Samstag, November 11, 2006

மழலைகளைக் கொல்லும்...

மழலைகளைக் கொல்லும்
மந்தைத் தேசம்!


மந்தைகளின் விந்தை மிகு தேசம்
உயிர்த்திருப்பவரை தறித்தெறியும் எந்தப் பொழுதிலும்
இருப்பவரென்றும் இழப்பவராய்
இதயம் தொலைக்கும் இலங்கை மகாவம்சம்


இதற்கும் மக்களாண்மை
மனிதாபிமானம் ஜனநாயகம்
அதன் முதுகில் சோஷலிசக் குடியரசு வேறு
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம்போன்று...


நாற்று நட்ட விரல்கள் நன்னீரில் விரல் நனைப்பதற்குள்
நட்ட பயிர் களைந்தெறியப்பட்ட வயற்பரப்பைப்போல்
தறித்தெறியப்படும் ஒவ்வொருவுயிரும்
இந்தத் தேசத்தின் எதிர்காலக் கனவுகளன்றோ?


எந்தப் பக்கம் திரும்பிடினும்
மானுடரைப் புசித்திடும் நரிகளாய் அரசியல் மாபியாக்கள்
நல்ல மனிதர் வேடமிட்டு
நடுத்தெருவில் குருதி குடிக்கும் கனவோடு


கொடுங் கரங்கள்
நல்ல வேடமிட்டு நற்கரங்களாயும்
தேசத்தின் அதியுத்தமத்துக்கும்
நன்றிக்கும் பாத்திரமுடையதாகப் பேசப் படுகிறது!


பக்கம் பக்கமாய் வரும் நாளிதழ்களும்
பக்குவமாகப் பரப்பப்படும் வார்த்தைகளும்
பாதகஞ் செய்யுமிந்தத் தேசத்தைப் பார்போற்றும்
தேனொழுகும் தேசமாயும் சொல்லச் சில வானொலிகளும்
போதாக் குறைக்கு மக்களின் விழிகளைச் செவிகளைப் பாழாக்கியபடி


ஒரு தேசத்தைத் தாகமாக்கிய தம்பிமார்களும்
தவறிப்போன மந்தைகளில் ஒன்றாய்த் தடுமாறிய பொழுதொன்றில்
எவரிடமோ ஏந்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாய்
சமாதானம் பேச யுத்தத்தில் மூழ்கிக் கிடக்க


மூச்சுவிட வழியற்ற நிலப்பரப்பில்
ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்த் தினமும்
குண்டடிபடும் அந்த"மக்கள்"
எந்தத் தேசத்தையும் கனவுகண்டதாக எவருமுரைக்கார்


சொல்லச் சொன்னபோது சொன்னதைத் தவிர
அடிக்கச் சொன்னபோது அடித்ததைத் தவிர
வேறெந்த விசேஷமும் கைக்கெட்டாத
தரித்திரத்தின் வாரீசுகள் வதைபடும் தேசமிது


இருந்தும்,


புத்தன் வந்த புவியென்பார்கள்
புடுக்கர்கள் செய்யும் போருக்கு
புத்தரின் போதனையும் நன்னாட் குறித்தொதுங்கும்
பொல்லாத தேசமிது!!



ஜனநாயகம்

10.11.2006, மணி:23.58

Keine Kommentare: