Donnerstag, Juni 29, 2006

எதற்காகப் பெண்ணே?

எதற்காகப் பெண்ணே?

தாய்மையின் சோகத்தை
தனதாக்கிய தேசம்
தரையில் தலையைத் தெறிக்க வைத்தது!

கற்பையில் குண்டெறிந்து
தேசமொன்று விடுதலைக்குப் போராடுகிறதாம்.

தேசத்தின் விடியலொன்று
தாய்மையைக் காவெடுத்து
கருகிச் சாம்பலாகிய உடலோடு சல்லாபித்தது!

தேசியம்,
தேசம்,
மொழி,
பண்பாடு,
இனம்...

பிணம்
புசித்துப் பசியாறும் பொழுதுகளாய்
பொய்யுரைத்துப்
பதுங்குழிகளுக்குள் தாயொருத்தியின்
கருப்பையில் இவற்றைத் திணிக்க
தேசமெங்கும் குருதியாறு
குழந்தைகளின் குரல்வளைவரை
நிறைந்து வழியும்.

எப்போதோ ஓர் நாள்
அவர்களின் மூச்சை முழுமையாகக் காவுகொள்ளும்
இன்னொரு
சுனாமியாகக் குருதி அலைகள்
என் தேசத்தை மூழ்கடிக்கும்!

எந்தப் பொழுதினும்
உயிர் வாழாதிருக்க எவராவது விரும்புவாரோ?

இது எப்படி?

மண்டையைப் பிளந்து
பிழிந்தெடுத்த மூளையை உலர்த்தி,
பிசாசுத் தனமான
விசமத்தனங்களை வினையாக்குவதும்,
விடுதலையல்ல!

வேதனை!

தாய்மையைக் கொச்சைப்படுத்திய
தேசியம்
சூறையாடப்பட்டவொரு வெளியில்
உன்
சிதைவுகளுக்குள்
ஓராயிரம் கேள்விகள் எழலாம்!

கூர்மைப்பட்ட குரல்களாய்
மக்கள் விழிதிறந்து
கரங்களைப் பிணைப்பதற்காகவேனும்
உன் சிதைந்த சிரசுபற்றிக் கதைத்தாக வேண்டும்.

எதற்காக?

பொய்மைப் பொழுதுகளால்
போர்த்தப்பட்ட யுத்த தேசம்
விடுதலை,
சுதந்திரமென்பதெல்லாவற்றையும்
தேசியத்தின் கோவணத்துள் வீசியெறிந்தது.

ஒவ்வொரு தமிழரும்
கோவணத்தைக் கட்டியதும்
தன்னளவில் தேசியம் அரிப்பெடுத்து
மனிதத்தைச் சொறிந்தது!

தேசம் நடுத்தெருவில்
தாய்மையைப் பறிக்க
புதல்வர்களைத் துப்பாக்கியுடன் நிறுத்துகிறது!

ஜனநாயகம்
27.04.06

Keine Kommentare: