Donnerstag, November 19, 2009

சோபா சக்தி தன்னை...

மீனா-சோபா சக்தி இடையிலான
உரையாடல் குறித்த எனது புரிதல்: 
 
ன்றைய நமது அரசியல்-சமூக வாழ்வில்,குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்குப் பலமான அரசிற் குரல்கள் கிடையாது.
 
 
இந்த குரல்களை அழிப்பதற்கான அனைத்து வடிவத்தையும், நமது எதிரிகள் புலிகள்மூலமும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடாகவும் செய்து முடித்தார்கள்.தமிழ்பேசும் இலங்கை மக்களது எதிர்காலம் எப்பவும்போலவே ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது.
 
 
இந்தச் சூழலில் நாம் பலமாகக் காரியமாற்றவேண்டிய நிலையில், எமக்குள் தெளிவற்ற பல அரசியற் போக்குகளை மீளவுற்பத்தி செய்வதற்குப் பிற்போக்குவாதத் தமிழ்-புலி விசுவாசிகள் முயலுகின்றனர்.இவர்களின் பின்னே உலக-இந்திய ஆளும் வர்க்ககங்கள் ஒளிந்திருக்கின்றன.இஃது, இன்றைய துர்ப்பாக்கிய நிலை.
 
 
இதிலிருந்து ஒடுக்குமுறைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மீள்வதற்கு, உகந்த அரசியல் தலைமையை இந்தச் சிறுபான்மை இனங்கள் இன்னும் பெற்றுவிடவில்லை.இந்த வெற்றிடம், அவர்களது விடுதலைக்கு மாறாக அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைகளாக்கிவிட்டுள்ளது-இது,இன்றைய யதார்த்தம்!
 
 
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான-இருண்ட நிலையை இலங்கைச் சிறுபான்மை இனங்கள் என்றும் பெற்றிருக்கவில்லை.
 
 
இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழலில், இது, இப்படித்தாம் இருக்குமென எவரும் அதற்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முடியாது.இதை, உறுதிப்படுத்தக்கூடிய உலக அரசியலின் உள்ளார்ந்த போக்குகளும்,அதுள் இலங்கை ஆளும் வர்க்கத்தின் இடம்,அவர்களால் வழி நடாத்தப்படும் அரசியல்,இலங்கைப் பொருளாதாரத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களை எங்ஙனம் கையாளும் என்பதற்கு,புலிகளின் தோல்வி மிக நல்ல பாடமாகவே நம்மிடம் உரைக்கப்படுகிறது.
 
 
இது,விட்டுவைத்திருக்கும் இந்தப் பாடம் மேலும் குழப்பகரமான திசைவெளியினூடாக "நாடு கடந்த தமிழீழ அரசு,பாராளுமன்றமென" எமது மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது,அதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டிய பணி குறித்துப் பேசப்பட வேண்டும்.
 
 
இது, குறித்துத் தமிழ்ச் சூழலில் மிகக் காத்திரமான படைப்பாளியும்,முன்னாள் போராளியுமான சோபா சக்தி தன்னை நேர்கண்டவரிடம் மிக தெளிவாகவே வலியுறுத்துகிறார்.
 
 
அவசியமான பணிகள் குறித்து அங்கே திறன்வாய்ந்த விவாதத்தைச் செய்கிறார் சோபா சக்தி.
 
 
இதிலிருந்து நாம் அவசியமான பணிகளை இனங்காணமுடியும்.
 
 
இந்தப் பணிகள் நமது மக்களது அரசியல்-சமூக வாழ்வை எதிர்காலத்தில் தீர்மானிப்பது.
 
 



 
 
இதை, நாம் உணர்ந்துள்ளபோதும்,நமது மக்களுக்குள் மீளத் தலைத் தூக்கும் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், இத்தகைய பணிகளை முடக்குவதற்கேற்ற பொய்யான "தமிழ்த்தேசிய"மாயைகளை மீளக் கட்டியமைக்கின்றார்கள்.இது, குறித்து நாம் இனம்காணும் கெடுதிகள் புலிகளது ஆயுத ஒடுக்கு முறைக்கு ஒப்பானவொரு நிலையைக் கொண்டியங்குகிறதென்பதைச் சொல்லுகிறோம்.
 
 
கடந்த காலமானது மிகச் சக்தி வாய்ந்த மக்களது ஆதரவுத்தளத்தோடும், புலிகளெனும் பாசிச இயக்கத்தோடும்"தமிழீழ"க் கனவை நமக்குள் வளர்த்திருந்தது.இத்தகைய கனவு தந்த அறுவடையாக நாம் நமது சமூகசீவியத்தை இழந்து, அகதிகளாகி முட்கம்பிகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்.நம்மை அடிமைகொண்டவர்கள்,நமது மக்களுக்குள் இருக்கும் ஒரளவு கற்றவர்களைப் பயன்படுத்தி, மீளவும், நமது அரசியலையும்-விடுதலையையும் அந்நியச் சக்திகளுக்கேற்றவாறே முன்னெடுக்கமுனைவதின் தொடரில், எமக்குள் பலவகையான குழறுபடிகளைத் தொடர்கின்றனர்.இத்தகைய குழறுபடிகளில் பல மக்கள் சேமிப்பின்மீதான புலம்பெயர் புலி அரசியலாக விரிகிறது.இது,தாம்கொண்ட மக்கள் செல்வத்தை-நிதிகளை மெல்லத் தமதாக்கும் முயற்சியில் அந்நியச் சக்திகளுக்கேற்ற அரசியலை நமக்கான விடுதலை என்கின்றன.
 
 
இது மோசமானது.
 
 
இத்தகைய புலிப் பினாமி அரசியலாளர்களை தமிழ் நாட்டின் கோடியிலிருந்து, ஐரோப்பியத் தெருக்கள்வரை இனம்காணமுடியும்.என்றபோதும் எமது மக்கள் அனைவரையும் பின்தொடரும் சூழலே இப்போது நிலவுகிறது.இதன் தெரிவில் மக்களது மனங்களை வென்று, அவர்களை ஆதிக்க சக்திகளது நோக்குக்கமைய "ஏசு சீவிக்கிறார்"எனும் மதத்துக்குள் இழுத்துச் சிதைப்பதற்கும், பற்பல முயற்சிகளை மதவாதப் போதகர்களும் அவர்கள் பின் நிற்கும் எஜமானர்களும் ஒரு யுத்த முனைப்போடு செய்து வருகின்றார்கள்.வன்னியுள் வதைபட்ட மக்களது மனங்களை "உதவி"எனும் பெயரில் இவர்கள் அடிமை கொள்வது நடந்தேறுகிறது.
 
 
தமிழின-புலியழிப்புப் போராட்டத்தின் பின்பான இன்றைய சூழலில், பொதுத் தளத்தில் பரவலாகப் பிரச்சனைகளைப் பேசவேண்டியவொரு சூழலில் சோபாசக்தியினது நேர்காணல் முக்கியமானவொரு உண்மையைச் சுட்டுகிறது.அஃது, அனைத்துவகையான ஒடுக்குமுறைகளை முதலில் இனங்காணவேண்டியதையும்,புலிகளது இன்றைய "அரசியலின் தெரிவு" எது,என்பதையும் கேள்வி கேட்கிறது.
 
 
இலங்கை அரசினதும்,இந்திய-உலக அரசுகளினதும் பின்னால் நிற்கும் தமிழ்த் தலைமைகளது பாத்திரம்,அவர்களது இன்றைய அரசியல் குரல்களையும் பரவலாக விமர்சிக்கிறது, சோபா சக்திக்கும்-மீனாவுக்கும் இடையிலான இந்த நீண்ட உரையாடல்.கூடவே, புலிகளது இயக்கவுட்கட்டமைவில் பரவலான தமிழ் மக்களுக்கு எதிரான போக்குகள் எங்ஙனம் நிலவியதென்றும் விளக்குகிறது.
 
 
இது,ஒரு வகையில் பரவலாகப் பேசப்பட்ட விடையமெனினும்,புலிகளது அமைப்புக்குள் நிலவிய சமூக ஒடுக்குமுறைக் கூறுகளைப் புலிகளது அமைப்புக்குள் இருந்த முதன்மையான படைப்பாளி பேசுவதென்பதால் அதற்கான உண்மைத் தன்மை அதிகமாகிறது.
 
 
இங்கே,உண்மைகளை இனங்காண்பதென்பது ஒரு வரலாற்றுத் தேவையாக நமக்கு முன் இருக்கிறது.
 
 
இதிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மீளத் தவறுகளைச் செய்வதிலிருந்துவிடபட அவசியமானது.நாம்,எமது மக்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து இத்தகைய உண்மைகளைக் கண்டடையவும்,நேரிய அரசியல் பாதையை இனம்காணவும் அவசியமான தர்க்கத்தைச் செய்கிறார் சோபா சக்தி.இதன் வெளியில் கண்டடைய முனையும் அரசியல் மீளவும், புலிவகைப்பட்ட குறுந்தேசியவாத அரசியல் கோரிக்கைகுளுக்குள் முடங்க முடியாது.எனவே,சோபா சக்தியின் குரலை இங்கே மீள் பதிவிடுகிறேன்.இது, அவசியமான வரலாற்றுத் தேவையின்பால் நான்கொண்ட தெரிவே என்பது, என்வரையான விளக்கம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வூப்பெற்றால்,
ஜேர்மனி
 
19.11.2009




என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி


நேர்காணல்: மீனா
 

ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால்
மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை;
அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண
எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த
கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி
அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து
கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால்
உட்செரிக்க இயலாதவர். பதினைந்து வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
போராளியாக தமது அரசியலைத் துவக்கி இன்று புலம்பெயர் சூழலில் மாற்று அரசியலை
முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களைக் காப்பதற்கே
யுத்தம் என்று பச்சையாய் புளுகி மீண்டுமொரு இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே
அரசு, யுத்ததிற்கு பிறகும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு தமிழர்களைத் தின்று
தீர்க்கிறது. இந்நிலையில், ஈழத்தமிழரின் சனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து
குரலுயர்த்தி வருகிற ஷோபாசக்தியோடு ஈழத்தமிழரின் நிலைகுறித்தும், தமிழ்ச்சூழலில்
நடைபெற்று வருகிற ஈழ அரசியல் குறித்தும் ‘அம்ருதா’ இதழிற்காக உரையாடினோம்.
அவற்றிலிருந்து..

 
 
மீனா: போர்க்குற்றங்களைத் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களின் நிர்வாண படுகொலைகள், திசநாயகம் கைது என அடுக்கடுக்காய் இனவெறி வெட்ட வெளிச்சமாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை கண்டித்திருக்கின்றன. போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் தொடர்வதன் மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?
 
ஷோபாசக்தி: ‘சானல் நான்கு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ ஆதாரங்களைப் பொய் என்கிறது இலங்கை அரசு. எந்த கண்டனத்திற்கும் அஞ்சாமல் திசநாயகத்தின் கைதையும் நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் மனிதாபிமானக் குரலை ராஜபக்சே மயிரளவும் மதிப்பதில்லை. சமீபத்தில் நாட்டிலிருந்து யுனிசெப் அதிகாரியும் வெளியேற்றப்பட்டார். இலங்கை அரசின் பயங்கரவாதம் எந்த அழுத்ததிற்கும் வளைந்து கொடுக்காது.
 
 
மீனா: ஈழத்தில் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வசதிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் இந்து என்.ராம் போன்றவர்கள் சொல்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: கிடையாது. அதெல்லாம் சுத்த அயோக்கித்தனமான பேச்சு. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் கூட மக்களை முகாமில் வைத்திருக்க மகிந்த ராஜபக்சேவிற்கு உரிமை கிடையாது. மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து பிரித்து முகாம்களில் கட்டாயமாக வைத்திருப்பதை அனுமதிக்கவே முடியாது. கண்ணிவெடி அச்சுறுத்தல் என்றெல்லாம் அரசு சொல்வது அப்பட்டமான பொய். கண்மூடித்தனமாக விமானங்களிலிருந்து குண்டு வீசியும் எறிகணைகளை ஏவியும் மக்களைக் கொன்றவர்கள், கண்ணி வெடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் பேசுவது நம்பக்கூடியதல்ல. மகிந்த அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை இப்போது வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. அதிலொன்றுதான் இந்தக் கட்டாயத் தடுப்பு முகாம்கள். இந்த முகாம்களிலிருந்து மக்களை விடுவிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரசார இயக்கங்களை வலுப்படுத்துவதும் அந்த மக்களின் விடுதலைக்கான உடனடி வழிகளைக் கண்டடைவதும் நம் முன்னாலிருக்கும் இன்றைய முதலாவது சவாலும் பணியும்.
 
 



 
மீனா: தடுப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா, அவர்களின் நிலை எப்படியிருக்கிறது?
 
 
ஷோபாசக்தி: எனது உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் இளவயதினர் பணம் செலுத்தித் தங்களை அங்கிருந்து மீட்க உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்கள். இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடமோ லஞ்சம் கொடுத்தால் அவர்கள் முகாம்களிலிருந்து அழைத்துச் சென்று வெளியே விடுகிறார்கள். ஆளையும் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தையும் பொறுத்து மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே கைதுகள் நிகழ்கின்றன. ஒரு முகாமில் நாளொன்றுக்கு முப்பது வரையான இளம் வயதினர் கைது செய்யப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாகக் கைதுசெய்யப்படும் யுவதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற எந்த அறிக்கையும் தகவலும் அரசால் வெளியிடப்படுவதில்லை. அவை நலன்புரி முகாம்களல்ல, சிறைச்சாலைகள்.
 
 
மீனா: சொந்த மண்ணிலேயே கைதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது எப்படியிருந்தார்கள்?
 
 
ஷோபாசக்தி: புலிகளிடம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் இந்தத் துன்பங்களிற்குக் குறைந்ததல்ல. 1990களிலிருந்தே புலிகளும் ‘பாஸ்’ என்றொரு நடைமுறையைத் திணித்துப் பணம் பெற்றுக்கொண்டுதான், தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்த இளவயதினரை வெளியேற அனுமதித்தார்கள். குழந்தைகளையும் இளைஞர்களையும் கட்டாயமாக அரைகுறைப் பயிற்சி கொடுத்து யுத்த முன்னரங்கத்திற்கு அனுப்பிவைத்துச் சாகக் கொடுத்தார்கள். இயக்க விரோதிகள், துரோகிகள், சமூகவிரோதிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டவர்களின் கணக்குத் தனியானது. ஆயிரக் கணக்கானோர் புலிகளின் பங்கர் சிறைகளில் நாயினும் கீழாக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 2002க்குப் பிந்திய சமாதான காலத்தில் மட்டும் தங்களுக்கு ஒவ்வாத 400க்கும் மேற்ட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும் புலிகள் கொன்றிருக்கிறார்கள் எனத் துல்லியமாக அய்.நா. அவையின் சமூகப் பொருளாதரக் கவுன்சிலின் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்டன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.
 
 
மீனா: ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் மெனிக் பண்ணையின் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களுக்காகவும் ஆதரவாய் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், நீங்கள் குறிப்பிடுபவை பற்றியும் தொண்ணூறுகளில் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் பேசுவதில்லையே, ஏன்?
 
 
ஷோபாசக்தி: பாரிசில் இருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ பத்திரிக்கை 12 செப்டம்பர் 2009 இதழில், ‘பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் உதவினார்கள்’ என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. காலம்காலமாக தமிழ் தேசியவாதிகளும் -குறிப்பாக - புலிகளும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் இனப்பகைமையை பிரசாரம் செய்து வருகிறார்கள். யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியதைப் போல தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லீம்களை ஒடுக்கியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களை ஆதிக்கத்தின் எடுபிடிகள் என்றல்லாமல் வேறெப்படி புரிந்துகொள்வது.
 
 
மீனா: இப்போது, இலங்கை அரசோடு இயைந்துபோய் தமிழர்களிற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்றவாறாக ஈழத் தமிழ் அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் பேசுகிறார்களே?
 
ஷோபாசக்தி: ஆயுதப் போராட்டத்தினால் கடந்த முப்பது வருடங்களில் நாம் சந்தித்த இழப்பு மிகப் பெரிது. ஒரு சின்னஞ் சிறிய இனமான எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஆயுதப் போராட்டம் என்பது இப்போது இலங்கையில் சாத்தியப்படாத ஒன்று. சர்வதேசப் புறச் சூழல்களும் ஆயுதப் போராட்டத்திற்குச் சாதகமாயில்லை. எனவே, வேறுவகையான அரசியல் முன்னெடுப்புகளாலும் போராட்ட முறைமைகளிற்குள்ளாகவும் அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாகவுமே இனி ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு தனது பேரினவாத அரசியல் என்ற நிலையிலிருந்து கீழிறங்காதவரை அரசோடு இயைந்துபோவது என்பதெல்லாம் அயோக்கித்தனம். இந்தப் பாசிச அரசை எந்த விதத்திலும் நியாயப்படுத்தும் போக்குகள் ஈழத் தமிழர்களிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களிற்குமே இழைக்கப்படும் துரோகம்.
 
 
மீனா: போராட்டத்தை முன்னெடுக்க சமீபமாய் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எவ்வளவு சாத்தியம்?
 
 
ஷோபாசக்தி: எங்கள் மீது தன்னிச்சையாக அரசையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தும் அதிகாரத்தை இவர்களிடம் யார் கொடுத்தார்கள்? இவர்களின் நாடுகடந்த அரசின் அரசியல் பண்பு என்ன? வலதா, இடதா, இல்லைப் பாசிசமா? முதலில் அதைச் சொல்லட்டும். எங்கள் ராஜினி திரணகமவையும் விஜயானந்தனையும் கொன்றவர்களுடன் சேர்ந்து பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் எங்களுக்கு அரசமைத்துக் கொடுக்கப் போகிறார்களா? புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டமாயிருந்தாலென்ன, அரசியற் போராட்டமாயிருந்தாலென்ன அவர்களின் அரசியலில் அறம் வந்து சேரும்வரை அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் புலிகளின் சொத்துகளையும், புலிகளும் அவர்களின் முகவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சுகித்த அதிகாரங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே இந்த நாடுகடந்த அரசாங்கம் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.
 
 
மீனா: இப்பொழுதும் மக்களிடம் பணம் வசூலிப்பது தொடர்கிறதா?
 
 
ஷோபாசக்தி: இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் கட்டாயக் காசு கேட்டால் சனங்களே காவற்துறையிடம் புலிகளைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனாலும், கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் புலிகள் திரட்டிய ஏராளமான பணம் வர்த்தக நிறுவனங்களாகவும் இந்துக் கோயில்களாகவும் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களாகவும் திரண்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் இலாபம் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் பகிர்ந்துகொள்ளத்தான் வெளிநாட்டுப் புலிகள் இப்போது தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் பெருமளவு நீங்கிவிட்டது. புகலிடப் புலிகள் தங்களுக்குள் தாங்களே அடித்துக்கொண்டிருப்பதால் புலிகள் மீது சனங்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் பயமும் காணமலேயே போய்விட்டது. இணையங்களைத் தொடர்ச்சியாகக் கவனிப்பவர்களால் புலிகளை முன்பு தீவிரமாக ஆதரித்த நபர்களே இப்போது இந்த வெளிநாட்டுப் புலிகளைக் கண்டித்துப் பேசுவதைத் தெரிந்துகொள்ள முடியும்.
 
 
மீனா: ‘புலிகளின் வீழ்த்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவர்களின் தவறுகளை விமர்சிப்பதால் இனிமேல் ஆகப்போவது ஒன்றும் இல்லை‘ என உங்களைப் போன்றவர்கள் பற்றி பரவலாக ஒரு கருத்து நிலவுகிறதே?
 
 
ஷோபாசக்தி: புலிகள் தாங்கள் மட்டும் அழியவில்லை. தங்களோடு சேர்த்து ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வையும் அழித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே நமது மக்கள் அரசியலிலிருந்து புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களுக்கு விமர்சனங்களேயில்லாமல் புலிகளை ஆதரிக்கும் ஒரு கடமையைத் தவிர வேறெந்த அரசியல் உரிமைகளையும் புலிகள் வழங்கவேயில்லை. ஈழத்து அரசியலில், ஒரு ஈழக் குடிமகனது அரசியல் உரிமை, பிரபாகரனின் சிந்தனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிவது என்பது மட்டுமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. புலிகள் ஆதரவைத் தவிர்த்து வேறெதையும் பேசும், எழுதும் உரிமைகள் துப்பாக்கி முனையில் மக்களிற்கு மறுக்கப்பட்டிருந்தன. புலிகளைத் தவிர வேறெந்த அரசியல் போக்குகளையும் புலிகள் தமது பரப்பில் அனுமதிக்கவில்லை. இதைப் புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். நாங்கள் பாசிசம் என்றோம்.
 
 
சாதியொழிப்பு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவையுமே அங்கே இயங்க அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் தடையை மீறிய போதெல்லாம் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் தலித் மக்களின் வழிகாட்டிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் புலிகளால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். சிறைப்பிடிக்கப்பட்டு மனித நாகரிகமே இல்லாமல் நிர்வாணமாக வருடக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்கள். ஒரு வருடமல்ல, இருவருடமல்ல, இருபத்தைந்து வருடங்களாகப் புலிகள் இந்த அட்டூழியங்களைச் செய்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகுதான் புலிகள் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவத்தொடங்கினார்கள் என்பதில்லை. அவர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அப்படித்தானிருந்தார்கள்.

புலிகளிடம் அரசியலே இருக்கவில்லை. அவர்கள் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் இயங்கினார்கள் என்று இப்போது புதிது புதிதாய் சிலர் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அது தவறான கண்டுபிடிப்பு. புலிகளிடம் தெளிவான வலதுசாரி அரசியல் நிலைப்பாடும் மேற்கு ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் கலாசார அடிப்படைவாதமும் இருந்தது. அவர்கள் நடத்திய இஸ்லாமியச் சுத்திகரிப்புக்குப் பின்னால் ஒரு உறுதியான குறுந்தமிழ்த் தேசிய அரசியலிருந்தது. அவர்களின் இத்தகைய படுபிற்போக்கான அரசியல் வேலைத்திட்டம் அரசியல் எதிரிகளையும் தங்களை மறுப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற கேவலமான அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லாவித முற்போக்கு அரசியலையும் ஈழப் புலத்திலிருந்து துடைத்தெறிந்த புலிகள், அவர்களின் கொலை அரசியலை மட்டுமே அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குறுந்தமிழ்த் தேசியவாதக் கொலைகார அரசியலை செல்வாக்கு இழக்கச் செய்து, மாற்று அரசியலை நோக்கி நகருவதற்கு நம் மக்களிடம் நாம் புலிகளின் தவறுகளையும் அரசியலையும் நுணுக்கமாகத் தோலுரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.
தவறுகளைப் பேசுவது, குற்றங்களைப் பட்டியலிடுவதற்காக மட்டுமல்ல; பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் தான்.
 
 
மீனா: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இனி உரையாடலுக்கு தயார் என புலிகள் அறிவித்திருக்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: புலிகளுடைய இன்றைய அரசியல் பிரபாகரன் காலத்து அரசியலின் நீட்சிதான். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் போராடப்போகிறோம், எல்லோருடனும் உரையாடத் தயாராயிருக்கிறோம் என்ற அவர்களது அறிவிப்புகள் வெளியானாலும் அவர்கள் புலிகளின் கடந்தகால பிற்போக்கு அரசியலிலிருந்து தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவ்வகையான எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய அரசியலுக்கு வந்தாற் கூட அவர்களது அரசியல் வேலைத்திட்டம் தமிழ்க் குறுந்தேசியவாத, வெறும் வலதுசாரி அரசியற் திட்டமாய் இருக்கும் வரையில் அவர்களின் அரசியல் மக்கள் விரோத அரசியலாகவேயிருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 
இன்று புலிகள் தங்களிடம் அரசியல் இருக்கவில்லை என்று சொல்வதை அவர்கள் ஏதோ தங்களது பிற்போக்கு அரசியலின் மீது அதிருப்திகொண்டு புதிய மாற்றத்தைக்கோரி பேசுவதாக நீங்கள் கருதவேண்டியதில்லை. தொடர்ச்சியாக அவர்களின் அறிக்கைகளையும் உரையாடல்களையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த காலங்களில் இந்திய அரசையும் மேற்கு நாடுகளையும் தாங்கள் சரியாக ‘டீல்’ செய்யவில்லை என்ற வருத்தத்திலேயே அவர்கள் பேசுவது தெரியும். அவர்கள் அரசியல் தோல்வியென்று தங்கள் ‘டீல்கள்’ தோல்வியடைந்ததையே குறிக்கிறார்கள். மற்றப்படிக்கு புலிகளின் கடந்த கால பிற்போக்கு அரசியலிலிருந்து அவர்கள் மீள்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
 
 
மீனா: புலிகள் இயக்கம் தனது தலைமைப் பொறுப்புகளில் தலித்துகளை அமர்த்தியிருந்தது. அதேவேளையில் செல்லன் கந்தையன், கணபதி ராசதுரை போன்றோர்களிடம் தனது ஆதிக்க முகத்தைக் காட்டியது. புலிகள் சாதியத்தை எப்படி எதிர்கொண்டதாக நினைக்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலேயே வெள்ளாளர்கள் அல்லாத ஒரு தலைமையாக உருவாகி ஒரு உடைப்பை ஏற்படுத்திய இயக்கம் புலிகள் இயக்கம்தான். எனது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்ற கட்டுரையில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது.

இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதையும் நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?
 
 
மீனா: சாதியத்தின் நச்சு வேர் ஆழப்புதைந்து கிளை பரப்பி இருந்த காலத்திலேயே ‘அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ ஆகியவை கலகக் கிளர்ச்சிகள் செய்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டின. இன்றைக்கு தலித்தியம் பெருவலிமை பெற்றிருக்கிறது. இந்த பின்புலத்தில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் [அய்ரோப்பா] செயற்பாடுகள் எவ்விதமிருக்கின்றன?
 
 
ஷோபாசக்தி: சாதியொழிப்புக் குறித்து மேலும் சில உரையாடல்களைத் தொடக்கி வைத்தது என்பதற்கு அப்பால் மேலே நகர முடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ஒரு சாதியொழிப்பு முன்னணி, சமூகத்தில் இருக்கக் கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உயிர்வாழ முடியாது. அது சாதியொழிப்பிற்கான செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும். தலித் மக்களை அமைப்புமயப்படுத்த வேண்டும்.
 
 
சாதிய விடுதலை குறித்து நாம் பேசும்போது மற்றைய அடிமைத்தளைகள் குறித்த, குறிப்பாக இனஒடுக்குமுறை குறித்த, கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கேள்விகளை நேர்மையுடன் அணுகாதபோது ஒரு அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்க முடியாததே. எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது. 40 வருடங்களிற்கு முன்பு தலித் தலைவர்களான எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அரசோடு இணைந்து செயற்பட்டு தலித் மக்களுக்கான சில நலத்திட்டங்களை பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் செயற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எம்.சி.சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசியவர். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்டுகளும் பங்கெடுத்திருந்தார்கள். கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரி நட்சத்திரங்கள் அரசின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியதாயிருந்த காலமது. ஆனால், இன்று அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்ளைக்காரர்களும் இனப் படுகொலைக்காரர்களுமே என்பதை தலித் முன்னணி புரிந்துகொண்டு, தனது செயற்திட்டங்களை வகுக்காதவரை இந்தத் தேக்கத்திலிருந்து அதனால் வெளியே வரமுடியாது என்றே கருதுகிறேன்.
 
 
மீனா: நீங்கள் இலங்கை அரசின் உளவாளியென்றும், அரசிடமிருந்து பணம் பெறுகிறீர்கள் என்றும், தமிழகத்துப் பத்திரிகையாளர்களிடையே இலங்கை அரசிற்காக ஆள்பிடிக்கிறீர்கள் என்றும் தொடர்ந்து ‘கீற்று‘ இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்படுகிறீர்களே?
 
 
ஷோபாசக்தி: இத்தகைய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாலும் அவதூறுகளாலும் எதையும் சாதித்துவிட முடியாது. இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் என்னிலிருந்து ஒரு மயிரைக் கூட உதிர்த்துவிட முடியாது.
 
 
 
மீனா: உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அந்த விமர்சனங்களை உண்மை என்று ஆக்கிவிடாதா?
 
 
ஷோபாசக்தி: நான் பொதுவிவாதங்களில் பங்கெடுக்க மறுப்பவனல்ல. என்னுடைய எழுத்தின் பெரும்பகுதி எதிர்வினைகளிலும் விவாதங்களிலும் பதில்களிலுமே செலவிடப்பட்டிருக்கிறது. எத்தகைய மாறுபட்ட கருத்துள்ளவருடனும், எனக்கு முற்று முழுதான எதிர் அரசியல் நிலைபாடுகளை உடையவருடனும் கூட நான் உரையாடவோ, விவாதிக்கவோ பின்நின்றதில்லை. அண்மையில் கூட ‘வடலி’ பதிப்பகம் தோழர்களின் ஏற்பாட்டில் தோழர்.தியாகுவுடன் மூன்று மணிநேரங்கள் ஈழத்து அரசியல் குறித்து விரிவாக விவாதித்திருந்தேன். அந்த உரையாடல் ஒரு நூலாக வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் உளவாளி, பணம் வாங்குகிறான் என்று புறணி பேசுபவர்களுடன் எல்லாம் என்னால் விவாதிக்க முடியாது. இத்தகையை இழிவான குற்றச்சாட்டுகளைப் பேசும்போது ஆதாரங்களுடன் பேசவேண்டும் என்ற யோக்கியமோ, ஆதாரமற்ற அவதூறுகளை இணையத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கடப்பாடு இல்லாதவர்களிடமோ நான் எதை விவாதிக்க முடியும்.
என்னுடைய இத்தனை வருட காலத்து எழுத்தில், பேச்சில் இலங்கை அரசுக்கோ, இந்திய அரசுக்கோ ஆதரவான ஒரு வார்த்தையைக் கூட இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் காட்ட முடியாது. கடந்த பத்து வருடங்களில் இலங்கை அரச பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்த்து நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச் சித்திரங்களாகவும் என்னளவிற்கு இலக்கியத்தில் பதிவு செய்தவர்களும் யாருமில்லை. அதே தருணத்தில் நான் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் கடுமையாக விமர்சித்து எழுதும்போது அதை எதிர்கொள்ளத் திராணியோ, கருத்துப்பலமோ, தார்மீகமோ அற்றவர்கள் என்னை அரச அதரவாளன் என்று நியாயமற்ற முறையில் தீர்ப்பிடுவதன் மூலமே என்னுடைய புலிகளின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முயலுகிறார்கள்.
 
 
மிகவும் நெருக்கிப் பிடித்து விவாதிக்கும்போது அவர்கள் தாங்கள் புலிகளை விமர்சனத்துடன் ஆதரிப்பதாகச் சொல்லி மழுப்புவதுமுண்டு. ஆனால், புலிகளைப் போன்ற வலதுசாரி அரசியல் சக்தியையும் பாசிஸ்டுகளையும் என்னால் விமர்சனத்தோடு என்றாலும் கூட ஆதரிக்க முடியாது. அண்மையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தான் இறப்பதற்குத் தயாராயிருந்த ஒரே காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடன் தடுத்து வைத்திருந்து கொல்லக் கொடுத்ததையெல்லாம், தப்பியோடி வந்த மக்களைச் சுட்டுக் கொன்றதையெல்லாம் விமர்சனத்துடன் ஆதரிக்குமளவிற்கு நான் கொடூரமானவனோ, அயோக்கியனோ கிடையாது.
 
இந்த நேர்காணல் வெளியானதும் கூட என்னை இலங்கை அரசின் ஆதரவாளன் என்றுதான் அவர்கள் எழுதப் போகிறார்கள். இந்த நேர்காணலில் நான் புலிகள் குறித்துச் சொல்வது மட்டும்தான் அவர்களது பிரச்சினையாயிருக்கும். என்னிடம் பணமோ, சாராயமோ பெற்றுக்கொண்டு என்னை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற அவமானத்தை நீங்களும் சந்திக்க நேரிடும்.
 
மீனா: நீங்கள், உங்களை இலங்கைக் குடிமகன் என்று ஒரு கட்டுரையில் சொன்னதுகூட இங்கே சர்ச்சையாக்கப்பட்டது…
 
 
ஷோபாசக்தி: பா.செயப்பிரகாசம் தான் வழக்கம் போலவே ‘நொள்ள’ கண்டுபிடிந்திருந்தார். நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று அழைத்துக்கொள்ளாமல் பிரஞ்சுக் குடிமகனென்றா அழைத்துக்கொள்ள முடியும்?
 
செயப்பிரகாசம் தன்னை இந்தியக் குடிமகன் இல்லை என்று சொல்வது அவரின் உரிமை. ஆனால், நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று சொல்வதைக் கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இலங்கை என்னுடைய நாடு. எனக்கு அந்த நாட்டில் ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரிமைகள் எனக்கு இலங்கை அரசால் மறுக்கப்பட்டிருப்பதற்காக நான் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்திட முடியாது. என்னை இலங்கைக் குடிமகன் இல்லையென்று சொல்ல ராஜபக்சேவிற்கே உரிமை கிடையாது என்றபோது பா. செயப்பிரகாசத்திற்கு கேள்வி கேட்க எங்கிருந்து உரிமை வந்தது?
 
பா.செயப்பிரகாசம், தன்னை ஒரு சர்வதேச மனிதனாக உணருகிறேன் என்கிறார். அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டோ, அவருக்கு இந்திய அரசு இயந்திரத்துடன் வேறெந்தக் கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருக்கலாம். என்னுடைய நிலையும் அவரைப் போன்றதுதான். எனக்கும் இலங்கை அரசுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது; என்னிடம் இலங்கைக் கடவுச் சீட்டும் கிடையாது; பிரஞ்சுக் கடவுச் சீட்டும் கிடையாது. அகதிகளிற்கான பயணப் பத்திரம்தான் வைத்திருக்கிறேன். என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி என்றுதான் எல்லா விமான நிலையங்களிலும் அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்படுகிறது. நான், செயப்பிரகாசம் போல குடியுரிமையை விரும்பித் துறந்தவனல்ல. அது என்னிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் என்னுடைய குடியுரிமையை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.
 
 
மீனா: ‘இந்திய அமைதிப்படை எங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தது. மாகாண சுயாட்சி அமைக்க வேண்டும் என்று வந்தது. நல்ல அதிகாரம் உள்ள சுயாட்சியாக இருந்தும் பிரபாகரன் அதை விரும்பவில்லை’ என்று கருணா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் பின்புலம் என்ன?
 
 
ஷோபாசக்தி: கருணா அரசாங்கத்தின் அங்கம். இலங்கை அரசின் குரலில் தான் இப்படி பேசி இருக்கிறார். மக்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தும், பாலியல் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டும் மூன்று வருடங்களுக்குள் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் இலங்கை அரசு இத்தனை வருடங்கள் செய்ததற்குக் குறைந்ததில்லை. அமைதிப்படை, புலிகளையும் அழிக்கக் கருதியே தொழிற்பட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன் தான் கருத்தில் கொள்ளப்பட்டதே தவிர, மக்களின் நலன் அல்ல. கருணாவின் குரல் தமிழர்களின் குரல் கிடையாது. அது இலங்கை அரசாங்கத்தின் குரல
 
 
மீனா: ஆனால், இப்பொழுதும் இந்தியா மீதான நம்பிக்கை சில அறிவுஜீவிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறதே?
 
 
ஷோபாசக்தி: இந்திராகாந்தியின் காலந்தொட்டே இந்திய அரசு ஈழப்போராளிகளை இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அமைப்புகளாக வைத்திருந்து, இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியதே அல்லாமல், அது தனிநாட்டுக் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாயிருக்கவில்லை. இந்திய அரசின் அழுத்தங்களிற்குப் புலிகள் பணிய மறுத்தபோது அது போராகவும் வெடித்து, இந்திய அமைதிப்படை ஈழத்து மக்களைக் கொன்றும் குவித்தது. இலங்கை அரசு முற்றுமுழுதாக இந்தியாவிற்கு அடிபணிந்தபோது அது இலங்கை அரசிற்காக ஒரு போரையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிக்கான விலையை இந்தியா இனித்தான் இலங்கை அரசிடம் கேட்கயிருக்கிறது. முழு இலங்கையும் இந்தியப் பெருமுதலாளிகளின் காலனியாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
 
 
ஈழத்தமிழர்கள், இந்திய அரசின் நண்பர்கள்; ஈழம் அமைவதுதான் இந்தியாவிற்குப் பாதுகாப்பு; இந்தியா சிதறாமல் இருப்பதற்கு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை என்றெல்லாம் கவிஞர் கி.பி.அரவிந்தன் அண்மையில் ஒரு இதழில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். இது அவருடைய கருத்து மட்டுமல்ல. புலிகள் ஆதரவாளர்களில் பலர் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். இவர்கள் பிராந்திய வல்லரசு என்னும் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் இதைப் பேசவில்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியவிலிருந்து சிதறினால் இவர்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும். இந்திய வல்லரசைப் பாதுகாப்பதா ஈழத் தமிழர்களின் வேலை? இதென்ன கோணல் கதை!
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.விற்குப் பரிந்து பேசியது, சங்கராச்சாரியைச் சந்தித்து ஆசி பெற்றது, கோவையில் இந்து முன்னணியினரின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என சிவாஜிலிங்கம் எம்.பி. பேசியது, எல்லாவற்றையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய மத்திய அரசை அதன் முதலாளிய இந்துத்துவ ஆதிக்க சாதிப் பண்புகளுடன் நாம் புரிந்துகொள்ளும்போது இந்திய அரசிற்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்திய அரசும் எக்காலத்திலும் ஈழத்தவர்களிற்கு நண்பனாய் இருக்கப் போவதும் கிடையாத
 
மீனா: தமிழீழம் சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னதையும் கி.பி. அரவிந்தன் விமர்சித்திருக்கிறாரே?
 
 
ஷோபாசக்தி: என்னத்த விமர்சித்தார்! "நரிகள் ஊளையிடுவதால் சூரியன் மறைந்துவிடாது" என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு அரசியல் விமர்சனமா? தமிழீழம் சாத்தியமெனில் அதைத் தடுக்க நான் யார்? அதற்கு எனக்கு என்ன சக்தியிருக்கிறது. இன்றைய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு நான் சாத்தியமில்லை என்றேன். தமிழீழம் சாத்தியம் என நம்பும் அரவிந்தன் அதற்கான தருக்கங்களை முன்வைத்துத் தனது கருத்தை நிறுவவேண்டும். அதைவிடுத்து இந்த நரி, நாய் உவமையெல்லாம் பேசி இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றலாமென்றும், கொல்லக் கொடுக்கலாம் என்றும் அவர் கருதக்கூடாது.
 
 
மீனா: ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழும் குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: நன்றியுடன் பார்க்கிறேன். ஆனால், மனிதாபினம், இனவுணர்வு இவற்றின் அடிப்படையில் எழுந்த குரல்கள் அரசியல்ரீதியாகச் சரியாக ஒன்றிணைக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்த சில தருணங்களில் அவர்கள் தவறான தலைமைகளால் வழிநடத்தப்பட்டார்கள். ஈழம் கிடைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்றளவிற்குத்தான் அந்தத் தலைமைகளின் அரசியல் யோக்கியதையும் இருந்தது. வெட்கமாயில்லையா?
 
 
ஈழத்து மக்களிற்கு ஆதரவாய் எழுந்த குரல்களை ஒரே மாதிரி மதிப்பிடுவதை நான் என்றைக்குமே செய்யப் போவதில்லை. வெறும் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் புலி ரசிகர்களிடமிருந்தும் விலகி நின்று ஈழத் தமிழ் மக்களிற்காகப் போராடிய சக்திகளும் தனிநபர்களும் இருக்கிறார்கள். அந்தக் குரல்கள் எங்களின் பாடுகளின் பொருட்டு இன்னும் வலுக்க வேண்டும். இந்தியாவில் இவர்கள்தான் ஈழத்துத் தமிழர்களின் நட்புச் சக்திகளே தவிர, கி.பி.அரவிந்தன் சொன்னது மாதிரி இந்திய அரசு இயந்திரமல்ல.
 
 
மீனா: புலிகளே தங்கள் தலைமையின் இழப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார். மீளெழுச்சி கொண்டு அவர் தலைமையில் போராடுவோம்" என்கிறார் பழ.நெடுமாறன்; "ஐந்தாம்கட்ட ஈழப்போர் வெடிக்கும், அது பிரபாகரன் தலைமையில் நடக்கும்" என்கிறார் சீமான். இவையெல்லாம்…?
 
 
ஷோபாசக்தி: இது அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிணம் எரியும் நெருப்பில் வெளிச்சம் பெறவிரும்பும் பேச்சு. உருத்திரகுமாரன் போன்றவர்களே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசாமல் வேறு சாத்தியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்று பேசுவதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்? யார் நம்பினாலும், ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பிரபாகரன் வந்து படை நடத்துவார் என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பொய்யர்களின் பேச்சுக்கெல்லாம் பெறுமதி ஏதுமில்லை. ‘உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்’ என்றொரு பழமொழி ஈழத்தில் உண்ட
 
 
மீனா: தமிழர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், மலையக மக்கள் என சகலருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு அமைய வேண்டுமானால் அது எப்படியிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: பிரச்சினை என்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக எங்கேயோ ஒரு தீர்வும் ஏற்கெனவே இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது முன்மொழியப்படும் தீர்வுகள் குறித்தும், சம்மந்தப்பட்ட தரப்புகள் கூடிப் பேசித்தான், சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் மூலம்தான் அமைதிக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். அதன் மூலம்தான் ஒரு சாத்தியமான தீர்வை வடிவமைக்க முடியும். ஆனால், இன்றைய ராஜபக்சே அரசு தீர்வு குறித்துப் பேசவே மறுக்கிறது. தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்கவில்லை என்று இவ்வளவு காலமாக இருந்த அரசுகள் சொல்லிவந்தன. அதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆனால், இப்போது ஒரு தீர்வை முன்வைப்பதில் அரசுக்கு என்ன தடையிருக்கிறது? ஆனால், ராஜபக்சே அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்புதான் தீர்வு குறித்தெல்லாம் பேச முடியும் என்கிறார். இந்த பொம்மை மகாணசபை ஏற்பாட்டுடனேயே திருப்தியடைய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவது மட்டும்தான் இனி நடக்கயிருக்கிறது.
 
 
 
இலங்கையில் இன அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்யும் சட்டமொன்றைக் கொண்டுவர இலங்கை அரசு அண்மையில் முயன்றது. நீதிமன்றம் அந்த முயற்சிக்கு இப்போது தடைபோட்டிருக்கிறது. எனினும், அரசு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி அவற்றின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கிறது. நாடு முழுவதையும் பேரினவாதக் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டத்தை நோக்கியே இலங்கை அரசு நகர்கிறது. ராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள்தான் கிழக்கில் மகாண சபையையும் யாழ் நகரசபையையும் கைப்பற்றியிருக்கின்றன.


இப்போதைக்குத் தீர்வென்றெல்லாம் ஏதுமில்லை. அதை ஏதாவது ஒரு தரப்பு மட்டும் முடிவுசெய்துவிட முடியாது. ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் இப்போது தமிழர்களிடம் கிடையாது.
 
 
மீனா: புலிகள் அவ்வாறான சக்திகளாக முன்பு இருந்தார்களல்லவா?
 
 
 
ஷோபாசக்தி: நிச்சயமாக இருந்தார்கள். ஆனால், பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து அதன்மேல் கட்டப்பட்ட அந்தச் சக்தியைப் புலிகள் தவறாக விரயம் செய்தார்கள். அவர்களின் இராணுவவாத அரசியலும் சர்வதேசச் அரசியல் சூழல்களைப் புரிந்துகொள்ள அவர்கள் மறுத்ததும்தான், இறுதி நேரத்தில் புலிகள் யுத்த நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தபோது கோத்தபாய ராஜபக்சே இது நல்ல நகைச்சுவை என்று கேலி பேசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்குமளவிற்குப் புலிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது; இறுதியில் அவர்களை அழித்தும் போட்டது.


புலிகள் வழியிலான அரசியல் வெறும் தோல்வி அரசியல் மட்டுமல்ல; தார்மீகம் அற்ற அரசியலும் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது. வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வில் நின்று பேசாமல், இன்றைய சர்வதேச அரசியல் சூழல்களையும் இலங்கைக்கும் அந்நிய வல்லாதிக்கவாதிகளுக்குமான தொடர்பையும், அதில் இருக்கும் பொருளியல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே இனித் தமிழர்களிற்குச் சரியான அரசியல் தலைமையை வழங்க முடியும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத எதிர்ப்புணர்வும் சனநாயக அரசியல் நெறிகளின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் போக்கு வெற்றிடத்திலிருந்து உருவாக வேண்டியிருக்கிறத
 
 
மீனா: வடக்கின் வசந்தம்’ தமிழரின் வாழ்வில் வீசுமா?
 
 
 
ஷோபாசக்தி: அரசியல் தீர்வினை வழங்கி ராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்வதன் மூலம் தான் வசந்தம் வருமே தவிர, இலங்கை அரச படைகளை தமிழர்களின் குடியிருப்புகளில் செருகிக்கொண்டு போவதன் மூலம் வராது. மாகாண சபை போன்ற அற்ப சொற்ப சலுகைகளுடன் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முடக்குவதற்கான கவர்ச்சி கண்துடைப்பே இந்த ‘வடக்கின் வசந்தம்’.
 
 
 
மீனா: ‘வசந்தம்’ இல்லையென்றாலும், போர்ப் பீதிகளற்ற வாழ்வாவது சாத்தியமென்றால் உங்கள் கிராமத்திற்குத் திரும்புவீர்களா?
 
 
 
ஷோபாசக்தி: இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எனது கிராமத்திலிருந்து கிளம்பினேன். இருபது வருடங்களாகிவிட்டன. அய்ரோப்பாவில் அகதி வாழ்க்கை மிகவும் கசப்பான வாழ்க்கை என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனது கிராமத்தின் மீது எனக்குப் பெரிய பற்றிருக்கிறது என்பதுமில்லை. ஆனால், ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும் ஒரு இடதுசாரி என்ற வகையிலும் எனது எழுத்தும் அரசியலும் வாழ்வும் முற்று முழுதாக ஈழத்துடன்தான் பிணைந்திருக்கிறது. ஊருக்குப் போக வேண்டும்; அதற்கான சூழலும் தருணமும் விரைவில் எனக்குக் கிட்டவேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் மீனா!
 
 
மீனா: நிச்சயமாக ஷோபா! உங்களுக்கும் உங்களைப் போலவே காத்துக்கொண்டிருக்கும் அத்தனை ஈழத் தமிழர்களுக்கும் அத்தருணம் விரைவில் கிடைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
 
 
 
‘அம்ருதா‘ (நவம்பர் 2009) இதழில் வெளியாகிய நேர்காணல்
 
 
http://www.shobasakthi.com/shobasakthi/?p=549



Keine Kommentare: