Freitag, Dezember 22, 2006

எரி பிண்டம்.

எரி பிண்டம்.

தெருக்கோலம் நீக்கி
வீட்டின் முற்றலில் குருதியுறைந்த பிண்டம்
நாயின் எச்சில்பட்ட கறியாக
அடுப்பின் எரிதணலில் மெல்ல வெந்து
மூக்கின் துவாரத்தில் துளையிட்ட
எரி நாற்றம் மெல்ல அடங்கினும்
மோவாய் நக்கிய பெருவெளியில்
துருவத்துக் குளிர்ச்சி

திசையிழந்த பெருவெளியில்
தவமிருந்த பருந்துக்கு
பசியடக்கச் சிரமறுத்த கொக்குகளும்
ஒரு தவப்பயனாய்க் கூடிய கரி நாளொன்றில்
மலம் கழிக்கவுண்ட நிணமும் உருக
கடவாய் பிளக்கப் புழுக்கள் நெளிய
பற்களின் கோரத் தாண்டவம் தொடர் கதையாக...

மலை முடுக்கில் திரண்ட நீர்கூத்து
ஏழு தலைகளையும் தாண்டிப் பற்றைத் துவாரத்தால்
பாக்கியம் செய்தது
பெருங்களிக் கூத்தொன்றில்
கழைக்கூத்தாடி புணர்ந்தொதுக்கிய சிறு குழியும்
பெருக்கெடுக்க மறுத்து முனைவீங்க
முக்காலத்துக்குமான எண்ணிக்கைகள் உயர்ந்தன மெல்ல

ஒவ்வொரு தானங்களும்
சுமை காவும்
சிறுகாட்டில் பெரு நரிக்கு ஒப்பாரி
ஊருக்குள் ஊளைச் சத்தம்
உறக்கம் கலைத்த கணமொன்றில்
நரகத்தின் குரல்வளை நீண்டன நெடில்வீசி
ஊர் மேயும் தெரு நாய்கள் புடை சூழ

எட்டிப் பிடித்துவிடாலாமென்ற
வானத்தின் பொய் முகட்டில்
நெய் வடியுமென்று நெடுநாட் தவமிருப்பும்
சொல்லித் தெரியாமலே உணர்வுத் தெறிப்பில்...
பல்லாக்குத் தூக்கிகளின் எச்சில் நாவும்
எரி நாற்றம் தாங்காச் சோர்ந்தொதுங்க
ஒரு குவளை நிறைந்த இச்சைப் பேய்கள்
வெற்றொலியுள்; அர்ச்சனை பண்ண
புழுக்கள் நெம்பிச் சாக்கடை கண்டன

தெருக்கோலம் கீறிக் கிடப்புக்குப் போட்ட
உலக்கையின் அடிவயிறு உப்பிக் கொண்டேயிருக்கு
மற்றைய பொழுதொன்றில்
எரி பிண்டம் மலர் வதைக்கவும்
மடைதிறந்துருகும் மக்கர்களின் மனங்களில்
தீராத பிணி முற்றவும்
திசையிழந்த ஓலத்தையும்
தெருக்களில் நின்று மலம் கழிக்க!

ஜனநாயகம்
22.12.06