Sonntag, September 05, 2010

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.


"லைவர்"உரை நிகழ்த்துகிறார்.அவரது தலைவரான மிகந்தா மாத்தையாவோ நல்லூர்த் திருவிழாவில் பெரிய-பெரிய துப்பாக்கி(எஸ்.எல்.ஆர் போன்ற அமைப்புடன்) பிளாஸ்றிக்கில் விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்தத் துப்பாக்கிகளை யாழ்ப்பாண மக்கள் பரவலாக வேண்டிக்கொண்டிருக்கினமாம்.

தென்னிலங்கைச் "சகோதரர்கள்"இந்தத் துப்பாக்கி வியாபாரதை மிகப் பரவலாகத் திருவிழாவில் செய்கின்றனர்.யாழ்ப்பாணப் பெரிசுகளிலிருந்து,சிறுசுகள்வரை துப்பாக்கி வேண்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்-வேண்டித் தள்ளுகிறார்கள்!


இது குறித்து இந்தத் தலைவர் ஏதாவது தனது மக்களுக்குக் குறிப் புணர்த்தினரா?எல்லாம் தெரிந்த டக்ளஸ் மாத்தையாவுக்கு இந்தப் புலம் தெரியாதா என்ன?அவரும் தொடர்ந்து தனது மக்களைக் காட்டிக் கொடுக்கலாம்.

ஒரு போராட்டத்துக்குள்ளிருந்த மக்கள் சமுதாயம்,இனவொடுக்குமுறைக்கெதிரான ஆழ்மன அழுத்ததிலிருந்து இன்னும்விடுபடாத சமுதாயம் இத்தகைய துப்பாக்கித் தாகத்தை இயக்கவாத மாயையிலிருந்து விளையாட்டுத் துப்பாக்கியாக நுகரும்போது அஃதே ஆழ்மனவிருப்பாகக் கணிக்கப்படும்.

மகிந்தாவின் அரசுக்கு மிகச் சாதகமான கருத்தொன்று வைக்கப்படப்போகிற அபாயம் இந்தத் துப்பாக்கி விற்பனைக்கூடாக முன்வைக்கப்படப் போகிறது.

யுத்தத்துக்குப் பின்பான யாழ்ப்பாண மக்களது மனங்களை-சமூக உளவியலை அளக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்கும் நாடகத்தில் சாகடிக்கப்படும் சிவில் உரிமைகள் குறித்து எதிர்காலம் பேசும்.

யாழ்ப்பாண மக்கள் இன்னும் துப்பாக்கியை மறப்பதற்கில்லை.அவர்களது மனங்களில் எண்ணக் கருவாக இருக்கும் துப்பாக்கிமீதான காதல் அழிவதற்கு இன்னும் பல வருடம் எடுக்கும் என ஆய்வாளர்கள் சொல்வர்.

பிறகென்ன?

இராணுவ ரீதியான கண்காணிப்பும்,இராணுவக் கெடுபிடியும் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும்.

இந்த விளையாட்டுத்துப்பாக்கி விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல.அவர்கள் எமது மக்களது மனங்களை அளவிடுகிறார்கள்.அரசினது சமூக ஆய்வாளர்களும்,அவர்களது பணியாளருமெனப் பலர் இதுள் இயங்குகிறார்கள்.

பாவம்பிடித்த நமது மக்களோ அப்பாவித்தனமாகப் பற்பல துப்பாக்கிகளை வேண்டித் தமது தாகத்தைத் தணிக்க அடுத்த இராணுவ நெருக்குவாரம் தொடரலாம்.

தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பது,அவர்களது எண்ணங்களை அறிவது-ஆய்வதெனச் ஸ்ரீலங்கா அரசு மிக வேகமாகக் காய் நகர்த்துகிறது.துப்பாக்கி வேண்டும் குடும்பங்கள் கண்காணிக்கப்படுவர்.

எல்லாம் அவன் செயல்-இன்ஷா அல்லா!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.09.2010