Dienstag, September 25, 2007

எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து...

பெரியம்மா நீ, நீடூ வாழீ!

பொழுதெல்லாம் ஒளியெறியும் கதிரவனாய்
வாழ்வுலகில் தன்னை ஒளிரவைத்த என் பெரியம்மா
ஆறுதலாய் அறுபது அகவையைக் கடந்தாரா?
அற்புதமான அம்மா அகமகிழவொரு
அன்பாய் நிலைத்த "பெரியம்மா நீடூ வாழீ" என்ற
என் செல்லமொழி உங்களுக்கு!

நலமாய்க் குணமாய் நாளெல்லாம் இன்புற்று
நீங்கள் அகம் மகிழ அந்த ஆண்டவன்
பொழிகின்ற அருளெல்லாம்
அன்பாய்ச் சொரியும் பிள்ளைகள்


அறுபது கண்டது இந்த ஆலமரம்!
விழுதெறிந்து நிழலாய் விரிந்த
எங்கள் பெரியம்மா!
சொல்லும்போதே ஒரு சுகம் நெஞ்சை நிறைக்க
நினைவெல்லாம் உங்கள் நீங்கா நிறைந்த முகம்
எதையும் தாங்கிய இதயம்
என்னத்தைச் சொல்ல!
அம்மாவை,பெரியம்மாவாய்
பொழுதெல்லாம் புகழத்தக்க சீமாட்டி நீங்கள்!

அன்பைப் பொழியும் உங்கள் அகமும்
அதில் இன்புற்ற நாங்களும்
அந்தக் காலத்துக் கதையாய் இன்றும்
இதயத்தில் சுகமாய் விரியும்
அன்புக்கு அறுபது அகவை

ஆலயத்தில் அன்பாய்விரியும் அம்பாள்
என் அகத்தில் உங்கள் முகம்தாங்கி
இனிக்கின்ற பொழுதுகளை
எப்பவும் உங்கள் அணைப்பில்
அமைதியாய் உணர்ந்த அன்றைய பால்யம்

இன்றைக்கு இன்புற நீங்கள்
இனிதே காணும் அறுபது அகவையில்
வாழ்த்தும் என் உணர்வும்
வாயாறப் "பெரியம்மா வாழ்க" என்றே
மெல்லச் சொல்லும் !

அரிதாய்ப் பெரிதாய்
எனக்கு வாய்த்தாய் பெரிய அம்மாவை
பொழுதுகள் தோன்றலாம்
பூக்கள் மலரலாம்
ஆனால்,
உங்களைப்போல் "பெரியம்மா"அரிதாய்,
அரிதிலும் அரிதாய்ப் பெற்றேன்!
அம்மா வாழீ,
அகம் மலர அறுபது கண்ட
அன்புச் சொரூபமே நீங்கள்
நூறாய்ப் பல்லாண்டு கண்டு
பொழுதெல்லாம் ஒளியாய் நிறைந்து
எம் நெஞ்சமெல்லாம் நிறைப்பாய் அம்மா!

வாழ்க நீங்கள்
உங்கள் அன்புக் கரங்களென்றும்
ஓயாக் காற்றைப்போல்
எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து
உச்சி மோந்து எம்மைத் தழுவும்
பொழுகள் கோடி தோன்றுக!

Keine Kommentare: