Sonntag, März 04, 2007

காதலென்பது...

காதலென்பது...


இளையராஜாவின் மெட்டுக்களை முன் வைத்து...


ஒரு காலத்தில்-பருவ வயதில் எத்தனை விதமான கலர்க் கனவுகள் நெஞ்சில் கூத்தாடும்.அந்தக் கூத்து ஏதோவொரு வகையில் மனதை வளர்த்திருக்கிறது!மனதின் வளர்ச்சிக்கு இந்தக் கலர்க்கனாக்கள் வழி செய்வதை இலகுவில் மறுத்துவிடத்தான் முடியுமா?வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.

இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தரணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் பெற்றோர்கள் தமது அநுபவத்துள் உள்வாங்கியும் அதைப் பெரிதாக மதித்ததே கிடையாது!அங்ஙனம் மதித்திருந்தால் மனக் கல்லறைகளுக்குச் சாத்தியமே இல்லை!


இந்தக் கல்லறையுள் காணமாற்போன அந்தப் பெருவிருப்பு நம்மை உருவாக்கியதும் அழித்ததும் உண்டு.


ஒரு வயது-அது பருவ வயதே அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.

இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.நோயுற்ற சமூகமாக எனது தமிழ்ச் சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.

காதல்.

வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!

இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் கவிதாஞ்சலி.அவள் ஒரு மகுடம்.அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே நீ என்ன யங்கி போட்டிருக்கிறாய் என்ற சேட்டையில், அவள் கவிணைக் கிளப்பிய அந்தச் சேட்டையில் அவள் அழுது வீடுவரையும் போய் அப்பனிடம் அள்ளி வைத்தபோது, அந்த அவளின் அப்பன் என்னைக் காணும் போதெல்லாம் நகைக்கும் அந்தச் சந்தர்ப்பங்கள் என் காதலின் கோணங்கித் தனத்தை நெஞ்சில் உரசும்.அந்த உரசலில் உருவான நமது உறவுக்கு நெருப்பள்ளி வைப்பதே பெற்றோர்களேதான் என்றால் அந்தப் பெற்றோரே தமது வாரீசுகளுக்கு கல்லறை அடுக்கக் கற்களை மிக அழகாக வெட்டுகிறார்கள்.

அது ஒரு அழகான பங்குனி மாதம்.

எங்கள் ஊரில் இந்த மாதம் மிக எழிலாக இருக்கும்.தோட்டத்துப் பயிர்களெல்லாம் தங்கள் கொலுவான வளர்ச்சியால் நம் மனங்களை அசைத்துக்கொண்டிருக்கும் காலம் அது!அந்தப் பயிர்களில் எனக்குப் பிடித்த பயிர் புகையிலை!புகையிலை வளர்ந்து கொழுந்து முறித்து இலை இழுக்கும் காலத்தில் அதைவிட எந்தப் பயிரும் அவ்வளவு அழகாக இருக்காது.அந்தப் பயிருக்கு தண்ணி கட்டும்போதுதான் எனக்கு இந்தப்பாடல் அறிமுகமாகிறது.இது என் நெஞ்சில் குடிகொண்டிரந்த காதல் உணர்வின் எல்லையை விரித்து மிகவும் விரிவாக்கியிருக்கிறது.நான் தவமிருந்த அந்தப் பருவ காலத்தில் பயிர்களோடும் பறைவைகளோடும் பாடிப்பாடியே தவமிருந்திருக்கிறேன்!இந்த காலங்களில்தான் திரையிசையை அடியோடு மாற்றிய அற்புதமான இளைஞன் தன்னைத் திரையுலகில் வீறோடு நிறுவிக் கொண்டவன்.அவன் முன்வைத்த இசை நம்மை என்னவோ செய்திருக்கிறது.பறவைகளோடும் பட்ஷிகளோடும் நம்மைச் சேர்ந்து பாட வைத்தவன் அவன்.அவனது வருகையின் பின்னான ஒவ்வொரு பாடலும் மிகவும் நமது மனசைக் கவ்விக்கொண்டு நமது மகிழ்வின் அனைத்துச் சந்து பொந்துகளிலும் அது நுழைந்து விழையாடிக் கொண்டிருந்தது.

ஒரு கருவி.அது புள்ளாங் குழலாக இருந்தாலென்ன இல்லை மிருதங்கமாக இருந்தாலென்ன அதிலிருந்து மேலெழும் ஒலி நம் செவிகளில் அருவியைக் கொட்டியிருக்கிறது.நமது காதலுணர்வை மென் மேலும் ஒழுங்கு படுத்தியிருக்கிறது.காதலென்பதின் நுட்பத்தை இரசிக்கச் செய்திருக்கிறது.இந்தச் செயலே பின்னாளில் மனதின் ஒவ்வொரு மகிழ்விலும் மனிதனாக இருக்கிறாய் என்று என்னைச் செப்பியுமுள்ளது.நான் யார் என்பதன் முகிழ்ப்பில் விசும்புக்கு அதுவே காரணமானதாக இருக்கிறது.

இளையராஜா!

அற்புதமான இசைக் கோர்ப்பாளன்.நமது காலங்களைக் கடந்தும் இன்றும் பெரு விருட்சமாக இசையோடு இணைந்தவன்.எந்தத் திசையில் சிந்தித்தாலும் அவனது தாலாட்டுக்கள் நமது சிந்தனையைச் சீர் செய்திருக்கிறது.அனைத்துச் சுமைகளையும் அப்படியே சிதைத்தெறிந்து மனதை இளக வைத்து என்றும் பதினாறு வயதாக உணர வைத்தவனின் இசை இன்ப வெள்ளமாக இதுவரை என்னோடு சங்கமாககிறது.

அந்த இசையின் அனைத்து இயக்கமும் காதலில் சுரங்களைச் சொல்லியிருக்கிறது.நான் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த இசைக் காவியங்கள் வழி செய்தவை.

தோட்டத்துள் நின்றாடும் கவிதாஞ்சலிக்கு "தந்தனத் தந்தன தாளம் வரும்" நான் தலை குனிந்தபடி புகையிலைக்குத் தண்ணி கட்டுவேன்.அவள் மேலும் குரலெடுத்து,

"மச்சானைப் பார்த்தீங்களா
புகையிலைத் தோட்டுத்துள்ளே
தண்ணி கட்டுமவர்
என் மனசுக்குள் புகுந்து
குடும்பத்தை அமைப்பாரே
புள்ளை குட்டி தருவாரே"

என்று வார்த்தைகளை அடுக்குவாள்.அற்புதமானது என்னவென்று நினைக்கிறீர்கள்?

வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இந்த அற்புதங்கள் மாறுபடலாம்.ஆனால் ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தரணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தரணங்களைச் சொல்பவை.

மனித ஊக்கம் என்பது தன்னைப் பராமரிக்கத் தெரிந்து கொள்ளும் எதிர்பால் வினையோடு மிகவும் விருத்தியுறுகிறது.இந்தச் சந்தர்ப்பங்களை எமது பெற்றோர்கள் ஒருபோதும் உணர்வதேயில்லை!

"எத்தனைகோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா!" என்று பாடத்தெரிந்த நமது பெற்றோர்கள் இறைவனுக்குள் இன்பத்தைத் தேடியபோது நாம் எமது மனத்துக்குள் தோகை விரிக்கும் காதலணுர்வுக்குள் இன்பத்தைத் தேடியவர்கள்.எதிர்பால்வினையின்றி எந்த இன்பமும் தோன்றியிருக்க முடியாது.இதைச் சொல்வதும்,என் தலைமுறைக்கு அதை அழகு படுத்துவதும் மிக முக்கியமாகும்.

காதலை அழகாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு நிகராக எவரும் தமிழ் மொழிக்குள் இல்லை.

தன் கவிதைகளை அழகு தமிழில் கம்பீரமாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு வீரியம் சேர்த்தவள் கண்மணி என்பதை நான் அறிவேன்.

எமது தலை முறைகள் இப்போது கூவிக் கொள்ளும் வயதுக்கு நெருங்கிவிட்டார்கள்.நெறிப்படுத்தும் தரணங்கள் எம் முன் வந்திருக்கிறது.மிக அவதானமாக அணுகுதலுக்கு என் அநுபவம் வழி சமைக்கும்.

இன்றைய தரணத்தில் எத்தனையோ தவறுக்கும் இழப்புக்கும் மத்தியில் சின்னஞ் சிறுசுகள் போராடுகிறார்கள். அவர்களால் போருலா என்றும் இலக்கியம் படைக்க முடிகிறது.தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தான் தற்செயலாகத் திறந்த குண்டு கொல்லப் போகுதென்று தெரிந்து அந்தக் குண்டைத் தன்னோடு அணைத்து மற்றச் சக போராளிகளைக் காக்கவும் தெரிந்திருக்கிறது!

எவ்வளவு மகத்தான வினை பாருங்கள்.

இவர்களுக்குக் காதலிக்கத் தெரிந்திருக்கிறது.சக மனிதர்களின் மனித அழகைத் தரிசிக்கத் தெரிந்திருக்கிறது.என்றபோதும் தவறான நடத்தைகளின் பயிற்றுவிப்போடு சக மனிதனைக் கொல்லவும் தெரிவு செய்யப்பட்ட தரணங்கள் அவர்களை வற்புறுத்துகிறது.அற்பத்தனமாகக் கிடந்துழலும் இன்றைய நமது வாழ்வுக்குள் இவ்வளவையும் செய்வது இந்தக் காதற் தரிசனமே!

தானும் தன்னைச் சுற்றிய நலமுமே வாழ்வாகச் சுய நலக் காரர்களாக இருந்த நம் பெற்றோர்களைப் புழுதிதோய்ந்த கல்லொழுங்கைகளுடாக இழுத்துச் சென்று எத்தனையோ கடலேரிகளுடாகக் கடக்க வைத்து, வாழ்வின் ஒவ்வொரு தரணங்களையும் அநுபவிக்க வைத்த இந்தப் போராட்டச் சூழலிலும் எனது யாழ்ப்பாணத்தவர்கள் இன்று வாழும் மிக மோசமான சமுதாயச் சீர்கேட்டில் எங்கோ தவறிருக்கிறது.சுயநலமும்,படாடோபமும்,காழ்ப்புணர்வும் கொண்ட அரை குறை மனிதர்களாக அவர்கள் மீளவும் தமது வாழ்வைத் தரிசிக்கும்போது அடிப்படையில் எங்கோ தவறிருக்கிறது.


எத்தனை வகையான அழிவுகளைப் பார்த்திருக்கிறோம்.ஒரு தலை முறையே தன்னைப் பலி கொடுத்து வருகிறது.

மழலை மொழி மறப்பதற்குள் இந்த மௌனப் போராட்டத்தில் தன் உடலையே வேள்வியாக்கும் அற்புதமான சின்னஞ் சிறார்களை எந்த மதிப்பீடுகளால் நான் வரையறை செய்ய முடியும்?

பல முறைகள் நான் ஏதேதோ சொல்லியிருக்கிறேன்.

காய் அடித்தலென்ற சமூக உளவியலை அளவுகோலாக்கியும் வைத்திருப்பவன் நான்.எனினும் போராடும் தரணங்களில் அவர்களைத் தேச பக்தர்களுள் அடக்குபவனும் நானே!


ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்ககைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!


இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.


இளையராசாவின் குரலில் பாடப் பெறும் ஒவ்வொரு பாடலும் ஏதோவொரு விதத்தில் காதலின் சுவையைச் சொல்பவை.அது பருவ காலத்து மொழியையோ அல்லது அன்னையைச் சுட்டி"அம்மாவென்றழைக்காத..."என்றோ அல்லது எனக்கொரு காதலி இருக்கின்றாள்,அவள் பெயர் மூகாம்பாள்"என்ற இறைத் தாலாட்டிலோ இசையின் தொடர்ச்சி காதலைத் தாலாட்டுவதில் மனிதப் பொதுகணத்தைச் செம்மையாக்கும் இசைக் கோலங்களாகவே மிளிர்கிறது.

என் சிறுசுகளுக்குப் பருவ வயதாகிறது.நான் எனது பெற்றோர்களைப் பின்பற்றுவேனா அல்லது என் அநுபவத்தைப் பின்பற்றுவேனா என்பது அந்தச் சூழ்நிலையில்தான் தெரிந்துவிடப் போகிறது.அதுவரையும் எனது பெற்றோர்களைத் திட்டி எனது முதற்காதலைப் பெருமைப் படுத்துவதில் எனக்கு நானே நிகரானவன்.Get Your Own Music Player at Music Plugin


இந்நோக்கோடு இப்பாடலைக் கேட்போமா? இப்பாடல் முன் எந்தச் "சக்கரை நிலவும்" தேய் பிறைதான்!


ஜனநாகம்
04.03.2007

Kommentare:

Jananayagam hat gesagt…

நாம் போடும் பாடலானது இப் பக்கத்தைத் திறந்தவுடன் இசைக்க ஆரம்பிக்கிறது.இது தன்னியல்பாக இயங்குவதை எங்ஙனம் நிறுத்துவது?

எவருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்!-பிளீஸ்!

கொழுவி hat gesagt…

தந்த கோடிங்கில ஒரு இடத்தில true எண்டு இருக்கும். அதாவது autostart என்பது true எண்டு. அதை false என மாற்றி விடுங்கள்.

Jananayagam hat gesagt…

நன்றி,கொழுவி!ஒருமாதிரிச் செய்து முடித்திட்டன்.

Anonym hat gesagt…

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)