Freitag, November 29, 2013

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து...

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து அரசியல்-சோபாசக்தியையும் தாண்டிச் சில குறிப்புகள்!


ன்று, தேவையற்ற தேவையெனப் பேசப்படும் ஜெயபாலனது இலங்கை விஜயமும், கைதும் பரவலாகப் பகரப்பட்ட இலங்கை அரச லொபிகளது நையாண்டிச் சேட்டையைத்தாண்டிப் பலருள் இலங்கை அரச "ஜனநாயகம்"குறித்தும், அதைப் பரவாலாகச் சிலாகித்துப் பேசும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அரச லொபிகள்-சேவகர்கள்ஆகிய "மாற்றுக் கருத்தாளர்கள்-புரட்சியாளர்கள்" தம் மனிதவிரோதப் பக்கங்களது குரலை மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியவொரு செயலாக ஜெயபாலனது கைதின் வழியான இலங்கை அரச நடாத்தை மிகத் தெளிவாகவொரு செய்தியைத் தந்திருந்தது.

அது,பரவலாகத் தனிபட்ட நபர்களது வாழ்வில் எத்தகையவொரு அதிகாரத்தைச் செய்யும் நிலையில் இலங்கை அரச ஜந்திரமும்,கட்சி அரசியலும் செயற்படுகிறதென்பதையும், அதை நேசிக்கும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை லொபிகளது நடாத்தையும் பரவலாக அம்பலமானது.சாதரணப் போராளிகள் விசயத்தில் தலையீடு செய்யும் குறுக்கு வழித் தமிழ் மாபியாக்களது அரசியல் நடாத்தையானது பல்லாயிரக்கணக்கான போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யும் ஊக்கத்தைக் கோரியது முள்ளிவாய்க்கால் வரலாற்றில்!.

அதே போன்று,இன்றுவரைச் சிறையில் வாடும் இளைஞர்களது தலை விதிக்கு யார் யாரெல்லாம் காரணமென்பதையும் ஜெயபாலனது கைதின்வழி அறியத் தக்கதாகவே இருக்கிறது.

ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.

இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்க முடியாது தடுக்கப்பட்ட சிந்தனையாலும்-அரசியல் வாழ்வாலும்தன்னைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.அதன்,ஜீவ மரணப் போராட்டத்தைத் தமது எஜமானர்களுக்கொப்பவே தகவமைக்கும் தமிழ் அரசியல்-ஆயுத மாபியாக்கள் அந்த மக்களது குரலாக ஒலிக்கும் எவரையும் விட்டு வைக்காது மேய்வதற்குத் தயாராகும் நடாத்தையாகவே ஜெயபாலன் கைது இன்னொரு செய்தியையும் குறித்து வைத்திருக்கிறது.




இதுள்,ஜெயபாலன் கைதைப் பரிகாசித்து நையாண்டி புரிந்தவர்களான  இந்த இலங்கை அரச லொபிகள்தாம் கிழக்குக்கும்-வடக்குக்கும் வசந்தம் வரவழைக்க மகிந்தாவுக்குப் பின்னால் கூஜாத் தூக்கி அலைவதைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் இப்போதெல்லாம் பரவலாக அறியத் தக்கதாகவே இருக்கிறது.

இந்த இலங்கை அரச லொபிகளது எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாகத் தொடர்கிறது.பாசிச அரசின் கொடிய அடக்குமறையை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டுத் தனி நபர்களைக் கொடியவர்களாகவும்-கோமாளிகளாகவும் வர்ணிக்கும் அரசியலை இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்த சூழ்நிலைதாம் என்ன?

இன்று, பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும்,இலங்கை இனவாத அரசும் அதற்குத்துணையாகியுள்ள புலத்து "மாற்று அரசியல்"மாபியாக் குழுக்களும்  அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.

இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தவர்கள் அன்று.இன்றும், அதே கொலைவெறியும்,குறுக்கு வழிப் பலாத்தகார அரசியலும் தனிநபர்கள்மீதான அடக்குமுறையை இவர்களிடம் கோரிக்கொள்வதால் இவர்களது லொபிகளான புலத்து மாயாக்களது மன வக்கிரமே ஜெயபாலன்மீதான நையாண்டியாக சூழ்ச்சிமிக்க பரப்புரையானது.இதை, அப்வப்போது ஆமோதித்த " நபர்கள்-புரட்சிகரப் படைப்பாளிகளென" க் கூறுபவர்கள் செய்த அரசியலானது அப்பட்டமான அயோக்கியத்தனமானது.

கண்ணெதிரகண்டால் கோப்பையை எடுத்து உணவு போடும் இந்தக் கூட்டம், காணதிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் கத்தியைக் குறிவைத்து வீசிக்கொண்டிருக்கிறது.இது,ஜெயபாலனது கைதின்பின் நமது "மாற்றுக் கருத்து மனிதாபிமானிகள் " செய்த நையாண்டி அரசியலிலும்,இலங்கை அரசுசார் கருத்தூன்றல்களிலுமாக நாம் அனைவரும் உணரத்தக்கவொரு வெளியைத் தொடர்ந்து இனங்காட்டியது.இந்த வெளிக்குள் இயங்குபவர்களைக் குறித்தே நாம் அச்சப்படவேண்டும்.இவர்கள்,நமக்குள்ளேயேதாம் நாமாக நட்பாடுகிறார்கள்-புரட்சி-விடுதலை பேசுகிறார்கள்.இலங்கை அரசின்"ஜனநாயகத்தை"க் குறித்துப் பரவலாகச் சிங்கள மக்களது அக நெறியுள்-மனோபாவத்துள் வைத்து விளக்கி அஃது,தமிழ்ச் சமூகத்தின் அராஜகப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவொரு உயர்ந்த பண்பாகப் பேசவும் -இயங்கவும் முனைகின்றனர்.

இவர்கள்,தமிழ் மக்கள் சமுதாயத்தைக் அராஜகவாத-ஜனநாயகப் பண்பறியாக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கின்றனர்!

தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச ஒடுக்குமுறையை,அதனால் மக்கள் பட்ட-படும் வலியை,வாழ்வுச் சிக்கலையெல்லாம் புறந்தள்ளும்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் புலம் பெயர்  இலங்கையரசின் லொபிகளால் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய முடியவில்லை.மாறாக, இவர்கள்,அரச-இயக்க வாதக் குழுவாதத்துள் இயங்கியபடி மக்களைக் கருவறுக்கு அரசியற் கருவூலத்தைத் தமது இலக்காகவே வரிந்துகொண்டனர்.இதை,அச்சொட்டாக முன்வைத்த சந்தர்ப்பத்தை கவிஞர் ஜெயபாலனது கைதின் பின்னே நாம் பரவலாகப் புரியும் தருணத்தை இவர்களே நையாண்டி எழுத்துக்களது வழி அராஜக அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தினர்.இதைப் புரிய மறுக்கும் ஒவ்வொரு நபரும் இவர்களுக்குடந்தையாகவே இயங்குவதில் துணைபோகின்றார். சோபாசக்தியின் முக நூல் நிலைத் தகவலில் கைதாகி விடுதலையான ஜெயபாலனை நோக்கி "இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என நையாண்டிய பேசிய கருத்துப்படம்பிரசுரிமானது.இதைப் பரவலாக அனைவரும் பார்த்திருப்பார்கள்.அதன் அரசியல் என்னவாக இருக்கும்?

இத்தகைய அரசியலானது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.ஒருவரது வாழும் உரிமையையே இது தட்டிப் பறிப்பதற்கெடுக்கும் முயற்சியல் நையாண்டித்தனமாகவுரையாடிக் கொண்டு முகதுக்கு நேரே நல்ல "தோழமை"முகமூடி தரித்து நிற்கிறது.

ஒடுக்கப்படும்-ஓடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காக- அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.ஜெயபாலனது கைது குறித்துப் பேசப்பட்ட உரையாடல்கள் இலங்கையின் அரசியல்வறுமையை எடுத்துரைக்கிறது-நமது தோழமைசார்ந்த அக வயக் குறைப்பாட்டு அரசியலைத் தெட்டத் தெளிவாக்கியது.இது,ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்காது ஒடுக்கு முறையாளர்களோடு சமரசமாகப் போவதன் அரசியலைப் பல தளத்தில் வைத்துரையாடியது.அங்கே,இயக்க-குழுவாத மாயையும் அதன் விசுவாசத்தின்மீதான தனிநபர்கள்-தலைவர்களது விருப்பின் பயன்வினைகளாக வலம் வந்தனர் புலம் பெயர் கருத்துக் கந்தசாமிகள்-லொபிகள்!

புலம் பெயர்ந்து வாழும் நமக்குள்-மாற்றுக் கருத்து மந்தைகளுக்குள்  எது நடந்தாலும் "தப்பித்தல்" சாத்தியமாகிறது. அல்லது ,ஏலவே "தீர்மானிக்கப்பட்ட"அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.ஜெயபாலன் கைது குறித்து கமுக்கமாகவிருந்த நமது "பேராசிரியர்கள்"படைப்பாளிகள் எனப் பெரும் பழைய நண்பர்கள் கூட்டம் புலத்தில் அம்பலப்பட்ட கையோடு அது,இப்போது முகத்துக்கு நேரே தோழமை வலியுரைக்கிறது.இதன் தொடரிற்றாம் சோபாசக்தியும் இணைவுறுவதாக நான்குறித்துரைக்கின்றேன்.

சமூகத்தில் இன்று நிகழும் "வன் கொடுமைகளை" இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத "அத்துமீறிய"அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.இலங்கை அரசின் வன் கொடுமைகளை நகைப்புக்கிடமானவொரு உரையாடலாக்கும் சூழலை வைத்தியக்கும் ஒரு கூட்டம் சொல்லும் "தோழமை"என்பது என்ன அர்த்தத்தோடு நமக்குள் இயக்கமுற முனைகிறது?

புலிகளது அராஜக அரசியலை ஒப்பிட்டு ஆளும் "மகிந்த அரசுக்கு- அது செய்யும் மக்கள் நல அபிவிருத்திக்காக -ஜனநாயகச் சூழலுக்காக" எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும். சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனித வளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் செல்லாக் காசாகிறது.இதுவே,நமது "தோழர்கள்"தம்அன்றாட நடாத்தையில் வைத்துப் புரியத் தக்கது.

இந்தப்  புலத்துத் தாதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.அப்படியொரு நியாயமற்ற பண்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களது உரையாடல்கள் யாவும் இலங்கை அரசுக்கு-கட்சி அரசியலுக்கு லொபிகளாக மாற்றப்பட்ட குழுக்களது மலினப்பட்ட புனைவாக எடுக்கப்படாது.மாறாக, இது திட்டமிட்டவொரு அரசியல் பண்பாக நம்மெல்லோரது அகத்திலும் கட்டியமைக்கப்பட்ட கருத்தியல் போராட்டமாக முன்னெழுகிறது.

இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக, ஒரு இனத்தைச் சீரழிக்கும் "கிரிமனல்கள்" எனும் படி சொல்லலாம்.

அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.ஜெயபாலனது கைதுக்குப் பின்நாம் தெளிவாக இனங்கண்வுண்மையானது,  புலம் பெயர் இலங்கை அரச-இந்திய அரச லொபிகளது தளமாகவே இந்த "மாற்றுக் கருத்து"தளம் மாற்றப்பட்டு உருவாகியுள்ளது என்பதே!

இதுள், கணிசமான "படைப்பாளிகளிள்,மனிவுரிமைவாதிகள்-பேராசியர்கள்-புரட்சி காரர்கள்"  எனப் பெரும் சதிக் காரர்களே நமக்குள் நாமாக வலம் வருகின்றனர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.11.2013

Keine Kommentare: