Samstag, November 24, 2007

ஓட்டுக்கட்சி அரசியலில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே.

ஓட்டுக்கட்சி அரசியலில்
கருணாநிதிக்கு நிகர்
கருணாநிதியே!


பொதுவாகத் திரு.இளங்கோவன் சொல்லும் அரசியல் வெறும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையுடையது.கருணாநிதியினதோ அன்றி வேறெந்த ஓட்டுக்கட்சிகளினதோ தயவை-ஆதரவை,ஒப்பாரியை நம்பித் தமிழ்பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுக்கப்பட முடியாது.புலிகள் செய்யும் போராட்டத்தில் அங்ஙனம் அவர்கள் எதிர்பார்ப்பதும்,அறிக்கை விடுவதும்,எதிர்ப்பதும்,புலிகளின் ஈழமுரசுப் பத்திரிகையில் துரோகி என்று வர்ணிப்பதும் நடக்கும் நாடகங்களே.ஆனால்,ஈழத்து மக்களின்மீதான இலங்கைப் பாசிச இனவாத அரசின் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடவும்,தமது சுயநிர்ணயத்தை மீட்டெடுக்கவும் நடைபெறப்போகும் போராட்டமானது சாரம்சத்தில் ஓட்டுக்கட்சிகள்-நாடாளுமன்றங்களுக்கெதிரானது மட்டுமல்ல.ஏன் உலக-இந்திய ஏகாதிபத்திய-பிராந்திய ஆதிக்கச் சக்திகளுக்கெதிரானதாகும்.

இங்கே தமிழின் பெயரால் ஆட்சி நடாத்தும் கருணாநிதி மக்களின் நலத்துக்காகவா-தமிழ்நாட்டின் விமோசனத்துக்காகவா ஆட்சி நடாத்துகிறார்?கருணாநிதியிடம் இருக்கும் இலட்சம் கோடி பணமானது எப்படி வந்து சேர்ந்தது?அவருடைய சொந்த உழைப்பினால் உருவாகிய செல்வமா?இத்தகைய துரோகத்தனமான-நம்பிக்கைத் துரோகியின் ஊழல் அரசியலில் கொஞ்சம் குறைவில்லாமற் செயற்படுத்தியவர் ஏம்.ஜீ.ஆர்-ஜெயலலிதாக்கூட்டு.இவர்களையும்,இவர்களது நம்பிக்கைத் துரோகத்தையும் மக்களின் நலனிலிருந்து பார்க்காது கட்சி நலன்-அரசியல் நலனில் இருந்து பார்க்கும் பார்வையானது என்ன நேர்மையானதா?


"கருணாநிதியைப் போல் எல்லோரும்தாம் பணம் சேர்த்திருக்கிறார்கள்.இது இந்தியாவில் சகஜம்" எனும் கருத்து எப்படி உருவாகிறது?மக்களின் வரிப்பணத்தையும்,அவர்களின் வாழ்வாதாரங்களை அந்நிய சக்திகளின் திருட்டுக்குத் திறந்துவிட்டு,அந்நியச் சக்திகள் போடும் எலும்பைப் பெறும் இத்தகைய அரசியல்வாதிகள்தாம் அப்பாவி மக்களையும்,அவர்கள் செய்யும் நியாயமான போராட்டங்களையும் பொலிசை வைத்து வேட்டையாடுகின்றார்கள்.


இவர்களையெல்லாம் சாதரணமாக விட்டுவிட முடியாது.மக்களின் தியாகத்தை அரசியலாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பதவிக்கு வந்த கையோடு அந்த மக்களையே நரவேட்டையாடும் ஓட்டுக் கட்சி அரசியலில் மக்களுக்கான நியாயம்,நீதி உண்டா திரு.இளங்கோவரே?
தி.மு.க.வின் கபடத் தனத்தையும்,கருணாநிதி அவர்களின் போலித் தனங்களையும் கண்ணதாசன் அப்பாவித்தனமாகத் தானும் அநுபவித்து,தம்பட்டம் அடித்துச் சொன்ன கதைகள் ஏராளம்.அதிலொன்று வனவாசம்.இங்கே, மனித நடத்தையின் போலித் தனங்களை அவர் மிக இலகுவாகச் சொல்கிறார்.அதில் கையாண்ட அரசியல் பார்வை அப்பாவித்தனமானதேயொழியச் சம்பவங்கள் உண்மையாக இருக்கிறது.
கண்ணதாசன் ஒரு அரசியல் ஆய்வாளானாக இருந்திருந்தால் நிச்சியம் நல்லவொரு ஆய்வு கிடைத்திருக்கும்.எனினும்,நாம் மேல் நோக்கிப் போவாம்.
மனித சமுதாயத்தில் அரசியலின் பங்கு என்ன?

போபர்ஸ் பீரங்கி ஊழல்,
வீராணம் குழாய் ஊழல்,
டெஹல்கா இராணுவப் பேர ஊழல் என்று,

உலகறிந்த ஊழல்களை ஓட்டுக்கட்சித் தலைவர்களும்,அதிகார வர்க்கமுமே செய்து மக்கள் சொத்தைத் திருடுகிறது.இத்தகைய ஆட்சியில் அமர்ந்துள்ள ஒரு கட்சியின் தலைவர் கருணாநிதி.இவர் ஆயுட்காலத் தலைவராக இருந்தபடி தனது வாரீசைத் தலைவராக்கிக் கோடிக்கணக்கான கட்சியின் சொத்தையும் தனது குடும்பச் சொத்தாக மாற்ற முனையும் சந்தர்ப்பத்தில்,இவர்களால் ஈழத் தமிழருக்காக என்ன செய்ய முடியும்?இன்றைய நிலவரப்படி கருணாநிதி-ஜெயலலிதா குடும்பங்களின் சொத்து மதிப்பு இலட்சம் கோடிகளைத் தாண்டும்.இவர்களே இன்று மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமிழ் நாட்டை ஒட்ட மொட்டையடிக்கும்போது இத்தகைய ஓட்டுக்கட்சியின்-தலைவரின் கூக்குரல்கள் ஒருபோதும் இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு நியாயமாகக் குரல் கொடுக்காது.இவர்களே மாறிமாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளோடு சமரசஞ் செய்து, தமது சொத்தைக் காத்து,நிலைப்படுத்தி வருவதற்காகவே பதிவிகளுக்கு வர முனைகிறார்கள்.இந்த நிலையில் இவர்களை எவர் நம்புவார்?

இத்தகைய நாடாளுமன்ற ஆட்சியில் அரசு,அதன் பாராளுமன்ற ஜனநாயகமென்பது என்ன? இந்த அமைப்பில் தேர்தலின் சாரம் என்ன?


இந்த இளங்கோவன்கள் எப்பவும் ஒன்றை மறைப்பதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள்.அதாவது அரசியலென்பது மக்களைக் காக்கும் வடிவமல்ல.அது மக்களையொடுக்கும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியென்பதை மறைப்பதில் முன் நிற்பவர்கள்தான் இவர்கள்.


எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை.அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள்.மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள்.அரசு என்பது மிகவும் ஒடுக்குமுறை வடிவமானது.அது ஆளும் வர்கத்தின் தேவைகளை ஒழுங்குறச் செய்யும் ஒரு எடுபிடி!

அரசின் சாரம்சம் என்ன?

அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.முதலாளித்துவத்தின் கல்வியாளர்களுக்கு இது இயலாத காரியமாகும்.அவர்கள் இந்த அமைப்பைச் செம்மையுறக் கற்றது கிடையாது.இயற்கை மற்றும் பௌதிக விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் முக்கியத்தில் சமூக விஞ்ஞானத்துக்குக் கொடுப்பது கிடையாது.இது முதலாளியத்தின் திட்டமிட்ட சதி.இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்.


இங்கே அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.


இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் வைகோ...கருணாநிதி,நெடுமாறன் என்று நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.


சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது கிடையாது.இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் ப+ர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே ஒரு அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.சாதரண மக்கள்கூட இப்படி நம்ப மறுக்கும் காலத்திலிருக்க, இந்த இளங்கோவருக்கு என்ன வந்தது?


எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.


ப+ர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப்பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகளின் வேலை.அதிலொருவர்தான் இந்தக் கருணாநிதி.அவர் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளின் ஒரு துரும்பு.அவருக்கும் தமிழ்பேசும் உழைக்கும் வர்கத்துக்கும் எந்தத் தொடர்பும்கிடையாது.அவர் தனது பிழைப்புக்கு எந்தப் ப+ர்ச்சுவாக் கட்சியோடும் கூட்டுச்சேருவார்.தடா,பொடா போன்ற சட்டங்களை-மக்களை ஒடுக்கும் ஜனநாயக விரோதச் சட்டங்களை நிறைவேற்றும் வாக்கெடுப்புக்குச் சாதகமாக வாக்களிப்பார்!ஏனெனில், இந்தப் பாராளுமன்ற ஓட்டுக்கட்சிகள் யாவும் ப+ர்ச்சுவா அரசை நம்பியே காலத்தை ஓட்டுபவை.அதை நியாயப்படுத்திப் பெரும்பான்மை மக்களை ஒடுக்கி முதலாளிகளிடம் சலுகை பெறும் இந்த அரசியல் பிழைப்புவாதிகளை மக்கள் தலைவனாக எந்தக் கல்வியாளனும் சொல்வதில்லை.


அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள,; கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.


அரசு மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் ப+ர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.


அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்...)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை... நீண்டுகொண்டே போகும்.


இந்த விண்ணாண அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது.கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் அரசின் வேலை!இந்த அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் அரசியல்வாதியன் வேலை? அதுவும் கருணாநிதி,வைக் கோபாலசாமி,நெடுமாறன்போன்றவர்களின் நிலை பெரிதும் பிற்போக்கான நிலையாகும்.இவர்கள் செய்த-செய்யும் அரசியல் மக்களை ஒடுக்கும் அரசியலாகும்.

Keine Kommentare: