Dienstag, November 06, 2007

எக்ஸ்சில் ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின் பதிலென்ன?

எக்ஸ்சில்
ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின்
பதிலென்ன?


"ஒரு வகுப்பாரைக் குரூர மிருகமாகவும்,
மற்றொரு வகுப்பாரை அந்த மிருகத்துக்கு
இரையாகும் பலவீன மிருகமாகவும் செய்யும்
இன்றைய சமூக அமைப்பு ஒழியத்தான் வேண்டும்!"-
காண்டேகர்.



தேசம் சஞ்சிகையில் நின்றுபோன "எக்ஸ்சில்:2" சஞ்சிகையின் ஆசிரியர் ஞானம் என்ற ஸ்டாலின் மீதான குற்றச் சாட்டுக்களும்,அவரின் மறுப்பென்றும் விவாதம் தொடர்கிறது.இங்கே அந்தச் சுட்டி:

http://thesamnet.net/?p=59



நாமோ திகைப்படைகிறோம்!

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தரணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்.புலிகளின் முன்னாள் தளபதி கருணாவைப் பிரிப்பதற்கும்,அவரைத் தமது கைக்கூலியாகப் பயன்படுத்துவதற்கும் அன்னியச் சக்திகள் வழங்கிய பணங்கள்,வெகுமதிகள் பாரீசில் உடைமைகளாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதற்கு ஞானத்தையும் முகவராக-பினாமியாகச் சொல்லப்படுகிறது.

இப்போது, இலண்டனில் பிடிபட்ட கருணாமீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் சொல்லப்படுகிறது.இவர் புலிகளிலிருந்து பிரிந்தபின் செய்த மக்கள் விரோதத்துக்குமட்டுமா அல்லது புலிகளோடு இணைந்து போராடியவேளை செய்த குற்றங்களுக்காகவுமா?

தமிழர்களில் இவ்வளவு மோசமானவர்களெல்லாம் எப்படி வேசம் போடுகிறார்கள்!கிழக்கு மக்களின் விடிவுக்கு வந்த இரட்சகர்களாகத் தம்மை வெளிப்படுத்திய இவர்களை,இப்போது தேசம் சஞ்சிகையில் அம்பலப்படுத்துகிறார்கள்.

அப்பாவிகளாக இவர்களோடு "இலக்கியச் சந்திப்பு"ச் செய்த நாமோ திகைப்படைகிறோம்.

உலகத்தில் இப்படியும் மனிதர்களா?

உண்மையைப் பேசி,மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முனையும் மனிதர்களை ஏமாற்றுகிறார்களே!

இந்த மனிதர்கள் தம்மைப் பற்றிய சுய விமர்சனமின்றி பொய்யுரைத்துக் கிடந்தால் இவர்களின் நாணயத்தின்மீது நாம் சந்தேகம் கொள்கிறோம்.

நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் 90 களின் பிற்பகுதியில் பாரிசீல் எல்லா வகைத் தத்துவங்களும் பேசினார்கள்!இந்தா நமது மக்களின் ஜனநாயகத்துக்காக் குரல் கொடுப்பதாகவுஞ் சொல்லிக் கொண்டார்கள்.


ஞானம் இன்னும் ஒரு படி மேலே பாய்ந்து தமிழ் பேசும் மக்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்க முனையும் சிங்கள-இந்திய அரச கூட்டுக்கு உடந்தையாகக் கிழக்கு மக்களின் உரிமைகள்-வாழ்வாதாரங்கள்,அபிவிருத்திகளெனத் தூக்கிப் பிடித்தார்.கட்டுரைகளைப் புனைந்தார்.நாமும் இவரது கருத்துக்களை ஏற்க முடியாதிருந்தாலும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக் குரல் கொடுத்தோம்.

ஆனால்...

இத்தகைய மனிதர்கள் கருணா போன்ற அன்னியக் கைக்கூலியோடு நட்பு வைத்து, அவரது பினாமியாகப் பொருள் குவித்திருந்தால் இது மன்னிக்க முடியாத ஈனத்தனம்.புலிகளின் பினாமிகள்தான் இப்படியென்றால்,இப்போது புலியிலிருந்து பிரிந்த கருணாவின் கதையும் இதுவேயாகிறது.கருணா தான் கெட்டதும் மட்டுமல்ல மற்றவர்களையுங் கெடுத்துத் தனது பிரதேச மக்களின் வாழ்வில் நிரந்தரத் துக்கத்தை ஏற்படுத்தினான்.

பாவம் அந்தப் பகுதிமக்கள்.


நாம் வெளுத்தையெல்லாம் பாலாக நம்பினோம்.இவைகள் நமது தவறாகிறது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது?


இந்தப் பாரீஸ் வாழ் நம் இலக்கிய-பின் நவீனத்துவப் பேரரசர்கள் எல்லாம் இது குறித்து வெளிப்படையாக விமர்சனம்-சுய விமர்சனம் செய்தால் எதிர்காலத்தில் எவரெவரோடு குறைந்தபட்சமாவது மக்கள் பிரச்சனைகளைப் பேசலாமென்றாவது நமக்கொரு வழி கிடைக்கும்.

புலிகளையே புரட்டிப்போட்டுக் குதறியவர்களே இப்போது தாமும் புலிகள்தான் என நிரூபிக்கும்போது நாம் அதிர்கிறோம்.

ஈழத்து அப்பாவித் தமிழர்களைச் சொல்லி எவரெவரோ அரசியல்,பதவி,பணம் சம்பாதிக்கும்போது அந்த மக்களின் வாழ்வைச் சாய்தவர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான்.இவர்களை எந்த நிதி மன்றம் தண்டிப்பது? இவர்களுக்கொரு தூ... தேவைதானா?

குறைந்தபட்சமாவது மனசாட்சியுண்டென்றால் ஞானம்போன்றவர்கள் தம்மைப் பற்றிய இந்த அவதூறுகளுக்குப் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தலாம்.நாம் இச் செய்திகளைப் படித்து அதிர்கிறோம்.எங்களின் இதுநாள்வரையான செயற்பாட்டில் மக்களின் நலனுக்காவே-அவர்களின் விடிவுக்காகவே செயற்பட்டுள்ளோம்.இதுவரை முதுகுவலிக்க உழைத்து, ஓடாய்ப்போய் உருக்குலைந்தும் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.அன்றாடஞ் சீவிப்பதற்காகத் தெருவெங்கும் குப்பைகூட்டிப் பிழைக்கிறோம்-ஜந்திரத்தில் ஜந்திரமாகப் போராடி வயிறு வளர்க்கிறோம்.எங்கள் முன் நின்று பேசும் அருகதையுண்டா ஞானம்?அது உண்டென்றால் உங்கள் தரப்பு உண்மைகளை வெளியில் எழுத்தாக வையுங்கள்!உங்களுக்கும் கருணாவுக்குமான தொடர்பு உண்மையா,அவரது பணத்தில் வீடுகள் வாங்கப்பட்டதா?கருணைதாசனின் குற்றப்பத்திரிகைக்கு நியாயம் உண்டா-அதில் உண்மை உண்டா?

இவற்றுக்குப் பொறுப்பான பதிலைத் தராது நீங்கள் கிழக்கு மக்களுக்காக் குரல் கொடுத்து என்ன பயன்?-என்னத்தைச் சொல்லி,என்ன ஆவது?...


இலங்கையில் நடக்கும் யுத்தத்தாண்டவத்தை நிறுத்துவதற்காக உங்களெல்லோரினதும் குரல்களையும் உண்மையென்றும்-நியாயம் என்றும் நம்பினோம்.நீங்களோ மக்களின் பிரச்சனைகளை உங்கள் வருவாய்காகப் பயன்படுத்தி வந்திருந்தால் அதையிட்டு வெட்கப்படுகிறோம்.

ஊர்ப் பணத்தில் உயிர்வாழ்வதைவிட ஒரு சொட்டுப் பூச்சி மருந்துண்டு உயிர் விடுவது மேல்.

அங்கே, அப்பாவிகள் உயிர்வாழத் துடிக்கும்போது,தவிச்ச முதல் அடிக்கும் டக்ளஸ் தேவனந்தா,ஆனந்த சங்கரி,கருணா போன்ற கயவாளிகளுக்கும் ஞானத்துக்கும் வித்தியாசமுண்டா?-உண்டென்றால் உளம் திறந்து வெளிச் சொல்லுங்கள்!நாங்கள் மகிழ்வோம்,உங்கள் நாணயம் எம்மை வலுப்படுத்தும்!உண்மையாய் வாழ்வதே உயிர்த்திருப்பின் அர்த்தமாகும்!சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியற்று நியாயமாக இருத்லென்பது மக்களை அணுகும்-அவர்களின் மனங்களை நெருங்கும் முதற்படியாகும்.

ஞானம், உங்கள் மீது சாடப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட இந்தக் கறைகளுக்கு நீங்கள் மனம் திறந்து பதில் தருவது மிக நல்லது. நண்பன் யார்,எதிரி யார் என்று புரிவதே இன்றைய இருண்ட எமது மக்களின் வாழ்வுக்கு முதலில் அவசியம்.இதிலிருந்துதான் விடுதலையே சாத்தியமாகும்.

மக்களைத் துரோகியென்று போட்டார்கள்,போராடத்தில் இணையும்படி வற்புறுத்திக் கொன்றார்கள்,அவர்களின்மீது யுத்தத்தைத் திணித்துக் கொன்றார்கள்.இப்போது, அவர்களின் உரிமையையும் அடைவுவைத்துக் கொல்கிறார்கள்.இதில் நீங்கள் யார்?

அற்ப சுகங்களுக்காக நீங்கள் பொய்மைகளை அடுக்கினால் ஒரு நாள் அவையுடையும்!அப்போது, எமது கரங்கள் வலுப்படும்.மக்களின் அவலங்களுக்காக நாமும் அவர்களோடிணையும் நாளொன்று கூடும்.

நாயாய் அகதியாகி அழிந்து,ஓடாய் உழைத்தும் ஒரு குவளை சோற்றுக்கே அடுத்த நாள் உழைக்கும் நாமும் நாடு திரும்பி மக்களின் வாழ்வோடிணையும் ஒரு யுகம் பிறக்கும்.வரும்மாதச் சம்பளத்தில் இம் மாதம் வாழும் நமது அடிமை வாழ்வும் அகலும்!

ஜனநாயகம்
06.11.2007

Keine Kommentare: