Mittwoch, August 04, 2010

மெய்நிகரது மேன்மை

விடுதலையெனுங் கருத்தால்
விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்


சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.

தமிழ்பேசும் சமூகத்தின் இருப்பே இல்லாதாக்கிய இந்தப் போராட்டத்துள் இதுவரையான அழிவு,சமூகசீவியச் சீர்குலைவு குறித்து எந்த மதிப்பீடும்-பொறுப்புணர்வுமற்ற வாசகப் பாரம்பரியம் நமது சமூதாயத்தினது பாரம்பரியமாகத் தொடர்கிறது.குண்டி மண்ணைத் தட்டிச் செல்வதுபோல் மக்களது அழிவு-இழி நிலை குறித்து இயங்குகின்றனர்.எங்கே-எப்படி நமது மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்,அவர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்களே மீளத் தம்மைத் தகவமைத்து மக்களது "விடிவுக்கு"அரசியல் செய்வதாக இந்திய-இலங்கைப் பாசிசத்தோடு கைகோர்க்கும்போது,அதை அப்படியே கிடப்பில் போட்டபடி நமக்கு அரசியலுரைக்கும் அதே புலி மனதுக்கு, இந்தப் பாசிசத்தின் எச்சங்கள் குறித்து எந்தக் கவனமும் இருக்க முடியாதுதாம்.நாமும் அதற்காக அவர்களது நிலையிலிருந்து ஒரு சமூகத்தை நோக்க முடியுமா?
புலியை எவர்கள் அழித்தார்கள்-தோற்கடித்தார்களென ஓராயிரம் முறைகள்தமிழரங்கத்தில் சொல்லப்பட்டதை மீளப் படித்துத் தொலையுங்கோ. புலியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி,அவர்களது அழிவு யுத்தத்தை"ஆக்க யுத்தமாக"க் கருத்திட்டவர்களும்,அதற்குச் சிந்தாந்த வலுக்கொடுத்தவர்களும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.

புரட்சிகரக் கட்சியெனப் பெயர் சூடுவதால்மட்டும் அக்கட்சியும் அதன் உபயக்காரர்கள்-உறுபினர்கள் புரட்சிகரமாகச் சமூகத்தை அணுகுவதாகவும்,செய்யவேண்டிய சூழலில் செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் அர்த்தமாக முடியாது.
இது,சிவசேகரத்துக்கு,சிவத்தம்பிக்கு,சண்முகரெத்தினத்துக்கு- இன்னுமேன், அனைத்துப் பல்கலைக்கழகப்"பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள்"அனைவருக்கும் பொருத்திப் பார்க்கத் தக்க அரசியலைப் புலிகளிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில்,தம்மைக் "கல்வியாளர்கள்-பேராசிரியர்கள்"எனத் தம்பட்டம் அடித்தவர்களும்-அடிக்காதவர்களும் இணையும் பாதை தமிழ் பேசும் மக்களது உரிமையெனும் ஒரு முட்டுச் சந்தியில். இதைக் குறித்தான தேடலோடு அணுகியுள்ள ஒவ்வொரு அரசியல் நகர்விலும், புலியினது ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் நடாத்தையே தமிழ்பேசும் மக்களது உரிமை போராட்டத்தில் மையமுற்று முழுத் தேசியவின ஒடுக்குமுறைகளுக்கெதிரான வினாக்களைப் புலியிடம் தேடவேண்டிய நிலையில், புலிகளது அந்நியச் சேவை-அடியாட் பாத்திரத்தை புரிந்தவர்கள்- புரியாது நடித்துப் புலிக்கு அங்கீகாரத்தை-சித்தாந்த வலுவைக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே,புரட்சிகரச் செயற்பாட்டோடு தன்னை இனங்காட்டும் சிவசேகரம் எந்தத் தர்மத்தின் அடிப்படையில் புலிகளது அழிவுப் போருக்கு எதிர்ப்பிடாது அல்லது மக்களிடம் உண்மையினை எடுத்துச் சொல்ல முடியாது மௌனித்தார் என்பதை வெறும் தனிநபர் செயற்பாட்டால் அளவிடமுடியாது.

சிவசேகரம் தன்னை இனங்காட்டும் கட்சியுடன் சேர்த்து, அவரை அணுகுவதில் எமது கருத்துக்கள் இருக்கிறது.தனிப்பட்ட சிவசேகரம் எப்போதோ காணாது போய்த் "தமிழ்த்தேசிய" அரசியலுக்கு முன்னால் தவிடுபொடியாகிக் கிடந்தார். அவருக்கு, அவரது தொழிலினது அழுத்தம்-அச்சம் சமூக ஆவேசத்தை அப்போது கொடுக்காதிருந்திருக்கலாம். இது,தனிநபர் பாதுகாப்புணர்வின் ஒரு அங்கமாகவும்-கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாவும் இருக்கலாம். என்றபோதும்,சிவசேகரம் தற்போதைய சூழலில் "புலி செய்த போராட்டத்தை விமர்சித்துப் புலியினது போராட்டம் அழிவுப் போராட்டமென்றும்,அது அந்நியச் சேவையில் மக்களைப் பலிக்கடாவாக்கிறதென்றும் உண்மையை மக்களிடம் எடுத்தியம்பிப் புலியினது ஆட்பிடிப்பு"குழந்தைக் கடத்தல்"அரசியலை அம்பலப்படுத்தியவர்களைச் சாடுவதில்" கவனமுற்ற சிவசேகரம்- ஏன், அன்று புலிக்குமுன் மௌனித்தார்?(இங்கே,மறுபக்கமென்ற அவரது பத்தி எழுத்துக்களுக்குட்கூட புலியினது விதேசியப் போராட்டங்குறித்தும்-புலியினது பாசிசச் சேட்டை-கொலை அரசியல் குறித்தும் எதையுமே இனங்காணமுடியாது!மக்கள் புலிகளிடம் அனைத்து ஆதாரத்தையுங் பறிகொடுத்தபடி, ஒரு புறம் புலிப் பாசிசத்திடமும்,மறுபுறும், பெருங்கொடிய இனவாத அரசிடம் தமது அனைத்துவுரிமைகiயும் இழந்து கொத்தடிமைகளாக இருந்தபோது இவர்கள் மெளனித்துக் கிடந்தனர்.)

இந்தச் சந்தர்ப்பத்தை ஒழுங்காக இனங்கண்ட புலியினது பினாமிச் சிந்தனையாளர்கள்,குறிப்பாக, எஸ்.கே.விக்கினேஸ்வரன்,சேரன் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் புலிகளது போராட்டத்தை தேசிய விடுதலைப் போரெனச் சொல்லி,அதற்கான பாரிய சித்தாந்த வலுவைக் கொடுத்தனர்.

இவர்களது இந்தச் சிந்தாந்த வலுவானது புலிகளது பாசிசத்தை மேலும் தமிழ்ச் சமுதாயமெங்கும் வலுவாகப் பத்திப்படர வைத்தது அன்றும்-இன்றும்!அனைத்துமே-புலிசெய்த அனைத்துமே தமிழ்த் தேசிய விடுதலையின் அங்கமாக இனங்காட்டினர். இதில் விக்கியினது பங்கு மிக அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரன்-சேரன் குழுவானது புரட்சிகரமான சிந்தனைப் போக்கைச் சிதைத்து நிர்மூலமாக்கியதற்கான எல்லா நியாயமும் சிவசேகரத்துத் தெரிந்தே இருந்தது. எனினும்,இந்த மனிதர் மௌனித்து அங்கீகரித்தார்.

இப்போது,தங்களுக்கும் புலிகளது பாசிசச் சிந்தாந்தப் போக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சேரனும் அவரது மைத்துனருமான விக்கியும் எல்லாக் கோவில்களிலும் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்கின்றனர்.அதே, நோய்தாம் சிவசேகரத்துக்கும்.இதில்,என்ன மாற்றமென்றால்-சிவசேகரம் புரட்சியெனப் பிதற்றியபடி, "அன்று புலிக்கும்-அரச பாசிசத்துக்கும் எதிராகப் போராடிய முகாமை வலிந்து சாடியபடி"தனக்கு இருப்புத் தேடுவது. இதுவொரு வகையில் பண்பாட்டுச் சேட்டைதாம்.

இதை அம்பலமாக்குவதென்பதும் மக்களைச் சார்ந்தியங்கும் சக்திகளது கடமையே!

மௌனித்தவர்கள், முன் வைத்து இயங்கும் அரசியலை விமர்சிப்பதென்பது அந்தச் சிவசேகரத்தின் தனிநபர் நடாத்தையை அல்ல. சிவசேகரம் உருவாக்க முனையும் அரசியல்-கட்சிசார் அரசியலின் நியாயவாதமானது காலவதியானது. அதற்கு எவ்விதத்திலும் தமிழ்பேசும் மக்களது விடுதலை-அரசியலுரிமை பற்றிப் பேசும் அருகதை -திறன் கிடையவே கிடையாது. ஏனெனில்,இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்தபடி தமிழ்ச் சமூதாயத்தையே ஒட்ட மொட்டையடித்த புலிப்பாசிசத்தின் தொடர்ச்சியைக் குறித்து இன்னும் எந்த மன்னிப்போ-பொறுப்போ எடுக்காத கயவர்களான மேற் சொன்ன புலிப் பினாமிகள் குறித்து இன்னும் மௌனிக்கும் இக் கயமைமிகு சிவசேகரம் கோஷ்டி,புலிகளை அன்றிலிருந்த அம்பலப்படுத்திய தளத்தை நஞ்சுத்தனமாகவும்-விஷமத்தனமாகவும் விமர்சிப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இன்றைய அந்நியச் சேவையில் போட்டிபோடும் புலிகளது பினாமிகள்-முகாங்களை இயங்க அனுமதித்துவிட்டு,மயிரைப் பிடுங்கும் கிண்டலும் -நஞ்சு வைக்கும் குள்ள அரசியலையுந் தொடரும் சிவசேகரம் மக்களுக்கான அரசியலைத் தட்டிக்கழிப்பதன் தொடர்ச்சியாகவே இது தொடர்கிறது.

அன்று,"மரபு மார்க்சியர்கள்"புலிக்குத் தாரைவார்த்துக் கையளித்த அனைத்துவகைச் சந்தர்ப்பவாதமும் இன்று, அந்த மக்களைப் பலியெடுத்து ஓயந்துபோனதும் மீளத் தகவமைக்கும் சந்தர்ப்வாதப்"புரட்சி"க் கோசத்தையும் அதன்வழி தம்மை முன்வைத்து அரசியல் பேச முனையும் கெடுதியான நோக்கையும் எவரும் மௌனித்து ஏற்க வேண்டியதில்லை!

இன்றைய சூழலில் எவர் மக்களைப் பற்றி நின்றும், புலியினது பாசிசச் சேட்டையை அன்று அம்பலப்படுத்திப் புலியிடமிருந்த கொடும் வதைகள் பெற்றார்களோ, அவர்களேதாம் மக்களோடு இனியும் அரசியல் செய்வதற்கும்-போராடுவதற்கும் அருகதையுடையவர்கள்! சந்தர்ப்ப வாதிகளும்-சதிகாரர்களும் இனியும் எமது மக்களை மொட்டையடிக்க விடுவதற்கு இது, புலிப் பாசிசத்தின் காலமல்ல. மாறாக, இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரக்காலம். இங்கே,இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களுடன் கைகோர்த்து, அவர்களது விடுதலைக்கான புரட்சிகரப் பாதையையும்-கட்சியையும் உருவாக்கும் பொறுப்பு அந்த மக்களிடம் இருக்கிறதென்பதும்,அதையொட்டி அவர்களைத் தகவமைப்பது புலிப்பாசிசத்துக்கும்-சிங்கள இனக்வொடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமது ஆயுள்வரை போராடியவர்களுக்கே உண்டு.

சந்தர்ப்பவாத அரசியலைப் புரட்சியின் பெயர்கொண்டழைக்கும் சிவசேகரம்போன்ற கடைந்தெடுத்த மக்கள் எதிரிகளுக்கு எந்த அருகதையுமில்லை - மக்கள்,புரட்சி குறித்துப் பேசுவதற்கு!
இவர்கள் தகவமைப்பது மீளவுமொரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மக்களைத் தள்ளிப் இலங்கைக்கான ஐக்கிய மக்கள் புரட்சியைக் காயடிப்பதற்க்கே!
இந்தவுண்மையை நாம் இனங்கண்டதன் பயனாகவே,மேற்சொன்ன முகாங்களை,அவர்களது சந்தர்ப்பவாத-சதி அரசியலை அம்பலமாக்குகிறோம்.இது,மீளவும் ஒரு விக்கி-சேரன் கூட்டு நமது மக்களுக்குத் தேசிய விடுதலை-புரட்சி பேசிப் புலிகளது எச்சங்களை மக்களுக்குள் திணிக்காதிருப்பதற்கே!இதை உணரும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிவசேகரம்போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியலோடு மக்கள் கவனத்தைத் திசை திருப்பிச் சதிகாரர்களை நமக்குள் ஊன்றுகிறார்கள்.இது,தமிழ்த் தேசிய அரசியலது அறுவடையிலிருந்து நமது மக்களை மீண்டெழ முடியாதவாறு அந்தச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்துத் தம்மைத் தகவமைக்கும் சதி அரசியலோடு சம்பந்தப்பட்டது.

சிவசேகரமும்,அவரது அனுதாபத்துக்குட்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியும் இதுவரை மக்களுக்கும் புலிக்குமிடையிலான அரசியலையும்,அதன் வழியாக விளைந்த சமுதாயச் சீர்குலைவையுங் குறித்து எந்த மதிப்பீடும் செய்யவுமில்லை,அதற்கெதிரான சித்தாந்தப் போராட்டத்தையும், அதன் வழியில் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தந்திரோபாயமுமின்றிச் சப்பைக் கட்டும் பாராளுமன்றச் சகதிக்குள் கிடந்து பிற்போக்கு அரசியலைத் தொடருகிறது. இது,ஒரு வகையில் எஞ்சிய புலிகளுக்குப் புரவலர்களாக இருக்கும் மேற்சொன்ன புலிப் பினாமிகளை மீளப் புனரமைக்கும் அரசியலின் வியூகமென்பது எனது பணிவான கருத்து.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.08.2010

Keine Kommentare: