Donnerstag, April 22, 2010

லீனா மணிமேகலையின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு

லீனா மணிமேகலையும்,அவரது கவிதை மொழியும்-காரணமும்

-சிறு குறிப்பு.

லீனா மணிமேகலை இரண்டு கவிதைகள் மூலம் பெரும் அடிபாட்டுக்குள் கட்டாயமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இரண்டு வகையான தரப்பினரால் அவர் கவிதைகள் பிய்த்தெறியப்படுகிறது.கூடவே,அவரும் மிக மோசமான பாலியல் நடாத்தையில் பிறழ்வுடையவராகவும் இவ்விவாதங்கள் குறிப்பெழுதுகின்றன.

லீனாவின் கவிதை எவ்வளவுக்கு அவர்களால்"மோசமான"தென விமர்சிக்கப்படுகிறதோ அதேயளவுக்கு அவர்கள் லீனாவின்மீது சுமத்தும் பாலியல்சார்ந்த(விபச்சாரியென அர்த்தப்படும் தொனி)நடாத்தைகள் எமக்குச் சகிக்க முடியவில்லை.

இங்கே,இந்த மகான்களுள் லீனாவின் கவிதைகளில் பாலியல்சார்ந்த சொற்கள் அதிகமாகவும்,வாசிக்க முடியாத கொச்சையான மொழிகள்-தூஷணங்கள் கிடப்பதாக ஒருசாரரும்,மறுசாரர் மார்க்சிசத்தையும்,அதன் மூலவர்களையும் கூடவே தொழிலாள வர்க்கத்தையும் கொச்சைப்படுத்தும் மேட்டுக்குடி வக்கிரம் மலிந்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகை வாசிக்கின்றனர்.

இந்தச் சமூதாயத்தில்,இதுவரையான அனைத்துச் சமூக நடவடிக்கைகளிலும் கட்டமைத்த புனிதப் பிம்பந்தாண்டி மனிதர்கள் தத்தமது சுயநலத்தோடு காரியமாற்றியுள்ளனர்.இவர்கள் எப்போதும் தமது நியாயவாதங்களை மக்கள் நலனெனக்கொண்டிசம்பி இறுதியில் தமது தேவைகளை மிகக் கறாராகத் தகவமைத்துத் தக்கவைத்துள்ளனர்.இதன் தர்கம் என்னவெனில்,இதுவரையான புரட்சி-விடுதலை குறித்த அனைத்துத் தளத்திலும் இத்தகைய நிலைமைகள்மலிந்தே காணப்படுகின்றன.

மார்க்சையும்,லெனினையுஞ் சொல்லிக்கொண்டு மக்களை உயிரோடு வேட்டையாடுபவர்களும்,அதே மார்க்சையும்,லெனினையும் எதிர்த்தபடி மக்களை வேட்டையாடுபவர்களையும் நாம் காலவெள்ளத்தில் மூழ்கிக் காண்கிறோம்.இங்கே,"உண்மையான"புரட்சிகரக்கட்சி போலி மார்க்சியார்கள்-கட்சி-எதிர் புரட்சிக்காரர்கள் என்று நியாயம் சொல்லும்போது, இத்தகைய நடாத்தைகள் வேறொரு திசையை நோக்கித்தள்ளப்படுகிறது.அத்திசை பெரும் பாலும் பாதிப்புடையவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் பதில் அவர்களைக் கணக்கிலெடுக்காத சமூக யதார்த்தத்தை அவர்களது விழிமுன் நிறுத்தி விடுகிறது.

லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளிலும் பாதிப்புக்குள்ளான பெண்களது குரல் ஒலித்து ஒதுங்குகிறது.



இன்றுவரை இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சமூக அசைவியக்கமே வெறும் போலித்தனத்துடனும்,கபடத்தனத்தடனும்தாம் இயங்குகிறது.இந்தச் சமூக அமைப்பின் முதலாளியச் சாக்கடையை துப்பரபு செய்வதாகவும்,மாற்றியமைப்பதாகவுஞ்சொன்ன எத்தனையோ கொம்பர்கள் இறுதியில் அந்தச் சமூகத்தையே சாகடித்துத் தமது நலன்களை அறுவடை செய்தார்கள்.

இதற்கு ஐந்தொகை அவசியமற்றது.

புரட்சி,பெண்விடுதலை-திராவிட நாடு கேட்டவர்கள் முதல்பெரியார் சார்ந்து கொடிபிடித்தவர்கள்-ஈழவிடுதலைப் போராட்டஞ் செய்தவர்கள் வரை, எங்ஙனம் மக்கள்-பெண்கள்மீது விரோத அரசியல் செய்தனரென்பது-நாம் அறிந்த-கதைகள் ஏராளம்.சமூகத்தில் எத்தனையோ விரோதப் போக்குகள் ஒவ்வொரு பெயராலும் நிகழ்ந்தே வருகிறது.

பாதிப்புக்குள்ளான பெண்ணினது நிலையிலிருந்து-பழிவாங்கப்பட்ட பெண்ணினது நிலையிலிருந்து புரிந்துகொள்ளத் தக்க இருகவிதைகளை லீனா எழுதியுள்ளார்.இதை லீனா மணிமேகலை எழுதிவிட்டார் என்பதற்காக அதன் உண்மையான நியாயத் தர்க்கம் இல்லாது போக முடியாது.சமூகத்தில் மகான்களையும்,லீனா மணிமேகலை,மற்றும் நம்மைப்போன்றோரையும் இருத்தி வைத்திருப்பது இச் சமுதாய நியாயவாதங்கள்தாம்.எமக்கு நல்ல உதாரணமாக நம்முன் இருப்பது கனகி புராணம்.யாழ்ப்பாணியச் சமூத்தின் இரட்டைத்தன்மையை-ஆணாதிக்க வன்மையை,சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணைப்படுத்திய பாடுகளை அறிய கனகி புராணம் நமக்கு நல்ல உதாரணம்.

//நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரிஇ நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசையஇ வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.// கனகி புராணம்-3

லீனாவின் புராணம் அதை எவ்விதத்திலும் விஞ்சவில்லை.அதை எழுதியது ஆணாகவும்,இதை எழுதியது பெண்ணாகவும்-அப்பெண் இருபத்தியொராம் நூற்றாண்டில் வாழ்பவளாகவும் இருக்கும்போது யோனிமுடியை பிய்த்துப் போடுவதும் சுலபமாகத்தான் இருக்கும்.

என்னுடைய கேள்வியெல்லாம், பெண் உலகம் பூராகவும் ஏதோவொரு காரணஞ்சொல்லி ஒடுக்கப்படுகிறாள்-பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.அதற்கு எந்த நிறமும்-எல்லையும் கிடையாது.சமீபத்தில் திருச்சபைகள் சிறுவர்களையும்-சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்ற கடந்தாகாலம் நமக்குமுன் விமர்சனமாகிறது.அங்கே,ஆயிரக்கணக்கில் நடந்த பாலியல் வதைகள் ஜேர்மனியச் சமூகத்தில் இப்போது கிழவிகளாக இருக்கும் அன்றைய குமரிகளது தலைவிதியாக இருந்திருக்கிறது.அவர்கள் தமது வலியைச் சொல்லமுடியாது தவித்தபோது ஒரு கலகக்காரியின் அம்பலப்படுத்தலுக்குப்பின் ஆயிரம் அபலைகள் பாலியற்றுற்பிரயோகம்குறித்த கதைகள் காவி வீதியெங்கும் போர்க்கொடி தூக்குகின்றனர்.இது,பரவலாக நடந்து முடிந்தகதை.ஆனால்,தமிழ்ச் சமூகத்தில் பெண்பாதிப்படைந்தும் தனது வலியைப் பேசாது இருக்கும்போது இந்த லீனா அதுகுறித்துப் பேசும்போது சொல்லடிபடுவது எதனால்?இதுவே,எனது கேள்வி.

எமது சமூகத்தில் புரட்சி பேசியவர்கள்,பெண்விடுதலைக்காகக் குரல்கொடுதவர்கள்,ஈழவிடுதலை செய்தவர்களெனப் பல்லாயிரம் ஆண்கள்,பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிக்கொண்டனர்.இவர்கள் பேசிய பசப்பு வார்த்தைகளை லீனாவின் குரலுக்குள் இனங்காணத் தவறும் புனிதம் பொய்யானது.

இன்றுங்கூட நண்பனென வீட்டுக்குள்வருபவன் நாளை பொண்டிலையே கடத்திச் செல்பவனாகப் புலப்பெயர்வு வாழ்வில் தினம் ஒரு குடும்பஞ் சிதைந்து போகிறது.குடும்பங்கள் குலைவது முதலாளியத்தைத் தகர்ப்பதற்கென்றும் இவர்கள் சொல்வார்கள்.இலக்கியச் சந்திப்புச் செய்தவர்களில் எத்தனைபேர்கள் இத்தகைய பாலியற் சுரண்டலில் பெண்விடுதலைகண்டனர் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசினாற்றாம் நாம் உண்மைகளைக் கண்டடைய முடியும்.அதுவரையும் ஊகம்தாம்.

லீனா கவிதையெனப் பகர்ந்தது பெண்ணின் ஏமாற்றம்தாம்.புரட்சி-விடுதலைபேசியும்,ஆத்மீகம் பேசியும் எத்தனையோ பெண்களைச் சீரழித்து அவர்களது விருப்பின்றி அவர்களைச் சுரண்டியதை புரட்சியால்-விடுதலையால்-இறைவனால் சமப்படுத்தியவர்கள் குறித்து லீனா புனைந்த மொழி அத்தகையவர்களது கயமையைவிடக் குற்றமானதா?

மார்க்சையும்,லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சரண்டலுக்குள் தள்ளினார்கள்.இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப்பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள்-புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர்.அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

எனவே,லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது.

லீனா எழுதுகிறார் எப்படியென்று பாருங்கள்:

"நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
வன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்"

இதில்உண்மைகள் இல்லையா?அல்லது,இந்தவுண்மைகளை லீனா பேசப்படாதா?

தமிழ்ச் சமுதாயத்திடம் மட்டுமல்ல இந்தப் போலித்தனம் விழித்திருப்பது, போப்பாண்டவரே மன்னிப்புக் கேட்கும் நிலைக்காகிய, மேற்குலகத்திடமும் இந்த மூடுதிரை போலித்தனம் விழித்தே இருக்கிறது.அது,மட்டுப்படுத்த விரும்பும் இடங்களில்மட்டுமே, தமிழ்ச் சமூகமும் மற்றைய சமூகங்களும் வேறுபடுகிறது.தமிழ்ச் சமுதாயத்திடம் முற்றுமுழுதாகப் "பெண்மை-தூய்மை" எனக் கொடிகட்டிப்பறக்கும்.ஆனால், அங்கேதாம் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது அதீதமாக மலிந்து கிடக்கிறது.

பாலியல் பலாத்தகாரம் எப்படி நிகழ்ந்ததெனப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும் நீதீவான்கள் மலிந்த நமது சமூகத்தில் இந்த லீனாவையும் அத்தகைய நிலைகுட்படுத்தும் தருணம் மலியவே செய்யும்.

"யோனி,
ஆண்குறி,
விந்து"

குறித்த ஆய்வுகளைவிட, இவைகளுக்காகப் பலியாக்கப்படும் மனிதமனங்கள்குறித்து யோசிப்பது நன்று.

தமிழ்ச் சமூகத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முனைந்தால் அல்லது புரட்சி பேசிப் பாலியல் உறவுசெய்து பின் கைகழுவி விடப்பட்ட பெண்கள் பேசுவதாகவிருந்தால் நிச்சியம் லீனாவின் குரலைவிட மோசமாகவே இருக்கும்.எனவே,லீனாவின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு என்பதையும் யோசிக்க வேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.04.2010

2 Kommentare:

Anonym hat gesagt…

சிறிரங்கன் அண்ணை இதையே வன்னி முகாமிலை இருக்கிற பொம்பிளை ஒருத்தியோ தமிழ்நாட்டடில கிராமத்தில உலயும் பொம்பிளை ஒருத்தியோ சொல்லியிருந்தால் ஆத்திரம் வராது. ஆனா லீனாவின்ரை இன்னொரு முகத்தின்ரை குரல் தெரிஞ்சிருக்கிறதாலைதான் ஆத்திரம் வருகுது. இவ எந்த அளவில நீங்கள் சொல்லுற பெண்ணின்ரை பிரதிநிதி ஆகிறா? விடுதலைப்புலியளில இருக்கிற பிள்ளையள் புலியளால அடக்கி வைக்கப்பட்டிருக்கினம் எண்டு ஆம்பிளையள் நீங்கள் எல்லாம் பெண் நிலைப்பேச்சாளியளா கொஞ்சக் காலத்துக்கு முன்னாலைதான் நிண்டு ஆடினியள். இப்ப லீனாவோட பேச்சாளிகள் ஆகிறியள். உங்களுக்கு உந்த உரிமை இருந்தா வினவு தோழர்மாரின்ரை பெண்தோழியளுக்கு தாங்கள் பொம்பிளையள் எண்டு கேள்வி கேட்க உங்கள விட உரிமை இருக்கெல்லோ? கால் மாக்சைப் பற்றிச் சொன்ன இடத்திலை அரை மாக்சைப் பற்றி எழுதியிருந்தா எண்டா சோபாவும் சுகுணாவும் சும்மா விட்டிருப்பினமோ?

P.V.Sri Rangan hat gesagt…

//சிறிரங்கன் அண்ணை இதையே வன்னி முகாமிலை இருக்கிற பொம்பிளை ஒருத்தியோ தமிழ்நாட்டடில கிராமத்தில உலயும் பொம்பிளை ஒருத்தியோ சொல்லியிருந்தால் ஆத்திரம் வராது. ஆனா லீனாவின்ரை இன்னொரு முகத்தின்ரை குரல் தெரிஞ்சிருக்கிறதாலைதான் ஆத்திரம் வருகுது.//


பாதிப்புக்குள்ளான பெண்ணினது நிலையிலிருந்து-பழிவாங்கப்பட்ட பெண்ணினது நிலையிலிருந்து புரிந்துகொள்ளத் தக்க இருகவிதைகளை லீனா எழுதியுள்ளார்.இதை லீனா மணிமேகலை எழுதிவிட்டார் என்பதற்காக அதன் உண்மையான நியாயத் தர்க்கம் இல்லாது போக முடியாது.சமூகத்தில் மகான்களையும்,லீனா மணிமேகலை,மற்றும் நம்மைப்போன்றோரையும் இருத்தி வைத்திருப்பது இச் சமுதாய நியாயவாதங்கள்தாம்.