Donnerstag, Februar 25, 2010

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

புள்ளிகளும்,புரிதற்பாடுகளும்.


ரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகிறது. இந்தப் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில், மையப்படுத்தப்பட்ட சூழலின்பாலான எண்ணங்கள் மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

உறவுகள்.சமூகவாழ்வு
உணர்வுகள்-ஆன்மீக நிலை
வளர்ப்பு முறை-அகவுலகம்
சூழல்-புறவுலகம்
சடங்கு மனித நிலை-புனைவுசார் உலகம்
பொருள் வாழ்வு-குவிப்புறுதியூக்கம்
மனித நிகழ்வு-படைப்பாற்றல்
புள்ளிகள்-இருப்பு


இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.

இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.

தாய்மையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் மைந்தன் அவளது மூலத்தை அறியமுனைகிறான்.தான் பலரிடம் பெறும் "இன்ப"த்தைக் குறித்து மௌனித்தபடி தாயைப் புணர்வதில் எவனது இருப்பையோ உறுதிப்படுத்த எவனோ முனைவதில் எதிர்பால்வினைக்கு இலாடன் கொண்டு திரிபவன் தன்னைத் தொலைத்துவிட்ட அடுத்தவன்,அடுத்தவள் முலையில் எவனது பற்தடமுண்டென மோதித் திரிகிறான்...

மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.

உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.

தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரிப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

தம்பி,அண்ணா,அக்கா,தங்கை என ஏதோவொரு புள்ளிகள் தன்னிலைகளாக எனக்குள் அங்கீகரிக்கக் கோருவதில் நான் முழுமையுறுவதாக எண்ணும்போதே அவை தகர்கின்றன.தாய்மையின் "கற்பு"பரிசோதனைக்கூடமாக முடியுமா?அந்தப் பரிசோதனையில் பட்டம்பெற முனையும் தனயன்களோ ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியையே அறிந்துகொள்ள முடியாத தற்கொலைத் தன்னிலைகளாக இருத்திய தமது வெளிகளை நெருங்க மறுக்கும் தருணங்களில் இவர்களுக்கான"தெரிவுகள்"என்ன?


தேசம் என்பது"தாய்மை"என்ற பொருளில் அவள் எப்போதோ "கற்பு"அழித்த பெண்மையுள் போதர்கர்களான "ஆண்மை"யின்நெடிய அடிவாரத்துள் மெலினப்பட்ட குரல்களாக உருக்கலைக்கும் சந்தர்ப்பம் தற்செயலானதில்லை!நிலைத்திருக்கமுனையும்"ஆண்"தன்மை எத்தனை வன்மத்தையும் தனது குறியினது மத்தியில் துயிலுரிக்கும் பெண்மை துடித்துக்கொண்டிருக்கும் வெளிகளுக்குள் நானும் கருவுற்றதென்பதில் எனக்கான இருப்பு நியாயம் அடைகிறது.இது,புனையப்பட்ட உலகத்துள் "அங்கீகாரத்தை"வலியுறுத்தும்போது தனது மேன்மைகளை அவற்றுள் இனங்காணுவதில் சுயதிருப்த்தி அடைகிறது.

இங்கே,அடையாளம் என்பது என்ன?

பொருண்மிய மேம் பாடென்பது எந்தப் புள்ளியையும் விட்டு வைக்காதாவொரு வெளியுள் எனது "அங்கீகாரம்"என்பதே அபத்தம்.

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.02.2010

(கீரிமலையில் கரையும் எனது புள்ளிக்காக).

Donnerstag, Februar 18, 2010

செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு

நான்று நில்


வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது

மெல்லத் தூறிய வானம்
நெடிய தொலைவை அணைத்தபடி அருகினில்
காண மறுக்கும் காற்றும்
கையளவே ஆன பொழுதும் வருத்திய மலரும்
விறைத்திருக்க எண்ணியதில் வியப்பு என்ன?

பட்டு விலகும்உறை பனியாய்
உதிரும் தொப்புள் கொடி
உணர்வைத் துண்டிக்க நெடிய போரில்
பாசவலை போர்த்த இதயத்தின் பாழ் வலியில்
எச்சிலாய்ச் சொரியும் அன்னையின் நினைவு

அப்பப்ப அசையும் நினைவு முறிக்கும் காலம்
அள்ளிய சுமையில் கிள்ளிய பாவம்
தொடரக் காத்திரும் சிறு கோட்டில் நடை பயிலும்
நாளைக்கு நஞ்சு வைக்கும் எனது இருப்பில்
பட்டு விலகும் உயிர் திசையறியாக் கனவில்

ஊருக்குள் தீ வைக்கும்"அங்கிகாரம்"
உறங்க மறுத்த எனது குருதிக் கொதிப்பில்
நலிந்துபோன உறவுகளாய் முடிச்சிட்டுக் காலத்தில் தொங்க

கண்ணீர் கரைந்து கடு மனதாகும்
எல்லாப் பொழுதுகளிலும் நல்லானாய் இருக்க
நான்றுகொண்ட விதிக்குச் சுயம் இருக்கு?

தெருவோரம் ஊர்ந்துபோன புழுவுக்கு
காகத்தின் இரைப்பையில் சுவர்க்கமெனப் பலிப்பீடம்
போரென்ன புண்ணென்ன புகல் வாழ்வு என்ன
பொய் உணர்வாய் பொருளிழந்த புறம் போக்காய்ப்புவி வாழ்வு

செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு
சுகம் கேட்க ஏது நியாயம்?

மாறுவேடம் புகலுமொரு மணவாழ்வில்
மருமகளுக்கு பாடம் உரைக்கும் மாமாக்கள்
அண்ணாவுக்குத் தங்கை மறுத்து மருமகளெனக் கொள்ள
மயிரென்ன மாமாவா?

வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது...


ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2010

Freitag, Februar 12, 2010

மகிந்தாவினது ஆட்சிக்காலம்...

மகிந்தாவினது ஆட்சிக்காலம்:மகத்தானதும்,மர்மமானதும்!
 
ன்று பேசப்படும் பொருளற்ற வார்த்தைகள் இலங்கையின் அரசியலினது இயங்குதிசையொட்டிய பலரது கேள்விகள்-எதிர்பார்ப்புகளென உணர்ச்சி வகைப்பட்ட நோக்கு நிலைகளாகவே இருக்கிறது.இதைப்பற்றிய புரிதலொன்று மக்களது அரசியல்-சமூகவாழ்வின் இருப்பிலிருந்து இதுவரை பேசப்படவில்லை.அப்படிப் பேசுவதற்கான நியாயம் எவரிடமும் இல்லாதிருக்கும் இன்றைய கட்சிசார் அரசியலில் இத்தகைய ஓட்டுக்கட்சிகள் தமது எதிர்காலம்-கட்சியின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பில் நிலவும் அதிகார மையங்களுக்கு அண்மித்த அரசியலையே கொண்டியங்குகின்றன.இதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கூட விதிவிலக்கற்றிருக்கிறது.
 
இத்தகைய நிலையில்,புலிகளால் நியமிக்கப்பட்ட எந்தவொரு உறுபினருக்கும் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்"இடங்கிடையாதென்றும் ஆர்.சம்பந்தன் அவர்களால் சொல்லவும் முடிகிறது.ஆனந்த சங்கரிக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறிய தமிழர்விடுதலைக் கூட்டணியானது புலிகளாற்றாம் "தமிழா தேசியக் கூட்டமைப்பு" என்று கட்சியுருவெடுத்தது.

என்றபோதும்,சம்பந்தன் மேலே குறித்தவொரு அரசியலது தெரிவில் இங்ஙனம் பேசிவிடுகிறார்.இதுதாம் இன்றைய இலங்கையினது அரசியல் இருப்பு.
 
இராஜபக்ஷ குடும்பத்தினது அரசியலை வெறும் சர்வதிகார அரசியலாகவும் குடும்பப் பாசிசச் சேட்டையாகவும் இனங்கண்டுவிடலாம்.ஆனால்,அதன் பின்னால் மையங்கொண்ட அரசியலை உள்வாங்கும்போது இலங்கையினது இருபெருங்கட்சியினது பின்னால் அணிவகுத்துள்ள அரசியல் சக்திகளை மிக நுணக்கமாக மாறிவரும் பொருளாதார நிலமைக்குள் இனங் கண்டுகொள்ள முடியும்.
 
சிங்களச் சமூகத்தின்முன் மகத்துவம் பெறும் மகிந்த ஆட்சி:
 
தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையில்வாழும் சிறுபான்மை இனங்களையும் சேர்த்து"இலங்கையில் சிறுபான்மை மக்களினங்கள் என்று எவருமில்லை"என்று மகிந்தா அடிக்கடி உரைக்கும்போது அது முற்போக்கான அரசியல் பார்வையாகவும்,நீதியானதாகவும் நாம் நம்புகிறோம். ஆனால், இங்கிருந்துதாம் மகிந்தாவின் ஆட்சி சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவம் பெறுகிறது.இது, ஒருவடிவிலும்-குறியீட்டு ரீதியாகவும் சிங்கள மக்கள் மத்தியல் வழங்கும் அரசியல் உள்ளடக்கமானதை மிக நேர்த்தியான இனப்பாகுபாடுடையதும்,ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதுமாக்குகிறது.எனவே,மகத்துவமான மகிந்தா சிந்தனை சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவமான தேசநலச் சிந்தனையாக மாறிவிடுகிறது.இதன் தயாரிப்பு ஆசிய மூலதனத்தின் அதியுக்தி நிறைந்த மூளையினது தெரிவே.
 
இதன்வழி தெரிவுகளாகும் இன்றைய கட்சிசார் அரசியலானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சிதிலமடைந்த வன்னிப் போருக்குபின் புலிகளின் அழிவோடு இன்னொரு திசைவழியை நோக்கிப் பயணிக்கிறது.அது,இனமுரண்பாடுகளை வெறும் பொருளாதாரவாதத்துக்குள் தள்ளி அதன்மீதான மூடுதிரை, நீறுபூத்த நெருப்பாக இனமுரண்பாட்டை வைத்திருக்கிறது.இது,மேற்குலகத்தினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் விருப்புக்குரிய சூழலென்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய அரசியல் அரிச்சுவடி.


 
சிங்களமக்கள் மகிந்தாவையும் அவரது ஆட்சியையும் மகத்தானதாகக்கொண்டு அவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாக்கியது தற்செயல் நிகழ்வோ அன்றித் திடீர் அரசியல் சூழலோ இல்லை.இது திட்டமிடப்பட்ட அரசியல்-பொருளாதார நகர்வுகளுடன் மிக நெருங்கிய வியூகங்கொண்டது.இந்த வியூகம் சிங்கள இனவாதிகளுக்கும் இனஞ்சார் பெருமையில் பௌத்தமதவாத அமைப்புகளோடு வாழமுனையும் பெரும்பகுதி மக்கட்டொகுதிக்கு உவப்பான அரசியலாக இருக்கிறது!
 
மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளான பொருளாதார நிலைமைகள் ஆசிய மூலதனத்துக்கு இசைவான சூழலாக மாற்றப்பட்ட மகிந்தாவினது கட்சி அரசியலில் சமூகவாழ்நிலை மக்களது உணர்வில் கொள்ளும் வகிபாகம் தமிழ்பேசும் மக்களது போராட்டத்தோல்வியிலிருந்து சிங்களச் சமுதாயத்தின் இருப்புக்கு நிகரற்ற தலைமையை மகிந்தா வழங்குவதாக நம்பப்படும் சமூக உளவியலாக மாறியுள்ளது.இது,அவசியமான அரசியல்சார் மக்கள் நடவடிக்கையை மக்கள் தட்டிக்கழிப்பதில் மையங்கொண்ட அரசியல் வாழ்வில், திடீரென ஜனாதிபதித் தேர்தலாக மக்களிடம் அண்மித்தபோது மகிந்தா இருபது இலட்சங்கள் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெனரல் சரத் பொன்சாகாவைத் தோற்கடிக்கிறது.ஆயுதரீதியாகக் களங்கண்ட ஜெனரல் மக்களோடு மக்களாக களங்காணப் புறப்பட்டபோது படுதோல்வியடைகிறார்(இத்தோல்வியானது தனிப்பட்ட சரத் பொன்சேகாவினது தோல்வி இல்லை.மாறாக, அவர் பின்னால் நின்றியக்கிய மேற்குலக மூலதனத்தின் தோல்வியாக இருக்கிறது).இது,மகிந்தா கட்சிக்கும் அவரது குடும்பத்துக்கும் சிங்கள மக்கள்கொடுத்த கௌரவமாகவும்,சிறுபான்மை இனங்களது பங்களிப்பு-ஒத்துழைப்பின்றிச் சிறீலாங்காவில் சிங்களப் பெரும்பான்மையில் ஆட்சியை தக்கவைக்கமுடியுமென முதன் முறையாகக் கற்பிக்கிறது.இது,ஆசிய அரசியலுக்கு மேலும் பலமான பல சாத்தியங்களைத் திறந்திருப்பது உண்மையானது. இதை முழுமையாக விளங்க முனையும் அமெரிக்க சார் நலன்களை மேற்குலகின் துணையுடன் முன்னெடுக்கும் மூலதனத்துக்கு மர்மமான அரசியலாக இருக்கிறது.இந்த மர்மம் தெரிவுகளாக்கிய இன்றைய சூழலின் கதாநாயகன் சரத்பொன்சேகா.
 
மேற்குக்கு மர்மமான மகிந்தா ஆட்சி:
 
கஸ்பியன் வலயத்தில் உக்கிரைன்,ஜோர்ச்சியா,ஒசித்தாசியன்-அவ்கானிஸ்த்தான், என முரண்படும் தேசங்களது மக்கள், மத்திய ஆசியாவில் குர்த்தீஸ் இனங்களது பிரச்சனைகளை விளங்க மறுத்தன.அண்மைக் கிழக்கு வலயத்தில் ஈரான்,பாலஸ்த்தீனம்,எகிப்த்து மற்றும் அரபுத் தேசங்கள் ஈராக் சதாமைப் புரிந்துகொண்டு தார்மீக ஆதரவைச் செய்யதபோதும் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக்கிக்கொண்டு உலகு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போர் ஆயுதமாக்கவில்லை. தென்னாசிய-கிழக்காசிய வலயத்தில் நேபாளம், காஸ்மீர், நாகலாந்து,இந்துனேசியா சீனா, தாய்வான், ஸ்ரீலங்காவெனத் தொடரும் சிக்கல்களின் நடுவே மகிந்தா முன்னெடுக்கும் அரசியலை மையப்படுத்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை இருஷ்சிய அரசு வழங்கிக் கௌரவிக்கிறது;புலிகளைத் தோற்கடித்த ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு(முன்னாள்)க் கீரிடம் வழங்கிச் சிறப்புஞ் செய்துகொண்டது இருஷ்சிய அரசு.இங்கே, தென்னாசிய அரசியலைச் சரிவரப் புரியமுனையும் சங்காய்க் கூட்டமைப்புக்குமுன் மேற்குலகம் வகுக்கும் அரசியல் வியூகம் ஈராக்கில் பரிசோதிக்கப்படும் அரசியலாகவே இருக்கிறது.
 
தமிழ் ஊடகங்களின்று சரத்பொன்சேகாவுக்காக விழுந்துவிழுந்து அழுகின்றன.அவர்களது செய்தித் தயாரிப்பில்-கருத்துக் கட்டலில் சரத் பொன்சேகா ஏதோ ஜனநாயகத்துக்குக் குரல் கொடுப்பவராகவும், மகிந்தாவினது தனிக்காட்டுத் தார்ப்பாருக்கு எதிராக-அதைச் சிதைக்குமொரு அரசியல் ஆளுமையாகவும் கற்பிக்கப்படுகிறது.இதைவிட சரத் இலங்கை அரசியலில் மேலோங்கிய அராஜக ஆளுமைக்கு எதிரான சக்தியாகவும் புரியவைக்கப்படுகிறது.இதன்வழி தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்தவிடப்பட்ட அனைத்து யுத்தக் கொடுமைகளையும் வெளிக்கொணரும் வியூகமும் அடங்க முடியுமாகக் காணப்படுகிறது.இது,கட்டிவைக்கவிரும்பும் மனக் கனவுகளுக்கு வெளியில் இலங்கையினது இன்றைய அரசுக்குப் பின்னால் நிற்கின்ற ஆசிய மூலதனத்தின் முரண்பாடுகள் முற்றுமுழுதாக மேற்குலக மூலதனத்தின் ஆசியச் சந்தையையும், அதைத் தொடர்ந்து, அதன் வளங்கள்மீதான ஆதிக்கத்தையும் தகர்ப்பதில் மையங்கொள்கிறது.இதைப் புரிந்துகொண்ட அரசியலை உரைத்துப் பார்க்கும் மேற்குலகத்துக்குத் தனது வியூகத்துக்கு நிகரான அதேபாணி அரசியலை இலங்கையில் இனங்காணும்போது, அதுக்கு மர்மமான மகிந்தா குடும்ப ஆட்சி நேரெதிரில் நிற்கிறது.
 
ஈரானில் முசாவி,மேகிடி கறுபி(Mir-Hossein Mussawi und Mehdi Karubi )போன்ற மேற்குலக அனுதாபிகளை வைத்து நடாத்தப்பட்ட அஹ்மாடிநெட்சாத்(Ahmadinedschad )எதிர்ப்பு அரசியல் பலவிதமான அமெரிக்க-மேற்குலக வியூகங்களால் வழிநடாத்தப்பட்டது.இது தகவமைத்து நடாத்தும் அரசியலானது ஈரானிய அணுவிஞ்ஞானியும்,பௌதிகப் பேராசிரியருமான திரு.மசூத் அலியைப்(Massud Ali-Mohammadi Physiker und Atomwissenschaftler ) பலிகொண்டது.இதன் பின்னால் இருந்த சதி அமெரிக்க-ஜேர்மனிய உளவு நிறுவனங்களுக்கானது.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன் வைக்கும் புதிய பொருளாதாரத்தடைகளானது ஈரானில் அணுவிஞ்ஞானத்துக்கு முழுக்குப் போடுவதுமட்டமல்ல.முழுக்க முழுக்க ஈரானிய எண்ணை வளங்களை-வயல்களைத் தமது ஆளுமைக்குள் கொணர்வதாகவே இருக்கிறது.இந்தப் போக்கினது தெரிவுகளாக முன்தள்ளப்படும் அரசியல் இலங்கையில் மேலும்பல சதிகளையும் சச்சரவுகளையும் செய்வதில் மேற்குலகத்துக்கு அவசியமான தெரிவுகளாகிவருகிறது.இதைப் புரிந்துகொள்ள இன்றைய சரத்பொன்சேகாவினதும், மகிந்தா அரசுக்குமான முரண்பாடு நல்ல உதாரணமாகும்.சரத்பொன்சேகா என்பது ஒருபெரும் தனித்த ஆளுமையாகப் புரியும் அரசியல் வெறுமனவேயான நேரடி விளைவுகளை முன்வைத்த தெரிவென்பது எனது கருத்து.அதற்கான முழு உந்துதலும் அமெரிக்க-மேற்குலக வியூகத்தின் அரசியல் ஊக்கமே காரணமானது.ஈராக்கின்மீது போர் தொடுக்க விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து நகர்த்தும் அரசியலானது மீளவுமொரு அழிவுயுத்தத்தைச் செய்துகொள்வதற்கான தெரிவாக அமெரிக்க ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படும்போது,அதை மேலும் கிடப்பில்போட்டுத் தனது பதிவிக்காலம்வரை "சமாதானப்பிரியனாக"இருக்க விரும்பும் ஒபாமா நிர்வாகம் வகுத்துள்ள வெளியுறவுக்கொள்கை முற்று முழுதாக அவ்கானிஸ்த்தானிலேயே கவனங் குவிக்கவிரும்புகிறது.ஜுனியர் புஷ்சின் ஆட்சியில் முன் தள்ளப்பட்ட அவ்கானிஸ்த்தான் இன்னொரு வியாட்நாம் ஆகுவதை ஓபாமாவின் வெளியுறவுக்கொள்கை(Zbigniew K. Brzezinski - War and Foreign Policy, American-Style - Journal of Democracy 11:1 Journal of Democracy 11.1 (2000) 172-178 )
வகுப்பாளர் திரு.சீப்கினிவ் பிரசென்ஸ்கி(Zbigniew Brzezinski) விரும்பவில்லை.
 


 
பெரும் சதுரங்க ஆட்டமாகக்கொள்ளப்படும் கஸ்பியன் வலயத் தேசங்களது கருங்கடல் எண்ணையூற்ற வளங்கள் அமெரிக்காவுக்கானதும் அதன் மேற்குலகக் கூட்டு நாடுகளுக்கானதுமான இருப்பாக்கப்படுவதில் எத்தனையே பிரயத்தனங்களை மேற்கொண்டு நபுக்கா எண்ணைக் குழாய்களின்வழி இருஷ்சிய ஆதிக்கத்தைத் தவிர்ப்பதில் ஈரான் தவிர்க்க முடியாத தலைவலியாக இருக்கிறது.இவ்வண்ணமேதாம் இன்றைய சீன ஆதிக்கத்தைச் சிதைப்பதும் அதன் முன்னேறிய பொருளாதார வலுக்களை மட்டுப்படுத்துவதற்கும் குறைந்தளவாவது தென்னாசியப்பிரதேசத்தில் சீனாவினது ஆதிக்கத்தை இல்லாதாக்குவதில்-ஸ்ரீலங்கா மேற்குலகைச் சாரும்போது-வெற்றிகொள்ள முடியுமென பிரசென்ஸ்கியின் நம்பிக்கை.கஸ்பியன் வலயத்தின் எண்ணை வளங்களைத் திருடுவதற்கு ஈரான் போன்ற தேசத்தின் எண்ணை வயல்கள் முதலில் அமெரிக்க-மேற்குலகக் கைகளில் வீழ்ந்தாகவேண்டும்.அங்ஙனம் வீழ்வதற்காக ஈரானில் ஒன்று ஆட்சி மாறியாகவேண்டும். இல்லையேல் உள்நாட்டுப் புரட்சி ஜனநாயகத்தைச் சொல்லி மேலெழுவேண்டும்.இதைச் செய்விக்கச் சமகாலத்தில் நிகழ்ந்த ஈரானிய அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அரசியல் மேற்குலகத்தின் அதீத ஒத்துழைப்போடு நிகழ்ந்துவருபவை.இது ஒருபோதுமே ஈரானின் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரிய எதிர்ப்புப்போராட்டமில்லை.ஈரானில் நடந்தேறும் மேற்குலக-அமெரிக்கச் சார்புச் சதி அரசியல் போராட்டங்களை எவர் ஜனநாயகத்தின் பெயரில் ஆதரிக்கமுடியும்?
 
எதிர் நலன்கள் முட்டிமோதும் இலங்கை:
 
 
இன்றைய இலங்கையில் நடந்தேறும் மகிந்தா-சரத்பொன்சேகா இருவருக்குமான ஆதிக்கத்துக்கான போராட்டம்,இலங்கை ஆளும் வர்க்கங்கள் இருவேறு நலன்களது தெரிவில் பிளவுபட்ட நிலையில் எழுந்ததாகக்கொள்ள முடியாது.இலங்கையினது ஆளும் வர்க்கங்கள் கடந்தகாலத்திலும் ஆசிய-மற்றும் மேற்குலக நலன்களுக்கான தெரிவில் இருமுகாங்களாகவே இருந்தன. இதனடிப்படையில்தாம் இருபெரும் கட்சிகள் தேசியக் கட்சியாகவும்,விதேசியக் கட்சியாகவும் இருந்து வந்தன.எப்பவுமே மேற்குலகத்துக்கு விசுவாசமான அமெரிக்கா சார்பும் அனுதாபமும் நிறைந்த யூ.என்.பி.இலங்கையின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு எதிராகவே அந்நியப் பொருட்களைத் தங்குதடையின்றித் தேசத்துக்குள் நுழையவிட்டுத் தரகு வேலையைச் செய்துவந்தது.இவ்வகையில்தாம் ஓரளவு இந்தியச் சார்பை பிராந்திய அரசியல் ஆதிக்கத்துக்கு விட்டுக்கொடுத்து 'ஒருவகையான இரட்டைநாக்கு' தந்திரோபாயத்தை அது இந்தியாவிடம் காட்டியது.இப்போதும்,அப்போதும் இலங்கையின் சுதிந்திரக்கட்சியானது சிங்களவாதக் குறந் தேசியத்தின் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள உள்நாட்டு உற்பத்திக்கும் இடமளித்து, ஓரளவு ஆசியசார்பு நிலையையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலையாக அரும்பியது.இங்கே, இக்கட்சியின் பின்னே நின்ற ஆளும் வர்க்கமானது எப்பவும் போலவே யூ.என்.பி.ஆட்சியில் பழிவாங்கப்பட்டபோது அது, இனக் கலவரத்தில் முடிவதாக இருந்தது.

இப்போது,பழிவாங்கப்படும் மேற்குலக மூலதனத்துக்கு விசுவாசமான சரத்பொன்சேகா மற்றும் யூ.என்.பி.கட்சியானது அப்பட்டமான அமெரிக்க-மேற்குலகச் சார்பு நிலையில் நின்றே மகிந்தா குடும்பத்து ஆட்சியை எதிர்கிறது.இதனிடம் மக்கள்சார்ந்த எந்தக் கோரிக்கையுமில்லை. ஆனால்,இன்று இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவகை அரச அராஜகமும் அமெரிக்க ஆளுமைக்குள் உட்பட்ட தேசங்களிலும் நீடிக்கவே செய்கின்றன.இத்தகைய சூழலில் அமெரிக்காவினது அனுதாபிகள் பேசும் இலங்கை மக்கள்சார் அரசியல் கோரிக்கைகள்-அரசியல் முன்னெடுப்புகள் ஒருபோதும் மக்களுக்கான நியாயமான உரிமைகளுக்கான போராட்டமாக முன்னேறமுடியாது.இது,இருவேறு மூலதன முகாங்களுக்கு நடுவில் நிகழும்பலப் பரீட்சை.
 
நொருங்கிவிழும் அமெரிக்க ஆதிக்கக் கனவின் தொடர்ச்சியான அரசியல் தோல்வியிலிருந்து உந்தித் தள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள்சார் கோரிக்கைகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. எனவே,இலங்கையில் சரத்பொன்சேகாவினது கைதோ அன்றி அவருக்கான உரிமை மறுப்போ மக்கள்சார் அரசியலுக்கு முக்கியமற்றது.இன்று,சரத் பொன்சேகாவினது கைதைப் பெரிதுபடுத்தி,அவரது துணைவியாரது கண்ணீர்சொரியும் முகத்தை அடிக்கடி ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்காக மக்கள், இந்தப் பொன்சேகாவினால் கொல்லப்பட்டபோது அவர்களது கண்ணீரைக் காட்டவில்லை.கபடத்தனமாகத் தமிழ் ஊடகங்கள் சரத்துக்குக் கண்ணீர்வடிப்பதுகூடத் தமது எஜமானர்களான மேற்குலகங்களுக்குக் கூஜாத் தூக்கும் காரியமே.சரத்தின் துணைவியார்,எத்தனையோ தமிழ்த் தாய்களின் கண்ணீர்கண்டு புன்னகைத்த பெண்மணி.இப்போது தமது கணவர் உண்ணவில்லை,உறங்கவில்லை-மருந்து உட்கொள்ளவில்லை என்று தனது சுயநலத் தேவையை மக்களது தேவையாகக் காண்பிப்பது வேடிக்கையானது.ஆளும் வர்க்க அடியாட் குடும்பம் தமது வலியைப் பொதுவலியாக மக்களிடம் எடுத்துவருதே கடைந்தெடுத்த துரோகம்.
 
இலங்கை அரசியலில் ஆசியமூலதனத்தை முடக்கவெண்ணிய மேற்குலகம் ஒருபெரும் இரத்தக்களரியைச் செய்வதற்கு பொன்சோகாவினது தயவை நாடியது.இராணுவத்துக்குள் செல்வாக்குடைய முன்னாள் ஜெனரலூடாகக் காரியமாற்றத்தக்க அரசியல் வியூகத்தின்வழி அன்றைய பண்டாரநாயக்காவுக்கு நடாத்தப்பட்டவொரு அதிர்ச்சி வைத்தியத்தை அது திட்டமிட்டிருந்தது.இதை முறியடித்த ஆசிய மூளையின் தெரிவில் மகிந்தா உயிருடன் ஆட்சிக்கட்டில் அமர்வது பொன்சேகாவை கூண்டில் அடைத்தபடித்தாம் சாத்தியமெனில் அது நிகழட்டும்.எமக்கென்ன?
போன்சேகா தமிழ் மக்கள்மீது நடாத்திய ஆயுத அராஜகத்துக்கு- யுத்தக் கிரிமினலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிய மகிந்தாவை எங்கே நிறுத்தித் தண்டிக்க முடியும்?அமெரிக்கத் தெருக்கோடியில்? இல்லை, பொன்சேகாவோடு உண்மைகளும் புதைந்துவிடும் என்று கருதுவதில் எந்த நியாயம் இருக்கிறது. இருவருமே யுத்தக் குற்றவாளிகள்-இருவருமே கொலைகாரர்கள்.பாசிச அராஜகவாதிகள்-அடக்குமுறையாளர்கள்.இவர்களிடம் தமிழ்பேசும் மக்கள் எந்தவுண்மைக்காகக் காத்திருக்கவேண்டும்,இல்லை ஆதரிக்கவேண்டும்?


  (ஈரானிய அணு மூளை மசூத் அலி.)

ஈரானில் மக்களை உசுப்பிவிட்டு,அஹ்மாடிநெட்சாத்தை(Ahmadinedschad) மொட்டையடிக்க முனையும் மேற்குலகம்,இலங்கையில் பொன்சேகாவினது கைதின் எதிர்ப்பு அரசியலைத் தமக்காக முன்தள்ளுகின்றது.இங்கே,மக்களை உசுப்பிவிட்டு,நிலவும் ஆட்சிக்கெதிராகக் கலகத்தைக் கட்டித் தகவமைக்கும் அந்நிய அமெரிக்கா,எப்பவும்போலவே சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு குறித்தும் பேசுகிறது.பொன்சேகாவினது கைதுக்குக் குரல் கொடுக்கும் பான்கீ மூன் வன்னியில் கொத்துக்கொத்தாக மக்கள் அழிந்தபோது இவ்வளவு அக்கறையாகக் குரல் கொடுத்தாரா?அல்லது அவ்கானிஸ்த்தானில் தலீபான் எண்ணைவண்டிக்குக் குண்டுபோடுவதாகச் சொல்லி மக்கள் தலைகளில் குண்டைக்கொட்டிய ஜேர்மனிய அரசுக்கெதிராக ஒரு எச்சரிக்கையாவது விட்டாரா?156 அப்பாவி மக்களை ஒரேயொரு எண்ணை வண்டிக்காகக் கொன்றார்களே ஏகாதிபத்தியவாதிகள்!
 
விக்கிரமபாகு கருணரெத்தின சரத்துக்கு ஆதரவான ஆர்பாட்டத்தில்கலந்து பொன்சேகாவுக்குப் பின்னால் நிர்க்கும் அமெரிக்காவுக்கு முண்டுகொடுக்கும் அரசியலை முன்னெடுப்பது மக்களது தெரிவில் ஜனநாயகம் ஆகமா?
ஓரு பொன்சேகாவுக்கு ஆதரவாக இவ்வளவு மக்கள் வீதிக்கு இறங்க முடியுமானால்,வன்னியில் கொல்லப்பட்ட பல பத்தாயிரம் மக்களைக் காப்பதற்காக மனிதாபிமானமிக்க சிங்களச் சமூகம் ஏன் முன்வரவில்லை?இனவழிப்பில் தேசியக் கூத்தாடியபோது கருத்துச்சொல்வதில் நின்ற சிங்கள "இடதுகள்" இங்கே வீதிக்கிறங்கி பொன்சேகாவுக்குக்காகக் கலகஞ் செய்கின்றனர்.தமிழ்பேசும் மக்களுக்கெதிரான போரை முன்னெடுத்த மகிந்தாவுக்கு எதிராக வீதிக்கிறங்கி-யுத்தத்துக்கெதிராக ஒரு துரம்பைக்கூட அசைக்கமுடியாதவர்கள்,இப்போது இலங்கையில் ஜனநாயகம் இல்லையாம்.
 
கேலித்தனமான சாக்கடைகள்.
 
இத்தகைய போலிகளுக்கு நடுவே மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு இனவாதிகளாகும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அந்நிய மூலதன வேட்டைக்காடாகவே அமையும்.இன்றைய அரசியல் சதுரங்கத்தில் ஆளும் வர்க்கச் சேவகர்களின் தலைகள் உருண்டுவிடலாம்.ஆனால்,அது ஒருபோதும் ஜனநாயகத்துக்கான உயிர்த் தியாகமாக இருக்க முடியாது.இலங்கையின் இறைமை என்பது பரந்துபட்ட மக்களது சுயாதீனமான அரசியல் -பொருளாதார வாழ்வே!அதை முறியடிக்கும் இன்றைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் எல்லாத் தரப்பைப் போலவே ஆதிக்கத்தை நிலைப்படத்தும் தெரிவில் தேசங்களை-மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள்-கலவரத்துக்குள் தள்ளி அழித்து விடுகின்றன.இது,ஈரானில்மட்டும் மசூத் அலியைக் கொல்லவில்லை உலகம் பூராகவுமே கொல்கின்றது.இலங்கையில் ஈரான் பாணிக் கலவரத்தை உண்டுபண்ணும் அமெரிக்க-மேற்குலகச்சதி எந்த மசூத் அலியைப் போட்டுத் தள்ளுமோ அந்த மசூத் அலி உசாராகியுள்ளது.இதுள் இலங்கையின் பரந்துபட்ட மக்களுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?பொன்சேகா செத்தாலென்ன,மகிந்தா மாண்டாலென்ன?எல்லோரும் ஆதிக்கச் சக்திகளது சேவகர்களே!மக்கள் தமது வாழ்வை இவர்களிடம் பறிகொடுக்காதிருக்க இவ்வகை கட்சிசார் கலகங்களை-ஆர்ப்பாட்டங்களை வெறுத்தொதுக்கி நிராகரிக்க வேண்டும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2010

Samstag, Februar 06, 2010

தாயாய்த் தவமாய்...

தாயாய்த் தவமாய்...


"மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"


முயன்று,முயன்று தோற்றேன்!அம்மா இல்லாத விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"

"தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!"-என் அன்னை இறந்துவிட்டாள்!


கடந்த 25 ஆண்டுகளுக்குமுன் இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!அன்னை உடல் அழித்து மறைந்து போய்விட்டாள்.

இந்தப் புகலிட வாழ்வில் வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!

அம்மா:பெற்றவள்.

மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!

அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.

என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அம்மாவின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!அம்மாவுக்குச் சாவில்லை!ஏனெனில்,பெண்மை என்பது அம்மாவைக்கொண்ட வாழ்நிலை.எனவே,அம்மாவைக் காலம் கொல்லுமா?என் அம்மா என் மனையாள் வடிவில்... சோதரிவடிவில்...மகள்வடிவில்...மருமகள் வடிவில்...இப்படிப் பெண்மை அம்மாவாய் உலகைக்கொண்டு இயங்க,அம்மா அநாதியாகிறாள்!

அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்.குடும்பத்தின்-தேசத்தின் சந்தோசம் என்றாகிறது!

உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.

அம்மா செத்தாள் என்பது நிஜமாக உணர்வுக்குள் முட்டிமோத ஏமாற்றம் அம்மாவைப் பொதுமைக்குள் இருத்தி அழிவற்ற அநாதியாக்குவதில் மனிதவாழ்வு அர்த்தம் காண்கிறது.இது எனக்குத் தற்காலிக ஆறுதலைக் கூட்டிவருகிறது!எனினும்,ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.

பனங்கூடல்.சின்னமடுமாதா கோவில்-கணக்கர் வளவு.

கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...

எங்களிடம் ஒரு தென்னை வளவு இருந்தது.

பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,இந்தவுலகத்தின் அம்மா.அம்மா-மாதா-தாய்!உயிரின் ஊற்று-மூலம்.எனக்குச் சின்னமடுமாதா தாய்-அம்மா.அவளது குருசு மரத்தடியில் எனது உடல் சரிந்துவிடவேண்டுமென்பது எனது நீண்ட கனவாக...

அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்!இதை உணராதவன் நான்?இல்லை-இல்லவே இல்லை!அம்மாவுக்காக என்னை ஒடுக்கியவன் நான்.சின்னஞ்சிறு கனவுகளுக்கு எல்லையிட்டவனும் நான்.அம்மாவை அந்தக் கனவினது நிராகரிப்பில் காத்தவன் என்பது எனக்கான ஒரு வரலாறாக இருக்கிறது.அம்மாவைவிட எது பெரிதாக இருக்கும்?

அம்மா:தாய்-தேசம்?

ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் அம்மா இல்லாத விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது,சரவணையிலிருந்து புலம் பெயர்ந்த நான் தேசம்-அம்மாவைத் தொலைத்தவனாகிறேன்.

ஆம்!

அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!

அன்பு என்பது அம்மா!அதுவே,உலகத்தின் மூலம்.

இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது, தன்னையும் தன் சுகத்தையும் மறுத்துத் தன் விழிகளுக்குமுன் தான் பெற்றதும்-பெறாததுமான குழந்தைகள் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது, எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இஃது, நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு, கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்-தாயின் அர்த்தம்!

தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள். அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெரிதாகும்?தாயைப் பழிப்பவன் தனயனாக இருந்தாலும் அவன் மனித விரோதி-சமூகவிரோதி!

நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.
உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு
எனக்காக அன்னை தந்தது.

இது, உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!தமிழர்களாகிய எமக்கு இஃது, தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.இன்றோ,கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள், மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு அம்மா பற்றி பிரக்ஜை அவசியமாகிறது.அம்மாவைப் பழிப்பவன்-உதைப்பவன் அழிந்துபோன வரலாறைக் காலம் எப்போதும் உணர்த்தி நிற்கிறது.

அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடுத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.

இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?

பிள்ளையின் ஒவ்வொரு வெற்றியிலும்(கல்வி-வாழ்வு-உழைப்பு,உயர்வு என...) ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில்,துன்பத்தில் துவளும் தாய், தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதர்மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய்ப் பெருகுபவள்.இப்போது, இவள் தாய்:தேசம்!

சரவணை...எனது பிறந்த மண்.

இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது-எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காத மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குவதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லிக் கிருமிகள் "டெங்குவாகவும்,மலேரியாவாகவும்" சுதந்திரமாக ஊருகிறது.தொற்றகற்றிகொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எமது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!

நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.அப்படி ஆகணும்.ஏனெனில்,அவள் தாய்!

"சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைப்பட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் சரவணைத் தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
அகதிவாழ்வில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் என் வாரீசுகள்."

ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்து மரித்துப்போனாள்.

"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் உயிர் துறுந்து தீயில் சங்கமமாக...

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு,அம்மா என்பதாக...

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து,அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விட்டாள் இப்போ...எனினும்,அம்மா வாழ்கிறாள்-உலகாய்த் தேசமாய்,பெண்மையாய்,பொதுவாய்...இப்படி எல்லாமாக.


ப.வி.ஸ்ரீரங்கன்

06.02.2010