Sonntag, November 25, 2012

பிளவுக்குட்பட்ட "மாவீரர்" மகத்துவம்!

பிளவுக்குட்பட்ட "மாவீரர்" மகத்துவம்!

கோசலனது இக்கட்டுரையானது (மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன்  ) மிக நியாயமான கட்டுரைதாம்.என்றபோதும்,சிலவற்றைத் தொட்டுணர்த்துவதும் அவசியமானதில்லையா?

இயக்ககங்களைத் திட்டமிட்டு அராஜகக் குழுக்களாகவும்,இராணுவவாத அடியாட்படையாகவும் உருவாக்கிய அந்நியத் தேசங்கள் இறுதியில், ஒரு இனத்தையே அடிமைகொண்ட வரலாறாகவே "தமிழீழப் போராட்டம்" ஊதிப் பெருத்தது.அதன், எச்சங்கள் மீள மீள, அதையே (துரோகி-தியாகி) தொடர்ந்து நயவஞ்சகமாகப் பணத்துக்குக் கொலை செய்யும் போது அதையே பெரும் விழாவாகவும் எடுத்துக் கொலைப்பட்ட பண பிணக்காளன் தியாகி ஆக்கப்படுகிறான்-மாவீரன் எனப் புகழப்படுகிறான்.

ஆனால்,பிரபாகரனது முழுக் குடும்பமுமே அழிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்ட பின்னும் அந்த மனிதரை அநாதவராக விட்டு ஒரு அரசியலை மிகவுயர்ந்த வியாபார நுணுக்கத்துடன் முன்னெடுக்கும் புலம் பெயர் புலிப் பினாமிகளைப் பின்னிருந்து ஆட்டிப்படைக்கும் இலங்கை,அந்நியத் தேச உளவு ஏஜென்டுகள்தாம் ஒரு மறைமுகமான (வி)தேசியவாத அரசியலை மீளத் தகவமைக்கின்றனரென்று ஊகிக்கலாம்.இத்தகைய (வி)தேசியவாத அரசியலைத் தொடரும் புலிப்பினாமிகள் தமது, வருவாய்க்கு அத்தகைய அரசியல் குறுக்கே நிற்பதில்லையென்பதால் அதைத் தொடரவும்,அத்தோடிணக்கம் கொண்டு  அதையே கடைப்பிடித்து மாண்டுபோன புலித் தலைமையைத் தொடர்ந்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.




எனவே,பிரபாகரன் தொடர்ந்து உயிர் வாழ்வது பணத்தை மட்டும் தமதாக்கும் முயற்சியாகக் குறுக்க முடியாது.இதுள், பின்னப்பட்ட நலன்கள் பணத்தைத் தமதாக்குபவர்களுக்கிசைவானதாவிருப்பதால் அதன் பிரதான காரணிகளை நாம் மறந்து போதல் ஆபத்தானது.

தமிழ்பேசும் மக்களது அடிமை வாழ்வைத் தொடர்ந்து நியாயப்படுத்தியும்,அவர்களைத் தமது பூர்வீக மண்ணிலேயே மிகச் சிறிய மக்கட் கூட்டமாக்கும் சிங்களக்குடிப் பரம்பல் மற்றும் பிரதேசப் பிரிப்புகளெனத் தொடரும் அரசியலுக்கு மாற்றான சிந்தனையும்,நியாயமான போராட்டப்பாதையும் தடையானது.

சரியான வழிகளைக் கண்டடைய முனையும் தேவைக்கானவொரு சூழலைத் திசைவழியை இல்லாதாக்க வேண்டுமானால் தொடர்ந்து அதே புலிப்பாணி விதேசியவாதமும்,இராணுவவாதப் பெருமிதமும் இருத்தி வைக்கவேண்டும்.மக்கள் தொடர்ந்து இத்தகைய திசைவழியில் தமது உணர்வுகளைத் தொடர்ந்து தகவமைக்கும்போது இதே, புலிப்பினாமிகளது இருப்புத் தொடரமுடியும்.அங்கே,பிழையான பாதையும்,வியாபாரத் தந்திரமும் புலிவழியான போராட்டத் திசைவழியும் பெருமிதமாகத் தொடரும்போது இலங்கை அரசும்,அந்நியச் சக்திகளும் நிலத்தில் ஒரு இனத்தையே அடிமைகொண்டு அவர்களது இருப்பை வரலாற்றில் அழித்துச் சிங்கள மயமாக்கப்படுகிறது.

இக்கட்டுரையாளர் முன்வைக்கும்"நல்லதோ கெட்டதோ"என்பது அந்நியச் சக்திகளது இன்றைய வியூகத்தைத் தொட மறுப்பதில் அல்லது அதைக் கவனத்தில் எடுக்காததில் ஒரு நியாயத்தைப் புலித் தலைமைக்கு வழங்குகிறது.அந்த நியாயமேதாம் தொடர்ந்தும் புலியினது அடியாட் படைச் சேவையையும்,அதன் வழியான அந்நியச் சக்திகளது தொடரும் சதிகளையும் புலம்-நிலம் எனத் தொடர வைக்கிறது.

மீளவும்,நான் சொல்வது: புலியினது அனைத்து போராட்ட வழி முறைகளும் ஆயப்படவேண்டும்.அதன் பாதகத்திலிருந்தே தொடருமிந்தச் சதிகளையும்,அந்நியச் சக்திகளது முகவர்கள் புலிவடிவிலும்,தேசியச் சக்திகள் வடிவிலும் ஏன் புரட்சிகாரர் தாமெனக் கட்சி கட்டி நடாத்தும் அந்நியச் சதி அரசியலிலும் புலம்-நிலமெனப் பின்னப்பட்ட இந்தச் சதியை முறியடித்து முன்னேறமுடியும்.




இதை மிக நுணுக்கமாகவுணரவேண்டுமானால் இன்றும் தொடருமிந்த இயக்கவாத மாயையும்,அதையே கருத்தியல் மனதாக்கி இளைஞர்களைத் தொடர்ந்த புலி வழித் தேசிய மாயைக்குள்ளும்,புலி வழியான போராட்டத் திசை வழிக்குள்ளும் தொடர்ந்து தள்ளி வரும் வீன் பல்கலைக் கழகத்துள் சிரைக்கும் பரணி கிருஸ்ணரஜனி[ http://www.facebook.com/parani.krishnarajani?ref=ts&fref=ts  ] என்ற மனிதரின் திடீர் வருகையும், அவரது புலித் தலைமை வழிபாட்டையும்,அதை மேற்குலகத் தற்கவியலுக்குள் இணைத்தும்,சார்த்தார் போன்றரது இருத்தலியலுக்குள் வைத்து விளக்கியும் பிரபாகரனைத் தொடர்ந்து வழிபாடாக்க முனையும் சதியை ஒரு தனிப்பட்டவரது அறியாமையென எடுக்கமுடியுமா?புலியின் வீரதீர இராணுவவாதத் தாக்குதல்களைப் போராட்டத்தின் உச்சமெனவுரைக்கும் இராணுவவாதப் பிரமையானது ஒரு இனத்தை அழித்துக்கொண்டதைத் தொடர்ந்து மறைக்கும் நபர்களும்,அவர்களையொட்டிக் கருத்தாடும் ஒரு வலைப் பின்னலும் ஒருவிதமான மாயைக்குள் புலம்பெயர் சிறார்களைக் கட்டிவைத்துக் காயடிக்க முனைகிறது.இந்தக் கருத்தியலை உடைப்பதற்குமுன் நாம் இத்தகைய கருத்தியலைப் பரப்புப் பின்னிருந்தியக்கும் சக்திகளை இனம் கண்டாகவேண்டும்.அவர்ளே இந்தப் புலிப் பினாமிகளைப் பல கூறுகளாக்கிப் பின்னிருந்து ஒவ்வொருவரையும் இயக்குகிறார்கள்.அவர்கள் புரட்சிகரர் வடிவிலும் நமக்குள் இருக்கின்றார்களென்பதை  எவரும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது!

எனவே,"மாவீரர்தினம்" இரண்டுபட்டதாற்றாம் நாம் பிளவு படுகிறோமென்ற காட்சி வடிவச் சதியைக்கூட நமக்குள் ஓகோவெனப் புகழ்ந்து நய வஞ்சகம் புரியும் சோபாசக்தியென்ற அன்ரனிகூட நமக்குள்ளே நியாயவாத அரசியல் வகுப்பெடுப்பார்.தமிழ் மக்களுக்குள் இருந்த பல உள் முரண்பாடுகள்(சாதியப் பிரச்சனை,பெண்ணடிமை,பிரதேசவாதம்,மதவாதம்)அனைத்தும் திடீரெனக் கூர்மைப் படுத்தப்பட்டதும்,அதன்வழி தலித்தியத்தைப் புலம்பெயர் மக்கள் மத்தியில் பரப்புரைக்குட்படுத்தி மக்களைத் தொடர்ந்து கூறுபோட்ட தேவதாசன்-சோபாசக்திகள்,கிழக்கைப் பிரித்து மகிந்தாவின் தலைமையில் ஒரு அடியாட்படை மாகாண சபையை உருவாக்கிய பிள்ளையானையும்,சின்னமாஸ்டர் எனப்படும் ஞானத்தையும் திடீரென வாழ வைத்தவர்கள் இந்த அந்நியச் சக்திகளது முகவர்கள்தாம்.இந்திய அரசினதும்,மேற்குலக-அமெரிக்க உளவு நிறுவனங்களது முக்கோண வலைப் பின்னலில் இலங்கையானது தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறுபான்மையாக்கிக்கொண்டே தனது நியாயத்தைப் பெரும்பான்மைப் புள்ளியிலிருந்து உருவாக்குகிறது.



மாவீரர் தினக் கருத்தியல் மனதானது தொடர்ந்து பிளவுப்படும் புலிகளது பண நலன்களது தெரிவில் புலன்(ம்) பெயர்ந்தவர்கள் நொந்து நொடியாவதுகூடக் கூர்மைப்படுத்தும்போது அதே புலிவழியானவணுகு முறைகள் இருத்தலுக்குட்படும்.அப்போது, தமிழர்கள் அதிலிருந்து மீண்டுவிடும் அபாயம் இல்லாது போகிறது.

தொடர்ந்து"மாவீரர்களுக்கு"மகத்துவஞ் செய்து பிழைப்பை-வியாபாரப் புத்தியைக் கருவாக்கி நகர்த்தும் ஒரு தலைமுறையானது, தமக்குத்தாமே மண்ணை வாரியிறைக்கும் ஒரு கூட்டம் நிலத்தில் விவேகமான அரசியலையா முன்னெடுக்கும்?

வியாபரிகளுக்கும் மக்கள் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?அதே சம்பந்தமானது நமக்குள் தனது நடாத்தையைச் செயலாக்கும்போது புரட்சி பேசுகிறவர்கள் "அடிமட்டம்,மேல்மட்டம்" குறித்த பார்வையில் நமது"தமிழீழப் போராட்ம்" செய்த இயக்கங்களையும் அவர்களுக்குப் பின்னாலிருந்த பிழைப்புவாதிகளையும் ,அவர்களது இன்றைய தொடர் கண்ணியையும் "சரியோ தவறோ" என்று, ஒரு விதமான விட்டுக்கொடுத்தல்,மென்மையான மெதுவான வருடல் அரசியலைச் செய்யமுடியாது.

நமது மக்களில் பல இலட்சம் பேர்கள் அழிக்கப்பட்ட போராட்டப் பாதையைக் கறாராக ஆய்வதும், அறிவதும், மக்களிடம் உண்மைகளை விட்டுக்கொடுக்கமால் சொல்வதும் அவசியமானது.

திடீர் இணைவுகள்,அவசரமாக அதே மனதோடு மக்களை அணிப்படுத்துவதும் மீள அந்நியச் சக்திகளுக்கே அனுகூலமாவிருக்கும்.அதற்காகத்தாமே பல கோடி டொலர்களை இறைத்து அமைப்புகளை [NGO] உருவாக்குகிறார்கள்.தமிழ்பேசும் மக்கள் விவேகமாகச் ச(சி)ந்திக்க முனையும் தருணமானது பல வடிவங்களில் இல்லாதாக்கப்படுகிறது.அதிலொன்று "மாவீரர்" மாயையும் தாம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.11.2012

Keine Kommentare: