Sonntag, September 30, 2007

புலிகள் சொல்லுஞ் சில...

புலிகள் சொல்லுஞ் சில சேதிகள்:"சுட்டுவிரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் ஒலி."

"மென்னுணர்வு இரையாகும் கவிதை மொழிக்குள்
கட்டப்படும் ஏமாற்று வித்தைகள்.இதுள்
வித்தகன்
எங்கள் "புரட்சி"க் கவி புதுவை.
பேரோடு போராடும் பொய்மைப் பொழுதுகள்
புதுமையாகப் பொலிவுறுந் தரணங்களைப்
புரட்டிப்
பார்த்தலும்,போட்டுடைத்தலும்."

பொதுவாக இசைக்கும் மனிதரிடையே இன,மத,மொழி,என்பதைக் கடந்து இசையில் இலயித்திருப்பது எல்லா மனிதருக்குமே சாத்தியமாகிறது.இசைக்கு மொழியென்பது கிடையாது என்பதை உணர்வுக்குள் நிறுத்தும்போது இசைக்கு மொழி உண்டென்பதும் சாத்தியமாகிறது.இதன் மிக நுணக்கமான செயற்பாடு மென்னுணர்வைத் தாக்குவது.அந்தத் தாக்குதலில் அது மனிதரிடையே மகத்துவத்தையும்,மாண்பையும் ஏற்படுத்தலாம் அவ்வண்ணமே கீழ்மைப்படுத்தவும் முனையலாம்.இவ்விரண்டு செயற்பாடுமே மொழியாக உணரும்-தாக்கும் கட்டளையாக உணரக்கடவது.இந்த நிலையில் மொழியானது இசைத்தல் முறைமைக்குள் ஓசை நயத்தோடு,எதுகை மோனையோடு பேசிக்கொள்ளும்போது, ஒலிக்கு இந்த இசையின் செயற்பாடுண்டு.எனவே, இசையென்பது ஓசை என்பதாக... இங்கே, இசையென்பது வாத்தியக் கருவிகளால் இசைப்பதைச் சொல்லவில்லை.இசையென்பது ஓசை நயத்துடன் மொழிவதை-உரைப்பதை,சத்த இலயத்தைச் சொல்கிறேன்."ஒலியே பிரமம்" என்பது அத்வைதத்தின் குறிப்பு.

இங்கே, அத்வைதம் சொல்லும் ஒரு உண்மை இறையோடு ஏற்றமாகிறது.அவ்வளவுக்கு ஒலியின் ஓசை முக்கியமானது.அத்வைதத்தின் அடுத்த கட்டங்கள் நம்மை அடிமைகொள்ளும் அரசியலாக இருப்பது நமது சாபக்கேடு.என்றாலும் இந்தவொரு நிலையை நாம் சில அநுபங்களோடு உணர்வோம்.

இதுவொரு இறுக்கமானவுணர்வு உந்தப்படும் மழைக்கால இரவு.

விடுதலைக்கும்,அடிமைத் தனத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் இரண்டுங்கெட்டான் வாழ்வில் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பின் எல்லாவகைப்பட்ட(அடக்குமுறை,பாசிசம்,தேசியத்தன்மை-விதேசியத் தன்மை-இன்மை,இறுமை-பெருமை,புண்ணியம்,புண்ணாக்கு,உண்ணாக்கு...)செயற்பாடுகளுக்கும் மத்தியில் நாம் உணரும்,அநுபவப்படும்-ஆத்திரப்படுந் தரணங்களை,அள்ளிப் பருகும்-உருகும் பெருமை,சிறுமைகளைச் சொல்வதற்கு மனம் பிராண்டும் ஒரு நிலையைப் பகிர்வதற்கு முனைவதில் எந்த முத்திரைகளும் எப்படி விழுந்தாலும் அது உணர்வுக்கும்,அறிவுக்குமான இரு நிலைப்பட்ட மனித முயற்சியின் கோணங்கித்தனமென்று கம்மெண்டு கிட கண்மணிகளா!

இடைக்கும்,தொடைக்கும் உருகும் இசைக்கு நடுவில் அந்தவொலி ஓசை நயத்துக்குள் வீழ்ந்து தோயுந் தரணங்களில் கவிதை எழிச்யுறுந் தரணமாக விரியும்போதே, அங்கே சரிவும் வந்து விடுகிறது.இந்த இரவின் மடியில் இசை கேட்குமொரு உணர்வைக்கொண்டு,அதைப் பூர்த்தியாக்கும் தரணத்தில் இசைக்கான தெரிவு எப்பவுமே அநுபவத்திலிருந்து விசும்பு கொள்கிறது.இந்த விசும்பின் முகிழ்ப்பில் எத்தகைய இசையை மனதில் பதியமிட்டிருக்கிறோமோ அது முந்திக்கொள்ளும் பெருவிருப்பாக.எனக்கு இசையோடு உறவென்பது சகலவிதத்திலும் செவிப்புறத் துய்ப்பாகவே இருக்கிறது.அதன் உட்பரிணாமங்களில் அறிவு பெறமுடியவில்லை-முயலவில்லை.என்றபோதும், இசையால் ஏனோ வசமானேன்.இந்த இசையில் மிக விருப்பமாக கேட்கும் இசைவடிவம் சிம்பொனி.மேலத்தேய இசைக்குள் இருக்கும் மிகப் பெரும் ஸ்த்தானம் சிம்பொனியால் இன்றுவரையும் நிலைப்படுத்தப்பட்டு வருகிறது.பீத்தோவனுக்கு(Beethoven) முதலே மொசாட்டால்(Mozart),பக்கால்(Bach)வளங்கண்ட சிம்பொனி பீத்தோவனால் புரட்சிகரமாகத் தொழிலாளிகளுக்காகவும் கீழிறங்கிவருகிறது.மேட்டுக் குடிகளுக்கே அநுபவமான சிம்பனியை தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களும் கேட்கும் நிலைக்கு-அவர்கள் விடுதலையடையும் நிலைக்கு உந்திய பீத்தோவனின் அட்டகனாசமான சிம்பொனி 9 நம்மை வியப்பிலீடுபடுத்தி, அவனை இசையின் வேந்தனாக்கி வைக்கிறது நமது மனத்தில்.அவனது உணர்வுக்குள் அநுபவமான உலகப்படைப்பாளிகளுக்காக அவனும் ஏதோ செய்ய முனைந்தபோது சிம்பொனி 9 ஐ படைப்பாக்கிறான்.

அற்புதமாக ஓசை நயத்தோடு உரையாடும்-பாடும் எந்த விடையமும் நமது மென்னுணர்வோடு விளையாடும் தரணத்தைக் கணிதத்தால் வகுத்துப் பிரித்துச் சொல்வது கடினம்.ஏன்-எப்படி இந்த நிலை ஏற்படுகிறதென்பது இதுவரை அநுபவமாகவில்லை.பிறகம்ஸ்(Brahms:Violin Concerto-The Symphony series represents a major breakthrough in classical music)வையிலின் கொன்சேர்ட்டில் அமைதியடையும் ஒரு நிலையில் மனது இலயிக்கின்றபோது அங்கே மெளனித்திருக்கும் உணர்வுக்கு மேன்மேலும் பெரு வாழ்வைச் செய்கிறது அந்த ஓசை.இப்படியொரு நிலையானது மனத்தின் எல்லாவித மின்னல்களையும் உணரும்-அநுபவமாகும் ஒரு உயர்ந்த செயற்பாட்டைச் செய்கிறது நமது நரம்பு மண்டலத்துள்.அப்போது மூளையின் எல்லவித ஊக்கமும் ஒரு பொறியுள் அகப்பட்டுப்போய் ஏதோவொரு ஏவலால் உந்தப்படும் நிலையைப் பெறுவதால் நாம் இத்தகையவொரு ஓசை நயத்தோடு-எதுகை மோனையோடு எடுத்து வைக்கப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவதும்,அத்தோடு ஒன்றித்தல் நிகழ்ந்துவிடுகிறது.அங்கே, நாம் நம்மை இழப்பதும் பின் ஏமாறுவதும் நிகழ்கிறது.இங்குதான் இந்தப் புனைவுக்குள் சிக்குணடு போகிறோம்.இது மூடத்தனமா இல்லை மனித உடலின்-உயிரின் சாபக்கேடா எனக்குப் புரியவில்லை!

அற்புதம்!

இசைக்கும் மனிதரிடையே இருக்கும் பொல்லாத தலைக்கனம்,மமதை. இந்த சிம்பொனி இசையின் தெரிவில் பீத்தோவனிடம் இருக்கும் மெலினப்பட்ட உணர்வு அவனைத் தான் வாழும் சமுதாயத்தோடு இணைத்திருக்கிறது.ஒருபொழுதில் நாம் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தரணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.அந்த நிலை மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தரணங்களைத் தந்துவிடுகிறது.அப்படி மகிழுந் தரணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆயற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக இது என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.

நமக்கிருக்கும் ஒரு குறுகிய கால அவகாசத்தில் நான்-நாங்கள் மெளனிக்கப் போகும் இன்னொரு நிலையில் எமது நாணயமான இருப்பை உணரும் நிலையை இந்த இசையுணர்வு எடுத்துப் போட்டு விடுகிறது.முக்கியமற்ற பொழுதாக அல்லது ஓய்வென்றுணரும் இந்தவொரு நிமிடம் எப்போதும் மலசலக் கூடத்தில் இருக்கும்போது, நம்மைத் தொட்டுச் செல்கிறது.இந்த நல்லதொரு உணர்வின் நம்பிக்கை மனிதர்களின் மற்றெல்லா விதத் தேவையையும் பூர்த்தி செய்யும் சக்தியை வளங்கிவரும்-வல்லவொரு உணர்வாய் நமக்குள் வடித்துக்கொள்ளப்படுகிறது.நமக்கே புரியாத நம்மீது ஆதிக்கஞ் செலுத்தும் இந்த சாதகமான உணர்வைத் தீயின் துணைகொண்ட செந்தழலாக்கிச் சிவப்பாக்கி வைத்திருக்குந் தரணத்தில் நம்மீது ஆதிக்கஞ் செய்யும் புற நிலையை மாற்றமடைய வைக்கும் அகவெழிசச்சி வந்தெழுகிறது.நாமதை உணரும் எல்லா வகைகளையும் நம் போராட்ட களத்தில் பார்க்க முடியும்.

ஈழதேசத்தில் இன்றுவரை தொடரும் யுத்தத்தில் எவரெவர் பங்குகள்-பற்றுக்கள்-பாசங்கள்(நலன்கள்)இருக்கிறதென்பதையுங் கடந்து புலிகளிடம் இந்த அகவெழிச்சி அறியும் உணர்வு அற்புதமாகச் செயற்படுவது கண்டு, ஒருபுறம் ஆச்சரியம்.மறுபுறம், அவர்களின் அதீத நிலைப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று சிந்திக்கும்போது அதுதாம் உண்மையென்பதற்குச் சமீபத்தில் புலிகளின்-ஈழத்தின் ஆஸ்த்தான கவி-ஆணவக் கவி புதுவை இரத்தினதுரையால் நடாத்தப்பட்ட கவியரங்கு சொல்லும் சிலவுண்மைகளை.

புதுவை இரத்தினதுரையின் வீச்செறியும் வார்த்தைகளின் பின்னே வந்தமரும் உணர்வு நிலையானது மிகவும் கூரியவுணர்வைத் தரவல்லது.அந்தவுணர்வு நிலையானது மிகவும் நம்மோடு நெருக்கமாக வந்து உட்கார்ந்து நம்மை ஏமாற்றும் பெரியவொரு செயலில் நர்த்தனஞ் செய்வது.அவரது மொழி ஓசையோடும் எதுகை மோனையோடும் நீண்டபடி செல்வது.அங்கே, அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்யும் மொழி இசையாக மாறிவிடுகிறது.இதுதான் இந்தக் கவிதை மனிதரின் இன்றைய வெற்றியாக இருக்கிறது.கவிதை "யாரது பின்னாலும் செல்லாது,மண்டியிடாது" என்பதை நாம் ஏற்பதற்கில்லை என்று சொல்லவே அவரது மொழி விடுவதாகவில்லை.ஆனால்,இந்தக் கயமையை அவர் செய்யும்-ஒப்பேற்றம் நிலைக்கு அவரைத் தொடரும் கவிஞர்கள் தரும் மெய் நிலை உறுதிப்படுத்தும்போது, அவரது கவிதைக் கம்பீரம் தவிடுபொடியாகிறது.அன்றைக்குக் கூலிக்குக் கவிபாடியவர்கள் எல்லாம் தமது வருமானத்துக்குத் தடையேற்படும்போது"மன்னவனும் நீயோ..."என்று ஓங்கி ஒலிப்பார்கள்.அதை மக்களினது குரலாக எடுக்க முடியுமோ?.இன்றைக்குக் கருணா நிதிக்காக ஓலமிடும் மேத்தா-வைரமுத்துக் கூலிக் கவிஞர்களிடம் இருக்கும் கூனிக் குறுகுதல் இந்தக் கவிஞனிடம் காணாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமெனினும் இவன் மண்டியிடும் ஒரு நிலை எப்போது-எங்கே என்பதை இவரது மொழிவுகளே காட்டிவிடுகிறது.

தேசத்தின் வாழ்தல் என்பது நமது படைப்புகளால்தான் என்பதை மிக நேர்த்தியாக அறிந்த இந்த ஆணவக் கவிக்கு எப்போது பொய் சொல்லும் நிலை வருகிறதென்பதை நாம் இவரது படைப்புகளோடு உலாவரும்போது உணர முடியும்."நான் சொன்ன வார்த்தைக்கு வடிவம் கொடுத்தாய் விசாலகா"என வர்ணிக்கும் விசாலகனின் ஓலத்துள் இருப்பது அப்பட்டமான ஏய்ப்புகள்.அப்பாவிச் சிறார்களுக்கு அல்வாக் கொடுத்து,ஆசை காட்டுவதல்ல கவிதையின் பணி.இது புதுவையாருக்குப் புரியாதாவென்ன?மக்களை அரசியல் மயப்படுத்தி,புரட்சிக்கான-தயாரிப்புக்கான மக்களின் சுயவெழிச்சிக்கு ஆப்பு வைக்கும் புலிகளின் குரல்களாக வரும் விசாலன் கொப்பளித்த வார்த்தைகளுக்கும், நுட்பகமாகக் கருத்திடும் புதுவைக்கும் என்னவொரு ஒற்றுமையாகிறது.இயக்கப் பிரச்சாரமிடுவதற்கு பெயர்"கவிதையென்பது எழுதாப் பொருள் கடந்த-அது,கவிதை, அதையெழுதும் அவன்(இங்கே பெண்ணுக்கு எந்த வேலையும் இல்லை.கவிதை என்பது ஆணோடு கூடப் பிறந்தது!-ஆணாதிக்க வரம்பில் நின்று வேட்டைக்கு வித்திட்டவர் புதுவை.)கவிஞன்"பிரபாகரனுக்குப் பட்டுப் போர்த்தாத குறையாகப் "பிரபஞ்சத் தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவர் என்பதற்கு"கவிதை மொழி எதற்கு?,எதுகை மோனை எதற்கு?வீராவுக்கு மேற்குலகப் பயணம் பல அநுபவத்தைத் தந்திருக்கிறது நமக்காய் நாடகமிடும் நல்ல நண்பராகிறார்.

பொன்.காந்தனின் கவிதை மொழிக்கு வேஷம்-தனிநபர் துதி,வீம்பு அவசியமாக இருக்கிறது. அவர் தன்னை இனம் காணும் சந்தர்ப்பம் அவருக்கு இல்லாதிருப்பதற்கான தரணங்களை அவரே புரிவதால் "கழுதை உனக்கும் காலந்தான்"என்பதும்,தான் பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்றவுணர்வில்"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கரிகாலன் காலத்தில் எவனாலும் இல்லைத் தமிழருக்கு ஏய்ப்பு"என்று தற்பாதுகாப்புச் செய்கிறார்.இத்தகைய கவியரங்குக்குள் கட்டப்பட்டிருக்கும் ஓசை நயங்கள், ஓயாத ஏமாற்றுக்களின் வித்தைகள் வினையாகக் கட்டிவைக்கப்பட்டு,நம் மென்னுணர்வோடு விளையாடுகிறது.இந்த வினையானது எப்போதும் எம்மை ஏமாற்றும் சுழிகளைத் தொக்கிவைத்துப் பொய்மை பேசுகிறது.இது இசையாக-ஓசையாக மெல்லவருடும் தமிழாக நம்மை மொத்தி, நமது உணர்வோடு கட்டிவைக்கும் உணர்வுப் பொதியானது சிந்தனையைத் துரத்திவிட்டு, மீண்டும் மாயைத் தோற்றத்தை-மெளன அங்கீகரிப்பை நமக்குள் விதைக்கிறது.இந்த மொழிவுகளால் ஏமாற்றப்படும் நமது உண்மைத் தரவுகள் எந்தப் பொழுதிலும் தடுமாறித் தமிழின் பெயரால் யாரோ அநுபவிப்பதற்காகச் சிறார்களை மேலும் காவு கொள்ள வைக்கிறது.இந்தப் போலி மொழிவுகளுள் புதைந்துள்ள நமது "அவாக்கள்" மெல்லப் புரியும் தரணம் வெறும் வெற்று வார்த்தையாகிறது.சொந்தமான வான் ஊர்த்தியைப் போற்றுவதலாலோ அல்லது பெரும் ஆச்சரியப்படுவதாலோ அன்றிப் புகழப்படும் தனிமனிதரான பிரபாகரனின் தகமையைப் பற்றிப் பொய்யுரைப்பதால் நாம் பெறுவது விடுதலையல்ல!மாறாக, நாம் பெற்ற இன்றைய நிலையே சாட்சி!புதுவையார்(புலிகள்)உறவுகளிடம் கேள்வி கேட்டுச் சம்மதம்(...) கேட்பது புதிசாக இருக்கிறது.பொய்யில்லை,எல்லாப் புகழும் புதுவைக்கே சேரும்.

நமது உணர்வுகளோடு ஓசையாக வந்த இந்த மொழிக்கு நல்ல இசைச் சாயல் இருக்கிறது.

எமது மனதோடு மெல்லப் பதியம் வைக்கும் கருப்பொருள்களுக்கு மத்தாப்புக் கொளுத்தும் புதுவைக்கு நிகர் புதுவையே!இங்கே, நாம் அவதானமாக இருக்க வேண்டிய தரணங்கள் நம்மை இழக்காது இருப்பதும்,அந்த நிலையில் நம் போராட்டத்தள நிலமை என்ன என்பதை மீளப் பார்த்து அறிவதும்.அப்போது, இவர்கள் கட்டும் மாயைத் தோற்றம் என்ன என்பதை உணர்வது மிகச் சுலபம்.மக்கள் மீளவும் ஏமாறாது புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான ஜனநாயகச் சூழலைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அருகும் இன்னொரு தரணம்-அபாயம் நம்மை இப்படி நெருங்குகிறது என்பதைத்தான் இப்போது சொல்கிறோம்.

"பாடுபட்டவர்கள்(வேதனை,இழப்பு,மரணம்,அகதி நிலை,வீட்டிற்கொரு பிள்ளைப் பறிப்பு,தட்டிப் பேசத் துப்பாக்கித் தடுப்பு இத்யாதியும் இன்னபிறவும்) மக்கள் அவர்கள் முன்வரவேண்டும் இதற்குப் பதில் சொல்ல!"
ஜனநாயகம்.
29.புரட்டாதி 2007

Keine Kommentare: