Sonntag, Januar 06, 2008

இராஜீவ் காந்தியை...

இராஜீவ் காந்தியைச்
சிங்கள இராணுவச் சிப்பாய்
பிடரியில் அடித்து
அவமானப் படுத்தியபோதே...யுத்தம்!தொடக்கப்பட்ட பின்னைய தினங்களில் பல நூறு மனிதர்கள் இறந்துள்ளார்கள்.சிங்கள இராணுவத்திடம் போருக்கான காரணங்கள்: புலிப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்களைக்காத்தல்-இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கானதென்பதும்,இலங்கையானது சிங்களவர்கள்தம் தாயத்தேசமென்பதாகவும் மெருக்கேற்றப்பட்ட அரசியல் உணர்வோடு> இலங்கைப் பாசிச இராணுவம் போராடிக் கொள்கிறது.இது கூலிப்படையாகவிருந்த காலம் மெல்ல மலையேறியாகிவிட்டது!ஒருகோடி இருபது இலட்சம் சிங்களவர்களின் தேசிய இராணுவமாகவும் அது விருத்தியாகிப் போராடுவதால் அதன் ஆன்மவலு கூலிப்படைக்குரியதில்லை.

யுத்தம்:இதுள் வெற்றியென்பது கிடையாது!

இராணவத்தில் கூலி பெறுவதால் சிங்களப்படை உறுப்பினன் கூலிப்படை உறுப்பினனாகத்தாம் இருப்பானென எவரும் இப்போது நம்பிக்கொண்டால் அது தப்பான எண்ணமாகும்.அன்று பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தியைச் சிங்கள இராணுவச் சிப்பாய் பிடரியில் அடித்து அவமானப் படுத்தியபோதே சிங்கள இராணுவத்தின் தேசிய அவா வெளிப்படையாக விளங்கியது.இந்த இலங்கை இராணுவமானது அடிப்படையில் சிங்களத் தேசியத்தின் மறுவார்ப்பாக வார்த்தெடுக்கப்பட்டு,ஒருபெரும் தேச பக்தப் படையணியாக நிறுவப்பட்டிருக்கும்போது அது போர்களத்தில் சளைத்துப்போவதற்கான வாய்ப்பு மிகமிக அரிதாகும், இன்றைய இலங்கையில்.இதற்குத் தனியே தேசிய வெறிமட்டும் காரணமல்ல.கூடவே அந்நிய,வெளியுலகத்தின் பாரிய ஒத்துழைப்பும் இந்தப்பாசிச இராணுவத்துக்கு புத்துணர்சியை,புத்தெழிச்சியை வழங்கிக் கொண்டிருப்பதும் உண்மையாகும்.

இந்தப் பாசிச இராணவந்தாம் சமாதான ஒப்பந்தத்துக்குப் பின்னான சில மாதங்களில் புலிகளினால் "இராணுவம் திருந்தி வருவதாகவும்,அவர்கள் ஓரளவு மக்களைப் புரிந்து கொண்டுள்ளதாகவும்"நற் சான்றிதழ் வழங்கப்பட்டது.அப்போது நாம் இப்படியொரு கவிதை எழுதினோம்:"...இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!..."
இலங்கை அரச வரலாற்றில் எக்காலத்திலும் இராணுவம் நீதியாகச் செயற்பட்டதில்லை.அது தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்காகத் தினம் இனவாதம் ஊட்டப்பட்ட அரச வன்முறை ஜந்திரமாக இருந்து வருகிறது.இத்தகைய இராணுவம் அப்பாவிகளைக் கண்ட துண்டமாக வெட்டிச் சாய்த்த வரலாறு, நமது மக்களுக்குப் புதிதல்ல.எனினும் இன்றைய காலத்தில் இராணுவம் குறித்த புலிகளின் மதிப்பீடும்,அவர்கள் இராணுவத்திடம் கைகுலுக்கியபோது அவர்களால் உரைக்கப்பட்ட நட்பு நிறைந்த கோசங்களும் நம்புவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.சிங்களச் சியோனிச இராணுவமானது முழு இலங்கையையும் சிங்களவர்களுக்காக்கும் பணியிலிருந்துகொண்டே நமது மக்களோடு உறவாடி வந்தது,வருகிறது.இத்தகைய இராணுவத்தோடான தேன்நிலவு முடிவுக்கு வந்தபோது யுத்தம் தொடர்கதையாகிறது.


இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடைந்து இலங்கை இராணுவம் வலிந்து யுத்தஞ் செய்யும்போது புலிகள் தடுப்பு யுத்தம் மட்டுமே செய்யும் நிலை.புலிகளின் கட்டுக்கோப்பு உடைந்துவிட்டதா,அவர்கள் பலயீனப்பட்டுப் போயுள்ளனரா என்று இலங்கை இராணுவம் தடுமாறுகிறது.ஆனால்,புலிகளின் தந்திரம் எவருக்குமே புரியாது.இங்கே புலிகள் செய்யும் போராட்டம் எதுவாக இருந்தாலும் அது வெற்றியளிப்பதற்குச் சாத்தியமில்லை.பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களை ஒடுக்கியபடி புலிகள் கொண்டிருக்கும் அரச ஜந்திரமானது புரட்சிகரமான போராட்டப்பாதையை மறுத்தொதுக்கிறது.இதற்கான பின் விளைவுகளை இப்போது புலிகள் அமைப்புச் சந்திக்கிறது.காலவோட்டத்தில் இலங்கையின் விமானத் தாக்குதல் புலிகளின் மேல்மட்டத் தலைவர்களை நோக்கித் தாக்குதல் செய்யும் வியூகத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.புலிகள் தமது தலைவரைக் காக்கும் போரைச் செய்யும் நிலைக்கு அவர்களைக் கட்டுப்படுத்தும் தந்திரதைச் செய்யும் நிலைக்குத் தாழ்த்தும் இலங்கையின்-இந்தியாவின் திட்டம் இப்போது நன்றாகவே பயனளிக்கிறது.
இந்த யுத்தம் இதுவரைத் தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய இழப்பைத் தந்ததுமட்டுமல்ல,புலிகளின் இராணுவ வலுவுக்கும் பாரிய இழப்பைத் தந்திருக்கிறது.புலிகளின் கணிசமான போராளிகள் கொல்லப்பட்டதை எவரும் மறைக்கமுடியாது.இங்கே இராணுவத்திடம் ஆயுதங்கள் பெருவாரியாக இருந்து முன்னணி வகிப்பினும் இந்தப்பாசிச இராணுவமானது இலங்கைச் சிங்களவர்களின் தாயகப் படையாக மாறியுள்ளதும்,அது கூலிப்படையுணர்வை இழந்து தாயத்தைக் காப்பதற்குமான பெருவுணர்வோடு இருப்பதைக் காட்டிக்கொள்கிறது.இத்தகைய தரணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் இராணுவ வலு தோல்வியடைவதும் சில வேளைகளில் வெற்றியுறுவதும் நடக்கும்.
இந்த நிலையில் இந்த ஈழப்போராட்டத்தால் இலங்கை இராணுவத்தைத் தோற்கடிக்க முடியுமா?அல்லது இலங்கை இராணுவத்தால் புலிகளைத் தோற்கடிக்க முடியுமா?
இரண்டும் யுத்தத்தால் சாத்தியமில்லை!
யுத்தம் எப்போதும் வெற்றியடைவதில்லை.இதுதாம் நியதி.
யுத்தம் தொடங்கும்போது ஒரு தரப்பு மிகுதியாக இழக்கும் மறுதரப்புக் குறைவாக இழப்புக்குள்ளாகும்.இதுதாம் சாத்தியமே தவிர வெற்றியல்ல.இது அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும்,ஏன் மற்றெல்லா யுத்தங்களுக்கும் பொருந்தும்.ஆனால் வியாட்நாமுக்குப் பொருந்தாது.அது அந்நிய இராணுவத்தைப் புரட்சியின் மூலமாகத் தூக்கியெறிந்தது.இங்கே புரட்சிக்கும் ,யுத்தத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கு.புரட்சி மக்களால் நடாத்தப்படுவது.அது நிலவுகின்ற ஆளும் வர்க்க அதிகாரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு,அதற்கு மாற்றீடாக மக்களால்-மக்கள்படையால் மாற்று அமைப்பை நிறுவுவது.இது சாரம்சத்தில வித்தியாசமானது.
இப்போது புலிகள் இலங்கையில் செய்வது புரட்சியல்ல.மாறாக யுத்தம்!இவ் யுத்தத்தால் புரட்சியின் பலனனை எட்ட முடியாது.
குறிப்பிட்ட காலங்களின் இழப்புக் குறைந்து எதிரி இராணுவத்துக்கு இழப்பு அதிகமாகும்.அதுபோலவே கடந்த சில நாட்களைப்போலான சந்தர்ப்பங்களில் புலிகளுக்கு இழப்பு அதிகமாகி இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு அது அற்ப இழப்பாக இருக்கும்.
கடந்த சில நாட்களில் இதுவே நடைபெற்றது.இதில் எவருமே வெற்றியடைவதற்கில்லை.
இந்த நிலையில் நாம் தொடர்ந்தும் எமது சிறார்களை சிங்கள இனவாத அரசிடம் பறி கொடுப்போமா?
இத்தகைய தரணங்கள் எப்போதும் நம்மையினிப் பின் தொடரும்.ஏனெனில் இலங்கை அரசியலில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு பொருளாதாரவுறுகளின் முரண்பாட்டோடு தொடர்புடையது.இது இனவாதத்தைத் தினமும் புதிப்பித்தபடி இத்தகைய பொருளாதார முரண்பாட்டை எதிர்கொள்வதால் இலங்கையின் பாரிய பொருளாதாரச் சிக்கல் பின் தள்ளப்பட்டுத் தாய்த் தேசத்தின் இறைமை முன்னணியில் இரு தரப்பிடமும் நிற்கும்போது, மறு இரு தரப்புகளிடம்(முஸ்லீம், மலையகத் தமிழரிர்களிடம்) இது பொருளாதார நலனாக விரிகிறது.இந்தச் சிக்கலை வெளிநாடுகள் மிக நேர்த்தியாகக் கையாளுகிறது.குறிப்பாக இந்தியா மிக நுணுக்கமாக முஸ்லீம் மக்களையும்,சிங்களவரையும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட வைப்பதில் வெற்றியீட்டி வருகிறது.மலையகத் தமிழ்த் தேசிய இனத்தை ஈழத்தேசிய இனத்துக்கு எதிராகத் திருப்புவது சாத்தியமில்லை.அடிப்படையில் இரண்டு தேசிய இனத்தினதும் தாய்மொழி தமிழ்.இது இரு தேசிய இனத்தினதும் மிக நெருக்கமான நட்பு சக்தி உறவாகும்.
எதிர்காலத்தில் நிகழப்போகும் அரசியல் இராணுவ வியூகமானது பழிக்குப்பழி இராணுவ நகர்வாகவே இருக்கும்.இது இஸ்ரேலிய-பாலஸ்தீனீய யுத்த நிலவரத்தையே ஏற்படுத்தும்.இத்தகையவொரு நிகழ்வை-அரசியல் சூழலைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் உந்துதலை வெளியுலக அரசியல் ஆர்வங்கள் இலங்கையில் தோற்றுவிப்பதை நாம் அறிந்துகொள்வது மிகச் சுலபம்.
இவ்வகையானவொரு சூழலில் புலிகளின் போராளிகள் வெறுமனவே காயடிக்கப்பட்ட ஒரு யுத்த ஜந்திரமாக இருப்பதாக நாம் முன்பு பல கட்டுரையில் குறிப்பிட்டோம்.ஆனால் இலங்கைப் பாசிச ஒடுக்குமுறை தொடர்ந்து வலுவாக இருக்கும்போது மக்களிடமும் போராளிகளிடமும் வெறும் உணர்வு வழிப்பட்ட அல்லது இயக்கவாத மாயை இருப்பதில்லை.மாறாக இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டவுணர்வும்,தமிழ் வாழ்வு சார்ந்த காப்புணர்வும் மெருக்கேறி சமுதாய ஆவேசமாக அது செயற்படும்.இந்தச் செயற்பாட்டை நோக்கிப் புலிகளுக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கம்-தரகு முதலாளிகள் அதைக் கைச்சிதமாகப் பயன்படுத்த பேரத்துக்கான யுத்தத்தைத் தொடர்கிறார்கள்.இது தமிழ் பேசும் மக்களின் விலங்கையொடிப்பதற்கானவொரு யுத்தமாகவே தமிழ் மக்களின் ஆன்ம ஒத்துழைப்பு மனம் நம்புகிறது.இதைப்போலவே தமிழ்ப் போராளிகள் உண்மையில் தேச பக்தர்களாய்த் தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்கிறார்கள்.இதுவே இன்றையத் தமிழ் மக்களின் புலிகளுக்கான ஒத்துழைப்பாகவும்,அவர்களுக்கானவொரு அங்கீகாரமாகவும் இருக்கு!இலங்கையில் வாழும் அனைத்துத் தேசிய இனங்களும் கௌரவமாக வாழும் அரசியல்-பொருளியல் நலன்கள் எட்டப்படும்வரை,இதை(தேசியப் போராட்டவுணர்வை) எந்தவொரு சக்தியாலும் அழித்துவிட முடியாது.இலங்கை அரசின் எத்தனை விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தாலும்-தமிழர்களின் பல நூறு உயிர்களைப் பறித்தாலும் தேசியப் போராட்டவுணர்வை-தமக்கான நாட்டையுருவாக்கும் அபிலாசையை எந்தவொரு அரச தந்திரமும்,பிரச்சாரமும் தோற்கடிக்க முடியாது.இது தீயாகச் சுவாலையெறிந்து எரிந்துகொண்டேயிருக்கும்.ஆதலால் தமிழ்பேசும் மக்களை இனவாரியாக அழித்துக்கொண்டிருக்கும் எந்தச் சக்தியும் புலிகளை அவ்வளவு இலகுவாகத் தோற்கடிப்பது முடியாத காரியம்.ஆனால்
இலங்கையில் தொடரப்போகும் பயங்கரவாதத் தாக்குதல்களால் பல நூறுவுயிர்கள் அழியப்போகிறது.அவ்வண்ணம் பாரிய சொத்திழப்புகளும் நடைபெறும்.இதைக் காரணமாகக்காட்டி ஐ.நா.படைகள் இலங்கையில் குவிக்கப்படும்போது புலிகளிடமிருக்கும் பல போராளிகள் ஆயுதங்களைப் போடக்கூடியவொரு சூழலும் வந்தடையக்கூடிய வாய்பு நிச்சியமாக இருக்கும்.இது வெளியுலகத்தால் தமக்கு நிச்சியமானவொரு தீர்வு வருமென்றும்-பாரிய ஆதிக்கமுடைய வெளிச் சக்திகளுக்குப் பணிந்தும்- பேராவலால் மக்கள் இந்த முடிவை எடுக்கலாம்.ஆனால் அத்தகைவொரு நிலைமை நம்மை இன்னும் சிங்கள-இந்திய,வெளியுலகங்களுக்கு நிரந்தரமானவொரு அடிமைகளாக்கி விடும்.எனவே யுத்தங்களால் வெற்றி கிட்டப்போவதில்லை.காரணங்கள் பல உள்ளன.பேசித் தீர்க்கும் ஒரு அரசியலால் மட்டும் ஒரு சில நலன்களை இலங்கைத் தேசத்துள் வாழும் பல் தேசிய இனங்கள் அடையமுடியும்.ஆனால் அது இலங்கைத் தொழிலாளர்களின் பாரிய தோல்வியாகவே தொடரும்.இத் தோல்வி மிகவும் காலம் கடந்தவொரு படிப்பினையைத் தென் கிழக்காசிய இடதுசாரிகளுக்கு வழங்கும்.அந்தப் படிப்பினையானது தேசிய இயக்கங்களில் புலிகள் போன்ற இயக்கவாதம் சார்ந்தும்,அதன் குறுந்தேசியம் சார்ந்த யுத்த நடவடிக்கைகள்,தந்திரோபாயங்கள் குறித்தும் இருக்கும்.இந்த அமைப்பை ஒற்றை மொழியில் பாசிசப்படையென நிறுவிக் கொண்டு, உலகப் பாசிச வரலாற்றோடு நோக்கப்படும் இன்றைய நமது விவாதங்கள் தப்பாகிப் போகும்.இதுவேதாம் இனித் தொடரப்போகும் அரசியல் தரணங்கள்.இதில் புலிகளின் எந்தப்படையும்-முப்படையும் மக்களைக் காக்கப்போவதில்லை.அப்படிக் காக்கும் வலுவிருந்தால் நாம், அப்பாவி மக்களை-புலியின் அரசியல் தலைவர் தமிழ்ச் செல்வனை இழந்திருக்க வாய்ப்பில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: