Donnerstag, Januar 24, 2008

வவ்வாலின் இறக்கையெழுப்பும் ஒலியோ...

மரணத்தின் விளிம்பில்
குந்தியிருக்கும் முற்றுப் புள்ளி!


ருண்டு
மெளனித்துக் கிடக்கும் மேகத்துக்குக்கீழ்
இடித்தொதுங்கும் வவ்வால்
தூங்க மறுக்கும்

உருண்டு
உருவமிழக்கும் உணர்வுப் பொட்டலத்துள்
இருப்பதெல்லாம் வினையும்,வீம்பும்
எஞ்சிக் கிடக்கும் காலத்தையேனும் அறிந்தபாடில்லை
சொற்பத்துள்
இருள் படரும் ஒரு தினத்தைவிட
என் ஆயுள் நீண்டதில்லை


வவ்வாலின் இறக்கையெழுப்பும் ஒலியோ
அத்துமீறிய அதிர்வுகளை உணர்வுக்குள் எறிந்தபடி
இருந்த இடத்தை மறப்பதற்கு
இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும்
மரணத்தின் விளிம்பில் குந்தியிருக்கும் முற்றுப் புள்ளி


திரைவிலகும் ஒரு திசை வெளியில்
குத்தியெழும் அரண்ட மொழிவோ
அச்சத்தைத் தந்தபடி
அரவணைத்து ஆறுதலைச் சொல்வதற்கு
அன்னையோ நீண்ட தூரத்தில்
இனி அவள் வருவதற்கில்லை!

எனது
நித்தியங்கள் தலை குப்பற வீழ்கின்றன
நினைத்துப் பார்க்கவே மனது மறுக்கும்
கருமைப் புள்ளியில்
அறுந்து தொலையும் என் ஆணவம்
கடிகார முள்ளில் சிக்கிய உயிரோ
சுழன்றெழும் இன்னொரு பொழுதில் மீளத் தலை குத்தும்

என் தலையில் குவிந்திருக்கும் கறையான்கள்
அரித்துப்போட்ட அமைதிக்கு நாளை கருமாதி
எரிந்தொதுங்கிய சாம்பலுள்
கரித்துண்டாய்க் கிடக்கும் அநாதையுணர்வுக்கு
இன்னொரு பொழுதில்
கணிசமானவொரு உறை கிடைக்கும்


முடமாகக் கிடக்கும் காலத்துள்
நினைவு முறிக்கும் உண்மைகள்
ஏற்க மறுக்கும் தடங்களில்
இருப்பிழக்கும் மனித வெளிகள் இருண்டு கிடக்கும்


எந்தத்தேற்றமும்
ஊன்று கோல் தருவதற்கில்லை
முடங்கிக் கிடக்கும்
உருவமிழந்த இதயத்துள் எலி பிராண்டும்
பூனைகளின் பசித்த தவத்துள் அது சாகக் கிடக்கிறது


என்னைப் பிய்த்தெறிவதற்கு
பேரங்களோடு கட்டப்படும் சூன்யத்துள்
என்னதான் இருந்திட முடியுமென்பதை
இதுவரை நானோ அல்லது
என் மரணமோ அறிவதற்கு அவசியமில்லை


வவ்வாலின் வாயுள்
சிட்டுக் குருவிக்குப் பலிப்பீடம்


ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, Januar 19, 2008

துக்ளக் சோ இராமசாமியும்...

துக்ளக்-சோ இராமசாமியும்

ரீ.பி.சீ.இரமாராஜனும்

ஈழத்தமிழரின் இதயக்கனிகள்!


இன்றைய உலகத்தில் இனவிடுதலைப் போராட்டத் தரணங்களின் குறிப்பிட்ட இனங்களுக்கிடையிலான அரசியலென்பது குறிப்பிட்டவொரு தேசத்தின் ஆட்சி,அதிகாரத்துக்குள் நிலவும் முரண்பாடுகளோடு முட்டிமோதி எழுவதல்ல.காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவக் காலக்கட்டத்திலும் இன்றைய ஏகபோக முதலாளித்துவத்தின் அதீத ஏகாதிபத்திய அரசியல் எத்தனிப்பாலும் ஒரு இனமோ அல்லது தேசமோ அரசுகள் எனும் கூட்டுத் தேசங்களின் நலன்களின் விளைவுகளுக்குள் மிக இலகுவாக உள்வாங்கப்பட்டு,அத் தேசங்களின் பொருளாதார ஆர்வங்களின் மூலதனக் குவிப்புக்கேற்றபடியே கட்டுப்படுத்தப்படுகின்றன.இன்று ஏகபோகப் பெருங்கம்பனிகளின் பொருளாதார முன்னெடுப்புகள் வெறுமனவே சந்தையை நோக்கியதாக இருக்கவில்லை.மாறாக, மூலவளங்களை தேடுகின்ற மிக மூர்க்கமான போட்டி யுத்த முனைப்போடு தேசங்களை நவீன அடிமைத் திட்டவாக்கத்துள் கையகப்படுத்துவதில் பாரிய மனிதவிரோதமான அரசியலை முன்னெடுக்கின்றன.இவையே தத்தமது தேசப் பொருளாதாரக் கேந்திர முக்கியத்துவத்தை நோக்கிய ஆர்வங்களின் வழி தோன்றிய வியூகத்தைப் போராடும் தேசத்தில் இனங்களுக்கிடையிலான "தீர்வாக"ஒப்பந்தம் போடுகின்றன(இலங்கை-இந்திய ஒப்பந்தம் மற்றும்,இலங்கைச் சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் இராஜீவ்காந்தியை பிடரியில் அடித்துப் படுகொலை செய்ய முற்பட்டதையும் கண்முன் கொண்டுவாருங்கள்!அந்த இராணுவச் சிப்பாயின்பின் எவர் நின்றார்கள் என்பதும்,தமிழ்நாட்டில் இராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு எவர் பின்னாலிருந்து காய் நகர்த்தினார்கள் என்பதும் வெறும் புலி எதிர்ப்பில் மறைக்கப்பட்டு வருகிறது.இத்தகைய அரசியலுக்கு வலுச் சேர்க்கும் சோவுக்குப் பின்னாலும் நிற்கின்ற வலுக்கரத்தை இனங்காணாத விடுபேயர்கள்களா புலம் பெயர்ந்தவர்கள் திரு இராமராஜன்?அங்கே,நிலையெடுத்த அரசியலுக்கும்"மகாத்மா"காந்தி,சஞ்சாய் காந்தி,இந்திராகாந்திபோன்ற பாசிஸ்ட்டுக்களைப் பலிகொண்ட அரசியலுக்கும் மிக நேர்த்தியான அரசியல் இலக்கொன்றுண்டு.அது இந்திய-உலக ஆளும் வர்க்கங்களின் இணைவோடான நலன்களுடன் சம்பத்தப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இருக்கும் சோவுக்கும் வெள்ளை மாளிகை நலனுக்கும் தொடர்பு இருக்கிறது.இப்படித்தாம் எல்லாம்).


யுத்தங்கள்-புதிய புதிய பாணிகளில்:


சமீபகாலத்தில் நாம் பற்பல யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.மேற்குலக-அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் அத்துமீறிய பெரும் யுத்தங்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது-பார்க்கிறது!இத்தகைய யுத்தத்தின் மூலமாகத் தேசங்களின் இறைமைகளை அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் வெறுமனவே மூலவளத்தைப் பெறுவதற்காவோ அன்றி அவற்றைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ விரும்புவதில்லை.இன்றைய உலகப் பொருளாதாரப்போக்கு மிகவும் பின் தங்கிய இனவாதச் செயற்பாட்டுக்குள் தனது நவீன இலக்குகளை எட்டி வருகிறது.இத்தகைய அதிகெடுதியான அரசியல் உலகத்தில் வாழும் பெரும்பான்மையான வெள்ளையினமற்ற மக்களையும் அவர்களின் இருப்பையும் அழித்துவிடுவதற்காச் செய்யப்படும் பற்பல வியூகத்தை நாம் இனம் காணுகிறோம்.இது,மாறிவரும் பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றத்துக்கும் அதன் விளைவால் சூழல் பெரிதும் மாற்றம் அடைவதால் பூமியின் பெரும் பகுதி பாலைவனமாகவும்,கடலினுள் மூழ்குவதாகவும் ஒரு பெரும் அழிவு மெல்ல நெருங்குகிறது.இது, ஒருவகையில் இன்றைய மேற்குலக நவீனத்துவத்துக்குள் மீளவும் இனவாதச் சேற்றை உற்பத்தியாக்கி அதனை உடலெங்கும் பூசியபடி மனிதாபிமானம் பேசுவதற்கு அவர்களை உலகின் முன் நிறுத்துகிறது.இங்கே ஈழத்துக்கான போராட்டத்தில் இலங்கையில் யுத்தமற்ற பேச்சு வார்த்தையாக இருப்பதற்கு இராமாராஜன் விரும்பினாலும் இவரது எஜமானர்கள் விரும்பார்.வானொலியில் யுத்தத்தை ஆதரிப்பவருக்கு இடமில்லை எனும் இராமாராஜனுக்கு இந்தியாவெனும் தேசம் காஸ்மீரில்,நாகலாந்தில் ஏன் முழுத்தேசத்திலும் இலங்கையிலும் செய்யும் யுத்தம் புரியாமல் இருக்கும்?எனினும்,நாம் இதைக் கடந்து வேறுதிசை நோக்கிச் செல்வோம்.


(மக்கள் விரோதிகளான பார்ப்பனர்களுள் மோடி_சோ கூட்டு இது)

சூழலை மாசுபடுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறைமைகளும்,அதன் வாயிலான அதன் சுற்றோட்டப் பொறிமுறைகளும் வேண்டிநிற்கும் கனிவளத்தேவை பூமியின்மீதான இடைச்செயலை மிகவேகமாக்கிய தரணத்தில் முதலாளித்துவம் இடைவிடாது இயற்கையையும் உயிரினத்தையும் திருடுகிறது.இத்தகைய திருட்டின் விளைவாகச் சில கொன்சேர்ன்கள் உலகத்தின் எண்பது வீதாமான செல்வத்தை வெறும் பத்தாயிரம் பெரும் கொள்ளைக்காரரிடம் கையளித்த நிலையில், இயற்கை தன் வளங்களைத் தொடர்ந்து பறிகொடுக்கிறது.இது,ஆப்பிரிக்காவை மனிதர்கள் வாழத்தகுதியற்ற கண்டமாக மாற்றிவருகிறது.இதன் தாக்கம் தினமும் கப்பல் கப்பலாக மக்கள் மேற்குலகை நோக்கிய இடப்பெயர்வை அவர்கள் முன் நிறுத்தியுள்ளது.இத்தகைய சூழலை மிக இலகுவாக இனம் கண்ட மேற்குலகம் புதிதாகச் சூழல்பாதுகாப்பு வேசமிட்டுத் தமது வலையத்துள்-ஐரோப்பாவுக்குள் கருப்பின மக்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான தற்காலிகச் செயற்பாடாகச் சூழல்பாதுகாப்புப் பேசியபடி நிதி ஒதுக்குகிறது.இங்கே, ஆபிரிக்காவைத் தொடர்ந்து திருடுவதற்காகவும் அத்தகைய நிலையில் மெல்ல அந்தக் கண்டத்தில் வாழும் மனிதர்களை அழிப்பதற்கான வியூகத்தையும் கொண்டியங்கி வருகிறது.இத்தகைய முரண்பாட்டை இனம் கண்ட மனிதாபிமானமிக்க இடதுசாரியக் கருத்தியற் சாய்வுடைய விஞ்ஞானிகள் இதை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.வருடத்தில் ஐம்பது புதிய அணுமின் நிலையங்களைத் திறக்கும் முதலாளியத் தேவையானது மக்களின் சூழல் பாதுகாப்பை வலியுறுத்துகிறது!இங்கே,பொருளாதார முரண்பாடுகள் இனவாதத்தோடு முட்டிமோதி உலகின் பெரும் பகுதி மக்களைப் பூண்டோடு அழிக்கும் அரசியலாக(யுத்தம்,பட்டுணிச் சாவு,இனம் காணமுடியாது நோய்க் கிருமிகளின் செயற்கையான உருவாக்கம்-பெருக்கம்,நோய்க் கிருமிகளுக்கான தடுப்பு மருந்துக் கட்டுப்பாடுகள்,வர்த்தகக் காப்பு இன்னும் எத்தனையோ கொடுமை) விரியும்போது,இந்த அரசியலை முன்னெடுக்கும் தேசங்களின் அரசியல் வாதிகள் யுத்தம்பற்றியும்,இனவிடுதலை பற்றியும் தமக்கிசைவான பொருளாதார இலக்குகளுக்கூடாகக் கருத்துக்கட்டுகிறது.இங்கே,இராமராஜனின் வானொலி வந்தடைந்திருக்கும் அரசியலின் இடம் துக்ளக் சோவின் இடமென்பதை நேற்றைய வானொலிச் செவ்வியில் அந்த வானொலி நேயர்கள் இனம் காணலாம்.நாம் அன்றே இதை அம்பலப்படுத்தினோம்.


மக்கள் விரோதிகளும் அவர்களின் அடிவருடிகளும்:


மக்கள் விரோதிகளிடம்(இந்திய,அமெரிக்க மற்றும் மேற்குலக உளவு நிறுவனங்கள் மற்றும் அத்தகைய தேசங்களின் அரசுகளோடு) உறுவுற்ற அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் இறுதியில் மக்களைப் போட்டுத் தள்ளினார்கள்!புலிகளோ எத்தகைய மக்கள் விரோதிகளுடனும் தம்மை இனம் காட்டியவர்கள்.இத்தகைய புலிகளைச் சொல்லி அரசியல் விடும் இராமாராஜன், அதே மக்கள் விரோதிகளைத் தமது உறுவுகளாக்கியபடி மக்கள் நலன்,ஜனநாயகம் பேசுவதில் எந்தத் தவறுமில்லை!ஏனெனில்,இராமாராஜனோ ஈழத்து இயக்கங்களின் மனித விரோத அரசியலை இந்திய நலனுக்காகவும்,தனது குடும்ப நலனுக்காகவும் நடாத்திவரும் ஒரு கொலையாளியாகும்.இந்த மனிதரின் அரசியலானது மக்களின் விடுதலையோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதற்கு இன்றைய இலங்கைக்குள் நிலவும் இனமுரண்பாட்டில் அவரது கபடத்தனமான அரசியல்நிலைப்பாடு கற்றுக் கொடுக்கவில்லை.மாறாக, இந்த நபரின் கடந்தகாலக் கள்ளக்கூட்டுக்களே நமக்குச் சான்று பகரும். இங்கோ, அரசியல் என்பது தமது வளங்களை அடைய முனையும் தனிபட்ட நலன்களாகக் குறுகுகிறது.


இது, சோ இராமசாமியிடம் நமது மக்களின் விடுதலைக்கான தீர்வைத் தேடுகிறது?

(ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன்:இந்திய-இலங்கை நலன்களின் மொத்தவுருவம்)


இல்லை!


ரீ.பீ.சீ.யின் மிக மோசமான செயற்பாடுகளால் அத்தோடு அரசியல் செய்ய முற்பட்டவர்கள் அனைவரும் அவ்வானொலியை விட்டுக் கழன்றுள்ள நிலையில் இந்திய நிலையை-அதன் நலன்களைச் சார்ந்த ஈழத்துக்கான-தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வாக முன்னெடுக்கப்படும்-இலங்கை மக்கள் அனைவருக்கும் விரோதமான அரசியலைப் புலம் பெயர்ந்த மக்களுக்குள் நியாயப்படுத்தும் இந்திய வியூகம் துக்ளக் சோவை இராமராஜனுக்குக் குருவாக்கி விடுகிறது.இனிவரும் காலங்கள் மிகக் கெடுதியானது.நேரடியாகவே மிக மோசமான மக்கள்விரோத இந்தியாவின் உளவு முகவர்களால் வழிநடாத்தப்படும் இந்த ரீ.பீ.சீ.வானொலியானது தமிழ் பேசும் மக்களை மிக கேவலமாக ஏமாற்றும் அரசியலை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள்தாம் இனியுண்டு.இவ் வானொலியோடு இன்றுவரை இணைந்திருக்கும் சிவலிங்கத்தின் நிலையே மிக வருந்தத் தக்கது.எனினும்,சிவலிங்கம் தனது கருத்துக்களைப் பலமாக இந்திய நலனோடு இணைத்தபடி அதை நமது மக்களின் ஜனநாயகக் கோரிக்கையாக முன் வைப்பார்-வைத்து வருகிறார்.இது,நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தும் செயற்பாடானது.இலங்கை மக்களின் உண்மையான விடுதலைக்கு உழைப்பவராகச் சிவலிங்கம் தன்னைப் பிரகடனப்படுத்தி வருபவர்.ஆனால்,நடைமுறையில் மக்கள்விரோதிகளோடிணைந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது சாரம்சத்தில் மக்கள் விரோதிகளை மக்களிடம் நியாய வாதிகளாக்கும் முயற்சியே!எனவே,சிவலிங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!


இன்றைய இந்தியாவானது தனது தரகு முதலாளிய நகர்விலிருந்து இன்னும் ஒருபடி மேலெழுந்து உலக ஏகாதிபத்திய கம்பனிகளை நேரடியாக இந்தியாவுக்குள் உள்வாங்கி அவர்களின் தயவோடு இந்தியத் துணைக்கண்டத்தை ஒட்டச் சுரண்டுவதற்கு முனைகிறது.இத்தகைய இலக்கு நிறைந்த மக்கள் விரோத அரசியலுக்கு தேசிய எழுச்சிகள்,இனவிடுதலைப் போராட்டங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறதாக இந்திய ஆளும் வர்க்கம் உணரத் தலைப்படுவதில் அதன் அரசியல் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.ஆனால்,இந்தியத் தரகு முதலாளியத்தோடு கைகோர்த்த மேற்குலகப் பகாசூரக்கம்பனிகள் தமக்குத் தோதான சிறுசிறு இனங்கள் வாழும் கனிவளமுடைய நாடுகளைப் பிரித்து,அவர்களின் தேசத்தைத் தனித் தேசமாகப் பிரகடனப்படுத்தி அத் தேசங்களைத் தமது கம்பனிகளின் மூலவளதேவையைப் பூர்த்தி செய்யும் முகவர்களாக்கவே விரும்புகிறது.இது,உலகத்தை மறுபங்கீடு செய்வதிலுள்ள சிக்கலான அரசியலை இனவிடுதலைப் போராட்டத்தோடு பொருத்தி இலாபத்தை அடைய முற்படும் ஒரு வியூகமாக மேற்குலக அரசியல் நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் துக்ளக் சோ இராமசாமி தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குச் சமஷ்டி ஆட்சிமுறையூடாகத் தீர்வுகாண முடியுமாகத் திரும்பத் திரும்பத் திருட்டை நியாப்படுத்துவதில் இந்தியாவின் இலக்கை எட்ட முனைகிறார்.ஒரு மக்கள் விரோதி நமக்குள் ஜனநாயகவாதியாகக் காட்டப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இராமராஜனின் மக்கள் விரோத அரசியலை சோவினது குரலோடு கேட்கக்கூடியதாக இருந்தது.


தமிழ்நாட்டு ஆதரவு:


தமிழ் நாட்டிலுள்ள கருணாநிதியின் ஆட்சியானது புலிகளுக்கு மறைமுகமாகக் காரியமாற்றுவதாகக் கயிறுவிடும் சோவின் நோக்கம் பார்ப்பனப் பனியா நலன்களோடு பிணைவுற்றது.சோவினது பாப்பனச் சாதிய விசுவாசமானது பாசிச ஜெயலலிதாவுக்கு அரசியல் குருவாக இருந்து தமிழ்நாட்டை மொட்டையடித்துத் தனது தலைக்கு ஏற்றமாதிரியாக்கியதுபோதாதென்று நமது மக்களையும் அந்தவொரு நிலைக்குள் தள்ள முனையும் அரசியல் தொண்டு மிகக் கெடுதியானதாக இருக்கும்.பாப்பனனின் பாரிய கெடுதி இங்ஙனம் விரிகிறது.இது சாணாக்கியனின் வழி வந்த தந்திரமாகும்.அன்று,"அனல் வாதம் புனல் வாதம்"என்று செய்து நம்மை அழித்த அதே பார்ப்பான் இன்று சமஷ்டி என்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்றும் நம்மை அழிக்க முனைகிறான்.அதற்கு இராமராஜன் என்றவொரு தமிழன் ஏஜென்டாக இருக்கிறான்.இத்தகைய அரசியலைத்தானே இதுவரைப் புலிகளும் செய்கிறார்கள்? பிறகு உனக்கும் புலிகளுக்குமென்ன முரண்பாடு?பங்கு பிரிப்பதிலா?மக்களின் குழந்தைகள் பிழையான தலைமையின் கீழ்த்திரண்டு தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகச் சாகிறார்கள்.இதுவரை இலட்சம் மக்கள் மரித்துவிட்டார்கள்.அவர்களின் பிணங்கள்மீது நின்று அரசியல் செய்யும் புலித் தலைமையும் உலக-இந்தியத் தேசங்களும் ஒன்றை மிக இலாவகமாக விளங்கியுள்ளார்கள்.அது,மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாதென்பதே!அதற்காகவே புதிய புதிய வியூகங்கள் கருத்தின் வாயிலாக முன் வைக்கப்படுகிறது!ஆனால்,இதிலிருந்து நாம் நமது மக்களின் போராளிக் குழந்தைகளையும் அவர்களது தியாகத்தையும் எமது மக்களின் விடிவுக்காகவே பயன்படுத்த முனைவோம்.அங்கே,மக்களோடு மக்களாக இணையும் ஒரு அரசியற்றலைமை புலிகள் அமைப்பைப் புரட்சிகரமாக மாற்றும்-மக்களின் உரிமையை வென்றெடுக்கும் என்று நம்பியே இதுவரை கருத்து வைக்கிறோம்.


இராஜீவ் காந்தியைத் தமிழ்நாட்டில் கொன்றதன் பின்பு ஈழத் தமிழ் மக்களுக்கான தார்மீக ஆதரவு இல்லை என்று சொல்லும் அரசியல் சகுனி சோவோ தனது வாயால் இக்கொலையின் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கை-நோக்கை-இலக்கைத் தெளிவாக்கிவிடுகிறார்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் "இந்தியா"என்றவொரு பாசிசத் தேசிய வெறி மிக மோசமாக இந்திய மக்களினங்களுக்குள் கட்டி வளர்க்கப்பட்டது.இதைத் திட்டமிட்டுச் செய்த இந்திய ஆளும் வர்க்கமானது தனது அரசியல்-பொருளாதார நோக்கங்களை மிக இலகுவாக அடைவதற்காக இதை ஆயுதமாக்கி வருவதை நாம் இலகுவாகக் காணமுடியும்.இந்தியா செய்யும் அனைத்து மக்கள் விரோத அரசியல் நகர்வையும் தேசப் பாதுகாப்பாக நியாயப்படுத்தி வருவது.இது எல்லா முதலாளிய நாடுகளிலும் நடக்கும் கதையே.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இலங்கைத் தேசத்துள் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் விடுதலைக்கு உந்து சக்தியாக இருக்கும் இன்னொரு தமிழ்த் தேசிய இனமான தமிழ்நாட்டு மக்களின் தார்மீக ஆதரவு ஈழத்தை விடுவித்துவிடுமென்று அஞ்சியது.அங்கே அதன் இலக்குத் தமது பிரதமரை இழந்தாவது இதைத் தடுத்துவிடவேண்டுமென்றாக இருந்தது.முதலாளிகள் தமது இலாபத்துக்காகத் தத்தமது சொந்த மனைவிமாரையே இன்னொருவரோடு உறவுறவைத்துக் காரியமாற்றுபவர்கள்.இதையே இராஜீவ் காந்தியினதும் மற்றும் முன்னைய இந்தியத் தலைவர்களின் கொலைகளிலும் செய்தது.தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கித் தேசிய வெறியூட்ட இராஜீவ் என்ற பாசிஸ்ட்டைப் பலியெடுத்தது.இதை மூடிமறைக்கும் அரசியலுக்குப் பலியான புலிகளை நாம் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கே எதிரானவர்கள் என்றோம்.இப்போது,இந்தியாவின் அரசியலுக்கு ஆப்பு அடித்துவரும் புலிகளின் கீழ்மட்டப் போராளிகளை அழிக்கும் நரித்தனமான அரசியலை சோவும் இராமராஜனும் ஜனநாயக முன்னெடுப்பாகச் சொல்லவில்லை.அதைச் சொல்ல முன் தள்ளப்படும் இந்த ஏவல் நாய்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பாதந்தாங்கிகள்.இதைப் புரியாதவர்களா புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்?

வானொலிக் கருத்தாடல்:

கருத்தாடலென்று வானொலியில் தோன்றும் சிவலிங்கமும்,இராமராஜனும் முன்வைக்கும் கருத்துக்களோ மிக மோசமான ஒடுக்குமுறையாளர்களின் குரலாகவே இருக்கிறது!25 ஆண்டுகளாகத் தொடரும் புலிகளின் போராட்டத்தால் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவில்லை.அவர்களால் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட முடியவில்லை.எனவே, விட்டுவிலகலாமென்கிறார் சிவலிங்கம்.இங்கே, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை பாராளுமன்றத்துக்குள்ளோ அல்லது அரசியல் வாதிகளின் கவட்டுக்குள்ளோ இல்லை.அது வெளியில்தாம் இருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இதுவரை தனது மக்களையே ஒடுக்கும் அரசாக இருக்கும் நிலையில் அதன் அனைத்து நடவடிக்கையும் தன் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் நலனையே பிரதிபலிக்கும்.இங்கே "தீர்வு"என்பதைத் தீர்மானிப்பவர்களே ஒடுக்கு முறையாளர்களாக இருக்கும்போது எங்ஙனம் தீர்வை எட்டுவது?ஆக,ஒடுக்கப்படும் மக்கள் தம்மைத்தாம் விடுவிக்க வேண்டுமே ஒழிய மாறாகப் பாராளுமன்றமோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்ல!நமது மக்களின் விடுதலையோடு மரண விளையாட்டைத் தொடக்கிய இந்தியாவோ இப்போது சமஷ்டிக்குள் தனது கொலைக் கரத்தை மறைக்க முனைகிறது.அதையும் சிவலிங்கம் மக்கள் நலனாகவும்,ஜனநாயக முன்னெடுப்பாகவுஞ் சொல்லி நமது மக்களைத் தொடர்ந்து அந்நியச் சக்திகளுக்கு அடிமையாக்கும் அரசியலோடு இணைகிறார்.வெல்லட்டும் அவரது நோக்கு.அப்போதாவது நாம் இவரைப் புரிவதற்கு வரலாற்றில் நல்ல பாடங்கள் கிடைக்கும்.சோவும்,இராமராஜனும் ஏலவே தாம் ஒடுக்குமுறையாளர்களின் ஏவல் நாய்கள்தாமென்று தமது வால் ஆட்டல்களால் நமக்குப் புரிய வைத்தவர்கள்.சிவலிங்கமோ முற்போக்கு முலாம் பூசியபடி நம்மை முட்டாளாக்கி வருபவர்,கூடவே தன்னையும் முட்டாளாக்கியபடி!


ரீ.பீ.சீ.யில் கருத்தாடும் நேயர்களிடம் புலிகளை அமெரிக்கா தடை செய்தது,புலி உறுப்பினர்கள் அமெரிக்கச் சிறைகளில் இருப்பதாகவும் எனவே புலிகள் பயங்கர வாதிகள்தாம் என்கிறார் இராமராஜன்.ஆக,அமெரிக்கா நியாயமான நாடென்கிற நோக்கத்தோடு இருக்கும் இராமாராஜன் உலகப் பெரும் பயங்கர வாதியை நியாப்படுத்தும்போது தானும் அதே பயங்கரவாதியாகவே இருக்கிறார்.இவர் சுவிஸ்சர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டவராச்சே அதை மறந்துவிட்டாரா?ஆக,இவரும் பயங்கரவாதியாக இருந்ததால்தாம் சுவிசும் இரை உள்ளே தள்ளியிருக்கிறதென்று நாம் எடுக்கலாம்.சோவையும் போதாக் குறைக்குத் தோழமையாக்கிய ஜனநாயக வாதியான இராமராஜன் தமிழ்பேசும் மக்களின் இதயக்கனியாகத் தன்னையும் தனது இந்திய உளவு முகர்வர்களையும் கட்டியமைக்கும் கருத்தியல் தளமானது இந்தியப் பிராந்தியத்தில் நம்மை அநாதைகளாக்கும் அரசியலோடு கைகோர்க்கிறது.இதற்குச் சிவலிங்கம் தனது அறிவைப் பயன்படுத்திக் காத்து வருவது மக்கள் விரோதமே!


ப.வி.ஸ்ரீரங்கன்
19.01.2008








Sonntag, Januar 13, 2008

இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர்...

இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர்
தமிழரை அநாதைகளாக்குமா?


ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் வியூகத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது.இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தரணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.இதுரைத் தமிழ்த் தேசமெங்கும் பாரிய படைகளை நகர்த்தித் தமிழ்பேசும் மக்களைக் கொன்று, அவர்களது வாழ்வாதாரங்களைத் திட்டமிட்டு அழித்துள்ளது.இதற்கு இந்தியாவினது முழு ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது.நமது தரப்போ போதாக் குறைக்கு நமது மக்களையே அடிமைப்படுத்தித் துரோகி சொல்லியொடுக்கிச் சிங்களப்பாசிசத்தை எதிர்கொள்ள முடியாதபடி நமது மக்களைப் பலவீனப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தொடரப்போகும் யுத்தத்தை நமது மக்கள் எப்படி எதிர்கொள்வது?எங்கள் மக்களின் தார்மீகப்பலம்-ஒத்துழைப்பு இன்றி போரில் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வென்றிட முடியுமா?இருந்தும் நாம் மேலே செல்வோம்.


இப்போது,புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முறிப்பில் எண்ணப்பட்டுவரும் யுத்தமானது வெறும் வெற்றியை நோக்காகக் கொண்டதல்ல.அது தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் நாசமாக்கி,மக்களின் இருப்பை அழித்து நாடோடிகளாக்கும் தந்திரத்தைக் கொண்டிருக்கிறது.நிலைத்த காலூன்றலைத் தடுத்துப் புலிகளின் பொருள் ஆதாரத்தை-மக்களின் தார்மீக ஆதரவை அழிப்பதற்கானதாகவும் அதையே தமிழ்ப் பிரதேசமெங்கும் பரவலாக்கி மக்களின் அகதியக் கோலத்தில் அற்ப சலுகைகளை வழங்கித் "தேசத்தை நிர்மாணிக்கும் அபிலாசையின் விளைவு இது" எனும் பாடாத்தைப் புகட்டும் ஒற்றைத் தேசக் கயமைத் தந்திரம் இதுவாகும்.


எங்கு திரும்பினாலும் புலிகளுக்கெதிரான கருத்துக்களை மிக இலகுவாக உருவாக்கித் தள்ளிய இந்திய-இலங்கை அரசானதுகள் இன்றைய யுத்த முனைப்புக்குள் ஊடுருவியுள்ள தமது உளவுப் படைகளுடாகத் தமிழ் பேசும் மக்களின் இருப்பையே அழித்துவிடுவதற்காகப் புலிகளின் மேல்மட்டத் தலைமையை அழிப்பதற்கான வியூகத்தில் பாரிய யுத்தத்தைச் செய்வதில் பற்பல திட்டங்களை இந்திய ஆலோசனைப்படி நடைமுறைப்படுத்தக் காத்திருக்கிறது.
இந்தியாவின் நெறியாண்மையோடு இலங்கை இராணுவங்கள் போர் முனைக்கு நகர்த்தப்படும் இந்த வேளையில் நடைபெறப் போகின்ற சண்டையானது புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமானதல்ல.மாறாகப் புலிகளைச் சாடித் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிரானதான இந்த யுத்தத்தில் இந்திய-இலங்கைக் கூட்டு இராணுவ வலிமையை-யுத்த தந்திரத்தைத் தமிழ் பேசும் மக்களின் யுத்த முனை சந்திக்கப் போகிறது.இங்கே,புலிகளின் தலைமைத்துவத்தைத் துவசம் செய்துவிட முடியுமென்ற பேரவா இலங்கைப் பாசிச அரசுக்குமட்டுமல்ல இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் இருக்கிறது.


இவர்களின் எதிர்பார்ப்பானது தனியே திரு.பிரபாகரனை இலக்காகக் கொண்டதல்ல.மாறாகத் தமிழ் பேசும் மக்களின் குழந்தைகளான புலிகளின் அதியுயர் மேல்மட்டத் தளபதிகளையே அவர்கள் இலக்கு வைக்கின்றார்கள்.பிரபாகரனை அழிப்பதற்கு இலகுவானது அவரது அரண்களைச் சிதைப்பதே.அத்தகைய அரண்கள் பிரபாகரனுக்குமட்டுமல்ல அரண்கள் கூடவே தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும்,அவர்களது பாரம்பரிய மண்ணுக்குமே புலிகளின் போராளிகளும்,அவர்களை வழிநடத்தும் மேல்மட்டத் தளபதிகளும் அரண்களாக இருக்கிறார்கள்.நாம் தொடர்ந்து புலிகளை மக்களிடமிருந்து பிரித்து அவர்களது இயக்க நலனை விவாதித்து வந்திருக்கிறோம்.இது சரியானதும்கூட.எனினும்,இன்றைய தரணம் ஆபத்தானது!அது இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன்(இராணுவ நுட்பம்,மற்றும் புலனாய்வு,தகவல்-தரவுகள்,செய்மதிப்பட வரைவுகள்,தளபாடங்கள்,சித்தாந்தம்,மற்றும் போர் நிலை ஆலோசனை,யுத்த ஜந்திரத்துக்கான அனைத்து மூலவளங்கல்,வழங்கல்கள் என்றும்,இன்னும் இத்தியாதிகள்)அந்நிய முற்றுகையாகத் தொடரும் இந்தத் தொடரப் போகும் யுத்தத்தில் புலிகள் தோற்பதை நாம் அங்கீகரிக்க முடியாது.எனவே,தொடரும் யுத்தம் முழுத் தமிழ் மக்களுக்கும் எதிரானதாக நாம் முன் எச்சரிக்கிறோம்.இது எம்மைப் பூண்டோடு அழித்து,வெறும் அநாதைகளாக்கும் முயற்சியாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.இங்கே, புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறொரு நிபந்தனை எம்மிடம் இல்லை!ஆனால், புலிகள் மக்களைச் சார்ந்து அவர்களின் புரட்சிப்படையாக மாறாதவரை அவர்களால்-மக்களால் இத்தகைய யுத்தத்தை வென்றுவிட முடியாது.




இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு இவ்வகை நடத்தையால்-யுத்தத்தால் ஒருபோதும் நியாயமான தீர்வை எவரும் எட்ட முடியாது.ஆனால்,மகிந்த போன்ற இந்தியக் கைக்கூலி அரசியல் தலைவனால் இது தமிழ்மக்களுக்குள் நிலவும் பாரிய முரண்பாட்டைத் தீர்க்கும் முதற்படியாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.புலிகளே தமிழ் பேசும் மக்களின் முரண்பாட்டைத் தீர்க்கத் தடையாக இருக்கும் பயங்கரவாதிகளென்றும்,புலிகளைப் பூண்டோடு அழித்துவிட்டால் தமிழ் பேசும் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து காத்து,அவர்களுக்கான தீர்வை முன்வைத்து நிம்மதியாகக் கெளரவமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிட முடியுமென்றும் பரப்புரைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.தொடரப்போகும் யுத்தத்திற்குப் பல முகங்கள் இருக்கின்றன!இதை இனம் காணும் நிலையில் நாம் எதிர்கொள்வது சிங்களப் பாசிச இராணுவத்தை அல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது.இலங்கை இராணுவத்தின் பின்னே எம்மைக் கருவறுக்க முனையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏவற்படைகளின் ஒத்துழைப்பு இருக்கிறது.இது, நமது அனைத்து வளங்களையும் அழித்து நம்மை முடவர்களாக்க முனைகிறது.அதிலொரு வளம் புலிகளின் போராளிகளாகும்!


இதை முறியடிக்கும் ஆற்றலைப் புலிகள் கொண்டிருப்பதற்கு அவர்கள் முழுக்கமுழுக்க மக்களைச் சார்ந்து,அந்த மக்களின் அனைத்துப் பங்களிப்பையும் பெற்று மக்களின்மீது எந்தக் காட்டுமிராண்டித் தனத்தையும் கட்டவிழ்த்துவிடாது அவர்களுக்காகவே அவர்கள் மூலம் போராடினால் இந்தச் சதி இராணுவத் தந்திரப் போரை வென்றெடுக்க முடியும்.அங்கே,மகிந்தாவின் இராணுவத்தை மட்டுமல்மல்ல இந்திய இராணுவத்தின்-இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் தமிழ்பேசும் மக்கள் வெல்வார்கள்!புலிகளின் யுத்த தந்திரமானது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்கானதாக இருக்கும்போது அது தோற்பதற்கான சூழ்நிலையொன்று உருவாகமுடியாது!ஏனெனில், நமக்கு மக்கள் போராட்டப்படிப்பனைகள் நிறைய உண்டு.நமது மக்களின் உயிர்-உள ஆதரவானது தமது எதிர்காலத்தை நோக்கியதானது.நாம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிற்கிறோம்.நமது மக்களை ஒடுக்குபவர்கள் இலங்கை-இந்திய உலக அரசுகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஒடுக்கு முறையை நமது மக்கள் தடுத்து அந்த ஒடுக்கு முறையாளர்களை வியாட்நாம் பாணியில் தோற்கடிப்பார்கள்.புலிகள் தமது ஆதாரத்தையே அடக்கி ஒடுக்கியபடி அந்நிய இராணுவத்தைச் சந்தித்தால் நிச்சியம் தோல்வியடைவார்கள்!எனவே,எங்கள் மக்களின்மீது ஒடுக்குமுறையைச் செய்யாத மக்கள் படையணியாகப் புலிகள்மாற்றப்பட்டுப் புதிய பாணியிலான முறைமைகளை இளைய தலைமுறையின் அறிவுகொண்டு பெற்று எமது மக்களை விடுதலை செய்தாகவேண்டும்.


இன்றைய இலங்கையின் இந்த அரசியல்-இராணுவ முன்னெடுப்பானது இன்னொரு "இஸ்ரேல்-பாலஸ்தீனம்"மெல்ல உருவாவதைக் காட்டிவருகிறது. மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள்! சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய மனமானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!இலங்கையின் மரபுரீதியான ஐதீகங்கள் மாற்றினத்தை சக தோழமையோடு பார்க்க மறுக்கும் ஒவ்வொரு தரணமும் பெருந்தேசியத்தின் வெற்றிக்குக் கனவு காண்கிறது!இந்தக் கனவின் பலானாக இரணுவத்தின் தேச பக்தியானது அதைக் கூலிப்படை ஸ்த்தானத்திலிருந்து விடபட வைத்துத் தமிழர்கள்மேல் தினமும் ஏவிவிடப்படுகிறது!இத்தகைய படையணியின் தளபதிகள் தங்கள் பதவிக்காலத்துக்குள்ளேயே தமிழரை அடக்கி ஒடுக்கிவிட முனைகிறார்கள்.இதன் பின்னே இருக்கும் திமிரானது இந்திய வழிகாட்டலின் திடமான உறுதியிலிருந்தெழுகிறது.அது,சிங்கள இராணுவத்தை மேன்மேலும் உற்சாகப்படுத்தும் மனோ தந்திரத்தையும் கூடவே கொண்டியங்குகிறது.நமது போராளிகளின் திடம் தினமும் தமது பெற்றோருக்கு நிகழும் சிங்கள ஒடுக்குமுறையின் நேரடி அநுபவமே.அது தமக்கானவொரு பாதுகாப்பான நிலப்பரப்புக்கான வாழ்வாதாரப் போரோடு புடம்போடப்பட்டிருக்கிறது.ஆனால்,தவறான வழிகாட்டல்கள் இப்போது அவர்களிடம் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருகிறதென்பதை எவரும் மறுத்தொதுக்கப்படாது!எமது மக்களின் பங்களிப்பின்றி எந்த யுத்தமும் எமக்குச் சாதகமாகாது!ஒவ்வொரு நகர்விலும் எமது மக்களின் தார்மீக ஆதரவும்,கூட்டுழைப்பும் அவசியம்.இதைத் தவிர்த்து "அவர்கள் யுத்தத்தைக்கண்டு அகதியாகக் கோவில்கள்-பாடசாலை நோக்கி ஓடும்" போராட்டமாகச் சூழல் தொடர்ந்தால் தொடரப்போகும் யுத்தம் இலங்கை-இந்திய கூட்டு இராணுவத்துக்கே சாதகமாக இருக்கும்.மக்கள்தாம் இத்தகைய சூழலை வென்றாக வேண்டும்.இத்தகைய யுத்தம் எதற்கானதென்பதை அவர்கள் உணர்வுபூர்வமாக ஏற்று நடாத்தப்படவேண்டும்.அங்கே, நமக்கான தேசம் எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கானது முன்நிபந்தகைள் இருக்கிறது. இவை மக்களுக்குத் தெளிவாகப் புரியப்பட வேண்டும்.இன்றைய காலங்கள் நமக்கு-நமது தேச உருவாக்க அபிலாசைக்குச் சாதகமாக இருக்கிறது.நோர்வே போன்ற அரசின் பல் தேசியக் கம்பனிகள் நம்மைப் பயன்படுத்தி வருவதற்கான சூழல் இருக்கிறது.இது நம்மை மீளவும் இலங்கையிடமிருந்து இன்னொரு அந்நிய சக்தியிடம் அடிமையாக்குவதாக இருக்கப்படாது.


இந்த நிலையுள் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அது பற்பல வியூகத்துக்கூடாக எமது மக்களை ஒடுக்கிவருகிறது.என்றபோதும், இத்தகைய இன அழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது, தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிற வியூகத்தைக் கடந்த காலத்திலிருந்து நாம் படிப்பினையாகக் கொள்வதும் அவசியம்.


இது ஒருவகையில் வளவுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்துபல யுத்தம் மற்றும் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.இத்தகைய தந்திரங்களுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.


இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது வலிந்த கூட்டு யுத்த ஒத்துழைப்புடன் செய்யப்படும் யுத்தத்துக்கூடாக தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.இந்த யுத்தம் இத்தகைய நிலைமைகளின் வெளிப்பாடாக இருக்கிறது.அத்துமீறிய இராணுவ அழுத்தம் மகிந்தாவின் வடிவில் இலங்கையில் ஆட்சி நடாத்துகிறது.இத்தகைய யுத்தத்தை மகிந்தா மறுத்தொதுக்கும் பட்சத்தில் அவர் ஏதாவதுதொரு இராணுவக் குண்டுக்குப் பலியாகலாம்.எனவே,,இலங்கையில் யுத்தம் தொடரப் போகிறது.அது எம்மை அழித்து இலங்கையில் இராணுவச் சர்வதிகாரமான மாற்றத்தைக் கோரியபடி.


இதில் தமிழ்த் தரப்பு விவேகமாகக் காரியம் ஆற்றுமா?


ப.வி.ஸ்ரீரங்கன்

13.01.2008

Samstag, Januar 12, 2008

அள்ளியுண்ணத்தக்க உனது உடலும்...

புதுமையும்,
பெண்ணியமும்!


//கருணாநிதியின்
கறுப்புக் கண்ணாடியில்
கப்பலேறும் கலாச்சாரம்//



வழமையாகிப் போகும் புதுமைகள்
புதுமைகளற்ற விற்பனையுத்தி
விலைபோவதில்லையாம்!
ஒருகொஞ்சம் வயிற்றுக்கும்,
மறுபலவும்:
உடற் பூச்சு
உளக் களிப்புக்கென
உருண்டுவிடும் உழைப்பு!






விழிப்போடு
நிலைக் கண்ணாடி முன்
பூசி மெழுகும் உடலும்
பீத்தல் இலைபோன்றவொன்றால் மூடிக்கொள்ளும்,
நகர்ப்பக்கம் நோக்கும் உன் உளம்.




சேர்த்துக்கொள்ளும் செல்வம்
உளப்பிறழ்வில் வந்ததெனினும்
என் மகிழ்வானது புமைத்துவத்தின் வெற்றியாகும்





இப்படி உடு
இதுதான் உணவு
இதையே நுகர்
இதில் இன்பங் கொள்
இவனை-இவளைத் தேர்ந்தெடு
இதயே பெற்றெடு
இப்படியே விழித்திரு
இதுவே எனக்கும் உனக்குமான வெற்றி





மற்றெல்லாக் காரணங்களும் உனக்கானதல்ல
அப்பா அல்லது அம்மா தீர்மானிக்க
நீ அவர் பொருளல்ல
உனது உடல் உனதே!
ஆனால்
அதைத்தான் நான் தயாரித்துக்கொள்ள நீ தந்திருக்கிறாய்
எனினும்
அது உனதே.







ஈரம்போன நிலமாகும் ஆண்மனமும்
அள்ளியுண்ணத்தக்க உனது உடலும்
என் பணப்பெட்டியின் மெய்க் காப்பாளர்கள்
காதொடு உறவாடும்
எம்.பீ. 3 ம்
கண்களில் விரியும் சுகமான உடல்களும்
சிறிதாய்க் கீறலான கச்சைகளின் அத்துமீறிய அதிர்வில் சுகம் தொலைக்கும்!





குற்றுமார்புகளும்
புருவத்தில் தொங்கும் ஏதோவொன்றும்
சொண்டுகளில் குற்றிக்கொண்ட சின்னக் கல்லும்
பொக்கிளில் ஒளியும் மற்றொன்றைத்தாண்டிப் போகா!
கண்ணைத்துருத்தும் மறைவிடத்து மயிரும் கீற்றுக் கச்சையைத்தாண்டி
மெல்லக் கிளறும் பால் வதையை
எதுவரை செல்வதன்ற கேள்வியின்றி
இதயம் வெறித்து விழியோடும் உன்னுடலோடு





இந்த நிலையில்
நீயோ
'போடும் பிடவையில் பழுதில்லை,பார்க்கும் பார்வையில் பழுதென்பாய்'
இதைத்தான் நான் விரும்புவதும்,




மீளத்துடித்து
நீ மீள்வதென்ற கனவை
நான் ஜீரணித்தால்
நாட்டின் 'பொருளாதாரம்'படுத்திடும்
உனக்கொரு வேலையும்
என்னால் தரமுடியும்
தலையை நீ எனக்காகத் தந்தவள்(ன்)
இதைக்கூடத் தரமுடியாதா என்ன?





இதோ!
உள்ளாடைக் கடையில் தொங்குவது உனது மானம்,
உருப்படியாய்ச் சொல்:மானமென்பது கிடையாது,
ஆண்களின் சமூகத்தில்
அது உன்னை'ஒடுக்கும் காரணி'இதைச் சொல்லப் பின் நிக்காதே!







ஆண்மனது பல பேசும்!
எதையும் ஒத்துக்கொள்ளாதே,
ஒரு பொழுதும் 'சுதந்திரத்தை' இழந்துவிடாதே
இது
எனக்கும்
உனக்குமான தெரிவில் வெற்றியை
நமக்கு வழங்குவதின் முதற்படி.




என்னால்
தயாரிக்கப்பட்ட'உனது' தேகமானது
புதுமையைப் புகுத்திய புரட்சி!




இந்தவொரு புள்ளியிலேதான் 'பெண்ணியம்' பொருள் கொள்ளத்தக்கது!
எதனோடும்
உன்னை ஓப்பிடாதே!
உனது தனித்துவமானது
எனது புதுமைத்துவத்தின் அதீத வெளிப்பாடு,
இது
நான் பல நாட் தவமிருந்து உனக்காகப் பெற்றது.




உன்னை இழந்துவிடாதே!
ஓயாத தேடுதலோடு
உடலைக் காக்கப் புதிதாய் 'நான்'தரும் புதுமைகளைக் கனவு காண்.
நின்று விடாதே!
தொடர்ந்து செல்,
அழகென்பது இதயத்தின் சொத்தல்ல
அது
உடலினது உறுப்பு.




தனிமையான நிலையிலும்
தாகத்தோடு
உனது தேகத்தின் மகிமையை விழியின் முன் கொண்டுவா
அதைத் தவிர்த்த உனது மனம்
நீரற்ற பாலைவனமென்பதைக் கற்பனை செய்.




எந்த நிலையிலும்
எனது படைப்பின் மகிமையானது
உன்னை ஒருபோதும் கைவிடாது
நானே மேய்ப்பான்,நானே ஒளியானேன்!




அதோ தொடருமிந்தக் கூட்டத்தோடு
என்னைப் பின் தொடர்
அப்போதே
நான் வழிகாட்டும்
ஒளியாவேன்!



ப.வி.ஸ்ரீரங்கன்

அவளும் அரசியலும் பின் நானும் கட்டிலும்

அவளும் அரசியலும், பின் நானும் கட்டிலும்



இது கோடைகாலம்.நேற்று அவளோடு கண்ட கலகத்தில் உருக்குலைந்து படுக்கையில் புரண்டபோது,


சில ஞாபகங்கள் நெஞ்சை முட்டுகின்றன.

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லும்.


அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகத்துள் வாழக் கொடுத்த உடல்களுக்கு- எல்லோருக்கும் ஒரு பெயர் இருப்பதுபோல எனது உடலுக்குச் சிறியபாலன் பொருத்தமாக இருக்குமெண்டு என்ர தாத்தா சொன்னவராம்.அதனால தாத்தாவின் அச்சொட்டான பக்திமார்க்கத்தில் மரியாளின் கையில் தவழ்ந்துவரும் சிறியபாலனை என்னில் கண்டபோது நான் தாத்தாவைத் தின்பதற்காக வந்தவன் எண்டு எங்கட பாட்டி சொல்லிச் சொல்லி அழுதுவடிந்தாவாம் பின்னாளில்.


இப்படியொரு நினைவைக் காவி வந்த இந்தக் கோடைகாலத்தில் இன்னுஞ் சில நினைவுகளும் கூட வந்தபடியிருந்தன.அவை பெரும்பாலும் உடல் கண்டு உருகும், மனமுருக்கி நோயின் அறிகுறியோடு அடைப்பகற்றி வடிந்தொழுகும் "அந்த இந்தா"பூச்சி பார்க்கும் ஒரு பருவத்தின் பக்குவமற்ற பொழுதுகள்.இப்படிக் கூடவே வந்து தொலைகின்றன.


எனினும் இது கோடைகாலம்தானே?

அப்ப!

அப்ப என்ன அப்ப?

இப்ப மாதிரியல்லவா இருக்கு!-அந்த அப்ப.


இனிப்புக்கு ஒருக்காய் பிடி.


எள்ளுருண்டைக்கு ஒருக்காய் பிடி.


பேரீச்சம் பழத்துக்கு ஒருக்கா கொஞ்சவிடு.

பார்லிச் சோடாவுக்கு ஒருக்காய் ஆட்டு.

இப்படிச் சில்லறைத்தனமாகப் இலுப்பைக்கூடல் சந்தி கடைக்காரன்-மாமா முறை வேணும், என்னிடம் இனிப்புகள் தந்து தன்னைத் தணித்தபோது எனக்குப் பத்து வயது.மாமாவுக்கு தொடையுக்க கட்டி கண்டு சிதள் பிடித்துவிட்டது!இறுக்கி ஆட்டிவிடு குஞ்சு.சிதள் வெளியில வர.நானும் சிதள் எடுத்துவிட்ட காலத்தை அப்போவெல்லாம் நினைத்தே பார்ப்பதில்லை.அதுவொரு அவஸ்த்தையான காலம்.மனதில் பெரிய பெரிய கனவெல்லாம் வரும்.அம்புலிமாமாப் புத்தகத்தில வருகிறமாதிரிப் பெரிய உருவ மனிதர்கள் கனவினில் வருவதுண்டு.சின்ன வயதில் எனக்கு அம்புலிமாமாப் புத்தகம்தாம் பிடிக்கும்.பாடப் புத்தகத்தைவிட இது அழகாக இருக்கும்.நல்ல கற்பனைகளைத் தந்து கொண்டிருந்தது.அல்லது நான் மாமாவுக்குச் சிதள் எடுத்துவிட்டதை மறக்க முனைந்தேன், அதுள்.


"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி"எண்டது என்னெண்டு இப்பவும் விளங்கவில்லை.அதனால இந்த வகையறாக்களையும் சொல்வதில் கூச்சம் இருப்பதாகக்கூடத் தெரியவில்லை.

கோடை வெயிற்காலமென்பதால் அப்பப்ப பியருக்கு பியர் குடலை நிறைப்பதில் ஏவறை முன்னுக்கு வந்து தொந்தரவு தந்து கொண்டிருக்கு.எல்லாம் அவள் போட்ட அல்லது நான் போட்ட தர்க்கத்தால் வந்த வினைதாம்.


அடிவயிற்றில் கிடப்பதைக்கூடக் கண்டறிந்தால் அதை வெளியில கொட்டுவது எனக்குப் பிரச்சனையாக இருப்பதில்லை.என்னத்தையோ பறி கொடுத்தமாதிரிச் சிலர் பேயடித்ததுபோல இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை,அல்லது சோகத்தனமான பாடல்களைக் கேட்பதும் எனக்குப் பிடிக்காது.எப்பவுமே துள்ளல் இசைதாம்.அதுவும் பெண்ணுடலைச் சுத்தியே பாடல் கட்டினால் அதைப் பல மணி நேரம் கேட்டபடி இலயிப்பேன்.


இப்படியொரு நினைவோடு கண்சிமிட்டிக் கொண்டிருந்த மனதுக்கு என்னவோ அவளால் நடந்துவிட்டது.



மனதுக்குள் ஒருவித ஏமாற்றம் நிலவியது.அப்படி என்னதாம் இருக்குமென்று அறிவுக்குப் புலப்படவில்லை.



சிறியபாலனின் சிறு பிராயத்துக்குள் கிடக்கும் "மாமாவின் கடை" ஞபாகமாக இருக்குமாவெண்டு பார்த்தால் அது நிச்சியமாக இருக்காது.ஊரைப் பார்த்தாக வேண்டுமென்றால் அதுவும் மனதுக்கு ஏமாற்றம்தான்.எங்கோவோ வெளி நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு மனைவி பிள்ளையளப் பார்க்கப்போன ஜாணுக்கு என்ன நடந்தது?அதுதாம் மனதினது ஏமாற்றத்துக்குக் காரணமோ?அவளோடு இதைத்தானே விவாதித்துப் பிரிந்தோம்!...ச்சீ...அவளை மிஸ் பண்ணி...


எண்டாலும்...மண்டையில போட்டாங்களே! ஒரே குழப்பமாகக்கிடக்கு.இவங்கள் நித்திரைபோலக் கிடப்பாங்கள்,ஆனால் நசுக்கிடாமல் எல்லாத்தையும் மோப்பம் பிடித்தபடி...




மனிதர்களைக் கொல்லுவதில் விடுதலை வந்துவிடுமெண்டு எந்தப் புராணத்தில் இருக்கு?



எதெண்டாலும் நம்மட நாட்டைப் பார்க்காதிருக்க முடியுமோ?


நல்லதோ கெட்டதோ அதுதானே எங்கட மனதுக்குள் தொங்கிக்கிடக்கும் அழகான சிறுபிராயம்.


என்னதான் மாமாவுக்குச் சிதளெடுத்த காலம் மங்கலாகத் தலைகாட்டினாலும்,மாதா கோயில் குருசு மரமும்,கொடி மரமும் மறக்கமுடியாதவொரு நினைவுச் சின்னங்களாகக்கிடக்கு.இருந்திருந்து எட்டு மூலைப் பட்டத்தின்ர உச்சப் பறப்பிலும்,விண்கூவலிலும் ஒரு மனத்துடிப்பு-மகிழ்வு இருப்பதும் இப்போது ஏமாற்றத்தைத் தந்தபடிதாம்.



ஆனால் மனதினது சோகத்துக்கு வேறொரு காரணமும் இருக்கும்போல.அவள்தாம்!அவள்மீதான வாக்குவாதமும்,அவளை அவள் சுயமே புதைத்துக் கொண்டிருப்பதால் எதைச் சொன்னாலும் நாலுகால் பாய்ச்சலில் எம்பிக் குதிக்கிறாள்!யாரூ என்ன சொன்னாலும் அதை நேரடியாக விளங்குவதில் ரொம்பக் கெட்டிக்காரி.இவளை நினைத்தபோது இந்தக் கோடைகால இதமான கால நிலைகூடப் பனிக்காலக் கொடுமையாகி விடுகிறது.


நேற்றுக்கூட இந்த நண்பிக்கு மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜாண் பற்றிய என் கருத்தாடலில் மனது புண்ணாகிவிட்டதுபோல ஒரு மனக் கிலேசம் பிடித்திருந்தது.


அரசியல் மாற்றுக் கருத்துக்களுக்காக ஒருவரை மண்டையில் போடும் அரசியல் எப்படி ஜனநாயத் தன்மையானது எண்டதுதாம் எனது கேள்வி.அவளுக்கு ஜனநாயகமென்பது தமிழர்களுக்காகப் போரடுவதுதாம் எண்ட கதையாகவும்,அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது சரியில்லை எண்டமாதிரி.



"ஏனப்பா உமக்கு ஒவ்வொரு நாளும் சாகிற சனமெல்லாம் துரோகியெண்ட நினைப்போ?"இப்படி அவளைப் புடுங்கியெடுத்தேன்.


"நீர் சொல்லுறது சரியில்லை.பாலா அண்ணா இந்தியப் பிரதமர் இராஜீவ் கொலையைத் தவறென்று சொல்லுறார்.தங்களை மன்னிக்க வேறு சொல்லுறார்.அவர்கள் ஜனநாயகத்தை இப்ப மதிக்கினம்."அவள் விழிகளில் நம்பிக்கையைவிட ஒருவித எதிர்பார்ப்பே இருந்தது.



"ம்ம்ம்ம்........ அவர்கள், தாங்கள் இராஜீவைக் கொல்லவே இல்லை எண்டு இதுவரை சொன்னவர்கள்.இப்ப பாலா அண்ணா ஒத்துக் கொண்டு அப்புறுவர் ஆகிறாரே!அதோட இது ஜனநாயமெண்டுற போதுதானே குண்டு வெடிப்பும்,ஜாண் கொலையும் நடக்குது..."நான் இழுத்துக் கொண்டு போனபோது அவளுக்கு மேலும் விவாதிக்கவிருப்பமில்லை.



"தேசியத்துக் எதிரான கருத்துக்கள் எங்கட விடுதலைக்கு உதவாது"எண்டாள்.


"அதென்ன தேசியம்,விடுதலை? கொஞ்சம் சொல்லேன்!"எனக்கு அவள் குறித்து நிறைய மதிப்புண்டு.எனினும் அவள் அதைத் தப்பாகவே எடுத்துக் கொண்டு,தன்மீது காதலென்றும்,கல்யாணத்துக்குப் பின்புதாம் எல்லாம் என்பாள்.நானோ "நல்லதொரு நட்போடு பின் கூடுதலும் குலைதலுமே நோக்கு" என்ற பேர்வழி.அவள் மிக இளமையானவள்,என்னைப் போலவே.எமெக்கென்ன முப்பதைக்கடக்காத வயதில் என்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கு? அம்மா அப்பா பார்த்துச் செய்கிறபோது அது நடக்கட்டும்.எண்டமாதிரித்தாம் எனது நோக்கு.


"உமக்கு என்னைக் கிண்டலடிப்பதே தொழிலாச்சு!இனியும் உம்மோட கதைச்சால் என்னை முட்டாளாக்கிப் போடுவீர்"எண்டபடி வெடுக்கெனப் பாய்ந்தாள்.நல்லதொரு பொழுதில் அவளை இழக்கவிரும்பவில்லை.நாங்கள் மதிய நேர உணவை ஒரு சைனா ரெஸ்ரோரன்டில் உண்பதாகத் திட்டமிட்டே கூடியிருந்தோம்.எல்லாம் நாசமாய்ப் போச்சு.அரசியல் கதைத்து முகத்தைத் தொலைத்துப் பிரிந்தோம்.அந்தப் பொழுது வீணாகப் போனது,அவளைப் போலவே.


எதெண்டாலும் அவாவுக்கு இப்படிச் சரியான அவசரம்கூடாது.எதற்கெடுத்தாலும் இந்தா தோளில சுமக்கிறன் எண்டபடி எல்லாவற்றையும் தன்னைச் சுற்றியே பின்னப்பட்டதாக அவள் எண்ணி விடுகிறாள்.நானும் என்பாட்டுக்கு அவளை நல்லாபடியாகச் சபித்திருக்கிறேன்,"ஏன் நீர் இப்படி அவசரக் குடுக்கைமாதிரி அலம்பித் தள்ளுகிறீர்?"சில சமயங்களில் எங்கட சம்பாஷணைகள் இப்படித்தாம் ஆரம்பமாகும்.அவள் சுயமுனைப்புடையவள் எண்டு நான் எண்ணுவதாலும்,அவள் பற்றிய எனது கணிப்பு -எனக்குப்பிடித்த பிறேமொன்றைச் செய்து அவளை அதற்குள் திணித்தேன்.இந்தத் திணிப்போடு அவள் வருகிறபோதெல்லாம் நான் ரொம்ப நம்பகத் தன்மையற்றபடியேதாம் கதைத்து வந்துள்ளேன்.

இந்தக் கட்டிலை விட்டெழும்பும் தெம்பு எனக்கில்லை.

அவள் குறித்த கனவுகளோடு ஏமாற்றம் நெஞ்சுக்குள் புகைகிறது!


அம்மா தேத்தண்ணியோடு என்ர அறைக்கு வந்து என்னைப் பரிவோடு உச்சிமோந்து செல்கிறாள்.அவளுக்கு என்ர வயது பன்னிரெண்டு என்ற நினைப்பு.அப்பனுக்கோ எனக்கும் வயசாகிற பருவமும் விளங்கிறதில்லை.அடுத்த வருடம் முப்பதைக் கூட்டி வந்திரும்.தங்கச்சிக்கு மாப்பிளை பார்க்கிற அம்மாவுக்கு என்ர நினைப்பு வருகிறதே இல்லை.

அவள் வருவாளா?

அரசியல் பேசுவாளா?என்ர நோக்கை நான் அடைவேனா?


ஒண்டும் சரியில்லை.


அவளை வன்னிக்குக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல மழையில் இறுகப்பிடித்து நனைந்து புரண்டெழுவேண்டும்.நம்ம காரியம் முடிய அவளை அங்கேயே தொலைத்துவிட்டு நான்மட்டும் புகல் நாடு மீளவேண்டும்.ஆத்திரம் மனதைக் குடைகிறது.


"அக்கம் பக்கம் பார்த்துப் பேசு தம்பி" எண்டு என்ர அம்மா அடிக்கடி சொல்லுவா,எண்டாலும் அவளால் அக்கமும் தெரியவில்லைப் பக்கமும் தெரியுதில்லை.

அவள்...

ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, Januar 06, 2008

இராஜீவ் காந்தியை...

இராஜீவ் காந்தியைச்
சிங்கள இராணுவச் சிப்பாய்
பிடரியில் அடித்து
அவமானப் படுத்தியபோதே...



யுத்தம்!தொடக்கப்பட்ட பின்னைய தினங்களில் பல நூறு மனிதர்கள் இறந்துள்ளார்கள்.சிங்கள இராணுவத்திடம் போருக்கான காரணங்கள்: புலிப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்களைக்காத்தல்-இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கானதென்பதும்,இலங்கையானது சிங்களவர்கள்தம் தாயத்தேசமென்பதாகவும் மெருக்கேற்றப்பட்ட அரசியல் உணர்வோடு> இலங்கைப் பாசிச இராணுவம் போராடிக் கொள்கிறது.



இது கூலிப்படையாகவிருந்த காலம் மெல்ல மலையேறியாகிவிட்டது!



ஒருகோடி இருபது இலட்சம் சிங்களவர்களின் தேசிய இராணுவமாகவும் அது விருத்தியாகிப் போராடுவதால் அதன் ஆன்மவலு கூலிப்படைக்குரியதில்லை.

யுத்தம்:இதுள் வெற்றியென்பது கிடையாது!

இராணவத்தில் கூலி பெறுவதால் சிங்களப்படை உறுப்பினன் கூலிப்படை உறுப்பினனாகத்தாம் இருப்பானென எவரும் இப்போது நம்பிக்கொண்டால் அது தப்பான எண்ணமாகும்.அன்று பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தியைச் சிங்கள இராணுவச் சிப்பாய் பிடரியில் அடித்து அவமானப் படுத்தியபோதே சிங்கள இராணுவத்தின் தேசிய அவா வெளிப்படையாக விளங்கியது.இந்த இலங்கை இராணுவமானது அடிப்படையில் சிங்களத் தேசியத்தின் மறுவார்ப்பாக வார்த்தெடுக்கப்பட்டு,ஒருபெரும் தேச பக்தப் படையணியாக நிறுவப்பட்டிருக்கும்போது அது போர்களத்தில் சளைத்துப்போவதற்கான வாய்ப்பு மிகமிக அரிதாகும், இன்றைய இலங்கையில்.இதற்குத் தனியே தேசிய வெறிமட்டும் காரணமல்ல.கூடவே அந்நிய,வெளியுலகத்தின் பாரிய ஒத்துழைப்பும் இந்தப்பாசிச இராணுவத்துக்கு புத்துணர்சியை,புத்தெழிச்சியை வழங்கிக் கொண்டிருப்பதும் உண்மையாகும்.





இந்தப் பாசிச இராணவந்தாம் சமாதான ஒப்பந்தத்துக்குப் பின்னான சில மாதங்களில் புலிகளினால் "இராணுவம் திருந்தி வருவதாகவும்,அவர்கள் ஓரளவு மக்களைப் புரிந்து கொண்டுள்ளதாகவும்"நற் சான்றிதழ் வழங்கப்பட்டது.அப்போது நாம் இப்படியொரு கவிதை எழுதினோம்:



"...இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்



காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!..."




இலங்கை அரச வரலாற்றில் எக்காலத்திலும் இராணுவம் நீதியாகச் செயற்பட்டதில்லை.அது தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்காகத் தினம் இனவாதம் ஊட்டப்பட்ட அரச வன்முறை ஜந்திரமாக இருந்து வருகிறது.இத்தகைய இராணுவம் அப்பாவிகளைக் கண்ட துண்டமாக வெட்டிச் சாய்த்த வரலாறு, நமது மக்களுக்குப் புதிதல்ல.எனினும் இன்றைய காலத்தில் இராணுவம் குறித்த புலிகளின் மதிப்பீடும்,அவர்கள் இராணுவத்திடம் கைகுலுக்கியபோது அவர்களால் உரைக்கப்பட்ட நட்பு நிறைந்த கோசங்களும் நம்புவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.சிங்களச் சியோனிச இராணுவமானது முழு இலங்கையையும் சிங்களவர்களுக்காக்கும் பணியிலிருந்துகொண்டே நமது மக்களோடு உறவாடி வந்தது,வருகிறது.இத்தகைய இராணுவத்தோடான தேன்நிலவு முடிவுக்கு வந்தபோது யுத்தம் தொடர்கதையாகிறது.


இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து இலங்கை இராணுவம் வலிந்து யுத்தஞ் செய்யும்போது புலிகள் தடுப்பு யுத்தம் மட்டுமே செய்யும் நிலை.புலிகளின் கட்டுக்கோப்பு உடைந்துவிட்டதா,அவர்கள் பலயீனப்பட்டுப் போயுள்ளனரா என்று இலங்கை இராணுவம் தடுமாறுகிறது.ஆனால்,புலிகளின் தந்திரம் எவருக்குமே புரியாது.இங்கே புலிகள் செய்யும் போராட்டம் எதுவாக இருந்தாலும் அது வெற்றியளிப்பதற்குச் சாத்தியமில்லை.பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களை ஒடுக்கியபடி புலிகள் கொண்டிருக்கும் அரச ஜந்திரமானது புரட்சிகரமான போராட்டப்பாதையை மறுத்தொதுக்கிறது.இதற்கான பின் விளைவுகளை இப்போது புலிகள் அமைப்புச் சந்திக்கிறது.காலவோட்டத்தில் இலங்கையின் விமானத் தாக்குதல் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களை நோக்கித் தாக்குதல் செய்யும் வியூகத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.புலிகள் தமது தலைவரைக் காக்கும் போரைச் செய்யும் நிலைக்கு அவர்களைக் கட்டுப்படுத்தும் தந்திரதைச் செய்யும் நிலைக்குத் தாழ்த்தும் இலங்கையின்-இந்தியாவின் திட்டம் இப்போது நன்றாகவே பயனளிக்கிறது.




இந்த யுத்தம் இதுவரைத் தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய இழப்பைத் தந்ததுமட்டுமல்ல,புலிகளின் இராணுவ வலுவுக்கும் பாரிய இழப்பைத் தந்திருக்கிறது.புலிகளின் கணிசமான போராளிகள் கொல்லப்பட்டதை எவரும் மறைக்கமுடியாது.இங்கே இராணுவத்திடம் ஆயுதங்கள் பெருவாரியாக இருந்து முன்னணி வகிப்பினும் இந்தப்பாசிச இராணுவமானது இலங்கைச் சிங்களவர்களின் தாயகப் படையாக மாறியுள்ளதும்,அது கூலிப்படையுணர்வை இழந்து தாயத்தைக் காப்பதற்குமான பெருவுணர்வோடு இருப்பதைக் காட்டிக்கொள்கிறது.இத்தகைய தரணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் இராணுவ வலு தோல்வியடைவதும் சில வேளைகளில் வெற்றியுறுவதும் நடக்கும்.




இந்த நிலையில் இந்த ஈழப்போராட்டத்தால் இலங்கை இராணுவத்தைத் தோற்கடிக்க முடியுமா?அல்லது இலங்கை இராணுவத்தால் புலிகளைத் தோற்கடிக்க முடியுமா?




இரண்டும் யுத்தத்தால் சாத்தியமில்லை!




யுத்தம் எப்போதும் வெற்றியடைவதில்லை.இதுதாம் நியதி.




யுத்தம் தொடங்கும்போது ஒரு தரப்பு மிகுதியாக இழக்கும் மறுதரப்புக் குறைவாக இழப்புக்குள்ளாகும்.இதுதாம் சாத்தியமே தவிர வெற்றியல்ல.இது அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும்,ஏன் மற்றெல்லா யுத்தங்களுக்கும் பொருந்தும்.ஆனால் வியாட்நாமுக்குப் பொருந்தாது.அது அந்நிய இராணுவத்தைப் புரட்சியின் மூலமாகத் தூக்கியெறிந்தது.இங்கே புரட்சிக்கும் ,யுத்தத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கு.புரட்சி மக்களால் நடாத்தப்படுவது.அது நிலவுகின்ற ஆளும் வர்க்க அதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு,அதற்கு மாற்றீடாக மக்களால்-மக்கள்படையால் மாற்று அமைப்பை நிறுவுவது.இது சாரம்சத்தில வித்தியாசமானது.




இப்போது புலிகள் இலங்கையில் செய்வது புரட்சியல்ல.மாறாக யுத்தம்!இவ் யுத்தத்தால் புரட்சியின் பலனனை எட்ட முடியாது.
குறிப்பிட்ட காலங்களின் இழப்புக் குறைந்து எதிரி இராணுவத்துக்கு இழப்பு அதிகமாகும்.அதுபோலவே கடந்த சில நாட்களைப்போலான சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு இழப்பு அதிகமாகி இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு அது அற்ப இழப்பாக இருக்கும்.




கடந்த சில நாட்களில் இதுவே நடைபெற்றது.இதில் எவருமே வெற்றியடைவதற்கில்லை.




இந்த நிலையில் நாம் தொடர்ந்தும் எமது சிறார்களை சிங்கள இனவாத அரசிடம் பறி கொடுப்போமா?




இத்தகைய தரணங்கள் எப்போதும் நம்மையினிப் பின் தொடரும்.ஏனெனில் இலங்கை அரசியலில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு பொருளாதாரவுறுகளின் முரண்பாட்டோடு தொடர்புடையது.இது இனவாதத்தைத் தினமும் புதிப்பித்தபடி இத்தகைய பொருளாதார முரண்பாட்டை எதிர்கொள்வதால் இலங்கையின் பாரிய பொருளாதாரச் சிக்கல் பின் தள்ளப்பட்டுத் தாய்த் தேசத்தின் இறைமை முன்னணியில் இரு தரப்பிடமும் நிற்கும்போது, மறு இரு தரப்புகளிடம்(முஸ்லீம், மலையகத் தமிழரிர்களிடம்) இது பொருளாதார நலனாக விரிகிறது.இந்தச் சிக்கலை வெளிநாடுகள் மிக நேர்த்தியாகக் கையாளுகிறது.குறிப்பாக இந்தியா மிக நுணுக்கமாக முஸ்லீம் மக்களையும்,சிங்களவரையும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வைப்பதில் வெற்றியீட்டி வருகிறது.மலையகத் தமிழ்த் தேசிய இனத்தை ஈழத்தேசிய இனத்துக்கு எதிராகத் திருப்புவது சாத்தியமில்லை.அடிப்படையில் இரண்டு தேசிய இனத்தினதும் தாய்மொழி தமிழ்.இது இரு தேசிய இனத்தினதும் மிக நெருக்கமான நட்பு சக்தி உறவாகும்.




எதிர்காலத்தில் நிகழப்போகும் அரசியல் இராணுவ வியூகமானது பழிக்குப்பழி இராணுவ நகர்வாகவே இருக்கும்.இது இஸ்ரேலிய-பாலஸ்தீனீய யுத்த நிலவரத்தையே ஏற்படுத்தும்.இத்தகையவொரு நிகழ்வை-அரசியல் சூழலைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் உந்துதலை வெளியுலக அரசியல் ஆர்வங்கள் இலங்கையில் தோற்றுவிப்பதை நாம் அறிந்துகொள்வது மிகச் சுலபம்.




இவ்வகையானவொரு சூழலில் புலிகளின் போராளிகள் வெறுமனவே காயடிக்கப்பட்ட ஒரு யுத்த ஜந்திரமாக இருப்பதாக நாம் முன்பு பல கட்டுரையில் குறிப்பிட்டோம்.ஆனால் இலங்கைப் பாசிச ஒடுக்குமுறை தொடர்ந்து வலுவாக இருக்கும்போது மக்களிடமும் போராளிகளிடமும் வெறும் உணர்வு வழிப்பட்ட அல்லது இயக்கவாத மாயை இருப்பதில்லை.மாறாக இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டவுணர்வும்,தமிழ் வாழ்வு சார்ந்த காப்புணர்வும் மெருக்கேறி சமுதாய ஆவேசமாக அது செயற்படும்.இந்தச் செயற்பாட்டை நோக்கிப் புலிகளுக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கம்-தரகு முதலாளிகள் அதைக் கைச்சிதமாகப் பயன்படுத்த பேரத்துக்கான யுத்தத்தைத் தொடர்கிறார்கள்.இது தமிழ் பேசும் மக்களின் விலங்கையொடிப்பதற்கானவொரு யுத்தமாகவே தமிழ் மக்களின் ஆன்ம ஒத்துழைப்பு மனம் நம்புகிறது.இதைப்போலவே தமிழ்ப் போராளிகள் உண்மையில் தேச பக்தர்களாய்த் தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்கிறார்கள்.இதுவே இன்றையத் தமிழ் மக்களின் புலிகளுக்கான ஒத்துழைப்பாகவும்,அவர்களுக்கானவொரு அங்கீகாரமாகவும் இருக்கு!இலங்கையில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களும் கௌரவமாக வாழும் அரசியல்-பொருளியல் நலன்கள் எட்டப்படும்வரை,இதை(தேசியப் போராட்டவுணர்வை) எந்தவொரு சக்தியாலும் அழித்துவிட முடியாது.



இலங்கை அரசின் எத்தனை விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தாலும்-தமிழர்களின் பல நூறு உயிர்களைப் பறித்தாலும் தேசியப் போராட்டவுணர்வை-தமக்கான நாட்டையுருவாக்கும் அபிலாசையை எந்தவொரு அரச தந்திரமும்,பிரச்சாரமும் தோற்கடிக்க முடியாது.இது தீயாகச் சுவாலையெறிந்து எரிந்துகொண்டேயிருக்கும்.ஆதலால் தமிழ்பேசும் மக்களை இனவாரியாக அழித்துக்கொண்டிருக்கும் எந்தச் சக்தியும் புலிகளை அவ்வளவு இலகுவாகத் தோற்கடிப்பது முடியாத காரியம்.ஆனால்
இலங்கையில் தொடரப்போகும் பயங்கரவாதத் தாக்குதல்களால் பல நூறுவுயிர்கள் அழியப்போகிறது.அவ்வண்ணம் பாரிய சொத்திழப்புகளும் நடைபெறும்.இதைக் காரணமாகக்காட்டி ஐ.நா.படைகள் இலங்கையில் குவிக்கப்படும்போது புலிகளிடமிருக்கும் பல போராளிகள் ஆயுதங்களைப் போடக்கூடியவொரு சூழலும் வந்தடையக்கூடிய வாய்பு நிச்சியமாக இருக்கும்.இது வெளியுலகத்தால் தமக்கு நிச்சியமானவொரு தீர்வு வருமென்றும்-பாரிய ஆதிக்கமுடைய வெளிச் சக்திகளுக்குப் பணிந்தும்- பேராவலால் மக்கள் இந்த முடிவை எடுக்கலாம்.ஆனால் அத்தகைவொரு நிலைமை நம்மை இன்னும் சிங்கள-இந்திய,வெளியுலகங்களுக்கு நிரந்தரமானவொரு அடிமைகளாக்கி விடும்.



எனவே யுத்தங்களால் வெற்றி கிட்டப்போவதில்லை.



காரணங்கள் பல உள்ளன.



பேசித் தீர்க்கும் ஒரு அரசியலால் மட்டும் ஒரு சில நலன்களை இலங்கைத் தேசத்துள் வாழும் பல் தேசிய இனங்கள் அடையமுடியும்.ஆனால் அது இலங்கைத் தொழிலாளர்களின் பாரிய தோல்வியாகவே தொடரும்.இத் தோல்வி மிகவும் காலம் கடந்தவொரு படிப்பினையைத் தென் கிழக்காசிய இடதுசாரிகளுக்கு வழங்கும்.அந்தப் படிப்பினையானது தேசிய இயக்கங்களில் புலிகள் போன்ற இயக்கவாதம் சார்ந்தும்,அதன் குறுந்தேசியம் சார்ந்த யுத்த நடவடிக்கைகள்,தந்திரோபாயங்கள் குறித்தும் இருக்கும்.இந்த அமைப்பை ஒற்றை மொழியில் பாசிசப்படையென நிறுவிக் கொண்டு, உலகப் பாசிச வரலாற்றோடு நோக்கப்படும் இன்றைய நமது விவாதங்கள் தப்பாகிப் போகும்.இதுவேதாம் இனித் தொடரப்போகும் அரசியல் தரணங்கள்.இதில் புலிகளின் எந்தப்படையும்-முப்படையும் மக்களைக் காக்கப்போவதில்லை.அப்படிக் காக்கும் வலுவிருந்தால் நாம், அப்பாவி மக்களை-புலியின் அரசியல் தலைவர் தமிழ்ச் செல்வனை இழந்திருக்க வாய்ப்பில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்

Dienstag, Januar 01, 2008

மகேஸ்வரனின் தமிழ் மக்கள்மீதான...

முதலாளிக்கிடையிலான
முரண்பாடுகள் கொலைகளாக...


கேஸ்வரனின் படுகொலையைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளோடு முடிச்சிட்டு இவர்போன்ற மக்கள் விரோதிகளைத் தியாகியாக்கும் அரசியலை நாம் மறுப்போம்.பிறந்த புத்தாண்டில் இப்படி ஒரு கொலையைச் சொல்லி எழுதுவது ஆரம்பமாகிறது!கொலைகள் தொடர்வதற்கான சூழலைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமையோடு போட்டுப் பிணைத்துக் கருத்தாடுவதற்கு அப்பால் இத்தகைய கொலைகளின் பின்னாலுள்ள முரண்பாடுகளை நாம் கண்டாக வேண்டும்.



மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு
மகேஸ்வரன் போன்றோர்
ஆற்றிய போராட்டப்பாதை-தியாகம் என்ன?



இவர்களின் மேற்தட்டு
வாழ்வுப் பொருளாதார வளம்
இத்தகைய சிறுவயதில் எங்ஙனம் திரண்டது?



நாம் அறியக் காரைநகரில்
கப்பல் விடும் தமிழ்த் தரகு முதலாளி
இருந்ததற்கான அறிகுறியில்லை!



நான் அறிய,என் கிராமத்துச் சண்முகம்-யோகம்மாக் குஞ்சி போன்ற தரகு முதலாளிகளைத் தவிர்த்து எவருமே தமிழ்ச் சமுதாயத்தில் கப்பல்கள் வைத்து வர்த்தகஞ் செய்த தரகு முதலாளிகள் இருக்கவில்லை.இங்கே, மகேஸ்வரன் புதிய தமிழ்த் தரகு முதலாளி!கவனியுங்கள்,தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் போர்களால் சிதைந்து சின்னாபின்னமாகிய போர்ச்சூழலில் உருவான புதிய பணக்காரன்.42 வயதில் பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரன்.



எனினும்,யாருக்காக இந்த அழிவுகள்?


மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னாலுள்ள அரசியல்தாம் என்ன?



மகேஸ்வரன் வெறும் பாராளுமன்ற உறுப்பினன் மட்டுமென்றால் நிச்சியம் இக்கொலை அரசியல் சார்ந்ததே!ஆனால், அவரோ ஒரு புதுப்பணக்காரன்.நானறிய கொழும்பில் மகேஸ்வரனின் விலாசம் 90 களுக்குப் பின்பே அறிமுகமாகியிருக்கிறது.


சுருவில்-கரம்பொன் மாணிக்கம் சகோதரர்களுக்கும் அவர்களது தமக்கை யோகம்மாக் குஞ்சிக்குத்தாம் முன்பு நான்கு கப்பல்கள் தமிழர்கள் பெயரால் ஓடியது.இவர்களுக்கு,பின்பு அரசியல் பிரமுகர்களுக்கூடான வர்த்தக உறவு முறைகளால் காமினி திசநாயக்காவின் நேரடிப் பணிப்பின் விளைவாகக் கொலையே நேர்ந்தது.சண்முகமும்,மாணிகமும் அரசியல்ரீதியான தமிழர் பிரச்சனையால் கொல்லப்பட்டவர்கள் அல்ல!மாறாகப் பங்கு-காட்டிக் கொடுப்பு மற்றும் வெளிநாட்டுக் கப்பற்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நெருக்குதல் கொலைகளைச் செய்வித்தது.


இப்போது, மகேஸ்வரனின் கொலைக்கு நிச்சியமாக அரசியற்காரணங்கள்தாண்டிய வர்த்தக முரண்பாடுகளே காரணமாக முடியும்.42 வயது மனிதர் இலங்கையின் இன்றைய நிலவரப்படி 50.000.கோடி சொத்துக்கு அதிபதியானதென்ற வரலாறு-நாம் திடுக்கிடும்படியான உண்மைகள் மறைக்கப்பட்ட வரலாறாகும்.


தீவுப்பகுதியில் இவ்வளவு திடீர்ப் பணக்காரர்கள் உருவாகுவதற்கான பின் தேட்டம் வி.மாணிக்கம்-சண்முகம்,யோகம்மாவுக்கே இருந்திருக்கிறது.இவர்கள் கொல்லப்பட்டபின் அவர்களின் சொத்துக்களை அறாவிலைக்கு விற்று வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த அவர்களின் பிள்ளை குட்டிகள், இலங்கையில் கப்பல்விடும் நிலையைத் தமிழர்கள் எவருமே செய்யமுடியாதென்பதற்கான காரணங்களையும்,அநுபவத்தையும் தமது வாழ்வுப் பயணத்துக்கூடாக நமக்குப் புரிய வைத்தவர்கள்-அவ்வளவுக்குக் கொழும்பு மாபியாக்கூட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது-புறக்கோட்டை வர்த்தகத்தை சிங்கள அரசியல் மாபியாக்களின் கட்டுப்பாட்டிலிருந்து எவருமே பறித்தெடுக்க முடியாது!


ஆனால், மகேஸ்வரன் எம்.பி. இவ்வளவு கோடிக் கணக்காக முதலிட்டு முதலாளியானதன்பின்பு நிலைகொண்ட அவரது பகமை நிச்சியமாக வர்த்தக முரண்பாடாகவே இருக்கிறது.கொழும்பு வர்த்தக நிலைவரமானது பெரும் மாபியாக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்பு இத்தகைய முரண்பாடுகள் மிக நேர்த்தியாகக் கொலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்தபடி தமது இருப்பை நிலைப்படுத்துகிறது.


இத்தகையவொரு சூழலில் படுகொலையான மகேஸ்வரனின் கொலைக்கு அரசியல் சாயம் பூசித் தமிழர்களின்மீதான அரசியல் சரிவாக எவரும் கருதத் தேவையில்லை!


கொழும்பு வாழ் வர்த்தகப் பெருங்குடிகளின் வர்த்தக முன்னெடுப்பானது மிகவும் துரோகங்கள் நிறைந்தவை.அவை பெரும் குழி பறிப்புகளுக்கிடையில் மக்கள் சொத்தை வேட்டையாடும் நோக்கைக் கொண்டவை.


அதீத வேட்கை
பொருள் குவிப்பின் உறுதியோடு
பிணைவுற்ற பொருளாதார வாழ்வில்
மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே!


இதற்குள் மகேஸ்வரன்போன்ற மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரம்கோடி சொத்தைச் சேர்த்த புதிய முதலாளிகள் தமது வாழ்வை வளப்படுத்த நமது பிணங்கள்மீது அரசியல் நடாத்தியது வரலாறு.இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனையையும் அணுகவில்லை.மாறாக, வர்த்தகம்,சூது,கப்பல் கட்டுமானம் என்ற தொழில்களில் மூழ்கித் தமது வளங்களைப் பெருக்குவதற்கு அரசியல் பலத்தை நாடியபோது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு பாதுகாப்பாகவும்,அரணாகவும் அவர்களுக்கு இருக்கிறது.தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்தபடி வர்த்தகஞ் செய்தும், ஊழல்கள் செய்தும் தமது இருப்பைப் பலப்படுத்தியவர்கள் அதன் எதிர் விளைவால் பலியாகிறார்கள்.



இதையும் தமிழ் பேசும் மக்களின் பெயரால்
இறுதியில் கணக்கு வைக்கப்பட்ட கொலையாக்கி விடுவதில்
எமது அரசியல் முந்திக்கொள்கிறது.




இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்". எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை.அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள்.மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள்.இங்கே, மகேஸ்வரனின் பாத்திரமே அவரை ஒரு மக்கள் விரோதியாகக் காட்டிநிற்கிறது.பொருளாதாரத்தடை மூலமாகவும்,மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும்,பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகின்றவர்களோடு இசைவாக இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட மகேஸ்வரன் குருதி சிந்தியது தமிழ் மக்களின் நலனை உயர்த்திப்பிடித்ததற்காகவல்ல.



இவர்களுக்கிடையில் நிகழ்ந்த வர்த்தகப்போட்டி புதுப்பணக்கார மகேஸ்வரனின் பினாமியச் சொத்துக்கள் மற்றும் கொழும்பு வாழ் மாபியாக்களின் கடும் "இருப்பு"க்கான போட்டிகள் இவரைத் தொலைத்துக் கட்டியவுடன் நாம் உடனே தமிழர்களுக்குள் இன்னொரு மரணமாகப் பொதுமைப்படுத்துகிறோம்.



கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெரும் வர்த்தகர்களான வி.மாணிக்கம் சகோதரர்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமிடையில் என்ன தொடர்புண்டோ அதைவிட மிகக் கேவலமான உறவே மகேஸ்வரனுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமான தொடர்பு.தரகு முதலாளியத்தின் அடிவருடிகளாகக் கிடக்கும் அற்பப் பினாமித் தமிழ் முதலீட்டாளர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணயமென்பதை ஒரு போதும் காத்துவிட முடியாது.


தமிழ் மக்கள்மீதான மகேஸ்வரனின் கரிசனையானது தனது வர்த்தகத்துக்கான காப்பரண்-பேரம் மற்றும் தனக்கான பாதுகாப்பை நிலைப்படுத்தும் தந்திரம் மற்றும் தனது வர்த்தகத்திலுள்ள எதிரிகளைச் சரி செய்வதற்கான வியூகத்தோடுதாம் இதுவரை நகர்ந்தது.மக்களின் உயிர்த் தியாகமானது முற்றிலும் தமிழ் மூலதனத்தைக் காப்பதற்கான முதிலீட்டுத் தமிழரின் நலனைக் காப்பதற்கான செயலென்றும் அன்றே கூறிக் கொண்டோம்.இன்றோ தமிழ் முதலீட்டாளர்கள் அன்றைய கென்பாம்,டொலர் பாம் நீதிராஜாக்களோ அல்லது மஸ்கன்,மகாராஜா,குணரெத்தினம்,சண்முகமோ இல்லை.மாறாக, மகேஸ்வரன்போன்ற இயக்கப் பினாமிகளே புதிய முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள்.இவர்களில், இன்னும் பலர் இத்தகை அரசியலில் கொல்லப்படலாம்.எனவே,இவ்வகைக் கொலைகளுக்கும் தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள ஒடுக்குமுறைக்கும் முடிச்சிடுவது மிகக் கொடுமையானது.



இங்கே, புதிய கூட்டுக்கள்,தாஜாக்கள்,கொடுப்பனவுகள்,கண்டிப்புகள்,வெருட்டல்கள் ஊடாகச் சலுகைகளப் பெறுவதற்காகப் பாரளுமன்றத்தைப் பயன்படுத்திய மகேஸ்வரன் தான் அமைச்சராக இருந்தபோது ஆற்றிய "மக்கள் நலச் சேவைக்கும்" இன்றைய அவரது பல்லாயிரம் கோடிச் சொத்துக்கும் உள்ள அரசியல் ஒற்றுமை இனம் காணப்படவேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2008