நான்று நில்
வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது
மெல்லத் தூறிய வானம்
நெடிய தொலைவை அணைத்தபடி அருகினில்
காண மறுக்கும் காற்றும்
கையளவே ஆன பொழுதும் வருத்திய மலரும்
விறைத்திருக்க எண்ணியதில் வியப்பு என்ன?
பட்டு விலகும்உறை பனியாய்
உதிரும் தொப்புள் கொடி
உணர்வைத் துண்டிக்க நெடிய போரில்
பாசவலை போர்த்த இதயத்தின் பாழ் வலியில்
எச்சிலாய்ச் சொரியும் அன்னையின் நினைவு
அப்பப்ப அசையும் நினைவு முறிக்கும் காலம்
அள்ளிய சுமையில் கிள்ளிய பாவம்
தொடரக் காத்திரும் சிறு கோட்டில் நடை பயிலும்
நாளைக்கு நஞ்சு வைக்கும் எனது இருப்பில்
பட்டு விலகும் உயிர் திசையறியாக் கனவில்
ஊருக்குள் தீ வைக்கும்"அங்கிகாரம்"
உறங்க மறுத்த எனது குருதிக் கொதிப்பில்
நலிந்துபோன உறவுகளாய் முடிச்சிட்டுக் காலத்தில் தொங்க
கண்ணீர் கரைந்து கடு மனதாகும்
எல்லாப் பொழுதுகளிலும் நல்லானாய் இருக்க
நான்றுகொண்ட விதிக்குச் சுயம் இருக்கு?
தெருவோரம் ஊர்ந்துபோன புழுவுக்கு
காகத்தின் இரைப்பையில் சுவர்க்கமெனப் பலிப்பீடம்
போரென்ன புண்ணென்ன புகல் வாழ்வு என்ன
பொய் உணர்வாய் பொருளிழந்த புறம் போக்காய்ப்புவி வாழ்வு
செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு
சுகம் கேட்க ஏது நியாயம்?
மாறுவேடம் புகலுமொரு மணவாழ்வில்
மருமகளுக்கு பாடம் உரைக்கும் மாமாக்கள்
அண்ணாவுக்குத் தங்கை மறுத்து மருமகளெனக் கொள்ள
மயிரென்ன மாமாவா?
வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது...
ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2010
Keine Kommentare:
Kommentar veröffentlichen