Samstag, Mai 19, 2012

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த"தமிழீழப் போர்",நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

"இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்",அன்றி,"அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை."அஃது,"தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை" என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்."என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.



இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

"இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்"என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது "இந்தகைய நமக்குள் இருக்கும் " லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான "ஈழப்போராட்டம்" ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய "நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற" என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த "இந்திய லொபி" நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.05.2012

Keine Kommentare: