தாயாய்த் தவமாய்...
"மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்
கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"
முயன்று,முயன்று தோற்றேன்!அம்மா இல்லாத விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...
"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"
"தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!"-என் அன்னை இறந்துவிட்டாள்!
கடந்த 25 ஆண்டுகளுக்குமுன் இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!அன்னை உடல் அழித்து மறைந்து போய்விட்டாள்.
இந்தப் புகலிட வாழ்வில் வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!
அம்மா:பெற்றவள்.
மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!
அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.
என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அம்மாவின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!அம்மாவுக்குச் சாவில்லை!ஏனெனில்,பெண்மை என்பது அம்மாவைக்கொண்ட வாழ்நிலை.எனவே,அம்மாவைக் காலம் கொல்லுமா?என் அம்மா என் மனையாள் வடிவில்... சோதரிவடிவில்...மகள்வடிவில்...மருமகள் வடிவில்...இப்படிப் பெண்மை அம்மாவாய் உலகைக்கொண்டு இயங்க,அம்மா அநாதியாகிறாள்!
அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்.குடும்பத்தின்-தேசத்தின் சந்தோசம் என்றாகிறது!
உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.
அம்மா செத்தாள் என்பது நிஜமாக உணர்வுக்குள் முட்டிமோத ஏமாற்றம் அம்மாவைப் பொதுமைக்குள் இருத்தி அழிவற்ற அநாதியாக்குவதில் மனிதவாழ்வு அர்த்தம் காண்கிறது.இது எனக்குத் தற்காலிக ஆறுதலைக் கூட்டிவருகிறது!எனினும்,ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.
பனங்கூடல்.சின்னமடுமாதா கோவில்-கணக்கர் வளவு.
கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...
எங்களிடம் ஒரு தென்னை வளவு இருந்தது.
பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...
இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,இந்தவுலகத்தின் அம்மா.அம்மா-மாதா-தாய்!உயிரின் ஊற்று-மூலம்.எனக்குச் சின்னமடுமாதா தாய்-அம்மா.அவளது குருசு மரத்தடியில் எனது உடல் சரிந்துவிடவேண்டுமென்பது எனது நீண்ட கனவாக...
அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்!இதை உணராதவன் நான்?இல்லை-இல்லவே இல்லை!அம்மாவுக்காக என்னை ஒடுக்கியவன் நான்.சின்னஞ்சிறு கனவுகளுக்கு எல்லையிட்டவனும் நான்.அம்மாவை அந்தக் கனவினது நிராகரிப்பில் காத்தவன் என்பது எனக்கான ஒரு வரலாறாக இருக்கிறது.அம்மாவைவிட எது பெரிதாக இருக்கும்?
அம்மா:தாய்-தேசம்?
ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் அம்மா இல்லாத விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது,சரவணையிலிருந்து புலம் பெயர்ந்த நான் தேசம்-அம்மாவைத் தொலைத்தவனாகிறேன்.
ஆம்!
அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!
அன்பு என்பது அம்மா!அதுவே,உலகத்தின் மூலம்.
இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது, தன்னையும் தன் சுகத்தையும் மறுத்துத் தன் விழிகளுக்குமுன் தான் பெற்றதும்-பெறாததுமான குழந்தைகள் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது, எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இஃது, நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு, கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்-தாயின் அர்த்தம்!
தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள். அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெரிதாகும்?தாயைப் பழிப்பவன் தனயனாக இருந்தாலும் அவன் மனித விரோதி-சமூகவிரோதி!
நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.
உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு
எனக்காக அன்னை தந்தது.
இது, உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!தமிழர்களாகிய எமக்கு இஃது, தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.இன்றோ,கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள், மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு அம்மா பற்றி பிரக்ஜை அவசியமாகிறது.அம்மாவைப் பழிப்பவன்-உதைப்பவன் அழிந்துபோன வரலாறைக் காலம் எப்போதும் உணர்த்தி நிற்கிறது.
அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடுத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.
இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?
பிள்ளையின் ஒவ்வொரு வெற்றியிலும்(கல்வி-வாழ்வு-உழைப்பு,உயர்வு என...) ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில்,துன்பத்தில் துவளும் தாய், தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதர்மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய்ப் பெருகுபவள்.இப்போது, இவள் தாய்:தேசம்!
சரவணை...எனது பிறந்த மண்.
இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது-எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காத மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குவதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லிக் கிருமிகள் "டெங்குவாகவும்,மலேரியாவாகவும்" சுதந்திரமாக ஊருகிறது.தொற்றகற்றிகொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எமது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!
நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.அப்படி ஆகணும்.ஏனெனில்,அவள் தாய்!
"சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைப்பட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் சரவணைத் தெருவில் குத்தி விழும் மனம்
எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
அகதிவாழ்வில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!
உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் என் வாரீசுகள்."
ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்து மரித்துப்போனாள்.
"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் உயிர் துறுந்து தீயில் சங்கமமாக...
அன்னை!
அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.
அம்மா.
அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.
எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு,அம்மா என்பதாக...
காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து,அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...
அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விட்டாள் இப்போ...எனினும்,அம்மா வாழ்கிறாள்-உலகாய்த் தேசமாய்,பெண்மையாய்,பொதுவாய்...இப்படி எல்லாமாக.
ப.வி.ஸ்ரீரங்கன்
06.02.2010
Keine Kommentare:
Kommentar veröffentlichen