Sonntag, April 03, 2016

இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...

இலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே ;இந்தவுண்மையச் சொல்வதும் அசியமில்லையா?

 யோசித்துப் பார்க்கிறேன்.இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அரசியலை ; இயக்க -கட்சிகளது கட்சிவாத அணுகு முறைகளைக் குறித்து நிறையவும் பேசியாகிவிட்டது.இனங்களுக்கிடையிலான முதலாளிய நகர்வு -வளர்ச்சிகள் ;முரண்பாடுகள் வரலாற்றுரீதியான ஐதீகங்களது பண்பாட்டுணர்வோடு அத்தகைய முரண்பாடுகள் கூர்மைப்படுத்தப்பட்ட விதம் ,ஒவ்வொரு அந்நியத் தேசங்களதும் இலங்கைமீதான அவைகளது அரசியல் ;பொருளாதாரப் புவிகோள நலன்களது தெரிவிற் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிப்பதிற் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான சிறுபான்மை இனங்களது எதிர்ப்பரசியற் போராட்டமாக மேலெழுந்தன. இந்த நலன்கள் யாவும் தத்தமது வசதிக்கேற்ப கொலனித்துவத்துக்குப் பின்பான இலங்கையிற் கூர்மையடைந்தன.

கொலனித்துவ அரசியல் அமைப்பும் ,அதைச்சார்ந்த இலங்கை அரச சட்டவாக்கமும் பேரினவாதத்தின் அலகுகளாக மாற்றப்பட்டபின் இலங்கை ஆளும்வர்க்கமானது தனது முரண்பாடுகளை பலவழிகளினும் திசைதிருப்புந் தந்திரவாதத்தோடு அணுகிய அரசியலுள் ,பலியாக்கப்பட்ட சிறுபான்மை இனங்களது உரிமைகள் இறுதியில் அந்தச் சிறுபான்மை இனங்களையெந்த அரசியலுரிமையுமற்ற இனக் குழுக்களாக இலங்கையில் குறுக்கின.இதன் பலாபலன் என்ன?

"தமிழீழப் போராட்டமென வெடித்த இந்தப் பாகுபாட்ட அரசியலுள் குருதிகுடித்த அந்நியத் தேசங்கள் நம்மையும் ,நமது நியாயமான அரசியற் போராட்டங்களையும் பிரிவினைவாதத் தீயிற் கொளுத்தின.


இந்த அணுகுமுறையானது இலங்கையிற் சிறுபான்மை இனங்களது அனைத்து வாழ்வியல் மதிப்பீடுகளையுந் தலைகீழாக்கின.போராட்டம் ஒன்றே ,அனைத்துக்குமான தீர்வாகக் கட்டியமைக்கப்பட்ட சமூகவுளவியலானது இறுதியிற் பல்லாயிரம் இளைஞர்களை வேட்டையாடியது.ஒருவரையொருவர் கொன்று தள்ளியபோது அதைத் தேசத்தின் விடிவுக்கான களையெடுப்பாகப் புலிவழியிலான போராட்டச் செல்நெறி நமக்கு வகுப்பெடுத்தது. இன்றிந்த அரசியலானது எதனால் மேலெழுந்ததோ அதன் அனைத்து வரலாறும் மூடி மறைக்கப்பட்டுப் பயங்கரவாத அரசியலாச்சு.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது கொலனித்துவத்துக்குப் பின்பான வரலாற்றுள் ,காலத்துக் காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையாடிக் குருதி குடிப்பதில் மிக நுணக்கமாகத் தனது வன்முறை யந்திரத்தைப் பயன்படுத்தியது. இதன் தெரிவிலுருவாகிய இராணுவவாத ஆட்சி முறைகள் [ Martial law ] தொடர்ந்து சிறுபான்மை இனங்களைப் பிளந்து நகர்த்தும் அரசியலுள் ,இலங்கை அரசின் ஆதிக்கத்தை இனவாத வியூகத்தோடுத் தமிழ் - முசீலீம் ;மலையக மக்களது ஐதீக நிலப்பரப்பில் தொடர்ந்து நிறுவுகிறது.அதன் விளைவின்று இந்தச் சிறுபான்மை இனங்கள் யாவும் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவொரு இனங்களாக இலங்கையுள் இருத்தி வைக்கப்படுகின்றனர்.அன்று,இத்தகைய பேரினவாதவொடுக்குமுறைக்கெதிராகவெழுந்த அரசியலுக்கு -போராட்டத்துக்கு மக்கள் பரவலாகத் தமது உயிரை -உடமையைத் தாரவார்த்தபோது ,இதுவரை கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் ; சிறுபான்மை இனங்களது வாழும் வலையம் [ Lebensraum ]சிதைக்கப்பட்டும் ;உடமைகள் சூறையாடப்பட்டும் ;நிலங்கள் சிங்கள வன்முறை யந்திரத்தால் அபகரிக்கப்பட்டும் [ Invasion of Eelam ]அவை, இராணுக் குடிப் பரம்பலாகச் (Military occupation )சிங்கள அரச ஆதிக்கத்தால் தற்போது நிலை நிறுத்தப்பட்ட இலங்கைச் சட்டவாக்கத்துள் [ laws of war ] உயர் பாதுகாப்பு வலயங்களாயின.

பல்லாயிரக்கணக்கான இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களது மண்ணானது சகல சமூக அசைவியக்கத்தையும் இராணுவஞ்சார்ந்த இயக்குமுறும் நிலைக்குள்[ Occupation ] பலியிடவேண்டிய நிலையின் நிமித்தம் அவர்களது பொருளாதார வாழ்வானது இராணுவத் தரகுக் குட்டி முதலாளியமாகத் தற்போது மாற்றமடைந்துள்ளது.

இராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் அலகாக மேலெழுந்த அதன் நலனுக்கேற்ற [ Between Government of Sri Lanka, Sinhala armed forces, and industrial support they obtain from the commercial sector in political approval for research, development, production]பொருளாதார நகர்வை அது சிறுபான்மை இனங்கள்மீது திணித்த வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்கு பின் நிகழ்ந்துள்ளது.

இந்த இலட்சணத்துள் நாம் போராட வேண்டிய நோக்கம் ;அதன் முறைமைகள் ;நெறிமுறைகள் யாவும் சிதைக்கப்பட்டு இராணுவத்துக்குச் சேவை செய்யுமொரு உறுப்பாகச் சிறுபான்மை இனங்களது வாழ்வியல் மதிப்பீடுகள் உருவாகிவிட்டென. இராணுவத்தை ஆதரித்து அவர்களைத் தாயாபண்ணிப் பிழைப்பு நடாத்தும் இந்தவினங்களது பொருள்வாழ்வானது மேலும் இனவாத அரச ஆதிக்கத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டே அதனொரு சேவைத் துறையாக( security contractors ) இந்த இனங்களை மாற்றிய அரசியலானது வருங்காலுத்துள் சிங்கள இனத்தினது பூமியில் இவர்கள் வேலைக்காக வந்தவொரு கூட்டமாகச் சொல்லி வைக்கும். 

முள்ளி வாய்க்கால்வரை இனப்படுகொலை செய்துவந்த சிங்கள அரசானது சிறுபான்மை இனங்களது பூமியிலெழுந்த அனைத்து அழிவுக்கும் பொறுப்பானது !

அது ,இத்தகைய அழிவுக்கும் இந்த அரசியலுக்குப் பொறுப்பும் அது சார்ந்த தார்மீக அரசியலறத்தையும் ஏற்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்புத் திட்டமிடப்பட்ட வியூகங்களால் (பிரதேசவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;சாதியவாதம் கூர்மைப்படுத்தப்படுவது ;யாழ்ப்பாணிய மேலாத்திக்கம் ;கிழக்கு மேலாதிக்கம் என்ற கூர்மைப்படுத்தல் ) இல்லாதாக்கப்படுகிறது.குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் இன்று போராட வேண்டிய இலக்குத் திட்டமிடப்பட்ட இந்த வியூகத்தால் [ Politische Ablenkungsmanöver ] தலைகீழாகத் திசை திருப்பப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பு ;மக்களைத் துரத்தியடித்த அவர்களது வாழும் வலயங்களைப் புதிய தெரிவுகளுக்டாகச் சந்தைப் பண்டமாக்கிக் கையகப்படுத்தும் சிங்கள ஆளும் வர்க்கமானது, தனது பலமான அடியாட் படையாகக் கட்டி வளர்த்த சிங்கள இராணுவத்துக்கு இந்தப் பண்டங்களைத் தொடர்ந்து சொந்தமாக இலங்கையில் ,பாதுகாப்பு வலயம் என்ற சட்ட வாக்கத்தை [The High Security Zones (HSZ) : Prevention of Terrorism Act (PTA) ]ஆயுதமாக்கி வைத்திருக்கிறது.

நாம் போராட வேண்டிய யதார்த்த இலக்குத் திட்டமிட்டு நம்மைப் பயன்படுத்தியே இல்லாதாக்கிவரும் அரசியலுக்கு "வேளாளியம் ;யாழ்மேலாதிக்கம் சாதியவாதம் ;தலித்துவ அரசியல் ;பிரதேசவாத நகர்வுகள் நல்லவொருவூக்கத்தைத் தொடர்ந்தளிக்கிறது.

இவற்றை அரசியற்றளத்துள் மிக மூர்க்கமாக முன்னெடுக்குஞ் சக்திகள் இதுவரை ,இலங்கையின் இராணுவாத அரச ஆதிக்கத்தைக் [ Invasion of Eelam ]குறித்தோ அன்றி அதன் ஆக்கிரமிப்பு ; தரகு இராணுவக் குட்டி முதலாளிய நகர்வுகள் குறித்தோ பேசியது கிடையாது.

இலங்கையிற் சிறுபான்மை இனங்களைத் தற்போது பூரணமாக வேட்டையாடும் இலங்கை -இந்தியாவின் ஆயுதமானது சிங்கள இராணுவத்தின் கையிலுள்ள உலோக ஆயுதங்களல்ல .மாறாக, இந்தப் பிளவுவாத ;நரித்தனமான திசை திருப்பம் [ Ablenkungsmanöver ] அரசியலே என்பதை மீளவுஞ் சொல்லி வைப்போம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
03.04.2016

Keine Kommentare: