Freitag, November 29, 2013

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து...

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து அரசியல்-சோபாசக்தியையும் தாண்டிச் சில குறிப்புகள்!


ன்று, தேவையற்ற தேவையெனப் பேசப்படும் ஜெயபாலனது இலங்கை விஜயமும், கைதும் பரவலாகப் பகரப்பட்ட இலங்கை அரச லொபிகளது நையாண்டிச் சேட்டையைத்தாண்டிப் பலருள் இலங்கை அரச "ஜனநாயகம்"குறித்தும், அதைப் பரவாலாகச் சிலாகித்துப் பேசும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அரச லொபிகள்-சேவகர்கள்ஆகிய "மாற்றுக் கருத்தாளர்கள்-புரட்சியாளர்கள்" தம் மனிதவிரோதப் பக்கங்களது குரலை மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியவொரு செயலாக ஜெயபாலனது கைதின் வழியான இலங்கை அரச நடாத்தை மிகத் தெளிவாகவொரு செய்தியைத் தந்திருந்தது.

அது,பரவலாகத் தனிபட்ட நபர்களது வாழ்வில் எத்தகையவொரு அதிகாரத்தைச் செய்யும் நிலையில் இலங்கை அரச ஜந்திரமும்,கட்சி அரசியலும் செயற்படுகிறதென்பதையும், அதை நேசிக்கும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை லொபிகளது நடாத்தையும் பரவலாக அம்பலமானது.சாதரணப் போராளிகள் விசயத்தில் தலையீடு செய்யும் குறுக்கு வழித் தமிழ் மாபியாக்களது அரசியல் நடாத்தையானது பல்லாயிரக்கணக்கான போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யும் ஊக்கத்தைக் கோரியது முள்ளிவாய்க்கால் வரலாற்றில்!.

அதே போன்று,இன்றுவரைச் சிறையில் வாடும் இளைஞர்களது தலை விதிக்கு யார் யாரெல்லாம் காரணமென்பதையும் ஜெயபாலனது கைதின்வழி அறியத் தக்கதாகவே இருக்கிறது.

ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.

இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்க முடியாது தடுக்கப்பட்ட சிந்தனையாலும்-அரசியல் வாழ்வாலும்தன்னைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.அதன்,ஜீவ மரணப் போராட்டத்தைத் தமது எஜமானர்களுக்கொப்பவே தகவமைக்கும் தமிழ் அரசியல்-ஆயுத மாபியாக்கள் அந்த மக்களது குரலாக ஒலிக்கும் எவரையும் விட்டு வைக்காது மேய்வதற்குத் தயாராகும் நடாத்தையாகவே ஜெயபாலன் கைது இன்னொரு செய்தியையும் குறித்து வைத்திருக்கிறது.
இதுள்,ஜெயபாலன் கைதைப் பரிகாசித்து நையாண்டி புரிந்தவர்களான  இந்த இலங்கை அரச லொபிகள்தாம் கிழக்குக்கும்-வடக்குக்கும் வசந்தம் வரவழைக்க மகிந்தாவுக்குப் பின்னால் கூஜாத் தூக்கி அலைவதைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் இப்போதெல்லாம் பரவலாக அறியத் தக்கதாகவே இருக்கிறது.

இந்த இலங்கை அரச லொபிகளது எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாகத் தொடர்கிறது.பாசிச அரசின் கொடிய அடக்குமறையை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டுத் தனி நபர்களைக் கொடியவர்களாகவும்-கோமாளிகளாகவும் வர்ணிக்கும் அரசியலை இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்த சூழ்நிலைதாம் என்ன?

இன்று, பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும்,இலங்கை இனவாத அரசும் அதற்குத்துணையாகியுள்ள புலத்து "மாற்று அரசியல்"மாபியாக் குழுக்களும்  அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.

இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தவர்கள் அன்று.இன்றும், அதே கொலைவெறியும்,குறுக்கு வழிப் பலாத்தகார அரசியலும் தனிநபர்கள்மீதான அடக்குமுறையை இவர்களிடம் கோரிக்கொள்வதால் இவர்களது லொபிகளான புலத்து மாயாக்களது மன வக்கிரமே ஜெயபாலன்மீதான நையாண்டியாக சூழ்ச்சிமிக்க பரப்புரையானது.இதை, அப்வப்போது ஆமோதித்த " நபர்கள்-புரட்சிகரப் படைப்பாளிகளென" க் கூறுபவர்கள் செய்த அரசியலானது அப்பட்டமான அயோக்கியத்தனமானது.

கண்ணெதிரகண்டால் கோப்பையை எடுத்து உணவு போடும் இந்தக் கூட்டம், காணதிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் கத்தியைக் குறிவைத்து வீசிக்கொண்டிருக்கிறது.இது,ஜெயபாலனது கைதின்பின் நமது "மாற்றுக் கருத்து மனிதாபிமானிகள் " செய்த நையாண்டி அரசியலிலும்,இலங்கை அரசுசார் கருத்தூன்றல்களிலுமாக நாம் அனைவரும் உணரத்தக்கவொரு வெளியைத் தொடர்ந்து இனங்காட்டியது.இந்த வெளிக்குள் இயங்குபவர்களைக் குறித்தே நாம் அச்சப்படவேண்டும்.இவர்கள்,நமக்குள்ளேயேதாம் நாமாக நட்பாடுகிறார்கள்-புரட்சி-விடுதலை பேசுகிறார்கள்.இலங்கை அரசின்"ஜனநாயகத்தை"க் குறித்துப் பரவலாகச் சிங்கள மக்களது அக நெறியுள்-மனோபாவத்துள் வைத்து விளக்கி அஃது,தமிழ்ச் சமூகத்தின் அராஜகப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவொரு உயர்ந்த பண்பாகப் பேசவும் -இயங்கவும் முனைகின்றனர்.

இவர்கள்,தமிழ் மக்கள் சமுதாயத்தைக் அராஜகவாத-ஜனநாயகப் பண்பறியாக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கின்றனர்!

தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச ஒடுக்குமுறையை,அதனால் மக்கள் பட்ட-படும் வலியை,வாழ்வுச் சிக்கலையெல்லாம் புறந்தள்ளும்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் புலம் பெயர்  இலங்கையரசின் லொபிகளால் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய முடியவில்லை.மாறாக, இவர்கள்,அரச-இயக்க வாதக் குழுவாதத்துள் இயங்கியபடி மக்களைக் கருவறுக்கு அரசியற் கருவூலத்தைத் தமது இலக்காகவே வரிந்துகொண்டனர்.இதை,அச்சொட்டாக முன்வைத்த சந்தர்ப்பத்தை கவிஞர் ஜெயபாலனது கைதின் பின்னே நாம் பரவலாகப் புரியும் தருணத்தை இவர்களே நையாண்டி எழுத்துக்களது வழி அராஜக அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தினர்.இதைப் புரிய மறுக்கும் ஒவ்வொரு நபரும் இவர்களுக்குடந்தையாகவே இயங்குவதில் துணைபோகின்றார். சோபாசக்தியின் முக நூல் நிலைத் தகவலில் கைதாகி விடுதலையான ஜெயபாலனை நோக்கி "இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என நையாண்டிய பேசிய கருத்துப்படம்பிரசுரிமானது.இதைப் பரவலாக அனைவரும் பார்த்திருப்பார்கள்.அதன் அரசியல் என்னவாக இருக்கும்?

இத்தகைய அரசியலானது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.ஒருவரது வாழும் உரிமையையே இது தட்டிப் பறிப்பதற்கெடுக்கும் முயற்சியல் நையாண்டித்தனமாகவுரையாடிக் கொண்டு முகதுக்கு நேரே நல்ல "தோழமை"முகமூடி தரித்து நிற்கிறது.

ஒடுக்கப்படும்-ஓடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காக- அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.ஜெயபாலனது கைது குறித்துப் பேசப்பட்ட உரையாடல்கள் இலங்கையின் அரசியல்வறுமையை எடுத்துரைக்கிறது-நமது தோழமைசார்ந்த அக வயக் குறைப்பாட்டு அரசியலைத் தெட்டத் தெளிவாக்கியது.இது,ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்காது ஒடுக்கு முறையாளர்களோடு சமரசமாகப் போவதன் அரசியலைப் பல தளத்தில் வைத்துரையாடியது.அங்கே,இயக்க-குழுவாத மாயையும் அதன் விசுவாசத்தின்மீதான தனிநபர்கள்-தலைவர்களது விருப்பின் பயன்வினைகளாக வலம் வந்தனர் புலம் பெயர் கருத்துக் கந்தசாமிகள்-லொபிகள்!

புலம் பெயர்ந்து வாழும் நமக்குள்-மாற்றுக் கருத்து மந்தைகளுக்குள்  எது நடந்தாலும் "தப்பித்தல்" சாத்தியமாகிறது. அல்லது ,ஏலவே "தீர்மானிக்கப்பட்ட"அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.ஜெயபாலன் கைது குறித்து கமுக்கமாகவிருந்த நமது "பேராசிரியர்கள்"படைப்பாளிகள் எனப் பெரும் பழைய நண்பர்கள் கூட்டம் புலத்தில் அம்பலப்பட்ட கையோடு அது,இப்போது முகத்துக்கு நேரே தோழமை வலியுரைக்கிறது.இதன் தொடரிற்றாம் சோபாசக்தியும் இணைவுறுவதாக நான்குறித்துரைக்கின்றேன்.

சமூகத்தில் இன்று நிகழும் "வன் கொடுமைகளை" இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத "அத்துமீறிய"அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.இலங்கை அரசின் வன் கொடுமைகளை நகைப்புக்கிடமானவொரு உரையாடலாக்கும் சூழலை வைத்தியக்கும் ஒரு கூட்டம் சொல்லும் "தோழமை"என்பது என்ன அர்த்தத்தோடு நமக்குள் இயக்கமுற முனைகிறது?

புலிகளது அராஜக அரசியலை ஒப்பிட்டு ஆளும் "மகிந்த அரசுக்கு- அது செய்யும் மக்கள் நல அபிவிருத்திக்காக -ஜனநாயகச் சூழலுக்காக" எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும். சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனித வளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் செல்லாக் காசாகிறது.இதுவே,நமது "தோழர்கள்"தம்அன்றாட நடாத்தையில் வைத்துப் புரியத் தக்கது.

இந்தப்  புலத்துத் தாதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.அப்படியொரு நியாயமற்ற பண்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களது உரையாடல்கள் யாவும் இலங்கை அரசுக்கு-கட்சி அரசியலுக்கு லொபிகளாக மாற்றப்பட்ட குழுக்களது மலினப்பட்ட புனைவாக எடுக்கப்படாது.மாறாக, இது திட்டமிட்டவொரு அரசியல் பண்பாக நம்மெல்லோரது அகத்திலும் கட்டியமைக்கப்பட்ட கருத்தியல் போராட்டமாக முன்னெழுகிறது.

இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக, ஒரு இனத்தைச் சீரழிக்கும் "கிரிமனல்கள்" எனும் படி சொல்லலாம்.

அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.ஜெயபாலனது கைதுக்குப் பின்நாம் தெளிவாக இனங்கண்வுண்மையானது,  புலம் பெயர் இலங்கை அரச-இந்திய அரச லொபிகளது தளமாகவே இந்த "மாற்றுக் கருத்து"தளம் மாற்றப்பட்டு உருவாகியுள்ளது என்பதே!

இதுள், கணிசமான "படைப்பாளிகளிள்,மனிவுரிமைவாதிகள்-பேராசியர்கள்-புரட்சி காரர்கள்"  எனப் பெரும் சதிக் காரர்களே நமக்குள் நாமாக வலம் வருகின்றனர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.11.2013

Dienstag, November 26, 2013

கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி!

முள்ளிவாய்க்கால்வரை புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனாது,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் போரால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.


எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.

இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடி மறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.

நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழி பறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.சமீபத்தில் இலங்கை சென்ற கவிஞர் ஜெயபாலனுக்கு நடந்தவை குறித்துப்பலரும், பத்துஞ் சொல்வதில் இலங்கை அரசின் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளை நியாயமாக்கமுனைகின்றனர். அரசுவென்பது தனிப்பட்ட வாழ்வில் தலையிடும் பாரிய ஒடுக்குமுறைப் பொறியமைவைக் கொண்டிருப்பதென்பதைத் திட்டமிட்டு மறைப்பதில் அரச லொபிகள் கவனமாக அது சார்ந்தியங்குகின்றனர்.தேனியில் ஜெய பாலன் குறித்த கட்டுரை இந் நோக்கிலேதாம் புரியவேண்டிய வுண்மையை எடுத்துரைக்கிறது.இத்தகைய கட்டுரையின்வழி தனிப்பட்ட கைதுகள் யாவும், அரசியலுக்கு அப்பால் சுய விளம்பரந்தேடலெனும் போக்கில் வைத்துணரப்படவேண்டுமா?

இதுவரை இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கப்படும் அப்பாவிகளின் அடிப்படை மனிதவுரிமையையே காலிற் போட்டு மிதிக்கும் எண்ணங்களை இலங்கை அரசுக்கேற்ப எழுதிக் குவிக்கும் அரச லொபிகளது காலத்தில் இஃது, தமிழ்பேசும் மக்களது அன்றாட வாழ்வாகப் போய்விட்ட இலங்கை அரசின் அத்துமீறிய கைதுகள்-கடத்தல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் அவசியமானதாகக் குறித்துரைக்கப்படுவதை எங்ஙனம் புரிவதென்பதில் உணர்வு மரத்துப் போகிறது.


எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.


"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347


வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.


இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்," வெள்ளை வேன் படங் காட்டுபவர்களாகவும்" தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும், துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.கவிஞர் ஜெயபாலனின் கைதிலிருந்து பல கூறுகளாக விவாதிக்கும் புலம்பெயர்"மாற்றுச்"சிந்தனையாளர்கள்-மண்ணாங்கட்டிகள் யாவரும் தத்தமது வசதிக்கேற்பவே அரசியல் பேசுகின்றனர்.கைது செய்யப்பட்டவனது மனிதவுரிமை-அடிப்படையுரிமை குறித்துப் பேசுவதில் கிஞ்சித்தும் எண்ணிக்கொள்ளாத மனித மனங்கள் எம்மை அச்சப்படுத்துகின்றன!


மனிதவுரிமைசார்ந்தும்-அடிப்படை உரிமைகள் குறித்தும்பேசுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்து அன்றியஃதை, வேடிக்கையான கதையாடலாக்கியும் விடுகிறார்கள்.


இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.தத்தமது இருப்புக்கு நிகரானவொரு விசும்பு நிலைகள் உருவாகுவதையெவரும் பொறுத்துக்கொள்ள முடியாது தலைவெட்டும் அரசியலாகக் காட்டிக் கொடுப்புகள்-குழிபறிப்புகள் தொடர்ந்தியங்குகிறது.தமிழ் மக்களது அரசியலே இந்தக் கதியாய்மாற்றப்பட்டபின் பல ஜெயபாலன்களைக் குறித்துக் கைகாட்டப்படும் சூழலைத் தொடர்ந்தியக்குபவர்கள் புலம்பெயர் தளத்தில் பல்வேறு முகங்களோடு அரசியல் பேசுபவர்களாகவே இருக்கின்றனர்.அவர்கள், நமக்குள் முகத்தைப் புதைத்து வைத்தபடி இலங்கை ஒடுக்குமுறை அரசில் அங்கம் வகிக்கின்றார்கள்!


இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே அழிந்துபோன புலிகளது சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.

எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.ஒரு சாதாரண மனிதனது வாழ்வு,சுக-துக்கம் அவனது-அவளது அகவிருப்புகள் மனிதவுரிமைசார்ந்த அடிப்படையுரிமைக்குட்பட்ட அரசியல் வாழ்வு வரை அனைத்தும் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு மனித இருத்தலே சாத்தியமற்றவொன்றாய் இலங்கை அரசியல்வாழ்வு நமக்குச் சிறை-கைது-கடத்தல் என்ற பற்பல ஒடுக்குமுறைசார்ந்த வன்முறையாக மேலெழுகிறது.ஜெயபாலனது கைதிலிருந்து இஃது காட்டமாகவுணரத்தக்கது - ஆட்காட்டல்-கை காட்டலது அரசியலின் கொடுமை எப்படியென்பதைப் புரியக் காலத்தில் வாழ்ந்தாக வேண்டும்!.


சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும் திட்டமிட்டுச் செயலாற்றும் அரசியல் பண்பானது புலத்திலுள்ள அரச எதிர்ப்பாளரைக் குறித்துக் கை காட்டுவதில் ஒரு வியூகமானவொரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டே செயற்படுவதை மிக நுணுக்கமாக அறியவேண்டும்.


இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இவர்கள்தாம்  "வெள்ளை வேன் படத்தை"க் குறித்துப் பரப்புரைகளும்,ஒத்துழைப்புகளும் நல்கி இத்தகைய தந்திரோபாயத்தை மக்களது விடிவுக்கானதென்று விதந்துரைத்தும் வருகின்றனர்.அரசுக்குக் கை காட்டுபவர்களே கவிஞர் ஜெயபாலனின் கைதை எதிர்த்துக் குரல் கொடுப்பதாகவும் வேடம் புனைகின்றனர்.நமக்குள் எதிரிகள் பல வடிவினில் உருவாகியுள்ளனர்.இவர்களை நமக்குள் இனம் காண நமது பழைய நண்பர்கள் எனும் பாசம் விட்டுவிடுவதில்லை!


இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,எதிர்ப்பரசியலெனும்பெயரில் தொடர்கிறது.நியாயத்துக்காகக் குரல் கொடுப்பதாகவும் கண்கட்டி வித்தைகட்டுகிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப் படுகின்றனர். இத்தகைய பண்பினது விருத்தியே அரசவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பரசியலைப் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.இங்கே,கவிஞர் ஜெயபாலனைக் காலை வாரிவிட்டவொரு குழு மிக வேகமாகவே அரசவொடுக்குமுறையை வெறும் நகைச்சுவையாக்கி ஒனறுமில்லாதவொரு கருத்தாகக் குறுக்குகிறது.அதாவது,பாசிசத்தின் உச்சக்கட்டத்துக்கான முகிழ்ப்புக்களை ஒன்றுமில்லாதவொரு கற்பனையாகக் காட்டுகிறது.


பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.ஆனால்,முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான அரசியலது இருப்பே ஒரு சில எதிர்ப்புக் குரல்களதும், மக்கள் சார்ந்த கருத்துக்களிலும் அதுசார்ந்த சில அமுக்க நிகழ்வூக்கத்திலுமே தங்கியுள்ளது.இத்தகையவொரு சூழலில் ஜெயபாலனைக் குறித்து அபாண்டமான கருத்துக்கள் புனைவதென்பதுகூட  தனிப்பட்ட அரசியலை மையப்படுத்தியதென் பதாகவிருக்கு மென்றும் எண்ணத் தோன்றுமா?


நடந்து முடிந்த யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்புக்குள் மையமுற்ற பல்வேறு குழுக்கள்-அமைப்புகள்,தமிழ்நாடு-இந்தியாவரை மையங்கொண்ட சக்திகள் யாவும்  தத்தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் என்பது உலகறித்தவுண்மை! இன்னொரு வகையில்,தமக்கானவொரு கருத்துக் களத்தை  நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும்வெள்ளை வேன் படங்காட்டி ஒரு வியூகத்தை மெல்ல விரித்துள்ளனர்.


இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!


இத்தத் தருணத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் சிந்தனை செய்ய மறுத்திருந்த கவிஞர் ஜெயபாலனுக்கு இலங்கையில் வைத்துச் சொல்லப்படும் சேதி என்னவென்பதை, அவர், உணர்வுபூர்வமாக உள்வாங்கிச் சொல்லப்படும் காலத்தில் இனம் காணத்தக்கவொரு புலம் பெயர் விசமிகளது குழுமம் மேலும் நமக்குள் புலப்படுத்தப்படும் அரசியல் இத்தகையவொரு நெருக்கடியை மேலும் புரிந்துகொள்ளப் பேருதவியாகவிருக்கும்.


என்றபோதும்,இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கவிஞர் ஜெய பாலனுக்கு மட்டுமல்ல இலங்கை இனவாத அரசால் பல்லாண்டுகளாகச் சந்தேகத்தின் பெயரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும்-அப்பாவிகளும் விடுதலை செய்யப்படும்வரை நாம் அவர்களுக்காகக் குரல் கொடுப்பது மனித இருத்தலுக்கான தோழமைக் குரலே.ப.வி.ஸ்ரீரங்கன்

26.11.2013

Sonntag, November 24, 2013

மாவீரர்கள் நினைவஞ்சலி : 2013

"மக்களுக்காப் போராடிச் செத்தவர்களை"  நினைவுகூரும் அறம்-சில கருத்துக்கள்.


"தமிழீழப் போராட்டம்"  - தமிழீழத்துக்கான அரசியல் நியாயப்பாடுகளெல்லாஞ்சேர்ந்து இலங்கையில் மூன்று இலட்சம் தமிழ்பேசும் மக்களையும் அதன்சகோதர மற்ற இனத்தவர்களையும் கொன்று தள்ளியிருக்கிறது.முள்ளிவாய்க்கால்வரை இனப்படுகொலை அரசியலை மிக நுட்பமாக நடாத்திய இலங்கையை ஆண்ட-ஆளுங்கட்சிகள், இந்த அவலத்தைத் தோற்றுவித்த இலங்கை-அந்நிய அளும் வர்க்கத்தின் சேவகர்களாகவிருந்து இவ்வளவு மோசமான மக்கள்விரோத அரசியலுக்கும் சட்டரீதியான நியாயப்பாட்டை இலங்கையின் இறைமைக்குள் வைத்து நிகழ்த்தி முடித்தார்கள்.


இந்த கோரத்தனமான அரசியல் போக்கின் தெரிவிலின்று 2013 இன் இறுதிக்கட்டத்திலும் நாம் செத்த-சாகடிக்கப்பட்ட போராளிகளுக்கு(மாவீரர்) நினைவஞ்சலி செலுத்துவதில் நன்றியறிதலைச் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.இதுவரையும் தமிழ் மக்களது தலைவிதியை தீர்மானிக்கும் பாத்திரத்தை வகித்தவர்கள் அவர்களது உயிர்-உடமைகளைத் தமக்காக அத்துமீறி அபகரித்தவர்கள்.இவர்களில் கணிசமானோர் இன்னும் உலகம் பூராகவும் பரந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றனர்.இவர்களிற் கணிசமானோர் ஆளும் மகிந்த அரசின் நிகழ்ச்சி நிரலுக்கும்,மேற்குலக அரசுகளது தேவைக்குமேற்பத் தொடர்ந்து நமது மக்களது வாழ்விலும்-இருப்பிலும் அத்துமீறி அதிகாரத்தைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.


புலிகளது ஆயுதங்களும்,போராளிகளும் அழிக்கப்பட்டிருப்பினும் மேற்சொன்னவர்களிடம் ஆயுதமும்,அதிகாரமும் ஆளும் வர்க்கங்களது தயவின்வழியாகப் பரவலாகப்பட்டிருக்கிறது.அல்லது,இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடான தனியார் துணைப்படைகளாகவே இயக்கப்படுகிறது.இது,பெரும்பாலும் அமெரிக்கப்பாணியிலான இராணுவத் தந்திரோபாய நெறிக்குட்பட்ட சிறிய தேசங்களதும் அதன் ஆளும் வர்க்கத்தினும் வியூகமாகத் தற்போது இயங்க்கமுறுகிறது.இத்துணைப்படைகளது தலைவர்கள் பாராளுமன்றக் கட்சி அரசியலது சட்டரீதியான இருப்பில் பெயர்ப்பலகைக்கட்சியின் தலைவர்களாகவும்-பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பேரளவிலான அமைச்சகர்ளாகவும்இலங்கையின் போர்க்கால அரசியல்வரலாற்றில் இருந்தே வந்துள்ளார்கள்.இவர்களது இருப்பு முள்ளி வாய்க்காலுக்குப்பின் இன்னமும் இல்லாதாக்கப்படவில்லை!இதன் அர்த்தம் பேரளவிலான ஜனநாயகத்தன்மை இன்னமும் கானல் நீராகவே இத்தேசங்களில் இருக்கிறது.


தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இந்த "யார்-யாரோ"வுக்குள் மேற்சொன்ன அரசியல்-அதிகாரத்துவ முடிச்சுக்களே மிகவும் பலமானவொரு அரசியல் வெளியைத் தகவமைத்துவைத்து தமிழ்பேசும் மக்களதும் மற்றும் பிற சிறுபான்மைச் சமூகங்களதும் சமூக அசைவியக்கத்துள் தாக்கத்தைச் செய்கின்றனர்.இவர்கள் சமூகவளர்ச்சியின் குறுக்கே நின்று மக்களது அனைத்து ஆற்றல்களையும் சிதறடித்து அவர்களை ஆத்மீக ரீதியகப் பலவீனப்படுத்தி வருகின்றனர்.மக்களை அதிகார வர்க்கங்களுக்காகவும்,அவர்களது கட்சிகளது-தலைவர்களது நலன்களுக்காகப் போராடவும்-கலகஞ் செய்யவும் தூண்டி, மக்களது நலனை மெல்ல இல்லாதாக்கிக்கொண்டுள்ளார்கள்.

மக்கள் தமது நலனுக்கான-விடுதலைக்கான அனைத்து அரசியல் பார்வை-போராட்டவுணர்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டு கட்சிகளதும்-அதிகாரமுடையவர்களதும் நலனுக்கான தொங்கு சதைக் கூட்டமாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்-உதிரி வர்க்கமாக்கப்பட்டுவருகிறார்கள்.இதைக் கணிப்பிலெடுக்காதவர்கள் 2013 இலும்"போராடிச் செத்தவர்கள்-போராளிகளுக்கு"நினைவஞ்சலி செலுத்தவதை மட்டும் தார்மீகக் கடமையாக உணர வைக்கப்பட்ட அரசியலின் தெரிவில், ஒருவித குற்றுவுணர்வுக்குள் மனமுடக்கமுடையவர்களாகவும் இத்தகைய நினைவஞ்சலியின்மூலம் தமது குற்றத்தைப் போக்கமுடியுமெனவும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்." நாம் கடந்தகாலத் தவறுகளை நுணுக்கமாக ஆய்ந்து நினைவுப்படுத்தவில்லையானால் அதுவே மாபெரும் பேரிடி.இதுவே,மீளவும், விட்ட தவறுகளைத் தொடர்ந்துஞ் செய்யத் தூண்டுகிறது. "


முள்ளி வாய்க்கால்வரையான "தமிழீழத்துக்கான" ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து, தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.இந்தக்காட்டிக் கொடுத்தலின் பிதாமக்களான  மேல் நிலைத் தலைவர்களே இன்று இன்னொரு வடிவிலான அகிம்சா வாதிகளாகவும் மக்களைத் தமது எஜமானர்களுக்கேற்ப மனோவியல்ரீதியாகப் பலவீனப்படுத்தி அரசியல் செய்பவர்களாகவும், வலம் வருகின்றனர் .


இவர்களது பின்னே இயக்குமுறும் "மக்களுக்காக"  உதவும் அமைப்புகள்,நிறுவனங்கள் யாவும் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வத்தை வைத்தே அவர்களை மேலும் கையாலாகாத கூட்டமாக்கும் வியூகத்தோடு, இலங்கையிலும்-புலம்பெயர் தளத்திலும் ஒருவிதமான "தேசியக் கோரிக்கைகள்-போராட்டங்கள்"செய்கின்றன.இது,  காலாகாலமாக "மாவீரர் தினம்" செய்யவும், அதன்வழி பெரும் பகுதியான இளைஞர்களைத் தமது பக்கம் தொடர்திழுக்கவும் செய்யப்படும் கண்கட்டி வித்தைகளைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் தொடர்ந்து காணத்தக்கதாவிருக்கிறது.இது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது-செல்ல வைக்கிறது!


இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.இந்தக் கொலைகளுக்கான மூலகாரணமான இலங்கைப் பயங்கரவாத அரசைக் கேள்விக்குட்படுத்தாத முறையில் அவர்களோடிணைந்தியங்கும் இவர்கள், மக்களைத் தொடர்ந்து குறுக்குவழியிலான முறைமைகளில் சிந்திக்க வைக்க முனைகின்றனர்.


இதிலிருந்து மீளும் சிந்தனையானது தொடர்ந்தும்"புரட்சி-சோசலிசம்-மார்க்சிசம்" என்ற போர்iவியின்அல்லது முலாத்தின் மூலம் புறந்தள்ளப்பட்டு,அது சமுதாயத்துக்கு ஒவ்வாத சிந்தனையாகத் தொடர்ந்து பரப்புரை செய்யப்பட்டும், இந்தத் தருணம்வரை மக்களிடம் தமது நலனுக்கான சிந்தனை உளவியல்ரீதியாக வெறுக்கத்தக்கவொரு எண்ணமாக மாற்றப்பட்டுவிட்டது.


இந்த வெற்றியிற்றாம் மேற்கூறப்பட்ட அதிகார வட்டம் தமது ஏகபோகமான அரசியலைத் தொடர்ந்து செய்கிறது-மக்களை அதிகார வர்க்கத்துக்கிசைவாக இயங்க வைக்கிறது.ஆதிக்கச் சக்திகளின் முன்னே பலவீனமானவொரு கூட்டமாகவும்,அவர்களது காலில் வீழ்ந்தும்-நம்பியும் கண்ணீர் சொரிந்தும் சோற்றுக்கு அலையுமொரு மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்டு விட்டனர் மக்கள்!மேலுமிந்த நிகழ்சிப் போக்கு, நடத்தர வர்க்கப் படிப்பாளிகள்,தொழில்முறைரீதியாகத்  தேர்ந்த துறைசார் உழைப்பாளிகளிடமும்  தமிழ் பேசும் மக்களது முற்போக்கு நகர்வை முடக்குவதற்கானதான வாதங்களில் கருத்துக்களைத் தகவமைத்துக் கொள்கிறது. இதுவரையான எல்லாவிதப் மக்கள் விரோதப்போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்ட வியூகமானது, இறுதியில் சரணடைந்த போராளிகளைக் கொன்று தள்ளிய இலங்கைப் பாசிச அரசின்  ஈனத்தனத்தை,இவர்கள் "தியாகமாக்குவதில்" மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.


மக்களோ எல்லாவற்றையும் விசாரிக்க முனையும்போது, மீளவும், அதே வித்iதாகளோடு புலம்பெயர் ஊடகங்கள் உருவேற்ற முனையாவிடினும்,ஒப்பாரிவைத்துக்கொண்டபடி தம்மீது பச்சோதாபங்கொள்ளும் ஒரு இனத்தின் ஒப்புதலைக் குறிவைப்பது,இலங்கை அரசின் ஆளுங்கட்சிகள் மற்றும் இந்திய நலன்களுக்கான பாதுகாப்பு அரணாகவே மக்களைத் தொடர்ந்து இயக்க முனைகின்றனர்.இதற்கேற்பவே நடத்தர வர்க்கப் "படிப்பானிகளை" மெல்லத் தகவமைத்தும் கொண்டுள்ளர்.அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதை மேற் சொன்ன "தேசிய அரசியலும்" ,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.


இலங்கை அரச வரலாற்றில் முள்ளிவாய்க்காலில்  தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ள நிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை. அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.


தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலை கீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இப்படித்தாம் அதிகார வெறிகொண்ட பாசிச    ஜெயலலிதா கூடச் சமீபத்தில் நமக்கு "ஈழத் தாய்" ஆனார். இது, அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.அதிகாரம்-பணப்பலம்,பதவிக்காகத் தமிழ்த் "தலைவர்கள்"  தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாதப் பயரவாத ஆளும் வர்க்கத்தோடிணைத்து ஒப்பீடு செய்து தமிழர்களே அதிகமானவொடுக்குமுறையாளர்களெனவும் வகுப்பெடுக்கிறது.முன்னாள் வடக்குக் கிழக்கு முதல்வர் வரதாராஜப் பெருமாள் அவர்கள் இதையொரு அரசியலாகவே தொடர்ந்து முன்னெடுக்க, அவர்களது அடிப்பொடிகள் இத்தியாவைப் பகைக்காத அரசியலும் பேசிக்கொண்டே இதைக் கடை விரிக்கின்றனர்.தமிழ் மக்கள் இன்னமும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பதில் பல தேர்தல்கள் வந்து விலகுகின்றன.இதுதாம் இன்றைய நமது அரசியல்  யாதார்த்தம்.


இத்தகையவொரு அரசியல் போக்கில் போராடிச் செத்தவர்களும்-சரணடைந்து சிங்களப் பயங்கரவாதிகளால் கொல்ப்பட்ட மக்கள்-போராளிகளுக்காவும் நினைவஞ்சலி செலுத்தும் இந்த 2013, 47-48 வாரத்தில் நாம் தியாகத்தை மதிப்பது மட்டுமல்ல அதைச் சிதறடித்த இன்றைய நமக்குள் இருக்கும் புரையோடிப்போன அரசியலையும்,அதிகாரத்துக்கான நோக்கில் இயக்குமுறும் அதிக்கச் சக்திகள்,அவர்களது நிதியாதிக்கம்வரைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே தியாகத்தை மதித்துக்கொள்ளவும், அதை நினைவுப்படுத்தவுமான தார்மீகவுணர்வை நமக்களிக்கும்.


இதுவல்லாத அனைத்தும், வெறும் சம்பிரதாயச் சடங்கு  நகர்வே. இஃது,ஒடுக்குமுறையாளர்களை எந்தக் கேள்வியுமற்று அங்கீகரப்பதில் போய் முடியும்.நாம் நிறையச் சிந்திக்க வேண்டும் எதிர்கால அரசியல் உரிமை-வாழ்வு குறித்து!ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,

24.11.2013.