Samstag, Januar 12, 2008

அள்ளியுண்ணத்தக்க உனது உடலும்...

புதுமையும்,
பெண்ணியமும்!


//கருணாநிதியின்
கறுப்புக் கண்ணாடியில்
கப்பலேறும் கலாச்சாரம்//



வழமையாகிப் போகும் புதுமைகள்
புதுமைகளற்ற விற்பனையுத்தி
விலைபோவதில்லையாம்!
ஒருகொஞ்சம் வயிற்றுக்கும்,
மறுபலவும்:
உடற் பூச்சு
உளக் களிப்புக்கென
உருண்டுவிடும் உழைப்பு!






விழிப்போடு
நிலைக் கண்ணாடி முன்
பூசி மெழுகும் உடலும்
பீத்தல் இலைபோன்றவொன்றால் மூடிக்கொள்ளும்,
நகர்ப்பக்கம் நோக்கும் உன் உளம்.




சேர்த்துக்கொள்ளும் செல்வம்
உளப்பிறழ்வில் வந்ததெனினும்
என் மகிழ்வானது புமைத்துவத்தின் வெற்றியாகும்





இப்படி உடு
இதுதான் உணவு
இதையே நுகர்
இதில் இன்பங் கொள்
இவனை-இவளைத் தேர்ந்தெடு
இதயே பெற்றெடு
இப்படியே விழித்திரு
இதுவே எனக்கும் உனக்குமான வெற்றி





மற்றெல்லாக் காரணங்களும் உனக்கானதல்ல
அப்பா அல்லது அம்மா தீர்மானிக்க
நீ அவர் பொருளல்ல
உனது உடல் உனதே!
ஆனால்
அதைத்தான் நான் தயாரித்துக்கொள்ள நீ தந்திருக்கிறாய்
எனினும்
அது உனதே.







ஈரம்போன நிலமாகும் ஆண்மனமும்
அள்ளியுண்ணத்தக்க உனது உடலும்
என் பணப்பெட்டியின் மெய்க் காப்பாளர்கள்
காதொடு உறவாடும்
எம்.பீ. 3 ம்
கண்களில் விரியும் சுகமான உடல்களும்
சிறிதாய்க் கீறலான கச்சைகளின் அத்துமீறிய அதிர்வில் சுகம் தொலைக்கும்!





குற்றுமார்புகளும்
புருவத்தில் தொங்கும் ஏதோவொன்றும்
சொண்டுகளில் குற்றிக்கொண்ட சின்னக் கல்லும்
பொக்கிளில் ஒளியும் மற்றொன்றைத்தாண்டிப் போகா!
கண்ணைத்துருத்தும் மறைவிடத்து மயிரும் கீற்றுக் கச்சையைத்தாண்டி
மெல்லக் கிளறும் பால் வதையை
எதுவரை செல்வதன்ற கேள்வியின்றி
இதயம் வெறித்து விழியோடும் உன்னுடலோடு





இந்த நிலையில்
நீயோ
'போடும் பிடவையில் பழுதில்லை,பார்க்கும் பார்வையில் பழுதென்பாய்'
இதைத்தான் நான் விரும்புவதும்,




மீளத்துடித்து
நீ மீள்வதென்ற கனவை
நான் ஜீரணித்தால்
நாட்டின் 'பொருளாதாரம்'படுத்திடும்
உனக்கொரு வேலையும்
என்னால் தரமுடியும்
தலையை நீ எனக்காகத் தந்தவள்(ன்)
இதைக்கூடத் தரமுடியாதா என்ன?





இதோ!
உள்ளாடைக் கடையில் தொங்குவது உனது மானம்,
உருப்படியாய்ச் சொல்:மானமென்பது கிடையாது,
ஆண்களின் சமூகத்தில்
அது உன்னை'ஒடுக்கும் காரணி'இதைச் சொல்லப் பின் நிக்காதே!







ஆண்மனது பல பேசும்!
எதையும் ஒத்துக்கொள்ளாதே,
ஒரு பொழுதும் 'சுதந்திரத்தை' இழந்துவிடாதே
இது
எனக்கும்
உனக்குமான தெரிவில் வெற்றியை
நமக்கு வழங்குவதின் முதற்படி.




என்னால்
தயாரிக்கப்பட்ட'உனது' தேகமானது
புதுமையைப் புகுத்திய புரட்சி!




இந்தவொரு புள்ளியிலேதான் 'பெண்ணியம்' பொருள் கொள்ளத்தக்கது!
எதனோடும்
உன்னை ஓப்பிடாதே!
உனது தனித்துவமானது
எனது புதுமைத்துவத்தின் அதீத வெளிப்பாடு,
இது
நான் பல நாட் தவமிருந்து உனக்காகப் பெற்றது.




உன்னை இழந்துவிடாதே!
ஓயாத தேடுதலோடு
உடலைக் காக்கப் புதிதாய் 'நான்'தரும் புதுமைகளைக் கனவு காண்.
நின்று விடாதே!
தொடர்ந்து செல்,
அழகென்பது இதயத்தின் சொத்தல்ல
அது
உடலினது உறுப்பு.




தனிமையான நிலையிலும்
தாகத்தோடு
உனது தேகத்தின் மகிமையை விழியின் முன் கொண்டுவா
அதைத் தவிர்த்த உனது மனம்
நீரற்ற பாலைவனமென்பதைக் கற்பனை செய்.




எந்த நிலையிலும்
எனது படைப்பின் மகிமையானது
உன்னை ஒருபோதும் கைவிடாது
நானே மேய்ப்பான்,நானே ஒளியானேன்!




அதோ தொடருமிந்தக் கூட்டத்தோடு
என்னைப் பின் தொடர்
அப்போதே
நான் வழிகாட்டும்
ஒளியாவேன்!



ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: