தமிழீழம்:மாகாணமாகிறது!
இன்றைய நமது அரசியல் வாழ்வு ரொம்பத்தான் கேணைத்தனமாகப் போச்சு!எவனெவனோ தமிழ் மக்கள் நலம்,விடுதலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள்,எழுதுகிறார்கள்.தமிழ் மக்களுக்காகச் சிங்கக் கொடிகளோடு ஊர்வலம் எடுக்கிறார்கள் சிலர்.பலர் எழுக தமிழ்-பொங்கு தமிழ் எடுக்கினம்.பாதிக்கப்படும் மக்களோ ஒரு நேரக் கஞ்சிக்குப் பேயாய் அலையும் நிலையில். என்னதான் இந்தச் சனத்துக்கு விடிவு தரும்?
தமிழீழம்!-புலிகள் அப்பப்பச் சொல்வதும்,பின்பு அடக்கி வாசிப்பதும்.
மாநில சுயாட்சியும்-மத்தியில் கூட்டாட்சியும்!-டக்ளஸ் உரைக்கிறார்.
இந்தியாவோடு பஜனை பாட புலிகள் உட்படக் காத்திருக்கும்போது,இந்தியாவோ இன்னும் மாகண சபைக்குள் கனவு காணுது.அதுக்காக ஐயா ஆனந்தசங்கரி பலமாகக் காய் நகர்த்துகிறார்.இந்தியா ரொம்பத்தான் தெம்படைகிறது.
புகலிடத் தமிழர்களைப் புலிகள் ஒருபுறம் சுரண்ட மறுபுறம் இலங்கைச் சிங்கள அரசும்,இந்தியாவும் கூடவே அவர்களின் நம்பகமான கூட்டாளிகளும் மூளைச் சலவை செய்வது கண்கூடாக நடக்கிறது.
அப்பாவி மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுத்துவிட்டுக் கண்ணீரோடு அவர்களின் கல்லறையில் கட்டுண்டு அழுதபடி...
இவர்களுக்கு வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பு.
அரசியல் நடத்துபவர்களுக்குத் தமது பதவி,சுகம்,பணம் இயக்கம்-கட்சி என்ற எதிர்பார்ப்பும் மக்களை அடக்கி ஆட்சி புரியும் கனவும்.
இதை எப்படி அனுமதிப்பது?
இன்றைய இலங்கை அரசியலில் பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெறத் துடிக்கின்றன.
அன்றாட வாழ்வில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அராஜகச் சூழலை-இயக்கப் பயங்கரவாதத்தை,புலிகளின் தனிகாட்டு ராஜாங்கத்தை,மற்றைய ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்தைப் பாரிய அளவில் தூண்டிவிட்டுச் சிங்கள அரசு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனையை நீற்றுப்போக வைத்துள்ளது.இன்றைய உடனடிப் பிரச்சனையானது இனப்பிரச்சனையல்ல,சுயநிர்ணயப் பிரச்சனையல்ல மாறாகப் புலிகளின் அடக்குமுறையே தமிழ் மக்களின் பிரச்சனையென்று உலகத்துக்குக் காட்டும் இராஜதந்திரத்தில் இந்தியாவும்,இலங்கையும் மெல்ல வெற்றி பெற்று வருகின்றன!
வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்பவும் நிராகரித்த இலங்கையின் ,இந்தியாவின் ,அமெரிக்காவின் விருப்பமானது தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.ஒவ்வொரு தமிழ் மாவட்டங்களிலும் பற்பல ஏற்ற தாழ்வுகள் உண்டு.தமிழ்ச் சமுதாயத்தில் பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இந்தியாவின் இராஜதந்திரமானது முதல் தடவையாகப் புலிகளின் படையணியைப் பிரித்தெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வெறும் குறுங்குழுவாக்கும் தந்திரத்தைக் கொண்டது.இந்தத் தந்திரத்தை வெகுவாகக் கடைப்பிடிக்க முனையும் இந்தியா வருங்காலங்களில் இந்தப் பிரச்சனையைத் தூண்டி வளர்த்தெடுத்துக் காய் நகர்த்தும்.தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான பிரச்சனையை முற்றுமுழுதாகப் புதைத்துவிடும் அரசியல் காய் நகர்த்தலே இனிமேல் வலுவடையும்.அதற்காக இந்தப் பிரச்சனை இன்னும் இழுத்தடிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு வருடங்கள் பல கடக்கப்படலாம்.இப்படிக் காலம் கடக்கும்போது புலிகளின் மறைவு நிச்சியமாகும்.இன்றைய சூழலில் மங்குகாலத்தில் இருக்கும் புலிகளின் அமைப்பாண்மை காலம் செல்லச் செல்ல இன்னும் மங்கும்.
இதைத் தடுப்பதற்கான புலிகளின் எந்த இராஜதந்திரமும் உலக அரங்கில் செல்லுபடியாகாது. போரைத் தொடங்கி,தமது அமைப்பாண்மையையும்,படையணியின் உளவியலையும் தெம்படைய வைப்பதற்குப் புலிகளுக்கு அவசியமாகும்.ஆனால் இந்த உபாயம் அவர்களின் தற்கொலைக்கு வழி சமைப்பதில் முடியும்.எனவே இந்த வழியும் இறுக மூடிக்கிடக்கும்போது அவர்களிடம் பேரம் பேசல் மட்டுமே மிஞ்சிக்கிடக்கிறது.
இந்தப் பேரம் பேசலுக்காக முந்திய பாதை போன்ற திடகாத்திரமான சூழல் அவர்களுக்கக் கிடையாது.கருணாவின் பிளவுக்கு முன்னிருந்த அந்த ஆளுமை புலிகளுக்குக் கிடையாது.இந்த இறுக்கமான சூழலானது புலிகளின் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் எந்தக் காய் நகர்வையும் அவர்களுக்குச் சாதகமாக்கமுடியாது போகும்.இதைப் புலிகளின் பின்னாலுள்ள அவர்களது எஜமானர்கள் நன்றாக உணரத்தலைப்பட்டுள்னர்.எனவே நோர்வேயிடம் பணத்தை வேண்டித் தமிழ் மக்களின் உரிமைகளை அடைவு வைத்து அமெரிக்காவின்,மேற்குலகத்தின் நம்பகமான அடியாளாகப் புலிகள் மாற்றப்பட்டு வருவதில் இனிவரும் காலம் தொடரும்.இந்தியாவைப் புலிகளோ அன்றி இந்தியா புலிகளையோ ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை.இந்த நிலையில் மேற்குலகைச் சாரும் புலிகளை தமிழ் மக்களிடம் அம்பலமாக்கித் தமிழ் மக்களுக்குள் பழைய பெரிச்சாளிகளை ஜனநாயகச் சக்திகளாக்க முனைகிறது இந்தியா.இதில் இந்தியாவின் இந்த வியூகம் வெற்றி பெறும் தறுவாயிலுள்ளது.
இத்தகைய அரசியல் காய் நகர்வில் புலிகளின் கோரிக்கைகளை ஆளும் இராஜ பக்ஷ அரசு ஒருபோதும் செவி சாய்க்காது.இந்தியாவின் இலக்குப்படி இதை இழுத்தடித்துவருவதற்காக பேச்சு வார்த்தை அங்கே-இங்கே என்று நகரும்.இத்தகைய தரணங்களில் சிங்கள இனவாதச் சக்திகளைக்கொண்டு புலிகளுக்கும் அவர்களது கோரிக்கைகளுக்கும் எதிராகத் தூண்டிவிட்டு பாரிய எதிர்ப்பைச் சிங்கள மக்கள் மத்தியில் தூபமிடும் இந்தியா! தமிழ் மக்களுக்கு அற்ப சலுகையும் கிடைக்காத சூழலை உருவாக்கி விடும் இந்தியா, புலிகளையின்னும் பலவீனப் படுத்தும் பாரிய கருத்தியல் போரும்,மென்மை யுத்தமும் நடத்தும்.இதில் புலிகளின் முக்கிய பினாமிகள் கொல்லப்பட்டும்,கைதுகள் செய்யப்பட்டும்,புலிகளின் பொருளாதார வலு முடக்கப்படும்.இது சாத்திய மாகும் தறுவாயில் அவர்களது இருப்பு மிக மிக அரவமாகவேயிருக்கும்.இங்கே இந்தியாவின் மாகாண ஆட்சித் தீர்வுப் பொதியூடாக வன்னியிலும் யாழ்பாணத்திலும்,மட்டக்களப்பிலும்,திருகோணமலையிலும்,அம்பாறையிலும் ஒவ்வொரு எடுபிடிகள்' மாகாண ஆட்சியை' நடாத்துவார்கள்.அதில் வன்னிப் புலிகளின் பங்கும் உண்டு.சிங்கள மக்கள் இதற்கே வழிவிடும் நிலையில்லை.எனவே இதைப்பெறுவதே மேலென கருத்தியல் விதைக்கப்பட்டு அதை சாதிப்பதில் இந்தியா வென்றுவிடும்.
அப்பாவி மக்கள் மீளவும் கொட்டாவி விட்டு,இவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டியதுதான்.
இதுதான் புலி அரசியல் தந்திரம்.இதை மீறிய வாழ்வு தமிழ் பேசும் மக்களுக்கு இனி வருவது பகற்கனவே.மாநிலமும் இல்லை,தமிழீழமும் இல்லை!மாறாக மாகாணமென்பதே இந்தியாவினதும்,அமெரிக்காவினதும் விருப்பாகும்.இங்கே இதைச் சாதிக்க சிங்கக் கொடிகளுடன் தமிழ்க் கூலிகள் தயாராகி வருகிறார்கள்.புலிகளும் தனது கூலியை நோர்வேயூடாகப் பெற்று> தனது வாலை மேற்குலகுக்கு ஆட்டுவதில் கரிசனை காட்டுவதால் இனிவரும் காலம் இந்தியாவுக்கே வெற்றியைத் தேடித் தரும்.இதுவே பூகோள அரசியலின் விதி.இதைத்தாண்டி மேற்குல எஜமானர்கள் புலிகளுக்கு விமோசனமிட முடியாது.
ஜனநாயகம்.
18.10.05
Keine Kommentare:
Kommentar veröffentlichen