Sonntag, Oktober 11, 2015

டேவிட் ஐயாவின் முன்னுரையோடு,அவருக்கு முடிவுரை...

...இன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினத்துக்கு வரக் கூடிய அழிவை ஆராய்கிறேன்.
இப்பகிரங்க வெளியீடுகளால் இவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க நான் முன்வரவில்லை.இவர்கள்ளெமது அரசியற் பிரமுகர்களென்றடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் பலன் கருதி இந்த விமர்சனத்தை வெளியிடுகிறேன்.

இப் புனிதப் பணியில் எனக்கு நேரிடக் கூடிய விபரீத விளைவுகளை நன்கு உணர்வேன்.விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக்கட்டை என்றதும் ; சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (TELO) தமது "எழுச்சி"ஏட்டில் என்னைப் "பிற்போக்குச் சக்தி காக்கை வன்னியன்" என வர்ணித்ததையும் அறிவேன்.

இக்கட்டுரையை வரையும்பொழுது பெயரும் -ஊரும் கொடுக்கத் திரணியற்றவொரு "விடுதலை வீரன் " ஓர் பயமுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்."அட பொறுக்கி... முகந்தனிடம் பணம் வேண்டி சிறையுடைப்புப் புத்தகம் வெளியிட்டாய் ;இனியெழுதினாற் வெட்டிக் கொல்வோம் !" என்கிறார் அவர்.

இவ் வெருட்டல்கள் மூலம் தமிழீழ விடுதலை எங்கே போகின்றதென்பதை  வாசகர்கள் ஊகித்து அறியலாம்.

ஆனால், ஈழவிடுதலைப் பாதையில் எண்ணற்ற துன்பம் நேரிடினும் அஞ்சாது -அயாராது உழைப்பேன்.என் அருமைச் சக ஊழியன் டாக்டர் சோ.இராசசுந்தரம் தம் உயிரையே தியாகம் செய்து விட்டார்.பல ஈழத் தமிழ் இளைஞர்கள் இரத்தத்தால்  ஈழவிடுதலையை உறுதிப்படுத்திவிட்டனர்.இப் பாதையில் குறுக்கே நிற்கும்  தீய சக்திகள் அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.
ச.ஆ.டேவிட்
1985
======================

 மேற் காணும் அவரது முன்னுரையில்  ஈழ விடுதலை மீதான அவரது பெருவிருப்பை நாம் அறிய வாய்ப்புண்டு.அவரது அரசியல் முன்னெடுப்புகளில் நானும் மயங்கியிருந்த காலத்தில் அவரைச் சந்தித்துச் சில துரும்புகளை நானும் எடுத்துப் போட்டவன். இன்று  " எங்கள் "டேவிட் ஐயா பந்தியுற்றுள்ளார். 

விடுதலை வேட்கையுடைய  மாபெரும் மனிதருக்கு நமது "விடுதலை இயக்கங்கள்" வரலாற்றில் எந்த  இடத்தை அவருக்கு வழங்கினர் என்பதை அவரது முன்னுரையே நம் முன் எடுதியம்பி வரலாற்று ஆவணமாகவுள்ளது!.

எனவே,அவரது இழப்புக் குறித்துப் பேசும் அருகதை அராயக இயக்கவாதப்  பண்புடைய  எவருக்கும் கிடையாது.இந்த மாமனிதரை இறுதிவரை கண்டுகொள்ளாத இயக்வாதம் ,தற் குறித்தனமாகத் “தமிழ்த் தேசிய விடுதலையை அழித்து தாமும் அழிந்து போனதை”  இந்தப் பெரு மனிதர் கண்டுதாம்  தற்போது ஈழத்திடமிருந்து விடைபெற்றுள்ளார்.

அவரது பெருவிருப்பை(விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகளை இறுதிவரை அம்பலப்படுத்தி நேரிய பாதை காண்பது) நாம் தொடர்ந்து  ஆற்றுபவர்கள்.எனவே, நமது முன்னோடியான டேவிட்  ஐயாவுக்கு மிகுந்த மரியாதையோடு தலை தாழ்த்தி அவர் வழி தொடர்வோம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
11.10.15

Keine Kommentare: