Sonntag, Januar 12, 2014

இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!

இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!


நியாயம் கேட்டல்-மன்னிப்புக் கோரல் மற்றும் "கூட்டறிக்கை"  என்ற பெயரில் தொடரும்  இலீனா  மணிமேகலை முகந்தாங்கும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் வன்முறை குறித்து,  உணருவதுள் பல தடுமாற்றங்கள் -தப்பித்தல்கள் ஒவ்வொருவர்தம் நியாய தர்மத்துக்குட்டதே.அதை ,உடைத்துப் பார்ப்பதில் எமக்கெந்தத் தடுப்பும்  இல்லைத்தானே?

“எதிர்ப்பரசியல் படம்”காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு  உட்கார்ந்தாலும் அதை தட்டித்  தூய்மைப்படுத்தப் புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது  மீள மீளத் தகவமைக்கும் கருத்தியல் வன்முறையானது மாற்றுக் கருத்து நிலைகளைத்தாண்டிச் சுயாதீனமான கருத்து -விமர்சன முகிழ்ப்புகள்மீது தொடர்ந்து விசத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறதென்றுந் திடமாக நம்பித்தாம் தீரவேண்டுமென்போம்!

இந்தியத் தரகு முதலாளியத்தின் நலன்சார் கருத்துக்கள் -லொபி முகாங்கங்கள் எனப் பல இரூப இயக்க வெளிகள் அம்பலப்பட்டுப்போகும் போது தமது முகவர்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் ஒரு அரசியல்-கருத்தியல் வன்முறையாக "இஃது" ,தொடருவதை இலீனா மணிமேகலையது அரசியல் நகர்வில் புரிந்துகொள்ளமுடியும்.இலீனா மணிமேகலையின் தொடர் குறும்படத் தகராறுகள்  ,அதுசார்ந்தெழும் விமர்சனங்களானது அவரது படைப்பாளுமையின்மீதான விமர்சனமின்றி அஃது ,அவர் தொடந்தியக்கும் அரசியல் -வர்க்கச் சார்வுமீதானதாகவே இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் வழியாக இயக்கிவரும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் சூழ்ச்சி தத்தமக்கான அணிகளைத் திரட்டிக் கூட்டறிக்கை தயாரிப்பதைப் பல வழிகளில் பார்த்ததாகிறது.இந்திய ஆளும் வர்க்க நலனது தெரிவுகள் பல.அவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்திய ரோவினது கண்காணிப்பின் கீழ் முகாந்திரமிடப்படுவதும் அத்தகைய முகாந்திரத்துக்குத் தோதான தனிநபர்களைத் தெரிவுக்குட்படுத்தி ,இயக்கி வருவதையும் நாம் ஏலவே ஈழப்போராட்டத்துள் பார்த்தோம்.

அன்று ,"ஈழப்போராட்டத்தை " மொத்துக் குத்தகைக்கு எடுத்து அதைப் பரவலாகச் சிதைத்த இதே இந்திய ஆளும்வர்க்க நலனானது இன்று, சுயானதீனமாகத் தமது பரப்புரைப் பீரங்கிகளுக்கெதிரான கருத்து வெளியைச் சுருக்குவதிலும் அதைத் தொடர்ந்தழித்து விடுவதிலும் பல வடிவங்களில்  முகவர்களை வைத்து இயங்கிவருகிறது.இந்த தெரிவுகளைப் புரிந்துகொள்வதில் சற்றேனும் தப்பு ஏற்படுந் தறுவாயிற்றாம் நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோமெனச் சொல்கிறோம்!சமீபத்துள் ,நிர்மலா அம்மையார் தயாரித்து 71 நபர்கள் கையெழுத்திட்டு வெளியாகிய அறிக்கைக்கும் ,இந்த இலீனா மணிமேகலைக்கான தார்மீக நியாயம் பகரும் "கூட்டறிக்கை"க்கும்  இடையிலான  மிக நுணுக்கமான அரசியலைச் சரிவரப் புரிந்தாகவேண்டும்.






இவர்களால் (கூட்டறிக்கைக் கையெழுத்துத் தோழர்கள்)தொடந்து பரப்புரையாகும் கருத்துக்கள் -காட்சி வடிவங்கள் -படைப்புகள் யாவும் , இந்திய  ஆளும் வர்க்கத்தினது நலனைத் தமிழ் பேசும் இலங்கை மக்கள்மீது மட்டுமல்ல தமிழக மக்களது அரசியல் -வாழ்வாதாரத்தின் மீதானதாகவும் தெரிவுகள் பன்முகப்பட்டுத் தாக்கிவருவதைப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் -வெளியீடுகள் -கூட்டங்கள் மற்றும் ,சந்திப்புகள் வழி நாம் மிக நேர்த்தியாகவுணரும்போது அதை மறைப்பதற்கெடுக்கும்  முயற்சியே இந்தக் "கூட்டறிகை" மற்றும் மறுப்புப் போராட்டம் -நியாயம் கோரும் குரல் அரசியலாக மேலெழுகிறது.இஃது, நம் எல்லோரையும் கோதாவில் இறங்கக் கோருகிறது.

இலீனாவுக்குள் இயங்கும் அரசியலை மறுத்துவிட்டு அவரைத் தனிநபராகவும் , அவர் முன்வைக்கும் படைப்புகள் "யாவும் " அவரது சுயாதீனத்தினதும் ,தனிப்பட்டதுமாகக் கற்பிக்கும் அரசியல் மிகப் பெரும் ஆபத்தானது.இது, சூட்சுமாகத் தாக்கும் வலுவோடு எழுத்துப் படைப்பாகவும் -காட்சிக் கோர்வையாகவும்  ஒளிச் சட்டகத்துள் நிகழ்த்தப்படுகிறது.சமீபத்துள் ,இந்தியத் தரகு முதலாளியத்தின் "இயற்கை வளத் திருட்டுக்கு" த் தோதாகத் தனது கலையனுபவத்தைக் காட்சியாக நம் முன் இயக்கிக் காட்டியவர் இலீனா மணிமேகலை என்பதை நாம் மறக்கக் கூடாது.அவர் இந்தியப் பழங்குடி மக்களது "வாழும் வலயத்தை"  நிர்மூலஞ் செய்யும் தரகு முதலாளிகளது நலனைப் பழங்குடிகளது முன்னேற்றமாகக் காட்சிவழி மனிதர்களது விழிகள்முன் வைத்தவர்.இத்தகையவொரு அரசியலது சூட்சுமம் மிக நேர்த்தியாக , இந்தியப் பிராந்திய மக்களது அனைத்து வாழ்வுப் பரிணாமத்துள்ளும் மிக மிலேச்சத்தனமாகவும் -நுணுக்கமாகவும் சில -பல பிரபல்யங்கள்வழி இயக்கப்படுவதன் தொடர்ச்சியே இன்று, நம்முன் கருத்தியல் வன்முறையாகவும் - பௌதிக இருத்தலை அச்சப்படுத்துகிறது.

இது கோரிக்கொண்டிருக்கும் நியாயம் என்பது, படைப்பின் சுதந்தரமல்ல. மாறாக, இந்தியத் தரகு முதலாளியத்தின் மாறிவரும்  நலன்களைக் காத்துக்கொள்ளும் பரப்புரைப்போராட்டமே இத்தகைய அரசியல் வெளியைத் தொடர்ந்து தோற்றுவிக்கிறது.எதுவெப்படியோ ,  இத்தகைய அரசியல் சூழ்ச்சி ,அமுக்கமாக இயக்கப்படும்போதும்  புலத்தில் தொடர்ந்து கட்சி கட்டிக் "கூட்டறிக்கை" கையெழுத்து அரசியலுக்குள் தலைகாட்டும் நபர்கள் ,தத் தமது சொந்த நலன்கள் -தமிழகத்துள் தமது எழுத்துக் குப்பைகளைப் பதிப்பிக்கும் நகர்வுகளுக்கு இடைஞ்சலற்றவொரு அரசியற்றெரிவில் "ஏன் -எதற்கு "என்ற விசாரைணயைப் பொது வெளியில் ஒத்தி வைத்துவிட்டுக் கையெழுத்துப் போடுவதில் தமது நலன்களைக் காக்க முனைகின்றனர்.இந்தச் சிறுமைத் தனமான செல்நெறியானது இந்திய ஆளும் வர்கத்தின் பரப்புரை -கருத்தியலைத் தொடர்ந்து ஒடுக்கப்படும்  மக்கள்மீது  அவர்களது  நலனாகப் பிரகடனப்படுத்தி இந்திய நலன்களைத் தொடர்ந்து சிதையவிடாது காத்து வருகிறது.

இது, அராஜகம் -அடக்குமுறை -பிளவுவாத அரசியல் மட்டுமல்ல.இது இந்திய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து கருத்திலாக உருவகப்படுத்தி நமது சிந்தையிற் தோற்றுவிக்கும் ஒரு லொபி நிலை மனதை உருவாக்க முனைகிறது.இதை ,உடைத்துப் பார்க்கும் திறனை இது பல முற்போக்கான கோரிக்கைகளின்வழி(தலித்துவ விடுதலை -பெண் விடுதலை-சூழற் பாதுகாப்பு-பன்முகக் கருத்து-சனநாயகம்  என்ற  கோரிக்கை ;போராட்டம் வழிகளில் ) செயலற்றதாக்குகிறது.இதுவொரு வகையிற் எதிர்ப்புரட்சிக் குணாம்சத்துக்குட்பட்டதே!;இங்கு, முற்போக்கு முகமூடிபோட்ட மனிதர்களைப் பல  இரூபங்கிளில் எழுத்தாளர்களாகவும் -கவிஞர்களாகவும் -சினிமாக் கலைஞர்களாகவும் மட்டுமல்ல கட்சித் தலைவர்கள் -போராட்ட அமைப்புகளது களப் போராளிகளாகவும்  கூடவே நேர்மையான புரட்சிகரவாதிகளாகவும் ஏன் ,நக்சலைட் போராளிகளாகவும் கூட நம் முன் இவர்கள் தலை காட்டுவார்கள்!






இவர்களை இனங்காணும் -இதற்கு மாற்றான - அனைத்து, அரசியல் முகிழ்ப்பையும்  கருக்கிவிடுவதில் புலத்திலுள்ள பிழைப்பு வாதிகளையும் -நிலத்திலுள்ள(தமிழகம் -ஈழம்) தொழில்முறைத் தேர்ச்சியுடைய இந்திய ரோவினது முகவர்களையும்  ஒரு தளத்தில் வைத்து  இயக்குவதில் இந்திய ரோவின் வெற்றி அபாரமானது.

இது  "ஈழப்போராட்டத்துள்" முன் வைத்து இயக்கிய  அதே சாணாக்கியத்தோடுதாம் தற்போதயை தமிழக -ஈழச் சமூக வெளியுள் பரப்புரைப்  படைப்பு வெளியைக் கைப்பற்றி, இயக்கி வருகிறது.இங்கே , பார்ப்பனியம் பின்னுக்குள் தள்ளப்பட்டுத் "தனிநபர் விடுதலை ,தலித்துவ விடுதலை -பெண் விடுதலை -சூழற் பாதுகாப்பு " எனப்  பன்முகப்பட்ட தெரிவுகளோடு இது, களம் இறங்கியுள்ளதென்பதைத் தெளிவாகப் புரிவதே நமது காலத்தின் மிக அவசியமான பணி.இதை, உணராதவரை இவர்களது "கூட்டறிக்கை"ப் போர்கள் பல வர்ணக் காகிதத்துள் பதிப்பிக்கப்படுவதில் பௌதிகரீதியாகக் குருதியில் நனைக்கப்பட்டும்  சிகப்பு வர்ணம் புரட்சியாகப் பேசப்படும்!.

ப.வி.ஶ்ரீரங்கன் ,
ஜேர்மனி.
13.01.2014