Sonntag, September 09, 2007

போக்கிடம்(புனைவு)

போக்கிடம்(புனைவு)

நான் தனிமையாக இருந்து கொள்கிறேன்.அதுவொரு கல்லாசனம்.ஒரு தொல்லையுமில்லாமல் நான் இருக்கவேண்டும்.ஆனால்,எங்கு போனாலும் தீ எரிந்து கொள்கிறது!,மனம் போக்கிடம் தேடியலைகிறது.வெகுவாக நான் அழிந்துவிட வேண்டும்,முடியவில்லை.

காற்று நன்றாக வீசி,குளிரை நிறைவான வகையில் அள்ளித்தெளிக்கிறது.நானிருக்கும் இந்தக் கல்லாசனம் எனக்கு மட்டுமே பொருத்தமாகக் கட்டப்பட்டவொரு சிம்மாசனம்.இதில்,என் வாழ்வின் நெருடல்கள்,மீட்டல்களில் சிக்கித் தவிக்கவேண்டிய ஒரு நியதிபோலும்

என் வசமுடையவை சிலருக்குச் சின்ன விடயமாகவிருக்கும்,எனக்கும் அப்படித்தாமிருந்தது நேற்று வரையும்.ஒன்றுடனொன்று சேர்ந்து கொல்கின்றன இன்று.
நான் மெளனத்தின் பிரதிநிதியல்லவே,உள்ளம் மெளனத்தின் பிடரியில் ஓங்யோங்கி அடிக்கிறது.

ஒற்றையடிப் பாதையொன்றில் நேற்று நடக்கின்றேன்.கூடவே என் சுயத்திற்கு சங்கேத பாஷையில் சமாதானஞ் செய்கிறேன்.பீறிட்டெழும் உணர்வுகள் என் சுயத்திற்குச் சமாதிகட்டிகொண்டிருக்கின்றன.மொத்து,மொத்தென்று உணர்வுக்கு மொத்த முடியவில்லை.

அந்தப் பாதை தொடர்ந்து கொண்டது.நான் ஏதோவொரு உந்துதலால் தள்ளப்படுவதுபோன்றவொரு உணர்வோடு மேலும் நடக்கிறேன்.

வீடு திரும்பி விடலாமேயென மனது பிராண்டிக் கொண்டது.ஆனால் முடியவில்லை.உணர்வினது அவசியத்துக்கு எதுவுமே முட்டுக்கட்டையிடத் தகுதியின்றி ஒதுங்க,நான் முடியாது திணறிக்கொண்டேன்.

உருக்குலைந்த நியதிகளாய் என் நியதிகள் மாறவேண்டுமென்றிருந்தால் அ·து நடக்கத்தாம் போகின்றது.சரிபோகட்டும்.என் விழிகள் உஷ்ணக் கொதியில் வெந்து,குருதி தோய்ந்த கோலிகள்போல் வெளியில் தோன்றி,உப்பிக்கொண்டன.

யாராவது நம்ம சனங்கள்...அதாவது, இப்போதையப் பையன்கள் கண்ணுற்றால் என் கோலத்திற்கு இன்னுமொரு பட்டத்தைச் சும்மா தூக்கித் தந்துவிடுவான்கள்.ஏற்கனவே,எனக்குக் "காய்ச்சல் மாமா"என்றொரு அருமையான பட்டத்தைத் தந்தாங்கள்-எழுபதுகளில் நான் பட்டம்பெற எத்தனை குத்துக்கரணங்கள்போட்டேன்!

நல்லவேளைதாம்.எந்தத் தமிழ்ப் பயல்களும் காணவில்லை இந்தக் காய்ச்சல் மாமாவை.ஆனால்,ஜேர்மனியர்களும்,வேறு சனங்களுமாக என்னைப் பின் தொடர்வதாகவும்,விலத்திச் செல்வதுமாக இருக்கிறார்கள்? அப்படியொரு உணர்வும் குறுக்கே வந்து தொலைவது இந்தச் சலனப்பட்ட மனதுக்குத் தெரிந்து கொள்கிறது.அவர்கள் எல்லோரும் மேவிக்கொள்ளும் தரணம் என்னைப் படுத்தும் இந்தக் கோதாரிக்கு அபத்தமாக இருக்கிறது.

அந்தக் கோபுர வாசலை நெருங்க இன்னுஞ் சில மீற்றர்களே இருக்கிறது.

கைலாசத்தின் கதவு தானாகத் திறந்து,என்னைப் பச்சைக் கூட்டோடு பரலோகத்துக்கு அனுப்புவதற்காக உள்ளே அழைக்கிறது.அந்தத் தவம் நிறைந்த ஆனந்தம் அற்புதமாக என்னுள் பரவ பிறப்பின் அர்த்தம் புரியும் ஒரு திசையில் இந்தப் புதினம் புண்ணாக்கும் என் ஆன்மாவை.பொழுது சரிந்துகொண்டது.அப் பகுதியல் கால்வைத்ததும் மனத்தின் அதியுச்சக் கிலேஷம் சிலிர்த்து என் சுயமாக விரிந்தது.எனக்குள் முக்காடிட்டிருந்த என் உண்மை முகம் இதுள் தொட்டிலிட்டு ஆடிக்கொண்டது.நான் காலத்தில் வாழும் ஒரு நிலையில் என் பாலீர்ப்புப் படலம் பாய்விரிக்கும் அன்றைய தரணத்தை மனதுள் விரித்தது.மாங்காய் பறித்து நாமிருவர் புசித்த எச்சில் இனித்த பொழுதில், உதட்டில் குருதி கசியும் ஒரு நிலையில்-எங்கள் காதல் உயிர்த்திருந்தது.இது அன்று.இந்த விடாய் பானத்தை நாடிச் செல்லும் தவித்த மனிதனாய் என்னைத் துரத்துகிறது.இந்த விடாய் ஊனமிக்கதான செயலாக எனது பக்க நியாயங்களால் தீர்ப்பெழுதிக் கொள்ளும் எந்தத் தரணமும் இப்போது இல்லை.நான் அந்தக் கோபுரத்துள் நுழையும் இந்தக் கணம்,நீரின்றித் தவித்த மீனின் நிலையாய் இருக்கிறது.அவ்வளவு வேட்கை-வேதனை!
இதுவொரு சாபக்கேடா அல்லது உடலுடன் கூடப்பிறந்த வஞ்சக நெஞ்சத்து நஞ்சா?வடிவமில்லா இந்த வம்பு உணர்வுக்கு வதைபடும் தரணங்களும் உண்டுதாமோ?

எனக்கு வயது அறுபது கடந்திட்டபோதும் உடலின் வலுக் குறைந்தபாடில்லை.அது பதின்ம வயதுப் பேரப்பிள்ளையின் உருவத்தோடு என்னுள் புகுந்து என் மனதின் பொழிவுகளை வலுப்படுத்தியதால் நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்தத் தோல்வி "நான் மட்டும் எப்படி?...,ஏனிந்தப் பிறப்பில் மட்டும்தானே உயிர்த்திருக்க முடிகிறது,நாளை மடியும்போது அந்தப் பழுப்புடல் ஏக்கம் என் கட்டையை வேகாது விடாப்பிடியாய் தீயிலிருந்து மறுத்தொதுக்கினால் என்னதாம் பண்ணுறதாம்"என்று எனக்குள் விரிந்ததும், நான் இதைக்"கொடூரம்,என்னால் சகிக்க முடியவில்லை,ஊரை நினைத்து நான் தினம்,தினம் சாகமுடியாது"என்று சமாதனஞ் செய்தேன்.

புறத்தே என்னைக் கொல்லும் சூழல்,ஜேர்மனியின் கோடைகாலம் என்னைக் கொல்லுந்தரணத்தையும் அப்படியே அழைத்து வந்துவிடுகிறது.இது என்னைக் கொளுத்திச் சாம்பலாக்கும்.நான் இதனை வெல்லத் தவமிருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் இதயத்துள் முள்ளாய் குத்தும் அந்த உடல்கள் தொப்புள் காட்டிக் கண்ணடிக்கிறது.முடியவே,முடியாது!அந்த மாமுனிவர்களும் அடங்கிய அற்புதத் தொப்புள் குளத்தில் நீரில்லை தெள்ளத் தெளிந்த தேனால் நிறைந்த தேகப் பரப்புள் இந்தக் குளம் தேவலோகத்துக் கனவுகளைக் கூட்டிவந்து என் குருதியைக் குடிக்குந் தர்மத்தை எனக்கு ஒழுங்குபடுத்துகிறது.நான் ரொம்பப் பாவம்.தொப்புளிலிருந்து சாணளவு இறங்கப் போடும் ஒவ்வொரு உடையிலும் உழுத்துப்போகும் உணர்வுக்குள் எனது உணர்வும் அடக்கம்.அந்த உடையைத் தாங்கும் சதைப் பருக்கையும் மானுடம்தாமே?இல்லை என்னைப் போன்றதொரு பாலீர்ப்புப் பிண்டமா?பாவிகள் இரட்சிக்கப் படுவார்கள். நீ,படும் பாட்டில் இதுவும் தேவைதாம்.

இப்போது, நான் இந்த ஈர்ப்பு வலயத்துள் மெல்ல வருகிறேன்.

காலம் மிகப் பின்னோக்கி நகர்கிறது.இளமையும்,பொலிவும் ஒருங்கே ஊஞ்சலிட ஒருத்திக்குப் பின்னால் அலைந்ததில் மூன்று பெண்களும்,இரண்டு பையன்களுமாக எனது வீரியத்தின் பாய்தல் விடாப் பிடியாய் பிடித்துக் கவ்விக் கொண்டது...

இப்போதைய அகதியக் குந்தலில் எனக்கு இஷ்டமில்லையென்றாலும் அள்ளிச் சுவைக்க முனையும் இந்தப் பாற்குடங்களால் பாதி விருப்பும் மீதி வெறுப்புமாக வேளா வேளைக்கு வீணியூற்றிக்கொள்வேன்.என் பேரவாவின் வினைப் பயன்கள் எந்த வேதனையுமின்றி வீராப்பு நிறைந்து அகதியத்தில் பதியம் போட்டுள்ளார்கள்.அவர்களால் இறக்கப்பட்ட எனது வருகைக்கு அர்த்தமொன்று இப்போது தெளிவாகிறது.இது வாழ்வினது அர்த்தமா அல்லது உடலினது உச்சபச்சத் தாகமென்பதா? இனித்தாம் அறிய வேண்டும்!

கால்கள் கூசுகின்ற இந்தக் கணத்தில் உடல் வலுவிழப்பதுபோன்ற மிகுந்தவுணர்வை அவர்கள் அறிவதால் என்னை நெருங்கி வருகிறார்கள்."வயோதிபமென்பது ஒரு பொருட்டல்ல,வாருங்கள்"என்று மென்மைக் காந்தக் கரங்களால் அணைக்கப்படும் என்னுடல், உலகத்தின் எந்தப் பெரிய அழகையும்விட-அற்புதத்தையும்விட இதுள் மிகப் பொலிவானவொரு அமைதியை,பேரின்பச் சுருதியை உணரத் தலைப்பட்டது.அந்தவுடலுள் ஊஞ்சலாடும் உணர்வுக்கு இன்று பாலாபிஷேகம்.

எல்லாம் சங்கமமாகிவிட்டதென்று கூறுவதற்கில்லை.என்னது தோலோடு மோதி நிலைப்படைந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னானவொரு பொழுதில் மிகப் பொருத்தமாக விரிவடைந்தது அந்தக் கதை. அவ்வளவும்தான் வாழ்வு.ஒரு நுணுக்கமான விரிவு,அசைவு,திரண்டொழுகும் ஒரு குமிழி.

வீடுமீண்டபோது களைப்படைந்தவுடலுக்குத் தீனி அவசியமாகி இருந்தது.விழியில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருப்பதென்ற உணர்வுக்கு மாறாய் என் மகள் தென்பட்டாள்.தெரிந்துகொண்ட உடலுக்குள் அவள் புகுவதுபோன்றவொரு நினைவால் நான் துரத்தப்பட்டேன்.எனது புறமுதுகில் குத்தும் பிரமைக்கு ஈவு இரக்கமென்பதெல்லாம் அமெரிக்கப் பாணியிலிருந்தது.எல்லாம் வல்லோனே,ஏனிந்தக் கொடுமை எனக்கு?எவர்கெடுத்து உரைக்க!எனது மகளின் உருவத்துள் நினைந்துகொள்ளும் இந்த மனத்தின் குரங்குத் தனத்துள் துள்ளிக் கொண்டபடி கொதித்தெழும் அந்தப் பிசாசுக்கு வயது பதினாறாய் இருக்கவேணும்.இல்லையானால் அது அடங்கிக் கிடக்குமே!அறுபட்டுப்போன பட்டத்து நிலைக்கு நானும் எனது மனமும் எவ்பவோ வந்துவிட்டதென்பதை உணரும் ஒரு துளி நாணயம் எனக்குள் பெருகிச் சிறுத்தது.மகள்வீடு தாண்டி மகனது இல்லத்துள் மிதந்தபோது மருமகளே என்னை வரவேற்றாள்.

"மாமா,வாங்கோ மாமா"என்ற அவளது குரலில் மாமாவுக்கு மோன இலயம் பீறிட்டபடி.மடிப்புக்கழராத அவளது முன்னுடலில் பூக்கள் கொலுவிற்றிருப்பதும் அது என்னைத் தன் வாசத்தால் சுண்டியிழுப்பதும் பொல்லாத பொழுதுகளின் நிந்தனைக் காண்டமாக விரிவதில் நான் வெறுப்படைவதும் பின்பு அதுவேயொரு சுவையான உணர்வாகவும் விரிந்துகொள்வதும் இயல்பாக... நான் அவளைத் தினமும் மனதிலிருத்தி என் மெளனத் தாகத்தைக் கொட்டுவதுமாக எனது கடன்கள் கழிவதுமாகச் செல்கிறது இந்தக் கணம்.என் பேரப் பிள்ளைகள் என் தோளிலும் மடியிலுமாக விழுந்து விளையாடும் உன்னதமான இந்தத் தரணங்கூட அதுகளின் தாயின்மீதான தவித்தெழும் என் அகக் குடைச்சலாக விரிவதில் நான் சிறுத்துக்கொள்கிறேன்.இந்தக் கேடானவுணர்வுக்கு எந்தத் திசையும் தெளிவில்லை.போதையாய்ப்போன பசிக்கு உத்தரவாதமான எந்தவுறமுமில்லை.எத்தனை காலத்துக்கு இந்த ஏகத்தைத் தவிர்ப்பதற்காக ஏங்கித் தொலைவது?முடியவில்லைப் பேரின்பமே!

நான் எனக்குள் அழிவதும் மீண்டும் உருப் பெற்றுக் கொள்வதுமாகச் செல்லும் இந்தப் பொதுப் புத்தியுள் பேரின்பமாக விரியும் அந்தவுருவம் ஒரு பெண்ணுக்குரியதாக இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.அதுவொரு வடிவம்.எந்தப் பொழுதிலும் பேரிரைச்சலாக விரியும் ஏதோவொரு அசைவில் என்னைக் கட்டிப் போட்டிருக்கும் சக்தி அது.அதை மீறிப் போவதற்கான எந்த உந்துதலும் எனக்குள் பீறிட்டுக்கொள்ளவில்லை.எனது மோனைத் தவம் இந்தத்தடத்துள் எப்பவும்போலவே புதுமைக் கொலுவிற்றுச் செல்கிறது.வானம் இருண்டு முகில் கருமையாகக் குவியுந் தத்துருவமானபோது என் தலைகளில் உருளும் நீருக்குள் நான் உருகிக்கொள்வதும்,இருக்குமிடம் மகனதோ இல்லை மகளதோ என்ற கேள்வியின்றி என் திசையில் எங்கே தோன்றிய ஒரு புள்ளியில் இருப்பதான இந்தக் கூத்துக்கு நான் பொறுப்பேற்க மட்டும் உணர்வு தவித்தது.

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பு மின்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின்றாமல்
நமக்குநாம் அழாதது என்னோ?"


தெருவிளக்குகள் ஒளிர்கின்றன.அந்தவொளியில் சிதறும் நீர்த்துளிகள் என் மெளனத்தைக் கலைப்பதில் தோற்கின்றன.எனது போக்கிடம் குறித்த ஏதோவொரு பொறி என்னைச் செம்மையாகத் திட்டுகிறது.நான் உறுவுசொல்லிப் போக்கிடம் தேடிய காலம் இனி மலையேறியதாகவே எனக்குள் குப்பையாக விரிகிறது.நான் செம்மையுறும் உணர்வில் ஏதோவொரு அற்பத்தனத்தை அந்தச் செயலுக்குள்ளும் நீட்சியாவதை உணரும்போதே இது அவ்வளவு சீக்கரம் முடியுமொரு அத்தியாயமாக எண்ணத் தலைப்படவில்லை.

அந்தக் கல்லாசனத்தை விட்டகலும் வேளையில் தன்னியல்பாக நான் நடக்கும் இந்தக் கோலம் மனிதனாக இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் என்னிடமிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.நான் எவரையும் நினைந்துருகி எனது அவாக்களை மறைப்பிட்டுக் கொள்ளும் பொய்மைக்குள் புகவில்லையென்பதில் எனது திமிர் உண்மையாய் பெறுமானமுடைய உணர்வில் தவித்தது.

என்னைவிட்டகலும் அந்தச் சொற்ப கணத்துள் அவன் எனக்குப் போர்வை தந்தான்.

நீருள் நனைந்த உடலோடு பிடவைகளும் ஈரமாகியதாக எண்ணும் சந்தர்ப்பத்தில் அவற்றைக் களைந்து எங்கோ போட்டேன்.அடிக்கடி இரயில் வண்டிகளின் அதிர்வில் அமைதியிழந்த எனது மனதுக்குத் தூக்கம் ஒரு கேடவென்று தோன்றியபோது எனக்குப் போர்வையிட்ட அந்தக் கரத்தின் வருடலில் விறைத்துக் கொண்ட என் தவப் பயன் மீளவும் கக்கிகொண்ட உயிர்த் தெறிப்புகளில் உலகம் இருண்டு கிடக்கக் கட்டிய எல்லாக் கோட்டைகளும் சரிவதாக எனது பையன் படுத்தியபாட்டில் எனது தெருவாசம் புலப்பட்டும் நான் என்னைத் தொடர்ந்து நகர்கிறேன்.என் போர்வைக்காரனோ என்னுள் தவிப்பை ஏற்படுத்திய அந்தத் தரணத்துள் தன்னைப் பின் தொடர வைத்தபோது என் பையனின் குரல் எங்கோ தொலைந்தது.












Keine Kommentare: