நட்ட விரல்கள் நன்னீரில் விரல் நனைப்பதற்குள்
நட்ட பயிர் களைந்தெறியப்பட்ட வயற்பரப்பைப்போல்
தறித்தெறியப்படும் ஒவ்வொருவுயிரும்
இந்தத் தேசத்தின் எதிர்காலக் கனவுகளன்றோ?


எந்தப் பக்கம் திரும்பிடினும்
மானுடரைப் புசித்திடும் நரிகளாய் அரசியல் மாபியாக்கள்
நல்ல மனிதர் வேடமிட்டு
நடுத்தெருவில் குருதி குடிக்கும் கனவோடு


கொடுங் கரங்கள்
நல்ல வேடமிட்டு நற்கரங்களாயும்
தேசத்தின் அதியுத்தமத்துக்கும்
நன்றிக்கும் பாத்திரமுடையதாகப் பேசப் படுகிறது!


பக்கம் பக்கமாய் வரும் நாளிதழ்களும்
பக்குவமாகப் பரப்பப்படும் வார்த்தைகளும்
பாதகஞ் செய்யுமிந்தத் தேசத்தைப் பார்போற்றும்
தேனொழுகும் தேசமாயும் சொல்லச் சில வானொலிகளும்
போதாக் குறைக்கு மக்களின் விழிகளைச் செவிகளைப் பாழாக்கியபடி


ஒரு தேசத்தைத் தாகமாக்கிய தம்பிமார்களும்
தவறிப்போன மந்தைகளில் ஒன்றாய்த் தடுமாறிய பொழுதொன்றில்
எவரிடமோ ஏந்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாய்
சமாதானம் பேச யுத்தத்தில் மூழ்கிக் கிடக்க


மூச்சுவிட வழியற்ற நிலப்பரப்பில்
ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்த் தினமும்
குண்டடிபடும் அந்த"மக்கள்"
எந்தத் தேசத்தையும் கனவுகண்டதாக எவருமுரைக்கார்


சொல்லச் சொன்னபோது சொன்னதைத் தவிர
அடிக்கச் சொன்னபோது அடித்ததைத் தவிர
வேறெந்த விசேஷமும் கைக்கெட்டாத
தரித்திரத்தின் வாரீசுகள் வதைபடும் தேசமிது


இருந்தும்,


புத்தன் வந்த புவியென்பார்கள்
புடுக்கர்கள் செய்யும் போருக்கு
புத்தரின் போதனையும் நன்னாட் குறித்தொதுங்கும்
பொல்லாத தேசமிது!!



ஜனநாயகம்

10.11.2006, மணி:23.58

Dienstag, November 07, 2006

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...


நமக்கிருக்கும் ஒரு பெரும் குறையானது நமது சமூகத்தில் அரசியல் அறிவென்பது மிக மிகத் தாழ்ந்த நிலையிலிருப்பதே.இது நமது தமிழ் பேசும் மக்களை ஒரு இனமாகவும்,ஒரு வர்க்கமாகவும்,ஒரே சாதியாகவும் பார்க்கிறது.

இது தப்பு!

நாம் தமிழ் பேசுவதால் ஒரே இனத்தவர்களில்லை.

நம்மிடம் இஸ்லாமிய,மலையகத் தேசிய இனங்கள் இருக்கின்றன.


நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.



எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.


இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.

எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் விய+கத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).



இதை எதிர் கொள்வதற்கான எந்த விய+கமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.தமிழ் "தேசிய விடுதலை இயக்கமென்ற புலிகள்" தமிழ் எழக-பொங்கு தமிழ் செய்வதால் இந்தப் பொறியை உடைக்க முடியாது.

நம்மக்கள் அனைத்திலும்"தியாகி தர துரோகி"எனப்பார்க்கப் பழக்கப்பட்டுள்ளார்கள்.இது ஆபத்தான உளவியலைத் தோற்றியுள்ளது.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.

சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.


இங்கே புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை ப+ண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் "விய+கமானது"ஆனந்த சங்கரியின் வடிவில் நம்மிடம் வருகிறது.நாங்கள் இந்தியாவின் மாநில சுயாட்சி(!?) முறைகளைப் பின் பற்றவேண்டுமாம்.

இந்தியாவில் இனப்பாகுபாடின்றி மக்கள்"அந்தமாதிரி"வாழ்கிறார்களாம்.மிசாரம்,திக்கம்,காஸ்மீரி,

நாகலாந்து,சீக்கியர்களின் தனிநாட்டுப் போராட்டங்கள் எல்லாம் மக்களின்"ஓற்றுமையை"நன்றாகவே எங்களுக்கு எடுத்துரைக்கின்றது.


இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.


அதன் ஒரு வடிவமாக ஆனந்த சங்கரியை, ஈ.என்.டீ.எல்.எப்பை(ரி.பீ. சீ.வானொலிக்காரர்கள்)மற்றும் புளட்,போன்ற ஆயுதரீதியாக வலுவிழந்த அமைப்புகளையும் கட்டுப்படுத்தித் தமிழ் மக்களின் நலன்களுக்கும்,புலிகளின் நலனுக்கும் எதிராக இந்தியா செயல்படுத்துகிறது.


இந்தி இந்தியாவின் "விருப்பானது" ஆனந்த சங்கரிய+டாக இப்படி நமக்குள் வருகிறது.அந்த மனிதரின் அரசியல் குழிப்பறிப்புகள் இப்படி வருகிறது படியுங்கள்.


நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் விய+கமற்ற ஆயுதப் போராட்டம் இந்தியாவின் இந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும்.இனியாவது மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.

மக்கள் போராட்மின்றி இந்த விய+கத்தை உடைக்க முடியாது.இதற்காகப் புலிகளின் கட்டமைப்பே மாறியாகவேண்டும்.அதன் வெற்றுத் தலைமையே அறிஜீவிகளை,ஜனநாயக வாதிகளை,நிபுணர்களை உள்வாங்கி அவர்களைப் பயன்படுத்தியாகவேண்டும்.உட்கட்சி ஜனநாயத்தைத் தோற்றுவித்து கட்சியை மறுசீரமைப்புச் செய்யவேண்டும்.இதனூடாகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

எங்களுக்குள் பல நிபுணர்கள் உள்ளார்கள்,பல தியாகஞ் செய்யும் உளப்பாங்கு இருக்கிறது.எமது வாழ்வு இனவாத,உலக நலன்களுக்காக இனியும் பாழாக முடியாது.


புலிகளே உங்கள் அழிவில் மக்கள் அழிவதும் நிகழும்!

எனவே முந்துங்கள் கட்சியை மக்கள் ஸ்தாபனமாக்குங்கள்.

மக்கள் படைகளாக இராணுவப் படையணி மாறியாகவேண்டும்.தலைமையைப் பாரிய நெறிமுறை வழிப்படுத்தவேண்டும்.

மக்கள் தங்கள் அணிதிரட்சிய+டாக வெற்றியை நிலைநாட்ட முடியும். இது புரட்சிக்கான அறைகூவல்.இதைத் தமிழ் தரப்புத் தரகு முதலாளியம் ஏற்காது.

ஏனெனில் நாம் தமிழைப் பேசினாலும்
பிளவுண்ட மக்கள் இனம்.

நம்மிடம் வர்க்கங்கள் இருக்கு.நம்மிடம் சிறுசிறு தேசியினங்கள் இருக்கு.நம்மிடம் சாதிகள் இருக்கு.

இவற்றையெல்லாம்விட வாக்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பதைத் தமிழ்த் தேசியப் போராட்டம் தினமும் நிரூபித்தே வருகிறது.


ஜனநாயகம்.

Sonntag, Oktober 01, 2006

"கொப்பராண ஈழமென்பது...

கடுகளவு நிலமும்
உனக்கு நில்லாது!


இன்னும் என்ன?
திரும்பத் திரும்ப
பழைய இடத்திலிருந்தே
பகிடிக்குச் சமாதானம் பேசுகிறோம்
பக்கங்கள் நிறையப் பற்றுவாடா
சொல்வதற்கென்று சில பேராசிரியர்கள்
பார்வைக் கோளாறு
ஆயுதங்களைக் கடவுளாக்கும்.

என்னமாதிரிக் கதைத்தாலும்
நாங்கள் நம்புவது இந்தியாவைத்தானென்று
இதயம் பீறிக் காட்டும்
இன்னுஞ் சில செஞ்சோற்றுக் கடன்கள்!
எதிலுமே உப்பில்லையென்றபடி
பாணுக்கும், சீனிக்கும் மக்கள்
முண்டியடித்துக் "கியுவரிசைக் கட்டி"
எழுபதுகளை நினைத்தபடி...

நாளுக்கு ஆறு வானொலியும்
அதைச் சுமக்கும் அரசும்,
அளந்துவிடும் மகிந்தாவின் மகத்துவங்களை
அதையும் எதிர்த்துக்கொண்டு
தலைவர் பாட்டோடு
இன்னும் வரும் சில வானொலியும், தொலைக்காட்சியும்!
எங்களுக்கென்னவோ உணவுக்கு
உப்பில்லாததுபோலவே
ஈழப்போரும் சப்படிக்கிறது!!!

இறப்பவர்கள் பேராசிரியர்களில்லை
தானைத் தலைவர்களுமில்லை
அல்லது ஜனநாயகக் கொழுந்துகளுமில்லை
ஒருகோடி பரிசுகொடுத்த கோடாரிக் காம்புமில்லை
ஒரு குவளை சோற்றுக்கு நாவாடும் கூட்டத்தின்
குழந்தைகள்தான்...

கொட்டிலிட்டுக் குழந்தை பிறக்கவுமில்லை,
உடம்பு மறைக்க உடு துணியுமில்லை
உடல் நனைக்க உப்பு நீரும் கைக்கெட்டாக் கனியாகி
அந்நியன் கப்பல் வலையை விரிக்கும்.


காணாமற் போவார்,
துரோகிகள் பட்டியல் இன்னும் நீண்டபடி
ஈழம் மலருமென்று இன்னுஞ் சில கரகரத்த கதைகள்.

இதற்குள் நகரும்
இடர்மிகு தொடராய்
சுடர்மிகு கனவு
சின்ன விரலில் மெல்ல...

என்றபோதும் பிச்சைப் பாத்திரம்
கையில் வைத்தபடி
தண்டிய பணத்தில் தமிழர் தலைகளின்மீது
குண்டுகளாகக் கொட்டும் சிங்களக் கனவு,


புத்தரின் போதி மரத்தில்
பொழுதெல்லாம் புரண்டெழும்
மொட்டைச் சிங்களமும்
போதிக்கும் அகிம்சை
"தமிழருக்கென்று தனிநாடு இல்லை"
தண்டைச் சோற்றுக்குத் தாமிர பரணியும்
தபோபனமும்
சிங்களத் தேசமாம்!!!

தம்மைத்தாமே தடியடி நடாத்தி
தும்பிக்கையை இழந்த தமிழர்
துரும்பைப் பிடித்து வீசுவதாலே
எருமைப் பலத்தை ஒருமைப்படுத்திய
சிங்களச் சதியை உடைத்திட முடியா
உள்ளதையும் உதிர்த்தபடி...

கள்ளத்தனமாய் காய்களை நகர்த்தும்
இன்னொரு தேசம் இடியாய் முழங்கி,
எம்மவர் தலையை எம்மவராலே கொய்வதில் வென்று...
இத்தனைக்கும் மத்தியில்
இந்தத் தேசத்தை நட்பாய் நடத்தும்
எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய
என்ர தேசம் கட்டாக்காலி எருமைகள் கால்களில்
இடர்பட்டுக் கிடக்கும்.

இரப்பவர் வரிசையில்
ஒன்றாய்ப் பத்தாய்
ஒவ்வொரு நாளும் ஓடெடுத்து
ஒதுங்கும் கூட்டமாய்...
உலகத்தின் "அகதி"நாமம்
எனக்கும்
என் ஓராயிரம் தலைமுறைகளுக்கும்
இது தொடர் கதையாக...

சம்மா சும்மா
தாகம் சொல்வதால்
துணைக்கு வந்தவர்கள்
துரத்தியடிப்பதாய் மாற
தூங்கிய முகத்துடன் துரத்திப் பின்தொடர்வது
எதுக்காக?


துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க
அந்தோ பாரூ
ஒரு கூட்டம் கொட்டும் முரசு ஒலிக்கிறதே!
இமயத்தின் உச்சியில்
விடிவெள்ளி ஒளிர்ந்து விரிகிறது!!

உனக்கா முடியாது?

கோர்க்கின்ற கைகள் கொடும்பாவிகளோடென்றால்
"கொப்பராண ஈழமென்பது கானல் நீர்தான்"
கடுகளவு நிலமும் உனக்கு நில்லாது நாளடைவில்.

ஜனநாயகம்
01.10.06

...செல்லக்கை கொடுப்பு.

சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு.

தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!

"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.

"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"

பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.

இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.

"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.

"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.

பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.
வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!

"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"

நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!

எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.

சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.

பத்தைக்குள் நின்று பீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,ருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!

இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள்,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-ரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.

பத்து வயதில்எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.

இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.

கிட்லர்!

சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"

ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.

"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான்.

அத்தான்-ஆசான்!

இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.

ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.

ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.

இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது.

"தானுண்டது பேயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.

எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!

"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."

இதுதான் என் நிலையும்.

ஜனநாயகம்
01.10.2006

Montag, September 25, 2006

கோயிலும்...

கோயிலும்
கொழுத்த வரும்படியும்!

எந்தத் திசையை நோக்கினும்
மடமையும்,ஏமாற்றும் கோசங்கள்
நிறைந்த கள்ளத்தனங்கள்,
கதைகளாய் நம்முள் கொட்டப்படும்

தீயவர்களின் தெருக் கூத்துக்கள் கோயிலாய் எழ
பல்லாயிரம் ஆண்டுகள் மடிந்தொழிந்து போயினும்
புதுப்பிக்கும் ஒவ்வொரு தரணத்திலும்
எங்கள் சாவின் சாயலே முகத்திரையில் ஓங்கியுதைக்கிறது!

வர்ணத்தைத் தர்மமாக்கிய வதைஞர்கள்
வழிபாட்டுத்தலமென்று
வக்கரித்த அழிவுகளைக் கண்களில் தூவி
வருமானத்தை உறுதிப்படுத்த
வாழ்வு மீண்டும்
வர்ணச் சாணத்தால் நாற்றமெடுக்கும்


அதுவும் பேரானந்தமென்றும்
பேரவாவென்றும்
பாரீசிலும்,இலண்டனிலும்,ஜெர்மனியிலும்
தேரிழுக்கத் தெருப் பார்த்துத்
தமிழரைப் பிடுங்கும் ஒரு கூட்டம்


நேற்றிக் கடனென்று
நெருப்பில் வெந்த சில்லறைகளைக் காவு கொடுத்துத்
தலையில் குட்டு வைக்கும் சீமாட்டியாய்
அகதிப் பெண்டிரும் அய்ரோப்பியத் தெருவில்...

அழிவார்!

ஆறறிவு படைத்ததாய்ச் சொல்லும் அதே பொழுதில்
அடுப்பெரிக்கும் மரக்கட்டையாய்
பார்ப்பானின் காலடியில் சாம்பலாய் மாற
மடி கனக்கும் அவனோ
மாளிகைகள் கட்டி
நடுவீட்டில் ஊஞ்சலில் தவமிருக்கும் பொழுதாய் காலம் நகர


நாமோ இதழ் வெடிக்கும்
பனிக் குளிரைக் குடித்து
விரல் விறைக்கத் தெருக்கூட்டிய பணத்தில்
பார்ப்பானுக்குப் படியளக்க
பாரீசில் தேர்ப்பவனி வருகிறார் கணபதியார்,
காம் நகரில் அம்பாளில் கலையேற
இலண்டனில் ஈழேஸ்வரர் வருடத்துக்கு ஏழு இலட்சம் பவுண்களை
ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க
எடடா சாமிக்குப் பிரதட்டை என் தமிழா!


ஜனநாயகம்
25.09.2006

Dienstag, September 05, 2006

நில்லாத யுத்தம்.

நில்லாத யுத்தமும்
நினைவகற்றிச் செல்லும் ஈழமும்
சொல்லப்போகும் சேதிகள் என்னவோ?

"......................................."

யுத்தங்கள் வழமையாகவே,
அழிவும்-சாவும் வழமையாகவே...
எனினும்
தந்திரங்களும்,அரசியல் சூதாட்டமும் வழமையாகா!
இதுள்
(தமிழ்) மக்களின் தனியுரிமை-தாயகம்
பொய்மையாகி
அந்நியப் புழுதிக்குள் அழிந்தே போகும்
ம(க்)களின் அழிவைப் போலவே!!


இந்நிலையிலும்
வல்ல பல தமிழ்க்கிழ அரசியல் சகுனிகளும்
அற்பச் சலுகைகளின் பின்னே
அவசரப்பட்டுப் போகின்ற அடியாட்படைகளும்
ஆட்டிப்படைக்கும்
அற்ப ஊடகங்களும்
அப்படியே அடிவருடிக்கொண்டு
ஐயோ "மக்கள் பாவம்"
அமைதி
சமாதானமென்ற அழகிய வார்த்தைக்குள் அழிவைப் புதைத்து
"அட நம்ம ஈழத்தின்" சமாதியில் தவமாய்க் காத்திருக்க,

ஐயா அ(இ)ராஜகபக்ஷ
அடியாய்ப் போடுறார் குண்டுகள் தூக்கித் தமிழரின் தலையில்,
அக்கம் பக்கமும்
திரண்டவருக்கு அள்ளிக் கொடுக்கும்
கொள்ளிக்கட்டைகளால்
எரிவதென்னவோ தமிழர்தம் மனங்கள்தான்!


நித்தமொரு வேட்டு வைத்து
நிதானமாய்த் தமிழர் உரிமையை அழித்துப்
புலிகள் போட்ட முடிச்சும்
அவிழ்த்துப் பார்க்கும்"ஆரிய"தந்திரமும்
கந்தைத் துணியாய்"சமஷ்டி"க் கதையோடு
காரியத்துள் மூழ்க
நித்தமொரு குண்டு சத்தமின்றிக்
காவி வருவான் பாகிஸ்தானின் பங்குக்கென்று!
இதுவும்
அமெரிக்க மாமாக்களின்
மலட்டுத் திமிருக்குத் துணையாய்...

எத்தனை உயிர்கள் அழிய
எத்தனை மனைகள் இடித்து
எத்துணைப் பிஞ்சுக் கரங்கள் உடைத்து
எத்தனை இரணங்கள் எங்கள் தேசத்துள்?


கஞ்சிச் சிரட்டை காவிய தாத்தா
கபாலம் பிளக்க
தேசத்தின் மடியில் வீழ்ந்து கிடக்க,
பெற்றவள் முலையும்
பிறப்பின் வாசலும்
குண்டறத்துத் தசையும் நாருமாய்
இரும்புத் தொப்பிக்குள்!

இனியும் கதைகளைப் பேசி,
இனிதே இந்திய தரகுக்கு
இளிக்குது சிலதுகள் பற்கள் குருதிசொட்ட
இந்தப் பிசாசுகளின்
முந்திய வினையோ"சவுக்குத் தோப்பு"என்று சா பிணத்தோப்பாய்...
"........................."

எத்தனைகோடி
இழிவுகள் செய்து
"இந்திய" இதயம் மகிழ
இவர்களாற்றும் செஞ்சோற்றுக் கடனுக்கு
எங்கள் மக்கள்தம் எத்தனை தலைகள் உருளும் இன்னும்?

05.09.06

Donnerstag, Juni 29, 2006

வீணவன் :புலித் தலைவன்!

வீணவன் :புலித் தலைவன்!


அல்லும் பகலும் ஆர்த்தெழும் உணர்வு மேவ
முன்னும் பின்னும் பேரி னப்-சிற்றின,ஈனப் படைகள் சூழ
கையடைப் பொருளாய்ப் போனவீ ழம்
குருதியால் நிலங் கழுவி கண்ணீர் மல்கும்.


தாய்மைப் பெருந் தாலாட்டு குரல்வளை தெறித்தொ துங்கும்
கருவில் குண்டடி, காலில் மிதிவெடி-
காணுமி டமெல்லாம் மனிதத் துண்டம்!
சொன்னால் செய்வதற் கொரு சாவுக் கூட்டம்,
சகதியாய் குருதிச் சேற்றில் மக்கள் கூட்டம்!!


இதைப் பார்கொள்ளாது,பரதவிக்கும்.
ஈழவர் நள்ளார்,தினம் நலிவர்.
ஊனின்று றங்கும் பச்சிளம் பாலகர்கள்,
பாதைகளி ன்றிக் காடுடை யானார்.


போர் வினை செய்யப் பெற்ற நாட்டில்
கண்கொடு ஜனநாயகம் பிறப்பின் கடை.
விழிவிற்று கோலாச்சும் வீணவன் தன் புகழ்
பாடிடும் துன்னலர் கூட்டமாய்ச் சில தமிழ்ப் பாலகர்



இதுள் எம்மவர் சிலருக்கு பாரத-அமெரிக்க நலனில்
காதல் முதிரக் கருத்து அழிந்தார் ஆம்!
அன்னார்கள் சுனாமியில் சேர்த்ததையும் சுத்தி,
தீர்வுப் பொதியையும் தின்று, போரைத் தொடர்ந்தாலும்-
நள்ளாதி ந்த ஈழ நானிலம்!!


மொழியிழந்து துப்பாக்கியடைப் பொருளாய்
வாழ்வி ழந்து வனப்பி ழந்து-வரும்
பாதகர் வால் பிடித்து பிழைத்திடவோ போர் வாழ்வு?
புலிகளின் தாகம் இதுதானோ எம் புண்ணிய தேசம்?


தமிழர்கள் பார் அளிப்பார் ஆவதெ ப்போ?
புகல் தமிழர் நாடு உறைவார் ஆவதெ ப்போ??
அன்னை பொங்கிய சோறுண்டு அகம் மலர்ந்து-
துகில் வதெ ப்போ???
எம் அக விளக்கு ஒளியெ ழுப்பி நிமிர்வதெ ப்போ????

ஜனநாயகம்
29.04.06

எதற்காகப் பெண்ணே?

எதற்காகப் பெண்ணே?

தாய்மையின் சோகத்தை
தனதாக்கிய தேசம்
தரையில் தலையைத் தெறிக்க வைத்தது!

கற்பையில் குண்டெறிந்து
தேசமொன்று விடுதலைக்குப் போராடுகிறதாம்.

தேசத்தின் விடியலொன்று
தாய்மையைக் காவெடுத்து
கருகிச் சாம்பலாகிய உடலோடு சல்லாபித்தது!

தேசியம்,
தேசம்,
மொழி,
பண்பாடு,
இனம்...

பிணம்
புசித்துப் பசியாறும் பொழுதுகளாய்
பொய்யுரைத்துப்
பதுங்குழிகளுக்குள் தாயொருத்தியின்
கருப்பையில் இவற்றைத் திணிக்க
தேசமெங்கும் குருதியாறு
குழந்தைகளின் குரல்வளைவரை
நிறைந்து வழியும்.

எப்போதோ ஓர் நாள்
அவர்களின் மூச்சை முழுமையாகக் காவுகொள்ளும்
இன்னொரு
சுனாமியாகக் குருதி அலைகள்
என் தேசத்தை மூழ்கடிக்கும்!

எந்தப் பொழுதினும்
உயிர் வாழாதிருக்க எவராவது விரும்புவாரோ?

இது எப்படி?

மண்டையைப் பிளந்து
பிழிந்தெடுத்த மூளையை உலர்த்தி,
பிசாசுத் தனமான
விசமத்தனங்களை வினையாக்குவதும்,
விடுதலையல்ல!

வேதனை!

தாய்மையைக் கொச்சைப்படுத்திய
தேசியம்
சூறையாடப்பட்டவொரு வெளியில்
உன்
சிதைவுகளுக்குள்
ஓராயிரம் கேள்விகள் எழலாம்!

கூர்மைப்பட்ட குரல்களாய்
மக்கள் விழிதிறந்து
கரங்களைப் பிணைப்பதற்காகவேனும்
உன் சிதைந்த சிரசுபற்றிக் கதைத்தாக வேண்டும்.

எதற்காக?

பொய்மைப் பொழுதுகளால்
போர்த்தப்பட்ட யுத்த தேசம்
விடுதலை,
சுதந்திரமென்பதெல்லாவற்றையும்
தேசியத்தின் கோவணத்துள் வீசியெறிந்தது.

ஒவ்வொரு தமிழரும்
கோவணத்தைக் கட்டியதும்
தன்னளவில் தேசியம் அரிப்பெடுத்து
மனிதத்தைச் சொறிந்தது!

தேசம் நடுத்தெருவில்
தாய்மையைப் பறிக்க
புதல்வர்களைத் துப்பாக்கியுடன் நிறுத்துகிறது!

ஜனநாயகம்
27.04.06

தமிழீழம்:மாகாணமாகிறது!

தமிழீழம்:மாகாணமாகிறது!

இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவனெவனோ தமிழ் மக்கள் நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்,எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு ஊர்வலம் எடுக்கிறார்கள் சிலர்.பலர் எழுக தமிழ்-பொங்கு தமிழ் எடுக்கினம்.பாதிக்கப்படும் மக்களோ ஒரு நேரக் கஞ்சிக்குப் பேயாய் அலையும் நிலையில். என்னதான் இந்தச் சனத்துக்கு விடிவு தரும்?

தமிழீழம்!-புலிகள் அப்பப்பச் சொல்வதும்,பின்பு அடக்கி வாசிப்பதும்.


மாநில சுயாட்சியும்-மத்தியில் கூட்டாட்சியும்!-டக்ளஸ் உரைக்கிறார்.


இந்தியாவோடு பஜனை பாட புலிகள் உட்படக் காத்திருக்கும்போது,இந்தியாவோ இன்னும் மாகண சபைக்குள் கனவு காணுது.அதுக்காக ஐயா ஆனந்தசங்கரி பலமாகக் காய் நகர்த்துகிறார்.இந்தியா ரொம்பத்தான் தெம்படைகிறது.

புகலிடத் தமிழர்களைப் புலிகள் ஒருபுறம் சுரண்ட மறுபுறம் இலங்கைச் சிங்கள அரசும்,இந்தியாவும் கூடவே அவர்களின் நம்பகமான கூட்டாளிகளும் மூளைச் சலவை செய்வது கண்கூடாக நடக்கிறது.

அப்பாவி மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு அவர்களின் கல்லறையில் கட்டுண்டு அழுதபடி...

இவர்களுக்கு வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பு.

அரசியல் நடத்துபவர்களுக்குத் தமது பதவி,சுகம்,பணம் இயக்கம்-கட்சி என்ற எதிர்பார்ப்பும் மக்களை அடக்கி ஆட்சி புரியும் கனவும்.


இதை எப்படி அனுமதிப்பது?

இன்றைய இலங்கை அரசியலில் பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெறத் துடிக்கின்றன.

அன்றாட வாழ்வில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அராஜகச் சூழலை-இயக்கப் பயங்கரவாதத்தை,புலிகளின் தனிகாட்டு ராஜாங்கத்தை,மற்றைய ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தைப் பாரிய அளவில் தூண்டிவிட்டுச் சிங்கள அரசு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனையை நீற்றுப்போக வைத்துள்ளது.இன்றைய உடனடிப் பிரச்சனையானது இனப்பிரச்சனையல்ல,சுயநிர்ணயப் பிரச்சனையல்ல மாறாகப் புலிகளின் அடக்குமுறையே தமிழ் மக்களின் பிரச்சனையென்று உலகத்துக்குக் காட்டும் இராஜதந்திரத்தில் இந்தியாவும்,இலங்கையும் மெல்ல வெற்றி பெற்று வருகின்றன!

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்பவும் நிராகரித்த இலங்கையின் ,இந்தியாவின் ,அமெரிக்காவின் விருப்பமானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.ஒவ்வொரு தமிழ் மாவட்டங்களிலும் பற்பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.தமிழ்ச் சமுதாயத்தில் பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இந்தியாவின் இராஜதந்திரமானது முதல் தடவையாகப் புலிகளின் படையணியைப் பிரித்தெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வெறும் குறுங்குழுவாக்கும் தந்திரத்தைக் கொண்டது.இந்தத் தந்திரத்தை வெகுவாகக் கடைப்பிடிக்க முனையும் இந்தியா வருங்காலங்களில் இந்தப் பிரச்சனையைத் தூண்டி வளர்த்தெடுத்துக் காய் நகர்த்தும்.தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான பிரச்சனையை முற்றுமுழுதாகப் புதைத்துவிடும் அரசியல் காய் நகர்த்தலே இனிமேல் வலுவடையும்.அதற்காக இந்தப் பிரச்சனை இன்னும் இழுத்தடிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு வருடங்கள் பல கடக்கப்படலாம்.இப்படிக் காலம் கடக்கும்போது புலிகளின் மறைவு நிச்சியமாகும்.இன்றைய சூழலில் மங்குகாலத்தில் இருக்கும் புலிகளின் அமைப்பாண்மை காலம் செல்லச் செல்ல இன்னும் மங்கும்.

இதைத் தடுப்பதற்கான புலிகளின் எந்த இராஜதந்திரமும் உலக அரங்கில் செல்லுபடியாகாது. போரைத் தொடங்கி,தமது அமைப்பாண்மையையும்,படையணியின் உளவியலையும் தெம்படைய வைப்பதற்குப் புலிகளுக்கு அவசியமாகும்.ஆனால் இந்த உபாயம் அவர்களின் தற்கொலைக்கு வழி சமைப்பதில் முடியும்.எனவே இந்த வழியும் இறுக மூடிக்கிடக்கும்போது அவர்களிடம் பேரம் பேசல் மட்டுமே மிஞ்சிக்கிடக்கிறது.

இந்தப் பேரம் பேசலுக்காக முந்திய பாதை போன்ற திடகாத்திரமான சூழல் அவர்களுக்கக் கிடையாது.கருணாவின் பிளவுக்கு முன்னிருந்த அந்த ஆளுமை புலிகளுக்குக் கிடையாது.இந்த இறுக்கமான சூழலானது புலிகளின் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் எந்தக் காய் நகர்வையும் அவர்களுக்குச் சாதகமாக்கமுடியாது போகும்.இதைப் புலிகளின் பின்னாலுள்ள அவர்களது எஜமானர்கள் நன்றாக உணரத்தலைப்பட்டுள்னர்.எனவே நோர்வேயிடம் பணத்தை வேண்டித் தமிழ் மக்களின் உரிமைகளை அடைவு வைத்து அமெரிக்காவின்,மேற்குலகத்தின் நம்பகமான அடியாளாகப் புலிகள் மாற்றப்பட்டு வருவதில் இனிவரும் காலம் தொடரும்.இந்தியாவைப் புலிகளோ அன்றி இந்தியா புலிகளையோ ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை.இந்த நிலையில் மேற்குலகைச் சாரும் புலிகளை தமிழ் மக்களிடம் அம்பலமாக்கித் தமிழ் மக்களுக்குள் பழைய பெரிச்சாளிகளை ஜனநாயகச் சக்திகளாக்க முனைகிறது இந்தியா.இதில் இந்தியாவின் இந்த வியூகம் வெற்றி பெறும் தறுவாயிலுள்ளது.

இத்தகைய அரசியல் காய் நகர்வில் புலிகளின் கோரிக்கைகளை ஆளும் இராஜ பக்ஷ அரசு ஒருபோதும் செவி சாய்க்காது.இந்தியாவின் இலக்குப்படி இதை இழுத்தடித்துவருவதற்காக பேச்சு வார்த்தை அங்கே-இங்கே என்று நகரும்.இத்தகைய தரணங்களில் சிங்கள இனவாதச் சக்திகளைக்கொண்டு புலிகளுக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் எதிராகத் தூண்டிவிட்டு பாரிய எதிர்ப்பைச் சிங்கள மக்கள் மத்தியில் தூபமிடும் இந்தியா! தமிழ் மக்களுக்கு அற்ப சலுகையும் கிடைக்காத சூழலை உருவாக்கி விடும் இந்தியா, புலிகளையின்னும் பலவீனப் படுத்தும் பாரிய கருத்தியல் போரும்,மென்மை யுத்தமும் நடத்தும்.இதில் புலிகளின் முக்கிய பினாமிகள் கொல்லப்பட்டும்,கைதுகள் செய்யப்பட்டும்,புலிகளின் பொருளாதார வலு முடக்கப்படும்.இது சாத்திய மாகும் தறுவாயில் அவர்களது இருப்பு மிக மிக அரவமாகவேயிருக்கும்.இங்கே இந்தியாவின் மாகாண ஆட்சித் தீர்வுப் பொதியூடாக வன்னியிலும் யாழ்பாணத்திலும்,மட்டக்களப்பிலும்,திருகோணமலையிலும்,அம்பாறையிலும் ஒவ்வொரு எடுபிடிகள்' மாகாண ஆட்சியை' நடாத்துவார்கள்.அதில் வன்னிப் புலிகளின் பங்கும் உண்டு.சிங்கள மக்கள் இதற்கே வழிவிடும் நிலையில்லை.எனவே இதைப்பெறுவதே மேலென கருத்தியல் விதைக்கப்பட்டு அதை சாதிப்பதில் இந்தியா வென்றுவிடும்.


அப்பாவி மக்கள் மீளவும் கொட்டாவி விட்டு,இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.

இதுதான் புலி அரசியல் தந்திரம்.இதை மீறிய வாழ்வு தமிழ் பேசும் மக்களுக்கு இனி வருவது பகற்கனவே.மாநிலமும் இல்லை,தமிழீழமும் இல்லை!மாறாக மாகாணமென்பதே இந்தியாவினதும்,அமெரிக்காவினதும் விருப்பாகும்.இங்கே இதைச் சாதிக்க சிங்கக் கொடிகளுடன் தமிழ்க் கூலிகள் தயாராகி வருகிறார்கள்.புலிகளும் தனது கூலியை நோர்வேயூடாகப் பெற்று> தனது வாலை மேற்குலகுக்கு ஆட்டுவதில் கரிசனை காட்டுவதால் இனிவரும் காலம் இந்தியாவுக்கே வெற்றியைத் தேடித் தரும்.இதுவே பூகோள அரசியலின் விதி.இதைத்தாண்டி மேற்குல எஜமானர்கள் புலிகளுக்கு விமோசனமிட முடியாது.

ஜனநாயகம்.

18.10.05

அம்பலத்தாவது!

அம்பலத்தாவது!


இப்போதெல்லாம் உறவகள்
திடீர்,திடீரெனப் பிறக்கும்-இது
உயர்ந்த அன்பளிப்போடு
விழிபார்த்துப் புன்னகைத்து
உருகி மொட்டவிழ்க்கும் இதயங்களோடு
கசிந்து கண்ணீர் மல்கும்

நேற்றையவுறவும்
இன்றைய கூட்டும்,கும்மாளமும் புதிதல்ல
ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை
நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை

இது
இங்கு புதுமையாக
அங்கும் புதுமையாக...

அம்பலப்படுவது
அவர்களில்லை
இவர்களது தாகம் ஒப்பற்ற விடுதலையானால்
ஒருக்காலும்
ஒய்யாரமிக்கதான'சொகுசுப் பயணத்துக்கு'
எதிரியின் காலில் எச்சிலூறும் நாவைப் பதித்திருக்கார்

அப்போதெல்லாம்
நோட்டீசு ஒட்டியதுகளும்
உணவு பரிமாறியதுகளும்
பயங்கரவாதிகளெனப் பிடித்து விலங்கிட்ட அரசு

உலங்கு வானூர்த்திகளில்
உருவப் பருமனுடைய பெருக வாழ்ந்து
வெளியுலகைத் தரிசித்தவர்களையும்
கைகோர்த்துக் கொண்ட கண்ணிய வா(ள்)ன்களையும்
விலங்கிடாது வழிவிட்டது சிங்கள நண்பர்களாக

ஸ்ரீலங்கா ரத்தனா
இப்படியாக நம்மவரை
வந்தடைந்தது-
கொடுத்ததை
அப்படிக் கொட்டியது அரசு


கூட்டத்திலிருந்த
குரங்கொன்று வெளிக்காற்றால் அள்ளுண்டு போக
சுகத்தைக் குறைத்ததாய்ச் சில கிழங்கள்
கடைவாய் கிழித்து முனகியது அப்போ!

பாருங்கள்
இவர்களுக்கு
பசிப்பது தேசிய நலனாம்
மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!
தூ...

எழுக பிணங்களே,எழுக!

எழுக பிணங்களே,எழுக!

குருதிச் சேற்றில் புதையுண்டுபோகும் ஈழம் ,
தெருவேராத்துக் கம்பங்களில் தொங்கிய-தொங்கும்
தேசத்துச் செல்வங்கள்,

அடர்ந்த காடாய்ப்போன ஆத்தை படுத்துறங்கிய
அடுப்படியும் >முத்தமும்
அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும்
மானுடத்து எச்சமாக
எந்தத் துரும்புமற்ற ஈழத்துக் கிரமங்களும்,

போராளிக்குச் சோறுபோட்ட குற்றத்துக்காகவும்
நோட்டீசு ஒட்டியதற்காவும்
கூட்டத்துக்குப் போனதற்காகவும்,
போராடப் போனதற்காகவுமாக
சிறைகளில் இன்னும் இருண்டு பட்டுக் கிடக்கும்
ஈழத்து மனிதர்களும்
வாழ்விழந்து வதைபடுகையில்...

புறுசிலிலோ
கோவிலுக்குக் காவடி தூக்கிய பழக்கதோசத்தில்
ஒரு சிலரின் கரங்களில்
ஒரு முகமூடியும்
சில கோவணத் துண்டுகளுமாகத் தமிழரின் உரிமை
தெருவில் உலாவிக் கொண்டிருக்க,


சில தலைகள் மட்டும்
எதையோ தவப்பயனாய்ப் பெறுவதாகச் சொன்னர்கள்
தேசத்தின் கோவணம்
நாளைய தினம் (உலகக்) கம்பத்தில் பறக்கமுனையுமாம்


எந்தப் பொழுதிலும்
நமது கனவுகளுக்குக் கால் முளைக்கவில்லை!
இறக்கையேந்தித் தலை குத்தி வீழ்ந்த
ஈழத்துக் கனவு
மெல்ல இடம்பார்த்து மூலையைப் பிடித்தது.



இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடைபுணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதுக்காகப் பல வர்ணக் கோலங்களுடன்!


இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் பல் முனைகளில்!


ஏகத் தலையோ உலகத்து வீதிகளில் உலா வந்தபடி...
மக்களின் சில்லறைகளைத் தட்டிப் பறித்த சில அண்டங் காகங்களோ
எழுக புண்ணாக்கு,ஏந்துக தவைர் படம் என்றபடி
தெருவோரப் பிணக்குவியல்களோ
ஏதோவொரு கனவான்(ள்)கள் படையலாக
துர் நாற்றமெடுத்துத் துயில்கின்றன ஈழமெங்கும்!


இப்போது
ஏதோ எழுவதுதான் பாக்கியாம்!
மிச்சசொச்சத் தலைகளையும்
உருட்டியபடி.


கொட்டிய குருதி உலர்வதற்குள்
வழித்து நக்கும் நாய்கள்
நாக்கைத் தொங்கப்போட்டு
நடுச் சந்தியில் காத்திருக்கிறது
ஈழத்தின் பெயரால்...


26.ஒக்டோபர் '05

(வி)தேசியப் பண்

(வி)தேசியப் பண்

மக்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
துரத்திய கையோடு
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும் உச்சத்தைத் தாண்ட
ஈழத்துப் பண்ணில் மக்களின் பங்கைத் தேடுகிறாராம்!

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும் தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் 'தேசியப் பண்'!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!
ஈழமென்ற கனவின்
நனவாய்'தமிழீழம்'தேசியப் பண்ணோடு
தெருவெங்கும் 'தேசியத் தலைவராய்' தோரணமிடும்

இத்தனை நூற்றாண்டுப் புரிதலும்
இந்தத் தமிழரை எட்டா!

கட்டை விரலை வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற மயக்கம்
மக்களில் சிலருக்கு.

சொல்வாருக்குப் புத்தியும் போச்சு
கேட்பாருக்குச் சிரிப்பும் ஆச்சு!


உலகத்துப் பண்களில் ஆய்வும்வேறு


அற்பர்கள் அழித்தவை தேசத்து
மக்களை
வாழ்வை
பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை'பொய்மை'இவர் இறைத்திடினும்
எத்துணை'கொலைகள்'இவர் கரஞ்செய்கினும்
ஈழத்தின் பெயரால்
இடர் மறந்து
இறந்தனர் மக்கள்!

இதயத்தைத் தொலைத்த
துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி
'தேசியப் பண்'ஒலித்திடும்
கனவை மக்களின் மனதினில் விதைத்தும்
வழிகளில்'வெடிகளைப்'புதைத்து
பணத்துடன் ஓட
பொழுதுகள் பார்த்து...