Dienstag, Juni 22, 2010

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...


"தமிழ்ச்சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய நமது சூழலானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்."ன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.கடந்த கால அழிவுகுறித்து எந்த மதீப் பீடும் இல்லை! இதற்குள்புலம்பெயர் தமிழருள் புதுப்புதுக் கட்சிகள்,புரட்சிகரப்பாட்டும்,மக்களை அணிதிரட்டுவதுமெனக் கொட்டியபடி...


நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்,அதே இயக்க-கட்சிவாத மாயையில் நீந்தியபடி!இது எதற்கானது-எவருக்கானது?

அரச-புலி, வன்னியுத்த்துக்குப் பின்னான இன்றைய அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை. காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை "நமது மக்களுக்காக"க் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும், நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் "புரட்சிகரக் குரல்",போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!

இலங்கையில், மக்கள் தனிநபர் பயங்கரவாதத்துக்குள்தாம் சீவிப்பதாகச் சொல்லும் அரசியலானது அந்தத் தனிநபர் பயங்கரவாதக்கூறினுளொன்றான தமது பக்கத்தைப் புரட்சியென வரையறை செய்வதில் கவனமாக இருக்கின்றது.

இலங்கையின் அனைத்து அரசியல் நகர்வும், இலங்கை மக்களது சமூகசீவியத்துள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனிநபர் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் உடனடி அரசியலானது வெறும் கிறுக்குத்தனமான அரசியலைப் பின்னணியாகக் கொண்டியங்குகிறது.அத்தகையவொரு அரசியலை வகுத்து இயக்கிவரும் அந்நிய நலன்சார் அரசியலொடுக்குமுறையின் ஒருவடிவமாகவெழும் இப்போக்கை, அதன் பின்புலத்தை மறைத்து, முதன்மைப்படுத்தலானது எதன் தயவின் தொடர்ச்சியென நாம் பார்ப்பது அவசியமாகும்.மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை-சுயநிர்ணயம்-புரட்சி"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் இன்றைய அமைப்பாகும் அரசியற்றொடர்ச்சி மிக மோசமானவொரு பின்னணியைக்கொண்டியங்க முடியும். புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் "புரட்சி-கட்சி"யெனக் கத்தி" தனிநபர் பயங்கரவாதமாகக் குறுக்கப்படும் தமிழ் மக்கள்மீதான அந்நிய-அரசியல்ஒடுக்குமுறை வடிவங்களை முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோனதையும் குறிக்கத்தவறுவது நியாயமாகிறதா?

ஆகணும்!

அப்படிப் பார்ப்பதே புலியழிவுக்குப் பின்னான போராட்டத்தின் தவறுகள்-குழிபறிப்புகள்-பலியிடப்பட்ட மக்களது பெறுமானம் குறித்துத் தொடராகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகும்.

"தமிழீழத்தின்" நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது-"புரட்சிகர" அமைப்பாகிறது!.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது அதைக் குறித்து அழுது வடிந்தவர்களோ அந்த வலியின் தொடர்ச்சியில் அதே புலிப்பாணி அமைப்பாவதைத் தொடரும் அபத்தம் "புரட்சியின்" முகமூடியோடு புதிய விளக்கம்பகர்வதில் அத்துமீறிய கருத்தியில் வன்முறையைத் தொடர்கிறது.இது,சாபக்கேடான அதே இயக்கவாத மாயையின் இன்னொரு வடிவமாகும்.சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த இயக்கவாதத் தொடர்ச்சியின் வருகையில் மக்களது இதுவரையான வாழ்வியிற்றேவைகளைக் கணக்கெடுப்பது புரட்சியின் பயனுறு நிலைப் பண்புக்கானதாகவிருப்பின் அதன் ஆணிவேர் மக்கள் சமூகத்தைத்தாண்டி இன்னொரு தளத்தில் வேர் அரும்புகிறதென்பதைக் குறித்துரைக்க வேண்டியதில்லை.இன்றோவிது,கடந்தகால அதே இயக்கவாத மாயயைத் தொடர்வதில் அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகளதுதெரிவில் பலர் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.

பற்பல ரூபங்களில் இஃது, அரசியல் முனைப்பைக் கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இஃது,எஞ்சிய புலத்துப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் "புரட்சிகர" அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.அனைத்தையும்"புரட்சி"என்ற சொல்லாடலாகத் தொடர்வதில் அதன் சாயம் வெளுத்துப்போவதைத் தள்ளிவைக்க முனைகிறது. இன்றைக்குப் புலிகளெனும்அடியாட் பாத்திரத்தின்இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.

மறுபுறுமோ, சீன-இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய இலங்கை நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்த கட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது புலம்பெயர் மக்களைப்பலவாறாகப் பயன்படுத்துகிறது. அதிலொன்று,இன்றைய "புரட்சி-கட்சி"அமைப்பாவதென்ற தொடரில் மையங்கொள்கிறது! இதுள்,மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகள் மேலும் பல முகங்களை நமக்குள் இனம் காட்டும்போது,அங்கே,வினைப் பயன் தொடராக இயக்கவாதம் மீளத் தலையெடுப்பதில் இந்திய-மேற்குலக அரசியல் உந்ததலுக்கு இருவேறு முகமில்லை.அதன் பாத்திரம் ஒன்றுடனொன்று உறவுடையது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.இதற்கு பெயர் "புரட்சியை நோக்கி அமைப்பாவது-மக்களை அணித்திரட்ட(...)"என்ற வாய்ப்பாடு இதுவரை இயக்கவாத மாயையின் தொடராகவே மேலெழுகிறது.மக்களை நடைபிணமாகப் பார்த்த அன்றைய இயக்கங்களின் அதே பாணிக் கருத்துக்களை மேலும்"புரட்சி-அமைப்பாவது-மக்களை அணிதிரட்ட"என்ற வர்ணமுலாம் பூசுவதால் கடந்தகாலத் தவறுகள் மறைந்துவிட முடியாது.

நமது சமுதாயத்தின்"தேசியவிடுதலை"ப்போராட்ட வரலாற்றில் கட்சி-அமைப்பு அரசியலே மறுபரிசீலனைக்குட்பட வேண்டியது.அது,குறித்துரைக்கும் போராட்டச் செல் நெறியே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடக்கணக்காக அதன் அறுவடைகள் குறித்து அலச வேண்டிய சூழலில் திடீர் கட்சி ஆரம்பித்தலென்பது மக்களைச் சுத்த முட்டாள்களாக்குவது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளில் இருந்தபடி, புரட்சிக்குப் புதுப்புது விளக்கங்களை அள்ளி வீசுகின்றனர்.

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் வாழ்வில்-சமூகப்பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தத்துக்குப் பின்பான சூழலில் சாத்தியமாகமுடியும்.இதைக் கணித்து உள்வாங்கும் ஆதிக்கச் சக்திகள் பழைய இயக்கத் தொடர்ச்சிகளை மெல்ல உசுப்பேற்றித் தமது சேவகர்களாக்குவதில் "புரட்சி-கட்சி"எனக் மண் குதிரில் நின்று புலம்ப வைக்கிறது, நமது "தோழர்களை" இன்று!! இந்த மண்குதிர் நம்புவதற்கேற்ற படிமங்களைப் புரட்சிகர மொழிவுகளுடாகச் சொல்லும்போது ஒரு சிலர் மயங்கவும் முடியும். எனினும்,இது ஆபத்தான விளைவுகளின் நடுவே பரிதாபகரமாக மக்களை மேலும் முட்டாளாக்குவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல!

இலங்கை மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

22.06.10

Donnerstag, Juni 03, 2010

வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான...

போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


(வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான ஆதரவு-எதிர்க்கருத்தாடல்கள் தொடக்கிவரும் கதையாடல்கள் குறித்து விளங்க முற்படுதல்)


ர்க்கப் போராட்டமென்பதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழு நாளையுஞ் செலவு செய்தே வருகிறது.


லீனா மணிமேகலையது படைப்புச்சார்ந்து வினவுத் தளத்தில் எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில்புரட்சிகர-எதிர் நடவடிக்கையென சுற்றமுனையுந் தருணங்களில் அனைத்தையும் குத்தகையெடுப்பதன் தொடர் நிகழ்வாக மாறும் மனித சுதந்தர மறுப்பில்,அவற்றை நோக்கிச் செல்வது சாத்தியமே.ஏனெனில்,போராட்டமென்பது தற்செயல் நிகழ்வல்ல.அது,பல் முனைகளில் தினமும் இயங்குவது.


இன்று பேசத்தக்க பிரச்சனைகள் இரண்டு.அவை, நவ காலனித்துவத்துக்குப்பின்பான தமிழ்ச் சமூச நகர்வுக்குள் நிகழ்பவை.


ஒன்று,தமிழ்ச்சமூகத்தில் காலகாலமாக நிறுவனப்பட்ட பெண்சார்ந்த மதிப்பீடு-முரண்பாடு,மற்றது, பல்தேசியக் கம்பனிகளது தெரிவில் புதிய மூலதன இயக்கத்தில்சிதைந்த தமிழ்பேசும் மக்களது சமூகவாழ்வு.இதுள், இப்போது நான் முனைவது பெண்சார் மதிப்பீடு அல்லது, முன் தீர்ப்புக் குறித்த விவாதப்போக்கு என்பதன் நகர்வில் என்வரையான புரிதல் அல்லது உரையாடலென...

உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில், தமது இருத்தலைக் குறிவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை(சமீபத்தில் ஜேர்மனிய ஜனாதிபதி கோஸ்ற் கோலர் மக்களிடம் உண்மையொன்றைப் போட்டுடைத்தார்.அவ்கானில் ஜேர்மனியத் துருப்புக்கள் வர்த்தகக் காரணங்களுக்காவும் களத்தில் நிற்பதாகவும்,பொருளாதார ஆர்வங்களது நலனும் சம்பந்தப்பட்டதெனச் சொன்ன மறுநிமிடம் அவர் பதவி விலக வேண்டி வந்ததை ஞாபகப்படுத்தும்போது இந்த அதிகாரங்களது வர்க்கச் சார்பு எதுவரையென்பது புரியும்) வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.என்பதன் நியாயக் கூற்றின்வழி எவன்(ள்) சிந்திக்கிறான்(ள்) என்பதைவிட,ஒவ்வொருவரும் பூச்சுற்றும், "விடுதலை,சுயநிர்ணயவுரிமை,புரட்சி"என்பது குறித்துச் சாமானிய மக்கள் இனிப் புரிந்தாகவேண்டும்!நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது. இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இந் நிலையில்,பெண்ணடிமைப் போராட்டம் எப்போதும் பொருளாதாரத்தோடு பின்னப்பட்டுள்ளது.பெண்களின் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை உழைப்பை நிலைப்படுத்தும்போது "இத்தகைய பெண்மதிப்பீடு உடைவதற்கான வாய்யுண்டு என்பவர்கள்" கயவர்கள். பண்பாட்டுமாற்றத்தைக்கொண்டியங்கும் பொருளாதாரவுறவுகள் மெத்தனமாக மொழித்தார்ப்பார் குறித்து மௌனிக்கிறது.இது பற்பல தளங்களில் நிறுவனப்பட்ட தொடர்ச்சியை வற்புறுத்துகிறது.அதை உடைப்பதற்கு லீனா மணிமேகலையது கவிதையுலகு தமிழ்ச் சமூகத்தில் சில வினைகளையாற்றுவதை மறுப்பதென்பது சரியானவொரு பார்வையாகாது.


சமுதாயத்தை மாற்றத்துடிக்கும் முயற்சியிலுள்ளவர்கள் வானத்திலிருந்து நேரடியாகப் புவியுள் குதிக்கவில்லையென்பது உண்மைதானே?இதை லீனாவினது திசையில் பொருத்துவதில் என்ன தவறுள்ளது?


கயவர்கள் இந்தவுலகத்துள் மதவாதிகளாகவும்,போலிப் புரட்டற் "புரட்சி" பேசுபவர்களாகவும்,தேசியவெறியர்களாகவும்,இனவாதிகளாகவும்,அப்பட்டமான கொடிய சுரண்டற்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக,இந்தச் சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பரிணாமமும் எல்லோரிடத்திலும் உள.

இஃது,வெவ்வேவாறான சூழ்நிலைகளுக்கிணங்க உணர்வினது உந்ததுதலால் உருவங்கொண்டு வெளிப்படும்.அஃதே,ஒருவரை அளக்கும் அளவுகோலாக இருக்கமுடியாது.ஏனெனில், நாம் இயக்கத்திலிருக்கிறோம்(இஃது அமைப்பைச் சொல்லவில்லை. மாறாக, காரண காரிய-இயக்க விதிக்கமைய என்பதாக விரிவுறும்).எனவே,நம்மிடம் இருக்கும் அனைத்தும் யதார்த்தமாகச் சமூகத்துள் இருப்பவை-நிலவுவை.இதிலிருந்து மீண்டு,நாம் காணும் ("கற்பனையுள் வடிக்கப்பட்ட மனிதர்")அந்தத் மனித நிலை உருவாகுவதற்கு நீண்ட காலம் நமக்குள் போராட்டம் நிகழுகிறது.

இதற்குள் நமது ஆயுள் முடியலாம்.

We learn to accept ourselves,when we are accepted by others the way we are.

இதற்கு மேல் நீங்களோ நானே எவ்வளவு முனைந்தும் எமது நிலையைத் தாண்டிவிடத் தருணங்களில்லை.

நாம் வாழும் நிலை அத்தகையது.


எம்மினத்துள் ஊடுருவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாகப் பெண்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இது,புரட்சியைச் சொல்லிப் பெண்ணினது சுதந்திரத்தைக் குறிவைக்கிறது.தாம் காணும் "மாதிரிப் பெண்ணை"உருவாக்குவதற்கு முனைகிறது.பெண்சார் சிந்தனையைத் தமது நோக்கிற்கிணங்கப் புரிய முனைகிறது. தேர்வே இல்லாது, ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள "மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,புரட்சியாக இருந்தாலென்ன அல்லது,எதிர்ப் "புரட்சியாக"இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு பெண்விடுதலை நிமித்தம் பேசிக் கொள்ளலாந்தாம்.இதன் அபத்தமான புரிதல் வினவுத் தளத்தில் அதிகமான வாசகர்களது கருத்திலிருந்து புரிந்துணரத்தக்கதாகவேயிருக்கிறது. பற்பல ஆணாதிக்க உடலானது தத்தமது குடும்ப"ப் பெண்ணினது தோளில் அமாந்தபடி கொண்டையில் பூவைப்பதில் புரட்சிகர நியாயங்களை அடுக்குவது சரியாகாது.

இன்று, லீனாக் குறித்தான புரிதலானது நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்க வாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான உளவியலாகும்.இதை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இஃது,பேசுவது புரட்சியும் இல்லை-பெண்விடுதலையுமில்லை.இத்தகை விவாதங்களின் பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்துடனும்,புரட்சிகரமான நகர்வுக்கும் எதிரான இயங்குதிசையில் தகவமைக்கப்பட்டு உருவாகிறது.ஒடுக்குமுறைகள் நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் பெண்நிலைசார் கருத்துக்களது தெரிவில் லீனாவினது கவிதைகளுக்கான சில குறியீடுகள் உண்டாகிறது.அதை மறுப்பதில் எந்தப் புரட்சி பெண் நிலையில் மாற்றத்தைப் பண்ணிவிடும்?

இத்தகைய களவாணிப்பேர்வழிகளைப் புரிவதான தருணத்தைச் சொல்வதாகவிருந்தால்" சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு வாழ்பவர்கள் தமக்கேயுரிய இறுமாப்போடு உலகைத் தமக்குள் தகவமைக்கின்றனர்"எனப்பகர முடியும்."இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய "அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்நிலைசார் புரிதலென்பது சம்பந்தப்பட்டவர்தம் புரிதலேயொழிய அஃது, சமூகத்தில் இயங்கும் பெண்நிலை குறித்தான பெண்களது எதிர் செயற்பாட்டினது(லீனாவினது கவிதைகள்வகைப்பட்ட சொல்லாடல்கள்) குற்றமில்லை.

இதற்கேற்ற சுதந்திரத்தை இவ்வமைப்பு வழங்கும்போது இதன் சமூக யதார்த்தம் தனிநபர்வாதமாக மாற்றப்படுகிறது.அதன் உச்சம்தாம் தற்போதைய லீனாமணிமேகலைப் பிரச்சனையிலும் மையங்கொள்கிறது!

இஃது, தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு புரட்சி-பெண்விடுதலை வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்-போலிப் புரட்சிபேசும்!

எனவே, நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாதுள்ளது!

இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.

இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையத்தளமென இது விரிந்து கிடக்கிறது.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"லீனா மணிமேகலைக்கான தார்மீக-எதிர் நியாயங் குறித்துப் பேசுவதன் தொடரில் பல தளங்கள் முனைவுறுவது எதன் தெரிவின் நிபந்தனையென்பதே இங்கு முக்கியமானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.06.10