"மாவீரர்" தினக்கொண்டாட்ட வர்த்தகச் சூதாட்டம்,
இறுதித் துயரமா அல்லது புதிய ஆரம்பமா?; எதைக்குறித்தான குவிப்புறுதி?; எங்கேயாவது -எப்போதாவது "தியாகத்தின்" இருப்புக்குத் தமிழ்ச் சமுதாயத்தில் நியாயமுண்டா?; பிறகு ஏன்?மீண்டும்,மீண்டும், அலைந்தழிந்து காலம் எம்மைவிட்டகல்கிறது. காலத்தில் வாழவே முட்டாள்த் தமிழர்களால் முடியவில்லை!
"உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.
இஃது, நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்!
யுத்தங்கள் ஏதோவொரு வகையில் தமக்கான நியாயங்களைச் சொல்லி, மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.ஏதோவொரு நாட்டில் இரண்டு வகைப்பட்ட-அல்லது பலவகைப்பட்ட மனித அடையாளங்கள் தமக்கான பங்குக்கு,உரிமையெனப் பெயரிட்டுச் சண்டை போடுகின்றன.அவற்றில் தமக்கு ஏதாவது இலாபமுள்ளதாவென உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தேசங்கள் தேடுதலைக்கொண்டு பக்கஞ்சார்கின்றன.இதற்கான தெரிவில் தத்தமக்கு படை,கூட்டுப்படையெனக் கட்டியும் எழுப்புகின்றன.இதன் குறுகிய வடிவமாகத் தமிழ்த் தேசியம் பேசிய கயவர்கள் கூட்டம் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்து விட்ட கையோடு வர்த்தகச் சூதாடிகளாக மாற்றமுறும் போக்கானது மேற்காணும் நலன்களை ஒத்தது.
அங்கே,"மனிதாபிமானம்"மசிரைப்பிடுங்கும்-இங்கே"தமிழீழ விடுதலை"நோட்டு வேட்டை செய்யும்.
இதற்கான தோதுகளாக நரவேட்டையாடப்பட்ட இளைஞர்களை "மாவீர்ர்" சொல்லிப் புகலிடத்தில் வர்த்தகஞ் செய்யும் புலிப்பாசிஸ்டுக்களை ஓடோட வெருட்ட முடியாத அவலங்களாகத் "தமிழீழ விடுதலை", "மாவீரர்"தினம்,தமிழர் உரிமை எனப் பாடப்படும்!
இந்த இழி உரையாடல்களால் ஏமாற்றப்படும் மக்களது நம்பிக்கை, புலம் பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் பண நோட்டுக் களாக இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்களிடம்குவியும்போது,அவர்கள் அதைத் தனிச் சொத்தாக்கிக்கொள்ளும் பாரிய வர்த்தகச் சூதாட்டமாக மக்களது உழைப்பை அபகரிக்கின்றனர்.
இதைத் தடுத்து நிறுத்தாதவரை மக்களது விடுதலைக்கான அர்த்தம்பொதிந்த உரையாடல்கள் மேலெழ முடியாது.இத்தகைய தமிழ்ச் சமுதாயத்தின் கிரிமினல் முகிழ்ப்பானது அந்த இனத்தையே வரலாற்றிலிருந்து தொடைத்தெறியும் பாரிய வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது.
கூடவே,இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில் புலிவால்கள்-பினாமிப் புலிப் பாசிஸ்டுக்கள் தமது மோசாடியான எண்ணத்துக்கொப்ப இன்று, பல பிளவுகளாகப் பிரிந்து பண மோசடியில் சந்தி சிரிக்க வைக்கின்றனர். இப்படித்தாம், பண்டுதொட்டுத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் "தமிழ் அரசியல் வியூகம்" தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.
பணமென்ற ஒரே குறிக்கோளுக்காக இந்தத் தமிழ் வர்த்தக மனதுக்குச் சரணடைந்து மாண்டுபோன புலித் தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களையும் நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடிகிறது. அத்தோடு,யுத்தத்தால் நெருக்கடிக்குள்ளானவொரு சமுதாயத்தின் அன்றாட நெருக்கடியைத் தட்டிக்கழித்துவிட்டுப் பணம் சேர்ப்பதில் அனைத்தையுமே கொச்சைப்படுத்தியும் விடுகிறது!
வர்த்தகத்துக்கான ஒரு ஸ்த்திரச் சந்தையாகவும்,அந்தச் சந்தையில் தொடர்ந்து தங்களது எண்ணக் கருக்களை (விடுதலை சொல்லிப் புகலிடத் தமிழரைச் சுரண்டிக்கொள்ளும் "தமிழீழம்-விடுதலை,தமிழர் தாயகம்" இன்னபிற இழி குணம்.) நிதிமூலதனமாக மாற்றும் >தடார் புடாலென< "மாவீரர்" தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.
சமீப கால இலங்கையில், புலிப்பினாமிகளது அரசியல் நகர்வுகள் யாவும் "ஆயுதப்புலிகளை" அழித்துவிட்டுக் கருப்புப்பொருளாதார மாற்றங்களுக் கூடாகக் காய் நகர்த்துவது அம்பலமாகி வருகிறது. இங்கே, புகலிடத்தில் புலிப்பாசிசமானது பலவடிவத்தில் இந்த வர்த்தகச் சூதாட்டத்தில் பாரிய நிதி மோசடி மாபியாக்களாகவே இருந்துகொள்கின்றனர். இவர்கள் துதிக்கும் "மாவீரர்கள்" அனுசாரணையானவொரு லேபிளாகவும்,அந்த லேபிளைத் தாங்கிவரும் பண்டாமாகத் "தமிழீழம்" தயாரிக்கப்பட்டுத் தொடர்ந்து புகலிடத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டே போகின்றனர்.இந்த மோசடியான வர்த்தகத்துக்கு அனைத்துப் புகலிட ஊடகங்களும் ஒத்தூதித் தமக்கான பங்கையும் உறுதிப்படுத்தி விட்டனர்!
இந்த நிலையில்,ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூக சீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம்"மாவீரர்"துதி பாடி இருட்டடிப்புச் செய்யமுடியாது.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.10.2011
Keine Kommentare:
Kommentar veröffentlichen