Dienstag, Januar 01, 2008

மகேஸ்வரனின் தமிழ் மக்கள்மீதான...

முதலாளிக்கிடையிலான
முரண்பாடுகள் கொலைகளாக...


கேஸ்வரனின் படுகொலையைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளோடு முடிச்சிட்டு இவர்போன்ற மக்கள் விரோதிகளைத் தியாகியாக்கும் அரசியலை நாம் மறுப்போம்.பிறந்த புத்தாண்டில் இப்படி ஒரு கொலையைச் சொல்லி எழுதுவது ஆரம்பமாகிறது!கொலைகள் தொடர்வதற்கான சூழலைத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமையோடு போட்டுப் பிணைத்துக் கருத்தாடுவதற்கு அப்பால் இத்தகைய கொலைகளின் பின்னாலுள்ள முரண்பாடுகளை நாம் கண்டாக வேண்டும்.



மக்களின் அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு
மகேஸ்வரன் போன்றோர்
ஆற்றிய போராட்டப்பாதை-தியாகம் என்ன?



இவர்களின் மேற்தட்டு
வாழ்வுப் பொருளாதார வளம்
இத்தகைய சிறுவயதில் எங்ஙனம் திரண்டது?



நாம் அறியக் காரைநகரில்
கப்பல் விடும் தமிழ்த் தரகு முதலாளி
இருந்ததற்கான அறிகுறியில்லை!



நான் அறிய,என் கிராமத்துச் சண்முகம்-யோகம்மாக் குஞ்சி போன்ற தரகு முதலாளிகளைத் தவிர்த்து எவருமே தமிழ்ச் சமுதாயத்தில் கப்பல்கள் வைத்து வர்த்தகஞ் செய்த தரகு முதலாளிகள் இருக்கவில்லை.இங்கே, மகேஸ்வரன் புதிய தமிழ்த் தரகு முதலாளி!கவனியுங்கள்,தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் போர்களால் சிதைந்து சின்னாபின்னமாகிய போர்ச்சூழலில் உருவான புதிய பணக்காரன்.42 வயதில் பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரன்.



எனினும்,யாருக்காக இந்த அழிவுகள்?


மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னாலுள்ள அரசியல்தாம் என்ன?



மகேஸ்வரன் வெறும் பாராளுமன்ற உறுப்பினன் மட்டுமென்றால் நிச்சியம் இக்கொலை அரசியல் சார்ந்ததே!ஆனால், அவரோ ஒரு புதுப்பணக்காரன்.நானறிய கொழும்பில் மகேஸ்வரனின் விலாசம் 90 களுக்குப் பின்பே அறிமுகமாகியிருக்கிறது.


சுருவில்-கரம்பொன் மாணிக்கம் சகோதரர்களுக்கும் அவர்களது தமக்கை யோகம்மாக் குஞ்சிக்குத்தாம் முன்பு நான்கு கப்பல்கள் தமிழர்கள் பெயரால் ஓடியது.இவர்களுக்கு,பின்பு அரசியல் பிரமுகர்களுக்கூடான வர்த்தக உறவு முறைகளால் காமினி திசநாயக்காவின் நேரடிப் பணிப்பின் விளைவாகக் கொலையே நேர்ந்தது.சண்முகமும்,மாணிகமும் அரசியல்ரீதியான தமிழர் பிரச்சனையால் கொல்லப்பட்டவர்கள் அல்ல!மாறாகப் பங்கு-காட்டிக் கொடுப்பு மற்றும் வெளிநாட்டுக் கப்பற்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நெருக்குதல் கொலைகளைச் செய்வித்தது.


இப்போது, மகேஸ்வரனின் கொலைக்கு நிச்சியமாக அரசியற்காரணங்கள்தாண்டிய வர்த்தக முரண்பாடுகளே காரணமாக முடியும்.42 வயது மனிதர் இலங்கையின் இன்றைய நிலவரப்படி 50.000.கோடி சொத்துக்கு அதிபதியானதென்ற வரலாறு-நாம் திடுக்கிடும்படியான உண்மைகள் மறைக்கப்பட்ட வரலாறாகும்.


தீவுப்பகுதியில் இவ்வளவு திடீர்ப் பணக்காரர்கள் உருவாகுவதற்கான பின் தேட்டம் வி.மாணிக்கம்-சண்முகம்,யோகம்மாவுக்கே இருந்திருக்கிறது.இவர்கள் கொல்லப்பட்டபின் அவர்களின் சொத்துக்களை அறாவிலைக்கு விற்று வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த அவர்களின் பிள்ளை குட்டிகள், இலங்கையில் கப்பல்விடும் நிலையைத் தமிழர்கள் எவருமே செய்யமுடியாதென்பதற்கான காரணங்களையும்,அநுபவத்தையும் தமது வாழ்வுப் பயணத்துக்கூடாக நமக்குப் புரிய வைத்தவர்கள்-அவ்வளவுக்குக் கொழும்பு மாபியாக்கூட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டது-புறக்கோட்டை வர்த்தகத்தை சிங்கள அரசியல் மாபியாக்களின் கட்டுப்பாட்டிலிருந்து எவருமே பறித்தெடுக்க முடியாது!


ஆனால், மகேஸ்வரன் எம்.பி. இவ்வளவு கோடிக் கணக்காக முதலிட்டு முதலாளியானதன்பின்பு நிலைகொண்ட அவரது பகமை நிச்சியமாக வர்த்தக முரண்பாடாகவே இருக்கிறது.கொழும்பு வர்த்தக நிலைவரமானது பெரும் மாபியாக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்பு இத்தகைய முரண்பாடுகள் மிக நேர்த்தியாகக் கொலைகளைச் சர்வசாதாரணமாகச் செய்தபடி தமது இருப்பை நிலைப்படுத்துகிறது.


இத்தகையவொரு சூழலில் படுகொலையான மகேஸ்வரனின் கொலைக்கு அரசியல் சாயம் பூசித் தமிழர்களின்மீதான அரசியல் சரிவாக எவரும் கருதத் தேவையில்லை!


கொழும்பு வாழ் வர்த்தகப் பெருங்குடிகளின் வர்த்தக முன்னெடுப்பானது மிகவும் துரோகங்கள் நிறைந்தவை.அவை பெரும் குழி பறிப்புகளுக்கிடையில் மக்கள் சொத்தை வேட்டையாடும் நோக்கைக் கொண்டவை.


அதீத வேட்கை
பொருள் குவிப்பின் உறுதியோடு
பிணைவுற்ற பொருளாதார வாழ்வில்
மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே!


இதற்குள் மகேஸ்வரன்போன்ற மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரம்கோடி சொத்தைச் சேர்த்த புதிய முதலாளிகள் தமது வாழ்வை வளப்படுத்த நமது பிணங்கள்மீது அரசியல் நடாத்தியது வரலாறு.இலங்கையின் இன்றைய முதலாளிய வளர்ச்சியானது கோரி நிற்கும் சமூகப் பொருள் உற்பத்தியானது இலங்கைத் தேசத்தின் தேசிய உற்பத்தியைச் சிதைத்த இறக்குமதிப் பொருளாதாரத் தரகு நிலையே.இந்தத் தெரிவில் அந்தத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தைத் தகவமைத்த அந்நியச் சக்திகள் மென்மேலும் இலங்கையின் இனப்பிரச்சனையில் தமது ஆர்வங்களைப் பிணைத்துக்கொண்டு,தமிழ் பேசும் மக்களின் நிலையிலிருந்து,அவர்களின் சார்பாக எந்தப் பிரச்சனையையும் அணுகவில்லை.மாறாக, வர்த்தகம்,சூது,கப்பல் கட்டுமானம் என்ற தொழில்களில் மூழ்கித் தமது வளங்களைப் பெருக்குவதற்கு அரசியல் பலத்தை நாடியபோது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு பாதுகாப்பாகவும்,அரணாகவும் அவர்களுக்கு இருக்கிறது.தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் என்ற போர்வையில் மறைந்திருந்தபடி வர்த்தகஞ் செய்தும், ஊழல்கள் செய்தும் தமது இருப்பைப் பலப்படுத்தியவர்கள் அதன் எதிர் விளைவால் பலியாகிறார்கள்.



இதையும் தமிழ் பேசும் மக்களின் பெயரால்
இறுதியில் கணக்கு வைக்கப்பட்ட கொலையாக்கி விடுவதில்
எமது அரசியல் முந்திக்கொள்கிறது.




இப்படியிருக்குமொரு நிலையில்- இவர்கள்தாம் தமிழ்ச் சமுதாயத்தின் நாளைய"பெருங் குடிகள்". எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை.அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள்.மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள்.இங்கே, மகேஸ்வரனின் பாத்திரமே அவரை ஒரு மக்கள் விரோதியாகக் காட்டிநிற்கிறது.பொருளாதாரத்தடை மூலமாகவும்,மற்றது வலிய யுத்தத்தாலும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாதாக்கித் தமது ஆர்வங்களுக்கும்,பொருளாதார முன்னெடுப்புகளுக்கும் இசைவானவொரு இலங்கையை மெல்லத் தகவமைத்து வருகின்றவர்களோடு இசைவாக இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட மகேஸ்வரன் குருதி சிந்தியது தமிழ் மக்களின் நலனை உயர்த்திப்பிடித்ததற்காகவல்ல.



இவர்களுக்கிடையில் நிகழ்ந்த வர்த்தகப்போட்டி புதுப்பணக்கார மகேஸ்வரனின் பினாமியச் சொத்துக்கள் மற்றும் கொழும்பு வாழ் மாபியாக்களின் கடும் "இருப்பு"க்கான போட்டிகள் இவரைத் தொலைத்துக் கட்டியவுடன் நாம் உடனே தமிழர்களுக்குள் இன்னொரு மரணமாகப் பொதுமைப்படுத்துகிறோம்.



கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெரும் வர்த்தகர்களான வி.மாணிக்கம் சகோதரர்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமிடையில் என்ன தொடர்புண்டோ அதைவிட மிகக் கேவலமான உறவே மகேஸ்வரனுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமான தொடர்பு.தரகு முதலாளியத்தின் அடிவருடிகளாகக் கிடக்கும் அற்பப் பினாமித் தமிழ் முதலீட்டாளர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணயமென்பதை ஒரு போதும் காத்துவிட முடியாது.


தமிழ் மக்கள்மீதான மகேஸ்வரனின் கரிசனையானது தனது வர்த்தகத்துக்கான காப்பரண்-பேரம் மற்றும் தனக்கான பாதுகாப்பை நிலைப்படுத்தும் தந்திரம் மற்றும் தனது வர்த்தகத்திலுள்ள எதிரிகளைச் சரி செய்வதற்கான வியூகத்தோடுதாம் இதுவரை நகர்ந்தது.மக்களின் உயிர்த் தியாகமானது முற்றிலும் தமிழ் மூலதனத்தைக் காப்பதற்கான முதிலீட்டுத் தமிழரின் நலனைக் காப்பதற்கான செயலென்றும் அன்றே கூறிக் கொண்டோம்.இன்றோ தமிழ் முதலீட்டாளர்கள் அன்றைய கென்பாம்,டொலர் பாம் நீதிராஜாக்களோ அல்லது மஸ்கன்,மகாராஜா,குணரெத்தினம்,சண்முகமோ இல்லை.மாறாக, மகேஸ்வரன்போன்ற இயக்கப் பினாமிகளே புதிய முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள்.இவர்களில், இன்னும் பலர் இத்தகை அரசியலில் கொல்லப்படலாம்.எனவே,இவ்வகைக் கொலைகளுக்கும் தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள ஒடுக்குமுறைக்கும் முடிச்சிடுவது மிகக் கொடுமையானது.



இங்கே, புதிய கூட்டுக்கள்,தாஜாக்கள்,கொடுப்பனவுகள்,கண்டிப்புகள்,வெருட்டல்கள் ஊடாகச் சலுகைகளப் பெறுவதற்காகப் பாரளுமன்றத்தைப் பயன்படுத்திய மகேஸ்வரன் தான் அமைச்சராக இருந்தபோது ஆற்றிய "மக்கள் நலச் சேவைக்கும்" இன்றைய அவரது பல்லாயிரம் கோடிச் சொத்துக்கும் உள்ள அரசியல் ஒற்றுமை இனம் காணப்படவேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
01.01.2008

1 Kommentar:

Anonym hat gesagt…

who is going to control mahesh's properties and investments??