Sonntag, März 04, 2012

சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்....

வாசு,இன்று எனது காரினது இரயரை ஆணி பதம்பார்த்துவிட்டது.அதை மாற்றியாகவேண்டும்.காசு பெரும் முடை, நான்கு இரயர்களையும் மாற்றியாகவேண்டிய நிலையிலேயே வின்ரர் இரயரது நிலை.அதை இணையத்தில் மலிவாகத் தேடுவோமென வந்தால் உனது மொழியாக்கம் பெரும் தாக்கத்தையும்,பொருத்தப்பாட்டுடன் தரும் வலியும்-உண்மையும்,எதையோ எழுதிவிடத் தூண்டுகிறது.

எனது நிதி நிலையோ கிரேக்கத்தைவிட மோசம்.பட்ட காலிற்படும் என்பது என்வாழ்வில்சரியாகக் கிடக்கிறது.

இந்த நிலையுள்ளும் உனது மொழி எவ்வளவு உண்மையாக இருக்கிறது!அஃது,மூலத்தின் வீச்சைவிட வலிமையானது.இதை எவரால் உண்மையாகப் பொருத்த முடியுமெனில்-அஃது,நம்மாற்றாம்!புலம் பெயர்ந்த நம்மால் மூலத்தைவிட மொழியாக்கத்துள் பல வலிமையான உணர்வுகளைப் பெறமுடியகிறது.

அதையும் பார்த்தோமானால்:
>> குளிர் மண்டிய கொடுமிருளுள்
விரைவில் நாம் அமிழ்ந்து விடுவோம்,
குறுகிச் சென்றுவிட்ட எம் கோடைகளின்
வெயில் ஒளியே சென்று வா !
கொல்லைப் புறத்தின் கல்லுப்பாதையில் சாவின் அதிர்வுகளுடன்
பேரிரைச்சலிடும் மரம் சாய்து வீழ்வதை இப்போதே கேட்கிறேன்.<<
" குளிர் மண்டிய கொடுமிருளுள்..." மூலத்தை உருவகப்படுத்தியவனுக்கும் எமக்குமான பொருத்தப்பாடு வேறாகவிருப்பினும்,ஒரு நிலையுள் அவை பொருத்தமாகியும் விடுகிறது.


ஊரைவிட்டு,தேசம் தொலைத்து,கொடுமிருள் குவிந்து போர்த்திருக்கும் இருண்ட ஐரோப்பாவுக்குள் நுழைந்தோம்.இந்தக் குளிர் தின்றக் கொடுமிருளில் நாம் அமிழ்ந்தே போய்விட்டோம்.இப்படியாகவின்று கால் நூற்றாண்டைத் தொலைத்தோம்-கண் இமைக்கும் நேரத்துள்!

"குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள்..." ஆம்!நமது கோடைகள் எப்பவுமே நீண்டவை!அவை இதப்பானவை!இனிமையானவை.எமது முகற்றில் வந்தமரும் மணல் கலந்த சோழகத்துள்(தென்காற்றுச் சோழகம்) சொல்லாத சூரியக்கதிர்கள் தொலைந்து போனதிசையுள்- " வெயிலொளியே சென்றுவா"என்பதைத்தவிர வேறெதுவும் விசும்ப முடியாது தத்தளிக்கும் நமது புகலிட வாழ்வில், கொல்லைப் புற கல்லுப்பாதையாய் வாழ்வில் வடிவமைப்புச் சந்தித்துக்கொள்கிறது.

ஜந்திரமயமான உற்பத்திச் சக்திகளுக்குள் மாட்டிய நமது உறவானது சாவின் அதிர்வுடன்பேரிரைச்சலிட்டு ஈனக்குரல் ஒலித்தபடி சாய்ந்து போவதை நாம் தினமும் சந்திக்கிறோம்.நேற்றுப் பூராகவும் இந்த வலி என்னைத் துரத்தியபடி...
>> சினம், வெறுப்பு, நடுக்கம், பயங்கரம் கடினமானதும் தவிர்க்கமுடியாததுமான உழைப்பு என, குளிர்காலம் முழுவதுமாக என்னிருப்பினுள் நுழையப்போகிறது.
தன் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்என்னிதயமும் உறைந்ததோர் செந் தசையாகவேயிருக்கும் <<
கடினமானதும்,ஆன்மாவைக் கொல்லுவதுமான இந்த ஐரோப்பாவினது அவசரத்தனமான படைப்புருவாக்க எல்லை தினமும், புதியதைக் கேட்கிறது-புதுமைப்படுத்தலையும்,புத்திப் பிழிவையும் கோருகிறது.
முடியவில்லை!

நேர அழுத்தம்,நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத உழைப்பினது அநுபவத்தை மறுந்துபோக வைக்கிறது.மறு நாள் விட்ட குறையை நிதானமாகத் தொடரமுடியவில்லை!

என்ன செய்ய?

எனக்குச் சினம்,வெறுப்பு,நடுக்கம்.இதனால் எனது உழைப்பும்,அதை நல்கப்பட நான் உறவுகொண்ட உற்பத்திச் சக்தியும் அழகானதும்,சந்தோஷமானதுமான நாட்களை எனக்கும்,என்னைச் சுற்றியிருப்பவருக்கும் எப்பவுமே தரவில்லை!அதனால்,அந்த உழைப்பு எனக்கும் உண்மையிலேயேவொரு கொலைக்களமாக இருக்கிறது.எனினும்,அந்த உழைப்பை நிராகரிக்க முடியவில்லை!


நான் கூலியுழைப்பில் தங்கி உயிர்வாழ்வதாலும்,என்னைச் சுற்றி இன்னுஞ் சிலவுயிர்கள் தங்கியிருப்பதாலும் இந்தப் "பயங்கரமானதும்,கடினமானதுமானதும் என்றான தவிர்க்கமுடியாதானாகிப் போன இந்தக் கூலி உழைப்பு, கோடையென்ன குளிரென்ன அனைத்துப் பொழுதுகளிலும் எனக்குள் நுழைந்து எனது சுயத்தை அழித்தே விட்டது.நான் சுயாதீனமுள்ள உயிர் ஜீவியா உலாவரவில்லை!

எனது விலங்கே,எனது உடலாகிப்போனது.அது,உழைப்பான எனது படைப்பாற்றலைக் கொள்ளையிடும் இந்த ஜந்திரோத்தோடு பொருத்தப்பட்ட தற்செயல் நிகழ்வால் அது நரகமாகிப் போய்விட்டது!ஆன்மா நித்தியத்தைத்தேடுகிறது.திரண்ட திசையெங்கும் தேங்கிப்போன ஆன்மாவினது வலியுள் மூப்படையக் காத்திருக்கும் காலத்தை மறுத்து, என் ஆன்மா சிதைந்து போகிறது.அது, தனது காலத்தைத் தேடியபோது இருப்பை இழந்த காலத்துள் நித்தியத்திலிருந்து விலிகிக்கொண்டது! இந்த அந்நியப்பாடே எனக்கு இதயமொன்றிருப்பதென்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்த நரகத்துள்இதயமிடும் ஓலம் இருப்பற்ற பொருளின்றியமைந்த ஏதோவொரு இயக்கமாய் உலாவுறும் மூலதனச் சுழற்சியுள்சிக்கிப் பிழியப்பட்ட வலிகளால் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்(கவனிக்க அது இன்னும் சூரியனே) என் இதயமும் உறைந்து ஓர் செந் தசையாகவே இருக்கிறது.அதனிடம் அனைத்தும் தொலைந்து போய்விட்டது!ஈய்வு,இரக்கம்,பரிவு-பாசம் என்பதெல்லாம் அதனிடம் பொய்த்துப் போய்விட்ட பொழுதில் அது வெறும் உறைந்துபோனவொரு செந் தசையாகவே இருக்கிறது.

அற்புதவமான வரிகள் வாசு!
>> விறகின் ஒவ்வொரு துண்டும் வீழ்வதை
அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நாம் நிர்மாணிக்கும் தூக்குமேடைகூட இத்தனை
செவிடான ஒலி கொண்டதல்ல.
கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்பற்ற இடிகளால்
சாய்ந்து வீழும் கோபுரம் போலிருக்கிறது என் மனம்.<<
வாசு,நானும் இந்தப் பொழுதுவரை விறகின் ஒவ்வொரு துண்டின் வீழ்ச்சியிலும் எனது கவனத்தைப் புதைத்தே வந்திருக்கிறேன்.இந்த வீழ்ச்சி பேரிரைச்சலானது.அஃது,வீழும்போதும் பெரு விருட்சத்திலிருந்து பட்டுப்போய் விறகாகி வீழ்வதாகவே இருக்கிறது.சமீபத்துள் பதினான்கு வயதுப் பாலகன் விறகாய் வீழ்ந்து போனதன் ஒலி பேரிரைச்சலை எனக்குள் தந்தபடியேதாம் இருக்கிறது.எனக்குள் இது அச்சத்தைத் தருகிறது.எனது குழாம் நிர்மாணித்த தூக்குமேடைகூட இத்தனை செவிடானதும்,வலிமைகொண்டதுமான ஆன்மக்கொலையை இட்டுக்கொண்டதல்ல.அதுவொரு வெளியுள் விடிவெனக்கொண்டவொரு பாதையுள் இன்னொரு கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்புற்ற இடியாகவும்இருந்து வருவதை நாம் புரிந்தபோது வீழ்ந்து சிதைந்த விறகுகள் ஏராளம்.அதன் செவிட்டொலியோ சொல்லிய சேதிகள் என்ன?

நான் அறியேன்-புரியேன்!

என் திறப்பு என்னிடம் இல்லை!என்னைப் பூட்டிவைத்துச் சித்திரவதை செய்யும் காலத்தை நான் வென்றுவிடப்போவதில்லை.எனினும்,எனது மனம் சாய்ந்து வீழும் கோபுரம் போலிருப்பதில் எனது ஆன்மா நித்தியத்தைத் தேடியதால் மட்டுமே காலத்துள் தோற்கிறது.அதிலிருந்து அது நித்தியத்திலிருந்து விலகுகிறது.
>> சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்
மிக அவசரமாய் எங்கோவொரு சவப்பெட்டிக்கு
ஆணியடிப்பதுபோல் எனக்குக் கேட்கிறது.
யாருக்கு ? நேற்று கோடையாயிருந்தது. இதோ இலையுதிர்காலம்.
இந்த மர்மச் சத்தம் ஒரு புறப்படலுக்கான மணியாக அடிக்கிறது.<<
அவலம் மிக்கதும்,அருவருப்பானதுமான இந்த உழைப்பு விடியல் எனக்கும் சலிப்பூட்டுகிறது.இந்தச் சலிப்பூட்டும் விடியதிர்வானதன் தாலாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே காலம் என்னைக் கழுமரத்துக்கழைத்துச் செல்லும்போது எனக்குமுன் இன்னொருவன்-இன்னொருவள் அதில் தொங்கவைக்கப்பட்டுச் சவப்பெட்டியுளிட்டு ஆணியடிக்கும்போது நானும் இடைவிடாத அந்த ஒலிக்குத் தீனிபோட இரையாக்கப்படுகிறேன்.எனது இந்த ஊனத்துள் வரும் காலமாற்றம் எல்லாம் ஒரு சுழற்றிசைவெளியுள் சந்திக்கும் கணமாகிக்கொண்ட மாயையுள் நேற்றுக் கோடையாகிய கணமோ இதோ இலையுதிரும் இன்னொரு கணத்தைப் புதைக்கிதே இது மர்மமானதும்,மகத்தானதுமானவொரு பயண ஆயத்தத்தின்தேவையைச் சொல்லிக்கொண்டிருப்பதாற்றால்தாம் இஃது,மர்மச்சத்தமாகி ஒரு புறப்படலுக்கான மணியொலியாக ஒலிக்கிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.03.2012

Keine Kommentare: