Samstag, Mai 17, 2014

இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்

புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்!

ன்றைய உலக அரசியல் நிலைமையை நினைக்க மிக அச்சமாக இருக்கிறது. எதிர்கால வாழ்வும்-சாவும் மிகக் காட்டு மிராண்டித்தனமான அரசியல் வாழ்வோடு மல்லுக்கட்டும் இந்தியாவை நாம் பார்க்கப் போகிறோம்.இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு குயராத்துக்கள் உருவாகுமென்பது அங்கே 3000 முசுலீம்களது சாவின் தொடர்ச்சி என்று புரியப்பட வேண்டும்.இந்தியத் தேசமானது  மேலும் மத ரீதியாகப் பிளவுபட்ட இந்தியாவாக உருவாகுவது பார்ப்பனியத்தின் இருப்புக்கும் அதிகாரத்துக்கும் அவசியமானது.அதை அது சாதித்துவிட்டது. சனநாயக சூழலது நிர்ணயிக்கப்பட்ட  ஒழுங்கு[waves of democracy ] விலத்தித் தற்செயலாகவுருவாக்கப்படும் ஒடுக்குமுறை அலகுகள் சட்டமாகவும்;அதிகாரக் கருதியலாகவும் வன்முறை சார்ந்தும்-சாரமலும் ஒவ்வொரு கணமும் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு இது சாத்தியமாகிறது.

தன்னை அழிப்பதற்குத் தானே முனைதலென்பதைத் "தற்கொலை" என்போம்!

கங்கேரியில் [Hungary ]சிறுபான்மையினங்களை அழிக்கும் விக்டர் ஓர்பானுக்குப் [Viktor Orbán ]பரந்துபட்ட மக்களது ஒப்புதல் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறது மீளவும்.பிரான்சில் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு அடுத்த சனதிபதியாக வருவதற்கான அனைத்து ஒப்புதலும் பெற்று வருகிறார் மாரி லீபென்[ Marion Anne Perrine Le Pen ].யேர்மனியில் ஓல்ரனற்றி பூர் டொச்லாந்துக் [Alternative für Deutschland (AfD) ]கட்சியின் அலை அவர்கள் பாராளுமன்றஞ் செல்லும் வழியைத் திறந்துவிட்டுள்ளது.இந்த நாசிய அறிவுசீவிக் கூட்டம் இந்தியப் பார்ப்பனியத்தின் வீச்சுக்கு நிகரானது.இவ்வளவு தூரம் பரந்தபட்ட மக்களிடம் இவர்கள் பெற்ற -பெறும் செல்வாக்குக் காரணமென்ன?




கடந்த 30 ஆண்டுகளாகக் கூட்டாட்சிக்குள் தொங்கிய இந்திய பாராளுமன்றக் கட்சியாதிக்கமானது நேற்றோடு முடிவுக்கு வந்து தனித்தவொரு கட்சியின் ஆதிக்கத்தை செழுமையாகப் பார்ப்பனியத்தின் அதீதப் பரப்புரை வளர்த்துச் செழித்து வாழ வழி திறந்துவிட்டுள்ளது.பார்பனியப் பரப்புரையைத் தமது நலத்தின் பிரதான வலுவான அரசியலாகவுணர்ந்துகொண்ட பல்வேறு ஆளும் வர்க்கமானது பரந்தபட்ட மக்களைத் தமது வலையில் இலகுவாக வீழ்த்திய காரணி என்ன?இதன் காலவர்தமானது மிக நெருக்கடியானவொரு அரசியல் -பொருளாதாரச்சூழலைத் தகவமைக்கும்.இதன் பல்வேறுவகைப்பட்ட தாக்கமானது இந்தியாவில் தீண்டத் தகதவர்களாகப்பட்ட 240 மில்லியன்கள் தொகைகொண்ட உழைக்கும் விளிம்பு நிலை மக்கள் கூட்டத்தின் அடிப்படையான உரிமைகள் அனைத்தையும் இல்லாதாக்கும் ஒரு மோடியை , 3000 முசுலீம் மக்களது குயாரத்துப் [Gujarat ]படுகொலையை அங்கீகரித்து இந்தியத் தலைவராக்கிய பெரும்பான்மை மக்களது இந்தத் தீர்ப்பானது வெறும் காங்கிரசு எதிர்ப்பலையாகக் காணுவது அரசியல் விவேகம் இல்லை!

இது திட்டமிடப்பட்ட  பரப்புரைகளது அதீதக் கருத்துக் கட்டமானத்தின் வெற்றி.பரந்தப்பட்ட மக்களது சமூக நலன்களது தெரிவில் மிக வியூகமாகக் கருத்துப் பிணைந்து தத்தமது இலக்கை அடையவிரும்பிய ஆளும் -அதிகார வர்க்கமானது தமது வர்க்க நலன்களை அறுவடையாக்கும் ஊடகங்களின் தனியுடமை அதிகாரத்தின்வழி தம்மைத் தயார்படுத்திக் கொண்டு புதிய நகர்வை பணப்பலத்தோடு சாதித்துள்ளது.இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை விலைபேசி வாங்கிய கட்சிகள் கொட்டிய பணம் பல இலட்சம் கோடிகளைத்தாண்டும்.அவ்வளவு பெரும் பணத்தை முதலீடு செய்த கட்சிகள் இந்தப் பாராளுமன்ற சனநாயகத்தின்வழி அறுவடையாக்கும் அரசியல்தாம் என்ன?

இனவாதம்;சாதியவெறி கொண்டு மக்கள் - இனங்களைப் பிளந்து குருதி உறிஞ்சும் இந்தப் பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது சட்டரீதியான அங்கீகாரத்தோடு அடுத்த 5 ஆண்டுகளைப் பார்பனிய -பனியாச் சாதிகளது பகாசூரக் கம்பனிகளுக்கு இந்தியாவை ஏலத்தில் வீழ்த்தி விட்டுள்ளது.

இது பரந்து பட்ட மக்களது அங்கீகாரம் பெற்ற நிலையில் ஆடப்படப்போகும் நர்தனமானது இந்தியாவை மேலும் சனநாயத்தன்மையற்றவொரு கற்கால இந்தியாவாக்குமென்றெல்லாஞ் சொல்லேன்.மாறாக, இது காலனித்துவக் காலத்துள் பெறப்பட்ட பெறுமானங்களை மீள் நோக்கி அனுபவிக்கப்போகும் பரந்துபட்ட மக்களது அழு குரலாகவே வெளிப்படுமென்கிறேன்.

உள்ளக் கலனியமாக [Internal colonialism ]இருந்துகொண்ட பார்ப்பனிய ஆதிக்கமானது தன்னைச் சட்டரீதியாகவே "அரச ஆதிக்கமாக" உருவாக்கிக்கொண்டுள்ளது. இது பல்வேறு வகையினுள் நகர்த்தும் அரசியல்  இந்தியப் பொருண்மிய வாழ்வில் மட்டுமல்ல அதை அண்டியுள்ள பல்வேறு தேசங்களது சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பார்ப்பனியங் கொண்டுள்ள இந்த அரசியல் அதிகாரமானது BJP யின்  அடியாட்படையை [Rashtriya Swayamsevak Sangh  ]பல்வேறு மட்டங்களில் விரிவுப்படுத்தும் அதிகாரமாகப் பார்ப்பனியம் ஆயுதம் தரிக்கும்.இதன் வளர்ச்சி ஏலவே பேசப்பட்டதாயினும் மோடியின் வெற்றியென்பது தனிப்பட்டவொரு நபரதோ அன்றிக் கட்சியினதோ வெற்றியள்று.இந்த வெற்றி பார்ப்பனிய ஆளும் வர்க்கத்தின் வெற்றி -அதனோடு சமரசமான உலக மூலதனத்தின் வெற்றி.

இது[16th Lok Sabha ] பாரம்பரிய இந்தியத் தேசத்தின் அனைந்து வளங்களையும் சட்டரீதியக் கொள்ளையிடும் ஒரு கூட்டத்தின் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கியுள்ள தேர்தலாகவே இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
17.05.2014