Mittwoch, Dezember 23, 2009

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்...

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக்
குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி!

"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!"

 
ல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாக விரிகிறது.
 
அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன இன்று!
 
இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முற்படுகிறது. இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டுத் தப்ப முனைகிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
 
இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் கட்டும் தமிழ் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டார்களா?அல்லது, மூன்றாம் நபருக்கு ஓட்டுப்போட அறைகூவலிடும் புதிய ஜனநாயகக்கட்சி இவற்றைப் புரிந்துகொண்டதா?
 

   
சரி இவற்றுக்கும் கீழாக,நாம் கட்சி கட்டுவதும்-இயக்கம் தொடங்குவதும் குறித்து யுத்தத்துள் பாதிக்கப்பட்ட மக்களது தெரிவு எப்படியென்பது பரவலாக விளங்கிக்கொள்ளப்படுகிறதா?இதைப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் புரிந்துதாம் ஊடகங்களில் கருத்துக்கட்டுகிறார்களா?இன்றைய நெருக்கடிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள் என்ன தெரிவோடிருக்கின்றனர்?
 
 
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இதைத் தேசம் நெற்றும்,ஜெயபாலனும் மிகக் கபடத்தனமாகச் செய்து முடிப்பதில் பலவகைக் கூட்டுக்களைப் பின் தொடருவதும் நாம் காணத்தக்க அரசியல்.
 
இதனது மிக உயர்ந்த போக்கு, இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலையிட்டு நாம் அனுபவிப்பதுதாம்.
 
இலங்கை அரசினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
 
எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள்மூலம் வரும் தேர்தலில் மகிந்தாவுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளது சுயதேவை மக்களது அழிவின்மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 
இவற்றைப் பல தளங்கிளில் புரிந்தாகவேண்டும்:
 
அ: அழிவு யுத்தத்தினூடாகத் தமிழ்பேசும் மக்களது சமூக சீவியம் நிர்மூலமாகியுள்ளது,
 
ஆ: அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டது,
 
இ: தமிழ்ச் சமுதாயத்துள் குடிசார் அமைப்புகள் இல்லாதாக்கப்பட்டது,
 
ஈ: மக்களது ஆளுமையை அரை இராணுவ ஆட்சியின்வழி செல்லாக் காசாக்கியது,
 
உ: நேரடி ஜனநாயகத் தன்மையோ அன்றி மறைமுகமான ஜனநாயகத்தன்மையையோ இலங்கையின் இராணுவ-கட்சியாதிக்க-குடும்ப அரசியல் விட்டுவைக்காதது,
 
ஊ: தமிழ்பேசும் மக்களைத் திறந்தவெளிச் சிறைச் சாலையிலும்,மூடிய சட்டரீதியான சிறைச் சாலைகளிலும் அடைத்துவைத்துக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது,
 
எ: தமிழ்பேசும் ஒரே காணத்தால் பெண்கள் பாலியில் ரீதாயாகச் சுரண்டப்பட்டு, நிர்பந்தமாக இராணுவத்தின்முன் தமது சுயதேர்வை,மரியாதையை இழந்து நிற்பது,
 
ஏ: தமிழ்பேசும் சிறார்கள் உளரீதியாக ஒடுக்கப்பட்டு,அவர்களது சுய ஆளுமையை உடைத்து,சமூகப் பொறுப்பற்று வாழ்வதற்கேற்ற வகைகளில் பண்பாட்டுச் சிதைவை ஏற்படுத்துவது,
 
ஐ: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது குடும்ப வாழ்வுமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட வெடிப்புத் தொடர்ந்து நிலவுவதற்கேற்ற முறைமைகளில் அவர்களது பூர்வீக வாழ்விடங்களை மறுத்து, முட்கம்பி முகாங்களென்ற"கொன்சன்ரேஷன் காம்புகளில்"வாழ அனுமதிப்பது.அதைச் சட்டரீதியாக நியாயப்படுத்துவது.
 
இத்தகைய நிலைமைகளைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் இலங்கை அரசானது, தேர்தல்மூலம் இவற்றைத் தீர்த்துவிடுவதாகப் பரப்புரை செய்கிறது.இது,தேர்தல் கோசமாக மாறியுள்ளபோது இதைவிடக்கொடுமை உலகில் நடக்க முடியாது.
 
தமிழ்பேசும் மக்களை ஒடுக்கி வந்த சிங்களப் பேரினவாதமானது இவ்வளவு கொடுமைக்கும் பொறுப்பாக இருக்கும்போது,இத்தகைய செயல்களுக்காககத் தண்டிக்கப்படவேண்டி நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வகையில் மகிந்தாவை மக்கள் நலக் காவலாகக்காட்டத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்துகிறது சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள்!
 
அதன் தெரிவிலேதாம் இத்தகைய தேர்தல் வியூகத்தின்மூலம் உலகை ஏமாற்றுகிறது.இத்தகைய ஏமாற்று வேலைகளுக்காகத் தமிழ்க்கட்சிகளைப் பயன்படுத்துவதனால் இலங்கை அரசு யுத்தக்கிரிமினற் குற்றத்தை நீர்த்துப்போக வைக்கிறது.இதற்கு உடந்தையாக அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் தமது வர்க்க நலனின் அடிப்படையில் ஒத்தூதுகின்றன.
 
இந்நிலையில், இவர்களின் முன்னே கண்ணீர்விட்டுத் தமது நிலையை விளக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது பரிதாப நிலை!
 
தொழில் வளர்ச்சியடைந்த தேசங்களினது இன்றைய தேசிய இனங்களின் எதிர்காலக் கனவு, தத்தம் தேசியத்தின் முன்பாய்ச்சலையும்,முன்னணி வகிக்கும் உலகப் பொருளாதார வலுவையும் கோரிக் கொள்ளும்போது,அங்கே நிலைத்திருக்கும் அரசியல் மற்றைய பலவீனமான சிறுபான்மை இனங்களை குதறுவதிலேலே குறியாக இருக்கிறது.தமக்குப் போட்டியற்ற இனக்குழுக்களாக்கிவிடத் துடிக்கும்"உலகச் சமூக ஒழுங்கில்"உயிர் வாழும் மானுட உரிமையைக்கூட தமது பொருளாதாரக் கனவுகளின் சாத்தியப்பாட்டோடுதாம் அனுமதிக்கும் வர்க்க நிலைமைகளில் இவர்கள்"ஜனநாயகம்"பேசுகிறார்கள்.அல்லது, அதற்கிசைவான விளக்கத்தை முன் வைக்கிறார்கள்.இன்றைய சிங்களப் பேரினவாதமும் இதற்கு விதிவிலக்காகச் செயற்படவில்லை.
 
தமிழர்களைத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய சிங்கள மையவாதத்தைக் கேள்விக்குட்படுத்தாத இந்தத் தமிழர் "ஜனநாயகவாதிகள்" இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும் சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் தொடர்ந்தும் அடிமைப்படும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல், மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
 

 
டக்ளஸ் போன்ற தமிழ்க் கட்சி அரசியல் தலைவர்கள், தம்மை மக்களது நலனுக்காக அர்ப்பணித்ததாகவும்,அவர்களது வாழ்வாதாரத்தைச் செப்பனிடுவதாகவும் தேர்தலை முன்வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.தமது பங்களிப்புகளைப் பட்டியல்போட்டு மகிந்தாவினது பரோபகாரமாகவும் சொல்லுகிறார்கள்.இஃது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா?
 
சிங்களப் பேரினவாத யுத்தக் கிரிமினல் அரசு,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பு யுத்தத்தால் பலிகொள்ளப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின்முன் குற்றவாளியாக நிற்பதும்,அது தமிழர்களுக்கு ஏற்படுத்திய கொடூரத்துக்குத் தண்டிகப்படவேண்டியதும் இப்போது செயலிழக்க வைக்கப்படுகிறது.மக்களது வாழ்வைச் செப்பனிடுவதும்,அவர்களுக்குக் காலகாலத்துக்குமான நஷ்ட ஈடுவழங்குவதும் இலங்கையை ஆளும் அரசுகளுக்கான தார்மீகக் கடமையாகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த அரசியல் தீர்வை முன்வைத்த பின்புங்கூட அவர்களுக்கான சிறப்புச் சலுகைகளை(வரிவிலக்குத் தொடங்கி யுத்தத்தால் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நஷ்ட ஈடு வழங்குதல்)வழங்கியாகவேண்டும்.இஃது, ஜேர்மனியில்(ஜோமனியத் தேசியவாதம் சிந்தி-ரோமா மக்களை முதலாம்-இராண்டாம் உலக யுத்தத்தில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்தது.) சிந்தி ரோமா மக்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது.இலங்கை அரசு சட்ட ரீதியாகப் பதிலுரைக்க வேண்டிய கடமைகளிலிருந்து தப்பவைக்கப்படுகிறது.இதைச் செய்பவர்கள் இன்றைய தமிழ்த் தலைமைகள் என்பது எவ்வளவு கொடுமையானது!
 
தமிழ்பேசும் மக்களுக்கு அரசு செய்வேண்டிய நிர்மானப் பணிகளை, தானே செய்து முடிப்பதாகச் சொல்லி விளம்பரம் தேடும் டக்ளஸ் போன்றவர்களே இன்று இலங்கையின் யுத்தக் குற்றத்தை மறைத்து, மகிந்தாவுக்காக ஓட்டுக் கேட்கிறார்கள்.இது, சாபக்கேடா இல்லை வர்க்கம் வர்க்கத்தோடுதாம் சேருமென்ற சமூகப் புரிதலா?
 
எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமது மக்களுக்கு முன்வைத்தாக வேண்டும்.இதுவே, எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத்தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள் நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிஷத்தில் முன்னெடுக்க முடியாது.
 
இவர்கள் மறுதலையாக, இலங்கைப் பேரினவாத அரசை யுத்தக் குற்றத்திலிருந்து தப்புவிக்க முனைகிறார்கள்.இதைத் திட்டமிட்டுச் செய்யும் இந்தியச் சாணாக்கியமே நேரத்துக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலூடாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் மகிந்தாவுக்கும்,பொன்சேகாவுக்கும் பின்னால் செல்லவிட்டு,அவர்கள்மூலமே யுத்தக் கிரிமனல்களை மக்கள் தலைவர்களாகக்காட்டி, இலங்கையின் இனவழிப்பை நியாயப்படுத்தி யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட தமிழினத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இதை எந்த மனிதர்களும்-அரசும்,மனிதவுரிமை அமைப்புகளும் பாராமுகமாக இருக்கின்றனர்-இருக்கின்றன!
 
மே.18 இயக்கங்கட்ட அவசரப்படுபவர்கள், இலங்கையின் யுத்தக் கிரிமினல்போடும் சதி அரசியலை எங்ஙனமும் தொடரவே உலக உளவு நிறுவனங்களுடனிணைந்து காரியமாற்றுகின்றனர்.இத்தகைய தொடர் இயக்கக் கட்டுமானத்தினூடாக மக்களது உண்மையான நீதி மறைக்கப்பட்டு,அவர்கள் தொடர்ந்தும் ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.இதற்காகவேனும் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சென்றாக வேண்டும்.அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதற்கான வழி முறைகளை நாம் தொடர்ந்தாற்றவேண்டியிருக்கிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.12.2009

Montag, Dezember 21, 2009

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...
 
-"காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்"
 
லங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள்.இப் பேட்டியில், தேவதாசனின் கருத்துக்களோடு-பல விதத்திலும்-தாழ்தப்பட்ட மக்கள்சார் நலத்துடன்-நாம் ஒத்துப்போகும் கோரிக்கைகளையும்,கடந்தகாலப் புறக்கணிப்புகளையும் குறித்துத் தேவதாசன் உரையாடினார்.அதன் தர்க்கத்தில் முரண்பட வேண்டுமென்றில்லை.இலங்கையில் ,அதுவும் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையில் ஏற்படும் வடு அவரது கருத்தின் நியாயத்தைக் குறைக்கவில்லை.அது, எம்மால் பல தளத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது.
 
பொதுவாகச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகவும்,இன்று தாழ்த்தப்பட்ட அந்த மக்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் தம்மைத் தகவமைத்துப் போராடுவது அவசியமே.அதற்காக அவர்கள் ஒரு அடையாளத்தை"தலித்து"என்று ஏற்றுக்கொண்டு,அதன்வழி இலங்கையில்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதியம் துப்பாக்கி நிழலில் மறைக்கப்பட்டதென்றும் ,இப்போது சாதியம் அதன் குணத்தை மேலும் வலுவாக்கி வருவாதகாவும் ஏற்றுப் போராடுகிறதற்கான தெரிவுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள்சார்பாக சபைகள்,கழகங்கள்,முன்னணிகள் அமைக்கிறார்கள்.அது நியாயமும்கூட.
 
யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு"தலித்து"எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், இன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் கேள்விகள் எழுகிறது.அவை எனது நியாயத்தில் தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு முனைகிறது.
 
தமிழ்நாட்டின் தலித்துவ முன்னணிகள்-கட்சிகள் எங்ஙனம் ஒடுக்கு முறையாளர்களோடு தோழமைகொண்டு,அவர்களும் அதன் உறுப்புகளானார்கள் என்பதற்கு, நமக்கு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் நல்ல உதாரணம்.அவ் வகையுள், தேவதாசன் தலைமையில் கட்டப்பட்ட தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கும் ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் நிலவுகிறதென்று இப்பேட்டியின் வழி அவர் சொல்லிச் செல்கிறார்.
 
சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் தலித்து எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்றில்லையோ?).
 
இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் "இலங்கையர்" என்ற பதத்தின்மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறைகூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து "இலங்கையர்கள்" என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).
 
நல்லது!
 
இதன்வழி,சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் "காணப்படுவதற்குள் காணாததை"த் தேடிப் பார்ப்போம்.
 
இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் உங்களால் முடிகிறது.இந்த நன்றி, புலிப் பாசிசத்தை அழித்ததென்பதுற்குவெனவும் சொன்னீர்கள்.அதுவும் பறுவாயில்லை.நீங்கள் ஜனநாயத்தின்மீதுகொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.
 
ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகிறது?
 
இலங்கை அரசினது சிங்கள இனவாமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் நமக்குள் உங்களை அறிமுகஞ் செய்கிறது.
 
இலங்கைப் பேரினவாத அரசு, தமிழ்பேசும் மக்களை இனரீதியாக ஒடுக்கியபோது,அது ஒருபோதும் சாதி பார்த்துக் குண்டுவீசவில்லை,எறிகணைவீசவில்லை.பொதுவாகத்"தமிழினம்"எனும் அடையாளத்தின் வழி அது தனக்கான நியாய யுத்தத்தைச் செய்தது.இப்போதும், செய்து வருகிறது.இதை நீட்டி முடக்கத்தேவையில்லை.வன்னி நிலைமையும்,தமிழ்சமுதாயத்தின் குடிசார்நிலைமையும் இதைச் சொல்லும்.என்றபோதும், நீங்கள் "தமிழர்கள்-இலங்கைத் தமிழர்கள்"என்பதைவிட"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்றும், ஒற்றுமையுடன் நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டுமென்கிறீர்கள்.இங்கு, நாடு என்பதற்குள் அனைத்துப் பிரச்சனையும் முடிந்துவிட்டாதாக அர்த்தமாகிறது(வர்க்கப் போராட்டுத்துக்குள் சாதியப் போராட்டமும் உள்வாங்கப்பட்டு, நடாத்தப்படுவது நியாயமென மரபு மார்க்சியர்கள் சொல்லும்போது உங்களால் ஏற்க முடியாது "தலித்துவ"அடையாளத்துக்கு உங்களை இழுத்துச் செல்கிறது.இது, கவனத்துக்குரியது).
 
இதையே தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொருத்தி"ஒன்றுபட்டு" தமிழ்ச் சமுதாயத்தின் சுயநிர்ணயவுரிமையை, சிங்களப் பேரினவாதம் ஏற்கச் செய்வதற்கான அரசியல் போராட்டத்தைச் செய்ய மறுக்கிறீர்கள்.அங்கே,சாதியம் என்பது ஒருபோதும் ஒன்றுபட்டு அகற்றமுடியாது,அது மறைமுகமாக இன்னும் ஒடுக்குகிறது,புலியினது அழிவில் நேரடியாகவும் ஒடுக்குகிறதென்கிறீர்கள்.இது சரி.
 
ஆனால்"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்று "தமிழ் அடையாளம்" மறுத்துச் செயற்படச் சொல்லும்போது,இலங்கை அரசு மறைமுகமாகவோ அன்றி நேரடியாகவோ இனவொடுக்குமுறையைச் செய்யவில்லையென இதன்மூலம் சொல்கிறீர்கள்.அதனால்தாம் மகிந்தாவே ஆட்சிக்கு மீள வரவேண்டுமென அவருக்காகப் பிரச்சாரஞ் செய்கிறீர்கள்.
 
 
தலித்துவப் "போராளி" சுகன் பாணியில் உங்களைக் கட்டுடைத்தால்:
 
1: தலித்துவ அடையாளம் அவசியம்:தமிழ்ச் சமுதாயத்துள் சாதியவொடுக்குமுறை நிலவுகிறது. எனவே, சாதியத்தை முறியடிக்க,
 
2: தமிழர்கள் என்ற அடையாளம் தேவையில்லை: எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை என்கிறீர்கள்,
 
3: மகிந்தா இன்னுமொரு முறை வருவது நல்லது:அங்ஙனமென்றால்,இதுவரை மகிந்தா செய்த அரசியல் நியாயமானது,வன்னியுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் மகிந்தாவால் கொல்லப்படவில்லை என்றாகிறது,
 
4: மகிந்தாவை அதாரிப்பதன் உங்கள் தெரிவில்: மகிந்தா தலைமையிலான இலங்கை அரசு,இதுவரையான தமிழ்ப் பிரதேசங்களை முற்றுகையிட்டு,அனைத்துக் குடிசார்வுரிமைகளையும் சிதைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக சீவியத்தையே இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி, ஒரு இனத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதை உளவதைக்குள் தள்ளுவதும் தலித்துவ விடுதலைக்கு அவசியம் என்றாகிறது.
 
5: இத்தகைய அரசு,புலிகளை மட்டுமேதாம் அழித்தது.மக்களையோ அன்றி அவர்களது வாழ்வாதாரங்களையே அழிக்கவில்லை என்பதும் மகிந்தாவுக்குச் சொல்லும் நன்றியுள் அடங்குகிறது.
 
 
இப்படி "அற்புதமான" கருத்துக்களை நீங்கள் சொல்வதுவரை "உங்கள் தலித்துவ"ச் சமூக மேம்பாட்டு முன்னணியும் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்களுக்குக் குழி தோண்ட வந்து நிற்கிறது.
 
...ம்... நடாத்துங்கோ! நாலு வார்த்தை நாம் பேசுவதற்குகந்த சூழல் இப்போதிருக்கிறதென்ற தொனியுள் மகிந்தா மாமாவுக்குக் குடை பிடித்து...
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
21.12.2009

Mittwoch, Dezember 16, 2009

தீப்பொறிக் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான...

 
இரவி,"தீப்பொறி"க் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான எனது மதிப்பீடுகள்மீது, உங்கள் எதிர்வினையை இவ்மடலூடாக வைத்திருப்பதைக் கவனதில் கொண்டேன்.
 
தங்கள் எதிர்வினையின்-நியாயத்தன்மைமீதான பெருமதிப்பில் சில கருத்துக்களை முன்வைப்பது அவசியம்-அதை, நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள்-நன்று!
 
"இளங்கோவின் பாத்திரத்தைத் தவிர்த்து "தீப்பொறியின்"சிதைவை அல்லது தடம் மாறலை(...) ஆய்வாக்க முடியும் என நான் கருதவில்லை"என்றுரைக்கிறீர்கள்.
 
இது, எந்த வகையிலும் இளங்கோவெனும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கும்போது மட்டுமே சாத்தியம்.மற்றும்படி, பொதுவான-பரந்துபட்ட மக்களது அரசியல் பாத்திரத்தின்மீது அதிர்வுகளைச் செய்யப் புறப்பட்ட பொதுவியக்கச் சூழலில்-அரசியல் என்பது பொதுப்படையான தாக்கத்தைச் செய்வது.அது,ஒரு சில நபர்களுக்கிடையிலானதாகக் குறுக்குவது சாத்தியமில்லை.ஏனெனில்,இதன் இயக்கப்பாடு இன்றுவரை வியூகமாக விரிவதால் அஃது, ஆய்வுக்குரியது-மூலம் அறியப்பட வேண்டியது.இது, நிற்க.
 
அடுத்து,காந்தன்மீதான எனது மதிப்பீடுசார்ந்து நீங்கள் வைத்தகருத்தானது ஆதாரத்தைக் கோரிக் கொள்வதற்கான தேவையைச் சொல்கிறது.அதாவது,நீங்கள் சுட்டிய "காந்தனை ஒரு உளவாளி எனவும் திட்டமிட்டு முற்போக்குச் சக்திகளை சிதைக்க வந்தவர் எனவும் நீஙகள்குறிப்பிடுவது எவ்வாறென முன்வையுங்கள்" என்பது.
 
இரவி,இங்கே உங்களது கேள்வியின்படி இது ஏதோ சேறடிப்பாக அல்லது பழிசுமத்துவதாக எடுப்பதைவிட,காந்தன் எனும் ரகுமான் ஜான் சார்ந்த கடந்தகால அரசியல்மீதான-அவர் கொண்டியக்கிய கட்சி-பத்திரிகை மீதான பார்வையாகவும்,கூடவே,காந்தனை தனிப்பட்ட ரீதியாகவன்றி பொது அரசியல் சக்தியாக இனங்கண்டு முன்வைக்கப்படும் விமர்சனமாக முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ரகுமான்ஜான்-இளங்கோ முரண்பாடென்பது, நிஷமான அரசியல் பொதுச் சூழலுக்குத் தெரியாத அல்லது மறைக்கப்பட்ட நிலையில்(மகா உத்தமன் குடியினால் செத்தது என்பதுபோல(...)) அது எனக்கு அவசியமற்றது.இளங்கோ பின்னாளிலும் அதற்கு முன்னாலிலும்(அதாவது தமிழீழக்கட்சிக்கு முன்னும்)புலிக்கு உளவு பார்த்தென்பதையும், இணைத்துக் கொள்ளவும்.
 
இங்கே,ரகுமான் ஜான்-இளங்கோ உறவு எதுவரை நீடித்ததென்பது எனக்கு முன்னால் உள்ள அரசியலுக்கு அவசியம் இல்லை.அது,பரந்துபட்ட மக்களது நலனை நோக்கிச் செல்லும்போது திறந்த விவாதம்-சுயவிமர்சனம் மற்றும் உடைவுகள்-சந்தர்ப்பவாதம் குறித்தான அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படையாகப் பேசப்படச் சந்தர்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.இது, எப்போது-எப்படிச் செய்யப்பட்டதென்ற உங்கள் சாட்சியத்தின் பின்னே,காந்தன் குறித்தான எனது மதிப்பீட்டிற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் பகிரங்கமாக முன் வைக்கின்றேன்.கூடவே,நான் வேண்டிக்கொள்வது,இரகுமான் ஜான் மீதான விமர்சனத்தை-மதிப்பீட்டை-"பழி சுமத்தலை-சேறடிப்பை"நான் பகிரங்கமாகச் சொல்லியுள்ளதால், அதை மறுத்துப் பேச வேண்டியவர் ரகுமான் ஜான் என்பது என்வரை நியாயமாகப்படுகிறது.
 
இங்கே,இளங்கோவின் பாத்திரத்தையும்,ஜானினது பாத்திரத்தையும் ஒன்றாக்குவதாகச் சொல்வதன்மூலம் ஜானின்மீது எந்தத் தவறுமில்லை என்பது உங்கள் தரப்பு வாதம்.இது பொதுத்தளத்தில் உண்மையானதென நிரூபிப்பது அவரது கடமையாகிறது.ஏனெனில்,இப்போது மக்களுக்காக "மே 18 இயக்கத்தோடு"போராட அறைகூவல் இடுபவர் அவர்.இஃது,அவரது கடமை.
 
கடந்த காலத்தின் அவரது அரசியல் நடாத்தையின்மீதான நமது சந்தேகம்-மதிப்பீடு தவறென்பதைக் குறித்துப் பேசுவதற்கு அவருக்குத்தான் அவசியமானது.எனக்கு, அவருக்காகத் தீக் குளிக்க அவசியம் இல்லை.இதன் ஆழ்ந்த வேண்டுதல்,கடந்த காலத்தில் அவர் ஆரம்பித்த அரசியலில் சூழ்ச்சிகள்-சூதுகள் இருப்பதென்பது உண்மையானதென பொது அபிப்பிராயம் மட்டுமல்ல பலரிடம் அதற்கான காரணகாரிய பொருத்தப்பாடுகள் இருக்கிறது.அது,ஜானுக்கும் நன்றாகத் தெரியும்.இதன் பொருத்தப்பாட்டின் நிமித்தம் ஆதாரம் என்பதும்-அவரை "எங்ஙனம் புலியினது உளவாளியெனக் கூறமுடியும்?" என்பதும் அவசியமற்றது.
 
இத்தகைய கேள்விகளது அடிப்படை, இனம் காணுதல் எனும் ஊக்கத்தின் விளைபொருளென நான் அறிவேன்.அது,அனைவருக்குமான பொதுத் தளத்தில் பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு சூழலில் மேலும் சாத்தியப்படலாம்-இப்போதைக்குச் சாத்தியமில்லை!
 
மேலும்,"புலிகளின் போராட்டத்தில் தமிழ்பேசும் பரந்துபட்ட மக்களது நலன்(இனவொடுக்குமுறைக்கு எதிரான யுத்தம்)பின்னிப் பிணைந்திருந்தது" என்பதும்,"புலிகள் தேசியச் சக்திகள்,புலிகளது போராளிகள் தமிழ்த் தேசத்தின் தேசிய இராணுவம்" என்பதும் வௌ;வேறானது.தமிழீழக்கட்சி இந்த இரண்டாவது வகைப்படுத்தலுக்குள்தாம் புலிக்கான இருத்தலுக்கும்,தமிழ் மக்கள்மீதான புலியின் பாசிச ஆதிக்கத்துமான உந்துதல்-சித்தாந்த முண்டுகொடுத்தல் வருகிறது.தமிழீழக் குடியரசுக்கான போராட்டம் என்பதே அதன் அடிப்படைச் சித்தாந்தமாகத் தமிழீழக் கட்சி புலியினது இருப்பை வகைப்படுத்தியது.இது, புரட்சிக்கு எதிரான முதலாவது அடிப்படைச் சுத்துமாத்து!
 
"தமிழீழம்"என்பது மிகப் பெரி பொய்.அது,எப்பவும் தமிழ் மேட்டுக் குடியினது அரசியல் பேரமாக இருந்தது.அதற்கும்,சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்குள்ளான பரந்துபட்ட தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்தத்"தமிழீழக் குடியரசு"க்கான தெரிவினில் பரந்துபட்ட மக்கள் பட்ட இராணுவக் கொடுமையானது இரட்டிப்பானது. இது இப்போதைக்கு இப்படியிருக்கட்டும்.
 
"மொட்டையடிப்பது-கட்டுடைப்பது"எனும் வாதம் எப்போதும் ஆய்வுமுறையாகப் பரிணாமிக்க முடியாது.ஆனால்,பாருங்கள் இரவி,இதுவரையான தேசியவாதக் கோசத்தினூடாகவும்,தமிழீழத்துக்கான போராட்டத்துக்கூடாகவும் மொட்டையடிக்கப்பட்ட இனத்தின் சமூக சீவியத்தின் உடைவையே இங்ஙனம் கூற முற்படுகிறேன்.மீளவும்,இந்தத்"தமிழீழக் குடியரசுக்கான"திசை வழிகள்-தெரிவுகள் அவர்களை-நம்மை மொட்டையடிக்காதிருப்பதற்காகத் தமிழீழச் சிஞ்சிகையின் கடந்தகால அரசியல்-சித்தாந்த மேலாண்மையைக் கட்டுடைப்பது குறித்தே நான் பேசினேன்.இதற்கும்,ஆய்வுக்கும் எங்ஙனம் பாலம் அமைத்தல் உங்களுக்குச் சாத்தியமாகிறது?
 
 
இவைகள் தவிர்ந்து சிலவற்றைக் குறிப்புணர்த்துக்கிறேன்.
 
 
1): உங்கள் கடிதத்தினூடாகக் கேட்டபடி"நீங்கள் பெற்ற தகவல்கள் யாரிடமிருந்து பெற்றுக்கொண்டவை என்பதையும் நீங்கள் வெளிப்படுத்த முடிந்தால்,அவர்களுடன் கலந்துரையாடுவது" எனக் கேட்டிருந்தீர்கள்.
 
2): ஒரே தடவையில் தேசங்களில் பத்திரிகை வெளியீடு-நிதி வலு எனப் பிரமாண்டமாகக் காட்டுவதன்றும் குறித்திருந்தீர்கள்.
 
 
இவைகளுக்கான எனது பதில்:
 
தகவல் யாரிடமிருந்து பெறுதல் என்பதைவிட, இத்தகைய சூழலுக்குள் "தீப்பொறி"க் குழுவை கொணர்ந்த கடந்தகால நடாத்தை என்னவென்பதைக் குறித்துத் தேடும்போது நிச்சியம் இதற்கான விடை கிடைக்குமென்பது இப்போதைக்கான எனது பதில்.இதுள் உங்களுக்குப் போதாமை நிலவினால்,மே 18 இயக்கத்தினர் தமது கடந்தகாலத்து நடாத்தைகள் குறித்துப் பகிரங்கமாகப் பேசுவது நிச்சியம் முழுமையைச் சென்றடையுமென நினைக்கின்றேன்.
 
அடுத்து,நிதி சம்பந்தமாக...
 
இது,பெரும்பாலும் திடீர் கட்சி-திடீர் வெளியீட்டுடனும்,அவர்களது கடந்தகால அரசியலின் வரவுகளில் நிலவிய அன்றைய சூழல்கள்சார்ந்த தரவுகளிலிருந்தும் கூறக் கூடியதாக இருந்தது.
 
இப்போதைக்கு,நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு-எதிர்வினைக்குப் பெரும்பாலும் எனது விளக்கங்கள் தந்துள்ளேனெனக் கருதுகிறேன்.இதுள் மேலும் உரையாடுவதற்கு அவசியம் இருக்கும் நிலையையொட்டிப் பேசுவதென்றால், ஜானினது வெளிப்படையான சுயவிமர்சனத்துக்கூடாக அவரது கடந்தகால அரசியல் நடாத்தை நியாயமுறுமானால் அதையொட்டி என்தரப்பு விளக்கங்கள் விரியும்.
 
என்றும்,
நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
16.12.2009
3.29 மணி.
 
 

Montag, Dezember 14, 2009

வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!

"மே 18 இயக்கம்":உண்மைகள் பேசப்பட வேண்டும்!
 
 
"தீப்பொறி"இயக்கப் போக்கின் இதுவரையான நகர்வில்:"உயிர்ப்பு-தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகை"என, புலியினது உறுப்பாக இருந்த ஒரு சதிகாரக்கூட்டத்தின் அரசியல்-சித்தாந்தக் குரு இப்போது,"விவாதக் களத்திற்கான"ஒரு தளத்தை உருவாக்குவதாக நம்மை மொட்டையடிக்கும் அந்நிய-அதிகாரச் சேவைக்கு முனையும் இத்தருணத்தில், நாம் பெரும்பாலும் அவர்களை,அவர்தம் பழைய நடாத்தைகள் மூலம் இனம் காணுவதற்கானவொரு முன் தெரிவில், சில குறிப்புகளை உணர்த்துகிறோம்.
 
இஃது,அன்பு வாசகர்களே ஆய்வுக்கான-உண்மைகளைத் தேடிக் கொள்வதற்கானவொரு பாதையே!
 
 
மற்றும்படி, கட்சி கட்டிப் போராடிக் கொள்வதென்று, எவருக்கும் மொட்டையடிக்கும் நிலையில் நாம் இல்லை.
 
இது,இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் போரினால் தமது உயிர்களை இழந்தும்,சமூக சீவியத்தைத் தொலைத்தும் வாழும் எஞ்சியுள்ள மக்களிடம் உண்மைகளைக் காணத் தூண்டுவதே.அவர்கள் தம்மீது மிகக் கொடுமையாகவும்,பலவந்தமாகவும் கட்டவிழ்த்துவிடபட்ட அழிவு யுத்தம் குறித்துப் புரிந்துகொள்ளவும்,இதனூடாகத் தமது சமுதாயத்தின்மீது கிரிமினல் யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து ஆதிக்கச் சக்திகளை இனம்கண்டு அவர்களிடம் நஷ்ட ஈடு பெறவும்,தமக்கு நிகழ்ந்த வரலாற்று அநீதிக்கான நியாயமான தீர்வையும் அதன்வழித் தமது வாழ்வைச் செப்பனிடவும் மிக அவசியமான பணி.
 
இதுவரை பல இலட்சம் மக்களை அழித்த இந்த அழிவு யுத்தம் மேலும் மக்களைக் கொல்லப்போடும் அனைத்து நாடகத்தையும்(இது முற்போக்குத் தமிழீழப்புரட்சி-தேசிய விடுதலைச் சக்திகள் என்றும் இப்போது வேடம் கட்டுகிறது),அவர்களது கடந்தகாலக் கள்ளக் கூட்டினது தெரிவில் நிகழ்ந்த அழிவுயுத்தத்தின்மீதான கள்ள மௌனத்தையும் நாம் கலைத்தாகவேண்டும்.
 
இவர்களது கரங்கள் மேலும் நமது மக்களது குருதியில் நனைய நாம் அனுமதிக்க முடியாது!
 
 
இஃதை, முன்தெரிவாகக்கொண்டு ,இக்குழுவைக் குறித்துச் சில உண்மைகளைப் பேசுகிறோம்.இது,மிகக் கறாரான சமூக ஆய்வின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் கட்டுடைப்பு.இதற்காக நாம் இதுவரை தேடிக்கற்ற அனைத்துச் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தி, இதை இனம் காட்டுகிறோம்.
 
வாருங்கள் இளைஞர்களே,உண்மைகளைக் கூட்டாகத் தேடுவோம்!கடந்தகாலத்தை ஆய்வுக்குட்படுத்துவோம்.அங்கே,நமது மக்களது நண்பர்களையும், உள்ளிருந்து கருவறுத்த எதிரிகளையும் இனம் காண்போம்.நான் சில வற்றை உங்களுக்கு இப்போது கவனப்படுத்துகிறேன்:
 

இரகுமான் ஜான் காலத்துக்குக் காலம் நம்மை முட்டாளாக்குவதற்கு முனைகிறார்.இவரது கடந்த காலம் என்பது பல சதிகளோடு உறவாடுவது.இப்போதும்,புலிகளது அழிவின் பின் மக்கள்-பரந்துபட்ட மக்கள் தமது சொந்தக் காலில் நின்று, எதிர்ப்பு அரசியலைப் புரிய முடியாதபடி-அதை முன்னெடுக்க முடியாதபடி இந்த மனிதன் இயங்குவது மிக மோசமான இழிய குணம்.இத்தகைய மனிதனது வழிகாட்டலில் பற்பல அந்நியச் சக்திகளதும்-அதிகாரத்தினதும் நலன்கள் இருக்கிறது.இதற்கொரு புரட்சிகர வேடம்-தேசிய வேடம் அவருக்கு அவசியமானது.
 
கடந்தகாலத்தில் தீப்பொறியாகி,அக்கோசதிகள் மூலம் கோவிந்தன்(கேசவன்)கொல்லப்பட,பின்னே புலிகளுக்குச் சிந்தாந்த உந்துதல் கொடுக்க,உயிர்ப்பு,தமிழீழம் கட்சி-தமிழீழம் சஞ்சிகை என முற்போக்கு சக்திகளை வேவு பார்த்துப் புலிக்குப் போட்டுக்கொடுத்ததும்.இதன் வழி, புலிகளது பாசிச இயக்கத்தை சித்தாந்த ரீதியாகத் தூக்கி நிறுத்திப் புலிபாசிசத்தை அப்பாவி மக்கள்மீது ஏவியதும்,இதன் தெரிவில் இலங்கைப் பாசிச அரசைப் புலிகள் எதிர்ப்பதால் புலிகள் விடுதலை-தேசியச் சக்தி என்றும் கருத்துக்கட்டியது வரலாற்றுண்மை!புலிகளது இராணுவவெற்றியில் தமிழீழத்தின் தலைவாசலில் நிற்பதாகப் புலிகளை பிரமிப்பில் ஆழ்த்தியும் மக்களை முட்டாளாக்கியும் அந்நியச் சதிக்கு உடந்தையானதும் கூடவே இவர்களால் நடாத்தப்பட்ட புத்திசாலித்தனமான சதி!
 
புலிகளது தோல்விக்கும்-மக்களது அழிவுக்குமான சதி அரசியலில்,புலிகளுக்கும் அந்நியச் சக்திகளுக்கும் வாலையும் தலையையும் காட்டுகின்ற விலாங்கு மீனாக இருந்த, கபடம் நிறைந்தவர்கள்தாம் இந்தத்"தீப்பொறி"க் குழு.இதை, இன்றைக்கு மேலும் அனுமதிப்பது நமது மக்களை தொடர்ந்து மொட்டையடிக்கும்.இரகுமான் ஜான் தமிழ்பேசும் மக்களது விடுதலை குறித்துப் பேச அருகதையற்ற மக்கள் விரோதி.இதைப் பகிரங்கமாக நான் பேசுகிறேன்.
 
இரகுமான் ஜானைக்(காந்தன்) குறித்தும்,கேசவன் அழிவுக்குப் பின்பான "தீப்பொறி"குறித்தும் நான் ஆய்வு செய்து வருகிறேன்.உயிர்ப்பு-தமிழீழஞ் சஞ்சிகைகள் செய்த-பின்னிய சதி வலைகள் இதுவரை வன்னி யுத்தத்தில் செத்த மக்களது பிணங்களில் இருந்து புரியத் தக்கது.எனவே,இஃது தமிழ்ப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்து வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டும்.இதை இளைஞர்கள் செய்வீர்களென எண்ணுகிறேன்.
 
இக்குழுவுக்குச் சில தெரிவுகள் அன்று இருந்ததென்பதை அவர்களது தமிழீழஞ் சஞ்சிகையிலிருந்து நாம் கட்டுடைத்துப் புரிந்துகொள்ள முடியும்.
 
 
இவற்றை, இங்ஙனம் நாம் புரிந்துகொள்கிறோம்:
 
1):தீப்பொறிக் குழுவானது ஜான் தலைமையில் கோவிந்தனுக்குப் பின் புலிகளுக்கு உளவு பார்த்துவருவது,
 
 
2):புலிப் பாசிசத்துக்குச் சிந்தாந்த வலு-முண்டு கொடுப்பது,
 
 
3):இலங்கை அரச பாசிசத்தை எதிர்க்கும் புலிப்பாணி(வி)தேசிய விடுதலைப் போராட்டத்தில், முற்போக்குக் குணாம்சம் இருப்பதென்றும்,அதை தேசிய விடுதலைக்கான போராகக்காட்டிப் புலியினது பாசிசத்தினூடாகத் தமிழ்ச் சமுதாயத்தில் அரும்பிய அனைத்து மாற்றுக் குரல்களையும் "துரோகமாக"ப் புலிகள் எடுத்தாளுவதற்குப் பாடுபட்டது-உந்துசக்தியாக இருந்தது.
 
 
4):புலிகளது இராணுவவாதத்தில்,இராணுவப் பேரங்கள்கள்மூலம் அவர்கள் இலங்கை இராணுவ முகாங்களைத் தாக்கியபோது, அதைத் தேசத்தின் வெற்றியாக வர்ணித்துப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தை-அடியாளாக அவர்கள் அந்நியச் சேவைகளைச் செய்ததை, மறைத்து அவர்களைச் தேசிய விடுதலைச் சக்தியாகக் கற்பித்துப் புரட்சிகரச் சக்திகளை உடைத்தது அல்லது உருக்குலைத்தது,
 
 
5):புலிகளுக்கு வேவு பாப்பதன் மூலம்,தமது உயிர் இருப்பைக் காத்ததும்,பொருளாதார வசதியை ஏற்படுத்தியதும் இவர்களது தந்திரமாக இருந்தபோது,இவர்கள் மூலம் தமது பாசிசமுகத்தை தேசியச் சக்தியாகக்காட்டவும்,அந்நிய அடியாட் சேவையை மறைக்கவும் கூடவே தமக்கு எதிரான அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இவர்கள் மூலமாக அழிப்பதை நோக்காக வைத்துப் புலிகள் இவர்களைப் பயன்படுத்தியது(இறுதியில் வென்றது ஜான் குழுவின் அந்நிய உளவு நிறுவனங்களின் நலன்- சேவைகளே).
 
 
6): தமிழ்ச் சூழலில்-குறிப்பாகப் புலம்பெயர் சூழலில் உருவாகும் அனைத்து முற்போக்கு அரசியல் முயற்சிகளையும் முளையில் கிள்ளியெறியும் பணியில் இக்குழு எப்போதும் இயங்கி வருவது.அன்று, உயிர்ப்பு பின்னாளில் தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகையென ஆரம்பித்து, அக்காலக்கட்ட மிகப்பெரும் மாற்றுக் குரல்களை திசை திருப்பியது.அவ்வண்ணமே, இப்போதும் ஆரம்பித்து, வியூகத்தின்வழி ஆரோக்கியமான-உண்மைகளைத் தேடும் ஆயு;வு முயற்சியை முறியடித்துப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்குவது அல்லது தமது எஜமானர்களுக்கேற்ற திசையில் மீளப் படுகுழியைத் தோண்டித் தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலையை மட்டுமல்ல இலங்கைப் புரட்சியையும் காயடிப்பது,
 
 
7): புலிகளுக்கும்,இலங்கை அரசுக்குமான இடை நிலைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் அனுசாரணையாளர்கள் எனும் பாத்திரத்தில் நோர்வே ஊடாக ஏகாதிபத்தியங்கள் தமிழ் பேசும் மக்களை மொட்டையடித்து,அவர்களது விடுதலையைப் புலிகள் ஊடாக நாசமாக்கியதற்கு இவர்கள் உடந்தையாக இருந்தது.குறிப்பாக நோர்வே-எரிக் சொல்கைம் போன்ற சதி நாடாகத்தை, சர்வதேச ரீதியாக நமது போராட்டம் அங்கீகாரம் பெறுவதாகத் திட்டமிட்டுப் பொய்யுரைத்து ஏகாதிபத்திய நலன்களை-சதியை மூடி மறைத்தது(தமிழீழம் சஞ்சிகையை மீளப் புரட்டவும்).
 
 
8):புலிகளை விமர்சிப்பதுபோல் விமர்சித்து, அவர்களது தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தித் தமிழ்ச் சிந்தனையாளர்களை அழிப்பதற்கு உடைந்தையானது.ஜான் குழுவின் இம்முயற்சியை உரைத்துப் பார்க்க வன்னிப் புளட் ஆயுததாரீ மாணிக்கவாசகம் மற்றும் நீலன் திருச்செல்வத்தின் மரணத்தரில் இவர்கள் மகிழ்ந்து நியாயப்படுத்திய தமிழீழஞ் சஞ்சிகைகளது கட்டுரைகளை நாடிப் போவதன் மூலம் இதை மிகக் கறாராக விளங்க முடியும்."பீடை தொலைந்தது"என்றும் நீலனின் மரணத்தைவிடப் போராளிகளது மரணம் முக்கியமானதென நியாயவாதம் பேசிப் புலிகளது படுகொலைக் கரத்தைப் பலப்படுத்தியது.இதன் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பை அழித்து, அந்நியச் சக்திகளுக்கிசைவான தொங்குசதைக் கூட்டமாகத் தமிழ்பேசும் மக்களை உருவாக்கியது.
 
 
9):புலிகளது போராட்டப்பாதையில் அவர்களை அடியாளக்கிய அந்நியச் சக்திகள், ஒருகட்டத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டை மீறமுடியுமெனக் கருதியபோது அல்லது நீண்ட காலத்திட்டத்தின் மூலம் இது நடைபெறலாமெனக் கருதியபோது, புலிகளைச் சிந்திக்கவிடாது பிரமிப்பில் ஆழ்த்தும் தத்துவப் போக்கை-சிந்தனையை இவர்கள்மூலம் செய்து புலிகளை வெறும் இராணுவ வாதத்துக்குள் முடக்கியதற்கும் ஜான் குழு உடந்தையானது,
 
 
10):திட்டமிடப்பட்ட முறையில் தமிழீழஞ் சஞ்சிகையூடாகப் புலிகளது மக்கள் விரோத குறுந்தேசியவாதத்தை மேலும் மக்கள் மத்தியில் திணிக்க முனைந்தது.இதற்காக,சிங்கள அரசு மண்ணைப் பறிகிறது,தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்கிறது,தமிழர் வளங்களைக் கொள்ளையடிக்கிறது,தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொள்கிறதென்று ஒரு கொதி நிலையில் இனவாதத்தைத் தமிழ்ப் பரப்புள் நிலைப்படுத்தியது.இது புலியினது இருப்பை மேலும் வலுவாக்கி மக்கள் விடுதலையை மொட்டையடித்தது,
 
 
இந்த நிலையில்,மீளவும் இக் குழு வியூகம் அமைத்துக்கொண்டு, நம் முன் மே 18 இயக்கம் கட்டுகிறது.
 
 
அன்று, தமிழீழ மக்கள் கட்சி.புலி வலுவாகப் பாசிசச் சக்தியாக இருந்தபோது.
 
 
இன்று,இவர்களது எஜமானர்களால் அது அழிக்கப்பட்ட வேளை,அந்த வெற்றிடத்தில் மே 18 இயக்கமாக இவர்களது சதி அரசியல் அரங்கேறுகிறது?
 
 
இது, அந்நியச் சக்திகளால் நிதியூட்டப்பட்ட குழு.அன்று, புலிகளால் வழங்கப்பட்ட பெருநிதியும்,இன்று,தொடர்ந்து தமது அந்நிய எஜமானர்களது நிதியுதவியும் தொடரும்போது இவர்கள் உலகு தழுவிய நூல் வெளியீடு-கட்சி கட்டல் அனைத்தும் நடாத்தி முடிப்பார்கள்.இஃது, நமது மக்கள் புலிகளது அந்நியச் சேவையைப் புரிந்துகொள்ளாதிருப்பதற்கும், இதன்வழியில் தொடர்ந்து அந்நியர்களது தயவை நாடுவதற்குமான திசையில் முற்போக்கு வேடமிட்டுபடி அனைத்துவிதமான முற்போக்குச் சக்திகளையும் தமக்குள் உள்வாங்கி, அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக் கொடுக்கும் தந்திரமாகவே இனி மேல் நகரும்!
 
 
இதைத் தொடர்ந்து செய்வதற்கான அனைத்து வளமும் இக் குழுவிடம் உண்டு.
 
 
பொருள்-நிதி,அறிவு-மூளை வளமென அனைத்தையும் இது ஒருங்கே பெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கிறது.இது,பரந்துபட்ட மக்களது எதிரிகளிடமிருந்து இத்தகைய வளங்களைப்பெற்று, மீளவும் கட்சி கட்டுகிறது.
 
 
கடந்த காலத்திலும் இதையே செய்து, முள்ளி வாய்க்கல்வரைச் சவக்குழி வெட்டி பல்லாயிரம் மக்களைக் கொல்வதற்கான சித்தாந்த வலுவைச் செய்த இக் குழுவானது, ஆயுதம் தரித்த பத்தாயிரம் புலிப் பாசிச வன்முறையாளர்களைவிட ஆபத்தானது.இதன் இருப்பு எப்போதும் அந்நிய ஆர்வங்களால் காக்கப்படுவது.இதை, இனம்கண்டு அம்பலப்படுத்தாமல்,எதிர்காலத்தில் இரகுமான் ஜான் குழுவுக்கு மொட்டாக்குப் போடுவது நம்மை நாம் அழிப்பதாகவே முடியும்.
 
 
இதன் நோக்கில், புலிகளையும்,இவர்களையும்,இவர்களது அந்நியச் சேவைகளையும் குறித்து ஆய்வைச் செய்கிறேன்.அதற்கான தெரிவில் முதல் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சு புதியதோர் நாவல் ஆசிரியர் கோவிந்தனின் மரணம் குறித்தான முடிச்சு.இது, எங்ஙனம்"தீப்பொறிக்குள்"நிகழ்ந்து? இவர்கள் எங்ஙனம் புலிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? என்பதும் மேற்காணும் தரவுகளின்-ஆய்வின் முடிவில் இனங்கண்டாலும்,உள்ளிருந்து கருவறுக்கும் இக் குழுவின் பாத்திரம் மிகக் கறாராக ஆய்வுக்குள்ளாக வேண்டும்.
 
 
இதற்கு கோவிந்தன் மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்.
 
 
அது, அவிழ்க்கப்படாதவரை மக்கள் விரோதிகள் இரகுமான் ஜான் வடிவில்மட்டுமல்ல பிரபாகரன் வடிவிலும் நம்மை வந்தடைவர்கள்.அவர்களுள் நான்-நீங்கள் அனைவரும் இருக்கக் கூடும்.
 
இதைக் கடக்க முனையும் இளைஞர்களே!
 
வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!!
 
 
இவர்களதும்-நமதும் கடந்தகாலத்தைத் தோண்டிப் பார்த்து, நமது மக்கள் மூலம் தீர்ப்புக் கூறுவோம்.
 
 
அதுவரை, எவரையும் நம்பாதீர்கள்!அனைவரையும்(என்னையும்)சந்தேகியுங்கள்.இது,உண்மைகளுக்காவும்,உருப்படியாகப் போராடவும் என்று இருக்கட்டும்.
 
 
வெல்க, பரந்துபட்ட மக்களது விடுதலை!
 
 
வேரறுக, மக்கள் விரோத அரசியல்-சதிகாரக் கூட்டின் திட்டம்!!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
14.12.2009

Freitag, Dezember 04, 2009

அயோக்கியர்களுக்கு அருகினில் இருந்துபடி...

நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து.


ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.பாசிசத்தின்முன் அடிபாணியாது, தொடர்ந்து அதை அம்பலப்படுத்துகிறார்.தனது இடைவிடாத பணிகளுக்குள் இவ்வளது செயற்பாட்டையும் மக்களுக்காவும்-ஒடுக்கு முறைக்குள்ளாகும் தேசங்களுக்காவும் முடுக்கிவிடுகிறார்.எங்களது தேசத்தில்,புலிகளதும்-பாசிச அரசினதும் கொடுமைகளுக்கு எதிராகத் தம்மைத் தாமே "பேராசிரியர்"என அழைக்கும் தமிழ்க்"கல்வியாளர்கள்"எத்தகைய செயலில் இருந்தார்களென இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.தலைகுனிந்து நொந்துகொள்கிறேன்.வாய் மூடி மௌனிகளாகவும்,கொடுமைக்காரர்களுக்கும்,அயோக்கியர்களுக்கும் அருகினில் இருந்துபடி,அவர்களை தேசியத்தினது பெயரால் அனுமதித்ததைத் தவிர இவர்கள் என்னதான் மக்கள்சார் அரசியலை-போராட்டத்தை முன்னெடுத்தார்கள்?கிட்லரிடம் அடிபணியாத ஐயன் ஸ்ரைன், இன்றுவரையும் மக்கள் நல அரசியலால் போற்றப்படுகிறான்.எங்கள்போராட்ட வாழ்வில், நெடிய கொலைக்கெதிராகக் குரல் கொடுத்த புதியதோர் உலக நாவலாசிரியர் கோவிந்தன்,கவிஞை சிவரமணி,செல்வி,மக்களது நலத்தைத் தனது உயிராகவெண்ணிப் போரிட்ட ராஜனி திரணகம,விஜிதரன் என ஒரு பட்டியல் நமது மக்களது உரிமைக்காகத் தமது உயிரைக் கொடுத்திருக்கின்றனர் அன்று.எனினும்,இன்று இவர்களைச் சொல்லிப் பிழைக்கும் குள்ள நரிக்கூட்டம், தமது இருப்புக்காகப் பிழைப்புவாத அரசியலை இனியொரு திசையில் கட்டியமைக்கப் பாசிசத்துக்கு முண்டுகொடுத்து மௌனித்திருந்தவர்களுடன் கைகோர்த்துத் தமக்கும், மக்கள்நல அரசியல் பாரம்பரியம் இருக்கிறதென்று பம்மாத்து அரசியலைச் செய்கிறது!இத்தகைய கயவர்கள்,இப்போது,புலிகள் அழிக்கப்பட்டத்தும்,தம்மையும் செயலாளர்களாகவும்,மக்களுக்காகப் போராடியதாகவும் ரீல் விடுகிறார்கள்.இவர்களுக்குக் குடை பிடித்துத் தமது நரித்தன அரசியலை முன்னெடுக்கிறது பழைய இயக்கவாத மாயைகொண்ட இனியொரு இணையமும் அதன் பின்னூட்டப் புலிகளும்.நாம் போடும் பின்னூட்டங்களை விடுவதற்கு வக்கற்ற இந்தக்கூட்டம் மக்கள் நலத்துக்காககப் போராடுகிறதாம்.எத்தனை பின்னூட்டங்களை நமது தோழர்கள்விட்டும் அதைத்தடுத்து புதைவிட்ட இவர்களைது அரசியல் தார்மீக நியாயம் எத்தகையது?

வரலாற்றை மறைப்பதற்கு இவர்கள் எவ்வளவுதாம் இட்டுக்கட்டினாலும் உண்மை எந்த வடிவத்திலும் வெளிவந்தே விடுகிறது.நோம் சோம்ஸ்கி,இன்றைய மக்கள்சார் உரிமைப் போராட்டத்துக்கு மிக நல்ல உதாரணமாவார்.இத்தகைய கல்வியாளர்களே நாளைய தலைமுறைக்கு வழி காட்டியாவார்கள்.இவர்களே கல்வியாளர்கள்.இதைவிட்ட எங்கள்"பேராசிரியர்கள்" மக்களது குருதியில் தமது இருப்பை நோக்கி அரசியல் செய்பவர்களே.நாம்,நோம் சோம்ஸ்கி,சாரா வாகன்கினேக்ற்,ஹாபர் மாஸ் காலத்தில் வாழ்கிறோம்.எங்களுக்கு, எமது தலைமுறையில் நமது"கல்வியாளர்கள்"குறித்தும் தெரிந்தே இருக்கிறது."தோழர்கள்"என்பதற்கு அர்த்தம் புரியாதவொரு இடதுசாரிகள் எல்லாம் புலிகளின் அழிவுக்குப்பின், தம்மையும் மக்கள் நலச் சிந்தனையாளர்களாகக் காட்டுவதில் எத்தனை முயற்சியைச் செய்யினும்,காலம் இவர்களைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.
காலத்தில் வாழாதவர்கள் கட்டிவைக்கும் கருத்துக்கள் அணுவாயுதத்தைவிட கொடியது.
இதற்கு நம்மிலும் எத்தனை "பேராசிரியர்கள்-தோழர்கள்"தூ...ப.வி.ஸ்ரீரங்கன்

04.12.09