Montag, Mai 05, 2008

இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.

யுத்தத்தை நிறுத்து,
அப்பாவி மக்களை வாழவிடு!


அன்பு வாசகர்களே,வணக்கம்.தமிழ்மணமும் இப்படிக் காலைவாரிவிட்டது!வாசகர்கள்தம்மைத் தமிழ்மணம் தனது முகப்பின் விசாலாத்தாலேயேதாம் கவர்ந்திழுத்தது.கடந்தகாலத்தில் தமிழ் வெளித் திரட்டியைவிடத் தமிழ் மணத்தையேதாம் நாம் அதிகமாக மேய்ந்துள்ளோம்.இப்போது தமிழ்வெளியின் முகப்பையொத்த தமிழ்மணத்தின் முகப்பு மனதைக் கவர்வதில்லை.அது மிக அமைதியாக-உள்ளிழுக்கப்பட்டவொரு தளமாகவே காட்சிப்படுகிறது.இது நாளாவட்டத்தில் தமிழ்மணத்தைவிட்டோடி வேறுதிரட்டியை வாசிக்க வைக்கும்.முகப்பின் விசாலமும்,அது தரும் பல் முனைப் பரிணாமமுமே அதன் வெற்றியின் இரகசியமாக இருந்தது.இப்போது, தமிழ் மணத்துக்கு மங்கு சனி.இது, நிற்கட்டும்.


வாசகர்களே,மீளவும் ஒரு அரசியல் கட்டுரைக்குள் உங்களை அழைக்கிறேன்!


எமது வாழ்வும் சாவும் யுத்தத்தின் உந்துதலால் தீர்மானிக்கப்பட்டு நாம் நாடோடிகளானோம்!நம்மில் பலர் ஈழத்தேசத்தின் போரோடு ஏதோவொரு முறையில் சம்பந்தப்பட்டேயுள்ளோம்.இலங்கையைவிட்டு நாடுதாண்டி அஞ்ஞானவாசம் புரியும் நம்மில்பலருக்கு ஈழப்போராட்டத்தின் இருண்ட பக்கங்கள்மீதான பாரிய அழுத்தமும்,அருவருப்பும் உண்டு.நம்மைப் பலியெடுத்த அதன் பக்கங்கள் சொல்லிமாளா.ஈழப்போராட்டமென்று ஆரம்பமான காலத்திலிருந்து நமக்குள் மிக நேர்த்தியாக அந்நியச் செல்வாக்குத் தனது ஆதிகத்தைச் செலுத்தத் தொடங்கியது.இதில் முதன்மையான தேசம் நமது மூதாதையரின் தாயகமான இந்தியாவென்பது நமக்குக் கசப்பான உண்மையாகவுள்ளது.நாம் அகதியாகவும்,நமது உறவுகள் உயிரை உடமையை இழக்கவும் மூலகாரணமான தேசம் இந்தியாவென்பது கசப்பான உண்மையாகும்.இந்தியவில்லாமல் இலங்கையில் ஆயுதக்குழுக்கள் தோன்றி அராஜகமான ஆயுதக் குழுக்களாக உருவாகி இருக்கமுடியாது.படிப்படியாக மக்கள் மத்தியில் வேலை செய்து பரிணாம வளர்ச்சியுற்று ஆயுதப்போராட்டமாக வளர்ந்து புரட்சிகரமான இலங்கையை முன்நிபந்தனையாக ஏற்றுப் போராடவேண்டிய இயக்கங்களைத் திடீரென ஊதிப்பெருக்கவைத்தது இந்தியா.தேவையற்ற சூழலில் தேவைக்கதிகமான ஆயுதங்களை வழங்கி இயக்கங்களின் செயற்பாட்டை மிக விரிவாகச் செயற்பட வைத்துக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியைத் தடுத்துத் தமது ஆதரவில் தங்க வைத்துக் கலகம் நடாத்திப் படுகொலைகளையும், பம்மாத்து அரசியலையும் ஈழப்போராட்ட அமைப்புகுள் நிலவும்படி செய்த இந்திய வல்லாதிக்கம் இன்றைய அவல நிலைகளை செய்த முதற்தரமான குற்வாளித்தேசமாக நம்முன் நிற்கிறது.இந்தியாவெனும் தேசத்தின் உந்துதல் இல்லாமல் இதுவரையான இலங்கைப் போர் நிலவமுடியாது.




இலங்கையின் இனமுரண்பாடென்பது மிகமிகத் தந்திரமாக-நுணுக்கமாக மேல் நிலைக்கு உந்தப்பட்டு இலங்கைச் சமூகப் பொருளாதார வளர்ச்சிமுதல் அந்தத் தேசத்தினது இறைமையையும், குடிகளில் உயிர்வாழ்வையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய உலக நலன்கள் இன்றும் மிகப்பெரும் எடுப்பிலான ஆயுதச் சாகசப்போரைத் திட்டமிட்டு நகர்த்திச் செல்கிறது.இதைத் தமிழ் மக்கள் தரப்பில் தமிழ்பேசும் மக்களுக்கு தேசத்தை உருவாக்கும் போராகவும், சிங்களத்தரப்பில் தேசத்தை-தேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவுமான போராக இலங்கை-ஈழ ஆளும்வர்க்கங்கள் திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரஞ்செய்து, அப்பாவி ஏழை மக்களின் குழந்தைகளைப் யுத்தத்தில் பலிகொடுக்கிறது.இந்தப் பலியாட்டத்தில் பங்குபற்றி அரசியல்-பொருளாதார நலன்களை அடைய முனையும் அன்னியதேசங்கள் நமது மக்களைக் கொன்றழிப்பதை இனியும் பொருட்படுத்தாது,யுத்தமென்பது அழிந்த தேசத்தை நிர்மாணிப்பதற்கானதென எவரும் கருதிக்கொள்வதற்கானவொரு மன நிலையைத் திட்டமிட்டுப் பிரச்சார ஊடகங்கள் செய்து வருகின்றன.இவை தத்தம் சார்பு நிலைக்கொப்ப யுத்தத்தைக் கொள்முதல்செய்து அவற்றை மக்கள் மத்தியில் "தேசத்தை"நிர்மாணிப்பதற்கானதென வர்ணக்கனவை ஏற்படுத்தி அம்மக்களின் உயிரைத் தினமும் பறிக்கிறது.தமிழ் குறுந்தேசிய வாதக் கற்பனாவாதக் கதையாடல்கள் மக்களை இதுவரையில்லாதளவுக்கு வருத்திக் கொன்றுவருகிறது.இக்கொலை குண்டுகளாலும்,பசியாலும்,பட்டுணியாலும் நிகழ்கிறது!இத்தகைய நிகழ்வினு}டாகத் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கித் தத்தமது இருப்பை நிலைப்படுத்தும் இயக்கக் கட்சி வாதங்கள் இன்னும் காட்டமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இலங்கை மக்களைக் கொல்லும்"தேசவிடுதலை",ஜனநாயகத்துக்கானபோர்,என்று இருதரப்பாலும் யுத்தம் நடாத்தப்படுகிறது.



இந்த பாழாய்ப்போன யுத்தத்தால் ஈழம் என்பது உருவாகாதென்பதும் அது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்க்கும் வடிவமுமில்லையென்று கால்நூற்றாண்டாகப் புரட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.தேசியவாதக் கோரிக்கைகளின் பின்னே பதுங்கியிருந்து தமது நலன்களைத் தக்க வைக்கும் ஆளும் வர்க்கமானது இன்றுவரை இலட்சம் மக்களை இலங்கையில் கொன்றுகுவித்துள்ளது.இது தமிழ் சிங்கள-இஸ்லாமியச் சமுதாயங்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்தபடி அவ்வின மக்கள் அனைவரையும் ஏதோவொருவடிவில் கொன்றுகுவித்து வருகிறது.இத்தகைய யுத்தின் இருப்பில் இயக்கங்களின் தலைமைகளும் இராணுவத்தின் அதியுயர் தளபதிகளும் நிறையவே சம்பாதிக்கிறர்¡கள்.அவர்கள் தமது வருமானத்தின் மிகையான திரட்சியில் இலங்கையின் இளைய தலைமுறையை அழித்துவிட முனையும் யுத்தத்தைச் செய்கிறார்கள்.இவ் யுத்தமானது மிகக் கொடூரமானது.அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்களோ அல்லது இலங்கையின் மற்றைய இன மக்களோ ஒருபோதும் சுபீட்சமானவொரு வாழ்வைப் பெற முடியாது.இது சாரம்சத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ள ஒரு எளிய உண்மையாகும்.



யுத்தம் தடுத்து நிறுத்தப்படுவதற்கானவொரு ஜனநாயகச் சூழலைத் திட்டமிட்டு மறுத்தொதுக்கிய அன்னியத் தேசங்கள் நேரடியாகவே இலங்கையின் அரசியல் நகர்வில் மூக்கை நுழைக்குமொரு சூழல் மீளவும் திரும்புகிறது.அது மேன்மேலும் யுத்தத்தைத் தூண்டித் தமது வரும்படியைத் தக்கவைப்பதுமல்லாது இலங்கையின் சுயாதிபத்தியத்தைத் திட்டமட்டுச் சிதைத்து இந்திய-மேற்குலக-ஐரோப்பியத் தேசங்களின் உற்பத்தியில் தங்கியிருக்கும் தேசமாக உருவாக்குவதில் கவனமாக இருக்கிறது.இதன் தொடர்ச்சியில் இந்தியாவே மீளவும் பல்லாயிரம் கோடியை இலங்கை யுத்தத்தில் நிதிமூலதனமாக இட்டு வியாபாரஞ் செய்கிறது.பிணங்களின்மீது ஏறிநின்று உபரித் தொகைகளை எண்ணுவதான வியாபாரமில்லை இது.மாறாக,உயிர்களின் வீழ்ச்சியில் இலங்கைத் தேசத்தின் அனைத்துச் சுபீட்சமும் வீழ்ந்து அன்னியத் தயவின்றி இலங்கை உயிர்த்திருக்க முடியாதளவு நிலைமையை முன்னெடுத்து, அன்னிய முகவர்களால் நிர்வாகிக்கப்படும் தேசமாக உருவாக்குவதற்கே இத்தகைய யுத்தம் அவசியமாகிறது.அப்படியுருவாகும் தேசத்தில் அடிமைகளைக்கொண்டு சரிந்து விழும் தமது மூலதனத்தை மேலும் உறுதிப்படுத்தி ஸ்த்திரப்படுத்தும் பொறிமுறைகளுக்கு இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.



இந்நிலையின் தொடர்ச்சியான அழுத்துங்கள் இலங்கையில் மேலும் தொடரும் யுத்தமாக உருமாற்றப்பட்டு இராணுவச் சமநிலைகள் தற்காலிகமாகவும், சமநிலையின்மை நிரந்தரமாகவும் பேணப்பட்டு இலங்கையின் இனப்போராட்டத்துள் பல் வகையான சிறியரக ஆயுதங்கள் உள்வாங்கப் படுகின்றன.இவை ஒருபோதுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட தீர்வுகள் அல்ல.இத்தகைய யுத்தின் விளைபயனானது பல்லாயிரம் மக்களையும், பல்லாயிரும்கோடி பொருள் அழிவையும் உள்வாங்கி இன்றும் பொய்யான ஒளிவட்டங்களுடே தேசத்தின் விடிவுக்கானதெனப் பரப்புரை செய்யப்பட்டு இளைஞர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வரப்படுகிறது.இத்தகையவொரு சூழலில்தாம் பேராசியர் கோ.கர்ணனின் இந்தக் கட்டுரை 04.05.2008 ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரையூடாகப் பேராசிரியர் மிக யதார்த்தமான பல கருத்துக்களை,வாதங்களை முன் வைக்கிறார். கோகர்ணனின் வாதமானது தமிழ் பேசும் மக்களினது மட்டுமல்ல முழு இலங்கைத் தேசத்தினதும் மக்கள்தம் இன்றைய எண்ணவோட்டமாகவே இருக்கிறது.அதாவது யுத்தத்தை நிறுத்தி மக்களின் நலன்களை முன்னெடுக்கும் அரசியல் தீர்வை முன்வைக்கும் ஜனநாயகத்துக்கான அறைகூவல்கள் போரின் கொடூரத்தைச் சொல்வதிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது!


இன்றைய சூழலானது இளைய தலைமுறைக்கேற்ற சூழலில்லை!இலங்கையில் விலைமதிக்கமுடியாத இளைய தலைமுறை இக் கொடும் அநாவசியமான யுத்தத்தால் பட்டுணிச் சாவை எதிர்கொள்ளும் அவல நிலையிலும் போர் பெரும் ஆர்வத்தோடு இரு தரப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது.இலங்கையில் கொத்துக்கொத்தாக மக்கள்செத்த சுனாமியழிவைக்கண்டே அச்சமற்றுப் பெரும் போர் முனைப்போடு செயலூக்கமாகப் முன்னிறுத்தப்படுவதாக இருக்கும்போது, இலங்கையின் ஆட்சியாளர்கள்,ஈழத்தின் விடுதலையெனும் புலிகளின் அறைகூவல்கள் யாவும் மக்களை வருத்தும் கபடத்தனமான அரசியல் சூதாட்டத்தோடு சம்பந்தமுடையது.இத்தகையவொரு அவலத்தை இனியும் அனுமதிக்க முடியாதவொரு மனத்தின் பொது எண்ணவோட்டமாகப் பேராசியர் கோகர்ணின் இக்கட்டுரை அமைகிறது.மிக அவசியமான உண்மைகளைப் பேசும் இக்கட்டுரை இலங்கை மக்களின் முழுமொத்த எண்ணவோட்டத்தையும் பிரதிபலிக்கிறதென்பது மிகவும் உண்மையானதாகும்.


வாசகர்களே இக்கட்டுரையை வாசித்து,அதன் உள்ளார்ந்த அதிமானுடத்தன்மையை உணர்ந்து யுத்துத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலங்கையில் அன்னியத் தயவோடு நடந்தேறும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தும் பாரிய மனித ஒற்றுமையை ஏற்படுத்தி, யுத்தத்துக்குச் சாவுமணியடிப்போம்.இலங்கையில் சபீட்சமானவொரு வாழ்வை இலங்கையின் பல்லின மக்களுக்கும் பொதுவானதாக்கும் புரட்சியை முன் நிபந்தனையாக்கி மக்களை விடுவிப்போம்.


நன்றி.

அன்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.


05.05.2008




மறுபக்கம்:


எமக்கு வேண்டாதவர்கட்கு ஏதேன் கெடுதல் நடந்தால் நம்மிற் சிலருக்கேனும் அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. "தனக்கு மூக்கறுத்தாலும் எதிரிக்குச் சகுணப் பிழை" என்கிற மனநிலை இது. எதிரியே ஆனாலும் எதிரிக்கு ஏற்படுகிற எல்லாக் கெடுதலும் எங்களுக்கு நன்மையாகி விடாது.
எதிரிக்கு ஏற்படுகின்ற கெடுதல் யாரால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பன பற்றி நாம் யோசிக்க வேண்டும். எதிரிக்கு எதிரி எப்போதும் நண்பனல்ல. ஏனென்றால் மனித உறவுகளும், சமூக உறவுகளும் ஒரே நேர்கோட்டில் வைக்க கூடியவையும் அல்ல. நட்பும் பகையும் என்று வெட்டொன்று துண்டிரண்டாக வகுக்கக் கூடியவையும் அல்ல. எதிரிக்கு எதிரி எங்களுக்கு எல்லாரிலும் பெரிய எதிரியாகவும் இருக்க இயலும்.



இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போரால் தீர்க்க இயலாததது
என்பது இப்போதைக்கேனும் எல்லாருக்கும் விளங்க வேண்டும். ஆனாலும் போர் தொடருகிறது.
போரை யாரும் வெல்ல இயலாது என்றும் பல முறை சொல்லப்பட்டுப் பெரும்பாலானோரால்
எப்போதாவது ஏற்கப்பட்டுள்ளது. போரில் தமது தரப்பு இழப்புக்களைச் சந்திக்கிற போது
இந்த விதமான ஞானம் வருகிற சிலருக்கு நிலைமைகள் தமக்குச் சாதகமாக மாறுகிற போது போரை
வெல்லலாம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
"போரில் யாரும் வெல்ல முடியாது" என்று சொல்லப்படுகிற போது பலர் எதிரியால் வெல்ல முடியாது என்ற கருத்திலேயே அதை விளங்கிக் கொள்கிறார்கள்.


கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தின் பாடங்களை எமது தலைமைகளும், ஊடகங்களும் பெருமளவு மறந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது. அது மட்டுமன்றித் தங்களைப் போரியல் நிபுணர்களாகவும் அரசியல் ஆய்வு நிபுணர்களாகவும் காட்டிக் கொள்ளுகிறவர்கள் தங்களது கட்டுரைகளிற் தமது முற்சாய்வுகட்கு வசதியான விதமாகவே தகவல்களைத் தெரிவு செய்கின்றனர். சிலர் தகவல்கள் என்ற பேரில் ஊகங்களையே முன் வைக்கின்றனர். இவ்வாறான திரிப்புக்கள் எந்த மக்களின் நலன் கருதிக் கட்டுரைகள் எழுதப்படுவதாகப் பாவனை செய்யப்படுகிறதோ அதே மக்களை ஏய்த்து முடிவில் அவர்களை விரக்திக்குள் தள்ளிவிடுகின்றன.


இது அரசாங்கத்தரப்பிலும் நடக்கிறது. விடுதலைப் போரட்டத்தின்
சார்பாகவும் நடக்கிறது
இருதரப்பிலும் மக்கள் அறிய வேண்டிய பல உண்மைகளில் ஒரு
சிறு பகுதியேனும் மக்களுக்கு சொல்லப்பட்டிருந்தால் இன்று மக்கள் மத்தியிலிருந்து
இன, மொழி, மத வேறுபாடு கடந்த அமைதிக்கான ஒரு வெகுசன இயக்கம் வலுவுடன் இயங்கிக்
கொண்டிருக்கும். அல்லது இன்று அத்தகைய ஒரு இயக்கத்திற்கு தேவையில்லாமலே
போயிருக்கலாம்.


எனினும் நமது செய்திகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? பழிக்குப் பழி, உயிருக்கு உயிர் என்கிற விதமாகவே போர்ச் செய்திகள் வழங்கப்படுகின்றன. லட்சக் கணக்கானோரை பட்டினிக்குட்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைத்துக் கொண்டிருக்கிற போரை எவ்வாறு தமது ஊடகங்கள் சித்திரிக்கின்றன? போரால் முழு நாடுஞ் சிதைவதுபற்றிய கவலையை விட எதிரிகளில் நாலு பேர் மோதலிற் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிற மகிழ்ச்சி பெரிது. நாட்டையும் போரையும் இப்படிப் பார்க்கிற விதமாக மக்களைப் இனவாத வெறுப்பில் அடிப்படையிலேயே பழக்கப்படுத்திய பிறகு அதற்கேற்ற விதமாக எழுதுவதும் பேசுவதும் காட்டுவதும் வணிக நோக்கில் நியாயப்படுத்தப்படுகின்றன.


தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, நிலையான அமைதி என்பன பற்றி முன்னுக்குப் பின் முரணான சிந்தனைகளே முன்வைக்கப்படுகின்றன. வரலாறு பற்றியோ சமகால உலக நிகழ்வுகள் பற்றியோ சரிசரியான புரிதல் கூட இல்லாமாலேயே எல்லாத் தரப்பிலும் ஆய்வுகள் பல நடக்கின்றன.
பலஸ்தீனம், இஸ்ரேல், கொ சோவோ, பங்களாதேஷ்,திபெத், தாய்வான், காஷ்மீர், நேபாளம், தென்னாபிரிக்கா என்று பல விடயங்களில் "ஞானி நிலவைச் சுட்டிக்காட்டினால் மூடன் சுட்டுவிரலைப்" பார்பான் என்கிற விதமாக அடிப்படை உண்மையைத் தவிர்த்து மேலோட்டமாகத் தெரிகிறவற்றை வைத்து குழப்பமான முடிவுகட்கு வருகிறது அறியாமையால் மட்டும் அல்ல. தற்செயலான ஞாபக மறதியால் முக்கியமான உண்மைகள் மறக்கபடுவதில்லை. தமது வசதி கருதியே அவற்றை அவர்கள் புறக்கணிக்கின்றனர். அது நித்திரை அல்ல, பாசாங்கு.


சோவியத் ஒன்றியத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாகப் பிரிந்து
போதும் உரிமையுடன் கூடிய குடி அரசுகள் இணைந்து இருந்தன. ரஷ்யச் பேரரசின் கீழ்க்
கடுமையாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அவ்வாறான குடி அரசுகளையோ சுயாட்சிகளையோ
கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் சோஷலிஸம் விழுத்தப்பட்டதில் சோஷலிஸத்
கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகட்குப் பெரும் பங்குண்டு. அதே வேளை, அமெரிக்கா,
ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கூட்டணியின் குழிபறிப்பு வேலைகளும் முக்கியமான பங்காற்றின.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வேண்டியது சோவியத் ஒன்றியத்தில் சோஷலிஸத்தின் முடிவு
மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம் என்கிற வலுவான ஒரு அமைப்பை இல்லாதொழிப்பதும் அதன்
தேவையாக இருந்தது.
கொர்பச்சொவைவிட யெல்ற்ஸின் தலைமை அதற்கு வசதியாக இருந்தது. யெல்ற்ஸினுக்கு பின்பு ரஷ்யா மீளவும் எழுச்சிபெற்று வருகிறது. பொருளாதாரத்துறையில் முக்கியமான சில பகுதிளில் அரச கட்டுப்பாட்டை மறுபடி இறுக்கமாக்கி கொண்டதாலேயே ரஷ்யாவின் அரசு வலிமையுடன் அந்நிய ஊடுருவலை எதிர்த்துநிற்க முடிகிறது. சீனாவில் சோஷலிஸத்தால் உயிர் பெற்ற ஒரு உற்பத்தித்தளத்தின் மீது முதலாளித்துவம் கட்டியெழுப்பப்பட்டுவருகிறது. சீனாவில் அமெரிக்க அக்கறை ஜனநாயகமின்மையோ மனித உரிமை மீறல்களோ பற்றியதல்ல. சீனா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு, ஆசியாவில் மட்டுமின்றி, மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலும் சவாலாக உள்ளது.


அதனாலேயே தாய்வானை நிரந்தரமாகவே பிரிக்கவும், திபெத்தில் பிரிவினையை ஊக்குவிக்கவும், வங்கூர் இனத்தவர் உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே கிளர்ச்சிகளை மூட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பிரித்தானிய ஆட்சியால் சீனாவில் தனது இறுதித் தளமான ஹொங்கொங்கை இழந்ததை இன்னமும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறான விடயங்களைப் புறக்கணித்து, இவற்றைவிட முக்கியமாக ஏற்கனவே பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சோவியத் அரசுகளைப் பிரிந்து போகத்தூண்டியது போல பூரண சுயாட்சிகளையும், சுயாட்சிப் பிரதேசங்களையும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஏன் உடைத்தெடுத்தது என்று யோசியாமல், கொசோவோவை முன்னுதாரணமாக்கச் சிலர் முற்படுவது ஏன்? திபெத்தில் தலாய்லாமா மூலம் அமெரிக்கா செய்யவேண்டுவது என்ன என்று ஆராயாமல், திபெத் கலவரங்களைத் தூண்டிவிட்டோர் யார் என்று ஆராயாமல், தலாய்லாமாவை ஒரு மனிதாபிமான சமூக விடுதலைப்போராளியாகச் சிலர் சித்திரிப்பது ஏன்?


பலஸ்தீனம் பற்றி தலாய்லாமாவின் நிலைப்பாடென்ன? காஷ்மிர் பற்றிய அவரது நிலைப்பாடென்ன? அவையெல்லாம் போக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அவரது நிலைப்பாடென்ன? மூர்க்கத்தனமான இடதுசாரி எதிர்ப்பும் அதன் தொடர்ச்சியாகச் சீன எதிர்ப்பும் தமிழ்த் தேசியவாதத்தை இன்னமும் பீடித்துள்ளன. குறுட்டுத்தனமான சிந்திய விசுவாசம், நன்கு பட்டுத் தெளிந்தும் பார்த்துத் தெரிய வேண்டியும், கண்முன் உள்ள உண்மைகளை மறைக்கிறது. அமெரிக்கா மீதும் ஐரோப்பிய நாடுகள் மீதும் நம்பிக்கைக்கான ஒவ்வொரு நியாயமும் காற்றோடு போன பின்பும் சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தண்டிக்கும் என்ற ஆசையில் தமிழ் தேசியவாதிகள் பலரும் உள்ளனர்.
சோனியா காந்தியை இன்னொரு "மஹாத்மா காந்தி" என்று சொல்லக்கூடிய
அளவுக்குச் சிலரது எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துள்ளன. அவரது மகள் பிரியங்கா ராஜிவ்
காந்தி கொலை தொடர்பாகச் சிறையிலுள்ள நளினியைச் சந்தித்ததற்கு மனிதாபிமான
விளக்கங்களை ஒருசாரார் அள்ளி வழங்குகையில், இன்னொரு சாரார் அதில் ஈழத் தமிழருக்கும்
(இயலுமென்றால்) விடுதலைப் புலிகட்கும் சாதகமான காய் நகர்த்தல்களை துருவித்துருவி
தேடுகிறார்கள். பிரியங்கா - நளினி சந்திப்புக்கு தமிழ்த் திரையுலகக் கோமாளிகள்
சிலர் உட்பட யார்யாரோ எல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள்.


மேற்படி சந்திப்புக்கு மனிதாபிமானம் காரணமென்றால் அது பத்து ஆண்டுகள் முன்பே கூட நடந்திருக்கலாம். அது ஒரு சின்ன அரசியற் காய் நகர்த்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் வரவுள்ள மாநிலசபைத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதனுடன் தொடர்பு உண்டு. தமிழக காங்கிரஸ் தனது தீவிர விடுதலைப்புலி எதிர்ப்புக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் உள்ள அக்கறையீனத்துக்குமிடையே உள்ள உறவைக் கையாள முடியாமல் திணறுகிற சூழ்நிலையில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில சங்கடங்களைத் தீர்க்கவும் இச் சந்திப்பு உதவும்.


இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச காய் நகர்த்தல்களின் காரணங்களை அறியாமற் சில கனவுகள் வளர்க்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து மூட நம்பிக்கைகளைப் போல, கொசோவோ போல சில நிகழ்வுகள் நல்ல சகுனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை அரசிற்கு எதிரான இன்றைய நகர்வு எதுவும் இன்றைய ஆட்சிக்கு எதிரானதாய் இருக்குமே ஒழிய இன்னொரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிரானதாய் இராது. அது இனஒடுக்கலுக்கு முடிவுகட்டக்கூடியது என்றால், பலஸ்தீன மக்கள் எப்போதோ தமது விடுதலையை வென்றிருப்பர். ஏகாதிபத்திய நோக்கங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் மூட நம்பிக்கைகள் வழிநடத்த இயலாது.


இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப்பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்குமுறைக்கே இட்டுச்செல்லும்.


http://www.thinakkural.com/news/2008/5/4/sunday/marupakkam.htm

Keine Kommentare: