தீபந் தொலைக்காட்சியில் சேனன்,நாவலன் கூடுகிறார்கள்-அனஸ் கேள்விகள் தொடுக்கிறார்.சுற்றிச் சுற்றிப் புலிகளது"தேசிய"-விடுதலைப் போராட்டங் குறித்துச் சின்னப் பயல் சேனன் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்குமே வகுப்பெடுக்கிறான்.பொழுதுக்கு "இரண்டு" வார்த்தையில் நாவலன் புலிகளையும்சாடிப் புலிவழியிலானவொரு தெருவில் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கப் பல புலி விசுவாசிகள்-கரச் சேவகர்களான முருகாநந்தன்-முருகதாசு-பக்த கோடி-கேடிகள் உட்பட அதே புலிப் புராணம்.இதுவொரு வகையிலான புலம்பெயர் அரசியல் நகர்வாச்சு!இதை மீறியவொரு நடப்பு-நியாயம் பேசுதல் இல்லாதத் தமிழ் மனவெளியில் "மக்கள்-மக்கள்"என்ற ஒரு மந்திரவுச்சரிப்பும்,"மகிந்தா-மகிந்தா"வென்ற பேய் ஓட்டும் வேப்பிலையடியுந்தாம் "தேசியவிடுதலைப் போராட்டம்"தோல்வியடைந்த சூழலுள் புலிவழிப் போராட்டம் பற்றிய புரிதல்!இன்று,நாவலன்கூடப் பிரபாகரனது அழிவில் மௌனித்திருக்கும் புலிப்பினாமிகளது பணமூட்டைப் பாதுகாப்புக் கவசந்தரித்த "தேசித்தலைவர் சாகவில்லை-ஒருநாள் தமிழ் மக்கள் முன் தோன்றுவார்" எனுந்தந்திரோபாயத்துள்கவனங் குவித்திருக்கும்போது,இதையே முள்ளி வாய்க்காலுக்குப் பின் கேள்வியாக்கித் தொண்டைத் தண்ணீர் வற்றியவர்கள் பெருவாரியாக இருகக் காண்கிறோம்.எது"அரசியல்-சாணாக்கியம்"எனப் புரிந்து போகதளவுக்குப் புலியினது உயில்,உரிமைக்காக எங்கெங்கோ,எப்படியெப்படியோவெல்லாம் வியூகம் வகுக்கிறது காலம்!
எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாகக் கண்டுபிடிக்காதவொரு சேனனுக்கு எரிக் சொல்கைம் குறிப்புணர்த்தும்போது சேனனுக்குச் சொறியுது.அந்தச் சொறிவில் குத்துகிறார்.குடைகிறார்.போதாதற்குச் சண்முகதாசனைக்கொணர்ந்து புலியைக் காத்துக் கக்கத்தில் வைக்கிறார் சேனன்.அவரைத் தூக்கிப் பையில் போடும் புலிப்பணப் பினாமிகளுக்கும் "சேனன்" என்பது தெருச் சில்லறையென்பதைவிட நாவலன் தாராளமான தேசியப் பேச்சாளரென்பதும் நிலைமைக்கொப்ப புரியவேண்டியதுதானே நாவலன்?கடந்த காலத்தைக் குறித்து ரொம்பவும் கவனமாகக் கையாளும் பல பத்துப் பேருள் நான் எப்போதும் "அங்கேயும் இல்லை-இங்கேயும் இல்லை!"
புலிவழித் "தேசியவிடுதலை"ப் போராட்டத்துக்குக் காரணமான தமிழ்த் (வி)தேசிய அரசியலுள்"தமிழீழம்" என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,புலிவழி முள்ளிவாய்க்கால்வரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,சேனன்-நாவலன் வட்டமேசைத் தீபந் தொலைக்காட்சியுரையாடல்அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றது?
சீச்சீ... நாவலன் கடந்த காலத் தவறுகள் குறித்து நியாயமான-உண்மைகளை விஞ்ஞான பூர்வமாக வெளிக்கொணரவேண்டியதற்காகக் குரல் கொடுக்கும்போது"நியாயங் கற்பித்தல்"என்பது மெல்ல உலக அரசியல் நிலவரத்துள் புலிகளது அரசிலாகவேதாம் தமிழ் மக்களது தலைவிதி அமையும் என்று சேனன் மந்திரித்துச் சொல்லியாடும் கலையில் கலைந்தது நமது புரட்சிப் பிணைவு!இதுதாம் "தேசியவிடுதலைப் போராட்டம்-2".
எனினும்,உலகு தழுவிய புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான"புலிமனது" எங்ஙனம் தோன்றுகிறது.இங்கேயும்,அங்கேயும்"உலகு தழுவிய"ஓரங்கமான புரட்சிக்குரிய காகத்தின் வர்க்கக் கூட்டிலென்னவோ குயில் முட்டையிட்டுக் கொண்டு தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்த்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை? சீச்சீ-கடுமை!
புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது! "இல்லை மடையா-இல்லை!புலிகள் செய்தது,சிங்களப் பேரினவாத அரசினது-ஆளும் வர்க்கத்தினது தமிழினவொடுக்குமுறைக்கெதிரான"தடுப்பு யுத்தம்".சாரம்சத்தில் அதுவேதாம் உலக நடப்பிலுங்கூடத் தேசியவிடுதலைப் போர்!"-ஓங்கிக் கத்துகிறான் சேனன். கடுமையாகக் குலப்பன் அடிக்குது!கசாயம் காச்ச நொச்சியிலையும்,தூதுவளையும் இல்லை நம்மிடம்!
இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடும்போது, புலிகள் தமது தலைமையைக்காப்பதற்காக அப்பாவி மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கியதென்பதை எரிக் சொல்கைம் சொன்னாற்றாமென்ன-இல்லை அவருக்கு முன் உலகமே சொன்னாற்றமென்ன-நாம் அதை எப்போதாவது செவிசாய்ப்பதற்குத் தயாராகவிருந்தோம்?இப்போதும், அஃதுதானே தொடர்கதை-விக்கிரமாதித்தன் தொடர்ந்தும் தோளில் தொங்கப்போட்ட வேதாளத்துடன் முருக்க மரம் ஏறி...
இதை மறக்காது-எந்த வகைத் தத்துவங்களுக்குள்ளும் திணித்துப் புரட்டாது,நியாயமாக நெஞ்சைத்தொட்டுப் பதிலளிக்க வேண்டும்.இப்பதில் புலிகளைத் தியாகிகளாவும் மாற்றுக் குழுக்களைத் துரோகிகளாக்கவும் எமக்குச் சேனன்அவசியமே இல்லை!-அல்லது,சண்முகதாசனும் அவரது புலிகளை ஆதரித்த"அந்தக் காலமும்"அவசியமேயில்லை!!இப்போது சீனத்து வெடியில் "தைப்பொங்கல்-தீபாவழி" கொண்டாட முழுவிலங்கை மக்களும் பழக்கப்பட்டுவிட்டார்கள்!அவர்களது எதிர்பார்ப்பெல்லாம் அளக்கின்ற அரிசியைச் சிங்களவன் அளந்தாலென்னத் தமிழன் அளந்தாலென்னக் கல்லற்ற, புழுத்தலற்ற அரிசியாய் உலை வெந்தாற் சரி!தமிழரது அரசியலுக்குச் சரியாக"அரிசி"தாம் பதிலைத் தந்துவிடும்!அந்த அரிசியில் தீர்வைக் கண்ட சீனனுக்குச் செருப்படியைப் புலம்பெயர் புலிகள் தினமும் வழங்க நிலத்துத் தமிழனது உலையில் தமிழீழமானது அரிசியாக வெந்துவரும் காலமிது-இங்கே,எந்தத் தாயும் தனது பிள்ளையைத் தட்டிப்பறித்துப் போருக்கு அனுப்பும் புலிச் சர்வதிகாரத்தைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை!அவளது பிள்ளைகள் அடுப்படியில் சோறு வேகும்வரை அணிவகுத்துக் காத்திருக்கின்றனர் வட்டிலுடன்!
எரிக் சொல்கைம் சொல்வதுபோல்- புலித் தலைமை சமூகக் குற்றவாளிகள்?
அவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்-சமூகவிரோதிகள் மட்டுமல்ல உலக மனித விழுமியங்கள் அனைத்துக்குமே விரோதிகள்!
"மக்கள் விடுதலையை-புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள் புலிகள்" என்பது, இன்று முள்ளி வாய்க்காலில் கிடைக்கப்பெற்ற அறிவுரை.
புலிகள், முள்ளிவாய்க்கால்வரை எமது மக்களின் பாலகர்களை போலிக் கோசத்தின் வாயிலாகக் காயடித்தும், கடத்தியும் அழிவு யுத்தத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தவர்கள்.இவர்களது இறுதிவரையான இந்த அழிவுப் போராட்டம் தியாகமெனும் போர்வையில் துரோகத்தை மறைக்கும் அழிவு அரசியல்.இது,கைக்கூலி அரசியல்-காட்டிக்கொடுக்கும் அரசியல்.கயவர்களின் கூட்டோடு நடாத்தப்பட்ட துரோக யுத்தம்.இது,சொந்த இனத்தையே கருவறுத்த அந்நியச் சகத்திகளுக்கு உடைந்தையான தமிழின விரோதிகளது அழிவு அரசியலின் விளைவுதாம் எரிக் சொல்கைமின் கூற்றும்-நடாத்தையும்!
புலத்துப் பணப்புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் "தோழர்களை" பலவூடகங்களுடாகப் பயன்படுத்துகிறார்களாவென நம்மை ஐயுற வைக்கும் தீபந்தொலைக்கட்சிச் "சேனன்-நாவலன்"உரையாடலானது மிகுந்த உச்சம்பெற்ற பொய்யுரையைக் கொண்டியக்குகிறது!
"புரட்சிகர" ச் சக(க்)திகள் நமக்குள் வரலாற்று மோசடிகளைச் செய்வது இன்னும் நம்பகத் தன்மையைக் கடாசி, அந்நியச் சக்திகளின் நோக்குக்குச் சார்பாகவே இருக்கிறது.இந்தச் சேனன் என்பது வெறுங் குறியீடுதாம்.
நிலத்து மக்கள் பாவப்பட்ட மக்கட்டொகுதியாகுமா?
அவர்கள், தமது கரங்களை நம்பிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகாரத்தின் தொங்குசதைகள் மக்களை இன்னும் மொட்டையடிக்கும் பாத்திரத்தை எடுக்கின்றார்கள். இஃது,ஏனிங்ஙனம் நடந்தேறுகிறது?-புலத்தில்நேரத்துக்கு நேரம் சூழ்நிலைகளுக்கமைய மாற்றுமுற்றுக் கட்டங்கட்டமான கூட்டுக்கள் தொடர்வதும்,திசைமாறுவதுமாக இருக்கும் இந்தத் தருணத்துள் அரசியல் அறம் என்பது என்ன?
"தமிழீழம்"எனும் பொய்க்கோசத்தை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகத் திணித்தும்,அவ் மக்களது சமூகவுளவியலாக்கி அதையே அரசியல் முன்னெடுப்பாகச் செய்த புலிகள், முள்ளிவாய்க்கால்வரை இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துள்ளார்கள்.பல இலட்சம் கோடிச் சொத்துக்களையும்,பாரம்பரியமாக வாழ்ந்த பூமியையும்விட்டுத் தமிழ்பேசும் மக்கள் நாடோடிகளாகியிருப்பதற்கும் இவ்வீழப்போராட்டமே காரணமானது.ஈழமென்பது சாத்தியமற்றதென்று தெரிந்தும் அதைத் தமது இருப்புக்காக உசுப்பேத்தி இதுவரை ஏழைமக்களின் குழந்தைகளைப் பலியாக்கிய புலிகள் துரோகிகளா இல்லைத் தியாகிகளா?இனிமேலும் புலிவழியான போராட்டக் கோசமும்,பொய்த்"தமிழீழ விடுதலை"எனும் சுத்துமாத்து விபரீத அரசியலும் யாருக்கானது?மேற்குலகுக்குச் சேவகஞ் செய்யும் ஒவ்வொரு தருணமும் இந்த விபரீதமான கோசம் அரசியற் பரப்புள் கோலாச்சுகிறது.அந்த விபரீதமான அரசியலது கடந்த காலத்துள் பல இலட்சம் மக்கள் தமது உயிரைப் பறிகொடுத்துச் சிதைந்து சாம்பலானதைக் குறித்து நம்மிடம் சரியான மதிப்பீடுகளுண்டா?-பதிவுகள்,வரலாற்றாய்வுகள் உண்டா?பேருக்குப் பின்னால் பட்டங்கள் போட மட்டுமா இலங்கையில் பல்கலைக்கழகங்கள் உண்டு?இதச் சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் கோலாச்சும் சேனன்-நாவலன் உரையாடல் ஒரு புள்ளியில் இருவரையும் இணைத்து இணக்கவுரையாடலாகவே அமிழ்ந்து போவதில் ஊக்கம்பெறுவது மீளவும், அதே புலிவழியிலான சதி அரசியலைத்தவிர வேறென்னவாகவிருக்கும்?
ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக: இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்கள் தமிழ்த் தேசியத்தின் வாயிலாகப் புரட்சிபேசக் கற்றுக்கொண்டவர்கள். ஈழஞ்சாத்தியமெனப் புரிந்துகொண்டவர்கள்.முழு இலங்கைக்குமான புரட்சியை நிராகரித்தவர்கள்.சோசஷலித் தமிழீழம் சார்ந்த கருத்தியல் தளம் உருவாக்கிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.புலம்பெயர்ந்து இப்போது, ஐரோப்பாவில் வாழ முற்படும் இளைஞர்கள் அதே புலிவழியிலான போராட்டத்தையும்"தமிழீழத்தையும்" குறித்து இன்னொரு பிரபாகரனது வருகைக்காக மனக்கதவை திறந்தே வைத்திருக்கின்றனர்.அவர்களைக்குறித்து நம்ம"புரட்சியாளர்கள்" அதிக அக்கறையோடு அரசியல் பின்னுகிறார்கள்!அதுள் ஓரங்கந்தாம் சேனன்?
எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை, உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடாத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.
சமூகத்தில் கருத்தியல் மனதின் தொடர்ச்சியானதை தனிநபர் அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் அரசியற் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இஃதே புலிகளுக்குத் தியாகிப்பட்டம் கொடுக்க அழிவு யுத்தத்துக்கு இலட்சியம் கற்பிக்கிறது!
சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்ததே!
சமீப காலமாகப் "புரட்சிகர"ச்செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலை கீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பதென்பதெல்லாம் நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது, பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.
இலங்கையானது தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது, ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.அல்லது இலட்சியம்-தியாமெனத் தனக்குத் தானே தீர்ப்புக் கூறுகிறது!
நாம்,இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் உதிரிகளாக வாழ்ந்துவரும் சூழலில்,பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் புலம்பெயர் தமிழ்க் குழுமத்திடம் உணரமுடியும்.
அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகளாக-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் புரட்சி-விடுதலை, ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இவைகளே இலட்சம் மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் படுகொலை செய்த அழிவு அரசியலை முன்னெடுப்பவர்கள்.இன்று புலிக்கு வக்காலத்துவேண்டும் சீமானுக்கும்-சேனனுக்கும் குறைந்தது மூன்று வித்தியாசமாவது சுட்டிக்காட்ட முடியுமா நாவலன்?
மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்த "ஈழப்போராட்டம்"செய்து முடித்தது.அதைக் குத்தகைக்கு எடுத்த புலிகள் முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கிய போராளிகள், தியாகிகளாகவும்,இலட்சியவாதிகளாகவும் உருவாக்கங் கொள்ளும் அரசியல் இங்ஙனமே நடந்தேறுகிறது.இது,மறுதளத்தைத் துரோகமென வர்ணிக்கும் செயலே இன்றைய புலிவழித் தேசியத்தின் மறுவுருவாக்கமாக மாறும் அபாயம் நமக்குள் அரும்புகிறது!சேனனிடமிருந்தும்,நாவலனது மௌனத்திலிருந்தும் இதைவிட எதையும் புரிந்துக்கொள்ளக்கூடிய அறத்தை அவர்கள்குறித்துரைக்கவில்லை!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2012
Keine Kommentare:
Kommentar veröffentlichen