Freitag, Juni 13, 2008

இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம்

சமூக மனிதர்கள்!


"நேர்மையாய் வாழவேண்டுமாயின்
வதைபடுதலும்,
குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும்
எந்நேரமும்
போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும்
இன்றியமையாதவை..."-டோல்ஸ்டோய்.


நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி...
என்னதாம் நமது பிரச்சினை?

எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா?
எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது?

மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் சேர்ந்த செல்வமானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்குமுன் சேர்ந்த செல்வத்தைவிட, 23 பங்கு அதிகமாகச் செல்வம் சேர்ந்துள்ளது இன்று.எனினும் அன்று கட்டிய கட்டங்களை,சமூகச் சொத்துக்களை மறுசீரமைக்கக்கூட இன்றைய அரசுகளால் முடிவதில்லை.அப்போ சேர்ந்த செல்வமெல்லாம் எங்கே?

தமிழ் மக்களுக்கு எதற்காக யுத்தம் அவசியமாகிறது?

போரின்மூலம் நமக்கு எது வந்து சேருவதாகச் சொல்கிறார்கள்?

தமிழீழம் என்ற தனியரசானது தமிழ்பேசும் மக்களின் உழைப்பை நியாயமாகப்; பங்கிட்டும்,அவர்களது வாழ்வை எந்த வகையிலும் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் நிச்சியம் உண்டா?இதைவிட இத்தகைய அரசு சாத்தியமானதா? நாம் எந்தத் தளத்திலிருந்து கருத்தாடுகிறோமென்பதை எல்லோரும் அறிந்தோமா?

தனி நபர்களை வழிபடுவதும்-தூற்றுவதம் அற்புதமான மனித- தேசப்பண்பல்ல.எனவே மீளவும் கேட்போம்:
எதற்காக யுத்தம்?

எதற்காப் பேச்சுவார்தை?

எதன்பொருட்டுச் சமாதானம்?

உழைத்தோய்ந்து வீடுமீளும் நம் கனவுகளுக்கெட்டாதபடி உலகத்தில் நிகழ்வுகள் நடந்து முடிகின்றன!நாம் காணும் உலகானது நமது கற்பனைகளுக்கெட்டமுடியாதவொரு திசையில் நகர்ந்தபடி.எத்தனையோ சிக்கல் நிறைந்த புனைவுகளால் இந்த உலகத்தை நாம் எதிர்கொள்வதாக இருக்கிறது.அந்தச் சிக்லை "உற்பத்தி,உபரி"-உழைப்பு,உழைப்புச் சக்திகள்"எனும் பொறிமுறைகளே உருவாக்கின்றன.மனித உழைப்பின் திறனே உபரியாகி அந்த உழைப்பை நாறிடிக்கின்ற சிக்கலில் நாமெல்லோரும் நலிந்து போகின்றோம்.இந்த நலிவானது உபரியின் திரட்சியில் பலரைப் பட்டுணிச் சாவுக்குள் தள்ளிச் சிலரைப் பிரபுக்களாக்கின்றபோது அங்கோ அந்தப் பிரபுக்களே நமது வாழ்வைத்தீர்மானிக்கின்றார்கள்.

இவர்களின் இருப்பில் நமக்கென்றொரு நிறுவனப்பட்ட சமூக இயக்கம் சாத்தியமாகிறது.அது கிரமமாக நமது உழைப்பைத்திருட வெளிக்கிடுகின்றபோது அங்கே பல கூறுகளாகச் சமுதாயக்கட்டுமானங்கள் எழுகின்றன:


இந்த நிலையில் ஒரு மனிதர் தாம் கொண்டுணரும் அறிவானது திட்டமிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிவென்பதை முதலில் உணர்தல் அவசியமாகிறது.அங்ஙனம் உணர்ராதவரை தான் சார்ந்துகொள்வதும் அதனு}டாகத் தனது நகர்வை அத்தகைய சார்பு நிலைக்குள் அடைவு வைத்தலும் நிகழ்கிறது.இங்கேதாம் நமது உருவாக்கம் அவசியமாகிறது!

நாம் யார்?

நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்துப் இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால் நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை ஒரு பொருளியல் மாணவர் வெகு இலகுவாகக் கண்டடைவார்.

இந்தவகைப்பட்ட இனக் குழுவிடம் உயரிய மனிதவுருவாக்கம் நிகழ்வது கிடையாது.அதன் கொள்ளளவு மிகக் குறுகியது.வரைபடத்தில் குறிப்பிட்டபடி பொருளாதார,நுட்ப,சமூக கலாச்சாரக் கட்டுமானமானம் தீர்மானிக்கின்ற சமூக இயக்கமானது அதன் முகிழ்ப்பு நிலையிலிருந்து விடுபடப்போகும் படிமுறை வளர்ச்சியை வெறும் "விசும்பு"நிலைக்குள்ளேயே மட்டுப்படுத்துகிறது.இதன் தாக்கமானது நமது சமுதாயத்தின் மனிதவுருவாக்கத்தில் பாரிய தாக்கம் செய்கிறது.இந்தவொரு இக்கட்டான மந்தப்போக்கானது ஈழத்து அரசியல் முன்னெடுப்பில் அறிவுபூர்வமான விரிந்த சமூகப் பார்வையை கோரமுடியாது சிறுமைப்பட்டுக் கிடப்பதனால் பல வகைப்பட்ட அராஜக இயக்க சாகசங்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது.இந்தவொரு நிகழ்வூக்கமானது நமது அன்றாட சமூக வாழ்வை மிக நெருக்கடிக்குள் தள்ளி சுமூகமானவொரு ஜனநாயகச்சூழலைச் சுவாசிக்காதவொரு இனமாக நம்மை புறத்தியாருக்குக் காட்டிக் கொள்கிறது.இந்தவொரு சமூக யதார்த்தமானது நமது பண்பாட்டுத் தளத்தில்,கல்வியில் பாரிய தாக்கஞ் செய்வதைத்தாம் நாம் வரை படுத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.

இது தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!

பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.

நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.

புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிஅரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: