Freitag, Juli 18, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்:(3)

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.

"இன்றைய பொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்

ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை."

டி.ஜே.தமிழனின் கவிதைகளைக் கவிதையென்றழைக்க மனதுக்கு முடியவில்லை-அது வாழ்வு.ஒரு பொழுதேனும் நாம் துய்க்கக் காத்திருக்கும் சாந்த வாழ்வை-தோழமையை-நெருக்கத்தை உணர்வது ஒரு தவ நிலை.எங்குமே அநுபவித்திருக்கமுடியாத மனிதக் கனவைக் கொண்டியங்கும் இளங்கோவின் மொழியைக் குறித்துக் "கவிதை-உணர்வு நறுக்கு-அநுபவம்-வாழ்வு" என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்.ஆனால்,எதுவுமே இந்த இயங்கு நிலையைச் சரியாகப் பொருட்படுத்துவதாக நான் உணரவில்லை.

மரபுசார்ந்த கவிதை என்ற வடிவத்துக்குள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் தர்ம நியாயங்கள் பல.மரபுக் கவிதையென்றும்,புதுக் கவிதையென்றும் இன்னும் பி.ந.கவிதையென்றும் தொடரும் மெத்தப்படித்தவர்களின் புரட்டு வித்தகத் துண்டுகளின் பின்னே, குறும்பா-கைக்கூ என்று தொட்டுக்கொண்ட இந்தக் கவிதை இன்று உவமையிழந்த அநாதையாகப் பல வடிவில்.

"உவமையும் பொருளும் தம்முள் ஒத்தன என்று உலகம் அறிந்து ஒப்புமாறு உவமை அமையவேண்டும்"-இல்லையா?

மிக நெருக்கமாக உவமையணியைத் தனது அநுபவத்துக்குள் நுழைத்துக் கவிதை சொல்ல இளங்கோவால் முடிகிறதே."யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒற்றைவரியில் உயிர்த்திருக்கும் கணியன்"என்று மிகச் சாதாரணமாகச் சில உண்மைகளை உவமையாக்கி வைக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்றைய மனித அவஸ்த்தையில் இந்த வடிவம் எப்போதோ செத்தழிந்துவிட்டது.கவிதை அநுபவமான காலத்தில் தேவராம்,திருவாசகம் என்னைப் பாதித்தது.பின்னாளில் கம்பனது கவிதை மொழி பிடித்துக்கொண்டது.ஆனால்,

"இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு-தன் கீழ் நின்று"

என்று, மனிதம் செறிந்த மணிமேகலை என்றோ அறிமுகமாச்சோ-அன்றிலிருந்து இன்றுவரையும் எனது மனதில் பற்பல ஒளிக் கோலங்களை சாத்தனார் காவியம் ஏற்படுத்திக்கொண்டேதாம் இருக்கிறது.

எளிமை
மனித அழகு
எவரையும் ஒழுங்குபடுத்தமுடியமெனும் நம்பிக்கை
மொழியின் ஆளுமை
இலக்கணக் கட்டு
இடரேயில்லாத உவமைகள்
உருவகம்
உள்ளுறை
இறைச்சி...என்றெத்தனையோ அணிகள்கொண்டு சாத்தனார் என்னைப்படுத்திய பாடு மிகநேர்த்தியானது.


மணிமேகலைக்கான பதிகம்-முன்னுரையே சம்பு என்பவள்,கதிர்களைக்கொண்ட இள ஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடையவள் எனும் எதிர்மறையானவொரு உவமையாக எடுதாளப்பட்டு,எழில் மிகு மேரு மலையின் உச்சியில் தோன்றுவதுமாகவும்,பின்பு தென் திசை வந்து (நாவலந்) தீவின் காவற் தெய்வமாக விளங்குகிறாள் என்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த மணிமேகலைப் பதிகம் உண்மையில் எனக்குள்"ஒளியாக-அறிவுறும் ஒரு தியான நிலை"என்பதாகவே அநுபவமாகிறது.இது அறிதலை உவமையாக்கிற ஒரு பண்பைக் கொண்டியங்குகிறது.சம்பு ஒரு பெண்ணாக-தெய்வமாகக் காட்டப்படினும்,எனது கணிப்பின்படி அவள் அறிதலின் படி நிலைகளைக் கொண்ட சிந்தனையாகவே இருக்கிறது.

இந்த நிலைக்குள்ளே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படைப்பு என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தும் வித்தக நிலையை நான் மறுத்துவிடுவதால்,கவிதை என்பதை நீங்க வைத்து "உணர்வினைச் சிதைக்கும் மொழிக்கு"கவிதை வடிவம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.இதன்மீது கட்டிவைத்துக் கதைவிடும்"யாப்பு இலக்கணம்"பண்டிதர்களின் பல்லாக்காகவே எனக்குப்படுகிறது.நான் உணர்வதைச் சொல்ல முடியாத மொழிக்கு பட்டுக் குஞ்சம் வைத்துப் பல்லாங்கு பாடும்போது அங்கு "யாப்பு இலக்கணம்"இருக்கலாம்.ஆனால்,மனித வாழ்வு-அதன் அநுபவம்,சிந்தனை இருப்பதாக எவருஞ் சொல்ல முடியாது!

இந்த மணிமேகலை சந்தங்களாக விரிகின்றதும்,யாப்புக்குள் அமைய வருடிய எளிய மொழியைக் கொண்டிருப்பதும் ஒரு புதிய வகையிலான மரபோடு(மனித அழகைப் பிரதானப்படுத்தும் மொழி)விரிவதும் இலக்கியச் சிறப்பில்லை.மாறாக,மனிதம் நிறைந்தது என்றே நான் சொல்வேன்.

இப்போது இளங்கோவிடம் வருவோம்.அதாவது,நாடற்றவனின் குறிப்புச் சொன்ன இளங்கோவைச் சொல்கிறேன்-நீங்கள் சிலம்புக்காரனை எண்ணிக்கொள்ள வேண்டாம்.மனிதம் நிறைந்த அநுபவங்களாகவேதாம் டி.ஜே.யின் உணர்வினது மொழிகள் நம்மோடு ஒலிக்கின்றன.மிக எளிமையான மொழி.ஆனால்,இறுகிய வார்த்தைகள்.மிகத் தாரளமற்ற மிகச் சுருங்கிய சொற்களைக்கொண்டு உணர்வதைக் குறித்திருக்கும் பண்பு இளங்கோவின் வாழ்வுக்குள் சிக்குண்டுள்ளது.

ஈழத்துக் கதையாளர்களை-கவிதையாளர்களை மிகச் சமீபத்தில் வைத்து வாசிக்கும்போது,அவர்களிடத்தில் விருத்தியாகி வந்த பாண்டித்தியக் காய்ச்சல் இந்த இளங்கோவிடம் அறவே இல்லாது போகிறது.உணர்வை மொழிக்குள்ளிருந்து விடுவிக்கும் நீண்ட போராட்டத்தில் இளங்கோ மெல்ல இணைகிறார்.முடிந்தவரை எகிறித் தவிக்கும் உணர்வைத் தான் கொண்டியங்கும் மொழிக்குள்ளிருந்து பிரித்தெடுத்துத் தந்ததே டி.ஜே.யின் சிறப்பு.

இந்தச் சிறப்புக்கான உதாரணமாக "இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்" எனும் நறுக்கை எடுத்தால் பொருந்தும்.

"செம்மஞ்சளாய்
இலைகள் உதிர்ந்து கொண்டிருந்த பருவத்தில்
முன்பொரு முறையும் சென்றிராத
சிறு தீவுக்குப் பயணித்திருந்தேன்

ஒரு மதுபான விடுதியின்
இருட்டு மூலையில்
என் கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்

திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்

வாரமொன்று கழிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த தேக்கமிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத் துயரை
காவிச் செல்கிறது

இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


இலகுவானவொரு மொழியுள் தேக்கி வைத்திருக்கும் மிக நேர்த்தியான மனிதமொழியை பிரித்தெடுத்து நான் சிதைக்கின்ற வேலைக்குள் வதைபடுவதற்கு இந்த அநுபவம் என்னை இதுவரை துரத்துகிறது- முடியவில்லை.அன்பு-நட்பு என்பது மிக உண்மையான மனித நிலை.இந்த உண்மை என்பதை பொதுப்புத்தியுள் திணித்து எவரும் விளங்க முற்படுமிடத்து எனது உண்மை உண்மையில்லை.எனக்கு நண்பர்கள் எவருமில்லை.தெரிந்தவர்கள்-பழக்கமுள்ளவர்கள் உண்டு.நட்பு-நண்பர் என்பதை நான் வடிவத்துள் அடக்கங்கண்ட அர்த்தப்பாட்டோடு சொல்வதில்லை.அத்தகையது நட்புத்தாமா என்று நான் எனக்குள் கேட்டு வைப்பதுண்டு.

மேலே இளங்கே மனித உணர்வினது உச்சமான நட்பு நிலை-அன்பு நிலை-பாசம் குறித்து உணர்வதை வெளிப்படுத்துகிறார்.சிக்கமன் பொறைட்டின் உளவியற் பகுப்பாய்வைக்கடந்து ஆய்வற்ற-அறமற்ற மனிதப் பொது நிலைக்குள் நான் சஞ்சரிக்கிறேன்.அங்கே,எனக்காகக் கட்டிவைத்துள்ள இந்தப் பாசத்துக்குள் எந்த "ஆய்வும்"வந்து குடுமியில் பிடித்து அர்த்தஞ் சொல்ல முனைதல் என்னையும்,எனது மனிதக் குணத்தையும் கொச்சைப்படுத்துவதை அந்த நவீனத்துவம்-இந்த நவீனத்துவம் என்பதையோ அல்லது யதார்த்தவாதம்-ரியலிசம் என்றதைப் புனித்தப்படுத்தும் நோக்கங்கட்கமைய விளக்க முற்படுவதையோ எனது அநுபவம் மறத்தொதுக்கிறது.ஒரு தொகுப்புக்குள் அநுபவமான வாழ்வைக் கவிஞனது உள்ளத்தைக் கண்டு வாழ முற்படுவதே எனது குறிப்பின் நோக்கம்.

என்னைப் பொறுத்தவரை மெய்ப்பாடு என்பது உடம்பினது வழியாக(அடிக்காதீர்கள்.அது புலன்களின் வழியாகவென்று வித்துவான்கள் சொல்வார்கள்)உணர்ச்சியை-அநுபவத்தை-மனித நிலையை-உயிரின் தவிப்பைப் புலப்படுத்துவதாகும்.இந்த நிலையை ஒத்த இளங்கோவின் உயிரின் தவிப்பைப் பாருங்கள்:

"மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்"


பிரியத்துக்குரியவனாகும் இளங்கோ மனது துள்ளித்திரிகிறது.காடுமேடெல்லாம் இறக்கை விரிக்கும் இந்த மனதுக்கு உலகத்தின் அனைத்து எல்லைகளும்,எல்லைகள் அல்லவே.இது,


"அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது"

என்று தனக்கான புதிய தத்துவத்தைத் தனது வாழ்நிலையிலிருந்து பாடமாகக்கொள்கிறது.இதன் உலகம் மிகவும் விரிந்தது.ஒரு சிறு தருணத்தில் தன் உயிரையே வழங்கக் காத்திருக்கும் இந்த ஆற்றல்மிக்க மனித நிலை மிக உயர்ந்த நட்போடு வாழ்வைத்தினம் புதிப்பிக்கிறது.இன்றைய முட்கள் நிறைந்த நவீன அடிமைத்தனமிக்க சமூக அமைப்புள் இதுவொரு கலகக் குரலாக-உயிராக இந்த மனித சமுதாயத்தின் அடித் தளத்திலே ஊற்றெடுத்தபடி நம்மையெல்லாம் வியாபிக்க, நமக்குள் அண்மிக்கிறது புதிய வேதம்.தோழமையின் உயிர்த்திருப்புக் காமத்தோடு கைகுலுக்கும்-வீரத்தோடும் கை குலுக்கும்.இதுதான் பொருள்வாழ்வில் நமக்கு அநுபவமானது.ஆனால்,இதைக் கடந்தவொரு உலகம் உயிரின் தவிப்பில் உலாவருகிறது.இதுதான் மோன நிலை-தியான நிலை என்றெல்லாம் முற்றும் துறந்தவர்கள் சொல்வார்கள்.இந்த முற்றையும் திறக்காத என் பரதேசி நிலையுள் இது வாழும் ஆசை என்றாக விரியும்.இந்த ஆசை தன்னைச் சுற்றிய பெளதிக உலகத்தைப் புரிவதிலும்-நேசிப்பதிலும் தன் மோனத் தவதைக் குவிக்கிறது.அங்கே,"இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன"


என்று நான் உணரும்போது, மனிதவாழ்வு விருப்பின் அதி உச்சமான தருணம் உயிரின் ஓசையாக எனக்குள் பிரதி செய்யப்படுகிறது.இது, என்னைத் தொந்தரவும் செய்கிறது.நான் சார்ந்து வாழ்பவன்.எனக்கு மற்ற உயிரோடு கலக்கும் அவா எனது மனத்தில் சதா கசிந்தபடியேதாம் இருக்கும் .இதை மேன் மேலும் மெருகுப்படுத்தும் எதிர்ப்பால் வினை எனது மறு உற்பத்தியை நோக்கிய வரம்பில் காதற்கீதம் சொல்லும்.அது, மனிதம் தளர்ந்து சோம்பிய நிலையுள் புத்துணர்வுக்காக ஏங்கும் நிலை.இதை நானோ நீயோ தகவமைத்துத் தரவில்லை.இது இயற்கையின் கொடை.இதை இன்னொரு மாகாக் கவிஞனான கையின்றிக் கையின(Heinrich HEINE)சொல்லும் மொழியினு}டாக நான் உறுதிப்படுத்தமுடியும்.இவனும்,டி.ஜே.தமிழனும் நெருங்கி வரும் நல்லதொரு இடம் மனிதத் தவநிலையாக இருக்கிறது.இருவரது பாடலும் ஒரு சமாந்திரமான மனிதத் தேர்வை நோக்கிச் செல்கின்றன.


Drei und Dreissig Gedichte

(Die Loreley)

Ich weiss nicht,was soll es bedeuten,
Dass ich so traurig bin;
Ein Maerchen aus alten Zeiten,
Das kommt mir nicht aus dem Sinn.

Die Luft ist kuehl und es dunkel,
Und ruhig fliesst der Rhein;
Der Gipfel des Berges funkelt
Im Abendsonnenschein."-என்று கையின பாடுவதும் மனிதத் தவநிலையாகும்.முப்பத்தி மூன்று கவிதைகளுக்குள் கையின கட்டிவைத்திருக்கும் மனிதம் இயற்கையோடு,சமூதாய வாழ்வோடு-வெறுமையோடு-தனிமையோடு,பிரபஞ்சத்தோடு-தன்னைச் சுற்றிய அனைத்தோடும் உறவாடும் தவநிலையாக விரிகிறது.

"எனக்குப் புரியவில்லை,அதற்கான அர்த்தம்,
மிகவும் கவலையோடு இருக்கிறேன்,
பண்டையக் காலத்துப் புனைகதை ஒன்றினால்,
இது எனது மனதிலிருந்து விலகுவதாகவில்லை.

காற்றுக் குளிருகிறது கூடவே இருட்டாக இருக்கிறது
ரையின் ஆறு அமைதியாகப் பாய்ந்தோடுகிறது
மலையுச்சியின் முனை ஒளிருகிறது
மாலைச் சூரிய ஒளியுள்..."


கையின கலக்கமுறுவதும்-களிப்புறுவதும்பின்பு வெறுமைப்பட்டுக்கிடக்கும் வீட்டினது முன் ஆகாயத்தைப் பார்க்கும் பொழுதுகளும்,நாடற்றவனின் புரிதலுக்குள் சிக்குப்படும் நேசமும்-பாசமும்,வெறுமையும் ஒன்றின் தொடர்ச்சியாக எனக்குள்ளும் விரிவதின் தருணம்தாம் எமக்கான மனித இருத்தலும்-இன்மையுமாகும்.எனவே,


"நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


பண்டைய இலக்கியத்துள் காதலன்,தன் காதலியின் அல்குலையும்,இடுப்பையும் உவமை வாயிலாக வர்ணிப்பான்.

"அவாப் போல அல்குல் அகன்றது,சான்றோர் கேள்வி அறிவுபோல இடுப்பு நுண்மையானது"என்றும் வர்ணிக்கின்ற சூழலில் காதலனின் உணர்வுநிலை-வாழ்வு,நெருக்கமுற முனையும் ஆசைக்குப் பின்பான வாழ்தல் வெளிப்படுகிறது.இத்தகைய நிலைமையானது எல்லாவகை நியாயங்களுக்கும்,எல்லைப்படுத்தல்களுக்கும் உட்பட்டுக்கிடக்க முனையாது தனது சுய தெரிவை மிக இலகுவாகத் தேர்ந்து கொள்கிறது.இது இடம்,பொருள்,ஏவல்-காலம் என்ற தர்க்க நிலைமைகளைப் பொருட்படுத்துவதில்லை.இங்கே,

"திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்"


என்று கூறும் நான்.அதே கணத்தில் எல்லையில்லாப் பறவையாக எனது சிறகை விரித்து ஆடுவேன்.அது என்ன பெயரிட்டு அழைத்தாலும் நான் ஆடும் நாட்டியம் மனிதத்தின் வாழும் விருப்பு.இந்த விருப்பே என்னைச் சகலவிதத்திலும் அசைக்கிறது.இதுள் நாம் மகிழ்ந்திருக்கிறோம்,அன்று எனது மண்ணில் இதே மகிழ்வு எனக்குள்ளும் ஊருக்குள்ளும் பாயும் நதியாகத் தடம் புரண்டோடிய காலவெளியில்,நினைவு குத்திநிற்கிறது.இதோ அந்த வாழ்வின் சுவடு:

"மகிழ்வின் சாயல் கலந்துருகிய அக்கணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப் பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக் கேள்வியுமில்லாது

சிரித்தபடி வந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக் கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்"

-அமைதியின் மணம்.இப்படியாக நம்மை நடாற்றில் தள்ளிய நெடும்பொழுது இன்னும் விடிந்த பாடில்லை!நெருப்புக்குள் தேடிக்கொண்டிருக்கும் குளிர்மைக்காக நெருங்க மறுக்கும் உண்மை, ஒரு பொழுதாவது நம்மை அண்மித்தாகவேண்டும்.இளங்கோ மிக அழகாகவே அந்த உண்மைகளின் பின்னே அணிவகுத்துத் தனது நாடற்ற நிலைக்குள் உணர்ந்தவற்றைக் குறிப்புகளாக்குவதில் மிக நேர்த்தியாகத் தன்னையும் புறவுலகத்தையும் உணர்ர்ந்துகொள்கிறார்.இந்த உணர்வின் வெளிப்பாடுகள், மனித நிலையை மறுத்தொதுக்கித் தனிநபர் வாதத்தின் பாரிய உச்சபச்சக் கணைகளை அள்ளியெறியவில்லை.மாறாகத் தன்னையிழந்த பொது மனிதக்கூட்டில் தானும் ஒரு குஞ்சு என்று கீதம் இசைக்கிறது,டி.ஜே.யின் கவிதைகள்.

கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னா தம்ம
-புறம் 208.

(தொடரும்,தொடராமலும் போகலாம்.)


ப.வி.ஸ்ரீரங்கன்.
18.07.2008

Kommentare:

superlinks hat gesagt…

வணக்கம் தோழர்
உங்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்
பாருங்கள்.

Vinavu hat gesagt…

http://vinavu.wordpress.com

redflame hat gesagt…

http://redsunrays.blogspot.com/

Anonym hat gesagt…

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com