வான் குண்டுகளும்
வாளாதிருக்கும் உலகமும்.
உலகத்துள் ஒடுக்குமுறையாளர்களெல்லாம் ஒரு பக்கத்தில் தத்தமது தேவைகளோடு அரசியல் நடாத்த, நாம் தினமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம்,அவர்களது ஒடுக்குமுறை வியூகம் நம்மைத் துண்டம் துண்டமாக்கி அழிக்கின்றது!சிங்கள வன்கொடுமை அரசின் வான் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணில் குண்டுமழை பொழிய எனது மழலைகள் கைகள்,கால்கள் துண்டமாகியும்,குடல் சிதறக் கொலையுண்டு போகிறார்கள்!
நான் மெளனித்துக் கிடக்கிறேன்.
எனது தவறுகள் என்னை அழிப்பதில் முடிகிறது.
என்னைச் சுற்றி எதிரிகள் படை சூழ்ந்துபடி "தேசமொன்று உனக்குக் கிடையாது"என்று பூண்டோடு எனது காலடித் தடங்களை அழித்தபடி முன்னேறுகிறார்கள்.
இது எனது தேசத்தின் ஊழ்வினை!
முடியவில்லை-மெளனித்திருக்க முடியவில்லை!
மனதுக்குள் ஏதோவொரு வலி-வேதனை.
யாரேறெடுத்தெமைப் பார்ப்பார்?
எந்தவொரு தேசமும் எமது அழிவை குறைந்தபட்ச செய்தியாகக்கூடக் காண்பிப்பது கிடையாது!பாலஸ்தீனத்தில்,ஈராக்கில் நடப்பவை செய்தியாகும் வேகம் எனது மண்ணின் அழிவில் இருப்பதில்லை.
இந்த நிலையில், தமிழர்களின் அழிவை உலகத்து இடதுசாரிய நாளிதழ்கள்தாம் ஒரளவாவது வெளிப்படுத்துகின்றன.ஆனால்,ஈழத்துத் தமிழனுக்குக் கம்யூனிசத்தின்மீதான காச்சல் இன்னும் விட்டபாடில்லை!எங்கள் வலியை,எங்கள் பார்வையில் இதோ ஜேர்மனிய இடதுசாரிய யுங்க வெல்ற் எனும் சஞ்சிகை கூறுவதைப் பாருங்கள்.
இந்த நாளிதளின் பல கட்டுரைகளை ஜேர்மனிய நகரமான காசல் எனும் நகரத்திலிருக்கும் காசல் பல்கலைக்கழக சமாதான ஆய்வகப் பிரிவு அதிகமாகச் சேகரித்து வைத்திருக்கிறது.இது இடது சாரிகளால் மட்டுமே நிகழ்ந்து.ஜேர்மனிய அதிபர்களாலோ அல்லது முதலாளிய ஊடகங்களாலோ நிகழ்ந்தது அல்ல!எமது கண்ணீரை தொடைப்பதற்காக அவர்களது எல்லைவரைப் போராடுகிறார்கள்.அப்படிப் போராடிய பேராசிரியர்கள் பலர் ஜேர்மனிய அரசால் பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்கள்.ஏனெனில்,இவர்கள் இடதுசாரியப் பாரிம்பரியம்கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதே காரணமாக அமைகின்றது.
ஈழத்தின் அழிவுக்கான வித்தை இட்டுவிட்டுச் சென்றவர்கள் வட ஈராக்கில் அத்துமீறித் தாக்குதலுக்குப் போகும் துருக்கிய இராணுவத்தை மீளத் துருக்கிக்குள் வருமாறு எச்சரிக்கை செய்கிறார்கள்!துருக்கி கொசொவோவை அங்கீகரக்கிறது!அதே தருணம் குர்தீஸ் மக்களை வேட்டையாடத் தனது வன் கொடுமை இராணுவத்தை அமெரிக்க ஒப்புதலோடு வட ஈராக்கை நோக்கி ஏவிடுகிறது!
அமெரிக்க அதிபாரோ ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கைகளால் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சி மகிழ்கிறார்!அற்புதமான மனிதர் புஷ் அவர்கள்!என்னவொரு கரிசனை இந்த ஏழை மக்கள் தம் வாழ்வில்?
பெனின்,தான்சானியா,றுவன்டா,கானா,லிபேரியாவென்று போகுமிடமெல்லாம் அவருக்குப் பொய்க்காத வரவேற்பு,வாழ்த்து!ஆடலும் பாடலும் நிறைந்த விருந்துபாசாரத்தில் புஷ் தன்னையும் இணைத்து ஆபிரிக்க மக்களுக்கு பெருங் கெளரவத்தைக் கொடுத்து,அவர்களைக் கடைந்தேற்றக் காலம் கணிக்கிறார்!மலேரியாவையும்,நுளம்பையும் எதிர்கொள்ள ஆபிரிக்க மக்களுக்கு நுளம்பு வலை வழங்கும் கொடை வள்ளல் அல்லவா அவர்!
ஆபிரிக்காவில் ஜனநாயகம் மலர ஐயா புஷ் தூதுவராகச் செல்கிறார்,அவர் பின்னே அவரது இரணுவம் போகத் தேவையில்லை.அது, ஏலவே அங்கே இருப்புக் கொண்டுவிட்டது.ஐயாவின் வருகையில் அகமலரும் அற்ப ஆபிரிக்கத் தேசக் குடிகள்!
என் தேசத்துக்கு ஐயா புஷ் அவர்களின் ஜனநாயகம் அவசியமில்லைப் போலும்!
இல்லையேல், அவர்கள் என் தேசக் குழந்தையின் தறித்த கைகளை எடுத்து உலகுக்கு முன் நீதி கேட்பார்கள்.மழலைகளைக் கொல்லும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தை-வான்படையை ஏவிவிட்ட இராஜபக்ஷவை பின்லாடனுக்கு நிகரான பயங்கரவாதியாக்குவார்.
என்ன செய்ய? 2007 ஆம் ஆண்டு எண்ணையூற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட கானா தேசமா எனது தேசம்?
அல்லது,பிளாட்டினம்,தங்கம்,வைரம்,யுரேனியம்,செம்பு,நிலக்கரி,ஈயம்,எண்ணை என்று உலகத்தின் கனிவளத் தேவைகள் அனைத்தையும் ஒருங்கே வைத்த ஆபிரிக்கக் கண்டத்திலையா எனது தேசம் இருக்கிறது?
இலங்கைச் சிங்கள அரசின் அதீத இராணுவவாத ஆட்சியை இன்னும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு என்று என் தேசத்தவன் சொல்கிறான்.பிறகென்ன அது அதை நிலைநாட்டப் பயங்கரவாதப் புலியைக் குண்டுபோட்டழித்தாக வேண்டும்.இதோ, ஆறுமாதப் புலி செத்துக் கிடக்கிறது.மூன்று வயதுப் புலியின் கையை உடைத்துக் கொன்றிருக்கிறது இலங்கை அரசு!-இப்போது சந்தோஷமா?
இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இதற்குள் மயங்காதவர்கள் எவர்கள்?மக்களின் நல் வாழ்வுக்காக,அவர்கள் வாழும் தேசங்களை அபிவிருத்தி செய்ய உலக ஜனாதிபதி ஊர்கோலம் பூணுகிறார்-ஊர்வலமாகப் பவனி வந்தபடி!
இதன் உள் நோக்கம் ஈழத்தில் இருக்குமென்றால் நிச்சியமொரு கொசோவோவாக ஈழம் மலர்ந்திருக்கும்.குழந்தைகள் குண்டடிபட்டிறக்காமல் உழைத்து மாடாகச் சாவதற்காக இன்னும் சில காலம் உயிரோடிருந்து வளர வாய்ப்பு இருந்திருக்கும்.
2003 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆபிரிக்கச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இதே புஷ் அவர்கள் செனகல்,உகண்டா முதலாகப் பிராந்திய வல்லரசான தென்னாபிரிக்கா முதல் நைஜீரியா,போட்சுவான முதலாகப் பிரயாணித்துத் தனது தேசத்துத் தொழிற்சாலைகளின் பசியைப் போக்கப் பாடுபட்டுழைத்தார்.இவரோ இப்போது மீளவும் ஜனநாயகம்,அபிவிருத்தியென்று பஜனைபாடியபடி மேற் சொன்ன தேசங்களுக்குப் பிரயாணிக்கிறார்.
எதற்காக எனது தேசம் அநாதையாக விடப்பட்டு,யுத்தம் நடைபெறுவதற்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது?
ஆயுதக் கம்பனிகளின் பணப் பெட்டிகளை நிறைக்க எனது தேச மக்கள் அழிந்தாக வேண்டும்.அதே போல ஐரோப்பிய-அமெரிக்க மற்றும் சீனாவினது,ஜப்பானினது பக்டரிகள் பணம் பண்ண ஆபிரிக்க-அரபு தேச மக்கள் செத்தாக வேண்டும்!அவர்களின் பிராந்திய மற்றும் வலயங்கள்-கண்டங்கள் குறித்த கணிதச் சமன்பாடுகள் சரியாகவே இருக்கிறது!
சீனாவினது போட்டா போட்டியான பொருளாதார வளர்ச்சியானது சீனாவை எண்ணை-எரிபொருளுக்காக ஆபிரிக்கா நோக்கிப் பேயாக அலையவிட,அமெரிக்க ஐயாவுக்குப் பசி எண்ணை ரூபத்தில் வந்து தொலைகிறது!பிறகென்ன போட்டிக்குப் போட்டி!ஆபிரிக்காவுக்குப் படையெடுத்துப் பசி போக்க வேண்டியதுதாம்!கிளம்பிட்டார் புஷ் அவர்கள்.
கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையின் பெறுமதி 4.500.கோடி டொலர்களாக இருக்கிறது.இது மேலும் எண்ணையிருப்புகள் கண்டுபிடிக்கும்போது விரிந்து போகும்.இதை அமெரிக்கா விட்டுவிடுமா?ஒரு கணக்குப்படி பார்த்தால் இந்த அமெரிக்காவுக்கு-உலகுக்கு வரும் ஒவ்வொரு ஐந்தாவது பரல் எண்ணையும் ஆபிரிக்காவிலிருந்தே வரும் நிலையுண்டு.இன்றைய நிலைவரப்படி அமெரிக்கா நாளொன்றுக்கு 4 மில்லியன்கள் பரல் மசகு எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து எடுக்கிறது,அல்லது திருடுகிறது!சீனாவோ 2 மில்லியன்கள் பரல் எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது!கவனியுங்கள் இறக்கு "மதி" செய்கிறது சீனா.
2002 ஆம் ஆண்டுக்கான வொஷிங்டன் திட்டமிடல் மற்றும் கணிப்பீடானது ஆபிரிக்காவிலிருந்து எண்ணை எடுக்கும் பங்கு 10 வீதத்திலிருந்து 25 வீதமாக 2015 இல் உயருமெனக் கணிப்பிடப்பட்டது.இன்றைய பொழுதில் 18 வீதமாக இது இருக்கிறது.அன்றைக்கு நடு நிலையான இறக்குமதியென்ற முக மூடியோடு திருடப்பட்ட ஆபிரிக்க எண்ணை இருப்புகள் இப்போது மிக நேரடியாகப் பறிமுதல் செய்யப்படுவதற்காகவே புஷ் ஆபிரிக்காவை வலம் வருகிறார் என்பதை எவர் இல்லையென மறுக்க முடியும்?
ஆபிரிக்காவின் எண்ணைச் சுய தேவையும் ஒரு புறம் உயர்ந்தே செல்கின்றபோதும், சீனா,அ¦மிரிக்கா மற்றும் ஐரோப்பியத் தேவைகளோ அந்தக் கண்டத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது படைகளை அனுப்புவதென்ற போர்வையில் ஆபிரிக்க மக்களின் பல்வகை மூலவளச் சொத்தைத் திருடுவதற்குப் பெயர்: "ஜனநாயகம்-அபிவிருத்தி"எனக் கொள்க!
அமெரிக்காவின் ஆபிரிக்கக் கொமாண்டோஸ் என்ற அவ்றிக்கோம் நான்கு நட்சத்திர ஜெனரல் வில்லியம் வார்ட்டின் கீழ் 1.10.2007 பொறுப்பெடுத்த பொழுதிலிருந்து இன்றுவரையும் அமெரிக்காவின் கண்ணில் பற்பல கனவுகள் ஆபிரிக்க மூலவள ரூபத்தில் வந்தபடி.ஆபிரிக்காவின் 90 கோடி மக்கள் தொகையில் 30 கோடி மக்களின் நாளொன்றுக்கான வருமானம் ஒரு டொலருக்கும் கீழ்பட்டதாகும்.ஆனால், அந்த மக்களின் பல இலட்சம் கோடி டொலர்கள் பெறுமதியான மூல வளச் சொத்தோ இத்தகைய ஓடுக்குமுறையாளர்களால் திருடப்பட்டு,அமெரிக்க-ஐரோப்பியத் தேசங்களின் சொத்தாக மாற்றப்பட்டபின் தொடர்ந்து திருட்டை நிலைப்படுத்த அதே பணத்தில் அற்பச் சில்லறைகளை அந்த ஆபிரிக்கக் குடிகளுக்கு மனிதாபிமான உதவியாகப் பிச்சை போடுகிறது அமெரிக்க அதிகாரம்.
ஆனால்,நமது தேசத்துக்கான கர்மவினை இந்த அமெரிக்க-ஐரோப்பிய வியூகத்தில் ஆயுத விற்பனை-இந்திய மேலாதிக்கத்தைக் கண்காணித்தல்-இராணுவக் கேந்திர ஊக்கம் என்றிருக்கும்போது, அதுவே ஒரு கட்டத்தில் இலங்கைச் சிங்கள இனவாதமாகக் குண்டு காவி வரும் வான்படை நமக்குள் குண்டுகளைக் கவிழ்க்கும்போது நமது மழலைகள் குடல் தெறிக்கக் கொலையாகிப் போகின்றார்!
இதைத் தடுப்பார் எவர்?
தேசத்தை விடுவிப்போர் எவர்?
அனைத்தும் நமது மக்களின் கைகளிலேதாம் தங்கியிருக்கிறது!
எங்கள் மக்கள் சுயமாகத் தமது கால்களில் நிற்கும் போராட்டத்தை முன்னெடுக்காதவரையும் புலிகள் செய்யும் எந்தப் போரும் நம்மை விடுவிக்காது என்பதற்கு இந்தக் கால் நூற்றாண்டான புலிகளின் போராட்ட வரலாறே போதும் படிப்பனை சொல்ல.
போதுமடா சாமி,இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்!-நிறுத்துங்கோடா இந்தச் சிங்கள வான் படையை.
ப.வி.ஸ்ரீரங்கன்.
23.02.2008
Keine Kommentare:
Kommentar veröffentlichen