Samstag, Mai 19, 2012

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த"தமிழீழப் போர்",நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

"இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்",அன்றி,"அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை."அஃது,"தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை" என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்."என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.



இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

"இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்"என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது "இந்தகைய நமக்குள் இருக்கும் " லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான "ஈழப்போராட்டம்" ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய "நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற" என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த "இந்திய லொபி" நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.05.2012

Samstag, Mai 05, 2012

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை!

"உழைப்பவர்கள் தம்மை விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக உலாவருவதற்கான விடுதலைப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தைப் பற்றி உழைப்பவர்கள் கொண்டுள்ள சிக்கலான உற்பத்தி - ஆன்மீக உறவுகளின் உயர்ந்த மட்டப் பிரகடனமாகும்.அதற்கு மற்றெல்லா உறவுகளையும்விட உழைப்பு என்ற ஒரு படைப்பே பொதுவானது."



இங்கு,எவர்கள் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு,எப்படி விலகுவார்கள்?எஜமானர்கள் விட்டு விடுவார்களா?என்று மட்டும் கேட்டு மேலே செல்லலாம்.

"" உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவைஇ தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட  வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்  போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது."""


ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!இத்தகைய பட்டியலை வாசித்தவர்களே இப்போது தியாகிகள்,போராளிகள் பட்டியலையும் வாசிக்க முனைகிறார்கள். களத்திலிருந்து இறுதிவரை விலகாதவர்கள் குறித்துக் களத்திலிருந்து இந்தியாவுக்கு, இராணுவத்துக்கு தகடு கொடுத்த புலிக் கவிபாடிகளோ நீண்டவொரு தகட்டைச் சொருகிக்கொண்டிருக்கின்றனர்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே ஒட்டக் கருவறுத்த இந்தக் கரையான்களைக் கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப் பிலிட்டுக் கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.


புலித் தகடு கருணாகரன் கோஷ்ட்டி சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப் போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"கவிஞர்"கருணாகரன-நிலாந்தன் எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!


இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள். தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம். சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.இந்தக் கருத்துக்களை காலச் சுவட்டில் பதிந்த கருணாகரனோ இப்போது புலிகள் செய்த விட்டேந்தி விடுதலை"ப்போரை-கைக்கூலி அடியாட்படைச் சேவையை மொழுமொத்த தமிழ் மக்களது போராட்டமாகத் தோல்வியாகக் காண்பிப்பதன்வழி,மக்களை மீளக் காயடிக்கும் நயவஞ்சகத்தைக் கொண்டிருக்கின்றார்.


புஸ்பராணியின் நூலுக்கான புண்ணியவானின் முன்னுரையோ மக்களது கடைசி நம்பிக்கையையும் தோல்வி கண்ட புலிகளோடு பொருத்தி அவர்களைச் செய்பாடற்று இருக்கும்படியும்,"உங்கள் போர்" தோற்றுவிட்டதாகவும் காட்டும்போது, அந்நிய அரசுகளது கைக்கூலிகளான தமது ஏஜெண்டு வேலைகளை மூடி மறைக்கின்றனர்.






அவர் கூறுகிறார்: " சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியேஇ எதிர்த்தரப்பின் மீதேஇ இலங்கை அரசின் மீதே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு.  இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால்இ இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக - அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானதுஇ எவ்வளவுக்குச் சரியானதுஇ எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ?"- டLTTE கருணாகரன்

புலிகளது தோற்றத்திலேயே அஃது, அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம், இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டியது  முள்ளி வாய்க்காலுக்குப்பின்.


இப்போதோ, இந்தக் கூட்டம் புலிவழியான போராட்டத்தை முழுமொத்த தமிழ் மக்களது போராட்டாமாகக் காட்டி பல்முனை நாடகத்தை அரங்கேற்ற முனைகிறது.புலியினது கைக்கூலி அடியாட்படைச் சேவையை ஈழத்தமிழர்களது போராட்டச் சிதைவாகக் காட்டுவதனூடாகப் புலிகளது அந்நிய அடியாட்படை வரலாற்றை மறைத்துத் தமது அந்நிய எஜமானர்களைக் காக்கவிரும்புகிறது-தொடர்ந்து தமது எஜமானர்களைத் தமிழ்பேசும் மக்களது மீட்பர்களாக்குங் கைகாரியத்தில் தமது பணியை முடுக்கி விடுகிறார்கள்.இதன்வழியேதாம் இந்தியாவைப் பகைக்காத தமிழரது போராட்டம் அமையவேண்டுமெனவும் பாடம் புகட்டுகின்றனர்.இதைச் சமீபகாலமாக நிலாந்தன்,கருணாகரன் போன்றவர்ர்கள்மட்டுமல்ல யாதீந்தரா வென்ற புனைபெயருக்குள்ளும் தலை புதைத்துப் பரப்புரையாக்கிக் கருத்துமட்டத்தில் அதையொரு அரசியலாகவும் முன் தள்ளுகின்றனர்.


இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.

" போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்இ சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவைஇ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விடஇ அமைப்புகளின் உள்ளேஇ கட்சிகளின் உள்ளேஇ போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும்.  விருப்பு வெறுப்புகள்இ உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால்இ அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்."  -LTTE  கருணாகரன்



புலிகளது தோல்விக்குத் தமது கைக்கூலிச் செயற்பாடுகளும்,அந்நிய அரசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ் மக்களது போராட்ட நியாயத்தைக் குறித்தும் மௌனிக்க வைக்கும் இந்த ஈனத்தனமானது, புலிகளது கீழ்மட்டப் போராளிகளைத் தாம் எங்ஙனம் அந்நியப் படையணியாக்கியதென்பதை வரலாற்றிலிருந்து மறைப்பதன் உள் நாடகமாகும்.இதன்வழி மீளவும், தமிழ்பேசும் மக்களது பெயரைச்சொல்லி அவர்களைக் காயடிக்கும் கபடம் நிறைந்த இந்திய அரசினதும்,உளவுப்படையினதும் இன்னொரு சுற்றைக் காவிவரும் இந்தக் கருணாகரன்கோஷ்டி மிக ஆபத்தான பேர்வழிகள் என்பதை நான் மீளச் சுட்டுகிறேன்.


இத்தகையத் தகட்டுப் புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.


இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது, அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்"ஈழமென்றும், தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும், சரணடைந்தும்-வார்தைகளினால்  தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது பெயரால் பொதுமைப்படுத்தி,உள்ளே ஏற்பட்ட தவறுகளாகக் காட்ட முனைவதில் எந்த அந்நிய அரசைக் காக்க முனைகின்றனர்?


முழு மக்களதும் தவறாகப் புலி இயக்க வாதத்தையும் அதன் கைக்கூலிப் போராட்டப்பாத்திரத்தையும் தணித்துக் கருத்துக்கட்டியபடி தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.


"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
 அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
 இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
 எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!


இருள் சூழ்ந்த நாளிகையிலே
 பலரைத்தின்றுவிட்டு
இந்தியாவிலும்,கிளிநொச்சியிலிருந்தும்
 இரை மீட்கிறாய்" இன்று.



"குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில்இ  பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில்இ செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்."


முதலில் புலிகள் செய்த போராட்டத்தைக் கருணாகரன்"ஈழப்போராட்டம்"(சுயநிர்ணயத்துக்கான)என்று பொதுமைப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கிறார்.இதன்வழி சுயநிர்ணயத்துக்கான தமிழ்பேசும் மக்களது போராட்டம் என்பது காலவதியாகியது என்ற இந்திய மேலாதிகக்கக் கருத்தியலை மெல்ல மக்கள்மத்தியில் மொழிகிறார்.அதை எவரூடாக மொழிகிறாரென்றால் அங்கென்றுமிங்கொன்றுமாக வரலாறெனக் கொட்டப்படும் வெறும் அநுபவவயப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் நபர்களது தயவிலிருந்து, இவற்றைச் சொல்கிறார்.இதுவரை புலியினது மர்மத்தையே கலைக்முடியாதிருக்குமொரு சூழலுக்காக முழுமொத்த உறுப்பினர்களையும் கொன்று குவித்த அந்நியக் கைக்கூலிகள், அந்தத் துணிவிலிருந்தே வரலாற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டியொட்ட முனைகின்றனர்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில்தம்மால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களை தமது நோக்கத்தை ஓரளவு தகவமைத்துபோது வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் சுயநிர்ணயத்துக்கான-சிங்கள இனவாதவொடுக்கு முறைக்கெதிரான போராட்ட ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று,இந்திய அரசால் ஆயுத இயக்கங்களாகத் தோற்று விக்கப்பட்ட அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் எஞ்சிய கைக்கூலி அமைப்பினால்நடாத்தப்பட்ட எதிர் புரட்சிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது,அந்நிய அரசினது நலனுக்குட்பட்டும், இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் இலங்கையின் அனைத்து மக்களும் அழிவுற்றார்கள்.இதற்கு நல்லவுதாரணமானது: அநுராதபுரப்படுகொலையும்,யாழ் முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலும்-கட்டாய வெளியேற்றமு மாகும்.


முஸ்லீம் மக்கள மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களும் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு கைக்கூலிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் செய்யும் போலி வரலாறே இந்தப் புலிகளது அழிவை முழுமொத்த மக்களது தவறாக வர்ணிக்கும்ஆலோசனைகள்-அரசியல்கள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும்அந்நியச் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றுபட்டவொரு புரட்சிகரமான கட்சியின் வரவை அவர்கள் எப்போதும் அநுமதியளிக்கத் தயாராகவில்லை!


இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது போரிடும் ஆற்றலைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.இவர்களே இன்று கிழக்கில் ஞானமாகவும்-கருணாவாகவும்,பிள்ளையானாகவும் உருபெற்றபோது வடக்கில் கருணாகரன் நிலாந்தன் போன்றோர்கள் கல்வி மட்டத்தில் இறங்கி விளையாடுவது மிகத் தந்திரமானது. முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான வரலாற்றுக் கட்டத்திலெழும் அனைத்து ஆக்கங்களிலும்,அறிவுசார் எழுத்துக்குள்ளும் இவர்கள் திடிரெனப் பிரவேசிக்கின்றனர்.அந்த எழுத்துக்களது திசையையே மாற்றியமைக்கும் வியூகத்தோடு திறம்படவியங்கும் இவர்களை மெல்ல உள்வாங்க வேண்டிய நிர்பந்தத்துள் மக்கள் இருத்தி வைக்கப்படுவது கெடுதியானது.


"அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? சுயவிசாரணை என்பதும்இ சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாகஇ ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி  தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது."


புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத் தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளை பொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில், மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!
இத்தகையொவொரு அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை தேசியச் சக்தியாவும்,மக்கள் படையாகவும் வர்ணித்த கருணாகரனோ இன்று புஷபராணியினுடைய"போராட்ட"அநுபவதைக் குறித்து முகவுரைவெழுதும்போது யாருடைய சேவையில் இதுவரை இவர்களது போராட்ட அநுபவங் மையங்கொண்டிருந்தனவெனக் கேட்டுத் தொலைத்தால்"நாய்கள் பூனைகளோடு கூடுவதில்லை"என்ற மொழிவழி இவர்களது கரச் சேவையின் கூட்டுப் பொதுத் தளத்தில் புரியத் தக்கதே!

யாருடைய தோல்வியையும்,போராட்டத்தையும் குறித்து சுய விசாரணைக்கு அழைக்கின்றார்.எவருடைய இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருத்துவத்தை கருணாகரன் மச்சான் பேசுகிறார்?மக்களே பங்குபெறாத புலிவழிப் போராட்டத்தில் எந்த மக்களது தோல்வியைப் பேசச் சொல்கிறார்?


அதைத்தானே நீங்கள் இதுவரை செய்து முடித்தீர்கள்?


மக்களைத் தோற்கடித்த பின்புதானே புலிகளது இருப்புச் சாத்தியமாச்சு?பின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்?.


எப்படிப் புலிகளான அந்நியக் கைக்கூலி அமைப்பு மக்களைத் தோற்கடித்ததென்பதை அதன் உச்ச பரப்புரைக் கவிஞர் நீங்கள்தாம் பேசியாகவேண்டும்.எப்படி அந்நியக் கூட்டை இயகத்துக்குள் உள்வாங்கி, அந்நியர்களது நலனுக்காகச் சிறார்களைக் களத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தீர்களென்று கூறுவதிலிருந்து தொடருங்கோ.அதுவே,நியாயமான முறையில் நமது மக்களால் விசாரிக்கப்பட முடியும்.


"எச்சங்களில்
 "எந்த எலும்பு" உனது உறவினனதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
 எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"

இதை எழுதிய எனது மை உலர்வதற்குள்ளேயே,உனது பிதற்றல் எனது செவியோரம் வந்து தொலைகிறது.காலம் எவ்வளவு  வேகமாக நகர்கிறது!



"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது”  என்ற புஷ்பராணியின்  வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும்இ எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்!"


இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய-மேற்குலக அந்நிய நலன்களது புவியியற்அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம்தமிழர் மகா சபையாக இருந்தாலுஞ்சரி  தமிழரசுக் கட்சியானாலுஞ்சரி அல்லது அதன் தொங்கு சதைகளான தமிழ் இளைஞர் பேரவையாகவும் இருந்தாலுஞ் சரி தோன்றிக்கொண்டன.இவை சுயமாக பரந்துபட்ட தமிழ் மக்களது பிரச்சனையிலிருந்து புரட்சிகரமாகத் தோற்றங்கண்ட கட்சிகளோ,அமைப்போ கிடையாது.மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் மட்டுமல்ல நமது தமிழ்ச் சமுதாயம் சாதியரீதியாகவும் பிளவுண்டு கிடந்தபோது அவற்றைப் புரட்சிகரமாக அணிதிரட்ட வக்கற்ற இந்த நவலிபரல் பொருளாதாரத்தின் கள்ளக் குழந்தைகளான கட்சிகள் எவருக்காகவோ உணர்ச்சி அரசியலூடாகப் பரந்துபட்ட மக்களைக் கவரும் மொழிவாரி வெறியைக் கிளறி அரசியல் செய்தனர்.அந்த அரசியல் பேரத்தில் தோற்றுக்கொண்டிருந்தபோது"தமிழீழம் " கோசமாகிறது. அதையே இந்தியப் பிராந்திய நலனானது மிக நுணுக்கமாகக் கையகப்படுத்தி இலங்கையில் தனது கைவரிசையை இன்றுவரை தொடரும்போது"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தான் செய்கிறது"என்பது எவருக்கான இலட்சியம்?எதற்கான கண்ணீர் என்பதைக் களத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களது குழந்தைகளது உடல்களில் உரைத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்!


"இந்த நிலைஇ போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால்இ இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது."


இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி "ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று "ஈழப் போராட்டம்"என்று தமிழைத் தவிர்த்துக் தகடு கொடுக்கின்றனர்.கருத்தியல் பரப்பைப் பாருங்கள்.தமிழீழம் என்றனர் பின்பு ஈழமென்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பான நபருக்கேற்பக் கோடுகளை வரைகின்றனர் புலிகள்.

இந்தப் புலிப்பினாமிகளின் காரியவாத அரசியலானது "ஈழப்போராட்டத்தின் தோல்வி" சிதைவு குறித்துப் பொதுப்படையாகத் தமிழ் மக்களை அழைத்துக் கருத்துக்களை உருவகப்படுத்துகிறது.ஈழப்போராட்டத்தின் சிதைவுகுறித்த துக்கம் குறித்த உண்மையைத் தமிழர்கள் உணரவில்லையாம்.தமிழ்பேசும் மக்கள் அதை ஏன் உணர்ந்தாகவேண்டும்?அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்?அதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்.


"புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”


தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.

இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! ஈழவிடுதலை இயக்கங்களின்  எழிச்சிகள் அந்நியச் சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன. இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து  தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.இதைப் புஷ்பராணி அநுபவமாகப் பேசியிருந்தால் நிச்சியம் இந்தக் கருணாகரனிடம் முன்னுரை வேண்டிக் குஞ்சங் கட்டியிருக்கமாட்டார்.

தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த அந்நியக் கைக்கூலிப் புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் இந்திய-மேற்குலக அநுதாபிகளும்இன்றும் "ஈழத்தை" சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?

தமிழ்ச் சமுதாயத்தின் முழுத் தோல்வியாகப் பகரப்படும் இந்த அந்நியக் கைக்கூலிகளது தமிழ்ச் சமுதாயத்தின் உரிமை மீதான காட்டிக்கொடுப்பை,ஈழப்போராட்டத்தின் பெயரால் தோல்வியென வகுப்பெடுக்கும் இத்தகைய கயவருக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்:

தமிழ்ச் சமூகத்தை இத்தகைய முறையில் மொட்டையடிக்கும் வலு புலிகளுக்கும் அந்நியச் சக்திகுளுக்கும் வாய்க்கப் பெற்றதற்கு,தமிழ்ச்சமுதாயத்துள் நிலவிக்கொண்டிருக்கும் பழைய ஏற்றதாழ்வுகளும்,விரோதங்களும் காரணமல்ல.மாறாக,இஃது தமிழ்ச் சமுதாயத்துள் உருவாகிய ஒரு உத்தேச ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான காரியத்தின் விளைவாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

05.05.2012